கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சள் பை 15

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 15

தாங்கள் வீடு மாறப்போகும் திட்டத்தை துளசி ஆசையாக வந்து வசந்தாவிடம் கூறினாள். இருவரும் தாங்கள் அடகு வைத்திருந்த நகைக்கு மாதாமாதம் ஒரு தொகையைச் சரியாகக் கட்டி வந்தார்கள்.

"மொத்தத்துல காலி பண்ணி வந்துரணுமான்னு யோசிச்சுக்கோம்மா.. என்னதான் இருந்தாலும் முதலாளி மாதிரி வந்து போனவர், இங்கேயே வந்து தங்கினா நல்லா இருக்குமா? அதனால தினமும் காலையில கொண்டு வந்து விடு, அந்த நாலாம் நம்பர் வீட்டுலேயே இருக்கட்டும்.. இங்கே இருக்கிற வயசாளிக பார்த்து பேசிட்டு இருப்பாங்க.. சாயங்காலம் டியூஷன் பிள்ளைகளையும் கொஞ்சம் பேச வைக்கிறேன்.. அப்புறம் முகுந்தன் படிச்சு முடிச்சு வீட்டுக்குக் கிளம்பும் போது கூட அனுப்பி வைக்கிறேன்.. இப்பதான் வீட்டுக்கு வழி எல்லாம் அவருக்கு ஞாபகம் இருக்கே.. தொலைஞ்சு போயிர மாட்டார் இல்ல?" என்று வசந்தா கூற, அதுவும் சரி என்று பட்டது துளசிக்கு.

தங்கவிநாயகம் தன் மனதிற்குள் போட்ட திட்டத்தின்படி ஒன்றிரண்டு பேரை வாடகைக்கு அமர்த்துவதற்காகக் கூட்டிவந்து தாங்கள் குடியிருந்த வீட்டை சுற்றிக் காட்டினான். "ஏங்க! வசந்தா சித்தி இப்படிச் சொல்றாங்க.. இந்த வீட்டைக் காலி பண்ண வேண்டாமாம்.. அந்த சின்ன வீட்டுல போய் இருந்தா உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ண மாட்டாங்க?" என்று கேட்டாள் துளசி.

'ஃபிரண்ட்சா? அவங்க பேசினதைக் கேட்டுக் கேட்டுத் தானே இந்த நிலைமைக்கு வந்துருக்கேன்' என்று நினைத்த விநாயகம், "ஃபிரெண்ட்ஸ் கூட எல்லாம் அவ்வளவா பேசுறதில்லை" என்று கூறிவிட்டான். சின்னக்குட்டியின் தொடர்பை அறவே தவிர்த்திருந்தான். நேரடியாகப் போய் சண்டை போடவில்லை என்றாலும் இவன் யோசனையுடனே திரிவதையும் சரியாக பதில் சொல்லாததையும் பார்த்து, சின்னக்குட்டியே புரிந்துகொண்டான்.

அவன் இதுநாள் வரை போட்ட திட்டங்களின் படியும் செய்த காய்நகர்த்தல்களின் படியும் எதிர்பார்த்ததற்கு மேலாகவே விநாயகத்திடம் பிடுங்கி விட்டான். அந்த ஒரு கோடி ரூபாய் பிராஜக்ட் முடிந்தால் நல்லது, ஆனால் மன நலம் பிறழ்ந்த நபரை வைத்துக்கொண்டு சொத்தை மாற்றி எழுதுவது, அதைப் பின்பு விற்பது எல்லாம் நடக்காத காரியம் என்று புரிந்துகொண்டு வேறு ஒரு ஆளிடம் தன் வலையை வீசப் புறப்பட்டு விட்டான்.

குடியிருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டு, அட்வான்ஸ் வாங்குவதைத் தவிர அந்த பணத்தைப் புரட்ட வேறு வழியில்லை என்று தோன்றியது விநாயகத்துக்கு. வந்தவர்கள் யாரும் ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கத் தயாராக இல்லை. 60 ஆயிரம் தருகிறேன், 70 ஆயிரம் தருகிறேன் என்றார்கள். ஒரு லட்சம் தருகிறேன் என்று சொன்ன நபரைப் பார்த்தால் நல்லவர் போல் இவனுக்கே தெரியவில்லை. இதுவரை தான் பழகிய மனிதர்கள் பூராவும் இதே மாதிரி ஆட்கள் தான் என்று இப்போது தோன்றியது.

இப்போது யாரிடம் உதவி கேட்கலாம் என்று எண்ண, அதே போலீஸ்காரர் ராபர்ட் தான் அவனுக்கு மனக்கண்முன் மீண்டும் வந்தார். அவருக்கு அழைத்து, "சார்! அப்பா கோயில் காரியத்துக்குப் பணம் தரேன்னு சொல்லியிருந்தாங்க.. ஒன்றரை லட்ச ரூபா வேணும்.. யாராவது வட்டிக்குத் தருவாங்களா? முறையா திருப்பிக் குடுத்திடுவேன் சார்" என்று அவரிடம் அவன் கேட்க,

"விசாரிச்சு சொல்றேன் பா!" என்றவர், விசாரித்து மீண்டும் தகவலை கூறும் போது கூடுதலாக ஒரு தகவலையும் கூறினார். "நான் சொன்னேனே! ஸ்டேஷன்ல அந்த மஞ்சள் பையில் இருக்கிற பணத்தை பதுக்கிட்டாங்கன்னு.. அதை வாங்கிக்கொண்டு போய் இன்ஸ்பெக்டர் பத்திரமா தன் வீட்ல வச்சிருந்தாராம்.. அதை வாங்கின அன்னைக்கே சாயங்காலம் ஒரு கலவரத்தை அடக்கப் போகும் போது அவர் கையில் வெட்டுப் பட்டுருச்சாம்.. கையையே வெட்டி எடுக்க வேண்டியதிருக்கும்னு டாக்டர் சொல்ல, இன்ஸ்பெக்டர் சம்சாரம், 'ஒரு மஞ்சள் பையோட பணத்தைக் கொண்டு வந்து வச்சாரு.. அதுல தங்கமாரியம்மன் துணைன்னு போட்டு இருந்துச்சு.. அது வீட்டுக்கு வந்த பிறகு தான் இவருக்கு இப்படி ஆயிருச்சு' அப்படின்னு பதறி அந்தப் பையில் போட்டு இருந்த அட்ரஸ்ல இருக்குற கோயிலுக்குப் போயி உண்டியல்ல பணத்தோட மஞ்சப்பையை போட்டுருச்சாம் அந்த அம்மா.. கடவுள் செயலா என்னன்னு தெரியல, அதுக்கு அப்புறம் நடந்த ஆபரேஷன்ல வெட்டுப்பட்ட கையை சரி பண்ணிடலாம், ஒரு ஆறு மாசம் கைக்கு வேலை குடுக்க முடியாது.. ஆனா சரியாயிடும்னு சொன்னாங்களாம்.. நான் கிறிஸ்டியன் தான்பா! ஆனா எந்த சாமின்னா என்ன? கடவுள் இருக்காருப்பா!" என்றார் ராபர்ட்.

"அப்படியா! எங்க அப்பா தொலைச்ச பணமாத் தான் இருக்கணும் அது.. இதுவரைக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை.. ஆனா இப்ப நீங்க சொல்றபடி கடவுள் இருக்காருன்னு தான் தோணுது சார்! அந்த கோயிலுக்குத் தான் அப்பா குடுக்கணும்னு நினைச்சிருந்தாங்க.. கமிட்டிக்காரங்க கிட்ட சொல்லி உண்டியலைத் திறந்து பாருங்கன்னு சொல்லிடுறேன்" என்றான் வினாயகம் நெகிழ்வுடன்.

"அதான் உங்க அப்பா குடுக்கிறேன்னு சொன்ன பணம் சேர் வேண்டிய எடத்துல போய் சேர்ந்துருச்சு இல்லப்பா.. பிறகு எதுக்கு நீ வட்டிக்கு வாங்கணும்னு நினைக்கிற?" என்று ராபர்ட் கேட்க,

"இல்ல சார்! அது அப்பா நினைச்சது.. இது நான் செய்யணும்னு வேண்டிக்கிட்டது.. இதுவரைக்கும் எனக்குத் தேவையானதை எல்லாம் அப்பா குடுத்திடுவார் சார்.. இதுதான் நானே சம்பாதிச்சு, திரும்பி கட்டணும்னு முடிவு பண்ணி கேட்கிற முதல் கடன்.. வாங்கி குடுங்க சார்! நான் வசந்தா அத்தை சொன்ன மாதிரி கோயிலுக்கு ஏதாவது கட்டடம் கட்ட ஆரம்பிக்கிறேன்.. அதை முதல் முயற்சியா வச்சு அதுக்கு அப்புறம் அப்பாவை மாதிரி நானும் கட்டடங்கள் கட்ட ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்.. நாம் முன்னேறுறதை நீங்க பார்ப்பீங்க சார்!" என்றான் கண்களில் நீர் மல்க. "சரிப்பா! காட் பிளஸ் யூ!" என்று மனதார வாழ்த்தினார் ராபர்ட்.

அதேநேரம் அன்றைய மாலை வகுப்பில், "இன்னைக்கு யார் கதை சொல்லப் போறீங்க?" என்று வசந்தா கேட்க,

"நான்தான் டீச்சர்! இன்னைக்காவது சொல்லலைன்னா, இன்னும் நான் கதையை மாத்திக்கிட்டே இருப்பேன்" என்றான் நவீன். "என்ன கதையை மாத்துவியா? அது என்ன?" என்று வசந்தா கேட்டார்.

"இந்தக் கதையை ஸ்கூல்ல ஒரு புக்ல படிச்சேன்.. அப்புறமா நான் சொல்லனும்னு நினைக்கும் போதெல்லாம் நீங்க வேற யாரையாவது கதை சொல்லச் சொல்லிட்டு இருந்தீங்க.. அதனால நானே கதையை கொஞ்சம் கொஞ்சம் மாத்திக்கிட்டேன்" என்றான் நவீன்.

"சரி! சரி! சீக்கிரம் சொல்லு" என்று ஸ்ரீநிதி கூறினாள்.

"இது என்ன கதைன்னா 'பேக் ஆஃப் கோல்ட் காயின்ஸ்'- தங்க நாணயங்கள் நிரம்பிய பை. ஒரு விவசாயி இருந்தான். அவன் கஷ்டப்பட்டு உழைச்சு காசு சேர்த்து ஒரு சுருக்குப் பையில் போட்டு கட்டி வச்சான். தொலைஞ்சு போயிடக் கூடாதுன்னு வீட்ல மூலையிலிருந்த குடத்துக்குள்ள போட்டு மூடி வச்சுட்டு, 'நான் சந்தைக்கு போயிட்டு வரேன்' அப்படின்னு கிளம்பினான். சமைக்கப் போன மனைவி, தண்ணி இல்லையேன்னு நினைச்சு அந்தக் குடத்தை எடுத்துட்டு வெளிய வராங்க.. வாசல்ல ஒரு கசாப்புக் கடைக்காரர் போய்கிட்டு இருக்காரு.. அவருக்கிட்ட, 'அண்ணே கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வரீங்களா.. உலை கொதிச்சுட்டு இருக்கு' அப்படின்னு அவங்க சொல்ல,

'ஆத்துக்கு தான் மா போறேன். குடு'ன்னு வாங்கிட்டு போனார். அங்க போய் தண்ணி நிரப்பப் போகும் போது அவர் அந்தத் தங்க நாணயப் பையைப் பாக்க 'ஆஹா! அடிச்சுச்சு அதிர்ஷ்டம்'னு எடுத்து வச்சுக்கிட்டார். எடுத்த பணத்தை எங்க வைக்கிறதுன்னு தெரியாம தன்னோட ஆட்டோட வாய்க்குள்ள திணிச்சு முழுங்க வச்சுட்டார். வீட்டில் போய் வெட்டி எடுத்துக்கலாம்னு தண்ணி எடுத்துட்டு வந்து குடுக்கிற வழியில, அவரோட மகனைப் பார்க்கிறாரு.. 'இந்த ஆட்டைக் கொண்டு போய் வீட்ல கட்டுடா தம்பி!' அப்படின்னு சொல்லிட்டு தண்ணிக் குடத்தைப் போய் விவசாயி வீட்டில் குடுத்துட்டார். மகன் சந்தை வழியா ஆட்டை ஓட்டிக்கிட்டு போக, நம்ம விவசாயியே 'நல்ல ஆடா இருக்கு எனக்கு வேலைக்குத் தா' அப்படின்னு நல்ல விலை குடுத்து வாங்கிட்டு தன்னோடு வீட்டுக்குப் போறார்..

வீட்டுக்குப் போனப்ப தான் தெரிஞ்சுச்சு குடத்தில் வைத்திருந்த காசை காணோம்னு.. ஐயோ என் காசு போச்சேன்னு அழுதவரை அவங்க மனைவி சமாதானப்படுத்தி, 'ஏதோ கெட்ட நேரம்.. போயிடுச்சு. விடுங்க! திருப்பி சம்பாதிக்கலாம். கடவுள் நமக்கு துணை இருப்பார்' அப்படின்னு சொல்லி சாமி கும்பிட்டுட்டு சமைக்க ஆரம்பிச்சாங்க. சரி நம்ம இந்த ஆடை சாமிக்குக் காணிக்கையாக்கிடலாம் அப்படின்னு கோயிலுக்கு ஓட்டிட்டுப் போயி அந்த ஆட்டை வெட்டவும் ஆட்டோட வயித்துக்குள்ள இருந்து தங்க நாணயப் பை வந்து விழுந்துச்சு.

அப்பாடா என் பணம் கிடைச்சிடுச்சு அப்படின்னு சொல்லிட்டு போனவரு, இனிமே பணத்தை வீட்டில் வைக்கக் கூடாது, என் மடிக்குள்ள பத்திரமா வைக்கிறேன் அப்படின்னு மடியில வச்சாரு.. மறுநாள் ஆத்தங்கரையில குளிக்க போனவரு அந்தப் பையை ஆத்தோரமா வச்சுட்டு குளிக்கப் போக, அதை ஒரு ஆடு மேய்க்கிறவர் வந்து தூக்கிட்டுப் போயிட்டார்.

இரண்டாவது தடவையும் பணத்தைத் தொலைச்சுட்டோமே அப்படின்னு வருத்தப்பட்டார் விவசாயி. அந்த ஆடு மேய்க்கிறவர் பத்திரமா இருக்கட்டும் அப்படின்னு நினைச்சு போற வழியில ஒரு பாழடைந்த கிணத்துக்குள்ள பையை பதுக்கி வச்சார். வருத்தத்தோட நடந்து வந்த விவசாயி பாழடைந்த கிணத்தை கவனிக்காம உள்ள விழுந்துட்டார். அதுல சுவர் ஓரமா வச்சிருந்த பையை பார்த்துட்டு, இரண்டாவது தடவையும் நம்ம பை கிடைச்சுடுச்சுன்னு நினைச்சார்.

மறுநாள் ஆடு மேய்க்கிறவர் கவலையோட விவசாயி கிட்ட, 'என்னோட தங்க நாணயங்கள் நிரம்பிய பைய காணோம். ஒரு கிணத்தில் வச்சிருந்தேன்' அப்படின்னு சொல்ல, 'அடடா! அது உங்க பையா? என்னோடதுன்னு இல்ல நினைச்சேன்.. இந்தாங்க.. அதை நீங்களே வச்சுக்கோங்க' அப்படின்னு திரும்பி கொடுத்துட்டார் விவசாயி. கண்டெடுத்த பையைத் தன்னோட பை அப்படின்னு நெனச்சுக்கிட்ட ஆடு மேய்க்கிறவர் அந்த நாணயங்களை எடுத்து தன்னுடைய கைத்தடிக்குள்ள ஒன்னு ஒண்ணா அடுக்கி வச்சுக்கிட்டார்.

ஆனா அவரோட கெட்ட நேரம் அந்தக் கைத்தடி தவறி ஆத்துல விழுந்துருச்சு. மூணாவது நாள் ஆத்துல குளிக்கப் போன நம்ம விவசாயிக்கு கம்பு கையில கிடைச்சிருச்சு.. நல்ல கம்பா இருக்கு எதுக்காவது பயன்படும்னு வீட்டுக்குக் கொண்டு வர, அன்னைக்கு சமையலுக்கு விறகு வெட்டிட்டு வாங்கன்னு அவங்க மனைவி சொன்னாங்க. இந்த கம்பே இருக்கே இதையே வெட்டுவோம்னு அவர் அதை அரிவாளால் வெட்ட, உள்ள இருந்து அவரோட நாணயங்கள் எல்லாம் ஒண்ணு விடாம சிதறுச்சாம்.. மூணு தடவை தொலைச்சும் நம்ம பணம் நமக்கே கிடைச்சிருச்சுன்னு கடவுளுக்கு நன்றி சொன்னாங்களாம்! இதில இருந்து என்ன தெரியுது.. நேர்மையா நமக்குச் சேர வேண்டிய பொருளை யாராலயும் தட்டிப் பறிக்க முடியாது" என்று நவீன் கூறினான்.

"என்னை விட சூப்பர் சூப்பரா கதைகள் சொல்றீங்களே.. நவீனுக்கு நல்லா கை தட்டுங்க!" என்று வசந்தா கூற, பலத்த கைத்தட்டல் அங்கே எழுந்தது. முகுந்தனுக்கு துணையாக அங்கு வந்து அமர்ந்திருந்த தங்கமாரியப்பன் விஷயம் என்னவென்றே புரியாமல் தானும் இரண்டு கைகளையும் படபடவென்று தட்டினார்.


(நிறைவுற்றது)
 

Latha S

Administrator
Staff member
உண்மைதான். நேர்மைக்கு என்றைக்கும் பலன் கிடைக்கும். கதைக்குள்கதைகள் அருமை. தங்க மாரியப்பனின் நல்ல மனதிற்கு அவர் தொலைத்த பணமும் சரியாக கோவிலுக்கு காணிக்கையாய் உண்டியலுக்கு போனது. மகனும் திருந்தினான். தங்க மாரியப்பன் மகன் திருந்தியதை உணர முடியவில்லையே!

நல்ல படைப்பு பாரதி. யதார்த்தமான கதை. மஞ்சள் பையின் பின்னால் எத்தனை குட்டி நீதிக்கதைகள். அருமையான கருத்து . எளிய நடை. ரசித்து படித்தேன். அதற்குள் முடிந்து விட்டதே என்ற சின்ன வருத்தம். இப்படிப்பட்ட கதைகள் நீங்கள் எழுத வாழ்த்துகள்.
 
Last edited:

Akhilanda bharati

Moderator
Staff member
Thanks a lot mam❤️❤️❤️

உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகள் அடுத்த படைப்பிற்கு அடித்தளமாக அமைகின்றன

With lots of love 😍
 
Top