கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 25

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 25





காற்றின் கொட்டம் அதிகமாகி இருக்க, வானில் அப்பட்டமாக மேகங்கள் திரண்டு இருள் சூழத் தொடங்கின. பட்டப்பகலை இருண்ட மேகங்கள் கருமையாக்கி பார்வையை மறைத்தன.



அந்த அந்தகார இருளையும், காற்றின் வீச்சு சத்தத்தையும் மீறி ஒருவனின் குரல் அமானுஷ்யமாய் எதிரொலித்துப் பார்ப்பவர் நெஞ்சைப் பதறடித்தது. கலவரத்தில் பயந்து ஓடுபவன் போல அங்கேயும் இங்கேயும் என ஓடிக் கொண்டிருந்தான் ரஞ்சித்.



எதோ மந்திரத்துக்குக் கட்டுபட்டவர் போல் வடிவேலன் சாரளத்தின் வழியாய் உள்ளே நடப்பதை அவதானித்துக் கொண்டிருந்தார்.



நடப்பதெல்லாம் நன்மைக்கே! அவர் எதிர்பார்த்தது போல் குற்றவாளி ரஞ்சித்தான்.. ரஞ்சிதை தொடர்ந்து வந்தவர், இங்கே திகைத்து நின்றார். ஆம், அவர் எதிர்பாராதது அங்கே நடந்து கொண்டிருந்தது.



எந்தவிதக் குற்றவுணர்வின் தாக்கமில்லாமல் தன்னை விட்டுவிடும்படி கதறிக் கொண்டிருந்தவன் மேல் இவருக்கு வெறுப்பு மிகுந்தது. இந்நேரம் தன் மகன் இங்கிருந்தால் அவன் கதையை முடித்திருப்பான் என்று தோன்றியது அவருக்கு..



சட்டென ஏதோ உணர்வால் திரும்பியவருக்கு அங்கே மரத்தின் பின்னால் இருந்து பார்வையிட்ட இரு கண்களைக் கண்டு திகைப்பு ஏற்பட்டாலும் தான் இதை எதிர்பார்த்தது தான் என்று தோன்ற, அப்படியே அதை ஒதுக்கி விட்டு நடப்பதைக் கவனிக்கத் தொடங்கினார்.



ஒன்று குற்றத்தைச் செய்தவன் தன் தவறை நேரடியாய் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். பின்னர், அதற்குப் பிராயச்சித்தம் செய்ய விழைய வேண்டும். இவை இரண்டுமில்லாமல் தனக்குத் தெரியாமல் நடந்த நிகழ்விற்கு தான் பொறுப்பில்லை என்று பொறுப்பில்லாமல் கத்திக் கொண்டிருந்தவன் மேல் இவருக்கு, மருந்து எடுத்துக் கொள்ளாதவனுக்கு எகிறும் பிபி போல் வன்மம் ஏறிக் கொண்டிருந்தது.



“இந்த தோள்களுக்குத் தானே திணவெடுத்தது? டேய் உனக்கும் கூடப் பிறந்தவள் இருக்கும் போது எப்படி இந்த மாதிரிக் காரியம் செய்யத் துணிந்தாய்? அதுவும் ஒன்றுமறியாச் சிறுமியைச் சிதைத்து என்ன சாதித்தாய்? இதில் உனக்கு திருமணம் வேறு நடக்கப் போகிறதா? வெட்கமாயில்லை? ஒன்றும் தெரியாது என்று சொல்கிறவன் செய்யற காரியமாடா இது? நீயெல்லாம் சமூகத்தில் மரியாதைக்குரிய டாக்டர் வேறு! அதுவும் மனநிலை மருத்துவன் என்கிற பெத்த பேரு.. வேலியே பயிரை மேய்ந்த கதை தான்.. ஸ்டெத் பிடிச்ச இந்தக் கைக்கு இனி வேலையே வைக்கக்கூடாது!.. குடிகார பாதகா.. உன்னை..”



தோளைத் திருகி கைகளை முறுக்கினான் அவன். படபடவென எலும்புகள் முறியும் ஓசை, வடிவேலன் செவிகளில் நன்றாகவே விழுந்தன. திருப்தியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். தான் செய்ய நினைத்ததை வேறொருவன் செய்கிறானே?



திமறினான் ரஞ்சித்.



அவன் முகத்தில் சத்தென ஒரு குத்தை விட்டான் இவனோ!



விட்ட குத்தில் தாடை கிழிய பற்கள் பெயர இரத்தம் வழிந்து ஆணழகன் என்று பீற்றிக் கொண்ட ரஞ்சித்தின் முகம் அகோரமாய் எதிராளியை பயமுறுத்தியது.



“பேசாதே.. அடுத்த வார்த்தை வெளியே வந்தா நீ உசிரோடு இருக்க மாட்டே.. நீ செஞ்ச காரியத்துக்கு நீயெல்லாம் வாழவே தகுதியில்லாதவனாயிட்ட..”



“டேய் பொய் வேஷம் போட்ட சாமியாரு! என்னை எவ்வளவு வேணா அடிச்சிக்கோ.. ஆனா அந்தத் தப்பை நான் மட்டும் செஞ்சதா எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்லற? கூட உன் தம்பியும் இருந்தான் தானே? அப்போ அவன் வாழத் தகுதியானவா? ரொம்ப யோக்கியமா பேசற? யாரு கண்டா? தேனெடுக்கிறவன் புறங்கையை நக்காம இருப்பானா? எனக்கு ஊத்திக் கொடுத்தான்.. அவனும் அந்தப் பைத்தியத்தை வைச்சி செஞ்சிருப்பான்.. அவன் மட்டுமில்ல, அந்த வாட்ச்மேன்.. இன்னும் என்னோட கூட இருந்த ஃப்ரெண்ட்ஸ் இங்க யாரும் யோக்கியமில்ல.. நேரம் பார்த்துக் கிட்டு இருப்பான். ஏதோ குடி போதையில் அந்த லூசு மேல கையை வைச்சிட்டேன்.. என் கால் தூசிக்கு அதெல்லாம் சமமா?.. டிஸ்கஸ்டிங்க்.. இப்ப நினைச்சாலும் வாந்தி வருதுடா.. டேய் விடு என்னை..”



அடுத்துப் பேச வாயில்லை ரஞ்சித்திற்கு. துவைத்து எடுத்துவிட்டான் இவனோ! இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மற்றொருவனுக்கும் கோபம் எல்லை மீறத் தொடங்கியது.



“செஞ்ச தப்பை மறைக்க அடுத்தவன் மீது பழியா?.. உன்னை.. தப்புக்கு துணை போனவன் கூட அந்தத் தப்பைச் சரி செய்ய நினைச்சி தைரியமா முன்னாடி நிக்கிறான்! ச்.சீ.. நீ? மேலும் மேலும் பழியை அடுத்தவன் மீது போட்டு.. உன்னையெல்லாம் வெளியே விட்டா, உன்னை நம்பி வர பேஷண்டுங்க கதி என்னாறது? ஆல்ரெடி ப்ரூஃபோடு எல்லாத்தையும் போலீஸ் கிட்டச் சொல்லியாச்சு.. இன்னும் கொஞ்சம் நேரத்தில் உனக்குக் களி சோறு திண்ண ஆளுங்க அழைச்சிட்டுப் போக வந்துடுவாங்க.. ஆனா அதுக்கு முன்னாடி, உன்னை நான் சும்மா விடறதாயில்ல.. இனி நீ எந்தப் பொண்ணையும் நினைச்சிப் பார்க்கக் கூடாம செய்யப்போறேன்.. உன்னை தொட்டு அடிக்கக் கூட அருவருப்பா இருக்குடா எனக்கு.. உன்னை..”



மேலும் மேலும் அவனை துவைத்துக் கொண்டிருந்தான் இவன்.. அழுக்குத் துணியாய் வெளுத்து வாங்கினான்.



“நோ.. வேண்டாம்.. என்னிய விட்டுடு.. வலிக்குதுடா.. கல்யாணம் நடக்கப்போகுது எனக்கு.. படாத இடத்துல பட்டா டாக்டர்னாஸகூட கஷ்டம்டா.. ஹேய் விடு.. வேணா அந்தப் பொண்ணயும் நானே கட்டிக்கிறேன்.. ஒண்ணுக்கு இரண்டா வைச்சிக்கிட்டா..”,



அடுத்துப் பேசுவதற்குள்,



பழுக்கக் காய்ச்சிய கம்பியை எடுத்தவனைக் கண்டு அலறிய ரஞ்சித், பிரிந்த நிலையில் இருந்த கட்டை அவிழ்த்தெறிந்து தலை தெறிக்க ஓடத் தொடங்கினான்.



“பிளடி ராஸ்கல்.. ஹவ் டேர்..”, ஜீவாவும் வேகமாய் வெளியே வர,



அந்தோ பரிதாபம்.. திமிறிக்கொண்டு ஓடியவன், நெடுஞ்சாலையில் வேகமாக வந்த வெள்ளை நிற ஆயில் டாங்கரின் மேல் மோதித் தூக்கி எறியப் பட்டான். விடாது கருப்போ! புறத்தோற்றத்தில் வெள்ளையான நிறத்தவன், கருப்பாய்க் கூழாகிப் போனான். மனக் கருப்புக்கு ஏற்ற தண்டனையோ!!



எல்லாவற்றையும் கண்ணுற்ற வடிவேலனின் நெஞ்சமும் பதறியது. தப்பு செய்தான் தான்.. ஆனாலும் இப்படிப்பட்ட கொடூரமான தண்டனையை தன் முன்னே துடிதுடித்து அனுபவிக்கும் ஜீவனைக் கண்டு அவர் மனம் பதறித் துடித்தது.



ரஞ்சித்தை நோக்கி விடாமல் ஓடிய ஈஸ்வரைப் பிடித்து இழுத்தார் வடிவேலன். ஆம் அத்தனை நேரமாய் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தவன் ஈஸ்வர் தான்..



“வேண்டாம் ஈஸ்வர்.. போதும், விட்டுவிடு.. தினை விதைத்தவன் தினை அறுப்பான்.. வினை விதித்தவன் வினை அறுப்பான்.. நீ செய்ய நினைத்ததை அந்த மகாஈஸ்வர் செய்து முடித்து விட்டார்.. இனி அவன் பிழைத்தாலும் பிணம் தான்.. அவன் செய்த பாபம் நின்று கொல்லாது அன்றே கொல்லுகிறது இப்போதெல்லாம் இது வழக்கமாகிவிட்டது. கலிகாலமல்லவா! கை மேல் பலன்!..”



“சார் நீங்களா? நீங்க எப்படி இங்கே? நிச்சயம் அவனை பயமுறுத்தித் தன் தப்பை உணரச் செய்யணும்னு தான் அவனை அடிச்சேன்.. ஆனாலும், கடைசி வரை தன் தப்பை உணரல சார்.. எங்க குடும்பத்தை மன்னிச்சிடுங்க.. உங்களுக்கு எங்க மேல சந்தேகம் இருந்துச்சு.. அதுக்கேற்ப இந்தத் தப்பில் என் தம்பியும் ஒரு பங்காய் இருந்திருக்கான்.. ஆனா, நிச்சயம் தான் அந்தப் பொண்ணை எதுவும் செய்யலன்னு சொல்லிட்டான். குடிச்சிட்டு விழுந்திருக்கான்.. வாட்ச்மேன் குடிமயக்கத்துல இருந்தவனை பார்த்திருக்கான்.. என் தம்பிக்கு இவனோடு கூடா நட்பு சார். அந்த ரஞ்சித்தும் வேணுமுன்னு செய்யல.. நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் கொஞ்சம் அவனும் நல்லவன் தான்.. பொண்ணைப் பார்த்ததுல சட்டுன்னு கொஞ்சம் சறுக்கிட்டான்.. இருந்தாலும் தப்பு தானே அது! பொறுப்பா அதுக்கு மன்னிப்புக் கேட்டுப் பிராயசித்தம் செய்ய முன் வந்திருக்கணும். பணமிருக்கிற திமிர் சார்.. அந்தக் கோவம்தான் எனக்கு.. கடைசி வரை திருந்த விருப்பப்படல பாருங்க.. ஆனா, தப்புக்குத் துணை போனதுக்குப் பிராயசித்தம் செய்ய நினைக்கிறான் சார் என் தம்பி.. உங்க பொண்ணை என் தம்பி திருமணம் செஞ்சிக்க சம்மதிச்சிருக்கான்.. நீங்க தப்பா நினைக்காதீங்க, மேல் கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம்.. எல்லாத்துக்கும் நான் பொறுப்பு சார்.. ஜீவா ரொம்ப நல்லவர் சார்.. எங்க குடும்பத்தால அவருக்குத் தலைகுனிவு வர நான் விடமாட்டேன்..”



“ஈஸ்வர்..”



“ஜீவா, நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? அதான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேனே? எங்களால் தானே இதெல்லாம்?..”



கைகளைக் கூப்பியபடி நின்றான் ஈஸ்வர். அவன் கண்களில் மன்னிப்பின் யாசிப்பும் தவிப்பும் தெரிந்தன. எல்லாவற்றையும் சீர் செய்துவிடத் துடிக்கும் வேகம் மிகுதியாய் நிறைந்திருந்தது.



“ப்ச்.. விடுங்க ஈஸ்வர், நடந்தது நடந்து போச்சு.. நீங்க வருத்தப்பட இனி ஒன்றுமில்லை. என் கையால் அடிபட்டுச் செத்திருக்கணும். அந்த ராஸ்கல், ரஞ்சித் மீது சந்தேகப்பட்டுத் தான் அவனை நான் ஃபாலோ செஞ்சேன். அப்பா என்னை ஒதுங்கி விடத் தான் சொன்னார். என்னால் எப்படி முடியும்? அவருக்குத் தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்தேன். வந்தது நல்லதாய்ப் போயிற்று..



அன்னிக்கு சி.சி.டிவி ஃபுட்டேஜ் எல்லாம் ஆசிரமத்தில் டேமேஜ் ஆனாலும், எனக்கு என்னவோ ஒரு சந்தேகம் இருந்திச்சு.. அதுக்கு ஏத்தா மாதிரி உங்க வாட்ச்மேனும் முன்னுக்குப் பின் முரணாய்ப் பேசினான்.. காசுக்கு ஆசைபட்டுப் பொய் சொல்லிட்டானாம்.. போலீஸ் பிடிக்கும் என்றதில் உலறத் தொடங்கினான். சில சமயங்களின் பணத்தின் தேவை, கூடவே இருக்கும் நல்லவனையும் பொய்யாக்கிக் கீழே தள்ளி விடுகிறதே!..”



வடிவேலன் இடையிட்டார்.



“விடு ஜீவா. நீ சும்மா இருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும், ரஞ்சித்தும் இப்படி செஞ்சிருக்க வேணாம்.. தப்பைச் செஞ்சிட்டு, அடுத்துத் திருமணத்துக்கு வேற ரெடியாகிட்டான். குடி மயக்கம்னாலும், ஒரு பொறுப்பான டாக்டர் செய்யற வேலையா இது? அன்னிக்கு பத்திரிக்கை கொடுக்க ரஞ்சித் வந்த போது, நம்ம வாட்ச்மேன் கிட்ட எதோ பேசியது போல தோன்றவும், எனக்கு சந்தேகம் வந்தது. நம் குடும்பத்தவர் பற்றி துப்பு கொடுக்க கேட்டிருப்பான் போல. முன்னெச்சரிக்கையாக இருக்க நினைச்சிருப்பான். நம் வீட்டு வாட்ச்மேன் எல்லாவற்றையும் உடனே சொல்லிவிட்டான். நானும் ரஞ்சித் வந்தால் என்னிடம் சொல்ல சொல்லி இருந்தேன். ஈஸ்வரும் நீயும் இதில் தீவிரமாக இறங்கியதில் உள்ளுக்குள் பயம் வந்திருக்கும் போல.. இதுல அவன் தங்கச்சியை வேறு எங்க வீட்டு மருமகளா அனுப்ப ஆசைப்பட்டான்..



இனி என்ன இருக்கு? தப்புக்கு தண்டனை அவனுக்குக் கிடைச்சாலும், பாதிக்கப் பட்டது நம்ம பொண்ணு தானே!.. விடுங்க, எல்லாம் விட்டுப் போச்சு தம்பி.. எங்க வீட்டுப் பொண்ணு எங்க வீட்டுப் பொண்ணாவே எப்பவும் போல் இருந்துட்டுப் போகட்டும்.. கல்யாண வாழ்க்கை எல்லாம் அவளுக்கு இப்ப வேணாம்.. சின்னப் பொண்ணுங்க அவ.. அப்படியே கல்யாணம் செய்யணும்னாலும், அவ சம்மதமில்லாமல் இனி எதுவுமில்லை.. இதோ அவ அண்ணன் தன் தங்கச்சியைக் கைவிட மாட்டான்.. போதுங்க.. என்னென்னவோ நடந்து போச்சு.. என் பிள்ளைங்க விரும்பினது எதுவும் கிடைக்கலை.. நாங்க நாலு பேரும் ஒருத்தொருக்கொருத்தர் ஆறுதலா இருந்திட்டுப் போறோம்.. இப்போதைக்கு இந்தப் பேச்செல்லாம் வேணாம்.. காலம் என்ன வைச்சிருக்கோ, அதன்படி அவ வாழ்க்கையும் போகட்டுங்க.. நீங்க எல்லாத்தையும் மறந்துட்டு அந்தப் பொண்ணு காவேரியோடு சந்தோஷமா வாழப் பாருங்க.. ஜீவா விரும்புவதும் அது தான்.. அவனுக்கு காவேரி சந்தோஷமாக இருக்க வேண்டும்..”,



கண்களைத் துடைத்துக்கொண்டவர், கம்மிய குரலை இருமி சரிசெய்து கொண்டார். ஈஸ்வரின் தோளில் தட்டி ஆறுதலாய்ப் பேசினார்.



சரியாக அந்த நேரத்தில் வந்து சேர்ந்த காவல் துறை அதன் பின் தன் பொறுப்பை எடுத்துக் கொண்டு நிலைமையைச் சீர்படுத்தியது. ஆம்புலன்சும், காவல்துறை வாகனங்களும் சத்தம் போட்டுத் தன் பணியைத் தொடர்ந்தன.



இன்றும், ரஞ்சித் அவன் மருத்துவமனையிலேயே அரையும் குறையுமாய் உயிர் போகாமல் இன்னும் துடித்துத் தவித்துக் கொண்டிருக்கிறான். இட்டாருக்கு இட்ட பலன்..



ஈஸ்வர் அங்கிருந்து கைகூப்பித் தெளிவுடன் விடைபெற, வடிவேலனோ சோர்வாய் அங்கிருந்து கிளம்பினார். ஜீவா எதுவும் பேசா விட்டாலும் ஈஸ்வரிடம் தலையாட்டி விடை பெற்றான். எல்லாம் முடிந்து போனது என்ற நிலை..



தான் செய்ய நினைத்ததை ஈஸ்வர் செய்து முடித்துவிட்டாலும், ஏனோ பெரியவரின் மனமும் அமைதியில்லாமல் தவித்துத் துடித்தது.



தன் பிள்ளைகளின் வாழ்வு கேள்விக்குறியாய் நின்று போனதில் வந்த தவிப்போ!



அவர் கேள்விக்கு பதில் கிடைக்குமா? அமைதியாய் அக்கேள்வியின் நாயகனின் நிலை என்ன? நினைத்ததை அடைவானா? இல்லை விட்டு விலகிச் செல்வானா? நாயகிக்காக பேசப்பட்டவனும் என்ன செய்யப்போகிறான்?



இத்தனைக்கும் காரணமாய் முடிவெடுக்க முடியாமல் இன்னும் குழப்பிக் கொண்டிருக்கும் நாயகி இனியாவது தன் முடிவை எடுப்பாளா?



வரப்போகும் நாட்கள் எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வரும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.


 

Kothaisuresh

Well-known member
கடைசில இந்த ரஞ்சித் தானா? சந்தேகப் பட்டது சரியாப் போச்சு.
 
Top