கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள் அத்தியாயம்--2

sankariappan

Moderator
Staff member
முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள்.

அத்தியாயம்---2



வாழ்க்கை விபத்து நிறைந்த ஒன்றாகவே சம்பத்துக்கு அமைந்துவிட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு ஈடு செய்ய முடியாத ஏமாற்றம் அவர் மனக்கண் முன் கருப்பு உடை அணிந்து ஒரு உருவம் வந்து பயமுறுத்தும். அதனாலேயே. அவருக்கு கருப்பு வண்ணமே பிடிக்காது. அகிலா கறுப்பு நிறத்தில் என்றாவது உடை அணிந்திருந்தால் அன்று முழுவதும் இதெல்லாம் ஒரு கலருன்னு வாங்கி கட்டிக்றியே என்று முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். அகிலாவும் விடமாட்டாள்.. அவர் காதை பிடித்து இழுத்துக் கொண்டு ஜன்னல் வழியே மேகங்களைக் காட்டுவாள். சூல் கொன்ட மேகங்கள் கருப்பு தானே அங்கே பாருங்க...அழகாகவும் இருக்கு, உபயோகமாவும் இருக்கு..”.அவர் சிரித்துவிடுவார். “இதை அழகுன்னு சொல்ல உன்னால் தான் முடியும். ரொம்பத் தான் கருப்புக்கு வக்காலத்து வாங்கறே.”

ஒரு சமயம் அவர்கள் வீட்டில் பூனை ஆறு குட்டிகள் போட்டிருந்தது. அதில் ஒரு குட்டி முழுக் கருப்பில் இருந்தது. அகிலாவுக்கு கண்விழிக்காத அக்குட்டிகளை பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. என்ன அழகு!

“எவ்வளவு அழகா இருக்கு இல்லே...” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். மறுநாள் பார்த்தால் அந்தக் கருப்புக் குட்டியை காணவில்லை. ஒரு வேளை பூனை தின்றுவிட்டிருக்குமோ என்று நினைத்தாள். வேலைக்காரி காவேரி ஒரு கருப்பு பூனைக் குட்டியை கொண்டு வந்து காட்டினாள்.

“அம்மா...இந்த குட்டி தோட்டத்தில் காஞ்ச இலைகளுக்கு அடியில் பாவம் தவிச்சிட்டு இருந்ததம்மா...” அகிலாவுக்கு புரிந்துவிட்டது.

“உங்க வேலை தானா? ஏங்க இப்படி? பாவம் கண்ணு கூட திறக்காத, அம்மாக்கிட்டே பால் குடிக்கும் குட்டி, அதைப் போய் பிரிச்சிட்டீங்களே.” குட்டியை வாங்கி தாய் பூனைக்கிட்டே வைத்தாள். வெடவெடவென்று நடுங்கிய அது, ஆவலோடு அம்மாவிடம் பால் அருந்த ஆரம்பித்தது. அந்தக் காட்சி சம்பத்துக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. பாவம்...என்று அவர் வாய் முணுமுணுத்தது. தவறு செய்த சிறுவன் போல் நின்றார்.

“இதோ பாருங்க...மனசு மட்டும் தான் கருப்பா இருக்கக்கூடாது. மற்ற எதுவேனா கருப்பா இருக்கலாம்...இனிமே இப்படி பைத்தியக்காரத்தனங்களை எல்லாம் செய்யாதீங்க.” என்று திட்டினாள் அகிலா.



அவர் குழந்தையாகப் பிறந்து ஒரு நாள் கூட ஆகவில்லை அவரின் அம்மா பால் கூட கொடுக்கமுடியாமல் நோய்வாய்ப் பட்டுப் போனாள். பசும்பாலை கிரைப் வாட்டர் பாட்டிலில் ஊற்றி கொடுக்கப்பட்ட பாலைத் தான் குடித்து வளர்ந்தார். அம்மாவுக்கு உடம்பு சரியாகி குழந்தையை கவனித்துக் கொள்ள ஆரிம்பித்த சமயம் குழந்தைக்கு இரண்டு வயதாகிவிட்டது. தாய்ப் பால் தேவையில்லை என்ற நிலை. திட உணவு சாப்பிட முடிந்தது. ஆரம்பமே கருப்பு நாளாக அமைந்துபோனது அவருக்கு. பள்ளியில் சேர்ந்த போது அப்பாவுக்கு வேலை போனது. நாலு வயசு குழந்தையாக மூக்குறுஞ்சிக் கொண்டு இருக்க, அம்மாவும் மூக்குறுஞ்சிக் கொண்டு இருந்தாள். வீட்டில் குந்துமணி அரிசியில்லை. கஞ்சி காய்ச்சக் கூட வக்கில்லை. சில கருப்பு நாட்கள் இப்படி போயிற்று. ஆட்டை தூக்கி மாட்டில் போட்டு...என்று ததிங்கினத்தோம் போட்டு அவர்கள் நாட்களை பட்டினியும் பசியுமாக கடத்திய போது ஒரு வழியாக..அவர் அப்பாவுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் கணக்கர் வேலை கிடைத்தது. பணக் கஷ்டம் தீர்ந்தது. அதிர்ஷ்ட தேவதை அவர்கள் மேல் கருணை காட்டி சிரிக்க, குடும்பம் நன்கு தவழத் தொடங்கியது. வறுமையை தாண்டியாகிவிட்டது ஆனால் பயத்தை தாண்ட முடியவில்லை. நாளைக்கு ஏதாவது நடந்து விட்டால்? திடீரென வேலை போய்விட்டால் என்று பயந்து பயந்தே, விடிந்திருந்தும் மனசை இருட்டுக்குள் வைத்திருந்தார்கள். அடுத்த இருட்டு...அவருக்கு பிறந்த தங்கை...தொட்டிலில் கிடந்த எட்டு மாதக் குழந்தை எக்கி காலை காலை உதைத்து ஆடி சிரித்ததில் தொட்டில் துணி கிழிந்து...அது அம்மாவின் நைந்த சேலை தான்---குழந்தை தொபகடீரென்று தரையில் மண்டை நங்கென்று மோதி ரத்தம் பீறிட மரணமடைந்தது. ஒரு வெள்ளை காகிதத்தில் ஒரு சின்ன கருப்பு புள்ளி இருந்தால் பரவாயில்லை...ஆங்காங்கே கருப்புப் புள்ளிகள் முளைத்துக் கொண்டே இருந்தால்! வாழ்க்கையில் இருட்டு வந்து வந்து பயமுறுத்துகிறது. அவருக்கு கருப்பு கலரின் மேல ஒரு வெறுப்பு வந்ததில் வியப்பில்லை.



இப்பொழுது பேத்தி ஆஷாவின் பிரச்சனை. எதற்காக அப்படி அழுதாள்? அதுவும் கண் தெரியாத அஞ்சு வயது பேத்தி?.....கருப்பு புள்ளி இல்லை, இப்பொழுது கருப்பு மலையே வழிமறித்து நிற்பது போல் இருந்தது. வாழ்வின் கஷ்டமான திருப்புமுனைகளை அவர் கருப்பு நிறத்தோடு தான் தொடர்பு படுத்திப் பார்த்தார். ஏதாவது தீங்கு நடந்தால் கருப்பாக யாரோ வந்து நிற்பது போல் ஒரு உருவகம் நெஞ்சில் மோதும்.

“மஞ்சு..சீக்கிரம் ஒட்டு...ஆஷா எப்படியிருக்கிறாளோ?”

மஞ்சுவும் காரை விரட்டிக் கொண்டுதான் சென்றாள்.

சீதாம்மா தான் ஆஷாவை கவனித்துக் கொள்ளும் தெய்வமாக வந்து சேர்ந்தாள். முப்பது வயதில் சிறகொடிந்த பறவை போல் கணவனால் கைவிடப்பட்ட காரிகையாக அடைக்கலம் வேண்டி வந்தாள். ஒரு பொறுப்பான பெண்மணியின் கவனிப்பு அந்த குடும்பத்துக்கு தேவையாக இருந்தது. சீதாம்மா அந்த வீட்டோடு ஒன்றிப் போனாள். ஆஷாவை குழந்தையிலிருந்தே கவனித்து வருபவள் அவள்தான். கடவுளின் கணக்கு யாருக்குப் புரியும்? ஆஷா பிறந்து ஒரு மாதம் ஆன பின் தான் அவளுக்கு கண் பார்வை இல்லை என்பதை கண்டுபிடித்தார்கள்.. மருத்துவர்கள் ஏதேதோ மருத்துவ காரணங்களை சொல்லி கை விரித்தனர். சரவணன் மகளின் நிலை கண்டு நிலைகுலைந்து போனான். அவன் கனவிலும் கருப்பு விளையாடுகிறது ஆஷாவின் அம்மா செல்விதான் இது எல்லாத்துக்கும் காரணம். வெளியே சொல்லவே கூச்சப்படும்படியான கெட்ட பழக்கம் அவளுக்கு இருந்தது. படித்த நாகரிகமான நல்ல குடுமபத்துப் பெண் என்று நினைத்து தான் அவளை சரவணனுக்கு கட்டி வைத்தார் சம்பத்...ஆனால் அவள் போதை மருந்துக்கு அடிமை என்று பிறகு தான் தெரிந்தது. குழந்தை உண்டாகியிருக்கும் போதும் அவள் அந்தப் பழக்கத்தை விடவில்லை. சரவணன் எவ்வளவோ தடுத்தும் திட்டியும், மறுவாழ்வு மையம் அழைத்துச் சென்று காட்டியும் அவள் திருந்துவது போல் நடித்து, மீண்டும் அந்த பழக்கத்தை மேற்கொண்டாள். குழந்தைக்கு அந்த பாதிப்பால் தான் கண்பார்வை போய்விட்டதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் சொன்னதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. செல்வி என்ற அழகான பெயரை வைத்துக் கொண்டு அவள் அடித்த லூட்டி தாங்காமல் சரவணன் அவளை அவள் பெற்றோரிடம் அனுப்பிவிட்டான். குழந்தை ஆஷாவுக்கும் போதை மருந்தை கொடுக்க முயன்ற போது இனி அவளை வீட்டில் வைத்துக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்து தான் அவளை அவள் பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டியதாகிவிட்டது. அவர்களும் அதை புரிந்துகொண்டு பேத்தியின் நன்மை கருதி அவளை கூட்டிக் கொண்டு போனார்கள். ஒரு வருடம் கழிந்த பின் அவர்கள், அவள் எங்கோ ஓடிவிட்டாள் என்ற தகவலை சொன்னார்கள். அவர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டு நேரில் வந்து சொன்ன போது சம்பத் தன் துக்கம் மறந்து அவர்களை தேற்ற வேண்டியதாகிவிட்டது. ஆஷா எல்லோரின் அன்பையும் பெற்று நலமாக வளர்கிறாள். சீத்தாம்மா அவளை தான் பெற்ற குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டது தான் மிகப் பெரிய ஆறுதல். சின்ன ஆறுதல்கள் நட்சத்திரங்கள் மாதிரி என்று சம்பத் நினைத்துக் கொள்வார். நிலா இல்லாவிட்டால் பரவாயில்லை!



அகிலா அகிலத்தை விட்டே போய்விட்டாள். சீதாம்மாவோ குடும்பம் அவளை நம்பி இருக்கும் சமயம் அவளும் வீட்டை விட்டே போய்விட்டாள். இந்தத் தகவல் சம்பத்தை கதி கலங்க வைத்துவிட்டது. பேத்தியிடம் போனில் பேசிக்கொண்டே வந்தார். பயந்து போயிருந்த பேத்திக்கு தைரியம் சொல்லிக் கொண்டு வந்தார். பேத்தியின் அழுகை அவர் மனதை பிசைந்தது.

“அழாதே கண்ணு...தாத்தாவும் அத்தையும் வந்திட்டே இருக்கோம்..”

போன் ப்ளூ டூத்தில் இருந்ததால் மஞ்சுவும் பேசமுடிந்தது.

“ஆஷா...செல்லம் இல்லே...நல்ல பெண்ணில்லே...அழக் கூடாது. இன்னும் அரை மணியில் வந்திடுவோம்...சரியா...”

“அத்தே...இனிமே என்னை யார் பார்த்துப்பா? எனக்கு கண் தெரிஞ்சாப் பரவாயில்லை...எப்படி இருப்பேன்? பயமாயிருக்கு...” தொடர்ந்து அழுத வண்ணம் இருந்தாள் ஆஷா. அவள் அழ அழ சம்பத்துக்கும் மஞ்சுவுக்கும் கண்ணீர் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. என்னாச்சு சீதாம்மாவுக்கு?



கார் போர்டிகோவில் நின்றது தான் தாமதம் ஆஷா ஓடிவந்தாள். ஓடிவந்ததில் அவள் கதவில் முட்டிக் கொண்டாள். தாவி பேத்தியை அணைத்துக் கொண்டார் சம்பத்..”ஒண்ணுமில்லே ஒண்ணுமில்லே...” என்று தலையை தடவிக் கொடுத்தார். மஞ்சுவும் அவளை அணைத்து ஆறுதல் சொன்னாள்.

அந்த சமயம் சரவணன் பைக்கை நிப்பாட்டிவிட்டு வந்தான். அப்பா வருவதை வாசனை மூலமாகவே தெரிந்துகொண்ட ஆஷா குதூகலத்துடன், நம்பிக்கையுடன் கேட்டாள்.

“அப்பா சீத்தாம்மா வரேன்னு சொன்னாங்களா?” மண்டியிட்டு மகள் அருகே உட்கார்ந்த சரவணன் மகளை அன்புடன் கட்டி அணைத்து முத்தமிட்டான். “சொல்லுப்பா...அவங்க வரேன்னு சொன்னாங்களா?”
“அவங்களாலே வரமுடியாதும்மா...”

“ஏம்ப்பா? என் மேலே கோபமா இருக்காங்களா? நான் நேத்து அவங்க சொன்னபடி கணக்கு போட்டுக் காண்பிக்கலை...நான் அவங்க கூட பேசறேன்பா...ப்ளீஸ் அப்பா...”

“அவங்க கூட பேசமுடியாதும்மா.”

“ஏம்ப்பா?...”

“அவங்ககிட்டே நீ பேசினாலும் அவங்களுக்கு கேக்காது...ஏன்னா அவங்க ராஜஸ்தான் போயிட்டாங்களாம். அவங்களுக்கு கடுமையான ஹார்ட் அட்டாக்...அவங்க தோழி வீட்டுக்குப் போயிருக்காங்க...” விரக்தியுடன் சொன்னான்.

இதைக் கேட்டு ஆஷா மயங்கிச் சரிந்தாள்.....அவளை தூக்கி கொண்டு போய் அவள் படுக்கையில் அவளை படுக்க வைத்து...முகத்தில் தண்ணீர் தெளித்தனர். சிறிது நேரத்தில் கண் விழித்த ஆஷா....ஓவென்று அழ ஆரம்பித்தாள். கண் பார்வை போனது தெரிந்த போது கூட அழாதவள் இன்று அழதாள். தேம்பித் தேம்பி அழதாள்.

“நான் செத்துப் போறேன்...சீத்தாம்மா இல்லாமல் நான் இருக்கமாட்டேன்.”

“சரவணன்..குழந்தையை அழ விடு. அவள் துக்கம் தீரட்டும்...”

“அண்ணா...நான் அவ கூட இருக்கேன். நீங்க எப்படியாவது வேறு ஆள் ஏற்பாடு பண்ணுங்க..” என்றாள் மஞ்சு. ஆஷா அருகில் உட்கார்ந்து கொண்டு அவளும் கண்கலங்கி மனம் கலங்கி தவித்தாள். தன் உலகமே சீத்தாம்மா தான் என்று இருந்த குழந்தையால் எப்படி இந்த துயரத்தில் இருந்து வெளி வரமுடியும்? அவள் கல்லூரிக்கு சென்றுவிடுவாள். சரவணன் வேலைக்கு சென்றுவிடுவான். சம்பத் இன்னும் ஒய்வு பெறவில்லை. நாலு வருஷம் இருந்தது. இப்பவே முன்கூட்டியே விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டால், வரும் பென்ஷன் குறைந்துவிடும். வேறு வழி இல்லை அவர் தான் வீட்டில் இருந்து பேத்தியை பார்த்துக் கொள்ளவேண்டும். சம்பாத்தியமா முக்கியம்?

என்ன ஒரு சோதனை? அவரும் சரவணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “வேறு ஆள் கிடைக்குமா சரவணா?
“கிடைக்கும்ப்பா...ஆனா உடனே எப்படி கிடைக்கும்? அதிலும் அவள் சீத்தாம்மா மாதிரி எப்படி பார்த்துக் கொள்ள முடியும்? நம்பகமானவர்களாக இருக்க வேண்டுமே என்று கவலையும் வருகிறது...”

அவர் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினார். சரவணன் எங்கே என்று கேட்கவில்லை. அவனுக்குத் தெரியும். அப்பா சீத்தாம்மாவின் வீட்டுக்குத் தான் போகிறார் என்று. அவன் அங்கிருந்து தான் வருகிறான். பேசாமல் குளியலறைக்குள் சென்று தலைக்கு குளித்தான். தலைக்கு மூழ்கி குளிப்பது போல் பிரச்சனையை தலை மூழ்கி விட முடியுமா? யாரும் சாப்பிடவில்லை. ஆஷா அழுது அழுது தூங்கிவிட்டாள். தற்காலிக நிம்மதி. சாயங்காலம் ஆறு மணி அளவில் அப்பா ஒரு பதிமூன்று வயசுப் பெண்ணை அழைச்சிட்டு வந்தார்.

“யாருப்பா இது? இந்த சிறுமியை எதுக்கு கூட்டி வந்தீங்க?”

“வேறு எதுக்கு? ஆஷாவை பார்த்துக்கத் தான்..”

“என்னது...இவளையா? போலிஸ் நம்மை பிடிச்சிட்டு போறதுக்கா? குழந்தை தொழிளாளர்களை வைத்துக் கொள்ள முடியாது, கொண்டு போய் விடுங்க. நல்ல ஆள் கிடைக்கும்வரை நான் லீவு எடுத்து பார்த்துக்கிறேன்...”

“திருப்பி அனுப்பிடாதீங்க அண்ணா. நான் இங்கே இருக்கேன்.”

அந்த சிறுமி இப்படி சொன்னபோது கேள்விக் குறியுடன் அவளைப் பார்த்தான். என்ன பேசுகிறாள் இவள்?

“எங்க வீட்டிலே தாத்தா பாட்டிக்கு சீத்தாம்மாவை பிடிக்காது. அவங்க தத்து எடுத்து வளர்த்த பிள்ளை நானு. அம்மா உடம்பு முடியாம போயிருக்காங்க. உடம்பு சரியானதும் வந்திடுவாங்க அது வரை உங்க கூட இருக்கேன்...இல்லை என்னை அநாதை விடுதியில் சேரத்திடுவாங்க தாத்தா பாட்டி. ஏற்கனவே சொல்லிட்டாங்க. அதான் நானே தான் சார்கிட்டே வேலைக்கு வரேன்னு சொன்னேன்...அண்ணா ப்ளீஸ் அண்ணா..”

“என்னப்பா இது இவ சொல்றது நிஜமா?”

“ஆமா சரவணா. சீதாம்மா விமானம் மூலம் ராஜஸ்தான் போயிட்டாங்க. அங்கே சில பேர் கிட்டே, ஆள் கிடைக்குமான்னு கேட்டேன். ஆளாளுக்கு ஏதேதோ பெயர்களை சொன்னாங்க. ஒரு அம்மாவை பார்த்து பேசி கூட முடிச்சிட்டேன்...அதுக்குள்ளே இந்தப் பொண்ணு வந்து நான் பார்த்துக்கிறேன் எனக்கு என் அத்தையோட பிள்ளைகளை எல்லாம் பார்த்திருக்கற அனுபவம் இருக்குன்னு சொல்லிச்சு. கூட்டிப் போலேன்னா விரட்டி விடுவாங்கன்னு அழுதுச்சு. பாவமா இருந்துச்சு.

அதான்...கூட்டிட்டு வந்திட்டேன்.” அவர் சொல்லி முடிப்பதற்குள் சரவணன் மறுப்பு தெரிவித்தான். இவளே சின்னப் பெண்...இவள் போய் பார்த்துக்கறதாவவது? அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.

“அப்பா...பாவம் தான். அதுக்கு நாம் என்ன செய்யமுடியும்? வேறு ஆள் பாருங்க. சின்ன பொண்ணையெல்லாம் வேலை வாங்கிக்கிட்டு.... வேண்டுமானால் அவள் இங்கு இருக்கட்டும். அவளை படிக்க வைப்போம். அவள் தங்க வேறு ஏற்பாடு செய்வோம். அதுவரை இருக்கட்டும். பாப்பா உன் பேர் என்னம்மா?”

“அஞ்சனா அண்ணா...” என்றாள் சற்று பயம் தெளிந்தவளாக.



வேறு ஆள் அவ்வளவு சீக்கிரம் கிடைக்கவில்லை. ஐய்யாயிரம் ருபாய், மூன்று வேளை சாப்பாடு, காலையும் இரவும் டிகிரி காப்பி, வருஷத்துக்கு ரெண்டு புடவை என்றெல்லாம் பேரம் பேசினார்கள். சரி என்று ஒத்துக்கொண்ட பிறகு...வீட்டோடு இருக்க மாட்டேன். காலை எட்டு மணிக்கு வருவேன் இரவு ஆறு மணிக்கு போயிடுவேன் என்று கறாராக பேசினார்கள்.

“குருட்டுப் பெண்ணை பார்க்கறதுன்னா சும்மாவா?” என்று வாய் கூசாமல் ஆஷா முன்னிலையிலேயே சொன்னதும் சரவணன் ஓங்கி அடித்துவிட்டான். “டேய்..விடுடா. என்ன நீ கையெல்லாம் நீட்டிக்கிட்டு. ஏம்மா...உனக்கு பார்வை இருக்கிற கொழுப்பா? நாளைக்கே உனக்கு பார்வை போகாதுன்னு உறுதியா சொல்லமுடியுமா? மனசு புண்படும்படி பேசறே? நீ போவிட்டு வா தாயே..” என்றார்.

“போ...வந்திடாதே....குருட்டு மனசுக்காரி.” என்று சொல்லி விரட்டினான் சரவணன். மஞ்சுவும் திட்டி தீர்த்தாள்.

“இதோ பாருங்க...கவலையை விடுங்க நான் இந்த ஒரு வருஷம் படிப்பை விட்டுடறேன். வீட்டில் இருந்து ஆஷாவை பார்த்துக்கிறேன். அண்ணா நீ கவலைப்படாதே...சரியா?” என்றாள் மஞ்சு. தங்கையிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை சரவணன். அவன் கண்ணில் நீர் துளிர்த்தது. நா தழுதழுக்க சொன்னான்.

“ரொம்ப தாங்க்ஸ் மஞ்சு.... இத நான் உயிருள்ள வரை மறக்கமாட்டேன்.” எவ்வளவு பெரிய உதவி!

அவனால் நம்பவேமுடியவில்லை. கோபக்கார மஞ்சு. எடுத்தெறிந்து பேசும் மஞ்சு. புலம்பிக் கொண்டே இருக்கும் மஞ்சு..அவளா சொன்னாள்? பூ படக்கென்று விரிந்து விடுவது போல் மலர்ந்துவிட்டாளே!. அது தான் குடும்பம்! பள்ளத்தில் விழும்போது தான் ஒற்றுமையாக கைகோத்து மேலே எழவேண்டும் என்று மனசு வைராக்கியம் பெறும். தற்காலியமாக அவர்கள் ஒரு சிறு சந்தோஷத்துக்கு வந்தார்கள். அப்புறம் தான் எல்லோருக்கும் பசிப்பது தெரிந்தது. குழந்தை ஆஷா உள்பட யாருமே காலையிலிருந்து சாப்பிடவேயில்லை. ஆஷாவை எழுப்பி கூட்டி வந்தாள் அந்தச் சிறுமி.



மஞ்சு வத்தக் குழம்பும், சீனிக் கிழங்கு பொரியலும் செய்து, அப்பளம் பொரித்து விட்டாள். சமையலறை பக்கம் வராதவள் இன்று வந்து சமைத்தாள். எல்லாருக்கும் நல்ல பசி. தட்டு டம்பளர் எல்லாம் சாப்பாட்டு மேஜை மேல் வைக்க சரவணனும் உதவி செய்தான். சிறுமி அஞ்சனாவும் எடுத்து வைத்தாள். “எனக்கு சாப்பாடு வேண்டாம் போ. எனக்கு சீத்தாம்மா தான் வேணும்.” ஆஷா கூவினாள். உணவுத் தட்டு பறந்து சுவரில் மோதி சாதம் சிதறியது. எப்படி இவளை சமாதானப்படுத்துவது.?

“அத்தை உன் கூட இருந்து பார்த்துக்கிறேன்மா...” கனிவாக சொன்னாள் மஞ்சு. கோபப்படாமல் மஞ்சு சொன்னது ஆஷாவுக்கே ஆச்சர்யம் தான். வேறு சமயமாக இருந்தால் ஆஷா முதுகில் ரெண்டு விழுந்திருக்கும். மஞ்சு என்ன இதயம் இல்லாதவளா?

“நான் உன்னை பார்த்துக்கிறேன் ஆஷா...” அஞ்சனா அஷாவை நோக்கி கைகளை விரித்தாள். ஆஷா ஓடிப் போய் அவள் விரித்த கைகளியில் அடைக்கலம் ஆனாள். “சரி...” என்று அவள் புன்னகைத்தாள். அஞ்சனா அவளை சமாதானப்படுத்திவிட்டாள். எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. சிறுமி சாதித்து விட்டாள்.



மழை விழும்.
 
Top