இல்லறம்-1
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தில் வசிக்கும் பிராமண குடும்பத்தின் நிகழ்வுகள்
கதாநாயகன் : மனோகரன்
நாயகி : ரேவதி
திருமண வாழ்க்கைக்கு அழகை மட்டுமே பெரியதாக நினைக்கும் ஒரு சாதாரண பெண்ணை தன்னுடைய குணத்தால் கவரும் ஒரு ஆடவன்......மனோகரன்.
மனோகரன் தந்தை சங்கரன் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்தவர் . மனைவி லட்சுமி தனியார் பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை. ஒரே மகன் மனோகரன். படிப்பில் சுட்டி. அனைத்து போட்டிகளிலும் முதல் இடத்தை பிடிப்பவன். ஆனால் பார்ப்பதற்கு சுமார் ரகம். அவன் பெயருக்கும் அவன் முகத்திற்கும் சம்பந்தமே இருக்காது என்று கூட சொல்லலாம். நன்றாய் படித்து பெரிய கல்லூரியில் படித்து முடித்த MBA பட்டதாரி . படிப்பு முடிந்து நல்ல சம்பளத்தில் நல்ல பதவியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் வேலைக்கும் படிப்புக்கும் ஏற்றார் போல பல பெண்கள் வரிசை கட்டி நின்றார்கள். இருப்பினும் புகைப்படத்தை பார்த்து வேண்டாம் என்று சொன்னவர்கள்தான் பலர்.
ஆமாம்! அவன் படிப்பிற்கும் தோற்றத்திற்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்காது. ஆறடி அழகன் இல்லை. அதற்கு சற்றே சற்று குறைவு. ஜிம்மிற்கு சென்று உடம்பை ஏற்றாதவன். ஆனால் தினமும் சூர்ய நமஸ்காரம் செய்வான். வெள்ளை நிறம்? காகம் கூட அவனை பார்த்தால் நான் வெளுப்புத்தான் என்று அலட்டிக் கொண்டு போகும்.
அதுவே குணம்? பார்க்கலாம்.
லக்ஷ்மியின் தங்கை மகள் நிச்சயதார்த்தம் நடந்தது. பொறுப்பான அண்ணனாக அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்தான். அது, ரேவதியின் அப்பா நாராயணன் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது.
" இந்த பையன்?"
"இவனா மனைவியோட அக்கா பையன்" ரவிதான் பதில் சொன்னார்.
"ஓஒ !"
ரவியும் நாராயணனும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் நாராயணனுக்கு ஒரு மகன், ஒரு மகள்...
மகளுக்கு ஜாதகத்தில் இப்போது யோகம் வந்திருப்பதால் உடனே முடிக்க வேண்டும் என்று ஜோசியர் சொல்லியிருந்தார். மனோவை பார்த்ததுமே இவர்களுக்கு பிடித்து விட்டது. ரவியிடம் விசாரித்து, பின் இருவர் வீட்டிலும் பேசி முடிவெடுத்து விட்டனர்.
வழக்கம் போல் ரேவதிக்கு(ம்) பிடிக்கவில்லை. பெரியவர்கள் பார்த்தது., தன் பெண்ணை நன்றாக பார்த்துக்கொள்வானா என்று! அதுவே பெரியவர்கள் செய்வது சரியாகத்தான் இருக்கும் என்று ரேவதி ஒத்துக் கொள்வாளா?
அவர்கள் மனோவை தேர்ந்தெடுத்ததற்கு மற்றொரு முக்கியமான காரணம், அவர்களுக்கு 10 பொருத்தமும் இருந்ததுதான்.
"இந்த ரெண்டு பேர் ஜாதகமும் அத்தனை பொருத்தம். உங்க பொண்ணு இந்த பையன கல்யாணம் பண்ணா அவ்ளோ சந்தோசமா இருப்பா" இது முதல் ஜோசியர். அனுபவம் மிக்கவர்.
மற்றொரு ஜோசியரிடம் சென்ற போது அவர் அதையே இப்படி சொன்னார்.
"எனக்கு தெரிஞ்சு இப்படி ஒரு யோகமான ஜாதகம் கிடைக்கறது ரொம்ப அபூர்வம். சுபஸ்ய சீக்கிரம்" தொலைக்காட்சியில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் வலம் வருபவர்.
இதற்க்கு மேல் பெற்றவர்களுக்கு வேறு என்னதான் வேண்டும்? என்னதான் பெற்று,சீரும் சிறப்புமாக வளர்த்தாலும் மகளை மாப்பிள்ளை தாங்குவதுதானே பெற்றவர்களுக்கு முக்கியம்?
பாவம் அவர்கள், ஜோசியம் பார்த்து ஜாதக பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்தவர்கள் மகளின் மனதை ஓரம் கட்டிவிட்டனர். அவர்களின் முடிவு மகளின் வாழ்க்கையை மட்டும் இல்லாமல் மாப்பிள்ளையின் வாழ்க்கையையும் புரட்டிப் போடும் என்று தெரிந்துகொள்ளவில்லை.
அதன் விளைவுகளை மனோ எப்படி சமாளிப்பான்?
மகளின் வார்த்தைகள் இத்தனை ஊசியாக குத்துமா ? பாவம் அதுவும் அவர்களுக்கு தெரியாமலே போயிற்று. அதுவும் நல்லதுக்குதான். ஏனெனில் வருங்காலத்தில் இன்னும் எத்தனை வலிகளை அவர்கள் தாங்க வேண்டுமோ?
அது சரி! தன் பெண் என்று வரும்போது ஒரு மாதிரியாகவும் மருமகள் என்று வரும்போது வேறு மாதிரியாகவும் ஏன் மாறுகிறார்கள்? நாராயணனும் அவர் மனைவியும் எப்படி பட்டவர்கள் ? தெரிஞ்சுக்கணும் இல்லையா ?
மனோ ரேவதியை மயக்குவானா? தெரியவில்லை.
நிச்சயம் படிப்பவர்களை,
மயக்குவான்.......
மயக்க வருவான் மனோ............