கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சள் பை 2

Akhilanda bharati

Moderator
Staff member
2.

"இத்தனை வருஷமா இதே வீட்டுல குடியிருக்கியே.. ஒரு நாலு நாள் கழிச்சுத்தான் வாடகையைக் குடுத்தா என்ன? பிள்ளைகளுக்கு பீஸ் கட்டணும், கைல காசு இல்லன்னு சொல்லிக்கிட்டு இருந்த?" உலகநாதனை அந்த சமயம் பார்க்க வந்திருந்த அவனது நண்பன் அடிக்குரலில் கேட்க,

"எது எப்படி இருந்தாலும் கரெக்டா வாடகை குடுத்துரணும்.. இல்லைன்னா காலி பண்ணச் சொல்லிருவாரு.. ஆத்திர அவசரத்துக்கு வேணும்னா அவர்கிட்டயே கைமாத்து வாங்கிக்கிடலாம்.. வட்டி எல்லாம் வாங்க மாட்டாரு.. தங்கமான மனுஷன்.. அவரு பேயரைப் போலவே.." என்று கூறிய உலகநாதன் மாடசாமியைக் காட்டிலும் தங்கமாரியப்பனிடம் அதிக பவ்யம் காட்டினார்.

வாடகைப் பணத்துடன் உள்ளிருந்து வந்த அவரது மனைவி சிவகாமி, உலகநாதன் முன்பே கூறியிருந்தும், "பிள்ளைக்கு பீஸ் கட்டணும்.. இந்த வாசம் கொஞ்சம் வைத்தியச் செலவு வந்துருச்சு.. ஒரு பத்து நாள் சென்று கொண்டு வரட்டா? நானே கொண்டு வந்துருவேன்.. நீங்க கூட வரவேண்டாம்.. உங்க மருமக கிட்ட குடுத்திருதேன்" என்று கெஞ்சுவது போல் கேட்க, கண்களாலேயே அவளைக் கண்டித்தார் உலகநாதன்.

"நீ கரெக்டா அஞ்சாம் தேதிக்குள்ள குடுக்கறதுல எப்பவும் குறை வைக்கக்கூடாது கேட்டியா.. அப்பத்தான் உங்க மேல எனக்கு ஒரு மதிப்பு இருக்கும்.. நானும் உங்க ஒருத்தங்களுக்குன்னு விட்டுக்குடுக்க முடியாது.. எல்லார்கிட்டயும் ஒன்னு போல நடந்துக்கிடணும்.. அப்பத்தான் எனக்கு ஒரு மதிப்பு இருக்கும்.. என்ன, நான் சொல்றது?" என்றபடியே தன் வழக்கப்படி அமர்ந்து வரவு செலவு நோட்டைப் பிரித்து வைத்துக்கொண்டார். சிவகாமியின் முகம் வாடிவிட்டது. உலகநாதன் முகத்திலும் யோசனைதான்.

புதிதாக அவரைப் பார்க்க வந்திருந்த அவரது நண்பர், 'இந்த தாத்தா ரொம்ப கெடுபிடியான ஆள் போல இருக்கே.. இப்படி வந்து இந்த குடித்தனத்துல கஷ்டப்படணுமா?' என்று நினைத்து தன் பங்குக்குப் பரிதாபமாக உலகநாதனைப் பார்த்தார்.

இந்த உணர்ச்சிகளுக்கு எல்லாம் இங்கு வேலையே இல்லை என்று சொல்வதைப் போல அவள் கொடுத்த பணத்தை மஞ்சள் பையில் நூறு ரூபாயும், கைப்பையில் மீதியுமாக வைத்துக்கொண்ட தங்கமாரியப்பன் கணக்கை எழுதி முடித்துவிட்டு பையின் ஜிப்பை ஒருமுறைக்கு இருமுறை இழுத்து சரி பார்த்தார்.

அதன் பின் தன் சட்டைப் பையில் கையை விட்டு, "எம்புட்டு பீஸு பிள்ளைக்கு?" என்றார். "1500" என்று உலகநாதன் கூற,

"இந்தா.. இது தனிக் கணக்கு.. இதை வச்சுக்கோ.. முடியும் போது தா.. சரியா? வாடகை பணத்தையும் இதையும் குழப்பக் கூடாது. என்ன? வாடகை ரூவாய்ல இருந்து தான் இந்த வீட்டுக்கு பராமரிப்பு செய்யணும்.. சாமி காசும் அதுல இருந்து பங்கு வைக்கிறேன்.. அதனால அதுல குறை வைக்கவே கூடாது" என்றவர்,

"பொம்பளைப் பிள்ளை பத்தாப்பு முடிச்சிருச்சா? எம்பிளாய்மெண்ட்ல பதிஞ்சு வச்சிரு.. கவர்மெண்ட் வேலை தான் நல்லது கேட்டுக்கோ.. எங்க அப்பா என்னை அந்தக் காலத்துல ஈபி வேலைக்குப் போகச் சொன்னாரு.. நான் தான் மாட்டேன்னுட்டு கொத்த வேலைக்கு போயிட்டேன்.. அந்த நேரத்துல நாளைக்கு அஞ்சு ரூவா சம்பளத்துக்குச் சேந்தவங்க கடைசில பெர்மனெண்ட் ஆயிட்டாங்க.. என் தம்பி கூட நாப்பதாயிரம் ரூவா சொளையா பென்சன் வாங்குதான்னா பாத்துக்கோங்க" என்றார்.

சந்திக்கும்போதெல்லாம் பிள்ளைகளின் படிப்பைப் பற்றி கேட்பதும் அவர்களை கவர்மெண்ட் வேலையில் சேரச் சொல்வதும் தங்க மாரியப்பனின் வழக்கம் என்பதால் ஆகட்டும் என்பது போல் தலையை ஆட்டிக் கொண்டனர். பள்ளிக்குக் கிளம்பிய தோரணையில் அவர்களது மகள் வெளியே வர, "பாப்பா! நல்லா படிக்கணும் கேட்டியா.. வேற எந்த விஷயத்துக்கும் இடம் குடுக்கக் கூடாது.. படிப்புதான் நமக்கு சொத்து.. இப்படி எடுத்துச் சொல்லி எங்களைப் படிக்க வைக்க ஆள் இல்லை, என்ன உலகநாதா! சரிதானேடே?.. அந்தக் காலத்துல அப்படி கஷ்டப்பட்டோம்.. உங்களுக்கு வாய்ப்பு வசதி எல்லாம் இருக்கு. ஓஹோன்னு வரணும். சரியா?" என்று வாழ்த்துக் கூறி அனுப்பினார்.


அப்படியே கிளம்பிப் போக எத்தனித்தவர், உலகநாதனின் தொப்பையைப் பார்த்துவிட்டு, "என்ன இவ்வளவு தொந்தி வச்சிருக்க.. சரக்கு ஏதும் போடுறியா? உதடு வேற கருப்பா இருக்கு? சிகரெட்டு குடிச்சியா?" என்று அதட்டுவது போல் கேட்டார்.

"இல்ல.. அந்த பழக்கம் எல்லாம் இல்லை" என்று உலகநாதன் மறுக்க,

தங்கமாரியப்பன் சிவகாமியிடம், "ஏ தாயி! ஒழுங்கா அவன் சட்டை பாக்கெட்டுல தினமும் நல்லாப் பாரு.. சிகரெட் குடிச்சா ஹார்ட் அட்டாக் வந்துரும்" என்றவர் உலகநாதனிடம்,

"வாக்கிங் போறியா டே? எனக்கு எழுவத்தஞ்சு வயசாச்சு.. உன் வயசுக்கு நீ ரன்னிங் போகலாம்.. அடுத்த தடவ வரும்போது ரெண்டு சுத்தாவது தொப்பை குறைஞ்சிருக்கணும் பார்த்துக்கோ.." என்றார்.

அவ்வளவு நேரம் இருந்த சிறிய சடவு மறைய, "காபி குடிக்கீங்களா தாத்தா?" என்று சிவகாமி பாசமாகக் கேட்டாள்.

"நல்ல வேளை ஞாபகப்படுத்துன.. காபி குடிக்கதும் கெடுதல் தான்.. நீ பாட்டுக்கு ஓயாம காபி குடிக்காதே.. கேட்டியா? என்னைப் பாரு.. என் மகனையும் இப்படித்தான் நல்லதுக்கு சொல்றேன்.. கேட்கமாட்டேங்கான்.. மதிக்காம என்னையே எதுத்துப் பேசுதான்.. எடுபட்ட பய" என்று கூறிக்கொண்டே எழுந்தவர், அடுத்த வீட்டுக்கு நகர்ந்தார்.

"தாத்தா கொஞ்சம் நட்டு கழண்ட கேஸோ?" என்று வந்திருந்தவர் கேட்க,

"சே.. ரொம்ப நல்ல குணம்.. இப்ப கொஞ்ச நாளா சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்றாரு.. படிப்புக்கு அவ்வளவு உதவி செய்யக் கூடியவரு.. வாடகை விஷயத்துல கரெக்ட்டா இருக்கனும்ன்னு நினைப்பாரு.. அதேமாதிரி நம்மளுக்கு எதுவும் வீட்டில் தண்ணி வரலை, கரண்ட் பிரச்சனை அப்படிங்கற மாதிரி இருந்தா ஒரு நாளைக்குள்ள சரி பண்ணி தந்துருவாரு.. இப்போ உள்ள காலத்துல இப்படி மேலான இடத்துல யாரு ரெண்டாயிரம் ரூபாய்க்கு வீடு தர்றா.. அவரைக் குத்தம் சொன்னா நாக்கு அழுகிரும்.." என்றாள் சிவகாமி.

அடுத்தடுத்த வீடுகளிலும் இதுவே தொடர்ந்தது. நடுவில் ஒரே ஒரு வீடு மட்டும் பூட்டியிருக்க, வாசல் தெளித்திருந்த ஈரமும், போட்டிருந்த சிறிய கோலமும் திண்ணைமேல் கட்டியிருந்த கொடியில் உலர்ந்த துணிகளையும் பார்த்துவிட்டு, "பூட்டா போடுற பூட்டு.. காலைல எட்டு மணிக்கு என்ன வீட்டைப் பூட்ட வேண்டி கிடக்கு.. எனக்கு தெரியாதா.. இரு இரு அடுத்த மாசம் நான் இன்னொரு பூட்டை கொண்டாந்து நான் பூட்டுதேன்.. நாலு பேருக்கு ஒருத்தன் இப்படி பொறுப்பில்லாமத் தான் இருக்கான்.. இவனை சீக்கிரம் காலி பண்ற வழியைப் பாக்கணும்" என்று வாய்விட்டே கூறினார்.

ஏழாம் நம்பர் வீட்டில் மட்டும் சற்று அதிக உரிமையுடன் அமர்ந்து கொண்டார். அந்தச் சிறிய வீட்டில் ஒற்றை ஆளாய் இருந்த வசந்தா ஆச்சி கொடுத்த இரண்டு கொழுக்கட்டைகளை ஆற அமரத் தின்றுவிட்டு அவரிடம் பேசிவிட்டுப் போனார்.

"பேரப் பையன் நல்லா படிக்கானா தாயி?அவனைக் கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தா நல்ல ஆளாக்கி விட்ரலாம்.. மருமகளுக்கு சூதுவாது தெரிய மாட்டேங்குது.. மகன் போக்கே சரியில்ல.. அவன் அப்பன் நடவடிக்கை அப்பா கூட இருந்து ரெண்டு நாள் பாத்துட்டா புள்ளையும் கெட்டுப் போயிருமோன்னு பயம் எனக்கு.. துணைக்கு ஆள் இல்லாம ஒத்த புள்ளையா இருக்குது.. இவனையாவது நல்ல முன்னேத்திப் பார்த்துட்டம்னா எனக்குக் காலம் நிம்மதியாக கழிஞ்சிரும்" என்றார்.

"முகுந்தன் தங்கமான பையன் தான்.. அவனைப் பத்தி நீங்க கவலையே படவேண்டாம் அண்ணே!" என்று வசந்தா அவரை சமாதானப்படுத்தினார்.

"உன்கிட்ட புள்ளைக வழக்கம் போல படிக்க வருதா தாயி.. வருமானத்துக்கு ஒன்னும் குறைவில்லையே? செலவுக்கு எதுவும் வேணும்னா சொல்லு" என்று தங்கமாரியப்பன் கேட்க,

"அதெல்லாம் ஒரு குறையுமில்லை.. நீங்க உடம்பைப் பாத்துக்கோங்க.. மருமகளை இங்கே ஒரு எட்டு வந்துட்டுப் போகச் சொல்லுங்க.. அவளைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.. இப்பல்லாம் உங்க பேரன் ஓட்டமாக ஓடி வந்துருதான்.. அம்மா கூட்டிட்டு வரணும்னு எதிர்பார்க்குறதில்லை" என்றாள் வசந்தா.

"டீச்சர் ஆச்சி, டீச்சர் ஆச்சி! நேத்து என் வாட்டர் பாட்டிலை வச்சுட்டுப் போயிட்டேன்.. அது இருக்கா?" என்றபடி ஒரு சிறுமி வாசலில் வந்து நிற்க,

"இந்தா எடுத்து வச்சிருக்கேன் பாரு.. கொண்டுவர்ற பொருளைத் திருப்பி பத்திரமாக கொண்டு போகணும்னு தெரியாதா?" என்றார் வசந்தா.

தன் வாயில் விரலை வைத்துக் கடித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமி, "ஹிஹி! நீங்க நேத்து யானைக்கு எப்படி தும்பிக்கை வந்துச்சுன்னு ஒரு கதை சொன்னீங்களா.. அதை நினைச்சுப் பார்த்துகிட்டே இருந்தேன்.. அப்படியே வாட்டர் பாட்டில் மறந்து போய் வச்சுட்டு போயிட்டேன்.. உங்களுக்குத் தெரியுமா? எனக்கு கனவுல அந்த தும்பிக்கை இல்லாத யானை வந்துச்சு.. முதலை பிடிச்சு இழுக்க இழுக்க தும்பிக்கை பெருசாகுறது.. எல்லாம் நீங்க கதையில சொன்ன மாதிரியே வந்துச்சு" என்றாள்.

"அப்படியா!" என்று ரசித்துக் கேட்டார் வசந்தா. "ராஜி! எங்க நிக்குறே? வேன் வர்ற நேரம் ஆச்சு!" அந்த சிறுமியின் அம்மா பின்புறம் இருந்த வீடுகளில் ஒன்றிலிருந்து குரல்கொடுக்க,

"போயிட்டு வாரேன் டீச்சர் ஆச்சி!" என்றபடி வாட்டர் பாட்டிலை தூக்கிக்கொண்டு மின்னலென மறைந்து போனாள் அந்தச் சிறுமி

குடும்பத்தில் வேறு யாரும் இல்லாத ஒற்றைப் பெண்ணான வசந்தாவிற்கு அவரிடம் படிக்க வரும் மாணவர்கள் தான் உறவினர்கள். குறைந்த கட்டணம் வாங்குவார். மாலையானால் அவர் வீடு இருக்கும் பகுதி திருவிழா போல் இருக்கும். மழை நேரங்களில் மட்டும் வெளியே சிமெண்ட் தளத்தில் வைத்து வகுப்பெடுக்க முடியாது என்பதால் நெருக்கியடித்துக் கொண்டு வீட்டிற்குள் உட்கார்ந்திருப்பார்கள். அந்த லைன் வீடுகள் எல்லாமே ஒற்றையறையும் ஒரு சமையல் கட்டும் நிரம்பிய பகுதிகள்தான்.

அதனால் பாதி மாணவர்களை முதல் நாளும், மீதிப்பேரை மறுநாளும் என்று வரச் சொல்லி விடுவார் வசந்தா. சில காலம் அவர் பம்பாயில் இருந்ததால் ஹிந்தியும் நன்றாகத் தெரியும். இப்போதைய ஆங்கில வழிப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஹிந்திப் பாடம் அவசியம் என்பதால் சில குழந்தைகளை ஹிந்தி மட்டும் படிக்க வருவார்கள். பட்டப்படிப்பு என்று எதுவும் படித்ததில்லை என்றாலும் தன் பள்ளிப் படிப்பு கொடுத்த அறிவிலேயே அதன்பின் நிறைய வாசித்து தெரிந்துகொண்ட வசந்தாவுக்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வாசிப்புதான் சோறு போடுகிறது. அந்த ஏரியாவில் மரியாதையையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது. இந்த லைன் வீட்டில் பாதுகாப்பும் மாரியப்பனின் அனுசரணையும் இல்லை என்றால் அவரால் இவ்வளவு தூரம் நிம்மதியாக காலத்தை ஒட்டியிருக்க முடியாது.

சிறுமி வந்து சென்றபின் கொஞ்ச நேரத்திற்கு ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த தங்கமாரியப்பன், வசந்தாவிடமும் வாடகையை வாங்கி வைத்துக்கொண்டு, "செலவுக்கு எதுவும் வேணும்னா அண்ணன்ட்ட கேளு தாயி! யோசிக்கக்கூடாது" என்றார்.

"வேணும்னா கேட்டுக்கிடுதேன் அண்ணே! உங்கள்ட்ட கேக்காம யார்ட்ட கேக்கப் போறேன்" என்று வசந்தா கூற, தன் பையில் அடக்கி வைத்திருந்த ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையை எடுத்து வசந்தாவிடம் நீட்டினார் மாரியப்பன்.

"நீதான் நிறைய புஸ்தகம் படிப்பியே.. இந்தா இதைப் படிச்சுப் பாரு.. என்னமா எழுதிருக்கான்.. திரும்பியும் வெள்ளைக்காரன் ஏதோ சதி பண்ண தானா நம்ம ஊர்ல வந்து கம்ப்யூட்டர் மூலமாக வியாபாரம் பண்ணுதானாம்.. இங்கே உள்ள மார்க்கெட்டை எல்லாம் பிடிச்சு பழைய வெள்ளைக்காரன் கம்பெனி மாதிரி திரும்பியும் ஆட்சி பண்ண வந்துருவாங்கன்னு போட்டுருக்காங்க" என்று ஒரு பக்கத்தைத் தேடியவர், அதைப் பாதியில் விட்டுவிட்டு இன்னொரு பக்கத்தில் போட்டிருந்த செய்தியைக் காட்டி,

"வடக்கே பாத்தியா? மாட்டை வளக்குறவனைப் போட்டு மாட்டுக்கறி சாப்பிட்டான்னு அடி வெளுத்து இருக்காங்க.. எவன் எதைத் தின்னா இவங்களுக்கு என்ன? அவங்க வேலையப் பாத்துட்டு போக வேண்டியதுதானே? அம்புட்டும் கொழுப்பு.. உழைக்காம சோறு திங்கிறாங்கல்ல.. அந்தக் கொழுப்பு.. இவனுங்கள ஓடவிட்டு மாட்டையே மிதிக்க வச்சுக் கொல்லணும்" என்றார் தங்கமாரியப்பன்.

அவரின் தடாலடிப் பேச்சுக்களைப் போலவே அவரது புலனாய்வுப் பத்திரிகைப் பிரியமும் பிரபலம் தான்.. வெளியாகும் அனைத்துப் புலனாய்வுப் பத்திரிகைகளையும் வாங்கிவிடுவார். சிவப்பு, கறுப்பு, ஊதா என்று பல்வேறு வண்ண பேனாக்களை எப்பொழுதும் சட்டைப்பையில் வைத்திருப்பவர் ஒரு வரி விடாமல் பத்திரிக்கையில் வரும் அத்தனை கட்டுரைகளிலும் கோடு கிழித்து வைத்திருப்பார். முக்கியமானது என்று அவர் நினைக்கும் விஷயங்களில் கட்டம் கட்டியும் வைத்திருப்பார். எதைக் கட்டம் கட்டி இருக்கிறார் என்று வாசித்துப் பார்த்தால் அது ஒன்றும் முக்கியமானதாக இருக்காது.

ஒரு அரசியல் கட்சிக்கு சார்பான மனநிலையில் சிறுவயது முதலே இருந்து வந்திருந்தாலும் அந்தக் கட்சிக்கு சார்பான பத்திரிகையையும் வாங்குவார், அதற்கு எதிரான பத்திரிக்கையையும் வாங்குவார். அவர் பத்திரிக்கையில் கோடு கிழித்து, அதை பற்றி விவாதிக்கும் அழகை பார்ப்பவர்கள் பலரும் கழண்ட கேஸ் என்று கூறிவிட்டு நகர்வதைத் தான் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

"இருக்கட்டும்! நீங்க போன தடவை குடுத்த புத்தகமே இன்னும் படிக்காமத் தான் கிடக்கு.. அதையும் வேணாக் கொண்டு போங்க" என்றபடி வசந்தா உள்ளே போக எத்தனிக்க,

"படிச்ச புஸ்தகத்தை கிழிக்காம குடுக்கிற ஒரே ஆளு நீதான்.. வரட்டா? துளசியை ஒரு எட்டு உன்னை வந்து பாத்துட்டுப் போகச் சொல்லுதேன்.. அவளுக்கு ருக்மணியை மாதிரி முறுக்கு சுத்த தெரிய மாட்டேங்கு.. ஒரு நாள் ரெண்டு பேருமா சேந்து சுட்டுக் குடுங்க என்ன? இப்போ புதுசா பல்லு கட்டி இருக்கம்லா? நல்ல வீட்டு முறுக்கா சாப்பிடனும்னு ஆசையா இருக்கு" என்றபடி கிளம்பினார்
 

Latha S

Administrator
Staff member
வித்யாசமான தலைப்பைப் போல் தங்க மாரியப்பன்னும் வித்யாசமான கேரக்டர். சற்று கெடுபிடி என்றாலும் தங்கமான குணம். மஞ்சள் பை இந்த மாசம் வசூலானது
 
Top