கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி நிற்கின்றாய் நீ....! அத்தி (3)

அத்தி (3)

சென்னை,
தசரதன் செல்பேசியில் வந்த அவசர செய்தியால் சாப்பிடக் கூட நேரமில்லாமல் பறந்தார் தன் கல்லூரியின் சென்னைக் கிளை அலுவலகத்திற்கு.

அவர் உள்ளே நுழைய மாணவி ஒருத்தி கண்ணீருடன் வந்து நின்றாள் தசரதன் முன்.

"என்ன போரா .... என்னம்மா ஆச்சு ....? ஏதோ பிரச்சினை, மாணவர்களெல்லாம் ஒண்ணு கூடி அட்மின் பிளாக்ல தர்ணா பண்றாங்கன்னு செய்தி வந்தது.... அதான் உடனே ஓடி வந்தேன்.... என்னாச்சு ....?! தெளிவா சொல்லு....!"
அவரின் இத்தனை வினாக்களுக்கும் விடையாய் அவள் அகன்ற விழிகளே பதிலளித்தன கண்ணீரால்.

"ஐயோ.... யாராவது வந்து என்ன நடந்ததுன்னு கொஞ்சம் சொல்றீங்களா ப்ளீஸ் ...." என்றார் சற்றுக் காட்டமாகவே.

கூட்டத்தில் இருந்த ஒருவன், "சார்... நான் சொல்றேன்.... எல்லாம் ஆர்னிதாலஜி லெக்சரர் அபினவ்வால வந்த வினை....! இதோட இரண்டாவது முறையா போராகிட்ட தப்பா நடந்துக்க முயற்சிப் பண்ணி இருக்கார்....முதல்ல அவர வேலைய விட்டுத் தூக்கணும்.... அப்ப தான் நாங்க வகுப்புக்கு வருவோம்.... இல்லன்னா...." என்ற அவனின் சின்னஞ்சிறு விழிகளில் அக்னித் துண்டுகள் ஆரவாரித்தன.

"சரி.... சரி.... உங்க நிலை எனக்குப் புரியுது விக்ரம்.... கொஞ்சம் பொறுமையா இருங்க .... நீங்க சொல்ற மாதிரி இப்படி சட்டுன்னுலாம் ஒருத்தர வேலைய விட்டுத் தூக்கிட முடியாது ....! ஏன் சஸ்பெண்ட் பண்றதுக்கு கூட ஒரு என்கொயரி கமிட்டி போட்டுத்தான் முடிவு பண்ண முடியும்.... அதனால எனக்கு ஒரு வாரம் அவகாசம் குடுங்க.... நான் இதப்பத்தி கல்லூரி முதல்வர்ட்ட பேசறேன்.... சரியா.... இப்ப எல்லாரும் சமத்தா வகுப்புக்குப் போங்க....!" என தசரதன் ஆறுதலாகக் கூறிட, கூட்டம் பனித்துண்டாய்க் கரைந்தது. சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டார் முதல்வர் தினகர் ராவ் மேல் மாடி உப்பரிகையிலிருந்து நடந்ததைக் கூர்ந்து கவனித்தப்படி.

தசரதன், மெல்ல படியேறி முதல்வர் அறைக்கு சென்று, "சார்.... உள்ள வரலாமா....?" என அனுமதி கேட்டபடி உள்ளே நுழைய, அவரை அப்படியே ஆரத் தழுவிய தினகர் ராவ், " கையக் குடுய்யா.... உன்ன மாதிரி ஆளாலத் தான் நமக்கு தேவை.... இக்கட்டான இந்தச் சூழ்நிலைய என்னம்மா சமாளிச்ச ..... பேஷ்... பேஷ்.... சூப்பர்...." எனக் கையைக் குலுக்கினார்.
"சார்... அதெல்லாம் இருக்கட்டும்.... இந்தப் பிரச்சினைய எப்படி சமாளிக்கப் போறீங்க....?"

"அதான் அசால்டா சமாளிச்சிட்டியே.... அப்புறம் என்ன?" முதல்வர் கேட்க,
"சார்.... எரியற நெருப்புல தற்காலிகமா தண்ணி ஊற்றி குளிர வச்சிருக்கேன் அவ்வளவு தான் .... இன்னும் முழுசா அணையில .... எப்ப வேணும்னாலும் மீண்டும் அது பத்திக்கலாம் .... அதுக்குள்ள நீங்க ....." என அவர் முடிப்பதற்குள்,

"ம்ம்.... சொல்லுங்க சார்.... அதுக்குள்ள என்ன....? என்னை என்னப் பண்ணப் போறதா உத்தேசம்....? இந்தச் சின்ன விசயத்துக்கு, அந்தப் பயலுக சொல்ற மாதிரி என்னை வேலைய விட்டுத் தூக்கப் போறீங்களா....? அப்படிலாம் பண்ண முடியாது சார்... எங்க மாமா யாருன்னு தெரியுமில்ல...." கிட்டத் தட்ட உறுமினான் அபினவ் பிரபாகர்.

" இங்கப் பாரு அபினவ்.... நீ யாரா வேணும்னா இருந்துட்டு போ.... அதப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்ல.... ஏற்கனவே ஒரு முறை, இந்த மாதிரி மாணவிகள்ட்ட அநாகரிகமாக நடந்துக்காதன்னு உன்னை எச்சரிச்சு அனுப்பினேன்.... ஆனா, நீ மறுபடியும் அதே தப்பப் பண்ற .... இந்த முறை நான் விடுறதா இல்ல ...." முறைத்தார் செவ்விழிகளால் தசரதன்.

"என்ன .... என்ன பண்ண முடியும் உன்னால ....? நீயும் என்ன மாதிரி ஒரு பேராசிரியர் அவ்வளவு தான ... அதுக்கு ஏன் இப்படி குதிக்குற....? ஏதோ அந்த டார்ஜிலிங் பொண்ணு சிம்லா ஆப்பிள் மாதிரி சும்மா தளதளன்னு இருந்தா.... கொஞ்சம் தொட்டுப் பார்க்கலாம்னு தோணுச்சு.... அதான் பறவைகள் பத்தின ஆராய்ச்சி கேம்ப்க்காக ஆனைமலை போனப்ப லைட்டா நூல் விட்டுப் பார்த்தேன் .... பச்சக்கிளி பட்டுன்னு ஓடி வந்து போட்டுக் குடுத்துடுச்சு.... நீயும் இத ஒரு பெரிய விசயம்னு எடுத்துக்கிட்டு பஞ்சாயத்து பண்ணிட்டுருக்க..... போவியா.... அவ என்ன உன் பொண்ணா....? எதுக்கு இப்படி கொந்தளிக்கற...?" என்ற அபினவ்வின் அகங்கார அலட்சிய வார்த்தைகளால் எரிச்சலின் உச்சத்துக்கே சென்று விட்ட தசரதன்,

"அடச்சே.... வாய மூடு.... இதுக்கு என்கொயரியே தேவை இல்லை.... நீயே ஒத்துக்கிட்டு வாக்குமூலம் கொடுத்திட்ட.... இத வச்சி உன்னை என்னப் பண்றேன் பாரு....?" என்றவர் தன் செல்பேசியுடன் வெளியேறினார்.

அந்த 20° ஏசியால் குளிர்ந்த அறையிலும், வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்த அபினவ், "யோவ் பிரின்சி .... எதையாவது பண்ணுய்யா.... இல்லன்னா இந்த வீடியோவ எங்கயாவது யூடியூப், இன்ஸ்டா, முகநூல்ன்னு எதுலயாவது போட்டுத் தொலைச்சிடப் போறான் அந்தக் கிழவன் ...." என்றபடி முஷ்டியை முறுக்கிட, சிரிப்பு தான் வந்தது முதல்வருக்கு.

" ஆனாலும் உன்னை மாதிரி ஒரு கோமாளி உலகத்துலயே இல்லய்யா.... இப்படியா ஒரு மனுசன் அப்பட்டமா வாக்குமூலம் குடுப்பான்.... அதுவும் எதுக்கெடுத்தாலும் நேர்மை நியாயம்னு பேசுற மனுசன் கிட்ட.... ம்ம்.... இனிமே ஒண்ணும் பண்றதுக்கில்ல....போ.... போய் சண்டக்காரன் கால்ல விழுந்து, இனிமே இப்படி பண்ண மாட்டேன்னு கதறி அழு.... எதுனா நல்லது நடக்குதான்னு பார்ப்போம்.... ஹாஹ்ஹா...." சிரித்தார் முதல்வர்.

"யோவ் பிரின்சி .... என்ன நக்கலா ....போயும் போயும் அவ கால்ல விழுறதா....? நெவர் .... என் தலைமுடி கூட யாரை வணங்காது...."

"இந்த எகத்தாளமான பேச்சு தான் உன்னை இந்த சூழ்நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கு..... இனியும் தாமதிச்சா.... பாலியல் வன்கொடுமைன்னு எதுனா கேஸ்ஸ போட்டு உள்ள வச்சிடுவாங்க.... அப்புறம் இந்த நிறுவனத்துக்கு இயக்குனராகும் உன் கனவு கனவாகவே போயிடும் .... அப்புறம் உன் இஷ்டம் ...." முதல்வர் சொல்ல, பற்களைக் கடித்தான் அபினவ்,

"எல்லாம் இந்த மாணிக்கத்தால வந்தது .... அவன் மட்டும் இந்த நேர்மை தவறாதக் கிழத்துக்கு செய்தி சொல்லாம இருந்திருந்தா, இந்த சிக்கலே வந்திருக்காது.... இந்த பசங்க கொஞ்ச நேரம் கத்திப் பாத்துட்டு பேசாம கலைஞ்சுப் போயிருப்பாங்க...."என்றபடி.
இருவரும் பேசிக் கொண்டிருப்பதை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த மாணிக்கத்தை கவனித்துவிட்ட அபினவ், பட்டென கதவைத் திறக்க, தடுமாறி விழுந்தான் மாணிக்கம் தேநீர்க் கோப்பைகளுடன்.
இதை ஏதும் அறிந்திடாத தசரதன், சிறிது நேரம் போரா, விக்ரமிடம் ஆறுதலாகப் பேசிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.
வீட்டுக்குள் நுழைய, அங்கே பர்வதம் தன் கைப்பேசியையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். விழிநீர் உருண்டு செம்பட்டுக் கன்னத்தை நனைத்திருந்தது.
ஏதும் புரியாத தசரதன், "பர்வதம்... என்னாச்சும்மா....?" என அவர் தோளைத் தொட, "என்னங்க.... என்னங்க....உங்க .... உங்க உயிருக்கு ஏதோ ஆபத்தாம்...." என்றவர் தசரதனின் நெஞ்சில் சாய்ந்து அழத் தொடங்கினார்.

அகத்தியர் மலை,

அமிழ்தனிடம் மலைச்சாமி தன் வெள்ளியங்கிரி நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டிருந்த சமயம், எங்கிருந்தோ வந்த காற்று மெல்லிய ஒளியால் அந்த இருட்டுப் பிரதேசத்தை வெளிச்சமாக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்த ஜோதிப் புல்லை முத்தமிட்டு அணைத்துச் செல்ல, அங்கே கரிய நெடிய உருவம் ஒன்று இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

" அமிழ்தா....என்னடா இது, திடீர்னு இருட்டாயிடுச்சு....?"
"ம்ம்.... இந்த இடமே இப்படித்தான்.... நாம இப்ப இங்கயிருந்து வெளியேறுவது தான் உத்தமம் ....இல்லன்னா இங்க இருந்து தப்பிக்க வழியே இல்லை.... வா வேகமா கிளம்பலாம்...." என மலைச்சாமியை துரிதப் படுத்திய விநாடி அவனருகில் அந்த உருவம் நின்றிருந்தது வழியை மறைத்தபடி.

யாரும் எதிர்பார்த்திடாத அந்தத் தருணத்தில் திக்குமுக்காடிப் போயிருந்தான் அமிழ்தன்.

மலைச்சாமியோ பின்னங்கால் பிடரியில் பட ஒடிக் கொண்டிருந்தான்.
"யா.... யா .... யார் நீ.... நீங்க....?"

"ம்ம்... வா சொல்றேன்...." என்றபடி தன் கையில் வைத்திருந்த கொக்கரையை (மாட்டுக் கொம்பினால் செய்யப்பட்ட ஒரு இசைக்கருவி) எடுத்து ஊதினான் அந்த காணி இனப் பழங்குடியன்.

அந்த சத்தம் எக்காளம் போல சன்னமாக இருக்க, அமிழ்தனுக்கு விபரீதம் உள்ளங்கை நெல்லிக் கனியாக விளங்கியது.

" நீ .... நீ.... காணிப் பழங்குடியா....?"
"ஆமாம்டா.... எங்க பூமிக்குள்ள நீ ஏன் வந்த ....? உங்கள மாதிரி கேடுகெட்ட மனித சகவாசமே வேணாம்னு தான தனியா நாங்க இங்கக் குடியிருக்கோம்.... காடு தான் எங்க ஆத்தா....எங்க குல தெய்வம் தம்பிரமுத்தான் தான் எங்க ஐய்யன் ..... பல ஆயிரம் வம்சா வம்சமா எங்கள காக்குற சாமி அந்த அகத்தீஸ்வரன் தான் ...." என்றபடி தூரத்தில் தெரிந்த அந்த மலை உச்சியை நோக்கி கன்னத்தில் போட்டுக் கொண்டான் கடம்பன் எனும் காணிப் பழங்குடியன்.

சிறிது நேரத்தில் அங்கே அவன் கூட்டாளிகள் வந்து சேர்ந்தனர்.
"டேய் கடம்பா .... என்னாத்துக்கு இப்படி அகத்தீசுவரன் நேசிக்கிற சிவ வாத்தியமான கொக்கரைய ஊதின....? எதுனா முக்கியமான சங்கதியா....?" கேட்டான் கொம்பன்.

"அது ஒண்ணுமில்லடா.... இவனும் இவன் கூட்டாளியும் ரொம்ப நேரமா இந்த பனை மரத்து கரட்டாம்பாறை கிட்ட நின்னு ரகசியம் பேசிட்டு இருந்தாங்க.... எனக்கு தெளிவா எதுவும் கேட்கல, அதனால பக்கத்துல வந்தேன்.... அதுக்குள்ள அவன் சிட்டா பறந்துட்டான் இவன் மட்டும் மாட்டிக்கிட்டான்....எனக்கெண்ணுமோ இவனுங்க எதையோ திருடத் தான் வந்திருக்கானுங்கன்னு தோணுது கொம்பா..."

"ஓ..... அப்படியா சங்கதி....? விடு.... இவன நான் பாத்துக்கறேன்..."
"என்னை விட்டுடுங்க.... எனக்கு எதுவும் தெரியாது.... நான் சும்மா தான் இங்க வந்தேன்...!."

. "ஹாஹ்ஹா... அப்படியா....? ஒரு நாழிகை நாகப் பொதிகைல இவன தங்க விட்டா, தானா உண்மை வந்திடப் போகுது..... இழுத்துட்டு போங்கடா...." என்றார் அந்த 150 வயது ஒற்றை நாடி முதுகிழவர்.

"சரியா சொன்னீங்க தாத்தா.... டேய் கொம்பா, செங்கன கூட கூட்டிட்டு போ.... அங்க வஜ்ரகேது கோவில் மேற்குவாசல் கிட்ட உள்ள வேட்டைக் கருப்பனுக்கு முன்னாடி இவன விட்டுட்டு திரும்பிப் பார்க்காம வந்திடனும், புரிஞ்சதா...? போன தடவை மாதிரி ஏதும் தப்பு நடந்தது அப்புறம் இந்த கடம்பனோட ருத்ரதாண்டவத்த நீங்க பாக்க வேண்டியிருக்கும்...." என்றான் தன் முட்டை விழிகளை உக்கிரமாய் உருட்டியபடி.

"ஹாஹ்ஹா.... வா.... வா.... சீக்கிரமா அவனக் கொண்டு வா...." காற்று கூட புக அஞ்சிடும் நாகமேகக் குன்றின் உச்சியில் அம்சமாய் வீற்றிருக்கும் வஜ்ரகேது கோவில் மேல் வாசலிலிருந்து வந்தது அந்த கரகரத்தக் குரல்.

பேச்சு மூச்சின்றி செய்வதறியாது நின்ற அமிழ்தன், "சாமி .... உங்கள நம்பித்தான இங்க வந்தேன்.... இப்ப என் நிலைமையைப் பாத்தீங்களா...? இன்னும் எவ்வளவு நேரம் என் உயிர் எனக்கு சொந்தம்னு தெரியல...." மனதிற்குள் குமைந்தவனின் விழிகளில் வெந்நீர் ஊற்று.

" வாழ்தல் எளிதே

வரைமுறையுடன்
வாழ்வதே அரிது!
வடமலையானவன்
விழிகளின் உக்கிரம்
வையமறிந்ததே உணர்
வருவான் நிச்சயமாய்

வருத்தமே வேண்டாம்...."
என்ற தேமதுரக் குரல் அமிழ்தனின் காதுக்குள் கேட்க, பொங்கும் காவிரியாய் இருந்த விழிகள் தற்போது புன்னகை சிந்தின.

"முன்ன சொன்னதுக்கும் இப்ப அசரீரீ சொல்றதுக்கும் முரணா இருக்கே...." யோசித்தான் அமிழ்தன்.
அப்போது, இமைக்கும் நொடியில் ஒரு கூரிய வேல்கம்பு இவனை நோக்கி புயலாய் வர புன்னகை சட்டென மறைந்தது.

(தொடரும்)


 
Top