கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள் அத்தியாயம் --3

sankariappan

Moderator
Staff member
முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள் --3

அதிதியாயம்—3



கள்ளமில்லா சிரிப்பும், நிஜமான உணர்வின் வெளிப்பாடுமாக அஞ்சனா சொன்னதை ஆஷா ஏற்றுக் கொண்டது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை தந்தது.

“வெரி குட். ஆஷா இனிமே அழமாட்டியே?...”

“நோ...” ஆஷாவின் சிரிப்பு வந்ததே என்று சந்தோஷப்பட முடியவில்லை. அஞ்சனா சீத்தாம்மா மாதிரி ஆஷாவை பார்த்துக் கொள்ள முடியுமா?. காலையில் ஆஷா எழுந்து கொண்டதும் அவள் கையை பிடித்துக்கொண்டு உதவி செய்தாள் அஞ்சனா.

பல்விளக்கி விட்டு...குளிக்க ஏற்பாடு பண்ணி, குளிக்க வைத்து...உடை போட்டுவிட்டு..என்று பார்த்துக் கொள்வது அஞ்சனாவின் வயதுக்கு அதிகமான செயலாக இருந்தது. “நீ ஏன் சீத்தாம்மா மாதிரி பார்த்துக்க மாட்டேங்கறே?”

“கத்துக்கறேன் ஆஷா...கொஞ்சம் பொறுத்துக்கோ.”

“ஆஷா...அவளை உன் விளையாட்டு தோழியா வச்சுக்கோ. சீத்தாம்மா மாதிரி பார்த்து பார்த்து செய்ய அவளால் முடியாது. அவளும் சின்னப் பெண்தானே.” என்று சரவணன் சொன்னான்.

ஆஷாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. “சீத்தாம்மா எனக்கு இப்படி தலை வார மாட்டாங்க. நீ தூக்கி சீவியிருக்கே...” என்றாள் ஆஷா.

“அதெப்படி நான் சீவினது பத்தி தெரிஞ்சது? உனக்குத் தான் கண் தெரியாதே..” தெரியாமல் சொல்லிவிட்டாள் அஞ்சனா.

ஆஷா ஒ ராமா என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

“சீத்தாம்மா...என்னை கண்ணு தெரியாத பிள்ளைன்னு கிண்டல் பண்ணவே மாட்டாங்க...நீ வேண்டாம் போ ...” மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டாள் ஆஷா. ரெண்டு வாரம் மஞ்சு கல்லூரிக்கு லீவு போட்டாள். ஆஷாவை கவனிக்க அவள் செய்த முடிவு இது.

“தேர்வு நெருங்குகிறது நீ பாட்டுக்கு ரெண்டு வாரம் வராம இருந்தா எப்படி?” என்று ஆயிரம் அறிவுரை சொல்லி வீட்டுக்கே கடிதம் வந்தது, கல்லூரி முதல்வரிடமிருந்து. இப்ப என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் திண்டாடினர். தாத்தா நெருங்கி வந்தால் போ என்றாள் ஆஷா. அப்பா சரவணன் உணவு ஊட்டி விட்டால் துப்பினாள். மஞ்சுவை அவள் காலால் எட்டி உதைத்தாள். அஞ்சனாவின் கெஞ்சலும் கொஞ்சலும் இருந்ததால் அழுகை கொஞ்சம் மட்டுப் பட்டிருந்தது. சரவணன் பொறுமை இழந்து ஒரு முறை அடித்துவிட்டான். “சனியனே...ஏன் உயிரை வாங்கறே? என்னதான் வேணும் உனக்கு? குருட்டுக் குரங்கே..” என்று முன் பின் யோசிக்காமல் கத்திவிட்டான். அதிர்ச்சி அடைந்தாள் ஆஷா. அப்பாவா இப்படி சொன்னார்? அன்று ஆஷா வாயை மூடிக் கொண்டாள். கண்ணில் மிரட்சி. மெளனமாக சாப்பிட்டாள், சொன்னபடி குளித்தாள். பாடம் கற்றுக் கொண்டாள். அடம் பண்ணாமல் பொம்மையாக கிடந்தாள். சரவணன் கூனிக் குறுகி நின்றான்.

“இந்த அப்பாவை மனிச்சுக்க கண்ணு. ஏதோ கோபத்திலே சொல்லிட்டேன். ஆள் யாரும் கிடைக்கலை. உனக்கு சோறு போட, படிக்க வைக்க, நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க அப்பா சம்பாதிக்க வேண்டாமா? தாத்தாவும் சம்பாதிக்கணும். எல்லாம் உனக்காகத்தான். அத்தை படிப்பை விட்டிட்டு உன்னை பார்த்துக்குவா. சரி சொல்லுடா கண்ணு...”

“நான் நல்ல பிள்ளையா இருக்கேன்ப்பா. அத்தை கல்லூரிக்கு போவட்டும். நீங்க எல்லோரும் வேலைக்குப் போங்க. நான் ஜாக்கிரதையா இருக்கேன். சரியா....நான் கண் தெரியாத குருட்டுக் குரங்கு தானே...எனக்கென்ன வீம்பு வேண்டியிருக்கு?” சொல்லிவிட்டு ஆஷா அறைக்குள் சென்று கதவடைத்தாள்.

தாயைப் போல் நினைத்திருந்த சீத்தாமாவை இழந்த, கண் தெரியாத சிறு பெண்ணின் வலி தெரியாமல் நடந்ததற்காக சரவணன் நூறு முறை வருந்தினான். மன வலியுடன் சுருங்கிப் போயிருந்த குழந்தையின் மனதை வன்முறை வார்த்தைகள் என்னும் தீயால் இஸ்திரி பண்ணியது மாதிரி ஆயிற்று. அந்த நெருப்புப் பூக்கள் சுட்டன. குழந்தையின் துள்ளல் போயிற்று. அவள் அஞ்னாவிடம் சொன்னதைக் கேட்க நேர்ந்தது.

“சீத்தாம்மா நட்சத்திரமா வானத்திலே இருப்பாங்க இல்லே? அஞ்சனா நீ எனக்காக வானத்தை பார்த்திட்டு வரியா? எந்த நட்சத்திரம் ப்ரைட்டா இருக்கோ அது தான் சீத்தாம்மா..அவங்க சொல்லியிருக்காங்க, என்றாவது ஒரு நாள் அவங்க அம்மாவை பார்க்க போயிட்டா...நான் நட்சத்திரமா வானத்திலிருந்து உன்னை பார்த்திட்டிருப்பேன். அதனாலே நீ என்னை மிஸ் பண்ணக் கூடாது. விடிந்ததும் வந்திடுவேன் அப்படிம்பாங்க...நட்சத்திரமா மேலே இருக்காங்களா? பார்த்து சொல்லேன் அஞ்சனா.”

“அப்படியா சரி...” ஜன்னல் வழியாக அஞ்சனா பார்த்தாள். “அதோ ஒரு நட்சத்திரம் ஆயிரம் வைரம் மாதிரி ஜொலிக்குது...வா பாரேன்..”

“என்னால் பார்க்க முடியாதே..”

“பார்க்க முடியும் நீ கிட்டே வா காட்டறேன்..”

ஆஷா ஜன்னலருகே ஓடிவருகிறாள். குழந்தையின் கையை எடுத்துக் கொண்டு வானத்தின் ஒரு திசையில் சுட்டுகிறாள்.

“அதோ அங்கே தான் இருக்காங்க...தெரியுதா?”

“தெரியுது...” ஆஷாவின் முகம் பிரகாசமாகிறது. அஞ்சனா பார்த்தது அவள் பார்த்த மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு.

“தினம் நீ பார்க்கலாம்...நான் காண்பிக்கிறேன்...சரியா? அவங்க உன்னை கவனிச்சிட்டே தான் இருப்பாங்க. நீ சமர்த்தா இருக்கணும்.”

“ம்ம் சரி..”

புத்தருக்கு கிடைத்த ஞானம் போல் ஆஷாவுக்கு ஒரு ஒளி தெரிந்திருக்குமோ? அடுத்து அவள் சொன்னதை கேட்டு இரவெல்லாம் அழுதான் சரவணன். குழந்தை எப்படி பேசுகிறாள்!

“சீத்தாம்மாவை நட்சத்திரமா பார்க்கலாமுன்னு அஞ்சனா சொல்றா. அதை ஒரு முறை பார்க்கவாவது எனக்கு ஒரு நிமிஷம் கண் பார்வை குடு கடவுளே. அப்புறம் மீண்டும் பார்வையை பறிச்சுக்கோ பரவாயில்லை.”

இந்த குறைப்பட்ட கண்களை அவளுக்கு கொடுத்த மனைவி செல்வியை இந்த நிமிஷம் அதிகம் வெறுத்தான் சரவணன்.

அஞ்சனா ராஜஸ்தானிலிருந்து தான் வருகிறாளாம். அங்கு அவள் எட்டாம் வகுப்பு முடித்திருந்தாளாம். இங்கு அவளை ஒன்பதாம் வகுப்பில் நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டான் சரவணன்.



செல்வி வந்தபோது அவள் தன்னுடன் ஒழுக்கமின்மையையும் கொண்டு வந்திருக்கிறாள் என்று முதலில் யாரும் நினைக்கவில்லை. மூன்று முழு மாதம் தான் சரவணன் அவளுடன் சந்தோஷமாக வாழ்ந்தான். அதுவரை தான் அவளை அவளால் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது. பிறகு ஒரு நாள் அவள் சிறிய டோஸாக போதை மருந்தை ஏற்றிக் கொண்டாள். அதனால் அவளுக்கு சோர்வும் மயக்கமும் வந்து படுத்துக் கொண்டாள். அவளுக்கு உண்மையில் ஏதோ உடம்பு சரில்லை என்று எண்ணி சம்பத்தும் சரவணணும் பதறிப் போனார்கள். உடனே டாக்டரை வரவழைத்து விட்டனர்.

“டாக்டரெல்லாம் வேண்டாம்...” என்று செல்வி முணுமுணுத்தாள். அவளால் பேசக் கூட முடியவில்லை. அவளுக்கு உடம்புக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று பயந்துவிட்டனர். அப்பொழுது மஞ்சுவுக்கு வயசு பத்து தான்.

“அண்ணிக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை. அவங்க ட்ரக்ஸ் எடுத்திருக்காங்க” என்றாள். சரவணன் அவளை பட்டென்று அடித்துவிட்டான். அவனுக்கு கோபம் பத்திக் கொண்டு வந்தது.

“என்ன பேசறே நீ? ஏதாவது உளறாதே..”

சம்பத் மகளை அணைத்துக் கொண்டார்.

“அண்ணன் ஏதோ பதட்டத்திலே இருக்கான். அடிச்சிட்டான். தப்பா எடுத்துக்காதே செல்லம்...” என்றார். மஞ்சு அவரின் பிடியிலிருந்து மூர்கமாக விடுவித்துக் கொண்டு கத்தினாள்.

“அடிச்சதுக்கு சமாதானம் சொல்றீங்க...ஏன் அடிச்சான்னு கேக்கமாட்டேங்கறீங்க...நீங்கெல்லாம் ஒரு அப்பாவா?”

ஓடிப் போய் அறையில் கதவடைத்துக் கொண்டாள். சம்பத்தும் சரவணனும் செல்வி இப்படி வேரறுந்த மரம் போல் கிடப்பதில் ஏற்பட்ட கிலியில் இருந்ததால் அவளை அதிகம் கண்டு கொள்ளவில்லை. இது மஞ்சு பாதித்தது.

“ஏய்...வா வெளியே. சாப்பிட வா..” என்று கதவை தட்டிப் பார்த்துவிட்டு போய்விட்டனர். எல்லோரும் கவலையுடன் இருக்கும் சமயம் இவள் வேறு டென்ஷன் பண்ணுகிறாள் என்று அலுத்துக் கொண்டனர். டாக்டர் வந்தார். பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் சொன்னார்.

“ஒரு குட் நியூஸ்...ஒரு பாட் நியூஸ்...முதலில் குட் நியூஸ் சொல்றேன். உங்க மருமகள் குழந்தை உண்டாகியிருக்காங்க. பாட் நியூஸ்....” டாக்டர் சிறிது தயங்கினாள். அவர்களை கவலையுடன் பார்த்தாள். டாக்டரின் தயக்கம் அவர்களுக்கு கிளியை கொடுத்தது.

“சொல்லுங்க டாக்டர். எதுவானா சொல்லுங்க...செல்விக்கு ஏதாவது வியாதி....என்ன பிரச்சனை டாக்டர்?”

“வியாதி தான்...ஆனால் வித்தியாசமான வியாதி. அவங்க போதை மருந்து எடுத்துக்கிறாங்கன்னு சந்தேகப்படறேன். செக் பண்ணனும். ப்ளட் டெஸ்ட் எடுக்க ஆள் அனுப்பறேன்...அப்ப உறுதியா தெரிஞ்சுடும்....குழந்தை உண்டாகி இருக்கும் இந்த சமயம் அது நல்லதில்லை. நீங்க அவங்க கிட்டே கோபமா பாசாதீங்க...”

டாக்டர் போய்விட்டார். அவர் போனாலும் அவர் விட்டுச் சென்ற செய்தியால் அந்த வீட்டின் நிம்மதி போய்விட்டது. ப்ளட் டெஸ்ட் பண்ணி ரிசல்ட் வரும்வரை அப்படியெல்லாம் இருக்காது என்று தான் சம்பத்தும் சரவணனும் நம்பினார்கள். ஆனால் ப்ளட் டெஸ்ட் அதை உறுதி பண்ணிவிட்டது. இடிந்து போய்விட்டனர். போதை தெளிந்ததும் செல்வியைப் பார்த்து

“என்ன செல்வி இது?..இந்தப் பழக்கம் உனக்கு எப்படி வந்தது?” என்றான் சரவணன். அவள் அழுதாள். முகத்தை கைகளால் மூடிக் கொண்டாள். அவளுக்கு அவமானமாக இருந்தது.

“கெட்ட சகவாசம் தான்...ஜஸ்ட் விளையாட்டுக்கு எடுத்தேன். அதை விடமுடியாம...மூணு மாசம் கட்டுப்படுத்தி இருந்தேன். இனி ஒரு நல்ல மனைவியா இருந்து குடும்பம் நடத்தணும்னு நினைச்சேன்...ஆனா...”

அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மஞ்சு அங்கு வந்தாள்.

“நாய் வாலை நிமித்த முடியுமா? நான் சொன்னபோது என்னை அடிச்சியே. இப்ப தெரியுதா உன் பொண்டாட்டியின் யோக்கியதை...” என்றாள்.

ஏற்கனவே சரவணன் அதிர்ச்சியில் இருந்தான். இவள் வேறு கடுப்பேத்துகிறாள் என்று பொருமினான். சில அதிர்ச்சிகளை ஏற்றுக் கொள்ள மனசு மறுக்கிறது. அவன் கோபம் செல்வி மேல் பாயவேண்டியது மஞ்சு மேல் பாய்ந்தது. “பெரிய ஞானி, ஞான திருஷ்டியில் சொல்லிட்டா. போ அங்கிட்டு. நான் பார்த்துக்கிறேன்...”

“என்ன பார்த்துக்குவே? அவளை வீட்டை விட்டு விரட்டு. இவளெல்லாம் திருந்த மாட்டாள். என் தோழி விமலாவோட அண்ணன் இப்படிதான் ஆரம்பித்தான். இன்றும் அவன் அதிலிருந்து மிளலை. அண்ணா....இவங்க உனக்கு வேண்டாம். உன் வாழ்க்கையை நரகம் ஆக்கிடுவாங்க..”

மஞ்சு சகோதரன் மேல் உள்ள பாசத்தால் பெரிய மனுஷி போல் பேசியது சம்பத்துக்கும் பிடிக்கவில்லை சரவணனுக்கும் பிடிக்கவில்லை.

“மஞ்சு...நீ பேசாம இரு. அப்படி விரட்டிட முடியாது. அவ இப்ப மாசமா இருக்கா. நாம நம் வாரிசுக்காகவாவது அவளை சரி பண்ணனும். பொறுமையா இரு மஞ்சு...” என்று அறிவுரை சொன்னார் சம்பத்.

“அதிகப் பிரசங்கி மாதிரி பேசாதே மஞ்சு. பெரியவங்க நாங்க பார்த்துக்கிறோம். நீ சின்னப் பெண்ணா லட்சணமா இரு. இனிமே ஏதாவது பேசின, நான் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது..” என்றான் சரவணன்.

“சண்டை போடாதீங்க. மஞ்சு சொல்றது சரிதான். இந்த வலையில் விழுந்தவங்க தப்பிக்க முடியாது. சரவணன் என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க...”

செல்வி உண்மையாகவே சொல்லி கிளம்பத் தயாரானாள். பெட்டியில் தன் உடைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள்.

“கல்யாணம் வேண்டாம் வேண்டாமுன்னு சொன்னேன்...அம்மாவும் அப்பாவும் கேக்கலை. என்னை விட்டிடுங்க. நான் போறேன்...”

செல்வியின் கையை பிடித்து சரவணன் அவளை உட்கார வைத்தான். அமைதியாக சொன்னான்.

“செல்வி..நடந்தது நடந்து போச்சு. இனிமே நீ திருந்தி நல்ல வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கே. எங்களுக்கா இல்லாட்டியும் உன் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவாவது நீ மாறணும். உனக்கு நாங்க ஹெல்ப் பண்றோம்.” என்று மன்றாடி கேட்டுக் கொண்டான். சம்பத்தும் வேண்டினார்.

“ஆமாம்மா...இருட்டிலேயே எத்தனை நாள் வாழ்வே? வெளுச்சத்துக்கு வா. உன் குழந்தைக்காக...” கெஞ்சினார்.

“சரி...” என்று அவள் சொன்னதும் சம்பத்தும் சரவணனும் சந்தோசம் அடைத்தார்கள். மஞ்சுவுக்கு மட்டும் உள்ளுக்குள் வெறுப்பு மூண்டது. இதில் விழுந்தவர்கள் திருந்துவதாவது!



மஞ்சுவுக்கு ஆறு வயசான போது அவளுக்கு விமலா என்ற தோழி மிகவும் நெருக்கமானாள். இருவருக்கும் தாய் இல்லை. அதனாலோ என்னவோ இருவரும் மனதால் மிகவும் நெருங்கிவிட்டார்கள். ஒருவருக்கு ஒருவர் தங்கள் மனக் குமறல்களை பகிர்ந்து கொண்டனர். ஒரு நாள் விமலா மிகவும் சோகமாக இருந்தாள். மஞ்சு என்னாச்சு என்று வற்புறுத்திக் கேட்டாள். விமலா கண்களில் கண்ணீர்.

“எல்லாம் என்னோட அண்ணனாலே வீட்டிலே பிரச்சனை மஞ்சு.”

“அபப்டியா? என்ன பண்றார் அவர்? உன்னை அடிக்கிறாரா?”

“அப்படி அடிச்சா கூட பரவாயில்லை. டிரக்ஸ் பண்றான்....வீட்டின் நிம்மதியே போச்சு. எப்பபார் போதையிலே மயங்கி கிடக்கிறான். பள்ளிக்கும் போகலை. அங்கிருந்து துரத்திட்டாங்க. அவனால் மத்த பசங்க கெட்டுடக் கூடாதுன்னு..” என்று வருந்தி சொன்னாள்.

நாளாக நாளாக விமலாவின் அண்ணன் பெரிய கேடியாகிவிட்டான் என்று மஞ்சு புரிந்து கொண்டாள். வீட்டில் சாமான்களை திருடி விற்பது, பணம் திருடுவது...ஏதாவது அதட்டிக் கேட்டால், .அப்படித்தான் செய்வேன்...கிட்ட வந்தீங்க கத்தியாலே குத்திடுவேன்னு மிரட்டுறதுன்னு விமலா வீடு களேபரமாக இருந்தது. அவள் பல முறை விமலா வீட்டில் விளையாட படிக்க என்று போனபோது அவனைப் பார்த்திருக்கிறாள். கண்கள் போதையில் கிறங்க, உடம்பு தள்ளாட...ஒரு அருவருப்பான உருவமாக அவன் கிடந்தான். அவனின் அப்பாவின் கண்ணீரைப் பார்த்தாள். விமலாவின் துயரம் பார்த்தாள். சமயத்தில் அவன் அப்பாவையும் தங்கையையும் அடிப்பதைப் பார்த்தாள். விமலா அவனுக்கு பயந்து ஓடி ஒளிந்ததைப் பார்த்தாள்.

“நான் இனிமே உங்க வீட்டுக்கு வரமாட்டேன்..” என்று சொல்லி, போவதை நிறுத்திக் கொண்டாள் மஞ்சு. அதற்கு பிறகு அவள் போகவேயில்லை. ஆனால் அவளுக்கு செய்தி கிடைத்தது. நாலு வருஷம் குடும்பத்தை படாத பாடு படுத்திய விமலாவின் அண்ணன் ரகு, போதையை ஓவர்டோஸ் பண்ணி செத்துவிட்டான் என்று. விமலா போனில் சொன்னாள். “அவன் நல்லவேளை செத்து ஒழிந்தான் எங்க எல்லாருக்கும் நிம்மதி. விடுதலை...நாங்க கொண்டாடறோம்...” அது மகிழ்ச்சியற்ற சந்தோசம். நல்ல செய்தி இல்லை. அவனை இழந்தது அவர்களுக்கு சொல்லொன்னா துயரத்தை கொடுத்திருக்கிறது என்று மஞ்சுவால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்படியெல்லாம் ஒரு அனுபவம் அவளுக்கு கிடைத்ததை அவள் அப்பாவிடமோ சகோதரனுடனோ பகிர்ந்து கொள்ளவில்லை. மனசுக்குள்ளேயே வைத்து வைத்து யாரிடமும் சொல்லாமல் ஒரு பயத்துடன் அவள் ஒரு சிடுசிடு பெண்ணாக மாறிவிட்டிருந்தாள். சரவணன் மனைவியை தாங்குவது அவளுக்கு பிடிக்கவில்லை. இவளைத் துரத்தி விடாமல் எதுக்கு தாங்குகிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. அடிக்கடி அவளுக்கும் செல்விக்கும் சண்டை மூண்டது. “நீ வீட்டை விட்டுப் போ....குழந்தையை அழிச்சிடு...” என்று அவள் ஒரு முறை சொல்லும் போது சரவணன் கேட்டுவிட்டான். வந்ததே கோபம் அவனுக்கு. கண்மண் தெரியாமல் அடித்துவிட்டான்.

“அவள் திருந்தி...தன் குழந்தைக்காக வாழ நினைக்கிறாள். உனக்கென்ன வந்தது? அது உன் அண்ணனின் குழந்தைடி...நான் உன் அண்ணன் என்பது கூட மறந்து போச்சா?” மஞ்சு திடுக்கிட்டுப் போனாள். இப்படியா ஒருவன் அடிப்பான்? என் அம்மா மட்டும் இருந்திருந்தால் இவன் இப்படி அடித்திருக்க முடியுமா? எவ்வளவு சுயநலக்காரன்? சீ..இவன் சங்காத்தமே வேண்டாம்...

தமையன் அடித்ததை அவள் அப்பாவிடம் சொல்லவில்லை.

“மஞ்சு ஏன் உன் கன்னம் வீங்கி இருக்கு?” என்று பதறிப் போய் சம்பத் கேட்டபோது மஞ்சு பேசாமலிருந்தாள். செல்விக்கு பாவமாக இருந்தது. அவளே சொன்னாள்.

“மாமா...எல்லாம் என்னால் தான். அவளுக்கு நான் இங்கிருப்பது பிடிக்கலே. நான் திருந்த மாட்டேன்னு நினைக்றா. குழந்தையை அழிச்சிட சொன்னா....அதான் அவர் அடிச்சிட்டார்...”

“டேய் சரவணா...நான் இருக்கும்போதே என் மகளை இப்படி அடிக்கிறியே உனக்கு புத்தி கெட்டுப் போச்சா? நீ வேணா தனியா போயிடு...தாயில்லாப் பிள்ளையை அடிக்க எப்படி மனசு வந்தது?”

அப்பா இப்படி சொல்வார் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை.

“ரொம்ப சரி...செல்வி கிளம்பு நாம தனியா போயிடலாம். என் ப்ரெண்டு வீடு காலியாத் தான் இருக்கு. ஆள் பார்க்கச் சொல்லியிருந்தான். நான் அங்கு போனால் சந்தோஷப்படுவான்....மூட்டையை கட்டு...”

செல்வி திரு திருவென்று விழித்தாள். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் ஆச்சே. தனியாகப் போய் என்ன செய்ய? அவளுக்கு ஒழுங்காக சமைக்கக் கூட தெரியாதே....

”அதெல்லாம் வேண்டாமுங்க. நான் தப்பு செய்தேன். அவ சின்னப் பொண்ணு ஏதோ சொல்லிட்டா...அதுக்காக நாம மாமாவை விட்டு...செல்விக்கு கல்யாணம் ஆவது வரை நாம் இங்கு தான் இருக்கணும். நான் திருந்திடுவேன்...”

“பேசாதே...நமக்கும் ரோஷம் இருக்கு. மகளை கண்டிக்க முடியலை...என்னை குத்தம் சொல்றார்...”

“டேய்...ஒரு பேச்சுக்கு சொன்னேன். போகாதேடா...ப்ளீஸ் டா...” சம்பத்தின் கெஞ்சலை ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டபடி சரவணன் தன் மனைவியுடன் வெளியேறினான். வாழ்க்கை அவனை விட்டு வெளியேறப்போகிறது என்று தெரியாமல்..கோபம் ரோஷம் எல்லாம் குடும்பத்தில் பெரிசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவனுக்கு யார் சொல்வது?



மழை விழும்.
 
Top