கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 24

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 24



சிக்கிய நூல்கண்டு போல் குழம்பிக் கிடந்தது ஜீவாவின் மனம். எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிலும் ஒரு தெளிவோ தீர்வோ கிடக்காமல் தவித்தான். இந்த அழகனின் தவிப்பை இன்னமும் அதிகமாக்கும் விதமாக காவேரி, ஈஸ்வரின் திருமணப் பத்திரிக்கையை கொடுத்துவிட்டுப் போனார்கள் கமல்நாத்தும் அவர் மனைவியும்.



அவர்களுக்குமே தயக்கம் தான். தங்கள் மகள் தானும் குழம்பி அனைவரையும் குழப்பத்தில் சிக்கவைத்ததில் ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் தங்கள் மகள் மேல் ஒரு துளி குற்றம் இருந்ததால் தயங்காமல் நேரிலேயே பத்திரிகை வைத்துப் புரிய வைக்கும் பொருட்டுத்தான் அந்தத் தம்பதியர் வந்திருந்தனர்.



"நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று ஆகிப்போச்சு சார். சில விஷயங்கள் எங்களுக்குமே சங்கடமாய்த் தான் இருக்கு ஆனாலும்.. முறைன்னு ஒண்ணு இருக்கு இல்லையா? அதான் நேரில் வந்தோம். ஏதேனும் தெளிவு செய்ய வேண்டுமெனில் தயங்காமல் சொல்லுங்க. நாங்க எப்பவும் ஒத்துழைப்பைத் தருகிறோம்..", என்றார் கமல்நாத்.



அப்போதைக்குப் பத்திரிக்கையை பெற்றுக் கொண்ட வடிவேலவன் திரும்பி, மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மற்றவரிடம்,



"நல்லது கமல்நாத். சீக்கிரமே எங்கள் தரப்பிலும் பத்திரிக்கை வைக்க வருகிறோம்.. உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் எங்கள் வாழ்த்துகள்..", என்று இன்முகமாய்க் கூறி அனுப்பி வைத்தார்.



பேச்சு முடிந்தது என்கிற பாவனையில் இருந்த அவர் செயலில், கமல்நாத்தும் வெறுமனே தலையை அசைத்துவிட்டு விடைபெற்றார் தன் மனைவியுடன்.



அவர்கள் சென்றபின் ஆத்திரத்தில் ஒன்றும் சொல்லாமல் தன் கை முஷ்டியை கோபத்தில் இறுக்கியபடி நின்றிருந்த மகனைப் பார்த்தவர் "ம்ம்.. என்னடா சரியாகத் தானே சொன்னேன்..", எனக் கேட்க,



"அப்பா என்னோட பர்சனல் லைஃபில் தலையிடுவது இதுவே கடைசியாய் இருக்கட்டும். நான் என் வாழ்க்கையை தீர்மாணித்துவிட்டேன் ஏற்கனவே. இனி கல்யாணம் காட்சி இதெல்லாம் எனக்கு எப்போத் தேவையோ அப்போச் சொல்லறேன், அப்பப் பார்த்துக்கலாம்..", என்றான் கோபமாய்.



அவன் தாயோ “டேய் என்னடா சொல்லற, அலை ஓய்ந்து கடல்ல குளிக்கிறதெல்லாம் ஆகுமாடா? அவ இல்லாட்டி வேற பொண்ணே கிடைக்காதா உனக்கு? என் தவிப்பெல்லாம் உனக்கு ஒரு பொருட்டே கிடையாதாடா.. ஏதோ நான் கத்திகிட்டுக் கிடக்கேன்னு இருப்பியா? பெத்தவளுக்குத் தானேடா வயிறு எரியுது?.. பின்னே எதுக்குடா அன்னிக்கு கல்யாணம் பண்ணிக்கொள்வதாக சொன்னே?..", எனக் கண்ணீருடன் கேட்டாள்.



தாயை ஒருவித கையாலாகாத பார்வை பார்த்தவன், "என்னம்மா நீங்களுமா? இதென்ன மெலோ டிராமா? சீரியல் பார்க்கிறது போல இருக்கு. லைஃபில் ஒருத்தியைப் பிடிசிருந்துதுன்னு சொன்னேன், ஆனால் அது சரி வரலை. முதல்ல அவள் திருமணம் முடியட்டுமே.. நானும் நிச்சயம் கல்யாணம் பண்ணுவேன். எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அடுத்து தரணியை நினைச்சா எனக்கு இதெல்லாம் வேண்டாம்னே தோணுது. எங்கே எப்படின்னு புரியலை. குத்தம் செஞ்சவன் என் கையில் கிடைச்சால் எடுத்து அவனை நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. கொன்னாலும் கொன்னுடுவேன் அந்த ராஸ்கலை. சிக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு..", என்று எங்கோ பார்த்தபடி மொழிந்தான்.



"டேய் ஜீவா.. யாரைக் குறை சொல்லித் தான் இப்போ என்ன ஆகப்போகுது.. நம் கையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை நடந்த விஷயத்துக்கு. அவளே குழந்தை மாதிரி, எதுவும் அறியாதவள், அவளை கோர்ட் கேஸ் என்று அலைக்கழிக்க நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும். அவளின் இந்த எதுவுமறியா நிலை வரமா, சாபமான்னு கூடத் தெரியாதும் நல்லது தான். என்னாலே என் குழந்தை, மத்தவங்க எதிரில் காட்சிப்பொருளாக நிற்பதை அனுமதிக்க முடியாது. அதனால் நீ வாயை மூடிக்கொண்டு மேற்படி வேலையை பார். எப்படியாவது விஷயம் வெளியில் போனால் அவ்வளவுதான் நான் உயிரோடே இருக்க மாட்டேன். ஏற்கனவே நீ காதலிச்சவ வீட்டில் போய் எல்லாத்தையும் சொல்லிக் குழப்பத்தை தொடக்கி விட்டாச்சு. இதெல்லாம் எப்படியெல்லாம் வெளியே போகுமோ தெரியாது..", என்று விசும்பத் தொடங்கினார் சாந்தா.



வடிவேலவனுக்கு மனதை பிசையத் தொடங்கியது மனையாளின் கண்ணீரைக் கண்டு. அவருமே மகனை ஒரு கையாலாகாத்தனத்துடன் பார்த்தவர், "ஜீவா.. வேண்டாம்டா விட்டுடு.. இது இனிமேல் தெரிந்து என்ன ஆகப் போகுது. அந்தக் குழந்தை நிம்மதியா நம்மோட இருக்கட்டும். யாரும் தரணியைத் தொந்திரவு செய்வதை நானும் விரும்பவில்லை. நீயும் இதை இத்தோடு விட்டுவிடுவது நலம்..", என்றார் கண்டிப்புடன்.



ஆனால் ஜீவாவோ, "அப்பா அம்மா, நிச்சயம் என்னால் உங்களை மாதிரிப் பொறுத்துப் போக முடியாது. அவ என் தங்கை. என் கடமை. நான் பார்த்துக்கறேன். நீங்க சொல்லுவது போல என்னவோ நடந்துட்டுப் போகட்டும்னு விட்டுட்டுப் போக நான் ஒண்ணும் இளிச்சவாயன் இல்லை. இனி யாரிடமும் இந்தமாதிரி நடக்க அந்தக் கயவன் துணியக் கூடாது.. லீவ் இட் டு மீ.. அவனை என்ன செய்யறேன்னு மட்டும் பாருங்க..", என்றவன்,



‘எங்கே தந்தை, தாய் முகத்தைப் பார்த்தால் மனதை மாற்றச் சொல்லுவார்களோ’ என்று எண்ணி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.





"முதலில் அவள் எங்கள் குழந்தை.. அதற்குப் பிறகுதான் அவள் உன் தங்கை என்பதெல்லாம். சோ அவள் வாழ்க்கையை அவளால் முடிவெடுக்க முடியா நிலையில் அவளுக்கு எல்லாம் நாங்கதான்னு நினைக்கிறோம். எங்க ரெண்டுபேர் முடிவு இதை இப்படியே விட்டுவிடுவதுன்னு நினைக்கிறேன். தக்க சமயம் வரும்போது தகுந்த பதிலடி அந்தக் கயவனுக்கு கொடுக்க முடியும். அதுவரை நீ பொறுத்துத் தான் ஆக வேண்டும். இது என்னோட கட்டளைன்னு வேணா வச்சிக்கோ. தானா மாட்டுவான் அவன். காத்திரு..", என்று சொன்ன வடிவேலன் மாடியிலிருந்து இறங்கி வரும் மகளைப் பார்த்து விட்டு கண் காண்பித்தார் மகனிடம்.



தாயும் மகனும் கப்பென்று வாயை மூடிக் கொண்டனர்..



மெல்ல அவள் கையைப் பிடித்து இறக்கிவந்த தாதி அவளை, ஹால் சோஃபாவில் அமரவைத்துவிட்டு வெளியே சென்று நின்றுகொண்டாள்.



அவளை சற்று நேரம் பொறுத்து உள்ளே வருமாறு சொன்ன வேலவன், மகள் அருகில் அமர்ந்து ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.



தாயும் மகனும் அவர்களின் அந்த பாசப் பரிவர்த்தனையைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,வாயிற்புறம் ஏதோ ஓசை கேட்டு திரும்பவும் அங்கே ரஞ்சித், அவன் பெற்றோர்களுடன் நின்றுகொண்டிருந்ததைக் கண்டார்கள்,



"வாங்க வாங்க, அண்ணா..", என்று மரியாதையாக அழைத்த சாந்தா, எழுந்து நின்று அவர்களிடம் சென்று அவர்களை உள்ளே அழைத்து வந்து அமரச் சொன்னார்.



"வேலன் எப்படி இருக்கீங்க.. கொஞ்சம் நாளாச்சு பார்த்து, அன்னிக்கு நியூ இயர் பார்டிக்கு அப்புறம் பார்க்கவேயில்லை.. நானும் கொஞ்சம் பிசியாகிட்டேன்.. ஜெர்மனிக்கு போகவேண்டியதாப் போச்சு..", என்றவர் திரும்பி வாயிலைப் பார்க்க, இரண்டு சீருடை அணிந்த இருவர், பெரிய தாம்பாளங்களைக் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றனர்..



வியப்பாய் நோக்கியவர்களைப் பார்த்த கனகராஜ், "எல்லாம் நல்ல விஷயம்தான். நம்ம ரஞ்சித்துக்குக் கல்யாணம் நிச்சயிச்சிருக்கு.. இன்னமும் பதினைந்து நாட்களில் கல்யாணம..”



“ரொம்ப சந்தோஷம் கனகராஜ்”, என்று சட்டென்று சுதாரித்துக் கொண்டார் வடிவேலவன்.



“ம்ம்.. என்ன செய்ய நான் கூட என்னவோ நினைச்சேன், எங்க மகளுக்கு ஜீவாவைக் கட்டிக் கொடுத்து நம்ம நல்லுறவை இன்னமும் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று!.. ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறதே!. இப்பவும் கூட ம்ம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க ஜமாய்ச்சிடலாம்..”, என்று ஆர்வமாய் நோக்கியவரை அவர் மனைவி லேசாய்க் கையில் தட்டி அடக்கியவர்,



“என்னங்க.. என்ன நடக்கணுமோ அது தான் நடக்கும். இதை நீங்க பெரிசு படுத்தாம இருங்க..பாருங்க ஜீவா சங்கடப்படறாரு..”, என்று சொல்லிவிட்டு அப்புறம்..”, என்று வேறு விஷயத்தை பேசத் தொடங்கினார்.



ஒரே நாளில் இரண்டாம் முறையாய் ஓரே சொலவடை.. என்ன விசித்திரம் என்று நினைத்தபடி அமர்ந்திருந்தார் வடிவேலவன்.



இன்னமும் கொஞ்சநேரம் அமர்ந்து பேசிவிட்டு பழரசம் அருந்திய பின் கிளம்பிச் சென்றனர் அந்த தம்பதிகள்.



அவர்கள் கார் கிளம்பி கேட்டைத் தாண்டியதை கேமராக் கண் வழியே பார்த்துவிட்டு ஆயாசமாய் அமர்ந்தார் வடிவேலவன். ஒரு கணம் நின்று அங்கே இருந்த காவலாளிடம் ரஞ்சித் ஏதோ பேசுவதும், பின்னர் மீண்டும் சென்று விரைந்தது அந்த கார்.



கார் கேட்டைத் தாண்டியதைப் பார்த்தபடி இருந்தவர் கண்களில் ஏதோ யோசனை ஓடியது. என்னவாயிருக்கும்?



அவரும் என்னென்னவோ சிந்தித்துப் பார்த்தும் ஏதோ ஒரு நூலிழையில் எங்கோ பிசகிப் போவதை உணர முடிந்தாலும் அது எந்த இடம் என்பதைத் தெளிவுற அறியமுடியவில்லை.



பிரச்சனையின் முதலிடம் எது என்பது தெரிந்தாலும் அதை உறுதி செய்துகொள்ள வேண்டி இருந்தது அவருக்கு. யாரிடம் அதைத் தெரிந்து கொள்வது என்று யோசனையாய் இருந்தது.



இருக்கட்டும் இதை இப்படியே விட்டுவிட முடியாது என்று எண்ணியவர், மகனை நினைத்துக் கவலைப்படவும், கூடவே பயப்படவும் செய்தார். ஜீவா அவ்வளவு சுலபமாக விடமாட்டான் என்பதும் அவருக்குத் தெளிவாகவே புரிந்தது. ஜீவாவுக்கு எப்படியேனும் ஒரு நல்லது செய்ய முடியாதா என்று தவித்தது அந்த தந்தையுள்ளம். யார் சொன்னார்கள் தாய்க்குமட்டும் தான் குழந்தையின் வேதனைகள் புரியும் என்று.. ஏன் ஒரு தகப்பனால் யூகிக்க முடியாதா? உணர முடியாதா என்று பதைத்துப் போனார். மகனின் பேயறைந்தாற் போன்ற தோற்றம் அவர் மனதைப் பிசைந்தது.



ஒரு முடிவுக்கு வந்தவர், "நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்..", என்று மனைவியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார். போகும் வழியில் காவலாளியிடம் யாரையும் வீட்டினுள் அனுமதிக்க வேணாம் என்றும், யார் வந்தாலும் முதலில் தன்னிடம் தெரியப்படுத்தவும் சொல்லியவர் மேலும் சில விவரங்களைச் சொல்லிவிட்டுச் சென்றார்.


 

Kothaisuresh

Well-known member
ஒருவேளை ரஞ்சித்தோ?
எல்லோரையும் சந்தேகப்பட வைக்கிறீங்க?
 
Top