கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சள் பை 5

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 5

"புது சென்ட்டு பாட்டில் வாங்கி ரெண்டு நாள் தான் ஆச்சு.. எண்ணூறு ரூபா விலை.. அதுக்குள்ள அதை யாரு முழுசா காலி பண்ணினது?" காலையிலேயே வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கொண்டிருந்தான் தங்கவிநாயகம்.

"நான் ஏங்க சென்ட்டு எடுக்கப் போறேன், தம்பி ஸ்கூல்லயும் அதெல்லாம் பயன்படுத்தக்கூடாது" என்று துளசி அவனை சமாதானம் செய்தாள். இதற்கு மேல் விட்டால் அவளும் வெடித்துவிடுவாள் போன்ற நிலை. பொருட்களை டமார் டமார் என்று உருட்டுவதும், சிலவற்றைத் தூக்கி எரிவதுமாக தங்கவிநாயகம் உண்டாக்கிய சத்தங்கள் அவளுக்கும் எரிச்சலைத் தந்து கொண்டிருந்தன.

இப்போது சில மாதங்களாக மாதவிடாய்க்கு முன்பு இப்படித்தான் எரிச்சலும் கோபமும் வருகிறது. சாதுவான அவளுக்கே இப்படி என்றால் மற்றவர்களுக்கு இதைக் காட்டிலும் கோபம் வருமே என்று நினைத்தவள் கோபத்தை விழுங்கினாள்.

"எது கேட்டாலும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி என் வாயை அடச்சுரு.. நீயும் எடுக்கல, அவனும் எடுக்கலைன்னா அப்ப யாரு தான் எடுத்திருப்பா இந்த வீட்டுல?" என்று கேட்டவனுக்கு அப்பாவின் நினைவு வந்தது.

"அப்பா அப்பா!" என்று கத்திக்கொண்டே அவர் இருந்த பகுதிக்குச் சென்றான். தங்க மாரியப்பனுக்கு இப்போது அவ்வளவாகக் காது கேட்பதில்லை. வழக்கம்போல் புலனாய்வுப் பத்திரிகையில் தான் கோடு இழுத்து வாசித்துக்கொண்டிருந்தார்.

"அப்பா!" என்று அழைத்தும் அவர் திரும்பவில்லை.. ஏனென்றால் விநாயகம் அவரிடம் நேரடியாகப் பேசுவதே அபூர்வம் தான், அப்பா என்று அழைப்பது வெகு அபூர்வம். அந்த ஆளு, இந்த ஆளு என்று குறிப்பிட்டுத் தான் துளசியிடம் ஏதாவது குறிப்பிட்டு கூறுவான்.

இரண்டு முறை உரக்க அழைத்த பின், அவர், "என்னடா?" என்க, "என்னோட புது சென்ட் பாட்டில் காலியாப் போச்சு.. அதை எடுத்தீங்களா?" என்று கேட்டான்.

"ஓஹோ! அது சென்ட்டா? கேவலமான நாத்தமா இருந்துச்சு.. நான் கூட பாத்ரூம்ல தெளிக்கிறது போலன்னு நினைச்சிக்கிட்டேன்.. நீ அட்டைப்பெட்டியா அடிக்கி வச்சிருக்கியே ஸ்டோர் ரூம்பு.. அதுக்கு உள்ள போனேன்.. பயங்கர நாத்தம் ஆடிச்சுச்சு.. அதான் நாத்தம் போகட்டும்னு சென்ட்டை எடுத்து முழுசும் அடிச்சு விட்டேன்" என்றார்.

"என்ன நாத்தம் அடிச்சுச்சா?" என்று விநாயகம் லேசான அதிர்ச்சியுடன் கேட்க, "எலி, பல்லி ஏதோ செத்துக் கிடக்கும்னு நினைக்கேன்" என்றார் தங்கமாரியப்பன்.

"ஆமாங்க நான் கூட ஒரு எலியைப் பார்த்தேன் அன்னைக்கு.." என்றாள் துளசி.

"எலியைப் பார்த்தா உடனே அடிக்க வேண்டியதுதானே? இல்ல யார் வீட்டுல இருந்தாவது பொறி வாங்கி வைக்க வேண்டியதுதானே?" என்று அதற்கும் கடிந்து கொண்டான் தங்கவிநாயகம்.

"அய்யோ எலின்னா எனக்கு பயம்.. அந்த ரூமையே அடைச்சுப் போட்ருவேன்.. அதுக்குள்ளேயே போகமாட்டேன்" என்று கூறிவிட்டு துளசி தன் வேலையைத் தொடர,

"எலி செத்து போச்சுன்னா எடுத்துத் தூரப் போடணும். இப்படியா முழு சென்ட்டையும் அடிச்சுக் காலி பண்றது? போங்க போய் அந்த எலியைக் கண்டுபிடிச்சு க்ளீன் பண்ணுங்க" என்று கூறிவிட்டு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டான்.

"ஆன்னா ஊன்னா சட்டை எடுத்துப் போட்டு கிளம்பிருதான்.. இன்னும் எத்தனை நாளைக்கு சொந்தக் கால்ல நடக்காம மத்தவங்க தோள்ல ஏறி சவாரி பண்ணப் போறானோ?" என்று கூறியவாறு அவனின் தொழில் மூலதனங்களான 'டேபிள் மேக்'குகள், அதற்கு முன் வாங்கிய ஹாட் பாக்ஸ், இப்படிப் பல பொருட்கள் அடசலாகச் சேர்ந்திருந்த அறையை நோக்கி நடந்தார் தங்கமாரியப்பன்.

"சாப்பிட வாங்க மாமா! யாராவது ஆளைக் கூட்டி சுத்தம் பண்ணுவோம்" என்று துளசி பலமுறை கூறியதையும் காதில் வாங்காமல் தானே அமர்ந்து ஒவ்வொன்றாக சுத்தம் செய்து, இறந்துபோன அந்த எலியையும் கண்டுபிடித்துத் தூர எறிந்து பின்புதான் அமர்ந்தார்.

"அந்த வாடையே குமட்டிருச்சு.. பசி எடுக்கலம்மா!" என்று கூறியவர் வெறும் நீராகாரத்துடன் நிறுத்திக்கொண்டார். அன்று முழுவதும் அயர்வாக படுத்தபடியே இருந்தார்.

"ஏம்மா தாத்தா தூங்கிகிட்டே இருக்காரு?" என்று முகுந்தன் கேட்டதற்கு, "அவங்களுக்கு இன்னைக்கு ஒரு சரியான வேலைடா!" என்றாள் துளசி.

காலையில் நடந்த கூத்தை அம்மா மூலமாகக் கேள்விப்பட்ட முகுந்தன், "அப்பா ரொம்ப மோசம்.. பாவம்ல தாத்தா?" என்றவன், "இருந்தாலும் இந்த தாத்தாவும் கொஞ்சம் சேட்டையைக் குறைச்சுக்கிடலாம்.. வீட்டை ஒதுங்க வைக்கிறேன்னு சொல்லி என் பொருளை எங்கேயாவது எடுத்து எடுத்து போடுறார்.. அன்னைக்கு என் சைக்கிள் சாவியைத் தேடு தேடுன்னு தேடினேன்.. அவர் பீரோக்குள்ள வச்சிருக்காரு.. நாலு நாளா சைக்கிளை எடுக்க முடியல.. என் பென்சில் பேனாவைக் கூட எங்கேயாவது எடுத்து பூட்டி வைக்கிறாரும்மா.. கேட்டா, நீ கீழே வேஸ்ட்டா போட்டுருந்த.. நான் பத்திரமா எடுத்து வச்சேன்னு சொல்லுறார்" என்றான்.

துளசியும் அவருடைய ஞாபக மறதியால் கொஞ்சம் கடுப்பாகிப் போய்த் தான் இருந்தாள். தண்ணீர்க் குழாயைத் திறந்து வைத்து விட்டு மறந்து போவது, கருப்பட்டிக் காபி போடுகிறேன் என்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு அப்படியே தீயை எரிய விட்டுவிட்டுச் செல்வது என்று ஏகப்பட்ட குளறுபடிகள்.
அன்றொருநாள் விருந்தினர் வந்திருக்க, இவள் பழச்சாறுக்காக எலுமிச்சம்பழத்தைக் கரைத்து வைத்துவிட்டு சீனி எடுப்பதற்காக உள்ளறைக்கு சென்றிருக்க, அழுக்குத் தண்ணீர் என்று நினைத்து அவ்வளவையும் எடுத்துக் கொட்டி விட்டார்.

சில சமயங்களில், "நீங்க ஏன் மாமா சமையல் கட்டுக்குள்ள வரீங்க? அங்கேயே உட்கார்ந்து உங்க புத்தகத்தைப் படிங்க!" என்று சற்று கோபமாகக் கூறியிருக்கிறாள் துளசி.
அதற்கு மேல் எப்படி அவரை சரி செய்வது என்று தெரியவில்லை. ஒரு வாரத்திற்குத் தொடர்ச்சியாக அமைதியாகவே இருப்பார், ஒரு வாரத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிடுவார். அப்படி நாட்களில் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து எதையாவது சுத்தியல் கொண்டு தட்டிக் கொண்டும் உடைத்துக் கொண்டும் இருப்பார்.

இன்னும் சில சமயங்களில் பத்து மணி ஆனாலும் எழுந்திருக்க மாட்டார். 'பாவம் சம்பாதிக்கிற மனுஷன், வீட்டுச் செலவுக்குக் காசு கொடுக்கிறதும் அவரு தான். அவரைப் போய் எப்படி எதுத்துப் பேசுறது?' என்று தனக்குள்ளேயே கூறிக் கொள்வாள் துளசி.

மற்றவர்களிடம் வீட்டு விவகாரத்தைப் பேசி அவளுக்குப் பழக்கம் இல்லை. இருந்தாலும் மனம் கேட்காமல் சண்முகத்தாயிடம் அவள் ஒரு முறை கூறிவிட, "எங்க வீட்டுக்காரர் கூட சொன்னாரு.. இப்பல்லாம் கொத்தனார் மாமாவுக்கு ரொம்ப மறதி ஆயிருச்சு.. சொன்ன விஷயத்தையே திருப்பித் திருப்பி சொல்றாருன்னு.. எதுவும் டாக்டர்கிட்ட காமிச்சீங்களா?" என்றாள் அவள்.

"என் வீட்டுக்காரர் கிட்ட சொல்லனும்.. அவுக என்ன சொல்லுதாகளோ.. ஏற்கனவே அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஏழாம் பொருத்தம்" என்று துளசி கூற

"அதான் எனக்கும் யோசனையா இருக்கு.. உங்க மாமனார் இருக்கிற வரைக்கும் உன் பாடு பிரச்சனை இல்லாம ஓடிரும்.. உன் வீட்டுக்காரர் இருக்கிற சொத்தை அழிக்காம இருந்தாச் சரி.. கடவுள்தான் அவருக்கு நல்ல புத்தி குடுக்கணும்" என்றாள் சண்முகத்தாய். நல்லவேளையாக அப்பாவியான துளசிக்கு அவ்வளவாகப் புறம் கூறும் தோழிகள் இல்லை. இருந்த ஒரே தோழியும் நியாயமாக அறிவுரை கூறுவது பெறும் ஆறுதல்.

அதே நேரம் தங்கவிநாயகமும் தன் தோழனிடம் தன் அப்பாவைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தான். "இந்தக் கிழவன் தொல்ல தாங்க முடியலடா! பூதம் புதையலைக் காத்த மாதிரி எல்லா பணத்தையும் அமுக்கி அமுக்கி வச்சுக்கிடுதாரு.. ஒரு பிசினஸ் பண்ணலாம்னு பார்த்தா வழிக்கு வரவே மாட்டேங்குறாரு" என்று சலிப்புடன் கூறினார்.

நல்லவனாக இருந்தால் அந்த நண்பன் என்ன செய்திருக்க வேண்டும், 'உன் நல்லதுக்குத் தானடா செய்றாரு.. நீ கொஞ்சம் பொறுப்பா இருந்து காமி. ஒரே தொழிலை ஒழுங்காப் பண்ணு.. மாசத்துக்கு ஒரு ஐயாயிரம் பத்தாயிரம் கொண்டுபோய் அவர் கிட்ட குடுத்து, அப்பா இந்த மாசம் நான் சம்பாதிச்சதுப்பா அப்படின்னு சொல்லி கையில குடு.. அதுக்கப்புறம் மொத்த சொத்தையும் உன்கிட்ட தானே குடுக்கப் போறார்.. உங்கிட்ட கொடுக்காமல் வேற யாருக்குக் குடுக்கப் போறார்.. அவர் கஷ்டப்பட்டு செங்கல் செங்கல்லா கட்டி சம்பாதிச்ச சொத்துல்லா.. கவனமாத்தான் இருப்பாரு' என்று கூறியிருக்க வேண்டும்.

ஆனால் சுயபுத்தியும் இல்லாத, சொல் புத்தியும் இல்லாத தான்தோன்றியாக வளர்ந்த தங்கவிநாயகத்தின் நண்பன் எப்படி இருப்பான்? அந்த நண்பன் சின்னக்குட்டியும் அவனைப் போல் தான் இருந்தான்.

"நானா இருந்தா இப்படிப்பட்ட அப்பாவுக்கு எப்பயோ சோத்துல விஷம் வச்சிருப்பேன்.. நீயா இருக்க போய் இவ்வளவு தூரம் சமாளிச்சுக்கிட்டு இருக்கே.. சண்டை போட்டு ஏதாவது ஒரு லைன் வீட்டையாவது உனக்கு எழுதி வாங்கு.. அந்த வடக்கு காம்பவுண்டு இருக்கே.. அதைக் கட்டி பல வருஷம் ஆச்சு.. அதை இடிச்சுட்டு பெரிய காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விடலாம், இல்ல கார் ஷோரூம்க்குக் கூட இடம் பார்த்துக்கிட்டு இருக்காங்க.. அவங்களுக்கு குடுக்கலாம்" என்றான்.

"அப்படியாடா? என்ன கார் கம்பெனி?" என்று அவன் கேட்க,

"ஹுண்டாயோ, மாருதியோன்னு நினைக்கிறேன்" என்று சின்ன குட்டியும் வாய்க்கு வந்ததைச் சொன்னான்.

இப்படி ஆள் தேடிட்டு இருக்காங்க, இடம் பார்த்துகிட்டு இருக்காங்க, விசாரிச்சுட்டு இருக்காங்க என்று பல தகவல்களைச் சொல்லிச் சொல்லி தங்கவிநாயகத்தைக் குழப்பப் பாதைக்கு இட்டுச் சென்றவனே அவன்தான்.

"வர வர ஞாபக மறதி வேற ஜாஸ்தி ஆயிருச்சுப்பா அவருக்கு.. அன்னைக்கு நீ வாங்கி தந்தியே எண்ணூறு ரூபாய் சென்ட்டு.. அதைப் பூரா எலி செத்த நாத்தத்துக்கு அடிச்சு காலி பண்ணிட்டாருடா!" என்றான். முந்நூறு ரூபாய் சென்ட்டை எண்ணூறு ரூபாய் என்று இவன் தலையில் கட்டியதே சின்னக்குட்டி தான்.

"அது ரொம்ப ஆபத்தாச்சே டா! அப்ப மறதி ரொம்ப ஜாஸ்தியாகுறதுக்கு முன்னாடியே சொத்தை எல்லாம் உன் பேருக்கு எழுதி வாங்கிருடா.. ரொம்ப மண்டை குழம்பி போயிடுச்சுன்னா ரிஜிஸ்டர் ஆபிஸ்ல பதிய மாட்டாங்க.. அவரு ஏட்டிக்குப் போட்டி பதில் சொன்னா, தெளிவான மனநிலைல இருக்காருன்னு டாக்டர் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வாங்க.. அப்படி இப்படின்னு தள்ளிவிட்டுருவாங்க.. இப்படித்தான் நம்ம சங்கர் இல்ல சங்கர். அவன் பெரியப்பா வீட்டுல நடந்துச்சாம்" என்று ஒரு கதையை அவிழ்த்து விட்டான் சின்னக்குட்டி.
 
Top