கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

முதுமையின் தனிமை-தேவி சரவணன்

siteadmin

Administrator
Staff member
முதுமையின் தனிமை
ஆசிரியர் பெயர் : தேவி சரவணன்

நான் ரயிலில் அமைதியாக அமர்ந்து இருந்தாலும் எனது மனதில் பல எண்ணங்கள் அந்த ரயிலை விட வேகமாக ஓடின. ஆப்பிள் பழங்கள் உள்ள பை என்னிடம் உள்ளது; எனது சட்டைப் பையில் ஃபோன் உள்ளது; என்னைச்சுற்றி உற்சாகமாகவும், அமைதியாகவும், பலவகையான வயதிலும் மனிதர்கள் உட்கார்ந்து உள்ளனர். என் மனதினுள் ஒரே குழப்பம்.. நான் இப்போது எங்கே போகிறேன்? எதற்காகப் போகிறேன்?

எனது பெயர் ராஜா. வயது 52. எனக்கு அந்தக் காலத்து ராஜாவைப் போலல்லாமல், இந்தக் காலத்து குடிமகன் போல ஒரு மனைவியும் இரண்டு கண்களைப் போல இரு குழந்தைகளும் உள்ளனர். அவர்களை என் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். ஆனாலும் எனக்கு நான் எதற்கு ரயிலில் ஏறி அமர்ந்து உள்ளேன், எங்கு போகிறேன், என்று ஞாபகம் வரவில்லை..

என்ன செய்வது? இப்பொழுது எல்லாம் எனக்கு அதிகமாகவே ஞாபக மறதி உள்ளது. நான் எனது மறதியின் அளவை முழுவதுமாக யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வீட்டில் சொல்லியிருந்தால் நான் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்து மாட்டிக் கொண்டிருக்க மாட்டேன். மூளையை எவ்வளவு கசக்கிப் பிழிந்து சிந்தித்தாலும் ஞாபகம் வரவில்லை.

திடீரென்று ஒரு யோசனை! போனை எடுத்து எனது மனைவியிடம் பேசினேன், "நான் எதற்காக வந்தேன் என மறந்து விட்டேன்.. நீ சொல்லு.. நான் எதற்கு வந்தேன்?" என்று கேட்டுவிட்டேன். எனது மனைவியின் குரலில் அதிக பயம் தெரிந்தது, "என்னையும் கூட்டிப் போங்கள் என்று சொன்னால் கேட்டீர்களா?" என்று கூறியவள், "நீங்கள் ஏறி இருக்கும் டிரேயின் கடைசியாக வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் நிற்கும். அப்பொழுது இறங்குங்கள். நமது மகள் திவ்யாவும் அவளது மாப்பிள்ளையும் வந்து உங்களை அவர்கள் வீட்டிற்கு கூட்டிச் செல்வார்கள். இதைக்கூட மறப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் நானும் கூட வந்திருப்பேனே! நீங்கள் தான் என்னை நமது மருமகள் வழி சொந்தங்களுடன் சுற்றுலா செல்.. நான் நமது மகள் வீட்டில் சில நாள்கள் இருந்து கொள்வேன் என்று சொன்னீர்கள்.." என்றதும் எனக்கு ஞாபகம் வந்துவிட்டது.

" சரி.. நான் போய்க் கொள்கிறேன்..நீ பயப்படாதே!" என்று கூறி போனை கட் பண்ணிவிட்டேன். மனதிற்குள்ளேயே நான் எதற்காகப் போகிறேன்.. எங்கு போகிறேன்.. எனப் பலமுறை கூறிக் கொண்டேன்..

அரை மணி நேரம் கழித்து கடைசி ஸ்டேஷனில் ரயில் நின்றதும் இறங்கி பிளாட்பாரத்தில் எனக்காகக் காத்திருந்த எனது மகள் திவ்யாவையும் அவளது கணவரையும் பார்த்ததும் எனது மனம் மிகவும் அமைதி அடைந்தது. எப்படியும் என் மனைவி அழைத்துப் பேசியிருப்பாள். அவள் அப்பாவென அழைத்தது எப்போதும் போல இப்போதும் இனிமையான பாடலைக் கேட்ட மகிழ்ச்சியை அளித்தது.

ஒரு குழந்தை மன நிலையில்தான் நான் இருக்கிறேன். என் மரியாதையை விட்டுத் தர மனம் வரவில்லை. நான் என் பயங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "மாப்பிள்ளை.. நீங்க எப்படி இருக்கீங்க? பாப்பா! நல்லா இருக்கியா?" என்று அவர்களின் நலம் விசாரிக்கத் தொடங்கினேன்.

என் மகள் கெட்டிக்காரியாக இருந்தபடியால் என்னைச் சங்கடப்படுத்தாமல், "வாங்கப்பா! நமது கார் அந்தப் பக்கம் நிற்கிறது.."என்று கூறி எனது கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

வீட்டுக்குச் சென்றதும் பேரன் பேத்தியை பார்த்தவுடன் எனது மனதில் இனிமையான தென்றல் காற்று வீசுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவர்கள் கொஞ்சிக் கொஞ்சி என்னுடன் பேசுவதைக் கேட்டு ரசித்தேன்! பழங்களை அவர்களுக்குக் கொடுத்தவுடன் அவர்கள் சாப்பிட்டதைக் காண இரண்டு கண்கள் பத்தாது என்று தோன்றியது.

என் மகள் உணவு பரிமாற நான் சாப்பிடுவது என் தாய் கைமணத்தில் சாப்பிடுவதைப் போல அதிக இன்பத்தை அளித்தது. பின்பு, "ஓய்வெடுங்கள் அப்பா!' என்று என் மகள் ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றாள்.

என் செல்ல மகள் ஒரு டாக்டர் என்று உங்களுக்குத் தெரியுமா? தயக்கத்துடனே ஆரம்பித்தேன், "பாப்பா உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்.."

"என்ன அப்பா.. சொல்லுங்க.."என்றாள்.

"எனக்கு அதிக ஞாபகமறதி தற்போது வருகிறதும்மா.. அம்மா உன்னிடம் போனில் சொல்லியிருப்பாள் என்று நினைக்கிறேன்.. அதிக விஷயங்கள் மறந்து போவது எனக்குக் கவலையாக உள்ளது.." என்றேன்.

என் மகள் என்னைப் பயமுறுத்த விரும்பவில்லை, "அப்பா..சிலர் வீட்டுக் கதவைப் பூட்டிவிட்டோமா எனப் பல முறை செக் செய்வார்கள்.. கேஸ் ஸ்டவ் ஆஃப் பண்ணி விட்டோமோ என வீட்டை விட்டு வெளியே சென்று அதையே யோசித்துக் கொண்டிருப்பார்கள்.. நிறைய பேருக்கு மறதி வரத்தான் செய்யும். அதற்கான மருத்துவரை நாம் போய் பார்க்கலாம்பா.. மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும்."என்று என்னைத் தெளிவு படுத்த முயற்சி செய்தாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாது, எனக்கு வேறு சில அன்றாட செயல்பாடுகள் கூட மறக்கின்றன என்று. இதனை அவளிடம் கூறி அவளைப் பயமுறுத்த விரும்பவில்லை.

எனது கண்களில் கண்ணீர் தானாக சேர்வதைக் கண்டவுடன், "அப்பா.. இதற்கு பயப்படாதீங்கப்பா.. இது சரியாகிடும்.. இதற்கு பல மருந்துகள் உள்ளன மற்றும் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த மறதி எல்லாம் நம்மை விட்டுப் போய்விடும்" என்று எனக்குத் தைரியம் சொன்னாள்.

முதுமையில் உறவுகளை இழக்கலாம். என்னையே நான்‌ இழக்கிறேனா? என் பிள்ளைகளும் மனைவியுமே என் வாழ்நாளின் நினைவுகள். அவர்களுக்காகவே வாழ்ந்தேன். கடவுள் நல்லவர்தான். இந்த நோயில் இப்போது நடப்பதை நான் மறக்கிறேன்; சற்றுமுன் நடந்ததை மறக்கிறேன். ஆனால் என் இத்தனை வருட வாழ்வின் அடையாளங்களான என் பிள்ளைகள் மனைவியுடனான பொழுதுகள் என்னை விட்டு அகல்வதில்லை.
 
Top