முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள்.
அத்தியாயம்---9
அந்தப் பெண்ணின் கண் என்னும் கண்ணாடியில் மூன்று முகங்கள் தெரிகிறது. ஒரு முகத்தில் அமுதம் வழிகிறது. ஒரு முகத்தில் முகவரி தெரியா குழப்பம் தெரிகிறது.. ஒரு முகத்தில் தீப்பெட்டி நுனி நெருப்பு தெரிகிறது. மூன்றையும் பார்த்து ஒரே மாதிரி பட்டு போல் சிரிக்க ஒருத்தியால் முடியும் என்றால் அது கனிகாவால் மட்டும் தான் முடியும். ஆம் வந்தது அவள் தான். அவள் கண்ணென்னும் கண்ணாடியில் சம்பத், சரவணன், மஞ்சு தெரிந்தார்கள்.
“எப்படி இருக்கீங்க?” என்ற வரவேற்பு சொற்களை உதிர்த்துவிட்டு உதிராத புது மலர் போல் நின்றாள் கனிகா.
“உள்ளே வாம்மா..” சம்பத்.
“யார் நீ?” சரவணன்.
“எதுக்கு வந்தே?” மஞ்சு.
கனிகா வந்ததும் கடவுள் நமக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்து விட்டார் என்று நினைத்தார் சம்பத். புது தலைவலி என்று உறுமிக் கொண்டான் சரவணன். புது நாடகம் ஆட வந்திருக்கிறாள் என்று குமைந்தாள் மஞ்சு.
“ஆகாய கங்கை பண்ணிய லூட்டியில்...எங்க வீடு க்ளோஸ். வேறு வழி இல்லை அதான் சாரை பார்க்க வந்தேன்....”
மழை...கஜா புயல்...வெள்ளம்...கண்ணீர்.....மக்கள் அவதி எல்லாம் தான் நாளிதழ்கள் பத்தி பத்தியாக வெளியிட்டதே!. டி.வி சாணல்கள் படம் படமாக காட்டியதே! இது என்ன சத்திரமா என்று நாக்கு நுனி வரை வந்த சொற்களை உள்ளே தள்ளினான் சரவணன். பாவம் வீடின்றி அடைக்கலம் தேடி வந்திருக்கிறாள். விரட்டுவது மனிதாபிமான செயலாகுமா?
“என்னாச்சு? உள்ளே வாங்க. அப்பா...இவங்களை உங்களுக்குத் தெரியுமா?” கேட்டான் சரவணன்.
“தெரியும்ப்பா...முன்னே ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வரும்போது இவங்க கிராமத்துக்கு கிட்டே தான் வண்டி நின்னுடிச்சு. இவங்க வீட்டிலே சாப்பிட்டோம். அதுக்குள்ளே தான் சீத்தாம்மா வரலைன்னு போன் வரவும் வந்திட்டோம்...இவங்க பேர் கனிகா. ரொம்ப சூப்பரா சமைப்பாங்க...இட்லி கடை வச்சிருந்தாங்க...என்னாம்மா ஆச்சு?” என்றார் சம்பத்.
கனிகா உள்ளே வந்து சோபா அருகில் தரையில் உட்கார்ந்தாள். கையில் வைத்திருந்த சிறு மூட்டையை அருகில் வைத்தாள்.
“என்னவோ சாமி...உயிர் பிழைச்சு வந்ததே பெரிசு. எங்க பக்கத்தில் வெள்ளம் இடுப்பு வரை வந்திடுச்சு. என் இட்லி பாத்திரம். அடுப்பு...கொஞ்சம் மளிகை சாமான்...சில தட்டு முட்டு பாத்திரங்கள் எல்லாத்தையும் உருட்டிக்கிட்டு போயிடுச்சு. சுவர் இடிந்து விழுந்திடுச்சு. நான் மட்டும் தான் மிஞ்சியிருக்கேன்.” அவள் எதுவுமே நடக்காதது போல் சிரித்தாள்.
சிரித்துக் கொண்டே அவள் சொன்னதை கேட்டு சரவணன் ஆச்சர்யப்பட்டான்
“என்னம்மா..இவ்வளவு சுலபமா சொல்றே? அப்புறம் உன் வியாபாரம் என்னாவது? எப்படி பிழைக்கப் போறே?”
“சாமி.... இங்கே ஒரு பள்ளிக்கூடத்தில் சத்துணவு சமைக்க ஆள் வேணுமாம். எனக்கு அடிச்சுது சான்ஸ். முன்னே கூபிட்டாங்க...நான் தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு போக பிடிக்காம மாட்டேன்னு சொன்னேன்.. இப்ப வேறு வழி இல்லை....வந்திட்டேன். அடுத்த வாரம் அங்கு போயிடுவேன். அதுவரை கொஞ்சம் ஒன்டிக்க இடம் கிடைக்குமா சாமி?”
அந்த முகம் கொஞ்சம் கவலை காட்டியது. ஆனால் அதையும் மீறி ஒரு புன்னகை வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து முகத்தை அலங்கரித்தது. அழகு எங்கெல்லாமோ கொட்டிக் கிடக்கிறது! எல்லோருக்குமா அது தெரிந்துவிடுகிறது?. நாம் தான் அதை கண்டுபிடிக்க வேண்டும்.
“உங்களையெல்லாம் பார்த்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சாமி. புயல் வந்தது கூட ஒரு நல்லதுக்குத் தான் இல்லேன்னா உங்களை எல்லாம் பார்க்கற கொடுப்பினை கிடைச்சிருக்குமா?” சர்வ சாதாரணமாக சொன்னாள்.
மஞ்சு இன்னும் ஒன்றும் பேசவில்லை. அவளுக்கு இவள் வருகை பிடிக்கவில்லை என்று தெரிந்தது. பேச்சுக் குரல்கள் கேட்டதும் உள்ளிருந்து ஆஷா வந்தாள். அவள் முகத்தில் சின்ன கலவரம்.
“தாத்தா யாரு? சீத்தாம்மா குரல் மாதிரி இருக்கு?”
“பாப்பா...நாந்தான்மா கனிகா. ராமனோட சீதை இல்லை. ராமனோட ஹனுமான். என்ன உதவி வேணும் கேள்?”
ஆஷா குரல் வந்த திசை நோக்கி வந்தாள். கனிகா எதிரில் வந்து நின்றாள். கனிகா எழுந்து ஆஷாவின் கன்னத்தை வழித்து நெற்றியில் சொடுக்கிக் கொண்டாள். “எம்பூட்டு திருஷ்டி? ஏஞ்சாமி உங்க பேத்தியா? இதும் முகத்தை பார்த்திட்டே இருக்கலாம் போலிருக்கே! கண் நிரஞ்ச பேத்தி..”
“ஆனா..கண் தெரியாத பேத்தி..” என்றாள் ஆஷா. ஒரு நிமிஷம் கனிகா எதுவும் பேசவில்லை. பிறகு மெல்ல சொன்னாள்.
“பாப்பா...இழந்ததை நினைக்கக் கூடாது. இருக்கறது எவ்வளவு அழகுன்னு நினைக்கணும்...நமக்கு உள்ளாற ஒரு கண்ணு இருக்கு...எல்லாருக்கும் அது தெரியாது. உனக்கு தெரியும். அதை நினச்சு பெருமை படும்மா.”
ஆஷா முகம் மலருவதை மூவரும் பார்த்தனர்.
“எனக்கு இந்த நாள் இனிய நாள் தாத்தா. உங்க பேர் என்ன?”
“கனிகா..பிடிச்சிருக்கா?”
“பிடிச்சிருக்கு. அஞ்சனா நேத்து போயிட்டா. அவங்க வீட்டிலே வந்து கூட்டிட்டுப் போயிட்டாங்க. அவ பேரு கூட எனக்கு பிடிக்கும்.”
“ம்ம்ம்ம்...ரொம்ப சந்தோஷம்...”
சரவணன் கனிகா ஒரு பொக்கிஷம் என்று நினைத்தான். இவளின் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் ஒரு பாதை போகிறது. அது தான் அவளின் தனித் தன்மை. நாம் உலகெங்கும் நிம்மதியை தேடினாலும் அது கிடைக்காது. அது நம் நெஞ்சில் முதலில் வரவேண்டும். இன்று சரவணன் மனதில் நிம்மதி வந்தது. சில பேரை பார்த்தாலே பிடித்துவிடும். அவனுக்கு கனிகாவை பிடித்துவிட்டது. ஏதோ ஒரு தெம்பு வந்தது.
“அப்பா.....இந்த கனிகா இங்கேயே இருக்கட்டுமப்பா. ஆஷாவுக்கு துணையாக.”
“ஆஷாவுக்கு துணையாகவா இல்லை உனக்கா?” என்று கொஞ்சம் குறும்புடன் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள் மஞ்சு. ச்சே..என்று சொன்னான் சரவணன்.
கஜா புயலுக்கு அந்த வீடே நன்றி சொல்லவேண்டிய நிலையில் இருந்தார்கள். கனிகா அந்த வீட்டின் இன்றியமையாதவள் ஆகிவிட்டாள்.
கனிகா இந்த உலகத்தில் ஒரு சிறு புள்ளி. ஆனால் ஆஷாவுக்கு அவள் தான் உலகம் என்றாகிவிட்டது. அந்த வீட்டின் வலது கையாக கனிகா மாறிப் போனாள். எல்லாம் ஒரே மாதத்தில் நடந்த அதிசயம். இதுவரை எல்லோரும் ஏதோ ஒரு இருட்டு குகையில் சிக்கிக் கொண்டது போல் இருந்தார்கள். அந்த குகையிலும் நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்று கற்றுக் கொடுத்தாள் கனிகா. அவள் கலகல பேச்சில் அவர்கள் வலி மறந்தார்கள். சிரிப்பை கொண்டு வந்தாள்.
“உங்களுக்கெல்லாம் இதுவரை இருந்தது மோசமான நாட்கள் தான். மோசமான வாழ்க்கை இல்லை....சும்மா முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதீங்க. ஆண்டவன் மனுஷப் பிறவிக்கு கொடுத்திருக்கிற கொடை சிரிப்பு தானே? சாமி என்ன நான் சொல்றது?” கனிகா பேச்சு கல்கண்டு ஆனது.
சம்பத் சொன்னார். அவர் குரலில் உற்சாகம் .“கருணை என்பது பனிக்கட்டி மாதிரியாம்...பனிக்கட்டி விழும் இடமெல்லாம் அழகு தான்.. கருணையும் அது போலத் தான். அது தொடும் இடமெல்லாம் அழகு தான். உன் கருணை அப்படிப்பட்டது.
வாய் விட்டு சிரித்தாள் கனிகா. நவகிரகங்கள் மாதிரி வேறு வேறு திசை பார்த்து ஓடிக் கொண்டிருந்த அந்த வீட்டு மனிதர்கள் இப்பொழுது கனிகா சுற்றிய தங்க நூல் வேலியால், தொடுக்கப்பட்ட பூச்சரம் ஆனார்கள்.
வாசலில் பேருக்கு நாலு கம்பிகளை இழுத்துவிட்டுப் போகும் பொன்னம்மாவை அன்பாக அதட்டி அழகழகான கோலம் போட வைத்தாள் கனிகா.
“வீட்டோட லட்சணத்தை காப்பாற்றுவது கோலம் தான். இப்படி நார் நாரா கோலம் போட்டா உன் லட்சணம் என்னென்னு தெரிஞ்சிடும். பூப் பூவா கோலம் போடு தாயி...” கனிகாவின் குரல் வெண்ணை மாதிரி வழுக்கிக் கொண்டு போகும். கிருஷ்ணர் வாரி வாரி தின்ற வெண்ணையில் கணிசமாக இவளுக்கும் கொடுத்திருப்பாரோ? என்று மஞ்சு எண்ணினாள்.
காலையில் சூடாக. பொன்னிற மதுரமான காப்பி. முதல் கப் அவள் குடித்துவிடுவாள். பிறகு எல்லோருக்கும் அவரவர்கள் எழுந்து கொள்ளும் நேரம் பார்த்து கலந்து கொடுப்பாள். ஆஷா கத்துவாள்.
“சீத்தாம்மா...எனக்கு பல் தேய்த்துவிடு...இட்லி ஊட்டிவிடு. குளிப்பாட்டி விடு. டிரெஸ் போட்டு விடு...”
“நீ என்னை சீத்தாம்மான்னு கூப்பிடாதே. நான் உன் சீத்தாம்மா இல்லை. கனிகான்னே கூப்பிடு. நான் உனக்கு உன் சீத்தாம்மா மாதிரி குழந்தைக்கு செய்வது போல செய்யமாட்டேன். உன் வேலையை நீ செய்ய கத்துக்கணும். உனக்கு பயிற்சி கொடுக்கிறேன்...” என்றாள் கனிகா.
ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள் ஆஷா.
“கனிகா..ப்ளீஸ். அவ கத்தல் தாங்காது. கொஞ்சம் அவள் ஜோலியை முடிச்சிட்டு நீ எங்களை கவனிச்சாப் போதும்.” என்றாள் மஞ்சு.
“மஞ்சு...நீ பேசாம இரு. நான் பார்த்துக்கிறேன்...”
நாலு நாள் அழது ஆர்பாட்டம் செய்தாள் ஆஷா. கனிகா சட்டை செய்யவே இல்லை. பிறகு மெல்ல அவளை அவளே கவனித்துக் கொள்ளும் வித்தையை கற்றுக் கொண்டாள்..
“ஆஷா...உன் இஷட்டப்படி செய். அது உனக்கு சுதந்திரம். நீ எது செய்வதானாலும் விரும்பி செய். அது தான் உனக்கு சந்தோஷம். புரியுதா? நான் உனக்கு உதவி செய்வது உனக்கு சந்தோஷம் கிடையாது. நீயே செய் அது உனக்கு தன்னம்பிக்கையைத் தரும்...”
ஆஷா தானே எழுந்து பல் தேய்க்க ஆரம்பித்தாள். தானே குளித்தாள். கனிகா எடுத்து வைத்த உடைகளை தானே உடுத்திக் கொண்டாள். தானே சாப்பிட்டாள். “எனக்கு கண் வந்திடுச்சு...கண் வந்திடுச்சு. நானே செய்றேன்..”
எவ்வளவு அழகான சொற்கள்! தன்னால் எல்லோரையும் போல் செய்ய முடிகிறது என்பதை அவள் சொல்லிய விதம் அவளை அபூர்வ குழந்தையாக்கியது. அன்று வீடே குதூகலித்தது. சம்பத் எவரெஸ்ட் உச்சியை அடைந்தது போல் உணர்ந்தார். ஆஷாவுக்கு வெறுமனே உட்கார்ந்து இருப்பது தான் தண்டனை. கண் தெரியவில்லை என்பது தண்டனை இல்லை. இப்பொழுது அவளுக்கு செய்வதற்கு ஏதோ இருக்கிறது. அதை விரும்பி செய்கிறாள். அவளிடத்தில் நம்பிக்கை துளிர் விடுகிறது. என்ன ஒரு மாற்றம்?
சம்பத் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேத்திக்கு புத்தகங்கள் படித்துக் காண்பித்தார். ராமனின் கதை, மகாபாரதக் கதை. நாயன்மார்கள் கதை, திருக்குறள் என்று சிறுமிக்கு ஏற்றாற் போல் சொல்லியிருக்கும் புத்தகங்கள் வாங்கி வந்து விட்டார். ஆஷா இதை பெரிதும் விரும்பினாள். சுட்டி விகடன்...அம்பிலி மாமா போன்ற குழந்தைகள் இதழ்களிலிருந்து கதைகள் படித்துக் காட்டுவார். ஆஷா சில சமயம் அவளே கதைகள் புனைந்து சொல்வாள். ஒரு குட்டி ஆகாயம் போல் அவள் விரிந்த விதம் கனிகாவால் தான்.
“தாத்தா உனக்கு சொன்ன கதைகளை எனக்கு சொல்லு.” என்று கேட்டு ஆஷாவின் ஆர்வத்தை
அதிகப்படுத்துவாள். சம்பத்துக்கு அதிகம் சொல்லவேண்டியதில்லை அவர் இயல்பிலேயே உற்சாகமானவர். மயானத்தில் கூட மலர்ச்சியை தேடுபவர். இப்போ தாத்தாவும் பேத்தியும் சொர்கத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அடுத்து சரவணன். எதையோ தொலைத்துவிட்ட மாதிரி அதிருப்தியோடு வாழ்கிறவன்.
“சின்ன சாமி...உங்களுக்கு பாவக்காய் பிடிக்குமா?”
“என்ன கனிகா பழி வாங்க முடிவு பண்ணிட்டியா?”
“இல்லே சின்ன சாமி...பாவக்காய் புளிக் குழம்பு வைக்கலாம்னு...ரொம்ப ருசியா இருக்கும். கசப்பே தெரியாம செய்து தரேன்.”
“வேண்டவே வேண்டாம். அப்படி செய்து நீயே சாப்பிடு. இங்கே யாருக்கும் பாவக்காய் பிடிக்காது.” திட்டவட்டமாக கூறினான் சரவணன்.
“கசப்பு சாப்பிட பிடிக்காது, ஆனா கசப்பை பத்தி யோசிக்கப் பிடிக்கும். என்ன நியாயம் சாமி இது? இனிப்பா யோசியுங்களேன். மகளின் புத்திசாலித்தனம். அழகு, வெடிவெடியான பேச்சு. இதெல்லாம் ரசிக்கக் கூடாதா?”
“என்ன இருந்து என்ன பிரயோசனம் கண் இல்லையே. அந்த பாவி இப்படி குழந்தையை குருடாக்கிட்டுப் போயிட்டாளே.”
“இருபத்திநாலு மணி நேரமும் இதையே யோசி சாமி விளங்கிடும்.”
அன்று சாப்பாட்டு மேஜையில் அறுசுவை உணவு தாயாரித்து பரிமாறினாள்.
“ஹை....பருப்பு பாயாசம்...எனக்கு ரொம்பப் பிடிக்கும்” ஆஷா
“இது என்ன புது விதமான பச்சடி? நெல்லிக்காய் பச்சடி...” இது சரவணன்
“எனக்கு இந்த புளிப்பு மாங்காய் கூட்டு தான் பிடிக்குது.” மஞ்சு
“என் சாய்ஸ் பாவைக்காய் புளிக் குழம்புதான்.” இது சம்பத்.
“எனக்கு காரமான பாருப்பு பொடி பிடிக்கும்.” கனிகா.
“உவர்ப்பு சுவை தான் உப்பாச்சே. ஆக கனிகா அறுசுவை உணவு பண்ணியிருக்கா....இதிலிருந்து என்ன தெரியுது.? இந்த எல்லா சுவையும் நம் உடலுக்குத் தேவை. வாழ்கையிலும் இந்த ஆறு சுவைகளும் வரும். துன்பம் இன்பம், அழுகை, சிரிப்பு, அயர்ச்சி, மௌனம்...எல்லாம் தான் வாழ்க்கை.”
“ப்பா...போதும் கிளாஸ் எடுக்காதீங்க நாங்க என்ன ஆஷாவா? அவளுக்குத் தான் தனியா பாடம் சொல்லித்
தறீங்களே...எங்களுக்குமா?”
“போதும் சண்டை...இன்று எல்லா சுவையும் சமச்சிருக்கேன் சாப்பிடனும். நாளையிலிருந்து ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சுவை. பாவக்காய் கண்டிப்பா உண்டு. சின்ன சாமி...பெரிய சாமி...மஞ்சு...ஆஷா புரிஞ்சுதா?”
“நல்லாவே புரிஞ்சுது. ஒரு பழமொழி இருக்கு. திட்டி கெட்டாரும் இல்லை. வாழ்த்தி வாழ்ந்தாரமில்லை. ஒருத்தரோட சாபம் பலிக்கும்னு சொல்லமுடியாது. ஒருத்தரோட வாழ்த்தும் பலிக்கும்னு சொல்லமுடியாது. எது வந்தாலும் அது வாழ்க்கையில் அதுவும் ஒரு சுவைன்னு கடந்து போகணும். இது தானே இன்னிய மெசேஜ் சாப்பாட்டு மூலமா? கனிகா நீ சத்துணவு சமைக்க சரியான ஆள் தான்.” என்று சொல்லி சிரித்தான்.
எல்லோரும் சிரித்தனர். ரொம்ப நாளைக்குப் பிறகு அந்த வீட்டில் மனம் திறந்த சிரிப்பு சத்தம் கேட்டது.
கனிகா வானத்தை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அந்த வீட்டுக்கு வந்து ஆறு மாசம் ஆகிவிட்டது. இந்த குடும்பத்தில் உள்ள தலைவி மறைந்து போனதால் எல்லோரும் தனித் தனி தீவுகளாக இருந்தனர். ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொண்டும், விலகிக் கொண்டும், அடுத்தவரை குற்றம் சொல்லிக் கொண்டும், ஒரு சின்ன நரகத்தை உருவாக்கி இருந்தனர்.
கனிகா அதை புரிந்துகொண்டாள். முதலில் நிறைய அவமானப்பட்டாள். மஞ்சுவின் ஏளனப் பார்வை...ஆஷாவின் பிடிவாதம். சின்ன சாமியின் விரக்தி..பெரிய சாமியின் பலமில்லாத சேர்த்து வைக்கும் முயற்சி....அந்த முயற்சிக்கு அவள் கைகொடுத்தாள். கையை உதறினார்கள். கையை ஒடுக்கினார்கள். நீட்டிய கையை அவள் மடக்கவில்லை. மெல்ல கையை பற்றினார்கள்.
“நம் வேலை முடிந்தது...இனி சத்துணவு கூடத்துக்கு போகவேண்டியது தான். அவர்கள் தள்ளி விடுவதற்கு முன் நாமே போய்விடுவது தான் உத்தமம்...”
உன்னால் இதையெல்லாம் எப்படி செய்ய முடிந்தது? ஏன் நீ இவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ண வேண்டும்? உனக்கு கவலைகள் இருக்கு...துன்பம் இருக்கு...வறுமை இருக்கு..எல்லாம் தாண்டி அவர்களின் நன்மைக்கு ஏன் நீ போராடின?----இத்தனை கேள்விகளை அவளே அவளுக்குள் கேட்டுக் கொண்டாள்.
“மனுஷங்களை நேசிப்பதால்...” என்ற ஒற்றை வரி தான் பதிலாக அவள் மனம் சொல்லிற்று. சக மனுஷரை சந்தோஷப்படுத்துவதில் தான் நம் சந்தோசம் அடங்கி இருக்கிறது. இந்த எளிய தத்துவம் சுயநலம் பிடித்தவர்களுக்கு தெரியவே தெரியாது. கனிகா திருக்குறள் படிக்கவில்லை. திருக்குறளாகவே வாழ்கிறாள். அவள் மனம் பளிங்கு போன்றது.
நட்சத்திரங்கள் மினுக்கி முடிந்து, மறுநாளின் சூரியன் பொன் முகம் காட்டிய போது சம்பத்துக்கு ஒரு போன் வந்தது.
“நான் டி.எஸ்.பி ஷாந்தா ராம் பேசறேன். செல்வி உங்க மருமகளா? அவள் உங்களை பார்க்கணும்னு சொல்றா.” பதில் சொல்லாமல் அவர் போனை வைத்துவிட்டார்.
“கனிகா...செல்வி பார்க்கணும்னு சொல்றா...நீ என்ன சொல்றே?”
“பெரிய சாமி..இனிமே நீங்க தான் முடிவு எடுக்கணும். நான் போகும் நேரம் வந்துவிட்டது. உரியவரிடம் ஒப்படைத்துவிட்டுப் போறேன்.”
போறாளே பொன்னுத் தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு…… சரவணனின் மொபைலிலிருந்து பாட்டு ஒலித்தது.
மழை விழும்