கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மயில்விழியாள் காதல்-2

Sweh

Moderator
Staff member
அதிர்ந்தவன் ஓடி சென்று பார்த்தால் சம்பந்தா தலை மீது கையை வைத்துக் கொண்டு மூச்சு வாங்கிக்கொண்டு தன்னை தானே சுதாரித்துக் கொள்ள பாடுபட்டுக் கொண்டிருந்தாள். பார்த்துக்கொண்டு நின்ற அவனுக்கே அதிர்ச்சி என்றால் விபத்தை சந்தித்தவளின் அதிர்ச்சி அவள் கை நடுக்கத்தில் தெரிந்தது.

இவன் போய் கார் கதவை திறக்க முயற்சிக்க, சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் நீர் கோர்வை. தட்டுத்தடுமாறி கார் கதவை திறந்து வெளியே வர முயற்சி செய்தால், அணிந்திருந்த கார் சீட்-பெல்ட் திரும்பவும் உள்ளே இழுக்க சீட்டில் விழுந்தாள்.

திலீப் “பொறுங்க நீங்க எதுவும் செய்யாதீங்க” என்றவன் அவனே கார் கதவை அகல திறந்து, சீட் பெல்ட் கழட்டி அவளை வெளியே இழுத்தான்.

கார் விட்டு வெளியே வந்த சமந்தா கால்கள் நடுக்கத்தில் இருக்க, அழுகை, பயம் பீதி அடைத்த குரலில் “எனக்கு பிளாக் ஆகிடுச்சு திலீப், எனக்கு தலை சுத்துது திலீப்” புலம்பியவள் அவன் மீதே சாய்ந்துவிட்டாள்.

நட்சத்திர விடுதி அல்லவா அது, வார இறுதி நாட்களில் சிட்டியின் பெரும் புள்ளிகள் அங்கே சர்வ சாதரணமாக வருவார்கள். சினிமா பிரபலங்கள், பிஸ்னஸ் மேன்,அரசியல்வாதிகள் என நிறைய ஆட்களை காணலாம். அப்படி அங்கே நிறைய வருகிறார்கள் என்றால் செக்யூரிட்டி இல்லாமல் இருக்குமா? அவரவர் ப்ரவைசி காக்க அங்கே ஏகப்பட்ட ரூல்ஸ் உண்டு. யாரும் யாரையும் தொந்திரவு செய்தால் உடனே வெளியேற்றப்படுவார்கள், அங்கே நடக்கும் கலாட்டாகளில் சமந்தப்பட்ட ஒருவர் ஓகே சொன்னாலும் உடனே போலீஸ் உள்ளே புகுந்து ஆக்ஷன் எடுக்கும், குடிபோதை அதிகமாகி அசைய முடியாமல் இருந்தால் அவர்கள் விடுதியிலேயே அறையில் கொண்டு சென்று விட்டு அடுத்தநாள் அதற்கும் சேர்த்து பில் வாங்குவார்கள்.

சமந்தா கார் இடித்த சத்தம் கேட்ட உடனேயே ஹோட்டல் செக்யூரிட்டி டீம் ஆம்புலன்ஸ் அழைத்துவிட்டு மற்ற ஏற்பாடு என்ன செய்வதென விசாரிக்க சம்பவ இடத்தில் கூடிவிட்டது. கார் மட்டுமே சேதாரம் ஆகியிருக்க, ஆள் நன்றாக இருக்கிறார் பயத்தில் இருக்கிறார் என்பது தெரிந்ததும் அவரவர் வகை உதவி செய்துவிட்டு களைந்து விட்டனர்.

ஆம்புலன்ஸில் அமைதியாக இருந்த சமந்தா மருத்துவமனையில் புலம்பலும், அழுகையுமாக ஆர்பாட்டம் தொடங்கிவிட்டாள்.

மருத்துவர் "ஒன்னும் இல்ல சமந்தா பாருங்க சின்ன சராய்ப்பு, பயந்துட்டீங்க, வேற எதுவுமே இல்ல தூங்குங்க சரி ஆகிடுவீங்க"

"என்னால முடியல டாக்டர், கண் மூடினா அப்பா உருவம் தெரியுது" அழுதாள்.

திலீப் ஆடிப்போனான். மருத்துவர் அவனிடம் தூங்க இஞ்செக்சன் போடுறேன். ஷாக் ஆகிருக்காங்க அவ்வளவுதான், பேச்சு கொடுங்க ரிளாக்ஸ் ஆகட்டும் சொல்லிவிட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிட்டார்.

“சமந்தா பாரு நான் இருக்கேன் கூட, நீ கண்மூடி தூங்கு”

“இல்ல திலீப் என்னால கண்ணையே மூட முடியல, அந்த இருட்டு ரொம்ப பயமா இருக்கு”

“இப்போ சிஸ்டர் வந்து ஊசி போடுவாங்க, அப்பறம் நீ தூங்குவ சரியா”

“இன்னிக்கு நீ அங்க இல்லன்னா எனக்கு என்ன ஆகிருக்கும் திலீப் நெனச்சா பயமா இருக்கு”

“அந்த கற்பனை எல்லாம் விடு சம்மு பாப்பா, நான்தான் நிஜத்துல உன்கூட இருக்கேனே”

“ஐயோ என்ன சம்மு பாப்பண்ணு கூப்பிடாத, அப்படி கூப்பிட்ட ஆட்கள் எல்லாம் என்னை ஏமாத்திட்டு போயிட்டாங்க”

“சாரி சாரி இனி கூப்பிடல சரியா”

“அம்மா அப்பா போன பின்னாடி யார் சம்மு பாப்பாண்ணு கூப்பிட்டாலும் ஆசையா இருக்கும், ஆனா அவங்க அப்படி கூப்பிட்டது என் பணத்துக்காக தான்” என்றவள் கண்களை மூடி அழ தொடங்கிவிட்டாள்.

பச், சமந்தாவை தேடுவதில் அவன் தீவிரம் காட்டியிருக்க வேண்டும். சென்னையில் எங்கேனும் ஊர்காரர்களை சந்திக்க நேர்ந்தால் பேங்க் மேனேஜர் பொண்ணு சமந்தா எங்க இருக்குன்னு தெரியுமா என்று கேட்டுவிட்டு அமைதியாகிவிடுவான். மேற்கொண்டு விசாரித்தால் உனக்கென்ன அக்கறை என்ற எதிர்கேள்வி வரும், ஒருவேளை திருமணம் ஆகி இருந்தாலோ. ஆக இருந்தாலோ பெயர் கெடும்.இவன் விசாரித்தவர்கள் சும்மா இல்லாமல் இவன் தந்தையிடம் சென்று சொன்னாலும் பிரச்சனைதான்.
நான்கு வருடம் என்னவெல்லாம் துன்பம் அனுபவித்தாளோ!

"யார் ஏமாத்துன்னா? சொல்லு நான் பணத்த திரும்ப வாங்கி தாரேன்"

மருந்து வீரியத்தில் கண் அயர்ந்து பாதி தூக்க நிலையில் இருந்தவள் "அதெல்லாம் வேணாம், நான் ஏமாந்தது, ஏமாந்ததுதானே"

தூங்கிவிட்டாள்.

காலை நான்கு மணிக்கு எப்போதும் போல அலாரம் அடிக்க அதை அணைத்துவிட்டு எழுந்து அமர்ந்துகொண்டான் திலீப். சமந்தா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அந்த அறையை விட்டு எழுந்து போக சற்றும் எண்ணமில்லாமல் போனையே பார்த்து அமர்ந்திருந்தான். ஐந்து மணிக்கு கோச் அழைத்தார் “ஹாஸ்பிடல்ல இருக்கேன் சார் பத்து மணிக்கு கூப்பிடுறேன்” சொல்லிவிட்டு அழைப்பை துண்டிட்டுவிட்டான். அவன் எதிர்பார்த்தது போலவே எட்டு மணிக்கு குமார் அண்ணா அவனை தேடி மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.

குமார் “லேய் பையா என்னடா ப்ராக்டீஸ் போகாம என்ன செய்யுற” பதற்றமாக கேட்க
திலீப் “அண்ணா சம்மு பாப்பாக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னா”

“ஐயோ எங்கெல்லாம் காயம் ஆகியிருக்கு, ரத்தம் ஏதாச்சும் தேவைப்படுதா” பதற்றம் குறையாமல் கேட்க

“காருக்கு தான்ண்ணா சேதாரம், பாப்பாவுக்கு முட்டில சிராய்ப்பு அவ்வளவுதான்”

அந்தநேரம் அங்கே வந்த நர்ஸ் பில் நீட்டி “சார் பத்து மணிக்கு எழுந்திரிச்சிடுவாங்க, ப்ரேக்-பாஸ்ட் சாப்பிட்டு, வைட்டல்ஸ் செக் பண்ணிட்டு பண்ணிரெண்டு மணிக்குள்ள ரூம் வகேட் பண்ணிடுங்க”

பில் வாங்கி பார்த்த குமார் அதிர்ந்தார். “என்னடா சின்ன சிராய்ப்பு சொன்ன, நாப்பதாயிரம் பில் வந்திருக்கு”

“அது வேற ஒண்ணுமில்லண்ணா வி.ஐ.பி ரூம்ண்ணா”

திலீப் சொன்ன தகவலில் குமாருக்கு ஹார்ட் அட்டாக் வராதது மட்டுமே குறை “எதுக்குடா வி.ஐ.பி ரூம்”

“ண்ணா என்னண்ணா பேசுறீங்க, அது பயந்துருச்சு பாவம். நான் கூட இருக்க வேணா..! வி.ஐ.பி ரூம்லதான் கூட இருக்கிறவங்களுக்கு தனி ரூம்”

“ஆனாலும் சின்ன சிராய்ப்புக்கு இது ஓவர்டா”

“விடுண்ணா விடுண்ணா ஹெல்த் முக்கியம்ல்ல, அதுக்கு செலவு செய்றது தப்பு இல்ல”

“இதெல்லாம் நல்லா பேசுடா, அந்த கோச் எப்படியாப்பட்ட காண்டு கிளின்னு தெரியும் தானே, ஏன்டா ப்ராக்டீஸ் போல"

“சமந்தா பேபிய தனியா விட்டு…”
“ஏலேய் நீ மொத கிளம்பு” குமார் எரிந்து விழ…
சமந்தாவை விட்டு போகமாட்டேனென பக்கம் இருக்கும் இருக்கையில் அவன் அழுத்தமாக அமர்ந்துகொள்ள, குமாருக்கு என்ன செய்வதென தெரியவில்லை.அவரும் திலீபும் இவ்வளவு தூரம் வந்திருப்பது சும்மா இல்லை, இதன்பின் நிறைய உழைப்பு இருக்கிறது. சினிமாவில் சாதிக்கவேண்டுமென சென்னை வந்தவர் குமார், கிரிக்கெட்டில் சாதிக்கும் எண்ணத்தில் வந்தவன் திலீப். கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டே விடியற்காலை நான்கு மணிக்கு உடற்பயிற்சிக்கு செல்வான் திலீப்.

இருவருக்கும் அவரவர் முயற்சி கிணற்றில் போட்ட கல் போலவே இருக்க, ஒருநாள் ‘மெஷின்களுக்கு நடுல மெஷின் போல வேலை செய்யவே பிடிக்கலண்ணா’ திலீப் புலம்பி தீர்த்தான். குமாரும் அவர் வேலையில் ஏமாற்றத்தை கண்டு துவண்டிருந்த நேரமது. அப்போதுதான் தொடங்கி இருந்த தமிழ் சேனலில் காமெடி காம்பிடேஷன் ஒன்று அறிவித்திருந்தார்கள்.
குமார் “ஏலா பையா இந்த ஷோ’ல கலந்துக்கறியா”
“நம்மளல்லாம் யாருண்ணே செலக்ட் செய்வா”
“ஏலே நான் அதெல்லாம் பார்த்துக்கறேன், நீ இதுக்கு தயார் ஆகு”
“எனக்கு கிரிக்கெட் டீம்ல சேரணும்ண்ணே”
“எல்லாம் நடக்கும். இதுல நல்லா பண்ணு வர காசு உன் ப்ராக்டீஸ்க்கு உதவும், மக்கள் மத்தியில பேர் கிடைக்கும்” குமார் அவனை ஊக்குவிக்க யாரேனும் நம்ம திறமையை பாராட்டமாட்டாங்களா என்றிருந்தவன் ஒத்துக்கொண்டான்.

காமெடி ஷோ’வில் கலந்துகொண்டவன் பேச்சு எல்லோரையும் கவர கொஞ்சம் கொஞ்சமாக பெயர் பெற்று போட்டியில் வெற்றிபெற்றான். திலீப் திறமை நிறைந்தவன்தான் என்றாலும் இவனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல குமாரும் அவர் டீமும் உழைத்த உழைப்பு பெரியது. முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்று எல்லா இடத்திலும் திலீப் செய்த காமெடி க்ளிப்ஸ் ட்ரெண்டில் இருப்பதுபோல பார்த்துக்கொள்வதும், திலீப் என்ன செய்தாலும் அதை பெரிதாக நியூஸ் ஆக்குவதுமென ஒருபக்கம் உழைத்தே அவனை ஒரு பிம்பமாக மாற்றினார்கள். காமெடி காம்பிட்டேஷனில் வெற்றி பெற்று அந்த சேனலிலேயே தனி ஷோ ஒன்றை நடத்த சான்ஸ் கிடைத்ததும், தனி டீமாக இவர்கள் நடத்தும் ஷோ அந்த சேனலின் பெரிய பலமாக மாறியது.

திலீப் கிரிக்கெட் ஆர்வம் குறையாமல் கூடிக்கொண்டே போக அது அவர்களை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியது. இந்தியாவில் ஐ.பி.எல் நடப்பது போல நிறைய நாடுகளில் டி-20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது. சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் வெறும் பதினாறு நாடுகள் மட்டுமே விளையாடுகிறது, மற்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க உருவாக்கியதே இந்த டி-20 விளையாட்டு. இந்தியாவில் டி-20யை கொண்டாடுவது போல எல்லா நாடுகளிலும் எல்லாம் கொண்டாடுவதில்லை. கொஞ்சமே ஆடியன்ஸ் கொண்ட லோக்கல் மேட்ச் போலத்தான் நடக்கும். திலீப்க்கு யுனைடெட் அராப்ஸ் நடத்தும் உள் நாட்டு டீம் ஒன்றில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. நிறைய யோசித்து திட்டமிட்டு விளையாட ஒப்புக்கொண்டான் திலீப். வருடத்தில் நான்கு மாதம் துபாய் சென்று விளையாடுவான். அதிலும் சிக்கல் வந்துகொண்டிருக்க இவன் விளையாட்டு திறமையை மேம்மபடுத்த அவன் கோச் தினமும் உழைத்துக்கொண்டிருக்க இவன் அவரை கடுப்படுப்பது நல்லதில்லை.
புரியாத குழந்தை போல திலீப் இருக்கையில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்ப்பதை என்னவென்று சொல்வது.
அவனை அழைத்து சென்று கிரிக்கெட் ப்ராக்டீஸ் மைதானத்தில் விட்டுவிட்டுதான் மறு வேலை என்பது போல அவன் பக்கமே குமாரும் காத்துகொண்டு நிற்க சமந்தா கண் விழித்தாள்.

திலீப் பிரகாசமாய் பரபரப்பாக “எப்படி இருக்க சமந்தா” கேட்க

“நல்லா இருக்கேன். எனக்கு வேலை இருக்கு, வாங்க வீட்டுக்கு போகலாம்” சாதரணமாக பேசினாள்.

குமார், ‘அடேய் என்னமோ பயம், பீதி பாப்பான்னு பாவமா பேசுன! ஆனா பாப்பா கூலா வீட்டுக்கு போகலாம் சொல்லுது’ என்பது போல பார்வையில் திலீபை பார்க்க

திலீப் “உன் வைட்டல்ஸ் செக் பண்ணிட்டு அனுப்பறேன் சொன்னாங்க. நீ சாப்பிட்டு ரெடி ஆகு” அக்கறையாக பேசிவிட்டு அறை விட்டு வெளியே வந்தான்.

குமார் பார்த்துக்கொண்டே நிற்க சமந்தா பில் செட்டில் செய்துவிட்டு அவளுக்காக காத்திருக்க இருக்கை ஒன்றில் அமைதியாக அமர்ந்துகொண்டான். வெண்ணீர் காலில் ஊற்றியது போல எந்நேரமும் துள்ளும் திலீபா இவன்? ‘பொறுமை என்றால் என்ன? எந்த கடையில் கிடைக்கும் பண்டம் அது?’ கேட்பவன் ஆளே வித்தியாசமாக தெரிந்தான்.

“அண்ணா சம்மு பாப்பாவ நம்ம ஊர்காரங்க யாரோ ஏமாத்தி இருக்காங்க, கண்டுபிடிக்கணும்”
“ஆங், சரிடா”
“ஐயோ சம்மு பாப்பான்னு கூப்பிட்டா பிடிக்கமாட்டேங்குது நீங்க அப்படி கூப்பிட்டுறாதீங்க”
“சர்ரீ... சர்ரீ...”
“ப்ச் வேற ஏதாச்சும் பேர் வைக்கணும்ண்ணா”
“டேய் இதெல்லாம் ஓவர்டா பையா”

நல்லவேளை சமந்தா கிளம்பலாம் என்று வெளியே வந்துவிட்டாள். குமார் அண்ணாவை இவன் எரிச்சல்படுத்துவதும் நின்றது.

டாக்சி புக் செய்து போய்க்கொள்கிறேன் என்றவளை அடம்பிடித்து அவள் வீட்டிற்கு வழி சொல்லச்சொல்லி கார் எடுத்தான் திலீப்.
சமந்தா குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு விசாலமாக, அழகாக நிறைய வசதிகளுடன் கட்டியிருந்தது.
குமார் “ஏரியா நல்லா இருக்கு சமந்தா”
“தேங்க்ஸ்ண்ணா, இவங்க கம்பெனியில தான் நான் என் இன்டெர்ன்ஷிப் செய்தேன்”
“ரொம்ப பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி போல”
“ஆமாண்ணா, அமெரிக்கன் பேஸ்ட் கம்பெனி”
“இப்போ இங்கதான் வேலை செய்யுறியா”
“இல்ல, இல்ல வேற கம்பெனி. சென்னை சிட்டி கவர்மெண்ட் பிராஜெக்ட் ஒன்னு ஹேண்டில் பண்றேன்”
திலீப் “சூப்பர்ங்க”
சமந்தா “எப்பவும் வேலை வேலை வேலைன்னே இருக்கேன் நீங்க வேற”

சமந்தா வீடு வித்தியாசமாக இருந்தது. ஹாலில் ப வடிவில் திவான் இருக்க இன்னொரு ஓரத்தில் மேஜை மீது காபி மேக்கர், ப்ரெட் டோஸ்டர், எலக்ட்ரிக் ஸ்டவ் இருந்தது.

“இதென்ன சமந்தா வீடு இப்படியும் அப்படியுமா இருக்கு” குமார் நக்கலாக கேட்க

“வேலை பிஸில எங்கென்ன அங்க தூங்க வசதியா வீடு முழுக்க பெட் போட்ருக்கேன் அண்ணா” சமந்தா கிண்டலாக சொல்லி வைத்தாள்.

அதில் பாதி உண்மையும் கூட, வேலை அதிகம் இருந்தால் எங்கே தூங்குகிறோம், எப்படி தூங்குகிறோம் என்ற எண்ணம் கூட இருக்காது.அதுவே வேலை இல்லாத நாட்களில் பெரியவீட்டின் தனிமை குரல்வளை நொறுக்கும். அவள் நண்பர்கள் வருவார்கள் சிலநேரம், அப்படி வருபவர்கள் தங்குவதற்கும், படம் பார்ப்பதற்கும் தூங்குவதற்குமே இந்த திவான்கள்.
பாலின பாகுபாடில்லாமல் பழகுகிறவள்தான் என்றாலும் இயல்பாய் மனதில் ஒட்டியிருக்கும் நாம் வாழும் சமூகத்திற்க்கேற்ற பெயரும், ஒழுக்கமும் பேணும் எண்ணமும் அதிகம் நிறைந்தவள். எதுவென்றாலும் அந்த நீண்ட ஹாலும், அவள் ஆபிஸ் ரூம் வரை மட்டுமே.
அழகான அவள் பெட்ரூம் அறையும், இன்னொரு அறையில் அப்பா,அம்மா நினைவுகளும் இருக்கும். அங்கே அவள் மட்டுமே போவாள். லச்சு அக்கா கூட இரொண்டொரு முறை அதற்க்குள் எல்லாம் நுழையவிட்டிருப்பாள் அவ்வளவே..!

“நல்லா ரெஸ்ட் எடும்மா கிளம்புறோம்” குமார் அவசரப்படுத்த
திலீப் “கார் இன்சூரன்ஸ் இருக்கா”
“இருக்கு”
“இன்சூரன்ஸ் ஆள் காண்டாக்ட் இருக்கா”
“இருக்கு நான் பார்த்துக்கறேன்”
“கார் ரிப்பேர் ஆகி வரவரை என்ன பண்ணுவீங்க”
“டாக்சிலே போவேன். நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கறேன்”
திலீப் “மத்திய சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க, நான் ஆர்டர் பண்ணவா”
“இல்லைங்க இங்கே செஞ்சு குடுக்குறவங்க இருக்காங்க”

குமார் எரிச்சலாகி அவனை தரதரவென வீட்டை விட்டு வெளியே இழுக்க
திலீப் “ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்” அலறியவன் “குமார் அண்ணா உன் கார்ட் குடு” என்று கேட்டு வாங்கி அதில் இவன் அலைபேசி எண்ணும் எழுதி “ஏதாச்சும் வேணும்னா கூப்பிடுங்க. சாயிந்திரம் நல்லா ஆகிட்டீங்கன்னு கன்பார்ம் பண்ணவாச்சும் கால் பண்ணுங்க” கேட்டுக்கொண்டான்.

சமந்தா எந்த உணர்வும் முகத்தில் காட்டாமல் கார்ட் வாங்கிக்கொண்டு கதவை சாற்றிக்கொண்டாள்.
 
Top