அத்தியாயம் 9
அன்றைய போராட்டம் அத்துடன் முடியவில்லை அவருக்கு. சாப்பிட்டுவிட்டு வந்து மாதவாரியாக சேர்த்து வைத்திருந்த மஞ்சள் பைகளை எடுத்து எண்ண முற்பட்டார். ஏற்கனவே எண்ணி கட்டி வைத்திருந்தவை தான் அவை. முதலில் ஒரு லட்சம் மட்டும் தருகிறேன் என்று கூறியவரை, "நீங்கதான் நம்ம ஜனங்கள்ல நல்ல செயலா இருக்கற ஆளு.. அம்மா அருள் உங்களுக்கு அப்படியே இருக்கு.. நீங்க ஒரு மூணு லட்சமாவது குடுக்க வேண்டாமா?" என்று பேசிப்பேசி சம்மதிக்க வைத்திருந்தனர்.
ஒரேயடியாக மூன்று லட்சத்தை தூக்கிக் கொடுப்பது தன் சக்திக்கு மீறிய விஷயம் தான் என்றாலும் இப்படி மகன் தொழில் செய்கிறேன் என்று பணத்தை ஆற்றில் விட்டதுபோல் விடுவதை விட கோயிலுக்குக் கொடுக்கலாம் என்று நினைத்து சம்மதித்தார். இப்பொழுது ஒன்றரை லட்சமாவது எடுத்து வைக்கவேண்டும், எல்லா கட்டுக்களையும் பிரித்து எண்ண, முதல் முறை ஒண்ணே கால் லட்சம் வந்தது. மறுமுறை எண்ணினால் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வந்தது. கண்களும் மூளையும் எங்களைக் கொஞ்சம் ஓய்வெடுக்க விடேன் என்று அவரிடம் கெஞ்சின. மகனும் வீட்டுக்கு வந்திருந்தான் உரத்த சத்தத்துடன் டிவியை வைத்துக்கொண்டு பிக்பாஸ் பார்த்துக்கொண்டிருந்தது கேட்டது.
கதவைப் பூட்ட போன துளசியை அழைத்து, "துளசி துளசி! இந்த ரூபாயைக் கொஞ்சம் எண்ணித் தாயேன்.. கணக்கு குழப்புது" என்று அவர் ரகசிய குரலில் கேட்க,
"ஆத்தாடி! ரூபாய் எண்ணுறதா? அது எனக்கு சின்ன புள்ளைல இருந்து வரவே வராது.. நான் வேணா அவங்கள வர சொல்லட்டா?" என்று அவள் கேட்டாள்.
விநாயகத்தை எண்ணச் சொல்வதும் இந்தப் பணத்தை அப்படியே போய் கிணற்றில் போடுவதும் இரண்டும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டு, "இல்ல! நானே பாத்துக்கிறேன்" என்றார் தங்கமாரியப்பன்.
அம்மாவும் தாத்தாவும் ரகசியம் பேசுவதைக் கேட்டு அந்தப் புறமாக வந்த முகுந்தன், "என்ன தாத்தா?" என்றான்.
"ரூபாய் எண்ணனும் பா!" என்று அவர் கூற, "நான் வேணா எண்ணித் தரேன்.. ஆனா மெதுவா எண்ணுவேன். பரவாயில்லையா?" என்று அவன் கேட்க,
"சரிடா!" என்றார். எல்லாமே நூறு ரூபாய்த் தாளாத் தான் வச்சிருக்கேன். அதனால நூறு நூறு தாளா எடுத்து தனியா பிரிச்சு வை.. அப்புறமா மொத்தமா எண்ணிக்கலாம்" என்றார். நிறைய ரப்பர் பேண்ட்களையும் ஒரு கிண்ணத்தில் வைத்திருந்தார்.
சாவியைத் தேடிக் கொடுத்ததற்கு அப்புறமாக இன்னொரு உதவி செய்ய தனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து மகிழ்ந்த முகுந்தன் சுறுசுறுப்பாக நூறு ரூபாய்த் தாள்களாக அடுக்க ஆரம்பித்தான். மொத்தப் பணத்தையும் எண்ணி முடித்து 'தங்கமாரியம்மன் துணை' என்று எழுதப்பட்ட ஒரு பெரிய மஞ்சள் நிற தாம்பூலப் பையில் வைத்துக் கட்டினார்கள். எந்த விஷயத்தை மறந்திருந்தாலும் ஞாபகமாக கதவை உட்புறமாக பூட்ட மறக்கவில்லை தங்கமாரியப்பன்.
'என்ன பெருசும் சிறிசும் ரொம்ப நேரமா ரூமுக்குள்ளேயே பூட்டிக்கிட்டு இருக்குதுங்க?' என்று யோசித்த தங்கவிநாயகம் பிக்பாஸ் முடிந்தும் டிவியில் வேறு ஏதேதோ சேனல்களை மாற்றியபடி காத்திருந்தான். உள்ளே வைத்திருந்த ரப்பர் பேண்ட்கள் தீர்ந்து விட, சமையல்கட்டிலிருந்து எடுப்பதற்காக வெளியே வந்தான் முகுந்தன்.
"படுக்கலியாடா இன்னும்? மணி பதினொண்ணு ஆச்சு?" என்று தங்கவிநாயகம் கேட்டதற்கு, உற்சாக மிகுதியில், "தாத்தாவுக்கு ரூபாய் எண்ண ஹெல்ப் பண்றேன். கொஞ்சம் லேட்டாத் தான் வருவேன்" என்று கூறிவிட்டான். அப்படி அவன் பெருமை பேசியதுதான் அந்த பணத்திற்கும் தாத்தாவிற்கும் வினையாக வந்து முடியும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
பகல் முழுவதும் வேலை பார்த்த களைப்பில் துளசி தங்கள் அறைக்குள் சென்று விரித்துப் படுத்து விட மனதிற்குள் பல கணக்குகளைப் போட்ட தங்கவிநாயகம் பூனை போல் நடந்து சென்று மனைவிக்கு அருகில் படுத்துக்கொண்டான். எப்போதும் இல்லாத திருநாளாக கணவன் ஆசையாக தன் அருகில் வந்து படுத்துக் கொள்வதை வியப்புடன் பார்த்தாள் துளசி.
"எவ்வளவு வேலை பாக்குற நீ? கால் வலிக்குதா? கை வலிக்குதா?" என்று கேட்டு கைகால்களைப் பிடித்து விட்டான் தங்கவிநாயகம்.
"நம்ம வீட்டு வேலை தானே! கால் எல்லாம் ஒன்னும் வலிக்கல" என்று கூச்சத்தில் கால்களை எடுத்துக்கொண்டாள் துளசி.
"எனக்கு நீன்னா ரொம்பப் புடிக்கும் துளசி.. உன்னைய ரொம்ப சந்தோஷமா வச்சுக்கிடணும்னு எனக்கு அவ்வளவு ஆசை.. இப்படி எல்லா வேலையும் நீயே பார்த்து கஷ்டப்படணுமா? இதைவிட பெரிய வீட்டுக்கு போகணும், வேலைக்கு ஆள் வச்சுக்கணும், உன்னை வெளியூருக்குப் கூட்டிட்டு போய் சுத்தி காட்டணும் இப்படி எல்லாம் நிறைய ஆசை இருக்கு.. உனக்கு எதுவும் ஆசை இருக்கா?" என்றான் வார்த்தைகளில் தேன் தடவி.
கணவன் ஏதோ ஒன்றை நிறைவேறுவதற்காகத் தான் தன்னிடம் அடி போடுகிறான் என்று புரிந்து கொள்ளாத துளசி, "வெளியூருக்கா ங்க? எங்க அம்மா வீட்டுக்குப் போயி ரொம்ப நாளாச்சு. வாரீங்களா, அங்க போய் நாலு நாள் இருந்துட்டு வருவோம்" என்று ஆசையுடன் கூறி எழுந்து அமர்ந்தாள்.
"விளங்கும்.. இந்த புறாக் கூட்டுல இருந்து தப்பிச்சு வந்து எலிப் பொந்துக்குள்ள போகவா? நான் சொல்றது உன்னை ஊட்டி, கொடைக்கானல், பம்பாய், டெல்லி அந்த மாதிரி சுத்தி காமிக்கணும்னு.. நீ மட்டும் கொஞ்சம் ஒத்து வந்தீன்னா சிங்கப்பூர் அமெரிக்காவைக் கூட சுத்திப் பார்க்கலாம்" என்றான் தங்கவினாயகம்.
சிங்கம்பட்டியையும் சிங்கம்புணரியையும் கூட அறிந்திராத துளசி, "ஐயையோ! ஊட்டில ரொம்ப குளிருமே?" என்றாள்.
"அப்பா என் பிஸினஸுக்கு எதுவும் காசு குடுக்க மாட்டேங்குறாரு.. பெருசா முதலீடு பண்ணாதான் பெருசா சம்பாதிக்கலாம். இப்படி 2000 ரூபா வாடகை வாங்கி என்னைக்கு முன்னேறுறது. ஒரு கேஸ் ஏஜென்சி எடுக்கணும்னு சொன்னேனே.. அதுக்கு இரண்டு லட்ச ரூபாய் டெபாசிட் கட்டணும்.. அப்பாட்ட சொல்லி வாங்கித் தாயேன்" என்று தங்கவிநாயகம் கேட்க,
"ஏங்க! 2000 ரூபா தான் வாடகைன்னாலும் நமக்கு எத்தனை வீட்டு வாடகை வருது தெரியுமா? கூட்டினா நிறைய வரும்ங்க" என்றாள் துளசி, அவனுக்குத் தெரியாததைத் தான் கூறுவதுபோல. இவ்வளவு கணக்கு போடுபவன் அப்பா எவ்வளவு வாடகை வாங்கியிருக்கிறார், அதை எங்கெங்கு முதலீடு செய்து வைத்திருக்கிறார் என்பதை அறியாதவனா என்ன?
"எத்தனை வீடு இருக்கு? மொத்தம் எவ்வளவு ரூபா வருது?" என்று அவளிடம் கேட்டான்.
"ஐயோ அதெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா!" என்று துளசி ஒதுங்கிக்கொள்ள, "அதானே! தெரியலைனா என்கிட்டக் கேளு.. நம்ம வீடுகளோட வசதிக்கு நாம வாங்குற வாடகை ரொம்பக் கம்மி. இதைவிட நல்லா சம்பாதிக்கலாம், நல்லா செலவழிக்கலாம். அப்பாட்ட சொல்லி ஒரு ரெண்டு லட்ச ரூபா வாங்கித் தா. இப்ப கேஸ் ஏஜென்சி எடுக்குறேன், அதுக்கப்புறம் பெட்ரோல் பங்க் ஒண்ணும் வைக்கலாம்னு இருக்கேன்" என்றான்.
கணவனின் மேல் அபரிமிதமான மரியாதை வைத்திருந்தாலும் பண விஷயத்தில் அவன் செய்வது சரியில்லை என்பது அவளுக்கே தெரியும். என்ன சொல்லி மாமனாரிடம் போய்க் கேட்பது? வீட்டுச் செலவுக்கு இவ்வளவு வேண்டும் என்று அவள் கேட்டதில்லை. ஆனால் தேவை அறிந்து அதற்கு அதிகமாகவே கொடுப்பார் மாமனார்.
"நான் கேட்க மாட்டேன்.. எனக்கு மாமாவைப் பாத்தாலே பயமா இருக்கும்.. நீங்களே கேட்டுக்கோங்க" என்று கூறியபடி போர்வையை தலை முதல் கால்வரை இழுத்துப் போர்த்தி தூங்கி விட்டாள் துளசி.
தாத்தாவுக்கு இரண்டாவது உதவியையும் வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டு களைப்புடன் வந்த முகுந்தனுக்கு தனக்கு மிகப் பிடித்தமான கதையை கேட்க அம்மா விழித்துக் கொண்டு இருக்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக அப்பா அன்று கண்விழித்திருந்தது அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.
"அம்மா அதுக்குள்ள தூங்கிட்டாங்களாப்பா?" என்று அவன் கேட்க, "ஆமாடா!" என்றான் விநாயகம்.
"இன்னிக்கு ஒரு கதை சொல்லலாம்னு இருந்தேன். மத்தவங்களுக்கு உதவி பண்றது பத்தின கதை.." என்று அவன் கூற, "என்ன கதை?" என்று சுவாரசியமாகக் கேட்டான் தங்கவிநாயகம். அந்த ஜார்ஜ்ஜின் கதையை அப்பாவிடம் கூறிவிட்டு,
"அப்பா அப்பா! இன்னிக்கு நானும் தாத்தாவுக்கு ரெண்டு உதவி செய்தேன் தெரியுமா?" என்றான்.
'ஆஹா பழம் நழுவி பாலில் விழுகிறதே!' என்று சந்தோஷப்பட்ட தங்கவிநாயகம், "என்ன உதவி?" என்றான். தான் சாவியை கண்டுபிடித்ததையும் பணத்தை எண்ணிக் கட்டி வைத்ததையும் பெருமையாகக் கூறிய முகுந்தன், "இனிமே பத்திரமாக ஒரே இடத்துல சாவியை வைங்கன்னு சொல்லி இருக்கேன்பா!" என்னோட பர்ஸ் ஒன்னைக் குடுத்து, அதுக்குள்ள பீரோ சாவியைப் போட்டு கதவுக்கு பின்னாடி இருக்கிற ஆணியில் தொங்கப் போட்டுட்டு வந்தேன்" என்றான் விளக்கமாக.
'இது தானே எனக்கு வேண்டும்' என்று நினைத்து, "குட் பாய்!" என்று அவனை கொஞ்சிவிட்டு தன் அருகிலேயே படுக்க வைத்து தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்தான் விநாயகம். 'நம்ம கதை அப்பாவுக்கும் பிடிச்சிருக்கு போல, அதுதான் நம்மளக் கொஞ்சுராங்க' என்று நினைத்து புன்னகையுடன் முகுந்தனும் தூங்கிவிட்டான்.