யாழ்க்கோ லெனின்
Member
அத்தி (2)
சென்னை,
"அப்பா.... அப்பா...." என்றலறியபடி ஓடினாள் ஆதிரா கூட்டத்தை நோக்கி.
அங்கே அவர் தன் மடியில் ஒரு சிறுவனைக் கிடத்தியப்படி உட்கார்ந்திருந்தார்.
கூட்டத்தை விலக்கியவள் அவரை நலமாகப் பார்த்ததும் முகம் மலர்ந்தவளாய், "என்னப்பா.... என்னாச்சு ....?" என்றிட,
"யாருன்னு தெரியலம்மா....தூரத்துல இவன ரெண்டு முரட்டு தடியனுங்க துரத்திட்டு வந்தானுங்க.... இவன், "சார்... சார்... என்னைக் காப்பாத்துங்க...." ன்னு சொல்லிட்டே பொத்துன்னு என் காலடில விழுந்துட்டான்.... கூட்டம் கூடினதும் அவங்கள காணோம்...."
"சரிப்பா.... கவலைய விடுங்க.... எழுந்திருங்க நாம போலீஸ்ல இவன ஒப்படைச்சிடலாம் .... அவங்க பாத்துப்பாங்க...." எனக் கிளம்ப எத்தனிக்க, கூட்டம் கலைந்தது. அதில் இரு முகங்கள் மட்டும் சினத்தில் சிவந்திருந்தன.
"நல்ல நேரத்தில இந்த கிழட்டுப் பய உள்ளப் புகுந்து எல்லாத்தயும் கெடுத்திட்டான்... இவன....இவன ...." என தன் பான்பராக் கறை படிந்த பற்களைக் கடித்தபடி வசைபாடினான் அதில் ஒருவன்.
இவர்களின் மொழிகளை கவனியாத இருவரும் எதிர்வந்த காவல் அதிகாரியிடம் அச்சிறுவனை ஒப்படைத்து விட்டு வீடு நோக்கி நடந்தனர்.
இருவரும் கால்களைக் கழுவிவிட்டு உள்ளே நுழைகையில் அம்மா பர்வதம், "என்ன சார்.... போற போக்குல ஒரு சமூக சேவையா....? ம்ம்... பலே .... பலே...." சிரிக்க புரியாமல் விழித்தனர்.
" என்ன பர்வதம்.... என்ன சொல்ற...?"
"ம்ம்... இதப் பாருங்க புரியும்...." என தன் செல்பேசியை நீட்ட, ஆர்வமாய் வாங்கிய ஆதிரா,
"அப்பா.... கடற்கரையில நடந்த சம்பவத்த யாரோ சுடச்சுட பேஸ்புக் ல போட்டிருக்காங்க.... வேற லெவல் லைக்ஸ் பிச்சுக்கிட்டு போகுது பாருங்களேன்...." உற்சாக மிகுதியால் குதித்தாள்.
"அட .... என்னம்மா நீ.... இதெல்லாம் ஒரு பெரிய விசயமா.... கண் முன்னால ஒருத்தருக்கு ஒரு பிரச்சினை.... அதுக்கு ஏதோ என்னால முடிஞ்ச உதவி....இதப் போய் பெரிசு பண்ணிக்கிட்டு...." சிரித்து விட்டு குளிக்கச் சென்றார் தசரதன்.
"என்னம்மா இது.... அப்பா இப்படி சொல்றாரு...?"
"அதான் ஆதிரா.... அவரோட குணாதிசியமே.... எதையுமே பெரிசா எடுத்துக்கிட்டு அலட்டிக்கற ஆளே இல்ல அவரு....சரி.... சரி.... போய் குளிச்சிட்டு தயாராகு கல்லூரிக்கு.... மணி எட்டாகப் போகுது...." எனத் துரிதப் படுத்திட ஓடினாள் தன்னறைக்குள் மான்குட்டி என.
கிளம்பி வந்த மகளை பார்த்து அசந்து போன பர்வதம், அவளை உச்சி முகர்ந்து நெட்டி முறித்தார்.
"என்னம்மா.... அப்படி பார்க்கறீங்க...?புதுசா பாக்குற மாதிரி...."
"ம்ம் .... இந்த சந்தனக் கலர் சுடில தேவதை மாதிரி இருக்கடி செல்லம்.... அதான்.... என் கண்ணே பட்டுடப் போகுதுன்னு நெட்டி முறிச்சேன்...."
"ம்ம்... ஆஹா.... கவிதை .... கவிதை....என் பொண்டாட்டி என்னம்மா ஃபீல் பண்றா....?" என்றபடி வந்த தசரதனை பர்வதம் முறைத்தார்.
"ம்ம்... ஓகே .... ஓகே.... கூல்... கூல்... அப்பாவ முறைக்காதீங்கம்மா...."
"நான் அவர முறைக்கல தாயி.... அதான எப்பவும் நீ அப்பா பொண்ணு தான் .... க்கும்..." என தன் சங்குக் கழுத்தை சொடுக்கியபடி அடுக்களைக்குள்ளே சென்று விட, இருவருக்கும் ஏதோ போல் ஆகிவிட்டது.
"அப்பா.... என்னப்பா இது....? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான .... அதைத் தான் அம்மா சொன்னாங்க... நீங்க பாட்டுக்கும் கலாய்ச்சு விட்டுட்டீங்க..."
"என்ன ஆதிக்குட்டி காக்கா குஞ்சு கதைய சொல்ற.... என் பொண்டாட்டி மயில்டா நீ மயில் குஞ்சு.... அப்படிச் சொல்லிப் பழகணும் புரிஞ்சுதா.... ம்ம்..."
" ஆஹாங்..... அப்படீங்களா.... எஸ் யுவர் ஆனர்... போங்க.... போய் அம்மாவ சமாதானப் படுத்துங்க முதல்ல ...."
"அட .... ஆமாம்ல.... இல்லன்னா வேதாளம் முருங்க மரம் ஏறிட்டுதுன்னா எறங்கவே எறங்காது... நமக்கும் சோறு முக்கியமுல்ல...." என்றவர் மகளுடன் அடுக்களைக்குள் சென்றார்.
" பர்வதம்... பர்வதம்...." மெல்ல பூனை நடை நடந்து உள்ளே நுழைந்தனர்.
"ம்ம்... பர்வதத்துக்கு என்ன .....? இங்க தான் இருக்கேன்...." என்றவர் கரண்டியுடன் திரும்ப,
"அச்சச்சோ.... அப்பா உங்க கதை அவ்ளோ தான் இன்னிக்கு...." ஆதிரா சிரிக்க,
"ஐயையோ.... ஆயுதம் ஏதும் வேண்டாம் கண்மணி.... உன் பேரன்பே போதுமடி தங்கமே...." என அவர் கையிலிருந்த கரண்டியை வாங்கிக் கொள்ள,
பர்வதத்தின் முகத்தில் கூடிய நாணச் செந்தூரம் இன்னும் அழகாக்கியிருந்தது அவரை.
"ப்பா.... என்னா அழகு என் மயிலுக்கு.... என்ன மயில் குஞ்சு சரிதான....?" கேட்டார் ஆதிராவைப் பார்த்து,
"ம்ம்.... சும்மா இருங்க.... நீங்க வேற....கொஞ்சம் கூட இங்கிதமே கிடையாது உங்களுக்கு.... பெத்த பொண்ண பக்கத்துல வச்சிக்கிட்டு...." என்றவர் முகம் மேலும் சிவக்க, வெட்கம் தாளாமல் ஓடிவிட்டார் தோட்டத்திற்கு.
"ப்பா.... வேற லெவல் நீங்க ....அம்மாவ இப்படியா வெட்கப் பட வைப்பீங்க....? உங்களோடது காதல் கல்யாணம்னு சொன்னாங்க.... அந்த காதல் ஒரு சொட்டுக் கூட குறையவே இல்லப்பா.... இப்படியே நீங்க ரெண்டு பேரும் மகிழ்ச்சியா வாழணும் காலமுழுக்க.... அது தான் என்னோட பிரார்த்தனை...." கண் கலங்கிய மகளை அணைத்தபடி உச்சி முகர்ந்தார்.
"இதுக்கு ஏன்ம்மா கண் கலங்குற.....என் உயிரே நீங்க ரெண்டு பேரும் தானம்மா...." என அவள் விழிகளைத் துடைத்த நொடி, தசரதனின் செல்பேசி ஒலித்தது.
எடுத்து செவி மடுத்தவர், "ம்ம்... சொல்லு மாணிக்கம்.... அப்படியா....? எப்போ....? ம்ம்... இதோ வர்றேன்...." என்றவர் புயலென கிளம்பினார்,
"ஆதிம்மா.... நீ ஆட்டோ பிடிச்சு போயிடுடா காலேஜ்க்கு ....அப்பாவுக்கு ஒரு எமர்ஜன்சி ....அம்மாட்ட சொல்லிடு...." என்றவர் பதிலேதும் எதிர்நோக்காமல் பறந்தார் தன் காரில். உள்ளே வந்த பர்வதம்,
"எங்கடி அப்பா....?" கேட்க, சொல்லி முடிக்க திகைத்த பர்வதம், "சாப்பிடாம கூட போற அளவுக்கு என்ன எமர்ஜன்சி...?" சிந்திக்கலானார்.
அகத்தியர் மலையில்,
அமிழ்தன் அசரீரீ ஒலி கேட்டு அரண்டிருந்த வேளையில் அவன் தோளில் ஒரு மென்கரம் பட பதட்டத்துடன் திரும்பினான்.
அந்த பழக்கப்படாத இருட்டில், நிழலுருவமாய் ஒரு வெண்தாடி உருவம் தெரிய, "யா... யாரது...?"
"ம்ம்... என்ன அமிழ்தா.... அதுக்குள்ள என்ன மறந்துட்டியா...?"
பரிச்சியமானக் குரலாதலால், "ஓ.... நீ.... நீயா.... எ .... என்ன இந்த வேளைல ....அதுவும் இங்க....?"
"என்னடா எதுவும் தெரியாத மாதிரி பேசுற.... நீ தானடா இன்னிக்கு இங்க வரச் சொன்ன.... மறந்துடுச்சா.... இல்ல வேற எதுனா திட்டம் போடுறியா...?" அவன் குரலில் அப்படி ஒரு குரூரம்.
"ஐயையோ.... மலைச்சாமி....உன்னை ஏமாத்த முடியுமாடா....? உன்னைப் பகைச்சிக்கறதும் எமன வெத்தல வச்சி அழைக்கறதும் ஒண்ணு தான்னு எனக்குத் தெரியாதா...?"
"ம்ம்... புரிஞ்சா சரி...." என்றான் அந்த வெண்தாடியை நீவியபடி.
"அது சரி.... இதென்னடா தாடியோட புதுக் கோலம் ....?"
"ஹாஹ்ஹா.... அது ஒண்ணுமில்லடா.... போன பெளர்ணமி வெள்ளியங்கிரி போயிருந்தேன்.... அங்க ஒரு சாமியாரப் பார்த்தேன்.... அவர் இமாச்சலத்தில இருந்து வந்தேன்னு சொன்னார்....
ரெண்டு நாளு அவர் கூடவே இருந்தேன்.... நிறைய சித்து வேலை காமிச்சாரு.... அசந்துட்டேன்....அதன் விளைவு தான் இது...." என நிறுத்த,
"என்ன சொல்ற.... நீயே அசந்து போற அளவுக்கு அப்படி என்ன சித்து வேலை காமிச்சாரு....?" வாயைப் பிளந்தான் அமிழ்தன்.
"சொல்றேன் கேளு.... நான் ஒரு மனமாறுதலுக்காகத் தான் வெள்ளியங்கிரி மலைக்குப் போனேன்.... அங்க தான் எதேச்சையா அவரப் பார்த்தேன்....
என்னப் பார்த்ததும் ஏதோ ரொம்ப வருசம் நெருக்கமா பழகுன மாதிரி பேசினார்... நானே அசந்துட்டேன் என் பேரச் சொன்னதும்.... அவர் பேச்சுல ஏதோ ஒரு ஈர்ப்பு.... நிறைய ஆன்மீக விசயங்கள் பேசினாரு....
ரொம்ப புதுசா இருந்துச்சு.... இன்னும் நிறைய கேட்டுட்டே இருக்கணும்னு தோணுச்சு.... அதான் 2 நாள் அவர் கூடவே இருந்துட்டேன், அவர் மலைய விட்டு இறங்கற வரைக்கும் ...."
"ஹாஹ்ஹா.... அப்படின்னா கூடிய சீக்கிரம் இந்த பொழப்ப தூக்கி எறிஞ்சிட்டு சாமியாராகப் போறேன்னு சொல்லு....!" அமிழ்தன் சிரிக்க,
"போடா இவனே.... கொஞ்சம் அசந்திருந்தா இப்பவே நான் சாமியாரா போயிருப்பேன்...."
"என்னடா சொல்ற....?" அமிழ்தன் ஆச்சர்யப்பட,
"ஆமாம்டா.... நடந்தத சொல்றன் பதறாம கேளு.... அன்னிக்கு நல்ல நிலா வெளிச்சம்.... ரொம்ப குளிரு வேற .... கம்பளிப் போர்த்தியும் தாங்கல .... நடுங்கிட்டு இருந்தேன்.... என்னைப் பார்த்து சிரித்தபடி,
" என்னய்யா மலைச்சாமி.... சட்டை, கம்பளின்னு போட்டே இப்படி நடுங்கற ..... என்னைப் பாரு இடுப்புல ஒரு கோமனம் தான் கட்டிருக்கேன், துளியும் குளிரல...." என்றார்.... அப்ப தான் நானும் யோசிச்சேன், "அட ஆமாம்ல.... எப்படி இவரால மட்டும் இப்படி குளிரத் தாங்க முடியுதுன்னு...."
ஆனா, சட்டுன்னு அவரு, "அதான் ஈசனோட மகிமை.... பேசாம நீ என்கிட்ட தீட்சை எடுத்திட்டு என் கூடவே இமாச்சலம் வந்திடு .... அங்க இருக்குற என்னோட ஆசிரமத்துக்கு உன்னை மேலாளராக்கிடறேன்..." அப்படின்னாரே பார்க்கலாம் எனக்கு திக்குமுக்காடிப் போச்சு...." என சற்றே நிறுத்தினான் மலைச்சாமி.
"என்ன மலைச்சாமி.... நம்மள மாதிரி அன்னாடங்காட்சிகளுக்கு இது பெரிய ஆஃபராச்சே.... ஏன் வேணாம்னு வந்துட்டே....? சரியான முட்டாள்டா நீ....!"
"அடேய்... நீ வேற.... முதல்ல நடந்தத முழுசா கேளு....!"
"சரி... சரி.... சுருக்கா சொல்லு.... ரொம்ப நேரம் இந்தக் காட்டுக்குள்ள நிக்கறது ஆபத்து...." என வேகப் படுத்தினான் அமிழ்தன் மனதில் ஏதோ நெருட.
அப்போது, எங்கிருந்தோ வந்த காற்று ஜோதிப் புல்லை முத்தமிட்டு அணைத்து விட்டு அகல, அங்கே கரிய நெடிய உருவம் ஒன்று இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.
(தொடரும்)
Last edited: