அத்தியாயம் 2
கார்த்திக் வார்த்தையில் இருந்த கோபத்தை விட அவன் கூறிய விஷயத்தில் இருந்த உண்மை அங்கே இருந்தவர்களை வாயை அடைக்கச் செய்தது!!!
கார்த்திக்கின் சகோதர, சகோதிரிகளின் திடீர் திருமணம் அனைவரையும் அதிர்ச்சி உள்ளாக்கியது என்றால் அவனின் திருமணமோ அசர வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்!!!
மும்பையில் ஆர்யா ப்ளே பாய்யாக திரிந்துக்கொண்டு இருந்த காலத்தில் ஏதோ ஒரு ஹிந்தி நடிகையை இழுத்துக்கொண்டு வரப்போகிறான் என்று எல்லோரும் எதிர்பார்த்த வேளையில், தன் தாய் மாமனின் மகளை மணந்து அதிர்ச்சிக் கொடுத்தான் என்றால்… தாய் சொல்லைத் தட்டாத சமர்த்து பிள்ளையாகப் பரிமளித்த இரண்டாமவன் பத்ரி… தனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாது நடிகையை மணந்து அதிர வைத்தான்!!
இவர்கள் தான் இப்படி என்றால் இரட்டையர்கள் அதற்கு ஒரு படி மேல்!!!
பெயரைக் கேட்டாலே இரத்த ஆறு ஓடும்படியாக சண்டையிட்டுக் கொள்ளும் சங்க மித்ராவும், பத்ரியின் தோழனும், தொழிலில் பங்கு தாரருமான சித்துவிற்கும் காதல் என்ற அதிர்ச்சியில் இருந்து வெளி வரும் முன் சுனாமி பேரலையாக மேக மித்ராவுடன் ரஃபிக்கிற்குத் திருமணமே முடிந்திருந்தது!!!
இந்த நான்கு ஜோடிகளும் யாருமே எதிர்பாராது ஓன்று சேர்ந்து அதிர வைத்த தம்பதிகள் என்றால்… கார்த்திக் அசர வைத்த காரணம் யார் மணப்பெண் என்பதில் இல்லை… அவர்கள் திருமணம் நடந்த முறையால்!!!
தன் உடன் பிறப்புகளைப் போல் வாழ்க்கைத் துணையைச் சேர்ந்து எடுப்பதில் கார்த்திக்கிற்கு எந்த குழப்பமும் இருந்ததில்லை… கேட்கப் போனால் கார்த்திக் போல் மிக தெளிவாக முடிவு எடுத்தவர்கள் அந்த குடும்பத்தில் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தன் பதினெட்டாவது வயதிலேயே அவனை விட கிட்டதட்ட ஆறு வயது சிறியவளான நிரல்யாவை கையைக் காட்டி இவளைத்தான் மணக்கப் போவதாக எந்த வித தயக்கமும் இல்லாது பகிரங்கமாக தெரிவித்தவன், சொன்னப்படியே அவளின் பதினெட்டாவது வயதில் அண்ணன் பத்ரிக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே சச்சிதேவ்வின் குல தெய்வமான காளி கோயிலியில் தம்பிக்காரன் மணந்தான்!!!
ஊர் உலகத்திற்கு அவனுக்குச் சென்ற மாதம் நடந்த திருமணத்ததைப் பற்றி தான் தெரியுமே தவிர… சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே… அவர்களுக்குத் திருமண ஆன விஷயம் குடும்ப அங்கத்தினரை தவிர வெளியே யாரும் அறிய மாட்டார்கள்!!!
“அன்று நடந்த திருமணத்தை சேது ராமன் ஏற்பதாக இல்லை என்னும் போது அதைப் பற்றி எதுக்குடா பேசற?” என்று சாவகசமாகக் கேட்டு ஒரு குண்டைக் கொளுத்திப் போட்டார் தாத்தா.
இந்த மனுஷன் இரத்த கரை படியாது ஓய மாட்டேன் என்று சபதம் எடுத்துவிட்டு உட்கார்ந்த மாதிரி வந்ததில் இருந்து கார்த்திக்கின் வாயைப் பிடுங்கிக்கொண்டு இருக்கிறாரே என்று நாட் நாட் செவன் முறையோ முறை என்று தாத்தாவை முறைக்க...
கொளுத்திப் போட்டதோடு தன் வேலை முடித்து விட்டது என்ற நினைப்பில் தாத்தா குனிந்த தலை நிமிராது கருமே காரியமாக தட்டில் இருந்த பூரியை கபலிகரம் செய்வதில் முழு மூச்சையாக இறங்க, பாட்டியின் முறைப்பிற்கு எந்த பலனும் இல்லாமலே போனது.
எப்படி வெடித்து சிதற போகிறானோ என்று ஆளாளுக்குக் கலவரத்துடன் மூஞ்சியைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க..
“நிரல்யாவின் பெற்றவர்களின் முன்னிலையில் நம் குடும்பம் புடை சூழ முறையாக காளி கோயிலில் நடந்த கல்யாணத்தை இவர் ஏற்பதைப் பற்றியோ மறுப்பதைப் பற்றியோ எனக்கு என்ன வந்தது?” என்றான் மித மிஞ்சிய அலட்சியத்துடன்.
அஞ்சியது போல் வெடித்து சிதராது மிக லேசாகவே பதில் சொல்லியது கண்டு வீட்டு மனிதர்கள் சத்தமில்லாது நிம்மதி பெரு மூச்சு விடும் போதே..
“ம்ம்ம்.. காளி கோயிலில் பூஜை இருக்கு என்று கூறி உடம்பிற்கு முடியாமல் படுத்திருந்த தேவகியை பிடிவாதம் பண்ணி இழுத்து வந்தோடு கல்லூரிக்குப் புறப்பட்டுக்கொண்டு இருந்த நிரல்யாவை அம்மாவோடு துணைக்கு வா என்ற அழைத்து வந்தவர்… வந்த இடத்தில் சின்ன மகளை கன்னிகாதானம் செய்து வைப்பார்... அதுவும் பெண்டாட்டி கிழித்த கோட்டை தாண்டாத பாண்டியன் தன் மனைவிக்குக் கூடச் சொல்லாது இப்படி ஒரு கல்யாணத்தைச் செய்வார் என்று கனவில் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்” என்று அன்றைய நிகழ்வை அசைப்போட்டார் தாத்தா.
நேற்று பார்த்த நபரின் பெயரை மறந்து விட்டு திருதிருக்கு இந்த மனுஷனுக்கு ஐந்து வருஷத்திற்கு முன்னாடி நடந்த விஷயத்தை எப்படி அக்கு வேறு ஆணி வேறாக சொல்கிறார் என்று மனதில் புலம்பினார் நாட் நாட் செவன்!!!
“அவர்கள் வீட்டில் சொல்லாதது என் மாமனார் செய்த தப்பு… இதில் எனக்கு என்ன சம்பந்தம் இருக்கு??” என்று நிரல்யாவின் தந்தையைப் பற்றி கூற… அந்த சூழ்நிலை மேலும் மோசமானது தான் மிச்சம்….
ஏன் என்றால் அங்கே இருக்கும் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும் நிரல்யாவிற்கு தந்தை மேல் அளவு கடந்த பாசம் உண்டு!!!
எதுவரை என்றால் கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தவளைக் கோயிலுக்கு அழைத்து வந்து கையோடு அங்கே ஏற்பாடாகி இருந்த மணமேடையில் உட்கார் என்று தந்தை கையைக் காட்ட… மாப்பிள்ளை யார்? ஏன்?? எதற்கு? என்று ஒரு வார்த்தைக் கூட கேட்காது பூஜைக்காக உடுத்தி வந்திருந்த பட்டு புடவையோடு மணமேடை ஏறி அமர்ந்தவள் தான் நிரல்யா!!!
“இறைந்தவரைப் பற்றி தப்பா பேசாதே” என்றார் தாத்தா கண்டிப்பாக.
“உயிரோடு இருந்தாலும் இறந்தாலும் தப்பு தப்புதானே தாத்தா… அப்ப ஹிட்லரையும் முசோலினியும் ரொம்ப நல்லவங்கன்னு பேச முடியுமா??” என்று திருத்தமாகக் கேட்டு அங்கே இருந்தவர்களால் பதில் பேச முடியவில்லை.
அவர்களின் திருமனத்திற்கும் பிறகு நிரல்யாவின் முதலில் தாய் அடுத்து தந்தை ஒருவர் பின் ஒருவராக அதே ஆண்டில் இறைவன் அடி சேருவர் என்று யாருமே எதிர்பாரக்காத ஒன்று.
“தப்பு, சரி… நல்லவர், கெட்டவர்… என்பதை எல்லாம் தாண்டி அவர் நிரல்யாவுடைய அப்பா என்பது மறுக்க முடியாத உண்மை. உன்னை அவர் கழுத்தில் கத்தியை வைத்து மனமேடை ஏற்றவில்லை.. அதனால்…” என்று பத்ரி சமாளித்து பதில் அளிக்கும் போதே..
“அதனால்??!??” என்று பத்ரியை முறைத்தப்படி ஏட்டிக்குப் போட்டியாக கேள்வி கேட்ட கார்த்திக்.
“வீட்டில் மூத்த மாப்பிள்ளையான அவரிடம் சொல்லாமல் கல்யாணம் செய்தது என் மாமனார்... எதை கேட்க வேண்டுமானலும் அந்த ஆள் என் மாமனார் உயிரோடு இருக்கும் போதே கேட்டு இருக்க வேண்டும்.. அப்ப சும்மா இருந்து விட்டு... இப்ப அந்த ஆளின் வெட்டி வீராப்பை என்னிடம் காட்டினால்… அதை சகித்துக்கொண்டு போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று சரம் மாரியாக கேட்டவன் அத்தோடு நிற்காது...
“தாத்தா இன்னும் ஒரு முறை கல்யாண பேச்சே எடுத்தால்... இதை அவரிடம் சொல்லுங்க… நம் குடும்ப வழக்கப்படி நிரல்யாவின் பெற்றவர்கள் கல்யாணத்திற்கு வந்ததே அதிகப்படி. இதில் அவளுடைய அக்காவின் புருஷனைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்று நான் சொன்னதாக சொல்லிவிடுங்க” என்று சூடாக சொன்னான் கார்த்திக்.
“என்னடா இப்படி சொல்ற?? அப்போதான் அவசரத்தில் மூத்த மாப்பிள்ளையான அவரிடம் எதுவும் சொல்லாமலே கல்யாணம் நடந்து விட்டது... ஆனால் இப்போ அவர் தான் அந்த குடும்பத்தலைவர். இந்த சூழ் நிலையில் கூட இரவோடு இரவாக கழுத்தில் கத்தி வைக்காத குறையாக உங்க கல்யாணத்திற்கு சம்மதம் கேட்டா அவருக்கும் வருத்தம் இருக்காமலா போகும் சொல்லு??” என்றார் தாத்தா.
நாள் நட்சத்திரம் பார்த்து பத்திரிக்கை அடித்து, ஊரைக் கூட்டி கண்ணிற்கு முன் நடக்கும் சங்கியின் திருமண ஏற்பாட்டை ஊர் உலகம் பார்த்து நம்ப முடியாது திணற… யாரும் எதிர்பார்க்காது அதே மேடையிலேயே மேக மித்ராவின் திருமணமும் சித்தின் அண்ணனான ரஃபிக்கோடு நடந்ததே பேரதிர்ச்சி என்றால், டிவென்டி டிவென்டி மேட்சியில் பாலுக்கு பாலுக்கு நடக்கும் திருப்பத்தால் ரசிகர்கள் நகத்தைக் கடித்துக்கொண்டு... பி.பி ஏகிறி.. வேர்த்துக்கொட்ட… ஆட்டத்தை வேடிக்கை பார்ப்பது போல் கல்யாணம் மண்டபத்தில் கடைசி நிமிஷத்தின் அடுத்த திருப்பமாக சகோதிரிகளின் திருமண மேடையிலேயே சகோதரன் கார்த்திக்கும், நிரல்யாவுடன் மணமாக கூட்டத்தில் எத்தனை பேர் மயங்கி சரிந்தார்கள் என்ற கணக்கே இல்லை!!!
பின்னே.. ஒரு சச்சிதேவ் திருமணத்தைப் பார்க்க கூடிய உறவினர்களுக்கு… அடுத்தடுத்து மூன்று திருமணம் பார்க்க வைத்து விருந்தினர்களைத் தெளிய விட்டு, தெளிய விட்டு அதிர்ச்சி கொடுத்து மயக்கமிட்டு சரிய வைத்தனர் சச்சிதேவ் குடும்ப அங்கத்தினரையே சாரும்!!!
முதல் முறையாக அவனின் குரலில் ஆத்திரம் தலை தூக்க “ஏதோ அம்மாவும், பாட்டியும் பிடிவாதம் பிடித்ததால் அவரிடம் கேட்டோமே தவிர… என் பெண்டாட்டியை நான் எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப கல்யாணம் பண்ணிக்கொள்வேன்… அதற்கு எதுக்கு நான் அந்த ஆளிடம் பர்மிஷன் கேட்க வேண்டும்?!!”
“கார்த்திக்… சேது ராமனை உனக்குப் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பதைப் பற்றி யாரும் இங்கே கவலைப்படவில்லை… ஆனால் நிரல்யாவிற்காக” என்று பத்ரி பேசிக்கொண்டு இருக்கும் போதே.
“இதுநாள் வரைக்கு அந்த ஆளுடைய மூஞ்சியும் முகரகட்டையும் மாறாமல் இருப்பதற்குக் காரணம் நிரல்யாவிற்காக கூட இல்லை பத்ரி… வளவனிற்காக மட்டும் தான்” என்றான் கறாராக.
அவன் உதிர்த்த வார்த்தையின் பொருள் கார்த்திக் கோபக்காரனே தவிர மூடன் அல்லன் என்று அப்பட்டமாக நிரூப்பித்தது!!!
சேது ராமனின் இருமகன்களில் வளவன் மூத்தவன். பிறப்பில் இருந்து தன் சித்தி நிரல்யாவின் மேல் அபரிமிதமாக பாசத்தைப் பொழியும் சிறுவன்.
சந்தோஷமாக செல்ல வேண்டிய தேன்நிலவைப் பற்றிய பேச்சு எப்படி திசை மாறி கொலை வெறி வரைக்கும் சென்றது என்ற கேள்வி எழும் போதே அதற்கு முழு முதற்காரணமே தன் மணாளன் தான் என்பதை உணர்ந்த போதும் செய்வதறியாது அமர்ந்திருந்தார் பாட்டி.
“தெரியாமல் தான் கேட்கிறேன் நான் என்ன தாத்தா மாதிரி இரவோடு இரவாக மேல் கூரையைப் பிரித்து குதித்து பாட்டியை தூக்கி வந்தா திருட்டுத்தனமாக தாலியைக் கட்டினேன்???. உங்க எல்லோர் முன்னாடியும் தானே கட்டினேன்?? அந்த ஆள் யார்?? என் திருமணத்தை ஏற்பதற்கும் ஏற்காமல் போவதற்கும்…” என்று அவனின் பாணியில் முகத்தில் அடித்த மாதிரி கேட்டான்.
இந்த சந்தர்ப்பத்தை விட்டால் தாத்தா மீண்டும் ஏதாவது பேசி அடுத்த குண்டை தூங்கி போடும் முன் அவரை வாயை அடைக்கும் விதமாக…
“இருந்து இருந்து ஏன்டா அந்த கதையை ஞாபகம் படுத்துகிறாய்?? கூரை பிரித்து குதித்து என்னை தூங்குவதற்கு பதில் அக்காடன்னு தூங்கிக்கொண்டு இருந்த என் தாத்தாவைத் தூக்கிக்கொண்டு ஓட.. எங்கே இருட்டில் அவருக்குத் தாலியை கட்டித் தொலைக்க போகிறோறோ என்ற பயத்தில் நானா அவர் பின்னாடி ஓடி போய்க் கல்யாணம் செய்துக்கொண்டேன்…” என்று அங்கலாப்பாய் முடித்தார் பாட்டி!!!
இதை ஒரு நாளைக்கு ஒன்பது தரம் பாட்டி சொல்லும் அரத பழசான கதை தான் என்றாலும் கூட, ஏனோ அதை பாட்டி ஒவ்வொரு முறை சொல்லும் போதும் சிரிப்பு பொங்குவதை யாராலும் அடக்க முடியாது!!!
எப்பொழுதும் போல் அனைவர் முகத்திலும் புன்னகை தவழந்தது…… ஆனால் அந்த புன்னகைக்கு ஆயுசு கம்மி என்னும் விதமாக தன் தலையை ரோஷத்துடன் நிமிர்ந்த தாத்தா…
“இன்னும் ஐந்து வருஷத்தில் நமக்கு சஷ்டியபப்த பூர்த்தியே வந்துவிடும் இதையே எத்தனை ஆண்டு இதே பழசான கதை சொல்லுவ??” என்று செப்பியவர்.. “இனிமே டிரெண்டியா.. கார்த்திக் நீயும் சித்தை கடத்தி வர ப்ளான் போட்டு, கடைசியில் அவன் அண்ணனை ரஃபிக்கை கடத்தி வந்தது பற்றி சொல்லேன்….” என்றார் வக்கணையாக.
கார்த்திக்கின் பேச்சு தான் கரடு முரடாக இருக்குமே தவிர குடும்பம் என்று வந்துவிட்டால் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவன்!!!
தன் தங்கை சங்கியும் சித்தும் காதலிக்கிறார்கள், ஆனால் ஏதோ காரணத்திற்காக அவளை ஏற்க சித் மறுக்கிறான் என்பதை அறிந்தவுடன் அவனைக் கடத்தி வந்தாவது சங்கியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு வலை விரிக்க…
விசித்திரத்திலும் விசித்திரமாக அவனிற்கு பதில் சித்தின் அண்ணன் ரஃபிக் தானாக வந்து அந்த வலையில் மாட்டினான்!!!.
அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று ஊகிக்கும் முன்னே கடத்தி வரப்பட்ட ரஃபிக் தம்பியின் கல்யாணத்திற்கு முழுமனதுடன் சமத்தித்தவன், உங்கள் முறைப்படி காளி கோயிலிலேயே செய்யலாம் ஆனால் அது ஊரைக் கூட்டித்தான் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் நவாப் முறைப்படி ஹைத்திராபாத்தில் தனியாக திருமணம் செய்துக்கொள்வதாக சொல்ல எப்படியோ சங்கி விரும்பியவுடன் மணம் முடித்தால் போதும் என்று மகிழ்ச்சியில் திருமண ஏற்பாடு செய்ய போய் அது மூன்று சச்சிதேவ் கல்யாணமாக மாறி ஊரையே பரப்பரப்புக்கு உள்ளாக்கியது.
“ஆளை மாற்றித் தூக்குவது இந்த வீட்டில் புது பழக்கமா என்ன?? உங்க ரத்தம் தானே அவன் உடம்பிலும் ஓடுகிறது?? இப்ப சொல்லுங்க அது என்னிடம் இருந்து வந்ததா இல்லை உங்களிடம் இருந்து வந்ததா??” என்று பளிச்சென்று கேட்டு வாயை அடைத்தார் பாட்டி.
இத்தனை நேரம் அவனுள் கரை புரண்ட கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாது மறைய “தாத்தா… நம்ம வெள்ளைக் கொடிக்கு வேலை வந்து விட்டது..” என்று கண் அடித்து தாத்தாவிடம் உரைத்தவன்..
“பாட்டியை பேச்சில் வெல்ல முடியாது என்று தெரியும் தானே?!? உங்க இரண்டு பேருக்கும் ஹனிமூன் செல்ல பத்ரி ஏற்பாடு செய்திருக்கிறான்… இருவரும் சந்தோஷமாக போயிட்டு வாங்க.. பாட்டி கூல் ஆகி.. சரியாகி விடுவாங்க” என்று தாத்தாவைச் சமாதானப்படுத்தினான் இளையவன்.
“தரையில் நிற்கும் போதே உன் பாட்டி என் காலை உடைப்பாள்… அந்த மலை சரிவில் என்னை உருட்டி விடுவதற்காக வசதியாக இருக்கும் என்று அங்கே போக சொல்கிறாயாடா??” என்று பதட்டமாக கேட்டார் தாத்தா.
“இதுக்கு எல்லாம் பயந்தால் தொழில் பண்ண முடியுமா தாத்தா.. போகும் போது பாக்கெட்டில் ஒன்றுக்குப் பத்தாக வெள்ளைக் கொடியை வைத்துக்கொள்ளுங்கள்!!! கை கால் உடையாமல் முழுசாக திரும்பலாம்” என்று தாத்தாவிற்கு அறவுரை வழங்கினான் கார்த்திக்.
தாத்தா பேரன் பேச்சைக் கேட்டு முகத்தில் புன்னகை தவழ “நிறைய முன் அனுபவம் இருக்கிற மாதிரி இந்த பில்டப் விடறிங்க.. இதுவரைக்கும் நிரு அதிர்ந்து கூட பேசி கேட்டதில்லை” என்றாள் அலக்நந்தா முதல் முறையாக வாயைத் திறந்து.
“பாபி நம் வீட்டில் இருபதுக்கும் மேல் அறைகள் இருக்கும் போது எதுக்காக நான் கல்யாணம் ஆன உடனே முன்றாவது மாடியில் இருக்கும் சவுண்ட் ஃப்ரூப் பெண்ட் ஹவுசிற்கு மாறினேன்னு நினைக்கிறிங்க?? அவள் சண்டையிடும் சத்தம் யார் காதிலும் விழக் கூடாது என்ற ஓரே காரணத்திற்காக தான்” என்றான் கார்த்திக் நகை முகமாக.
பத்தொன்பதாம் நூண்றாண்டின் தொடங்கத்தில் கட்டிய வீடு என்பதால் ஆங்கிலேயே பாணியில் உயர்ந்த மேல் கூறை இடையே பெரிய தூண்கள், ப்ரண்ச் விண்டோக்கள், பளிங்கு தரை, கண்களை பறிக்கும் சாண்டிலியர் விளக்குகள் என்று ஹால் முழுவதும் அந்த நூண்றாண்டின் எச்சம் நிறைந்து இருக்க…. புதுப்பிக்கும் போதும் அதை முற்றிலும் மாற்றாது… சதுர வடிவிலான அகண்ட ஹாலின் மத்திய பகுதியை வட்ட வடிவத்தில் ஐந்து அடி கீழே கருப்பு நிற மார்பிள் கொண்டு சுற்றி கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள் அந்த வீட்டிற்குள் வந்தவுடன் பார்வையை அள்ளும்!!!
பளபளக்கும் கருப்பு நிற படிக்கட்டுகள் கண்களைக் கவர்ந்தது என்றால் ஐந்து படிக்கள் கீழே இறங்கியுடன் வெள்ளை நிற மார்பிளால் கட்டப்பட்டிருந்த சமதளம் அதில் இருந்த பழைமையான திவான் நாற்காலிகள் கருத்தினைக் கவர்ந்தன!!!
பத்து பேர் உட்கார கூடிய பெரிய நாற்காலிகள் இருந்த போதும் பிள்ளைகள் ஏனோ அந்த கருப்பு மார்பிள் படியிலும், பெரியவர்கள் நாற்காலியிலும் உட்காருவது வழக்கமாகும்!!!
விஸ்தாரமாக இருந்த ஹாலின் ஆங்காங்கே அழகிற்காக சலசலவென்று ஓடும் செயற்கை நீருற்று… நேர்த்தியான வைக்கப்பட்டிந்த செடி, கொடிகள் என்று பழமையும் புதுமையும் மிக சரியான விகிதத்தில் ஒன்றை ஒன்று மிஞ்சாத வகையில் மிக ரசனையாகக் கட்டப்பட்டு இருந்தது கீழ் தளம்.
முதல் தளத்தில் பிள்ளைகளில் அறைகள் மற்றும் ஜிம் இருக்க... இரண்டாம் தளத்தில் ஹோம் தியேட்டர் மற்றும் விருந்தினர் தங்கும் அறைகள் இருக்க மூன்றாவது தளத்தில் விஸ்தாரமான பெண்ட் ஹவுஸ் என்று அழைகப்படும் மொட்டை மாடி அறை மட்டும் தான் நவீனத்திற்கு எடுத்துக்காட்டாகக் கட்டப்பட்டிருந்தது.
கார்த்திக் நிரல்யா அறை மூன்றாவது மாடியில் இருக்க.. அந்த வீட்டிலேயே மிகப் பெரிய அறை அவர்களுடையது!!!
ஏற்கனவே மலையில் மேல் இருக்கும் அந்த வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தெரியும் கண்கவர் மலையை எப்பொழுதும் கண்டு ரசிப்பதற்காகவே அறையின் இருபுறமும் சுவரே இல்லாது வெறும் கண்ணாடியால் இழைத்து இருக்க… கண்ணாடியின் வழியே உள்ளே வரும் சூரியனின் கதிர்கள் தேவையில்லை என்னும் போது ஷட்டரில் ஆரம்பித்து அங்கு பதித்திருந்த ஸ்பாட் லைட், மியூசிக் சிஸ்டம், ஏ.சி என்று அந்த அறையின் சகல வசதியும் வாய்ஸ் கன்ட்ரோலில் இயங்குபவை தான்!!!
அந்த படுக்கை அறையில் நடுநாயகமாக இருந்த பெரிய கட்டில், கண்ணாடியின் வழியே வெளியே வேடிக்கைப் பார்ப்பதற்காக போடப்பட்டிருந்த எஸ் வடிவிலான இரண்டு நாற்காலிகள்… புத்தகங்கள் வைக்கும் செல்ப்பில் புத்தகங்களுக்குப் பதிலாக கண்கள் பறிக்கும் நிறத்திலும் உருவத்திலும் பல வகையான காபி மக்குகள்… சாய்வாக உட்காருவதற்காக ரிக்களைனர்… சின்ன ப்ரீட்ஜ் என்று தேவைக்கு அதிகமான எதுவும் இருக்காது என்றாலும் அந்த அறையின் இன்டீரியர் என்று சொல்ல கூடிய சுவரில் ஆரம்பித்து மெத்தையின் மேல் போட்டப்பட்டிருந்த பெட் ஸ்பிரட், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள், ப்ரனிச்சர்கள் ஏன் கீழே இருந்த கார்பெட் வரை எல்லாம் பால் வெள்ளை மற்றும் வெளீர் நீல நிறத்தில் இருந்தன.
முதல் முறை அந்த அறைக்குள் பிரவேசிப்பவர்களுக்குக் கண்ணை கவருவது இருமருங்கிலும் கண்ணாடி சுவர் வழியே தெரியும் வெட்ட வெளி வானம் தான்!!!
அந்த வானத்தின் நிறத்தையே இன்டீரியராக பிரபதிபலிக்கும் வெள்ளையும் மற்றும் நீலநிறத்தைக் கொண்டு இருந்த அறையில் தோன்றுவது… மேகம் சூழ்ந்திருக்கும் ஆகாயத்தில் அறை அமைத்து போல் ஒரு வித ஆப்டிகல் இல்லுஷனை உருவாக்கும்!!!
பகல் நேரத்தில் இப்படி என்றால் இரவைப் பற்றி கேட்கவே வேண்டாம்.. வெண்நிலவும்… மினுமினுக்கும் நட்சத்திரங்கள் சூழ்ந்த அண்டவெளியில் ஏகாந்தமாகப் படுத்து இருப்பது போல் ஒரு மாய தோற்றத்தை அந்த அறை தோற்றுவிக்கும்!!!
அறையின் உள்ளே தான் இப்படி என்றால், அறைக்கு வெளியே அரிதாக பூக்கும் பூவில் ஆரம்பித்து அந்த மாதிரி ஒரு பூவை உலகத்தில் பார்க்கவே முடியாது என்று ஆச்சரியப்படும் படியாக மொட்டை மாடியில் ஒரு நந்தவனத்தை நிரல்யா வைத்திருக்க.. முதல் முறை அந்த நந்தவனத்தையும் அறையும் ஒரு சேர பார்ப்பவர்களுக்கு ஏதோ கற்பனைக்கும் எட்டாத ஒரு மாய லோகத்தில் தாங்கள் சஞ்சரிப்பது போல் உணர்வர்!!!
அந்த பறந்த மாடியின் கடைகோடியில் அவளுக்காக சின்ன ரீசர்ச் லேப் கூட ஒன்று புதுசாக கட்டப்பட்டிருந்தது!!!
அவனை நம்பாத பார்வை பார்த்த அலக்நந்தா “இந்த ஊரில் பொண்டாட்டிக்கு எல்லோரும் பூ, நகை, துணி மணி வாங்கி கொடுத்து தான் நான் பார்த்து இருக்கேன்… நீங்க மட்டும் தான் பூவிற்குப் பதில் செடி கொடிகளையும், நகைகளுக்குப் பதில் ரீசர்ச் லேப்பையும் துணி மணிகளுக்கு பதில் எந்த ஊர் போனாலும் அவள் குடிக்கவே குடிக்காத காபி மக்கை வாங்கி வருவதையும் பார்க்கிறேன்”
“என்ன பாபி பண்ண.. இஸ்ரோவில் ஆராய்ச்சியாளராக செல்லும் அளவு மூளை இருந்தும் கூட அது வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு செடி கொடிகளைப் பற்றி படிக்கும் படிப்பு தான் வேண்டும் என்று தாவரவியல் ஆராய்ச்சி செய்பவளுக்கு நகை, துணி மணிகளைப் பற்றி என்ன தெரியும்? ஏதோ சௌவி டிசைனராக இருக்க போய் இவளின் உடை விஷயத்தை அவள் கவனித்துக்கொண்டாள். இல்லையேல் மங்கி மாதிரி இவளும் கேப்பரியும் டி சர்ட்டுமாக தான் திரிந்திருப்பாள்” என்று முடிக்கவும் சொல்லி வைத்தார் போல் அவனின் போனில் ஏதோ செய்தி வர.. அதை பார்த்து விட்டு புருவத்தை சுருக்கினான்.
நகை துணிமணிகளை பற்றி இத்தனை விளக்கம் கொடுத்தவன் மறந்து அவன் வாங்கி வரும் காபி மக்கை பற்றி வாய் திறக்கவில்லை… அவர்கள் அறையில் ஏன் புத்தகம் அடுக்கும் இடத்தில் புத்தகத்திற்கு பதில் இவன் வாங்கி வரும் விதவிதமான “மக்” இருக்கிறது என்று யாரும் கேட்டதில்லை… இப்போ அலக்நந்தா கேட்டதற்கும் பதில் சொல்லவில்லை!!!
“சேலம் போய் இருக்கும் அப்பா, அம்மாவையும் விஷேசம் முடிந்தவுடன் சீக்கிரமே கிளம்பி வந்து விட சொல்லுடா நாளைக்கு அப்பாவை பார்த்துவிட்டு உடனே கிளம்பி விடுவேன்” என்றான் முற்றிலும் நிரல்யாவின் வீட்டின் அழைப்பைப் புறக்கணித்து.
“கிளம்புவியா?? எங்கே??” என்றார் பாட்டி அவனை முறைத்தப்படி.
“இப்பதானே ஜெர்மனி ப்ராஜெட் பற்றி சொன்னேன்.. அதுவிஷயமாக நாளை மறுநாள் ஜெர்மனி கிளம்பி வேண்டும் பாட்டி” என்று அறிவித்தான்.
அதை கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சியுடன் அவனை முறைக்க... இந்த செய்தி நிரல்யாவிற்கு கூட புதியது என்று அவள் சற்றே தலையை உயர்த்திய விதத்தில் உணர முடிந்தது.
“இரண்டு நாளில் ஜெர்மனிக்கு போவதற்கு இங்க எதுக்குடா வந்த?” என்று எரிச்சல் மண்டிய குரலில் கேட்டான் பத்ரி…
லேசாக தன் கணவனின் தோளில் தட்டிய அலக்நந்தா.. “இன்றைக்குத்தானே நிரல்யா முதல் நாள் நம் ஆபீசில் வேலைக்குச் சேர்கிறாள்?? அதற்காக வந்திருப்பார்” என்று அவனைப் பார்த்து பதில் சொன்னாள்.
“பாபி… இந்த மாதிரி சினிமாத்தனமான காரணம் எதுவும் இல்லை… பத்ரி சொன்ன மாதிரி நம் கம்பெனியில் ரீசர்ச் அசிஸ்டென்ட் பதவி இவளின் வரவிற்காக கடந்த மூன்று வருடமாக காத்துக்கொண்டு இருக்கு… இதற்கு நான் ஏன் ஊரில் இருந்து வரணும்??” என்று அவளிடமே திரும்பி கேட்டான் அந்த புண்ணியவான்.
“அப்ப இராத்தியோடு இராத்தியா வானத்தில் இருந்து குதித்தது நிரல்யாவிற்காக இல்லை என்றாக சொல்றிங்க?” என்றாள் விடாது வாயைப் பிடுங்கினாள் அல்கநந்தா.
“ஐய்யோ பாபி விடமாட்டிங்களா..” என்று சிரித்தவன் “ஓப்புக்கொள்கிறேன் அவளுக்காக தான் மட்டும் வந்தேன்…போதுமா??” என்று தன் பாபியிடம் சரணாகதி ஆக.. அத்தனை நேரம் இருந்த இறுக்கம் முழவதுமாய் மறைந்தது.
அவனின் செய்கையை சந்தேகத்தோடு பார்த்த பத்ரி “இப்ப எதுக்குடா இத்தனை அவசரமாக ஜெர்மனி போகணும்?”
“புதுசாக மூன்று சாப்பர் வாங்கும் ப்ளான் இருக்குன்னு முன்னாடியே சொன்னேன் இல்லை.. அது ஜெர்மனியில் நடக்கவிருக்கும் ஏர் ஷோவில் தான் லான்ச் பண்றாங்க… என் என்ஜிரியரிங் டீம் எல்லோரும் போறாங்க.. நானும் போனா… அதையும் பார்க்கலாம், அதோடு போன மாசம் நீயும் அப்பாவும் வாங்க போறதா சொன்ன புது மெஷினையும் பார்த்து விட்டு வரலாமே அதை பற்றி அப்பாவிடம் விபரம் கேட்கலாம் என்று வந்தேன்…” என்றான் விரிவாக.
அவனை நம்பாத பார்த்த பத்ரி “நீ ஏர் ஷோ போய் அங்கே வந்திருக்கும் புதிய ரக விமானத்தை ஓட்டி பார்க்கப் போவதற்கு பிசினஸசைக் காரணம் காட்டாதடா..”
“எதை சொன்னாலும் நம்ப மாட்டேங்கறியேடா” என்றப்படி அவசரமாக தன் நாற்காலியை விட்டு எழுந்த கார்த்திக் மெல்ல நடந்து நிரல்யாவிற்கு பின்னாடி சென்றவன் யாரும் எதிர்பாராத நொடி அவள் கையில் பாதி கடித்திருந்த ரசகுல்லாவை இமைக்கும் நேரத்தில் வாயில் தள்ளி விட்டான்.
“பார்த்து புறை ஏற போகிறது…” என்று அலக்நந்தா அலறும் போதே.
“என்னது?? புறையா இவளுக்காக ஏன் பாபி நீங்க வேற?? விழுங்கினால் தானே புறை ஏறும் இவள் தான் அனுமார் மாதிரி எல்லாத்தையும் வாயிலேயே அடைத்து வைத்திருப்பாளே??” என்று மொழிந்தவன்..
அவள் புறம் திரும்பி “ஆபிஸ் கிளம்பு உத்தேசம் இல்லையா?” என்று அதட்டலாகக் கேட்டான்.
“டெய்.. நீதான் டையட்.. டையட் என்று எதையும் சாப்பிட மாட்ட.. விரும்பி சாப்பிடுபவளையும் ஏன் டா தடுக்கற??” என்று நிரல்யாவிற்காக வக்காலத்து வாங்கிய பாட்டிக்குப் பதிலேயே கொடுக்காது.
கை விரலை பத்து என்பது போல் மூடி திறந்து ஏதோ செய்கை செய்துவிட்டு தன் பாட்டியின் புறம் திரும்பியவன்…..
“என்ன பாட்டி சொன்னிங்க?? விரும்பி சாப்பிடட்டுமா?? இப்ப விட்டேனா… அந்த மொத்த டின்னையும் காலி செய்துவிட்டு அப்புறம் நாளைக்கு காலையில் நான்கு மணிக்கு எழுப்பி வா ரன்னிங் போகலாம் என்று என் உயிரை எடுப்பா பாட்டி” என்று கார்த்திக் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே நிரல்யா வேகமாக மூன்றாவது தளத்தில் இருக்கும் அவர்களின் அறையை நோக்கி பயணித்துக்கொண்டு இருந்தாள்.
நிரல்யாவும் கார்த்திக்கும் பேசிக்கொள்வதைப் புரிந்துக்கொள்ள டிக்சனரி தான் தேவை என்பதை அறிந்த வீட்டு ஆட்கள் எதற்காக அப்படி விரலைக் காட்டினான் என்று கண்டுக்கொள்ள கூட இல்லை.
“நீங்களே கொல்கத்தாவில் இருந்து ரசகுல்லாவை டின் டின்னாக வாங்கி வந்து விட்டு.. இப்ப நீங்களே சாப்பிடக் கூடாது என்று சொல்வது ரொம்ப ரொம்ப டூ மச்… அப்படியே பொண்டாட்டி ரன்னிங் கூப்பிட்டா தான் என்ன? அது தான் நம் வீட்டிலேயே ஜிம் இருக்கே??” என்று அலக்நந்தா கேட்டாள்…..
பத்ரியை மணக்கும் முன்பு ஒரு இக்காட்டனாக சூழலில் நிரல்யாவின் சென்னை ப்ளாட்டில் ஒரு நாள் தங்க நேரிட... மிக அமைதியாக முகத்துடன் அவளை வரவேற்று எந்த கேள்வியும் கேட்காது அந்த வீட்டின் ஒருத்தியாக உணர வைத்த நிரல்யாவின் மேல் ஒரு தனி பற்று அல்நந்தாவிற்கு எப்பொழுதும் உண்டு.
“பாபி… நிறைய சாப்பிட்டுவிட்டேனே வா ரன்னிங் போகலாம் என்று காலையில் நான்கு மணிக்கு எழுப்பி விட்டு… மலை சரிவில் கண்மண் தெரியாத வேகத்தில் ஓடுவாள்…”
“ஏன் செய்ய மாட்டிங்களா?? நீங்க அணியும் எல்லா ஸ்போட்ஸ் ஷூவும் அவள் உங்களுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுப்பது தானே??” என்று விடாது கேட்டவள்..
“அதிகம் பேச மாட்டாள் என்பதற்காக இப்படி எல்லாம் நிரல்யாவை மிரட்ட கூடாது கார்த்திக்”.
பிறந்த நாள் பரிசாக நிரல்யா வருடா வருடம் வாங்கி தருவது ஷூ மட்டும்தானா?? என்று கேட்டு விசித்திரமாக பார்ப்பவர்களுக்கு இன்னும் அதிர்ச்சி அடையும் விஷயம் அது வெறும் ஒரு ஜதையோடு நிற்பதில்லை. அந்த ஆண்டு வந்திருக்கும் அனைத்து ஸ்போட்ஸ் ஷூக்களும் குவிய.. அடுத்த ஆண்டு அவனின் பிறந்த நாள் வரும் வரை வாங்கவே வேண்டியதில்லை என்னும் அளவு வந்திருக்கும்!!!.
அவள் வாங்கி தரும் பரிசே விசித்திரமாக இருப்பதாக தோன்றினால் கார்த்திக்கின் வழக்கத்தை என்னவென்று சொல்வது??
குறைந்த பட்சம் அவளாவது அவனுக்கு பயனுள்ளதாய் ஷூ வாங்கித் தருகிறாள் ஆனால் அவனோ இதுவரை எந்த பிறந்தநாளுக்கும் பரிசே வாங்கித் தந்தது இல்லை என்பது ஒரு புறம் இருக்க… வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் போது எல்லாம் தவறாமல் விதவிதமாக காபி மக்கை பரிசாக வாங்கி வருவான்.. என்ன அந்த மக்கை குடிக்கப் பயன்படாது… அவர்கள் அறையில் அழகிற்காக கொலு பொம்மையை போல் அடிக்கி வைக்க மட்டுமே உதவும்!!!
ஏன் என்றால் நிரல்யாவிற்கு பால், காபி, டீ ஏன் கீரீன் டீ கூட பிடிக்கும் பழக்கம் இல்லை. அவன் தரும் பரிசை அவள் மேஜை மேல் அழகிற்காக அடுக்குவதை தவிர அதில் வேறு எந்த பயனும் இல்லை என்பது தான் விசித்திரம்!!!
அவளுக்கு பயன் உள்ளதாய் வாங்கித் தர நூறு பொருட்கள் இருக்க இவன் ஏன் ஒன்றுக்கும் உதவாத மக்கை வாங்கி தருகிறான் என்று யாருக்கும் புரியாது!!! அவர்கள் சம்பாஷணையைப் போல் இதையும் புரியாத செய்கை லிஸ்டில் வைத்து விட்டனர் வீட்டு அங்கத்தினர்!!!
“பாபி… வரலாற்றை மறந்து விட்டிங்களே” என்று பீடிகையோடு ஆரம்பித்த கார்த்திக்.
அலக்நந்தாவின் குழம்பிய பார்வையைக் கண்டு சிரிப்பு பீறிட...
“பாபி… அமைதியாக இருக்கிறாள், அனாவசியமாக வாயை திறக்க மாட்டாள் என்பதற்காக அவளை குறைவாக எடை போட்டு விடாதிங்க… காலேஜில் நீங்களும் பத்ரியும் வைத்த பெட்டில் இவள் தான் உங்க காலேஜ் ஃபைலை ஹேக் பண்ணி உங்க போன் நம்பரை கண்டு பிடித்துக் கொடுத்தாள் என்னும் வரலாற்றை மறந்து விட்டிங்களே பாபி.. அப்புறம்… நானும் பாட்டியும் சேர்ந்து சித்திக்கை கடத்த திட்டம் போட்ட போது… இவள் தான் தண்ணீரில் மயக்க மருந்தை கலந்து வைத்தாள் என்பது உங்களுக்கு தெரிந்த வரலாறு… தெரியாத ஒன்றையும் சொல்கிறேன்… இதோ நாட் நாட் செவன் என்று பட்ட பெயர் எடுத்த என் பாட்டிக்கே சந்தேகம் வராதபடி ஆரி அண்ணாவுடைய கல்யாணத்தை நான் மட்டும் தனி ஆளாக நின்று ஏற்பாடு செய்தேன் என்றால் அது யார் போட்டு கொடுத்த திட்டம் என்று நினைக்கிறிங்க?? நீங்க சொன்ன அதே அப்புராணி சப்புராணி போட்டுக் கொடுத்த ப்ளான் தான்” என்று முடிக்கும் போது..
பட்டென்று அவன் கையைக் கிள்ளிய பாட்டி….. “அதுதானே பார்த்தேன்.. எப்படிடா நம்ம பேரனுக்கு அவ்வளவு திறமை ஏதுன்னு அப்பவே நினைத்தேன்… நிரல்யா போட்டு கொடுத்த திட்டம் தானா அது??.....”
“பின்ன?? ஓட்ட வாய் சங்கியையும்… அழுத்தகாரி மங்கியையும் கூடவே வைத்துக்கொண்டு ஒற்றை ஆளாக எப்படி இத்தனையும் சமாளித்திருக்க முடியும் என்று நினைக்கிறிங்க??” என்று பாட்டியையே திருப்பிக் கேட்டான் கார்த்திக்.
சிரித்தப்படி பதில் சொல்ல வந்தவனின் கவனம் தனக்குப் பின்னால் பத்தடி தூரத்தில் அமைதியாக படி இறங்கி வந்தவளை உணர தலை தானாகத் திரும்பியவன் தன் கை கடிகாரத்தை பார்த்துவிட்டு…
“அடடே.. சொன்னப்படி பத்து நிமிஷத்தில் வந்து விட்டாயே” என்று மெச்சுதலோடு மொழிந்தான் கார்த்திக்.
விரல் காட்டியதன் பொருள் பத்து நிமிடத்தில் தயாராகி வா என்பது என்று அப்பொழுது புரிய… ஆச்சரியமாகப் பார்த்தாள் அலக்நந்தா…..
அந்த பத்து நிமிடத்தில் அவள் செய்ததெல்லாம் முகத்தைக் கழுவி பொட்டு வைத்து தன் ஹேன்ட் பேக்கை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள் என்று புரிந்தது...
“மை காட்.. இப்படியா மிரட்டுவிங்க?? முதல் முறை ஆபிஸ் போகிறவள் தலையைக் கூட வாராது அப்படியே வந்திருக்கிறாள்” என்றாள் சற்றே கோபமாக அலக்நந்தா.
“பாபி… இங்கே இங்கிருந்து ஆபிஸ் போக அரை மணி நேரம் அதற்குள் அவளின் ஆறு அடி கூந்தலை வாரி விடலாம் என்ற ப்ளான் பண்ணி தான் வந்திருப்பாள்..”
பொருமலாக “இடுப்பைத் தாண்டி இத்தனை நீண்ட கூந்தல் வளர்ப்பது கூட உங்களால் தான். அது தெரிந்தும் இப்படி பத்து நிமிஷம் எல்லாம் கொடுப்பது ரொம்ப டூ மச்”
“பாபி… விசாரிக்காது என்னைக் குற்றவாளி ஆக்காதிங்க.. அவள் ஆறு அடி கூந்தல் வளர்ப்பதற்கும் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இதுவரை இதை உடுத்து... இப்படி நட… இதை செய்.. இதை படி.. என்று எதையும் அவளிடம் சொன்னது இல்ல… அனேகமாக சங்கி மங்கி கட்டிவிட்ட கட்டு கதையில் ஏதாவது இருக்கும்” என்றான் தீர்மானமாக.
“அப்படியா??” என்று நம்பாத தன்மையுடன் பத்ரியும் பார்க்க… அதேயே பாட்டியும் தாத்தாவும் பிரதிபலிக்க கார்த்திக்கை சந்தேக கண்ணுடன் தான் பார்த்தனர்…
“ஒன்று கூடிட்டீங்களா??” என்று அங்கிருந்தவர் முகத்தை நம்பாத தன்மையுடன் பார்த்தவன் “இனி நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டிங்க” என்று பெருமூச்சை விட்டப்படி நிரல்யாவின் புறம் திரும்பி “அம்மா தாயே நீயே திருவாய் மலர்ந்து உண்மையைச் சொல்லு… நான் எது சொன்னாலும் இங்கே யாரும் நம்ப தயாரா இல்ல..” என்று மிக அலட்சியமாகச் சொன்னான் கார்த்திக்.
அங்கே இருப்பவர்களுக்கு மிக நன்றாக தெரியும் அந்த வீட்டிலேயே பொய் பேச வராத உருப்படி நிரல்யா மட்டும் தான்!!!
அவள் எதுவும் பேசாது அமைதியாக நிற்க..
என்ன என்பது போல் பார்த்தவன் “ஏற்கனவே நான் உன்னைக் கொடுமை படுத்துவது போல் பாபி என்னிடம் சண்டைக்கு வராங்க இப்ப எதுவும் சொல்லாமல் நின்றால் வேற வினையே வேண்டாம்” என்றான் பதட்டமாக.
“நிஜமாகவே உங்களால் தான் நீண்ட முடியை வளர்க்கிறேன் என்ற உண்மை சொன்னால்.. உங்களை உட்கார வைத்து பெண்ணியத்தைப் பற்றி பாடம் அடிப்பார்களே!!!” என்றாள் தயக்கமாக.
“என்னது??” என்று கார்த்திக் கூவியப்படி இரண்டு அடி பின்னால் நகர்ந்தான்.
அவனின் அதிர்ந்த தோற்றத்தையோ, இல்லை நிரல்யா பேசிய பேச்சு அவனிற்கே புதிது என்பதை பற்றியோ கண்டுக்கொள்ளாத வீட்டினரின் கொலை வெறி பார்வையை அவன் மேல் வீச…
“நான் ஆறு அடி கூந்தல் வளர்க்க சொன்னேனா?? இது எப்ப டீ?” என்றான் தன் காதில் விழுந்த செய்தியை நம்ப முடியாது..
முன் பாதி கேள்விக்கு எந்த விளக்கம் கொடுக்காது… அவனின் பின் பாதி கேள்விக்கு பதிலாக தேதி, மாதம், வருடத்தை ஆரம்பித்து நேரத்தை கூட மிக துள்ளியமாகப் பதிலாக குறிப்பிட்டாள் அந்த பரதேவதை!!!
அவள் கூறிபிட்ட அந்த வருடத்தை கேட்ட வீட்டு அங்கத்தினர் முகத்தில் பீதி பரவ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள…. கார்த்திக் மட்டும் அதை பற்றி அக்கறை அற்று கண் இமைக்காமல் அவளை பார்க்க.. அந்த நொடி அங்கே இருப்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மத்தியில் ஒரு திரை விழ… இருவரும் ஒரு வார்த்தைப் பேசிக்கொள்ளாது பார்த்துக்கொண்டனர்!!!
அடுத்த நொடி பதட்டம் மறைந்து பட்டென்று கார்த்திக்கின் முகத்தில் மின்னலாய் ஒரு சிரிப்பு தோன்ற “ஐயம் சாரி” என்று கூறியப்படி….. அவள் புறம் வந்தவன் சாவதானமாக நிரல்யாவின் முழங்கையைப் பற்ற… அவளின் விழிகளில் தெறித்த உணர்வை கண்டவனுக்கு அப்பொழுது தான் தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிய எண்ணமே வர… “ஆபிஸ் கிளம்புகிறோம்... ஏற்கனவே ரொம்ப டைம் ஆச்சு… இன்றைக்கு டீம் மீட்டிங் இருக்கு அதனால் எப்ப வீட்டிற்கு திரும்பவேன் என்று தெரியாது..” என்று அவர்கள் பதிலை எதிர்பார்க்காது கூறியவன் பற்றிய கையோடு இவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த அவரசமாக நகர்ந்தான்.
எதற்கு சிரித்தான்??? எதற்கு சாரி சொன்னான் என்று யாருக்குமே புரியா விட்டாலும் எல்லோர் மனதிலும் எழுந்த ஒரே கேள்வி நிரல்யா கூறிப்பிட்ட வருடத்தை வைத்துக் கணக்குப் போட்டால் அப்போ அவளுக்கு கிட்டத்திட்ட ஏழு வயது…. அப்ப என்ன நடந்திருக்கும்?? அதற்கும் அவள் நீளமான கூந்தல் வளர்ப்பிற்கும் என்ன சம்பதம்?? என்ற பில்லியன் டாலர் கேள்வி வண்டாய் குடைய ஒருவரை ஒரு பார்த்துக்கொண்டனர்!!!
தொடரும்….
DEAR READERS….
எப்படி இருக்கிங்க??
நான் நலம்…
எங்க இருந்தாலும் பத்திரமாக இருங்கள்…
கதையை படித்து விட்டு அப்படியே போகாது… கொஞ்சம் கீழே இருக்கும் திரியில் எப்படி இருக்கிறது என்ற உங்களின் கருத்தை தெரிவிக்கவும்…
அடுத்த பதிவு - வெள்ளி கிழமை
யாதுமாகி என்னுள் நிறைந்தவனே... கருத்துத் திரி..