கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சள் பை 14

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 14

சபரி சொன்னது அனைத்தும் சரிதான் என்று தோன்ற ஆரம்பித்தது. அவனிடமே சென்று எங்கு வைத்துப் பார்த்தாய், எங்கே தண்ணி அடித்தார்கள் என்று விசாரித்துக் கொண்டு, அந்த இடத்தில் போய் அவனும் விசாரித்தான் தங்கவிநாயகம். அது அவனுக்கும் பழக்கமான இடம்தான். சின்னக்குட்டி பார்ட்டிக்கு அழைத்துச்செல்லும் பார்.

இதுநாள் வரை சின்னக்குட்டி போட்டுக் கொடுத்த பாதையில் தான் தான் போயிருக்கிறோம், சொந்தமாக எங்கும் போனதில்லை, வேறு நண்பர்களும் வைத்துக் கொண்டதில்லை என்பது அவனுக்கு உரைத்தது. இந்தக் கடைக்காரரும் அவன் ஆளாகக் தான் இருப்பார் என்று நினைத்துக்கொண்டான்.

"என்ன? நீங்க மட்டும் வந்துருக்கீங்க? குட்டி வரலையா?" என்று அவர் கேட்டதற்கு, "இல்ல! என் போன் ரிப்பேர் ஆகிப்போச்சு.. அவனைத் தேடித் தான் வந்தேன்.. இங்கே வந்தானா?" என்றான்.

"அவன் வந்து ரெண்டு நாளாச்சே! நேத்தும் இன்னைக்கும் வரல.." என்று பார் உரிமையாளர் கூற, "அப்படியா முந்தாநேத்து வந்தானா? தனியாவா வந்தான்?" என்று விநாயகம் கேட்டான்.

"இல்ல.. இன்னோரு ஆள் கூட வந்தாரு.. ரெண்டு பேரும் தீவிரமா பேசிக்கிட்டு இருந்தாங்க.. நல்ல கூட்டமா இருந்த நேரம்.. நான் கூட கவனிக்கல.. ஏதோ மஞ்சப்பை.. பஸ்ல போகும்போது எவனோ பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்கன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.. ரெண்டு பேருக்கும் அதுல இருந்த பணத்தைப் பங்கு பிரிக்கிறதுல ஏதோ தகராறு போல.. அந்த ஆளை அடிக்கவே போயிட்டான் குட்டி.. போதை ஜாஸ்தி ஆயிருச்சு அப்படின்னு நாங்கதான் சண்டையை விலக்கிவிட்டு வீட்டுக்கு அனுப்பினோம்" என்றார் உரிமையாளர்.

நல்லவேளையாக அவர் விநாயகத்தின் மனமாற்றத்தைக் கவனிக்கவில்லை. குட்டியின் நண்பன் தானே என்ற ரீதியிலேயே பேசினார். "அப்படியா! அடிதடி வரை போயிருச்சா? இந்தா போய் அவனை பாக்குறேன்" என்று அவர் நம்பும் வகையில் கூறிவிட்டுச் சென்றான் தங்கவிநாயகம்.

'நான் அப்பாவிடம் இருந்து திருடினேன், என்னிடமிருந்து சின்னக்குட்டியும் அந்த கேஸ் காரனும் பிடுங்கினார்கள். இப்போது அவர்களிடமிருந்து இன்னொருவன் பிடுங்கி விட்டானா?' என்று நினைத்தவன், 'என்ன செய்ய? பஸ்சில் பிக்பாக்கெட் அடித்திருந்தால் நிச்சயம் காவல்துறைக்கு வழக்கு போயிருக்குமே?' என்று நினைத்தான்.

காவல்துறையில் தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று யோசிக்க, தங்கள் வீடுகளில் ஒன்றில் குடியிருந்த ஒரு போலீஸ்காரரான ராபர்ட்டின் நினைவு வந்தது. இதுவும் அப்பா சேர்த்து வைத்த நட்புதான் என்பது மனதில் தோன்ற, அவரைத் தேடிப் போனான்.

"பஸ்ல வச்சு மஞ்சப் பைல ஒன்றரை லட்சம் வச்சிருந்தேன், பணம் காணோம்னு எதுவும் லோக்கல்ல கேஸ் பதிவாகி இருக்கான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க சார்!" என்று அவன் கேட்க, சுற்று வட்டாரத்தில் இருந்த இரண்டு மூன்று ஸ்டேஷன்களில் விசாரித்து விட்டு நேரடியாக வீட்டுக்கே வந்து விட்டார் அந்த போலீஸ்காரர்.

"நானே அப்பாவைப் பார்க்க வரனும்னு நினைச்சேன் தம்பி.. எவ்வளவு நல்ல மனுஷன்? அவர் சொல்லித்தான் நான் போலீஸ் வேலைக்கு மனு போட்டேன்.. கவர்மெண்ட் வேலைக்குப் போ, கவர்மெண்ட் வேலைக்குப் போன்னு சொல்லிச் சொல்லி என் மனசுல ஒரு லட்சியத்தை உருவாக்கினவரே அவரு தான். இல்லேன்னா இன்னைக்கு நான் இப்படி யூனிபார்ம் போட்டுட்டு கெத்தா நடக்க மாட்டேன்" என்று பழைய விஷயங்களை நினைவுகூர்ந்தார். கூடவே விசாரித்துவிட்டுச் சொல்கிறேன் என்றுவிட்டுப் போனார்.

'எல்லாரும் அப்பா பேச்சை கேட்டு இருக்கீங்க.. நான் மட்டும்தான் கேக்காமப் போயிட்டேன்' என்று மனதிற்குள் கூறிக் கொண்டான் தங்கவிநாயகம்.

சற்று நேரத்தில், "தம்பி! அந்த மஞ்சப்பை பத்தி கேட்டீங்களே.. அப்பா தொலைச்சது தானா அது? ஒரு பிக்பாக்கெட்காரனை பிடிச்சு இருக்காங்க.. கேஸ் வந்தவுடனேயே, வழக்கமா பஸ்ல அடிக்கிற ஆளுகளைத் தான் எங்களுக்குத் தெரியுமே.. ஆளைப் பிடிச்சிட்டாங்க.. ஆனா மனசுல வெச்சுக்கோங்கப்பா.. நான் சொன்னேன்னு வெளியே சொல்லிராதீங்க.. அவனை கேஸ் போட்டு உள்ளே தள்ளிட்டாங்க.. பைல உள்ள காசை அமுக்கி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. பையில பழைய துணி தான் இருந்துச்சுன்னு கேஸ் பைல் ரெடி பண்ணி இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்" என்று தொலைபேசியில் கூறினார் அவர்.

'அடடா அந்த திருடன்ட்ட இருந்தும் திருடிட்டாங்களா? அதுவும் சீருடை போட்ட திருடனுங்க?' என்று நினைப்பு வந்தது அவனுக்கு. துளசியும் வசந்தாவும் சேர்ந்து அந்தத் தொகையை புரட்டிக் கட்டி விட்டதை அறியாதவன், 'இப்படிப் பணத்தை ஏமாந்துட்டு நிக்கிறேன்.. இத்தனை வருஷம் அப்பா உழைப்பில் தின்னுருக்கேன்.. இந்தப் பணத்தை கூட புரட்ட முடியலன்னா எப்படி? எப்படியாவது அந்த ஒன்றரை லட்ச ரூபாயைப் புரட்டி கோயில் கமிட்டிக் காரங்கள்ட்ட குடுத்துருவோம்.. அவங்க என்னமும் செஞ்சுட்டுப் போறாங்க' என்று முடிவு செய்தான் விநாயகம்.

எப்படி அந்த ஒன்றரை லட்ச ரூபாயைப் புரட்டுவது என்று அவன் நினைத்துக்கொண்டிருக்க, "ஏங்க! எனக்கு ஏதாவது ஆசை இருக்கா? நான் அன்னைக்குக் கேட்டீங்களே.. இப்ப எனக்கு ஒரு ஆசை. சொல்லட்டுமா?" என்றாள் துளசி.

என்ன, என்று இவன் கேட்க, "மாமாவுக்கு நிறைய ஆட்களோட பழைய நண்பர்கள் கூட இருந்தா மனசு நல்லாகும்னு எனக்குத் தோணுது. டாக்டரும் அப்படித்தான் சொன்னார். நம்ம வடக்கு காம்பவுண்ட்ல ஒரு வீடு காலியா இருக்காம்.. நாம அங்க போயிருவோமா.. கொஞ்ச நாளைக்கு அங்க இருப்போம்" என்றாள் துளசி.

ஒண்டுக் குடித்தன வீட்டிற்கு முதலாளி மகனான தான் போவதா என்ற ஆதிகாலத்து முறுக்கு லேசாக வந்து போனது. கூடவே, இந்த வீட்டை சுத்தம் செய்து வாடகைக்கு விட்டால் ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் வாங்கலாமே, செய்வோமா? என்று நினைத்தான் தங்க விநாயகம். இவ்வளவு மாற்றம் ஒரேடியாகத் தன் எண்ணத்தில் எப்படி வந்து சேர்ந்தது என்று அவன் யோசிக்க, சுவாமி அலமாரியில் படத்திலிருந்த தங்கமாரியம்மன், "தானாகவா வந்தது? ஆஹா! அப்படியா?" என்று கேட்டாள் அவனிடம்.
 

Latha S

Administrator
Staff member
இப்போ தான் கொஞ்சம் நல்லபடியா யோசிக்கிறான். ஆனாலும் போன பணம் போனதுதானா
 
Top