கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சள் பை 3

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 3

நான்கைந்து எட்டுகள் வைத்துவிட்டு ஏதோ நினைத்துக் கொண்டவராக திரும்பி வந்து, "இந்த நாலாம் நம்பர் வீட்டுக்காரனை எப்படியும் காலி பண்ணப் போறேன்.. பேசாம அந்த வீட்டை நீயே எடுத்துக்கிடுதியா.. புத்தகங்களை எல்லாம் அடுக்கி வச்சு லைப்ரரி மாதிரி போடனும்னு சொன்னியே.. அதுலேயே வகுப்பும் எடுத்துக்கிடலாம்.. அதுக்கு வாடகை ஒண்ணும் குடுக்க வேண்டாம்.. என்ன சொல்லுதே?" என்று அவர் வசந்தாவைக் கேட்க,

"அதெல்லாம் வேண்டாம்.. என் வீடு ஒண்ணு போதாதா? அதேமாதிரி சைஸ்ல இன்னொண்ணு எதுக்கு.. இங்கேயே சமாளிச்சுக்கிடலாம்.. நம்ம ஆசாரி அம்மன் நகர்ல வேலை பார்த்த மிச்ச பிளைவுட்டை வச்சு அடிச்சுத் தந்தாரே.. ஒரு செல்ஃபு.. அதுலேயே நிறைய புஸ்தகம் வச்சிருக்கேன்.. ஒரு எட்டு உள்ளே வந்து பாருங்களேன்.. அதுவும் போக ஒரு குடித்தனத்துல செட்டாகி இருக்கவங்கள கலைக்கக்கூடாது.. அவங்க பாட்டு இருந்துட்டு போட்டும்" என்றார் வசந்தா.

"சொல்ல மறந்துட்டேன்.. நம்ம ஊரு கோயில் கும்பாபிஷேகம் வருது.. அதுல ஒரு லட்ச ரூபாய் திருப்பணிக்குக் குடுக்கிறதா சொல்லியிருக்கேன். அஞ்சு வருஷமா ஒவ்வொரு வீட்டு வாடகைலையும் மாசம் நூறு ரூபா தனியா எடுத்து வச்சுக்கிட்டு இருக்கேன்.. சாமி காரியம் பாத்தியா? வாக்குக் குடுத்தா கண்டிப்பாக செஞ்சுரணும்.. அம்மா அருளால் அதான் இன்னைக்கு நல்லா இருக்கோம்.. அப்பாவா கோயில் திருப்பணிக்கு செய்யனும்ல.. என்ன சொல்லுத நீ?" என்று தங்க மாரியப்பன் கூறியதற்கு,

"அதுதான் போன மாசம் சொன்னிங்களேண்ணே! கண்டிப்பா செய்யணும்.. நீங்க பணம் குடுக்கப் போகும்போது சொல்லுங்க.. என்னால முடிஞ்சத நானும் குடுத்துவிடுதேன்" என்றார் வசந்தா.

அருகிலிருந்த கிராமம் ஒன்றில் தான் அவர்களது குலதெய்வக் கோயில். தங்கமாரியம்மன் என்ற குலதெய்வமாகக் கொண்டவர் அவர். உழைப்பால் உயர்ந்தாலும் அம்மா அருளில் தான் தான் முன்னேறி இருப்பதாக தங்கமாரியப்பனுக்கு ஆழமான நம்பிக்கை. வசந்தா அவரது பால்ய சினேகிதன் நாராயணனின் மனைவி. நாராயணனும் அவரும் சேர்ந்துதான் தனியாக வீடுகளைக் கட்டத் துவங்கினார்கள். ஏழெட்டு வருடங்களுக்கு ஒன்றாகவே பணிபுரிந்து இருப்பார்கள். அதன்பின் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று வேலைகள் வந்து விட்டால் மாரியப்பனே அதில் ஒன்றை நாராயணனுக்குப் பிரித்துக் கொடுத்து, "நீயே எடுத்து செய்ப்பா!" என்று விட்டுவிடுவார்.

நல்ல வருமானம் இருந்ததால் நாராயணனுக்கு சொந்தத்தில் படித்த பெண்ணே கிடைத்தது. இருவரும் நன்றாகத்தான் குடும்பம் நடத்தினார்கள். என்ன காரணமோ பத்து வருடங்களுக்கு மேல் குழந்தை இல்லை. திடீரென்று ஒருநாள் விபத்தில் நாராயணன் இறந்துபோக அந்தப் பகுதியிலேயே வேறு ஒரு வீட்டில் குடியிருந்த வசந்தா தன் ஒருத்திக்கு ஒற்றை அறை போதும் என்று நினைத்து தங்க மாரியப்பனிடம் கேட்டு இந்த காம்பவுண்டுக்கு வந்துவிட்டார். அப்போது இருந்த காலகட்டத்தில் தனித்தனி வீடுகளில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு தொழில் செய்பவர்கள் என்று இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போல் பழகியதால் அவருக்கு இந்த இடம் பிடித்துப் போயிற்று.

நாராயணன் கொஞ்சமாக சேர்த்து வைத்துப் போயிருந்தாலும் சும்மா இருக்க பிடிக்காமல் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, வத்தல் வடகம் தயாரிப்பது, முறுக்கு சுடுவது போன்ற தனக்கு தெரிந்தவற்றை செய்வார் வசந்தா. இப்படித்தான் முன்பு, 'மழை நேரம் வந்தா புள்ளைங்க படிக்க முடியலன்னு சொன்னியே.. வேணா இந்த மூணு வீட்டுக்கு மட்டும் ஒரு ஷெட் போட்டுத் தந்துருதேன்.. தார்ப் பாய் விரிச்சு உக்கார வச்சுரலாம்' என்று மாரியப்பன் முன்பு கேட்டிருக்க,

"சே சே! இந்த ஊர்ல என்ன அப்படியா மழை கொட்டி தீத்துருது.. வருஷத்துக்கு 10 நாளோ, 15 நாளோ அதுலயும் பாதி நாள் லீவு நாளாத் தான் இருக்கும்.. சமாளிச்சுக்கலாம்" என்று மறுத்துவிட்டார் வசந்தா. உண்மையில் தனக்கு மட்டும் சலுகை காட்டியதாக இருக்கக் கூடாது, தானும் குடித்தனக்காரர் உங்களில் ஒருத்தி தான் என்ற விதத்தில் தெளிவாக இருந்தார் அவர். எல்லா வீட்டிற்கும் முன்பாகவும் ஷெட் போடுவது என்பது தங்கமாரியப்பன் வாங்கும் வாடகைக்கு சாத்தியமானதல்ல. காற்றோட்டமும் வெளிச்சமும்கூட குறைந்து விடும்" இருக்கும் என்ற காரணத்தைச் சொல்லி மறுத்துவிட்டார் வசந்தா.

வசந்தா ஒதுங்கிப் போக நினைத்தாலும் தங்கமாரியப்பனும் சரி, அவரது மருமகள் துளசியும் சரி, வசந்தாவை தங்கள் உறவுக்காரி போல் தான் நடத்துவார்கள். வீட்டில் ஏதேனும் பராமரிப்புப் பணிகள் செய்ய வேண்டுமென்றால் வசந்தாவைத் தான் மேற்பார்வை பார்க்கச் சொல்வார்கள். குழாயில் அடைப்பு, லைட் எரியவில்லை போன்ற பிரச்சனைகள் வந்தால் _
'எலக்ட்ரிஷியனை வரச் சொல்லி இருக்கேன்.. என்னன்னு பார்க்கச் சொல்லிரு வசந்தா' என்று அவள் கையில் பொறுப்பை கொடுப்பார் தங்கமாரியப்பன்.

அவரும் மருமகள் துளசிக்கு மட்டுமல்ல அவரது பேரன் தங்கமுகுந்தனுக்கும் ஆச்சி என்றால் மிகவும் பிடிக்கும். அவளது டியூஷனில் பயிலும் சிறுவர்களில் அவனும் ஒருவன். எவ்வளவு பிடிவாதமாகக் கொடுத்தும் அவனுக்கு மட்டும் கட்டணம் வாங்கவே மாட்டார் வசந்தா. அதற்கு ஈடாக துளசி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது உணவுப் பொருளை டப்பாவில் போட்டு முகுந்தனிடம் கொடுத்து விடுவாள். பண்டிகை நாட்களில் தனக்கு புடவை எடுக்கும் போது வசந்தாவுக்கும் சேர்த்து எடுத்து விடுவாள்.

எல்லா நாட்களும் வகுப்பு முடிந்தவுடன் குழந்தைகளுக்கு வசந்தா ஒரு கதை சொல்வார். அந்த கதையை அப்படியே போய் அம்மாவிடம் இன்னும் சில கற்பனைகளை சேர்த்து விளக்கமாக ரசிக்க ரசிக்கக் கூறுவான் முகுந்தன். ஐந்தாம் வகுப்பு தான் படிக்கிறான் என்றாலும் அவ்வளவு புத்தி கூர்மையும் தெளிவும் உடையவன். சமீபமாக மாரியப்பனுக்கு ஏற்பட்டிருந்த அதி தீவிர ஞாபகமறதி பிரச்சனையைக் கூட அவன்தான் சமாளிக்கிறான். பல நேரங்களில் தாத்தாவைத் தனியே விடாமல் கூடவே சென்று வருவான். தாத்தாவின் தனிமையை போக்க ஏதாவது பேசுவதும் அவரிடம் சில சில சந்தேகங்கள் கேட்பதும் என்று அவரை எப்போதும் தொடர்பிலேயே வைத்திருக்க முயல்வான். பின்புறம் இருந்த லைனில் ஒரு டீக்காரர் உட்பட பலரது வீட்டிற்கும் வாடகை வசூலை முடித்துக்கொண்டு திரும்பினார் தங்கமாரியப்பன்.
 

Latha S

Administrator
Staff member
மஞ்சள் பை கலெக் ஷன் கூட ஒவ்வொருவர் கதையும் வருமா.. நல்லா இருக்கு
 
Top