கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 21

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 21



குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது வழக்கம் தான். இவளோ குழப்பத்தின் மொத்தப் பிரதிநிதியாய் இருக்கிறாளே என்று எண்ணியபடியே வருத்தத்தோடு தன் வீடு திரும்பிய ஜீவானந்தை அவனது தாய் சாந்திமதி எதிர்கொண்டாள்.



“ஜீவா, போன விஷயம் என்னாச்சு? எதாவது தெளிவு கிடைச்சுதா?”



அவர் எதைப் பற்றிக் கேட்கிறார் என்று அறியாதவன் இல்லையே ஜீவாவும்?



இல்லை என்று தலையாட்டியவன், “ஆனால், சிலதுக்கு ஒரு முடிவு வந்துவிட்டது..”, என்றான் மொட்டையாக.



தன் முடிவைப் பெற்றவர்களிடம் சொன்னான். தனக்கு வேறு பெண்ணைப் பார்க்கச் சொல்லி..



சாந்திமதி மகிழ்ந்தாலும் அவனின் முடிவைக் கேட்டபடி வந்த வடிவேலன், தன் தாடையைத் தடவிக் கொண்டார்.



"டேய் அந்தப் பொண்ணு ஏதோ பக்குவமில்லாமல் பேசி இருக்கு. இன்னும் கொஞ்சம் நாள் விட்டுப் பிடிப்போம்..”



"வேண்டாம்ப்பா. அது முடிஞ்சி போன கதை. இன்னும் எத்தனை நாள் பொறுமையா இருக்கிறது அவ சின்னப் பொண்ணுன்னு? ஆனா அதுக்காக, 'யோசிக்கவே மாட்டேன், எங்க வீட்டுல சொல்லறது தான் வேதம்' அப்படின்னு சொல்லறவ கிட்ட என்ன பேச? போதும். இதுக்கும் மேல இழுத்துப் பிடிச்சா வாழக்கை கசந்து போகும்..”





சாந்திமதி புரியாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, ஜீவாவோ அதற்கு மேல் தன் சொந்த விஷயம் பற்றி அப்போது விளக்கம் கொடுக்க விருப்பமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தவன், மீண்டும் தயங்கி நின்றான்.



“மா, தாரு எப்படி இருக்கா? எதாவது உடம்பு உபாதை இருக்கா?..”, அதற்கு மேல் அதைப் பற்றிப் பேச அவனுக்குமே வருத்தமாக இருந்தது.



“இல்லப்பா, தனக்கு நடந்த கொடுமையை உணரத் தெரிஞ்சவளா இருந்தா அவளும் எதாவது உணர்ந்திருப்பாளா இருக்கும். தன்னையே சரியாப் புரிஞ்சிக்காத பொண்ணு. எதோ இப்போ சமீப காலமா, நார்மல் லைஃப்க்கு வந்துட்டான்னு நானும் கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன். ஆனா, திரும்பவும் பழையபடி சோர்ந்து போய்ப் படுத்து இருக்கா. ஏதோ உடம்பு சுகமில்லன்னு நினைச்சிருக்கா. அந்த வழியில கடவுள் அந்தக் குழந்தையை சோதிக்க வேண்டாம்னு அவளுக்கு எதையும் புரிய வைக்கல போல. உடம்பு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலையே? என்ன செய்ய? ஆனா ஒண்ணு ஜீவா, அந்தக் குழந்தைக்கு நியாயம் கிடைக்கணும். அப்பத் தான் என் மனசுக்கு நிம்மதியாகும்..”,



சட்டென்று தன் புடவைத் தலைப்பை வாயில் வைத்துத் தன் அழுகையை அடக்கினார் சாந்திமதி.



ஜீவா அன்னைக்கு ஆறுதல் சொல்ல விழையவில்லை. தலையாட்டிவிட்டு, தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.



‘யார் யாருக்கு ஆறுதல் சொல்லுவது? யாரை யார் தேற்றுவது? பாதிக்கப்பட்டது அவர்கள் மொத்தக் குடும்பமும் அல்லவா?’



தன்னவள் என்று நினைத்தவளே தனக்கு இல்லை என்று இப்போது ஆகிவிட்டதே? அவளைக் கண்டாலே தன் மனமும், உடலும் துடிக்கிறதே! அவள் குரலை கேட்டுக் கொண்டே இருக்க விரும்புகிறதே! அவளுக்கு ஒன்றுமேயில்லையா? தனக்கு அவள் வேண்டாம் என்று சொன்னதைக் கேட்டும் கூட அவள் என்னை உணரவில்லையா? இதில் அன்னை கேட்ட நியாயத்தைத் தன்னால் கொடுக்க முடியுமா?’



நிச்சயம் தரணிக்கான நியாயம் கிடைக்கப் போராட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவன், முடிந்தால் காவேரியைச் சந்திப்பதை இனி தவிர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.



இவன் அவளை சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தீர்மானித்திருக்க, காவேரியோ, ‘எப்படி ஜீவாவால் தன்னை வேண்டாம் என்று சட்டென சொல்ல முடிந்தது' என்று தனக்குள் வாதிட்டுக் கொண்டிருந்தாள்.



‘அப்படியென்றால் அவன் காதல் பொய்யா? தன்னைக் கண்டவுடன் காதல் என்று சொன்னது? மணக்கக் கேட்டது? தன் தங்கைக்கான நியாயம் கிடைக்கவில்லையென்றால் தன்னை ஒதுக்குவதா? எதை நம்புவது, எதை விடுப்பது’ என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள்.



இத்தனை நாட்களாய் நிழலாய்த் தன்னைத் தொடர்ந்தவனை இன்று வெறுப்பாய் சலிப்பாய்ப் பேசி அவளே விரட்டிவிட்டு இப்போது அவன் இனி தன் துணையாய் வர மாட்டானா என்று ஏங்குவது எத்தனை மடத்தனம் என்று பெண்ணவளின் மனது தன்னையே கடிந்து கொண்டது. எங்கோ அவன் தன்னை மறைந்திருந்து பார்க்கிறான் என்ற பிரமை அவளுள் எழுந்து அலைப்புறச் செய்தது.



என்னவோ அவன் மணக்க விரும்பவில்லை, தன்னை ஒதுக்கி விட்டான் என்று தனக்குள் வாதிட்டுக்கொண்டிருந்தவள், ஒன்றை வசதியாக மறந்து போனாள், தான் தானே ஈஸ்வரை மணக்க சம்மதித்திருப்பது என்று. ஈஸ்வர் வேண்டாம் என்று தான் சொல்லவில்லையே என நினைக்க மறந்தாள்.



இருவருமே ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டவர்கள் தங்களுக்குள் பேசி சரி செய்து கொண்டிருக்கலாம் என்பதை நினைக்க மறந்தனர்.



எதுவுமே பேசித் தீர்த்துக் கொண்டிருந்தால், விடையும் கிடைத்திருக்கும். தீர்வும் பிறந்திருக்கும். ஆனால், அவர்களுக்கான சரியான தீர்வை அந்த ஆண்டவன் இன்னும் எழுதவில்லை போல.



*******

காவேரியைச் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று முன் தினம் தீர்மானித்திருந்த ஜீவாவோ, மறுநாளே அவள் முன்னால் நின்றிருந்தான்.



“இப்ப என்ன சொல்ல வர்ற காவேரி, உங்க சிசி டிவி, காமிரா ஃபுட்டேஜ் எல்லாமே சரியா இருக்குன்னு சொல்லறியா? எனக்கென்னவோ, அங்கே தான் ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்கும்னு தோணுது. அதெப்படிம்மா எல்லாமே பெர்ஃபெக்ட்டா இருக்க முடியும்? எதையாவது அழிச்சிட்டாங்களா என்ன? எங்கேயோ உதைக்குதே!. ஐ டவுட்..”



“எங்கேயும் உதைக்கல ஜீவா? நீங்க தேவையில்லாமல் ஈஸ்வர் மேல் இருக்கிற வெறுப்பில் ஆஸ்ரமத்துல தான் அந்தத் தப்பு நடந்திருக்கும்னு டிசைட் பண்ணிப் பழியைப் போடறீங்க? நாங்க எல்லாமே சரியாத் தான் வச்சிருக்கோம். நாங்க எதுக்கு அழிக்கணும் சொல்லுங்க? அதுக்கு என்ன அவசியம்? இங்க எல்லாமே நேர் வழியில நடக்குதுன்னு எத்தனை வாட்டி தான் உங்களுக்குச் சொல்வது? காமாலைக்காரனுக்கு எல்லாமே மஞ்சளாத் தான் தெரியும்னுவாங்க. விடுங்க நாங்க என்ன சொன்னாலும் உங்களுக்கு ஏறப் போறதில்ல. உங்க டவுட்டுக்கு நாங்க ஆளில்ல..”



மஞ்சளும், வெள்ளையும் கலந்து பூக்களிட்ட காட்டன் குர்த்தியும், வெள்ளை லெக்கின்னும் அணிந்து, மஞ்சள் பூவாய் மலர்ந்திருந்த காவேரியைப் பார்க்கப் பார்க்க, தன் கை நழுவிய சொர்க்கத்தை எண்ணியவனுக்கோ மனம் ஆறவில்லை.



தன்னை நம்ப மறுத்து இளக்காரமாய்ப் பேசுபவளை எந்த வகையில் கையாள்வது என்று தெரியாமல் திணறினான். தன்னோடு கைகோர்க்க மறுப்பவளின் துணை தனக்கிருந்தால் எப்பேர்ப்பட்ட இன்னல்களையும் நிமிடத்தில் கடந்து விடலாமே என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அத்தனை காலமாய்த் தன் வாழ்க்கையில், தன் தொழிலில் மலைபோல் வந்த இடர்களையெல்லாம் தூசியாய் ஊதித் தள்ளியவனுக்கு இப்போது மலைப்பாக இருந்தது.



“இனி நான் வேண்டாம், என்னைப் பார்க்கவோ, பேசவோ விருப்பமில்லை என்று சொல்லிவிட்டுப் போனவர், திரும்பவும் வந்து ஏன் நிக்கறீங்க ஜீவா? ஒதுங்கிப் போக வேண்டியது தானே..”



தங்கள் மேல் குற்றமில்லை என்று வாதிட்டுக் கொண்டிருந்தவள், விடாமல் அவன் மேல் வாளைப் பாய்ச்ச, ஜீவாவின் முகமோ அவள் கேள்வியில் முகம் சுருங்கியது.



“எனக்குத் தெரியும் ஜீவா? சும்மா நடிக்க வேண்டாம். உங்க தங்கைக்காகன்னு சொல்லிட்டுத் திரும்பி, திரும்பி இங்க வந்து என்னை வதைக்க நினைக்கிறீங்க?..”



ஜீவாவின் முகம் சட்டென்று மாறியது.



“என்ன?.. நடிக்கிறேனா?..”, கோபமாய் அவள் அருகே நெருங்கி நின்றான்.



நெருக்கமாய் வந்து நின்றவனின் மூச்சுக்காற்றை உணர்ந்தவளுக்கோ உள்ளுக்குள் விதிர்விதிர்த்துப் போனது. தன்னையறியாமல் பின்னால் நகர்ந்தவள்,



“உங்க நடிப்பைப் பார்த்து நான் ஏமாந்தது போதும். நீங்க கிளம்புங்க. உங்களுக்கான ஆதாரம் எதுவும் இங்கே கிடைக்கப் போவதில்லை. அதுக்காக எனக்கு தரணி பத்தி நானும் அப்படியே விடப் போவதில்லை. நிச்சயம் என்னாலான முயற்சியைச் செய்யறேன்..”



“என்ன சொல்ல வர காவேரி? நான் நடிக்கிறேன்னு என் மேல அபாண்டமாக் குற்றச்சாட்டை வைக்கற? எதை நடிப்புன்னு சொல்லறன்னு தெரியல. வேறொருவனைக் கல்யாணம் செய்யச் சம்மதித்தவளை இன்னும் மறக்க முடியாமல் தவிக்கும் நான் நடிக்கிறேனா? இல்லை என் காதலே நடிப்பு என்கிறியா? சபாஷ். இப்பதான் உன் உண்மையான ஸ்வரூபம் தெரியுது. உங்க ஆஸ்ரமத்துத் தப்பை மறைக்க இப்படியெல்லாம் பேசி என்னைத் திசை திருப்பி விடச் சொன்னானா அந்த அயோக்கிய குருஜீ?..”



கோபமாய் ஜீவாவின் குரல் ஒலித்தது.



“ஜீவா, நீங்க தேவையில்லாமல் பிரச்சனை பண்ணிட்டு நிக்கறீங்க? என் கல்யாணம் என் விருப்பம். எங்க குடும்பத்துக்கு இதுதான் இஷ்டம்னு நான் உங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே நானும் சொல்லிட்டு வர்ரேன். பாருங்க, நீங்களா எதையோ நினைச்சிட்டு ஏமார்ந்து நின்னா அதுக்கு நானா பொறுப்பு. இப்ப எதுக்குத் தேவையில்லாமல் ஈஸ்வர் பெயரை இழுக்கணும்? ஏதோ நாட்டுக்கு நல்லது செய்ய, அவர் மக்களுக்கு வாழ்வியலைக் கற்பித்து சேவை செஞ்சிட்டு வராங்க. போதும் ஜீவா. இதை இப்படியே விடுவோம். என் வாழ்க்கையை வாழும் உரிமை எனக்கிருக்கு. என் விருப்பம் ஈஸ்வர் தான். எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ண விருப்பமில்லை. போதுமா. ப்ளீஸ் கிளியர் தெ ப்ளேஸ்..”



காவேரியும் சட்டெனக் கோபமாய் வார்த்தைகளைக் கொட்டினாள்.



“ஓ. அப்படியா? உன் வாழ்க்கை உன் உரிமை, உன் விருப்பம் சரிதான். அதே தான் என் வாழ்க்கையும் என் விருப்பம். எனக்கு உரிமையானவள் நீன்னு நினைக்கிறதை நீ எப்படி தப்புன்னு சொல்ல முடியும்? இதில் நான் நடிகனா? பொய்யனா? எங்கே என்னைப் பார்த்துச் சொல்லு? எங்கிட்ட எந்தப் பொய்யுமில்ல. ஏய். என்னைப் பாரு. எதுக்கு இப்ப முகத்தைத் திருப்பற? எனக்கு உண்மையான பதில் கிடைக்கிற வரைக்கும் நான் இங்கிருந்து நகரப் போவதில்லை..”



‘சும்மாயிருந்த வேதாளத்தை தானே முருங்கை மரத்தில் ஏற்றி விட்டோமா? 'என்று பயந்து போனாள் காவேரியோ. 'எப்பொழுதும் போல எதையோ சொல்லி விட்டுப் போகிறான் என்று இருந்திருக்க வேண்டுமோ? எதற்கு இவனை சீண்டிவிட்டோம்’ என்று இப்போழுது நொந்து போனாள் காவேரி.



ஒரு நிமிடம் யோசித்திருந்தால் அவளுக்கே புரிந்திருக்கும், அவள் மனதில் ஜீவா ஆழமாகப் புதைந்திருக்கிறான் என்று.. நேற்று தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிச் சென்றவன், இன்று தன் முன்பு நின்றவுடன் பெண்ணுக்குள் எழுந்த அவன் மீதான வீம்பும் கோபமும்தான் தன்னவன் சீண்டுவதற்கான காரணம் என்பதைப் புரிந்து கொள்ள மறுத்தாள்.



ஜீவாவுக்குமே அதே நிலைதான். மஞ்சள் சரக்கொன்றை போன்ற அழகோவியமாய்த் தன் முன்னால் நின்றிருந்தவளை இன்று கண்டவுடன், தான் நேற்று எடுத்த முடிவெல்லாம் மறந்தே போனதோ!! கை நழுவிப் போய்விடுவாளோ என்ற பதைபதைப்பில் அவளிடம் வார்த்தையாடிக் கொண்டிருந்தான்.



“சொல்லு காவேரி. இதுதான் உண்மையான பதில்னா எங்கே அதை என்னைப் பார்த்துச் சொல்லு. நான் போயிடறேன். இனி நிச்சயம் உன் முகத்தில் விழிக்க மாட்டேன்..”



ஜீவாவின் கேள்வியில் காவேரி தவித்துத் தடுமாறினாள்.



அவள் தடுமாற்றத்தைக் கண்டுகொண்டவன் அவளை அப்படியே விடவில்லை. மேலும் வார்த்தைகளால் குத்தினான். தங்கள் குடும்பத்திற்கான நியாயத்தை அப்பாவியான தன்னவளிடம் தேடினான்.



“அது சரி. உன்னால எப்படி பதில் சொல்ல முடியும்? நினைப்பு நல்லதா இருந்தாத் தானே செயலும் நல்லதா அமையும். யார் எக்கேடு கெட்டா எங்களுக்கென்ன? எங்க ஆஸ்ரமத்தோட கஜானா ரொம்பினா போதும்கிற நினைப்பு. ஒண்ணு ஈஸியா மறந்து போச்சு உங்களுக்கெல்லாம். அடுத்தவங்க எக்கேடு கெட்டுப் போகட்டும்னு நினைக்கிறவங்க தலையில தான் மொத்தமாப் பின்னாடி விடியும். நீ மட்டும் கல்யாணம் பண்ணி ஹாப்பியா இருந்துடுவியாடி. நானும் பாக்கத்தானே போறேன்..”



“ஜீவா, எதுக்கு இப்படி சாபம் கொடுக்கிறீங்க?. எதுக்கு இந்தப் பழி?.. டி யெல்லாம் போட வேண்டாமே..”, காவேரி மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.



அழுத்தமாய் உதடு கடித்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் காவேரி. அவள் கண்கள் லேசாய்க் கலங்கின. அதை மறைக்கக் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள்.



“ஏய் நான் எங்கடி பழி போட்டேன்? விட்டா நான் என்னவோ மந்திரவாதி ரேஞ்சுக்கு உனக்கு சூனியம் வைச்சிடுவேன்னு கூட நீ சொன்னாலும் சொல்லுவ?..”, அவள், 'டி போட வேண்டாம்' என்றதைக் கண்டுகொள்ளாமல்..



கலங்கி இருந்த அவள் முகம் அவனைத் தாக்க, அவளது குழந்தைத்தனமான பேச்சில் சட்டென இயல்பானவன், மீண்டும் அவளிடம் தன்மையாய்ப் பேசத் தொடங்கினான்.



“என்னைக் கல்யாணம் பண்ணறதை விடு காவேரி. அது போகட்டும். நம்ம பிரச்சனையை அப்புறம் பார்ப்போம். அந்தக் குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு காவேரி? அவளை வந்து நீ பார்த்தா உனக்கே தெரியும். எப்படி சோர்ந்து படுத்துக் கிடக்கிறா தெரியுமா.. உங்க ஸ்கூலுக்கு வந்து கொஞ்சம் நாளா சந்தோஷமா இருந்து எல்லாம் நீயும் பார்த்த தானே? அக்கா அக்கான்னு உன் பின்னாடி சுத்தின பொண்ணு இப்ப வாடின கொடியாய் கிடக்கிறா.. உனக்கெங்க இதெல்லாம் தெரியப் போகுது?”



“எங்கம்மா முகத்தை பார்த்து என்னால பேச முடியல. எப்பவும் எங்களுக்குக் தெரியக்கூடாதுன்னு அழுதுட்டு இருக்காங்க. தங்கை தன் கிட்ட ஒப்படைச்சுட்டுப் போன பொண்ணைத் தான் தான் சரியா கவனிக்கலைன்னு தன்னையே குற்றம் சாட்டிக்கிட்டு தனக்குள் மறுகறாங்க. இதில் இப்ப என் காதலும் தோல்வின்னு தெரிஞ்சா?. ம்..”



“நீயும் ஒரு பொண்ணு தானே? அவளுக்கான நியாயம் கிடைக்க என்ன முயற்சி செஞ்சே? கொஞ்சமாவது தார்மீகப் பொறுப்பு உனக்கில்லையா?..”



“ஏன் காவேரி, ஈஸ்வருக்காக எதையாவது என்னிடம் நீ மறைக்கிறியான்னு தெரியல. ஈஸ்வரை விடு காவேரி. நீயும், அவனும் என்ன வேணாப் பண்ணுங்க. கல்யாணம் பண்ணுங்க. எப்படியோ போங்க. ப்ளீஸ், உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு என் தங்கச்சிக்கு நியாயம் செய்ய எனக்கு ஹெல்ப் பண்ணு. அது போதும் எனக்கு. அதுக்குப் பிறகு நிச்சயம் உன் வாழ்க்கையில நான் தொந்தரவெல்லாம் பண்ண மாட்டேன்..”



உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருந்த ஜீவா கடைசியில் அவளிடம் மன்றாடிப் பேரம் பேசத் தொடங்கினான்.



காவேரி எதையோ சொல்ல வர, அதே சமயத்தில் டாக்டர் ரஞ்சித் அவர்களை நோக்கி வந்தான்.
 

Latha S

Administrator
Staff member
Orutharuku oruthar porumaiya pesunale sariya poidum en ivanga rendu perume ipudi argue mattume panitu irukan



நன்றிமா.. காதலுக்கு அவசியம் பொறுமையும், விட்டுக்கொடுத்தலும்.. இன்னும் புரியாமல் இருப்பவர்களில் இவர்களும் அடக்கம்..
 
Top