கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாமிருக்க பயமேன்

Rajasree Murali

Moderator
Staff member
விரக்தியின் உச்சத்தில் இருந்தாள் நேத்ரா. தொலைக்காட்சி தொடர்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துக்கொண்டிருந்தாள். வெள்ளி திரையிலும் இரண்டொரு படங்களிலும் தலை காட்டினாள். பார்க்க மாநிறம். ஆனால் பளிச்சென்ற தோற்றம். படிப்பு +2 மட்டுமே. அவள் வசிக்கும் தெருவில் நிறைய துணை நடிகர்கள், நடிகைகள், க்ரூப் டான்சர்கள் என நிறைய பேர்கள் குடியிருந்தனர்.

சிறிய வயதிலேயே அப்பா ஒரு விபத்தில் காலமாகி விட்டதால் இவளுக்கு துணை அம்மா ஒருவள் மட்டுமே. அம்மா அந்த கால துணை நடிகை. ஆனால் இரண்டு வருடங்களாய் இருதய நோய் அவளை பாடாய் படுத்துகிறது. பெரிய அளவில் வைத்தியம் பண்ணிக்கொள்ள பண வசதி இல்லை. அதனால் அவளால் தொடர்ந்து நடிக்கவும் முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாத போது அக்கம் பக்கம் இருந்த சின்ன திரை வெள்ளி திரை துணை நடிகைகள் நேத்ராவை எப்படியோ கஷ்டப்பட்டு இந்த துறையில் இழுத்து விட்டார்கள்.

ரொம்ப வருமானம் இல்லையென்றாலும் அம்மா பெண் இருவருக்கும் போதுமானதாக இருந்தது. அந்நாள் இப்போது நான்கு மாதங்களாக உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவால் சுத்தமாக அனைத்து தரப்பினரும் முடங்கி போக இவர்களுக்கு மட்டும் வாழ்க்கை ஓடும். ஒரு மாதம் எப்படியோ கையில் உள்ளதை வைத்து சமாளித்தாள். அடுத்த மாதம் கடன் வாங்கினாள். இந்த இரண்டு மாதங்கள் ரொம்பவுமே சிரமப்பட்டாள். அரசு தந்த 1000 ருபாய் மற்றும் இலவச அரிசி பருப்பு இதை வைத்து எப்படியோ வண்டி ஓடியது.

இன்னைக்கு நிலைமை சரியாகி விடும் நாளைக்கு சரியாகி விடும் என்று நாட்கள் நகர்ந்தன. தவிர இயல்பு நிலை வரவே இல்லை. ஒரு புறம் கடன் கொடுத்தவர்கள் இன்னொருபுறம் வீட்டு ஓனர் என அழுத்தம். நேத்ரா ஒரு முடிவுக்கு வந்தாள். இயலாமை ஏற்படும் பொது சில பேர் முட்டாள் தனமாக முடிவெடுக்கும் தற்கொலை தான் தீர்வு என்று நினைத்தாள். எந்த கஷ்டமும் கிடையாது. சட்டென்று அம்மாவின் நினைவு வந்தது. ஐயோ, யாருமில்லாத அனாதை ஆகி விடுவாளே அம்மா, என்ன செய்வது. மனித மனம் தானே. உடனே வேறு ஒரு எண்ணமும் தோன்றியது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் அம்மாவை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் விட்டு விடுவார்கள். கவலை இல்லை என்று துணிந்து இன்று தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டியதுதான் என்று மடமடவென அதற்காக தயாரானாள்.

அம்மாவை கடைசியாக ஒரு முறை பார்த்தாள். நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். மனம் சட்டென்று இளகி கண்களில் கண்ணீர் வந்தது. பாவம் அம்மா வாழ்க்கையில் ஒரு சுகமும் படவில்லை என நினைத்தவள், கூடாது இப்போது இந்த எண்ணமெல்லாம் வரவே கூடாது என்று தன்னை தானே சமாளித்துக்கொண்டு சமையல் அறைக்கு வந்தவள் மேலே நிமிர்ந்து பார்த்தாள். மேலே உள்ள இரும்பு வளையம் தான் சரி என்று நினைத்தபடி அம்மாவின் புடவை ஒன்றை எடுத்து அதை முடிச்சு போட தொடங்கும் போது வாசல் கதவு வேகமாக தட்டும் ஓசை கேட்டது.

சே, சாவதற்கு கூட அதிர்ஷ்டம் வேணும் போலிருக்கு என்று நினைத்தவள் குரல் கொடுக்காமல் இருந்தாள். பலமாக தட்டும் ஓசை கேட்டு இப்போது அம்மா குரல் கொடுத்தாள். ‘நேத்ரா, என்னம்மா பண்றே யாருன்னு பாரு’. வேறு வழியே இல்லாமல் கதவை திறந்தாள். அவளின் தோழி கல்பனா. அவளும் ஒரு துணை நடிகை. ‘ஏய் நேத்ரா, சீக்கிரமா கிளம்பு என்றாள் . எங்கேடி என்றவளிடம் இப்போதைக்கு நமக்கு ஷூட்டிங்கெல்லாம் நடக்கும் என்று தோணலை. வருமானம் இல்லாம எத்தனை நாள் தான் கஷ்டப்படுறது. எனக்கு தெரிஞ்ச மகளிர் சுய உதவி குழுவில் இப்போ அதிகம் தேவைப்படுற மாஸ்க் தைக்கறதுக்கு ஆள் வேணும்னு கேட்டாங்க. எனக்கு உடனே உன்னோட ஞாபகம் தான் வந்துச்சு. உனக்கு தான் கொஞ்சம் டைலரிங் தெரியுமில்ல. அவங்களே ஒரு நாள் பயிற்சி கொடுத்து தைக்க ஆர்டரும் கொடுப்பாங்க. அங்கேயே போய் தைச்சு கொடுக்கணும். அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லாமே நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கியே அதாண்டி உன்னை கூப்பிட வந்தேன். சீக்கிரம் கிளம்பு’ என்றவள் குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுடி என்றவாறே, வெயிலா இருக்கு நான் கொஞ்ச நேரம் உக்காருறேன், சீக்கிரம் கிளம்புடி என்றாள். நேத்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவசரப்பட்டு தற்கொலை எனும் கோழைத்தனமான செயலை பண்ண இருந்தோமே என்று கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி நிமிர்தவளின் கண்களில் பட்டது காலண்டர். அதில் முருகன் சிரித்தபடி 'யாமிருக்க பயமேன்' என்று சொல்கிறார் போல இருந்தது.
 

Sethu

New member
அருமையான சிந்தனை, நேர்த்தியான கதை அமைப்பு. அனைத்து சொற்களும் கதைக்கு தேவையான சொற்கள். அற்புதமான முடிவு. மேலும் மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்
சேது மாதவன்
 
Top