கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சள் பை 12

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 12

மதியம் சாப்பிட்டுவிட்டுப் படுத்த மாமனார், இரவு ஏழு மணியாகியும் எழுந்து கொள்ளவில்லை என்றவுடன் துளசிக்குப் பதற்றமாய்ப் போயிற்று. முகுந்தனையாவது டியூஷனுக்கு அனுப்பாமல் இருந்திருக்கலாம் என்று தவித்து போனாள். அவளது வாழ்நாளில் இவ்வளவு தவிப்பு என்றும் வந்ததில்லை.

தங்கவிநாயகம் வீட்டுக்கு வரவில்லை. அவன் செய்து வைத்திருந்த காரியத்திற்கு அன்று நேரம் கழித்துத்தான் வருவான் என்று எதிர்பார்த்திருந்தாலும், துளசிக்கு அவன் வந்து விட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

ஏஜென்சி எடுத்ததற்கு சோமபானம் மற்றும் உணவுடன் சின்னக்குட்டியையும் வேறு இரண்டு நண்பர்களையும் சேர்த்து ட்ரீட் வைத்துக் கொண்டாடிவிட்டு மிதமான போதையுடன் வீட்டுக்கு வந்தான் தங்கவிநாயகம். சண்முகத்தாயும் அவள் கணவனும் ஏதோ ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, துளசி கண்கலங்க அமர்ந்திருந்தாள்.

"நேரமாச்சு.. குளிக்கலையா? துளசி! உங்க அத்தையைக் கூப்பிடு.. இன்னைக்குக் கோயிலுக்குப் போகணும்.. ஞாபகம் இல்லையா?" என்று கேட்டுக்கொண்டிருந்தார் தங்கமாரியப்பன்.

"இது காலைல இல்ல.. ராத்திரி! சாப்பிட்டுப் படுங்க தாத்தா!" என்று சண்முகத்தாய் கூற, "ஏன்மா! நீ என்னம்மா.. போம்மா அங்கிட்டு.. கோயில்ல இன்னிக்கி கொடி ஏறுது.. என்னை எதிர்பார்த்து காத்துருப்பாங்க இல்ல? அடுத்த வாரம் கோயில் கொடை.. அதுவரைக்கும் நான் விரதம். பழம் தவிர ஏதும் சாப்பிட மாட்டேன். ருக்மணி எங்க? ருக்கு, ருக்கு! ரெண்டு வாழைப்பழம் கொண்டு வா!" என்றார்.

குழப்பமாகப் பேசியவரைப் பார்த்து குழம்பிப் போய் நின்று விட்டான் தங்கவிநாயகம். அவனிடம், "என்னங்க! இப்படித்தான் மாமா ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டு இருக்காரு.. அத்தை இறந்து போனதே அவருக்குத் தெரியல.. முகுந்தனை நீ யார்னு கேக்குறார்.. எனக்கு பயமா இருக்குங்க.. டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போயிரலாம்.. வாங்க" என்று துளசி பதறினாள்.

தங்கவிநாயகத்துக்கும் பதட்டமாகத் தான் இருந்தது. ஆனால் அவனது பதட்டம் இப்போது வேறு வகை. 'ஐயையோ! முழுசா மென்டலா ஆகுறதுக்குள்ள சொத்தை எழுதி வாங்குடான்னு சின்னக்குட்டி சொன்னானே? அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே? ஒன்னரை லட்சத்துக்கு ஆசைப்பட்டு பெரிய மண்டையிடியை இழுத்து வச்சுக்கிட்டேனே' என்றுதான் அவனுக்குத் தோன்றியது.

எந்த மருத்துவரிடம் போகலாம் என்று கூட அவனுக்கு முடிவெடுக்கத் தெரியவில்லை. வழக்கம் போல சின்னக் குட்டிக்கே அழைத்தான். இவன் கால் போதையில் இருந்தால், அவன் முக்கால் போதையில் இருந்தான். "நாம ஏன்டா டாக்டர்கிட்ட போகணும்? டாக்டரை நம்மளத் தேடி வரவைப்போம்.. ஒரு வருங்கால பெட்ரோல் பங்க் முதலாளி டாக்டர்கிட்ட போய் காத்து நிக்கிறதா?" என்று திரியை மேலும் தூண்டி விட்டவன், தனக்குத் தெரிந்த ஒரு போலி மருத்துவரை அழைத்து வந்து ஏதோ ஒரு ஊசியைப் போட வைத்தான்.

அது தூக்க மருந்தோ என்னவோ மறுநாள் காலை எட்டு மணி வரை தூங்கி எழுந்த தங்கமாரியப்பன்,
மீண்டும், "கோயிலுக்குக் கிளம்பனும்.. ருக்மணி எங்கே.. அங்க எல்லாரும் காத்திருப்பாங்க.. அடுத்த வாரம் கோயில் கொடை. இன்னிக்கு கொடியேறுது" என்றே சொல்ல ஆரம்பித்தார்.

"சரி மாமா! இந்தாங்க சாப்பிடுங்க.. சாப்பிட்டுட்டுக் கிளம்பலாம்.. அத்தை குளிச்சுட்டு இருக்காங்க" இப்படி ஏதேதோ கூறி, அவர் போக்கிலேயே போய் துளசி சமாளித்துப் பார்த்தாள். இருந்தாலும் அவளால் முடியவில்லை.

"ஏங்க! பெரிய ஆஸ்பத்திரியா பாத்து கூட்டிட்டுப் போகலாம்" என்று அவள் சொன்னதைக் கேட்காமல், வக்கீல் அலுவலகத்துக்கு போய் எப்படி சொத்துக்களைத் தன் பெயரில் மாற்றலாம் என்று விவாதிக்க ஆரம்பித்தான் தங்கவிநாயகம்.

"ஆத்தா! தங்கமாரி அம்மா! எங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டும்மா.. ஒரு நாளைக்கு பத்து தடவையாவது உன் பேரைச் சொல்லித்தான் எங்க மாமா தண்ணி கூட குடிப்பாரு.. அவரை இப்படி நிலைமைல பாக்க முடியலைம்மா!" என்று மனதார வேண்டினாள் துளசி.

திருப்பணிக் குழுவினரும் இரண்டு மூன்று முறை வந்து பார்த்து விட்டுச் சென்று விட்டனர். 'ஒருவேளை காசு காணாமல் போனதில் பைத்தியமாகி விட்டாரோ' என்று ஒருவரும், 'பணம் கொடுக்க மனசில்லாமல் நடிக்கிறாரா?' என்று இன்னொருவரும் கூறியதைக் கேட்டு இடிந்தே போய்விட்டாள் துளசி.

இத்தனை வயதாகிறது எனக்கு, எத்தனை பெண்கள் என்னவெல்லாமோ செய்கிறார்கள். மாமனார் கொடுப்பதாகச் சொன்ன பணத்தை தானாவது கொடுத்தே ஆக வேண்டும், இல்லை என்றால் தன் கணவன் செய்த பாவம் மகனைப் பாதிக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. அதை எப்படிச் செய்வது என்று யோசித்த அவளுக்கு வசந்தா தான் நினைவுக்கு வந்தார். இவர்களில் யாரும் சரிப்பட மாட்டார்கள்.. வசந்தாவைத் தான் கேட்க வேண்டும் என்று முடிவெடுத்தவளாக விருட்டென்று வசந்தாவின் வீடு நோக்கி நடந்தாள்.

வேறு யார் மூலமோ விஷயத்தை அரைகுறையாக கேள்விப்பட்டிருந்தார் வசந்தா. "அப்பவே சொன்னேன் துளசி.. காசை சேர்த்து வைக்காதீங்க.. அப்பப்ப பொருளை வாங்கி கோயிலுக்குக் கட்டடமாக் கட்டி குடுங்கன்னு.. உங்க மாமா கேக்கலையே!" என்று அவள் வருத்தப்பட,

"சித்தி! நாம எப்படியாவது போராடி அந்தப் பணத்தைக் குடுத்துருவோம்.. இதோ என் வளையல் ரெண்டு இருக்கு, என் செயின், தோடு மூணையும் அடகு வச்சு ஒரு லட்ச ரூபாயாவது குடுத்துருவோம்.. இப்ப மாமாவை ஆஸ்பத்திரியில காட்டுறதுக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்களேன்" என்றாள்.

ஹவுஸ் ஓனரின் மருமகள் வந்திருக்கிறாள், அவருக்கு உடம்பு சரி இல்லையாம் என்று கேள்விப்பட்டு அந்த லைன் வீட்டிலிருந்த இன்னும் இரண்டு மூன்று பெண்களும் வசந்தாவின் வீட்டிற்கு வந்திருந்தனர். எப்போதும் ரேடியோ கேட்டபடியே பீடி சுற்றிப் பிழைக்கும் பிச்சம்மாள், "ரேடியோல நேத்து ஒரு நரம்பு டாக்டர் பேசினாரு.. இதெல்லாம் வயசு ஆனா வர்ற அறிகுறி தானாம்.. மருந்து மாத்திரை குடுத்தா ஈசியா குணமாக்கலாமாம்.. கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வாங்கன்னு சொன்னாரு" என்றாள்.

"கவர்மெண்ட்க்கு போனவுடனே பாத்துருவாங்களா?" என்று துளசி தன் சந்தேகத்தை முன்வைக்க,

"இப்ப தனியார்ல செலவழிக்கிற அளவுக்கு நமக்குக் கைல காசு இல்ல.. எல்லாம் உங்க மாமா பொறுப்புல தானே இருக்கு? இப்ப இருக்கிற நிலைமையைப் பத்தி விவரம் சொல்லி, நாம போய் கேட்டுட்டு வருவோம்" என்ற யோசனையைக் கூறினார் வசந்தா.

"நகையை அடகு வக்கிறதுக்கும் அப்படியே விசாரிச்சுட்டு வந்துருவோமா சித்தி? முகுந்தனை மாமாவுக்குத் துணைக்கு விட்டுட்டு வந்திருக்கேன்.. அவருக்குத் தெரியாம வேற அடிக்கடி வெளியே சுத்த முடியாது" என்று துளசி கேட்க,

"எங்கேயாவது நகைய வச்சு ஏமாந்துறாதீங்க.. இப்படித்தான் எனக்கு ஒரு தடவை நடந்துச்சு.. ஒரு அடகுக் கடையில நிறைய வட்டி தாராங்கன்னு ஒரு மோதிரத்தைக் கொண்டு போய் வச்சேன்.. திருப்பப் போற நேரத்துல அந்த கடையில போலீஸ் நிக்கிது.. 'பூராவும் திருட்டு நகையை வாங்குறவங்க இவங்க.. உங்க நகையும் திருட்டு நகையான்னு பார்க்கணும்.. பில் இருந்தா கொண்டு வாங்க'ன்னு அலைய விட்டுட்டாங்க.. என் கல்யாணத்துக்கு எங்க அம்மா அப்பா போட்ட மோதிரம் அது.. யாரு பில்லு வச்சிருப்பா? அலைஞ்சு திரிஞ்சு ஒரு வருஷம் கழிச்சு மோதிரத்தை வாங்கினேன்" என்றாள் சம்சா விற்கும் பெண் ஒருத்தி.

வருமானத்தால் இவர்கள் ஏழைகள் என்றாலும் தன்னைவிட நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது என்று ஆச்சரியமாகப் பார்த்தாள் துளசி. "என்னம்மா 'ஆ'ன்னு பாக்கீக.. அடகு வைக்கிறதும் மீட்டுறதும் தான் எங்க பொழைப்பே.. இங்க பாருங்க! எல்லாம் கவரிங்கு தான் போட்டிருக்கோம்.. நான் கூட்டுறவு பேங்க்ல தான் வச்சிருக்கேன்" என்றாள் பீடி சுற்றும் பெண்.

இவர்களுடன் பேசினாலே யானை பலம் வந்தது போல் தெரிகிறது. எல்லாம் சரியாகியதும் இங்கு ஒரு வீட்டில் இவர்களுடனேயே கூடக் குடி வந்து விடலாமோ என்று நினைத்துக் கொண்டாள் துளசி.
 
Top