கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி என்னுள் நிறைந்தவனே!!!!..... அத்தியாயம் - 6

Status
Not open for further replies.

Kodhai Nappinnai

Moderator
Staff member
அத்தியாயம் - 6

அன்று பாட்டி போன துக்கத்தில் பாறையில் அமர்ந்து அவன் தோளில் தலை சாய்த்து அழுத அழுகை இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ஏன் அழுகிறாய் என்று ஒரு வார்த்தை கேட்காது அவளை அழ விட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தவனின் முதல் சந்திப்பை வெறும் “தற்செயலாக” என்று கூற முடியவில்லை!!!

யாரும் உள்ளே வராத அந்த அடர்ந்த தோட்டத்தில் இவள் தலைகீழாக தொங்கிய போது “தற்செயலாக” காப்பாற்றியவன்… கழுத்தை கட்டிக்கொண்டு கதறிய அழுத போது ஏன் என்று கேள்வியே கேட்காது அமைதியாக அவளுக்கு “தற்செயலாக” துணை இருந்தவன்… இது எல்லாத்தையும் விட அவளின் சீக்கிரட் செம்பராக “தற்செயலாக” ஆனவன்!!!

அத்தை மல்லிகா அடிக்கடி சொல்லும் விஷயம்... “வாழ்க்கையில் எதேச்சையாக... தற்செயலாக... நடந்தது என்று எதுவுமே இல்லை.. எல்லா நிகழ்விற்கு பின்னால் ஒரு காரண காரியம் நிச்சயமாக இருக்கும். அதைப் புரிந்துகொண்டவன் ஞானி ஆகிறான்... புரியாதவன் விதி, தற்செயல், தானாக என்று வாய்க்கு வந்த பெயரையும் வைத்து அழைக்கிறான்...” என்ற கூற்றுக்குப் பொருள் இருக்கத்தான் செய்கிறது!!!

இதை மல்லிகா ஆணித்தரமாக நம்புவதற்கு காரணம் இல்லாமல் இல்லை...

மகன் சங்கரனின் திருமணம் தான் இரவோடு இரவாக யாரும் அறியாது நடந்து விட்டது பேரனின் கல்யாணமாவது ஊர் அறிய நடத்தப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட சங்கரனின் தாயார் பேரனின் ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு போய்ப் பார்க்க... அவரின் ஜாதகத்தைப் பார்த்தவர் இவருக்கு மட்டும் இல்லை அடுத்த தலைமுறைக்கே அந்த மாதிரி கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறி விட... பதறி அடித்த பாட்டி ஏதாவது பரிகாரம் செய்ய முடியுமா என்று கெஞ்சிக் கேட்க... இவருக்கு மட்டும் தனியாக திருமணம் பண்ணாது இவரோடு நூற்றி எட்டு பேருக்கும் சேர்த்து ஒன்றாக மணம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார்!!!

ஜோசியகாரன் சொன்னது போல் அடுத்த ஒரே மாதத்தில் பேரன் உட்பட நூற்றி எட்டு தம்பதியினருக்கு சச்சிதேவ் தலைமையில் காளி கோயிலில் கல்யாணம் ஏற்பாடாக... தாலி கட்டும் நேரத்தில் குலம் கோத்திரம் அந்தஸ்து என்று சகலமும் பார்த்து பாட்டி ஏற்பாடு செய்த பெண்ணிற்குத் தாலியைக் கட்டுவதற்குப் பதில் தனக்கு மறுபக்கம் அமர்ந்திருந்த யார் என்றே தெரியாத வேறு ஒரு மணப்பெண்ணான மல்லிகாவின் கழுத்தில் தவறாக தாலியைக் கட்டினார் அந்த பெருமகனார்!!!

மல்லிகாவின் கழுத்தில் தாலி கட்டியதை அவசரத்தில் நடந்த தவறு என்று எல்லோரும் நினைக்க... கால ஓட்டத்தில் அவர்களைப் போல ஒரு ஆதர்ச தம்பதியினரைப் பார்ப்பது அபூர்வம் என்று உலகம் உணர்ந்தது!!

அப்படியானால் அன்று அவர் கட்டிய தாலி எப்படி தற்செயலாக நடந்த விஷயமாக இருக்க முடியும்?? முன்பே விதித்து இருக்காவிட்டால் அப்படி நடக்கவும் கூடுமோ??

மல்லிகா சொல்லும் இதைப் பரிபூரணமாக நிரல்யா ஒத்துக்கொள்ளத்தான் வேண்டி இருந்தது!!! இல்லை என்றால் அவள் கார்த்திக்கை அங்கே சந்திக்க வழியே இல்லை என்று பழைய நினைவுகளை அசைபோட்டபடி இருந்தவளை கீறிச்சிட்டு நின்ற காரின் சத்தம் நடப்பிற்கு மீட்டுக்கொண்டு வந்தது.

மெல்ல தலையைக்திருப்பிப் கார்த்திக்கை பார்த்தவளுக்கு காரை ஓட்ட ஆரம்பித்ததிலிருந்து யாருடனோ சூடாக விவாதம் பண்ணிக்கொண்டு இருந்தது புரிய... மெல்ல தன் சீட்பெல்ட்டை அகற்றிவிட்டு கார் கதவைத் திறக்க போனவளைத் தடுத்து நிறுத்தினான் அவன்.

கண்ணில் “என்ன?” என்ற கேள்வியோடு அவனை பார்க்க

தன் போனை கட் செய்துவிட்டு அவள் புறம் நன்றாக திரும்பியவன்.. “ஏன் நான்கு நாட்களாக தூங்கவில்லை?” என்றான் முகத்திற்கு நேராக.

அலக்நந்தா அக்கா... சொன்னது போல் அவன் இரவோடு இரவாக ஏற்காடு வந்தது என்னவோ இவளுக்காகத் தான்.. ஆனால் வந்த காரணம் இவளை ஆபிஸ் சென்று வா என்று வழி அனுப்ப இல்லை. நான்கு நாட்களாக ஏன் தூங்காது இருக்கிறாய் என்று கேட்பதற்காக அவன் வந்தான் என்பதை அவள் அறிவாள்!!!

இதை நேற்று இரவு வீட்டிற்கு வரும் போதே கேட்டிருக்க வேண்டிய கேள்வி... ஆனால் அசதியும் அலைச்சலும் காரணமாக வந்தது வராததுமாக குளித்துவிட்டு தூங்கிவிட்டான். காலையிலும் ஆபிஸ் போகும் நேரத்திற்குத் தான் எழுந்ததால் இதை அங்கே கேட்க நேரம் இல்லாது போனது!!!

ஆபிஸ் போகும் முதல் நாளே ரசா பாசம் வேண்டாமே என்று தோன்றிய போதும் அவன் விழியில் வழிந்த கேள்வி அவளைத் தடுமாற செய்ய... ஒரு நொடி அவன் பார்வையைத் தேங்கி நின்றவள்…

“இப்ப வேண்டாமே” என்றாள் தடுமாற்றத்துடன்.

சத்தம் போட்டு பெருமூச்சு ஒன்றை விட்டவன் “சரி... உன் இஷ்டம்...” என்று லேசாக தோளைக் குலுக்கிவிட்டு அவளின் விருப்பதிற்கு சம்மதம் தெரிவித்தவன் “அன்று உன்னிடம் சொன்னதைத் தான் இன்றும் சொல்கிறேன்... நான் உன்னுடைய சீக்ரெட் சேம்பர்” என்றுதோடு மட்டும் நிற்காது அவளின் நெற்றியில் லேசாக விரலால் தட்டியவன் “கடந்த ஒரு வாரமாக நீ தூங்காமல் இருக்கும் அளவிற்கான பிரச்சனை என்றுவென்று தெரியாவிட்டாலும் நீ பயப்படும் அளவு பூதாகரமாக்க நான் விடமாட்டேன் என்ற நம்பிக்கை இருக்கு தானே??” என்று கூறியபடி காரை திறந்துக்கொண்டு கீழே இறங்கினான்.

இந்த விஷயம் அவளுக்கு தெரியும் தான்.. ஆனால் பிரச்சனையை கூறினாலும் அவனால் செய்ய கூடியது ஒன்றும் இல்லை என்னும் போது… வீனாக சொல்லி அவனை ஏன் கடுப்பதேத்துவானே என்று அமைதியாக அந்த வண்டியை விட்டு கீழே இறங்கியவளுக்கு அப்பொழுதுதான் அன்டர் கிரவுண்ட் பார்க்கிங்கில் கார் நிறுத்தி இருப்பதையே உணர்ந்தாள்!!!

மனதில் பழைய நினைவுகளின் அலை அடிக்க ஏதேதோ எண்ணத்தில் மூழ்கி இருந்தவள் சுற்றுப்புறத்தைக் கவனிக்காது காரை திறந்துக்கொண்டு வெளியே இறங்கியவளுக்கு கார்த்திக் ஹெச்.ஓவில் காரை நிறுத்தி இருக்கிறான் என்பது அப்போது தான் புரிந்தது.

தேவ் குரூப்ஸ்சின் ஹெச்.ஓ என்று சொல்லக்கூடிய தலைமை செயலகம் ஏற்காட்டின் மத்தியில் ஏழு அடுக்கு கட்டிடத்தில் இருந்தது என்றால் தொழிற்சாலையோ இரண்டு குன்றுக்கு மத்தியில் இருக்க, கம்பெனியின் முதுகெலும்பான ஆராய்ச்சி கூடமோ ஊரின் மறுமூலையில் சுமார் இருபது ஏக்கரிலிருந்தது.

பிற ஆராய்ச்சி கூடம் போல் வெறும் குடுவையும் ரசாயனமும் மட்டும் இல்லாது... டீ செடிகளைப் பற்றிய ஆராய்ச்சி என்பதால் அவை வளர்வதற்கான விஸ்தாரமான நர்சரியில் ஆரம்பித்து சீதோஷணம்.. காற்றோட்டமான இடம் என்று பலதரப்பட்ட காரணங்களுக்காக ஊரை விட்டுத் தள்ளி வெகு அமைதியாக இருந்த கட்டிடத்தில் தான் சச்சிதேவ் குரூப்ஸ்சின் ஆர் அண்ட் டி அமைந்து இருந்தது!!!

“கார்த்திக்..?!?” என்றாள் மொட்டையாக.

“உன் ஆர் அண்ட் டி ஹெட் நம் கம்பெனியின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மூத்தவர்... அவருக்கு கீழ் உன்னை வேலைக்கு அனுப்பி வைக்கும்போது நான் வந்து முறையாக அறிமுகப்படுத்தவில்லை என்றால் அவருக்கு மரியாதையாக இருக்குமா? அதனால் தான் உன்னை ஹெச்.ஓ அழைத்து வந்தேன்” என்று அவள் கேட்காமலேயே பதில் சொன்னவன் நிரல்யாவை அழைத்துக்கொண்டு அங்கே இருந்த லிப்ட்டிற்குள்ளே சென்றான்.

கம்பெனி தொடங்கும் வெகுநேரத்திற்கு முன்பே வந்து விட்டப்படியால்... துப்புரவுத் தொழிலாளர்களைத் தவிர கம்பெனி விரிச்சோடி கிடக்க, லிப்ட் வேறு எங்கும் நிற்காது ஏழாம் தளத்திற்குப் பறந்து சென்று நின்றது.

அதிலிருந்து வெளியேறி... அந்த தளத்திலிருந்த கான்ப்ரன்ஸ் அறைக்குள் நுழைந்தனர்.

பத்து பேருக்கு மேல் அமரக்கூடிய சற்றே சிறிய அறையாக இருந்தாலும் கூட அது தான் கம்பெனியின் பெருந் தலைகள் கூடி மிக முக்கியமான முடிவுகள் எடுக்கும் கான்பிரன்ஸ் அறை. அந்த அறையில் மீட்டிங் என்று அறிந்தாலே ஏதோ பெரிய விஷயமாகத் தான் இருக்கும் என்று அங்கே நிலவும் எழுதப்படாத விதியைப் பற்றி அனைவரும் அறிவர்.

“உட்கார்... இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவார்...” என்று நாற்காலியைக் காட்ட, எதுவும் பேசாது
உட்கார்ந்தவளைக் கண்டு ஒரு கூரிய பார்வையைச் செலுத்தினான்.

உள்ளுக்குள் ஏதோ அவளை அரித்துக்கொண்டு இருக்கிறது, அதனால் தான் கடந்த ஒருவாரமாக தூங்கவில்லை என்று நாடு விட்டு நாடு சுற்றிக்கொண்டு இருந்தபோதே உணர்ந்தவனால் இப்போ நேர் எதிராக இருக்கும் போதா அவளின் மனப்போராட்டத்தை உணர முடியாது போகும்?

எதுவும் பேசாது மெல்ல அவளுக்கு எதிரில் இருந்த ஓவல் வடிவிலான பெரிய டேபிள் மேல் சாய்ந்து நிரல்யாவின் முகவாயைப் பற்றி ஏந்த.. அந்த சின்ன ஸ்பரிசத்தால் அவளின் ஜம்புலன்களும் ஒரே நொடியில் உயிர்த்து எழ... கண்களை விரித்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் போட்டிப் போட அவனைப் பார்த்தாள்!!!

முழுகவனம் அவன்மேல் திரும்பியதை உணர்ந்தவன் மெல்ல அவள் முகத்தை நோக்கி குனிந்தான்!!!

அத்தனை நேரம் உலகத்தில் உள்ள அத்தனை பிரச்சனைகளும் தன் தோள்மேல் உட்கார்ந்திருப்பது போல் மூச்சு விட முடியாது அமர்ந்திருந்தவளுக்கு அவனின் அந்த சின்ன ஸ்பரிசம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ள... நெஞ்சு எகிறித் துடிக்க... ஓட்டமெடுக்கும் நெஞ்சத்தின் அதர்வலைகளை அவன் பற்றிய இருந்த விரல்களின் வழியே உணர… அவளின் ஆர்பரிக்கும் நுண்ணுர்வுகளை மிக துல்லியமாக உணர்ந்தவனின் கண்கள் பளபளக்க மேலும் அவளின் முகத்தை
நெருங்கினான்!!!

எதற்காக அவன் குனிகிறான் என்று யூகித்தவள்... அவசரமாக தன் தலையைப் பின்னுக்கு தள்ளியபடி
“என்ன பண்ற கார்த்திக்??” என்றாள் பதட்டமாக.

அவள் கேட்டது காதிலே விழாதது போல் மேலும் அவள் முன்னே குனிய.. அதற்கு மேல் பின்னால் சாயவோ சரியவோ இடம் இல்லாது… அவனிடம் இருந்து தப்பிக்க யோசித்தவள் மின்னல் வேகத்தில் தன் கையால் உதட்டை மூடினாள்.

அவன் மூச்சுக்காற்று அவளின் முகத்தில் வீசும் தூரம் நெருங்கியவன் தன் மற்றொரு கையால் அவளின்
பின்னந்தலையைப் பற்றினான்.

கார்த்திக் பற்றி இருந்த அடர்ந்த கற்றை கூந்தலை தாண்டி அவனின் சுண்டு விரல் அவளின் பின்னங்கழுத்தை மிக மிக மென்மையாக உரச… வினோதமாக அவன் தொட்ட இடத்தை விட்டு மற்ற இடத்தில் அதன் எதிரொலியாய் கிளர்ந்து எழ... முதல் தீண்டலால் உயிர்ந்து எழுந்த ஜம்புலனும் இரண்டாம் தீண்டலில் அவனின் முழு கட்டுப்பாடிற்குள் வர.. அந்த இருமுனை தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாது… அதற்கு மேல் செய்வதறியாது கண்களை இறுக மூடினாள்!!!

நெஞ்சு படபடக்க ஆவலும் ஆர்ப்பாட்டமும் எகிறித் துடிக்க கண்களை மூடி காத்திருந்தவள் காதில்...

“டர்ட்டி மைன்ட்” என்ற கார்த்திக்கின் முணுமுணுப்பு காதில் விழுந்தது.

என்ன சொல்கிறான்?? என்று திடுக்கிட்டு கண்களைத் திறந்தவளுக்கு தலையில் சொருகி இருந்த க்ளிப்
அவன் கையில் இருக்க..

காலையில் அவசரமாக கையில் கிடைத்த க்ளிப்பை எடுத்து அப்படியே சொருகிக்கொண்டு வந்தது நியாபகத்திற்கு வந்தது!!!

கார்த்திக் தன் கவனத்தை திசை திருப்பவே வேண்டும் என்றே இப்படி செய்திருக்கிறான் என்று தெளிவாக புரிந்த போதும்… அவளின் செய்கையை நினைத்து வெட்கம் பிடுங்க... முகம் குப்பென்று சிவக்க... அவன் முத்தம் கொடுத்து இருந்தாலும் கூட அவளின் முகம் நாணத்தால் இத்தனை சிவந்திருக்குமா என்று சொல்ல முடியாதளவு சிகப்பேற... அந்த சமயம் பார்த்து யாரோ கதவைத் திறப்பது போல் காதில் விழுந்தது!!!

உடல் விரைத்து எழுதவன் நிரல்யாவை விட்டுத் தள்ளி நிற்க முற்ப்படும் போதே அவன் கையிலிருந்த க்ளிப்பை பிடுங்கியவள் அவசரமாக தன் விரிந்த கூந்தலில் அதை மாட்டினாள்.

மெல்ல கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வழுக்கை மண்டையுடன் அதற்கு சம்பந்தமே இல்லாது வெள்ளை நிற குறுந்தாடியுடன் ஆர் அண்ட் டி ஹெட் திரிலோக் காலை வணக்கம் சொல்லியபடி அவர்கள் அருகே வந்தார். அவரைக் கண்ட மாத்திரத்தில் நிரல்யா லேசான நடுங்கிய கால்களை நிதானித்து எழுந்து நிற்க...

இன்முகத்துடன் அவருக்கு மறுபொழித்தப்படி கையைப் பற்றி குலுக்கிய கார்த்திக் நேராக விஷயத்திற்குத் தாவி “இவள் தான் உங்க புது ரிசர்ச் அசிஸ்டென்ட் நிரல்யா சச்சிதேவ்” என்று முறையாக அறிமுகப்படுத்தினான்.

அவளுக்கு வாழ்த்து சொல்லியபடி நிரல்யாவின் கையைப் பற்றி குலுக்கிய பெரியவர்... “பார்த்திருக்கேன்.. உங்க தங்கை கல்யாணத்திற்கு வரும்போது... அப்படியே உங்க...” என்று சிரித்தபடி ஆரம்பித்தவர் “இல்லை உங்க கல்யாணத்தில் பார்த்தேன்” என்று குழப்பத்தில் முடித்தார்.

எம்.டியின் மகள் கல்யாணத்திற்கு கம்பெனியின் தலைமை நிர்வாகிகளுக்கு மட்டும் மரியாதை நிமித்தமாக அழைப்பு விடுக்கப்பட... ஒரு பெரிய பொக்கேவை வாங்கிக்கொண்டு போய் இருந்தவருக்கு அங்கே ஒரு கல்யாணத்திற்குப் பதில் மூன்று அரங்கேற எப்படி ஒருத்தருக்கு மட்டும் பொக்கே கொடுப்பது என்று குழம்பிப் போய் அங்கேயே வைத்துவிட்டு யாருக்கும் கொடுக்காது வாழ்த்து மட்டும் கூறிவிட்டுத் திரும்பி விட்டார்!!!

“அந்த கல்யாண கலவரத்தில் உங்களுக்கு என்னைப் பார்த்த ஞாபகம் இருந்திருக்காது” என்றவர் சற்றே பதட்டத்துடன் முடித்தார்.

பின்னே கல்யாணத்தை யாராவது கலவரம் என்று சொல்லி வைப்பார்களா?? எப்படி வாயைத் திறந்தாலும் புதை குழியில் புதைவது போல் தோன்ற மலமலங்க விழித்தவரைப் பார்த்து நிரல்யாவிற்கு பரிதாபம் ஏற்பட்டது என்றால் கார்த்திக்கோ சிரிப்பு வந்தது.

“எங்க வீட்டுக் கல்யாணத்தை முதல்முறை பார்ப்பதால் உங்களுக்கு அப்படிதான் இருக்கும். எங்களுக்கு இது பழகி விட்டது” என்று மிக எளிதாக ஒப்புக்கொண்டவன்... “அவசரமாக கல்யாண ஏற்பாடு செய்யப்பட்டதால் உங்க டீம்மில் உங்களைத் தவிர வேற யாரும் கல்யாணத்திற்கு வரவில்லை என்று நினைக்கிறேன்... முடிந்தளவு இவள் யார் என்பதை டீம் மெம்பருக்கு சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்... ஊர் அறிய கல்யாணம் பண்ணிக்கொண்டு ஏன் ரகசியமாக வைத்திருக்க சொல்கிறேன் என்று தப்பாக நினைக்காதிங்க. நிரல்யா இங்கே சச்சிதேவ் குடும்பத்தில் ஒருத்தியாக வரவில்லை ரிசர்ச் அசிஸ்டன்ட்டாக மட்டுமே” என்று மிக எளிதாக அவரை மரியாதை பண்ணியது போல் இவளின் வேலையும் சேர்த்து முடித்து வைத்தான் கார்த்திக்.

அவன் பி.டியில் சேர்ந்த பிறகு ஏன் கம்பெனிக்கு பிசினஸ் நாலா புறத்திலிருந்தும் இத்தனை வரத் தொடங்கியது என்று முதல் முறையாக நிரல்யாவிற்கு புரிய அமைதியாக நின்றாள்!!!

ஆர்.அண்ட்.டியில் போய்க்கொண்டு இருக்கும் ஐந்து ப்ராஜெக்ட்டில் நிரல்யாவின் பி.ஹெச்.டிக்கு ஏற்றதாக இருந்த ஒரு ப்ராஜெக்ட் பற்றி சிரித்த முகமாக அவர் சொல்ல ஆரம்பிக்க...

அவரின் பேச்சைப் பாதியில் தடுத்து நிறுத்தியவன், “உங்களுக்கு கீழே வேலை செய்பவள்... அவளுக்குக் கொடுக்கப்படும் ப்ராஜெக்ட்டை பற்றி என்னிடம் எந்த தகவலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று மொழியும் போதே அவனின் மீட்டிங் ஆரம்பிப்பதற்கான ரிமைண்டர் அடிக்க..

போனை எடுத்துப் பார்க்காமலே “மீட்டிங்” என்று சொன்னான்.

அவனின் வார்த்தையின் பொருளைப் புரிந்தவர் “நான் கிளம்புகிறேன்” என்று கை குலுக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அவர் செல்லும் வரை அமைதியாக இருந்தவன்... “பார்க்கிங்கில் டிரைவர் செல்வம் காத்திருக்கிறான். மாலை எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று நீயே அவனிடம் சொல்லி விடு” என்று மொழியும் போதே மீண்டும் அவன் போன் அலற...

“அப்ப நான் கிளம்புகிறேன்” என்று செப்பிய அவளின் குரலில் லேசாக இழையோடியது வருத்தமா இல்லை பயமா என்று தெரியாத ஒன்று ஊடே இருக்க... அதைக் கவனிக்கும் நிலையில் இல்லாது தன் போனில் மும்முரமாகப் பேசிக்கொண்டு இருந்தான் கார்த்திக்.

தன் போன் பேச்சை முடித்துவிட்டு நிமிர்ந்தபோது வெளியே செல்வதற்காக நிரல்யா மெல்ல கதவைத் திறக்க..

“நிரல்” என்று அழைத்து அவளைத் தடுத்து நிறுத்தினான்.

அவன் நிரல் என்று மிக மிக மெல்லியதாக அழைத்ததன் எதிரொலியாக அவளுள் குபுகுபுவென்று புது புனல் போல் பொங்கிக்கொண்டு இருந்த அந்த ஆர்ப்பாட்டம் அடங்க... மெல்ல தலையைத் திருப்பிப் பார்த்தாள்.

தான் விட்ட இடத்திலேயே டேபிள் மேல் லேசாக சாய்ந்தபடி நின்று இருந்தவனின் கண்களைக் கண்டவளுக்கு அதில் தெரிந்த ஏதோ ஒன்று இத்தனை நேரம் அவளுள் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருந்த பயம், படபடப்பு, நடுக்கம், ஆவல் என்று சரியாக சொல்ல முடியாத உணர்வலைகள் நாலாபுறத்திலிருந்தும் புரட்டி எடுத்துக்கொண்டு இருந்ததை எல்லாம் தடுத்து நிறுத்தியது.

தன் பாண்ட் பாக்கெட்டில் போனை சொருகியபடி அவளின் அருகில் வந்தவன் நிரல்யாவின் தோள்களைப் பற்றி தன் மார்போடு இறுக அணைக்க... சற்று நேரம் முன் முத்தம் கொடுக்க வந்தவனைத் தடுத்தவள் இப்போ அவனின் அணைப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டு கார்த்திக்கின் பறந்த மார்பினுள் புதைந்தாள்!!!

காதல் மேவ கார்த்திக் அணைப்பது போல் மற்றவர்களின் கண்களுக்குத் தெரியலாமே தவிர, ஆனால் அணைக்கப்பட்ட நிரல்யா அறிவாள்... அது கணவன் மனைவிக்குமான அணைப்பு இல்லை... முதல்முறை தாயைப் பிரிந்து பள்ளிக்குப் போகும் குழந்தையைத் தாய் அணைப்பதற்கு சமமானது என்பதை அவளும் அறிவாள் அவனும் அறிவான்!!!

கார்த்திக் பார்வையை வைத்து என்ன நினைக்கிறான் என்று யூக்கிக வேண்டிய அவசியம் நிரல்யாவிற்கு இல்லை.. அவனின் உணர்வுகளை வைத்தே உணர கூடியவள் அவள்!!! அவனும் அப்படியே… இன்னும் சொல்ல போனால் இருவரும் ஒருவரை ஒருவர் உணர்வதும் அப்படியே!!! இது மற்றவர்களுக்கு புரியவது கூட சிரமமே தவிர அவர்களுக்கு அல்ல!!!

சிறு இடைவேளைக்கு பின்.. "உனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்றால் எப்ப வேண்டுமானாலும் விட்டு விட சொல்வேன்னு எதிர்பார்க்காதே. இன்னும் ஐந்து வருடத்தில் திரிலோக் சார் ஓய்வு பெற்ற பிறகு நீ தான் இந்த ஆர்.அண்ட்.டி பிரிவில் தலைமை தாங்கி நடத்தப் போகிறவள், அதனால் இப்பவே பழகிக்கொள்” என்றபடி தோள்களைப் பற்ற... அவன் பிடியில் மட்டும் இல்லை உதிர்த்த வார்த்தையிலும் இருந்த அழுத்தத்தை நன்றாக உணர்ந்தாள் நிரல்யா.

தன் முகத்தைச் சற்றும் எடுக்காது அவன் மார்பிலேயே புதைந்திருந்தவள்... “நிஜமாகவே இந்த வேலை எனக்கு பிடிக்கவில்லை என்றால்..??” என்று கேட்டபோது அவள் குரலிலிருந்த
நடுக்கம் அவளின் உள்ள கிடங்கிலிருந்த பயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

“ஏய்...”. என்றபடி அவளின் தலையில் ஒரு குட்டு குட்டியவன், “நீ விரும்பும் மரம் செடி கொடிகளைப்
பற்றியது தானே இந்த வேலை?? பின் எதற்கு இப்படி குழப்பிக்கொள்கிறாய்? போய் உன் ரிசர்ச் லேப், செடி, கொடிகளைக் கட்டிக்கொண்டு சந்தோஷமா இரு...” என்று வாழ்த்துக் கூறியவன் அவளின் பின்னந்தலையில் கையை வைத்து லேசாக தடவியபடி “வாழ்க்கையில் பிடித்ததை மட்டுமே செய்யக்கூடிய சந்தர்ப்பம் எல்லோருக்கும் அமையாது. நீ கேட்காமலே அது உனக்கு வந்து இருக்கு... சந்தோஷமாக ஏற்றுக்கொள்” என்று திருத்தமாக கூறிவிட்டு அவளை மெல்ல விடுவித்தான்.

நிரல்யாவின் முகத்தில் பரிபூரண தெளிவு இல்லை என்றாலும் கூட பயமும், படபடப்பும் போட்டி
போடவில்லை என்பதைக் கண்டவன், “அதோ அந்தப் புறம் ரெஸ்ட் ரூம் இருக்கிறது. உள்ளேயே சீப்பு முதல் முகம் கழுவ வேண்டுமானாலும் கூட எல்லாமே அங்கே இருக்கும். உன் தலையை நீ எப்படி வார வேண்டுமோ அப்படி வாரிக்கொண்டு வா..” என்று கூறியதோடு நிற்காமல் அவளைக் கைப்பிடியாக அழைத்துச் சென்று உள்ளே விட்டவன் அடுத்த பத்து நிமிஷம் அவள் தலை வாரிக்கொண்டு வரும்வரை யாருடனோ போனில் பேசியபடியே காத்திருந்தவன் இவளின் வரவைக் கண்டு போனை கட் செய்து விட்டு “போகலாமா” என்றபடி அவளை அழைத்துக்கொண்டு லிப்ட் வரை சென்று வழி அனுப்பி வைத்தான்.

கீழே இறங்கியவளுக்கு டிரைவர் தயாராக இருக்க... அதில் ஏறி அமர்ந்தவள் அடுத்த அரை மணி நேரத்தில் தன் புது ஆபிஸ்சிற்கு சென்று அடைந்தாள்.

முதல் நாள் என்பதால் அவள் பணியைப் பற்றிய விபரம், குழு, துறை... என்று கூறி முடிக்கவே அறை நாள் கழிய, மதியம் சாப்பிடும் அறைக்கு அவளின் டீம் ஹெட் ராஜேஷ் அழைத்துச் செல்ல... ஏற்கனவே அங்கே இருந்த அவளின் குழு ஆட்களிடம் முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.

மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக மொத்தம் பன்னிரண்டு குழு இயங்க, அவளின் மூன்று பேர்கொண்ட சின்ன குழுவின் தலைவர் ராஜேஷ். இவளின் டீம் மெம்பர் உட்பட அங்கே பொதுவாக இருந்தவர்களை அறிமுகப்படுத்திய ராஜேஷ் அவளை அமரச் சொல்லி விட்டு தானும் அமர்ந்தார்.

ஆராய்ச்சி கூடம் என்பதால் பெருவாரியாக ஒன்று பி.ஹெச்.டி முடித்தவர்கள் இல்லை படித்துக்கொண்டு இருப்பவர்களாகவே... முப்பதுகளில் ஆரம்பித்து ஐம்பது வரை கலந்து இருக்க, இவளைக் கண்ட அடுத்த நொடி எப்பயும் போல் அவளின் சொக்க வைக்கும் அழகைக் கண்டு அதிர்ச்சியில் வாய் பேச முடியாது ஒரு சிறு மௌனம் ஏற்பட்டது.

இதையே தான் வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகிவிட்டதால் நிரல்யாவை எந்த வகையிலும் பாதிக்காது அமைதியாக உட்கார்ந்து அங்கே இருந்த உணவைச் சாப்பிட ஆரம்பித்தாள்.

வயதில் சற்றே நாற்பது வயதைக் கடந்த பெண்மணி அவசரமாக தன் அதிர்ச்சியிலிருந்து மீண்டவர் நிரல்யாவின் வரவிற்காக வாழ்த்து தெரிவிக்க, அதை அடுத்து அவசரமாக தன் நிலையிலிருந்து மீண்டவர்கள் ஆளாளுக்கு வாழ்த்துக் கூறி அடுத்தபடியாக படிப்பைப் பற்றிக் கேள்வி கேட்டனர்!!!

அவளின் துறை பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்து குழுமியிருந்தவர்களின் பேச்சு தங்களின் ஆராய்ச்சி பற்றி, கம்பெனியின் ப்ராஜெக்ட் பற்றி என்று தடையின்றி சென்றது. கிட்டத்தட்ட சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த தலைப்பைப் பற்றியே தான் சுழன்றுக்கொண்டு இருந்தது என்று சொல்லலாம் அவளின் குழுவில்
மற்றொரு பெண்ணான ஜானகி அவசரமாக வந்து சேரும் வரை!!!

அரக்கப் பறக்க ஓடி வந்து மன்னிப்பு கேட்டபடி வந்தாள் முப்பது வயது மதிக்கத்தக்க ஜானகி.

“எப்பையும் போல் லன்ச் மீட் மறந்துவிட்டாயா??” என்று கிண்டலாக கேட்டார் ராஜேஷ்.

“மறந்து விடுவேன் என்று தெரிந்துதான் போனில் ரிமைண்டர் கூட வைத்தேன். ஆனால் லேப் செல்லும்
போது போனை எடுத்துப் போக மாட்டோம் என்பதை மறந்து விட்டேன்” என்றாள் அசடு வழிந்தபடி.

இதுதான் ஜானகி... நல்ல திறமைசாலி தான், ஆனால் தன் ஆராய்ச்சி தவிர இதர விஷயங்களை மறக்கும் தன்மை உடையவள்.

ஆராய்ச்சி கூடத்திற்கு உள்ளே மொபைல் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பது கம்பெனி விதி.
இன்னும் கேட்கப்போனால் உள்ளே சிக்னல் கூட கிடைக்காது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஏற்பாடு. அவசரம் என்றால் அங்கிருக்கும் லேன் போனை பயன்படுத்துவது தான் வழக்கம்.

தன் டீமில் சேர்ந்திருக்கும் மற்றொரு பெண்ணைப் பார்த்ததும் முதலில் தெரிந்தது அவளின் அழகு என்பது அவளின் பேச்சிலேயே தெரிந்தது!!!

“டீம்மிற்கு புதிதாக ஆள் சேருகிறார், அதுவும் ரொம்ப இளம் வயதிலேயே பி.ஹெச்.டி பண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னவுடன், கசங்கிய உடை, கலைந்த தலை... சோடா புட்டி கண்ணாடியுமாக
“அறிவாளி” என்றாலே சினிமாவில் சித்தரிக்கும் படியாக இருப்பிங்களோன்னு எதிர்பார்த்து வந்தால்.... வாவ்.... ஒரு நடிகை மாதிரி இத்தனை அழகாக வருவீங்கன்னு எதிர்பார்க்கவில்லை. இனி யாருமே எட்டிப்பார்க்காத நம் டீம்மிற்கு நிறைய ஆட்கள் உங்களைப் பார்க்கவாவது அடிக்கடி வருவார்கள்” என்று சிரித்தபடி ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்தாள் அந்தப் பெண்.

அவசரமாக அவர்களின் டீம் லீடர் குறுக்கிட்டு, “நிரல்யாவிற்கு திருமணம் ஆகிவிட்டது” என்று பொதுவாக சொல்லி வைத்தார்.

“அதுக்குள்ளவா??” என்று ஆச்சரியமாக நிரல்யாவை பார்த்துக் கேட்டவள், “அதுவும் சரிதான்... இத்தனை
அழகான பெண்ணை விட்டு வைக்க யாருக்கு மனசு வரும்...” என்று தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் அளித்தவள், “அதுக்கு என்ன?? அந்த காலத்தில் சரோஜாதேவி ஆரம்பித்து இந்த காலத்து தீபிகா படுகோன் வரை மணம் ஆகிவிட்டது என்பதால் அவர்களை நாம் பார்ப்பது இல்லையா என்ன??” என்று கேட்டபடி சாப்பிட ஆரம்பித்தாள் அந்த ஜானகி.

“தீபிகாவைத் தெரியும் ஆனால் அது யார் சரோஜா தேவி??” என்றான் பீகாரிலிருந்து வந்து வேலை செய்யும் சஞ்சய்.

“பாலிவுட் நடிகை ரேகா மாதிரி எத்தனை வயதானாலும் அப்படியே அழகு குறையாது இருந்த இந்த ஊர்
நடிகை” என்று சிரித்தபடி கூறிய ஜானகி, “உங்களைச் சலிக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கு, நீங்க எப்படி இவ்வளவு அழகாக இருக்கிங்க??” என்று நிரல்யாவைப் பார்த்துக் கேட்டாள்.

எந்தப் பதிலும் சொல்லாது லேசாக ஒரு புன்னகை பூத்த நிரல்யா அமைதியாக சாப்பிட்டாள்.

“ஆ…” என்று புரிந்த மாதிரி தலையை ஆட்டிய ஜானகி “இந்த மாதிரி அதிகம் பேர் உங்களைக் கேள்வி கேட்டு இருப்பாங்க இல்ல??” என்று கேள்வி கேட்டவள்,

“ஆமாம் எத்தனையோ ப்ராஜெக்ட் இருக்கும் போது போயும் போயும் எதுக்கு இதில் வந்து சேர்ந்திங்க?” என்றாள் சாப்பிட்டுக்கொண்டே.

“நான் எதையும் தேர்வு செய்யவில்லை... இந்த குழுவில் சேர சொன்னார்கள்” என்றாள் இவளின் பதிலை
எதிர்பார்த்து காத்திருந்த மொத்த டைனிங் டேபிள் ஆட்களையும் கவனித்தபடி.

“அதுதானே பார்த்தேன்... இந்த ப்ராஜெக்ட்டை பற்றி தெரியாம தான் மாட்டினிங்களா??” என்றாள் ஜானகி.

“வந்த முதல் நாளே ஏன் அவர்களை இப்படி பயமுறுத்தற ஜானகி?? என்று கேட்ட அவர்களின் குழு ஆளான குரு, “வேறு ஒன்றும் இல்லை நிரல்யா... கல்யாணம் ஆனவங்கன்னு வேற சொல்றிங்க... பி.ஹெச்.டி.க்காக வேலையே நிறைய இருக்கும்... நீங்க சேர்ந்து இருப்பது தான் ரொம்பவே அதிக நேரமும், கவனமும்
செலுத்த வேண்டிய ப்ராஜெக்ட் அதனால் தான் ஜானகி அப்படி கேட்டாங்க”

அவளின் இளமையான தோற்றத்தைக் கண்டு பி.ஹெச்.டிக்காக படித்துக்கொண்டு இருக்கிறாள் என்று
யூகித்தார்களே தவிர அவள் முடிக்கும் தறுவாயில் இருக்கிறாள் என்று யாரும் யூகிக்கவில்லை என்று புரிய எதை விளக்கவும் மனமற்று வெறும் தலையாட்டலுடன் முடித்து விட்டாள் நிரல்யா.

“பேசும் ஆர்வத்தில் சாப்பிட மறந்துவிட்டாய் பார்” என்று சிரித்தபடி அந்தப் பேச்சை மாற்ற, அடுத்த பத்து நிமிஷத்தில் ஏதேதோ பேசியபடி சாப்பிட்டு விட்டு எழுந்தார்கள்.

ஒருவழியாக லேட்டாக வந்த காரணத்தில் தட்டிலிருந்ததை அவசரமாக அள்ளிக்கொண்டு எழுந்த
ஜானகிக்காக காத்திருந்தவர்கள் மெல்ல விடைபெற்றுக்கொண்டு விலக... அவர்கள் செய்யும் ப்ராஜெக்ட்டை பற்றி பேசியபடி நிரல்யாவை அழைத்துக்கொண்டு குருவும் ஜானகியும் லேப்பிற்குள் சென்று எல்லாவற்றையும் விவரிக்க மீதி நாளும் அப்படியே கடந்தது!!!

ஒருவழியாக அன்றைய தினம் அவள் எதிர்பார்த்த படியாக எந்த பிரச்சனையும் இல்லாது முடியவே நிம்மதி பெருமூச்சுடன் எழும் போதுதான் அப்படி எல்லாம் முடியப்போவதில்லை என்று சொல்லும் விதமாக போன் வந்தது.

காலை எட்டு மணிக்கு எப்படி கிளம்பினானோ அதே வேகமும், சுறுசுறுப்பும் போட்டிப் போட இரவு பத்து
மணிக்கு வீட்டிற்குள் நுழைந்தான் கார்த்திக்.

புயல் வேகத்தில் நுழைந்தவன் கண்ணில் ஹாலில் இருக்கும் திவான் நாற்காலியில் அமர்ந்திருந்த அம்மா மல்லிகா கண்ணில் பட...

“அம்மா” என்று ஆச்சரியமாக அழைத்தவன், “ஊரிலிருந்து எப்ப வந்திங்க?” என்று ஆர்வமாக கேட்டபடி
அவர்களை நோக்கிச் சென்றான்.

“நான் கேட்க வேண்டிய கேள்வியை முந்திக்கொண்டு நீ கேட்கிறாயா??” என்று மல்லிகா பதில் சொல்லிக்கொண்டே அவனுக்குப் பின்னால் பார்த்தார்.

பார்த்தார் என்று சொல்வதை விட கண்களால் எதையோ தேடினார் என்று தான் சொல்ல வேண்டும்.

என்னத்தை தேடுகிறார் என்று தலையை லேசாக திருப்பிப் பார்த்தபடி முன்னே வர... அம்மாவிற்கு அருகில் அமர்ந்திருந்த பாட்டியும் அம்மா பார்த்த இடத்தையே வெறித்துக்கொண்டு இருப்பது புரிந்தது!!!

என்னத்தை இப்படி தேடுகிறார்கள் என்று திரும்ப திரும்பப் பார்த்தபடி அவர்கள் நடுஹாலில்
அமர்ந்திருந்த இடத்திற்கு வேகமாக இரண்டு படி இறங்கியவன் அப்படியே படியில் உட்கார்ந்து கால்களை நன்றாக நீட்டி “ஹாப்பாடா” என்று அமர்ந்தவன், “அம்மா நீங்க வேடிக்கை பார்ப்பது இருக்கட்டும்... எப்ப வந்திங்கன்னு கேட்டதற்கு இன்னும் நீங்க பதில் சொல்லவில்லை?” என்றான் நக்கலாக.

அவன் கேட்ட கேள்வியை அலட்சியப்படுத்தியவர், “எங்கடா நிரல்யா? இன்னுமாடா நடந்து வருகிறாள்??”
என்று மீண்டும் வாசல் புறம் பார்த்தார்.

“அவள் ஏன் என்னோடு வருகிறாள்??” சிரித்தபடி கேட்டவன் பின் பட்டென்று நிமிர்ந்து எழுந்து படியில் அமர்ந்து, “இன்னும் நிரல்யா வீட்டிற்கு வரவில்லையா?” என்று அவரையே திருப்பிக் கேட்டான்
கார்த்திக்.

“என்ன கேள்விடா இது... நீ தானே காலையில் அவளைத் தரதரவென்று ஆபிஸ் இழுத்துக்கொண்டு
ஓடினாய்?? இப்ப எங்களிடம் இன்னும் வரவில்லையா என்று கேட்கற?” என்றார் பாட்டி அதட்டலாக.

மணியைப் பார்த்தவன் பத்தே கால் என்று இருப்பதைப் பார்த்துவிட்டு.. அவசரமாக தன் பாக்கெட்டில்
இருந்த போனை எடுத்து அவளை அழைக்க, அதில் சுட்ச் ஆப் என்று வந்தது.


தொடரும்…..

அடுத்த பதிவு - வெள்ளி கிழமை.


DEAR READERS…..


கதை முழுவீச்சில் தொடங்கி விட்டது… படிக்கும் போது நீங்க எப்படி FEEL பண்ணிறிங்கன்னு எனக்கு தெரியாது.. ஆனா நான் பயங்கர THRILLலா FEEL பண்றேன்… தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ROLLER COASTER RIDE போவது போல்… நெஞ்சு படப்படவென்று அடித்துக்கொள்ள... வயிற்றில் ஒரு பிரளயம்… கண்களில் நீர் கசிய…. காதை கிழிக்கும் காற்று… நம்மை மீறி வாய் ஓ…. என்று அலறலுடன் செல்வோமே… . அதை அனுபவித்தால் மட்டுமே புரியும்… (என்ன மாதிரி ஜென்ம்டா இது?? என்று என்னை விநோதமாக பார்ப்பவர்களுக்காக.. MANUFACTURING DEFECT… ஒன்னும் பண்ண முடியாதாம்… டாக்டரே சொல்லிட்டாங்க… அப்ப உடனே MADE IN CHINAவான்னு யோசிக்காதிங்க…!!!)

உங்கள் கருத்துக்களை யாதுமாகி என்னுள் நிறைந்தவனே கருத்து திரியில் மறக்காமல் தெரிவிக்கவும்.. !!!
 
Status
Not open for further replies.
Top