கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி நிற்கின்றாய் நீ....! அத்தியாயம் (1)

அத்தியாயம் (1)

சென்னை -
அதிகாலை 5:00 மணி,
"ஆதிரா.... ஆதிரா.... எழுந்திருடா.... மணியப் பாத்தியா....?"
"அப்பா.... இன்னும் 5 நிமிசம் ப்பா.... ப்ளீஸ் ...."

" இப்ப கிளம்பினா தான்டா வாக்கிங் போயிட்டு சீக்கிரமா வரலாம்.... எழுந்திருடா...." செல்லம் கொஞ்சினார் அப்பா தசரதன்.

"ஏங்க.... பேசாம நீங்க மட்டும் போயிட்டு வரலாம்ல.... ஏன் அவள பாடா படுத்துரீங்க....? அவளே புராஜக்ட் விசயமா பெங்களுர் போயிட்டு ராத்திரி 2 மணிக்கு தான வந்தா...." என்றார் அம்மா பர்வதம்.

"ம்ம்... நீ ஒருத்தி போதும் இவள கெடுக்கறதுக்கு.... முதல்ல நம்மோட உடல் நலம் தான் முக்கியம் .... புரிஞ்சிதா..." என முறைத்தபடி கிளம்பினார் தசரதன் கடற்கரை நோக்கி.

போர்வையிலிருந்து எட்டிப் பார்த்த ஆதிரா, "சூப்பர்ம்மா .... இன்னிக்கும் ஏதோ பிட்டப் போட்டு காப்பாத்திட்டீங்க.... நல்லவேளை... தப்பிச்சேன்.... இல்லன்னா இந்த மார்கழி மாசக் குளிரில நான் உறைஞ்சே போயிருப்பேன்...." என சிணுங்க, அம்மா வாயடைத்து நின்றார்.

"என்னம்மா .... என்னாச்சு....?"
"ம்ம்... அங்கப் பாரு...." என அவள் முகத்தைத் திருப்ப, எதிரில் தசரதன் நின்றிருந்தார் இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி முறைத்துக் கொண்டு.

"அச்சச்சோ.... மிலிட்டரி...." என்றலறியபடி எழுந்தவள் கழிவறைக்குள் ஓடி சிற்சில நிமிடங்களில் கிளம்பி வந்தாள் டீசர்ட், டிராக்குடன்.

"சா.... சாரிப்பா...." என்றவளின் பாவமான முகங்கண்டு சிரித்தே விட்டார் தசரதன்.
"சரி வாடா ஆதிக்குட்டி நாம வாக்கிங் போகலாம் ...." என இருவரும் நடக்கத் தொடங்கிய நிமிடம் பனித்திரையை விலக்கி அவளின் கன்னக்குழி அழகை எட்டிப் பார்த்தான் சூரியன்.

தசரதன், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர். அடுத்த சில மாதங்களில் இயக்குனராகப் போகிறார். ஆதிரா ஒரே செல்ல மகள். தன் ஆதியும் அந்தமும் இவளே என அவள் பிறந்தவுடன் முடிவு செய்திருந்தார்.


மனைவி பர்வதம் ஒரு சிறுகதை எழுத்தாளர். பற்பல இதழ்கள் இவரின் கவித்துவமான எழுத்துகளுக்காகவே கூடுதலாக விற்பனை ஆகும். எழுத்தாளர் லட்சுமியின் தீவிர ரசிகை.... இல்லை.... இல்லை.... பக்தை என்றே சொல்லலாம்.

தற்போது, சாகித்திய அகாதமி விருதாளர் எழுத்தாளர் லட்சுமியின் நூற்றாண்டு விழாவிற்கு சிறுகதைப் போட்டி நடத்துவதைப் பற்றி தான் தன் தோழிகளுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

ஆதிரா நெடுந்தூரம் நடந்த களைப்பில் கடற்கரை மணலில் அமர, "என்ன ஆதிம்மா.... வயசுப்புள்ள அதுக்குள்ள சோர்ந்துட்டியா.... அங்க பாரு அப்பாவ என்னம்மா வேகமா நடக்கறாரு...." என்றார் சிதம்பரம், தசரதனின் நண்பர்.

"இல்ல மாமா.... கொஞ்சம் அசதியா இருக்கு.... இரவு தூங்கறதுக்கு கொஞ்சம் நேரமாயிடுச்சு....அதான்...." என்றபடி திரும்பியவள் அதிர்ந்தாள் அங்கே அப்பாவைக் காணவில்லை. அந்த இடத்தில் பெரும் கூட்டம் சூழ்ந்திருக்க, "அப்பா.... அப்பா..." என்றபடி ஓடினாள்.

அகத்தியர் மலை,
"சாமி .... சாமி .... எங்க இருக்கீங்க....?" மெதுவாக அழைத்தான் அமிழ்தன்.

எந்த பதிலும் இல்லாததால் ,அந்த அடர்ந்த அருவிக்காட்டின் மத்தியில் ஓசையில்லாமல் நடந்த அமிழ்தன் சற்றே ஒலியைக் கூட்ட அந்த ஒற்றைப் பனை மரத்தினை ஒட்டிய கரட்டின் மீது ஒரு தீப ஒளி தெரிந்திட,

"ஓ.... இங்க தான் இருக்கீங்களா...? நான் கூட பயந்துட்டேன்...." என்றவன் மெல்ல அந்த பனை மரத்தை
நெருங்கினான்.

கீழிருந்து அந்த பனைமரத்தின் தண்டைப் பிடித்து மேலேற முயற்சித்து தோற்றவன், "சாமி .... சாமி .... இதென்ன சோதனை....?"
"ம்ம்.... சோதனை தானப்பா சாதனைக்கான ஒரே வழி.... முயற்சியே வெற்றி தரும்...ம்ம்.... முயல் .... முயல் ... நன்றாக உற்றுப் பார்.... இருளுக்குள்ளே வழி தெரியும்....!" என்ற ஒலி அவனைக் கிலியூட்டியது.

"சா.... சாமி....சும்மா இருந்த என்ன இங்க வர சொல்லிட்டு விளையாடாதீங்க.... எனக்கு நிரம்ப பயமா இருக்கு...." அமிழ்தன் குரலில் அப்படி ஒரு நடுக்கம்.

"ஹாஹ்ஹா.... அப்படியா....? நானா உன்னை இங்க வரச் சொன்னேன்....? நல்லா யோசிச்சுப் பாரு .... ஹாஹ்ஹா...." அந்த சிரிப்பில் அருவிக் காடே அதிர்ந்தது மாலை மங்கும் அந்நேரத்தில்.

"ஆ.... ஆ.... ஆமாம்.... இ .... இ .... இல்ல...." அவன் தடுமாற சிரிப்பு கூடியதில் அவன் இதயமே உறைந்தது.

" உற்றவனே உடையவன்
உற்றுப்பார் நீ யாரென்று
உனக்கே புரியும் உடைவாள்
உடையவன் நீயோ மாபாதகன்
உயிரறுக்கும் உனை வேரறுப்பான்

உமையொருபாகன் உறுதியாய்....!"

என்று மேல்திசையில் நிலவு பூக்கும் நேரத்தில் அசரீரீ ஒலிக்க, குளிரில் நடுங்க வேண்டியவன் குற்ற உணர்வில் நடுங்கினான் வியர்வை முத்துக்களை முகத்தில் சூடியபடி.

"சா.... சா .... சாமி.... எ .... எ .... என்ன சொல்றீங்க....?" என்றபடி அந்த பனை மரத்தை ஒட்டிய சங்கிலியைப் பிடித்தபடி நின்றிருந்தவனின் தோளில் ஒரு மென்கரம் தொட திடுக்கிட்டுத் திரும்பினான்.

அவன் சிவந்த முகம் வெளிறிக் கொண்டிருந்தது. பனை மரத்துக் கரட்டில் ஜோதிப் புல் தனலைக் கக்கியபடி ஒளிர்ந்துக் கொண்டிருந்தது தன்னந்தனியாய்.
காடெங்கும் நிசப்தம்....


(தொடரும்)
 
Last edited:
Top