கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மணாளனே மனோஹரா -6

hamsa

New member
இல்லறம்-6

பெரியவர்கள் முகம் கொடுத்து பேசவில்லை என்றாலும், ஏனோ ரேவதிக்கு, தன் வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று தோன்றவே இல்லை. அவர்கள் அவளிடம் முகம் திருப்பியதுதான் அவளுக்கு தாங்க முடியாததாக இருந்தது. அன்று மனோ வேண்டுமென்றே இரவில் தாமதமாகத்தான் வந்தான். இவளோ தன் வாழ்க்கை தொலைந்ததை எண்ணி அழுது அழுது தன்னை அறியாமல் இரவில் உறங்கி இருந்தாள் . வழக்கம் போல, உண்டு முடித்து, வந்து படுத்தவனுக்கு, மனைவி,தூக்கம் இரண்டுமே அருகில் கூட வரவில்லை . அதுவும் சிறிது நேரத்திற்குத்தான், சிறிது நேரத்திலேயே திரும்பி படுத்தவள், அவளையும் அறியாமல், அவனையே கட்டிக் கொண்டாள் . வழக்கம்போல மறந்தும் அவன் அவளை தொடவில்லை. ஆனால் ஸ்பரிச சுகம்! விடுமா? அவனை மயக்கியது. அவனும் உறங்க ஆரம்பித்தான். பிடிக்கிறதோ இல்லையோ அவள் கட்டிக் கொண்டால்தான் அவனுக்கு தூக்கம் வருகிறது. அது அவனுக்குத் தெரியும். ரேவதிக்கும் அப்படித்தான். பாவம் அது அவளுக்குத் தான் தெரியாது. அரைகுறை தூக்கத்தில் வந்து அவனையேக் கட்டிக் கொள்வாள். காலையும் போட்டுக் கொள்வாள். அவளின் மூச்சுக் காற்று அவன் கழுத்தில் ..... காதல் இல்லாத நெருக்கம் கூட அக்னிதானோ?

மறு நாள் விடியற் காலை , வழக்கம் போல எழுந்து வந்தவள், பார்த்தது, அழுது கொண்டே மாமியார் பாலை காய்ச்சுவதைத்தான் . ஏனோ இவளால் தாங்க முடியாது. மாமியாரின் கண்ணீருக்கு காரணம் தெரியாது. இருந்தும் தழைந்து போனாள் . மன்னிப்புக் கேட்டாள் .ஓடி சென்று அவளை கட்டிக் கொண்டவள்,
"அம்மா நான் என்ன தப்பு பண்ணி இருந்தாலும் என்னை மன்னிச்சுடுங்கோ, நீங்க அழாதீங்கோ, நேக்கும் அழுகை வர்றது. நான் பண்ணது எல்லாம் தப்புதான். எங்கிட்ட பேசுங்கோம்மா .... "என்று கதறினாள்.

அப்போதும், மருமகளை நகர்த்தியவள்,
அமைதியாக காபி கலந்து தந்தாள். அவள் குடிக்கவில்லை. இவளுக்கு தொண்டையில் இறங்க வில்லை.
"அம்மா எதுக்கு அழறேள்? சொல்லுங்கோம்மா ப்ளீஸ்.."
எத்தனை நாட்கள் தான் உணர்வுகளை அடக்க முடியும்? லஷ்மியால் முடியவில்லை.
"நீ எந்த தப்பும் பண்ணல ரேவதி. எல்லாமே நாங்கத்தான். அந்த தொடப்பக்கட்டைக்கு பட்டு குஞ்சலத்தை பார்த்து கல்யாணம் பண்ணினது எங்க தப்புதான்.
என் புள்ளை அசிங்கமா இருக்கறதுக்கு அவன் காரணம் இல்ல. இப்டி அசிங்கமா ஒரு புள்ளைய பெத்துக்கு நாந்தான் காரணம். அவன் மூஞ்சி வேணுன்னா அசிங்கமா இருக்கலாம். ஆனா மனசால அழகான ரொம்ப ரொம்ப அழகான புள்ளையாத்தான் அவனை வளர்த்துருக்கேன்"
புடவை முந்தானையில் வாயை மூடி விம்மியவள் ஹாலுக்கு வந்து அமர்ந்து விட்டாள் . கேட்டுக் கொண்டே வந்த கணவனும் மகனும் அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டார்கள்.
ஏனோ அந்த வீட்டில் தான் மட்டும் தனியாக நிற்பதை அவள் உணர்ந்தாள்.
ரேவதிக்கு இப்போதுதான் தான் என்ன என்ன பேசி இருக்கிறோம் என்று புரிந்தது. கொட்டிய வார்த்தைகளை மீண்டும் எப்படி எடுக்க போகிறாள்?
அவளும் கண்களை துடைத்துக் கொண்டு இருந்த மிச்ச பாத்திரங்களை தேய்த்து விட்டாள். காபியை குடித்து முடித்து வீட்டை பெருக்கினாள்.
சற்று நேரத்தில் மாமனார் காய்கறி வாங்கி வரவும், மட மடவென்று நறுக்கி தந்தாள். இவளாக சென்று பேசினாலும் இவளிடம் பேச ஆளில்லை. அவர்களுக்குள் ஏதோ ஒரு பனிப் போர் இருந்து கொண்டே இருந்தது.
அவளின் வார்த்தைகள் பெரியவர்களை மட்டுமா காயப் படுத்தியது? மனோவை இல்லையா ?
அவளின் வார்த்தைகள் உருவத்தை பற்றிய கிண்டல் எல்லாமே மனோவின் தன்னம்பிக்கையையும் உடைக்க ஆரம்பித்தது. அது அவன் அலுவலகத்திலும் எதிரொலித்தது. அன்று இரவு மாடியில் சென்று நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராமல் தெருவில் ஒரு நாய் குட்டியின் கதறல் சத்தம் கேட்டது. நாயின் உருவம் மட்டுமே தெரிந்தது. கீழே இறங்கி சென்று என்ன என்று பார்க்கப் போனான். அந்த நாய் குட்டியின் கால் ஒரு சிறு பள்ளத்தில் மாட்டிக் கொண்டிருந்தது. அதை எப்படிஎடுப்பது என்று இவன் பார்த்தான்.அப்போது சடக்கென்று அந்த நாயே காலை லாவகமாக எடுத்துக் கொண்டது. பின்னர் அந்த நாயை தூக்கி
தடவி பார்த்தான். நல்ல வேளை எந்த காயமும் படவில்லை. அதனால் இவன் மனதில் ஒரு சிறு சந்தோஷம் எட்டிப் பார்த்தது.
வீட்டிற்கு வந்து அந்த நிகழ்வை அசைபோட்டவனுக்கு, தன் நிலை புரிந்தது. ஆம்! சில நேரங்களில் மனிதன் தன்னை தானே ஊக்கப் படுத்திக்க கொள்ள அறிஞர்களின் வார்த்தைகள் தான் தேவை என்பது இல்லை. இதுபோன்ற சிறு சிறு விஷயங்களுமே போதுமானது. என்னோட தன்னம்பிக்கையை யாராலும் உடைக்க முடியாது, மனதில் உரு போட்டுக் கொண்டான். அதற்கான பலனும் கிடைத்தது.
இன்னொரு பெரிய கம்பனிக்கு பதவி உயர்வுடன் வேலை மாறினான். அவனின் திறமையை பார்த்தவள் பிரமித்துதான் போனாள்.
பொதுவாக நன்றாக படிப்பவர்கள் மற்ற விஷயங்களில் பெரியதாய் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இவனோ, வீட்டு காரியங்கள் ஆகட்டும், இல்லை அலுவலக காரியங்கள் ஆகட்டும், எப்படி இவனால் எல்லாம் செய்ய முடிகிறது?
அவனின் முக அழகை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனுடைய திறமைகள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தது.
"அம்மா! சித்தி போன் பண்ணா. சித்தப்பாவோட பெரியப்பா போயிட்டார் இல்லையா? அதனால் அவாத்துல யாரும் போய் சுசிக்கு நோன்புக்கு சீர் எடுக்க முடியாதாம். அதான் நம்மால செய்ய முடியுமான்னு கேட்டா"
"சரி டா ! அதுக்கு என்ன?"
"சரி!சம்பந்தி மாமிகிட்ட பேசிடு"
தனக்கும் இது தலை நோன்பு. அண்ணாவுக்கும்தான். ஆனால் இவ்வருடம்
அவர்களுக்கு நோன்பு இல்லை. அதனால் மன்னிக்கும் இல்லை. ஏனோ வீட்டினர் யாருமே இதுவரை இவள் நோன்பு பற்றி பேசவே இல்லை.
ரேவதியின் அன்னைக்கும் பேச வேண்டும்தான். பெண் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் எப்படி சம்பந்த மாமியிடம் பேசுவது? யோசனையாக இருந்தது. பயமாகவும்தான். எத்தனை நல்ல மனிதர்கள். உலகத்தில் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். திருமணத்தில் பெரிய பெரிய செலவுகளை ஏற்றுக் கொண்டவர்கள்.
உங்காத்து பொண்ண நீங்க அனுப்பறதுக்கு நாங்கதான் சீர் செய்யணும். வைர நெக்லசும் காசு மாலையும் போட்டார்கள். தித்திக்க தித்திக்க அவர்கள் பேசவில்லை. அவர்களின் பேச்சே தித்தித்தது. சுந்தராம்பாளுக்கு ஏனோ லஷ்மியிடம் மனதளவில் ஒரு நெருக்கம் இருந்தது. நல்ல தோழியாய் உடன் பிறந்தவளாகத் தான் தெரிந்தாள் . அப்படிபட்டவர்களை இவள் என்னென்ன பேசி இருக்கிறாளோ?

தைரிய லஷ்மியை மனதில் அழைத்துக் கொண்டு, சம்மந்தி லஷ்மிக்கு ஒரு வழியாக போன் செய்து விட்டாள் .
"சௌக்கியமா மாமி"
"சொல்லுங்கோ சுந்தரம்"
நன்றாக இருக்கிறேன் என்று கூட சொல்லவில்லை.
"அது வந்து இந்த வருஷம் ஆவணில நோன்பு வருதே.. அதான் நம்ம ரேவதிக்கு இந்த வருஷமே நோன்பு எடுத்துடலாமா? நான் என்ன கொண்டு வரணுன்னு கேட்கத்தான்"
"என்ன மாமி! உங்க பொண்ணுவிவகாரத்து வேணுன்னு கேக்கறா. அவ எப்படிம்மா என் புள்ளை நல்லதுக்காக நோன்பு கொண்டாட முடியும்?"
"மண்ணி ...எங்களுக்கு இந்த விஷயமே தெரியாது. ரேவதி இது வரைக்கும் எங்க கிட்ட இதை பத்தி சொல்லவே இல்ல"
"வேண்டாம் மாமி, எனக்கு இதுக்கு மேல பேச இஷ்டம் இல்ல. உங்க பொண்ணால எங்களுக்கு எல்லாருக்கும் முகத்துல சிரிப்பே போயிடுத்து. நான் போனை வைக்கிறேன்"
சுந்தராம்பாளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எத்தனை எத்தனை அறிவுரைகளை சொன்னோம். நல்ல விதமாகத்தானே வளர்த்திருந்தோம். தன் மகள் ஏன் இப்படி? விவகாரத்துடன் வீட்டிற்கு வந்து விடுவாளா? அவளின் எதிர்காலம் என்ன வாகும்? சுய நலத்திற்காக ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை கெடுத்து விட்டோமோ? இந்த பாவத்தை எங்கு தொலைக்கப் போகிறோம்? கணவனும் மனைவியும் எத்தனை பேசியும் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. என்ன ஆனாலும் சரி சம்பந்தி வீட்டிற்கு சென்று பேசித்தான் ஆக வேண்டும். ஒரு நாள் மாலையில் சென்றார்கள்.
மனோவும் ரேவதியும்தான் இருந்தார்கள்.
"வாங்கோ மாமி" சொல்லிவிட்டு தன் அறைக்குள் என்று விட்டான் மனோ.
நோன்பு பற்றி பேசத்தான் பெற்றோர் வந்திருக்கிறார்கள் என்று சந்தோசத்துடன் வந்தாள் ரேவதி. அவளுக்கு வேறு எதுவும் தெரியாது. இருப்பினும் தாங்கள் வரப் போவதை ஏன் அவர்கள் முன்பே சொல்லவில்லை?
'ரேவதி! வா கிளம்பு. எங்காத்துக்கு போலாம். ரெண்டு நாள் இருந்துட்டு வரலாம்"
நம்பாம் எப்போது எங்காம் ஆனது. இருப்பினும் பெற்றோருடன் இருக்க ஆசையாக இருந்தது.
மனோவிடம் சென்று கேட்டாள் .
"அது.,அண்ணாவும் மன்னியும் ஏதோ கல்யாணத்துக்கு பெங்களூர் போறாளாம் . அதான் அப்பா அம்மாக்கு துணைக்கு ரெண்டு நாள் இருந்துட்டு வரவா ?"
"எங்கிட்ட ஏன் கேக்கற? உன் இஷ்டம்" சொல்லி விட்டு தொடர்ந்து புத்தகத்தை படிக்க ஆரம்பித்தான்.
இருவரும் பேசிக் கொள்வதில்லை. இருப்பினும் முகம் கூட பார்க்காதது புதிது. பெற்றவர்களுக்குத் தெரியாமல் கண்ணில் முட்டிய கண்ணீரை முழுங்கினாள். ரெஸ்ட் ரூம் சென்றாள்.
மனோவின் அறை கதவை தட்டி விட்டு வந்தார் நாராயணன். மாமனாரை பார்த்தவன் மரியாதையாக எழுந்து வேட்டியை இறக்கி விட்டான்.
எதுவும் பேசாத தெரியவில்லை அவனுக்கு. கை கட்டி நின்றான்.
இந்த காலத்துல இந்த மாதிரி பையன் எங்க கிடைப்பான்? அப்போதும் அவர் மனம் மருமகனையே பாரட்டியது.
மருமகன் முகத்தை மாமனாரால் பார்க்க முடியவில்லை.
"எங்களுக்கு எப்படி சொல்லறதுன்னு தெரியல மாப்பிளை. அவ என்ன சொல்லி இருந்தாலும் அவளுக்கு பதில் நாங்க மன்னிப்புக் கேட்டுக்கறோம்" கை கூப்பி நின்றிருந்தனர் வயதில் பெரியவர்கள்.
"ச! ச! நீங்க பெரியவா. நீங்க போய் என்னத்துக்கு?
"இல்ல மாப்பிளை!அவளுக்கு வாய் நீளம். ஆனால் மனசுல கெட்டது நினைக்க தெரியாது"
அவர்களின் சம்பாஷணை இவளுக்கு காதில் விழுந்தது .
"தெரியும் மாமி. இத்தனை நாளா அவ கூட இருக்கேன். எனக்கு புரிஞ்சுக்க தெரியாதா ?"இப்போதும் அவள் அவனின் மனைவிதான் ! எப்படி விட்டுக் கொடுத்து விட முடியும்?
"நாங்க ஒரு ரெண்டு நாள் அவளை ஆத்துல வச்சுன்ட்டு அனுப்பறோமே?"
"அவ உங்க பொண்ணு. எங்கிட்ட எதுக்கு கேக்கறேன்? அவன் குரலில் உரிமைதான் இருந்தது. குதர்க்கம் இல்லை.
"இல்ல மாப்பிளை! அவ உங்க பொண்டாட்டி" நாராயணனுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை.
இதோ கிளம்பி விட்டாள் .அவனிடம் வந்து தயங்கி நின்றாள்.
என்ன என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான். வாயை திறக்கவில்லை.
"அம்மா கிட்ட சொல்லலையே?"
"நான் சொல்லிக்கறேன்"அவ்வளவுதான்.
பெரியவர்களை வழி அனுப்பியவன், மனைவிக்கு பை கூட சொல்லவில்லை.
இதோ அவள் கிளம்பி விட்டாள் .
சுசி வீட்டிற்கு சென்றவர்கள் இன்னும் ஆளை காணோம்.
அன்னை கூறியபடியே சாதம், ரசம் அப்பளம் தயார்செய்தான்.
மனைவி இல்லாமல், அவளின் மூச்சுக் காற்று இல்லாமல் இவனுக்கு சுவாசிக்க முடியவில்லை.
அங்கே ரேவதியோ?
மயக்க வருவான் மனோ.....










 
Top