கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 7

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 7



விளையாட்டுப் போல் கிட்டத்தட்ட அவள் தந்தை ஒத்துக்கொண்ட ஒரு மாத கால அவகாசமும் நிறைவுறும் வேளையும் நெருங்கியது. தினமும் போவதும் வருவதும் புதுப்புதுக் கருத்துக்களைப் பட்டியலிட்டுச் சொல்லுவதுமாய் அவள் நேரம் கழித்துக் கொண்டிருக்கையில் ஒரு நாள் மதியம் திடுதிப்பென்று அலுவலகத்தில் அவள் எதிரில் தோன்றினான் ஜீவா.



சமீபகாலமாக அவன் அனாவசியமாய் அவளைத் தொந்திரவு செய்யாததில் மகிழ்வுடன் அனைத்தையும் மின்னஞ்சலிலேயே அனுப்பிக்கொண்டிருந்தவளுக்கு அவன் எதிரில் தோன்றவும் என்னவோ ஏதோ என்று பதட்டமாகியது.



"ஹாய் என்ன பிசியா காவேரி?.."



திடுக்கிட்டுத் திரும்பியவள் அங்கே ஜீவாவைப் பார்த்ததும் வியப்புற்றது அவள் முகத்திலேயே தெரிந்தது.



"சொல்லுங்க சார். சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே?..", என்றவளிடம் ஒரு வெற்றுப் புன்னகையை வீசியவன்,



"நீ ஃப்ரீயா இருந்தா என்னோட கொஞ்சம் வர முடியுமா?..", என்றான்.



சந்தேகமாய்ப் பார்த்தவளை. "ஹேய். நான் டிஸ்டர்ப் செய்யமாட்டேன்னு சொன்னது நிஜம் தான்மா. நம்பு. இது கொஞ்சம் உன்னோட தொழில் தொடர்புடையது..”, என்றவன், அங்கிருந்து நகர, இப்போது தானும் அவன் பின் செல்லவேண்டுமோ என்கிற எண்ணம் அவளுள் எழ, அவன் பின்னேயே குட்டி ஆடு மாதிரி சென்றாள்.



"ஹேய் நில்லுங்க சார் இவ்வளவு வேகமாப் போனா எப்படி?..", என்று மூச்சு வாங்க ஓடி வந்தவளுக்காக ஒரு சில விநாடிகள் நின்றவன், அவள் வந்தவுடன் மெல்ல சீராக நடக்கத் தொடங்கினான்.



"சொல்லுங்க இப்போ எங்கே போகப் போகிறோம்?..”



“ம்ம். பார்க்கத் தானே போகிறாய்..”, என்றவனின் கையசைவில் கார் கொண்டுவந்து நிறுத்தப்படவும், டிரைவரை வேண்டாம் என்று மறுத்துவிட்டு, தானே காரை எடுத்தான்.



வாய் மூடி மௌனியாய் அவனருகில் அமர்ந்து வந்தவளுள் படபடப்பு.



அவன் சென்று நிறுத்திய இடம், சென்னையில் நிறையப் பேருக்குத் தெரிந்த ஒரு இடம் தான். அந்த இடத்தில் தான் நிறைய மனநலம் குன்றியவர்களுக்கான சிறப்பு சிகிச்சையும், பல்வேறு நிகழ்வுகளும் தொடர்ந்து நடக்கிறது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் அந்த தொண்டு நிறுவனத்திற்கு நிகர் ஏதும் இல்லை என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட ஓர் இடம் அது.



மனநலக் காப்பகம் மட்டுமின்றி, பலதரப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பலவிதமான பயிற்சிகளும் அவர்களைத் தக்கவாறு பேணுவதற்கான செவிலிகளைத் தயார் படுத்தல், மற்றும் அவர்களின் மேம்பாட்டுக்காக சிறுதொழில் பட்டறைகள் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட இடம் அது.



மௌனமாய் அனைத்தையும் அவளுடன் சுற்றி வந்தவன், கடைசியில், ஒரு தொழிற்கூடம் போன்ற இடத்திற்கு அழைத்து சென்றான். அங்கே பல்வேறு நிலைகளில் உள்ள சில மாற்றுத் திறனாளிப் பெண்கள் தங்களால் முடிந்த அளவுக்கு, பூக்கூடைகள் பின்னுவது, வாழைத் தட்டுகள் செய்வது, சிலபல கலைவினைப் பொருட்கள் செய்வது என்று பிசியாக இருந்தனர்.



அவர்கள் கைகள் பாட்டுக்குத் தானாகச் சொன்ன வேலையை செய்துகொண்டிருக்க ஒரு சிலர் பாடிக் கொண்டும், சிலர் சிரித்துக் கொண்டும் இருந்தனர். இவர்கள் மனநலம் குன்றியவர்கள் என்று நம்பவும் கூட முடியவில்லை அவளால்.



ஆனால் அதுதான் உண்மையாயும் இருந்தது.



அங்கேயே இந்த மாதிரி, குறைபாடுகளுள்ள பிள்ளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப் பள்ளிக்கூடமும் இருக்கக் கண்டாள்.





‘மாற்றுத்திறனாளி’என்பவர் உடலிலோ அல்லது மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக அவரால் சில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகிற காரணத்தினால் அவர்களை நாம் அவ்வாறு அழைக்கிறோம்.



மரபணுவினால் பிறப்பிலேயே ஏற்படும் மாற்றங்கள்,

தாயின் கருவில் இருக்கும் பொழுதோ அல்லது பிறந்த உடனே ஏற்படும் நோய்கள் மூலம் ஏற்படும் மாற்றங்கள்,

நோயினாலோ அல்லது விபத்திலோ ஏற்படுத்திக்கொண்டது, சில சமயங்களில் தெரியாத காரணங்களால் இப்படி புலன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கேள்விக் குறைபாடு, நுகர்தல், மனவளர்ச்சிக் குறைபாடு, டிஸலெக்சியா இப்படி இதன் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.





எந்த விதக் குறையும் இல்லாத தனக்கு வாழ்வில் இத்தனை, விருப்பங்களும் தெரிவுகளும் இருக்க, இவர்களுக்கோ, தன் உடலே தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க முடியாத ஒரு நிலை. இதை என்ன என்று நினைப்பது.. தான் உண்ணும் ஒவ்வொரு பருக்கையும் கூட உள்ளே செல்லாதோ இன்னமும் கொஞ்ச நேரம் அங்கிருந்தால் என்று பயமே வந்துவிட்டது அவளுக்கு.



மன இறுக்கம் கொண்டவர்களுக்கு உதவுவது தானே அவள் லட்சியம்? அவர்களுக்கு எதாவது செய்யத் தானே ஜீவாவோடு வேலை பார்க்கிறாள். இங்கே நேரடியாக ஒவ்வொருவரையும் பார்க்கப் பார்க்க அவள் மனம் பாரமானது.



அதற்குள், அங்கிருந்த ஆசிரியைகளில் ஒருத்தி ஜீவாவைப் பார்த்து முறுவலித்தவள், அங்கிருந்து விலகி அவனிடம் வந்தாள்.



"வாங்க ஜீவா சார். என்ன இந்தப் பக்கம். வீட்டில் அனைவரும் சுகம் தானே?..", என்று கேட்க, அவனும் வெகு இலகுவாய் அந்தப் பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தான்.



அவர்கள் யாரைப் பற்றியோ பேசுவது தெரிந்ததும் நாசூக்காய் அங்கிருந்து அகன்று, மெல்ல மெல்ல அங்கிருந்த பிள்ளைகளிடம் பேசத் தொடங்கினாள் காவேரி.



ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருந்தனர். ஒரு சிலருக்கு சுத்தமாக தசைகள் மற்றும் புத்திக்கான தொடர்பு ஒருங்கிணைப்பே இல்லாதது போல் தோன்றியது. சிலர் தலை ஒரு பக்கமாய் சாய்ந்தபடியும், வாயில் எச்சில் வழிவதைக் துடைக்கக் கூடத் தெரியாமல் ஏதோ ஒரு தனி உலகில் இருந்தனர். பார்க்கப் பார்க்க மனம் நொந்தே போனது அவளுக்கு.



சொகுசான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்குத் தான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு, மனதுள் ஏதோ போராட்டம்.



“போகலாமா?..”, என்று கேட்டவனுடன் மீண்டும் கார் பயணம்.



“ஏன் இந்த சோகம்? இவர்களுக்காகத் தானே நீ என்னிடம் பணம் கேட்டு வந்தாய்? தொண்டு செய்வதற்கு முன் அவர்களைப் பற்றி அறிய வேண்டாமா? என்ன செய்ய, நேரடியாக கண்டால் பயம் தான் வரும்? சேவை செய்ய மன தைரியம் வேணும். ஆனால் சிலருக்கோ தைரியம் வந்தாலும், மனம் இறுகிப் பிழன்றல்லவா இருக்கிறது. உண்மையில் அவர்கள் தான் மாற்றுத் திறனாளிகள்..”



ஏற்கனவே மனம் நொந்திருந்த காவேரி வாயைத் திறந்தாளில்லை. என்ன தோன்றியதோ ஜீவானந்தம் தன் வாயை மூடிக் கொண்டான்.



அரை மணி நேரப் பிரயாணத்துக்குப் பின், நேரே சென்ற இடம் ஒரு பெரிய பங்களா. அவன் வீடு போலும் என்று நினைத்தவளுக்கு பிரமிப்பில் விழிகள் விரிந்தன.



பெரிய புல்தரை ஒரு பக்கம் பரந்து விரிந்திருக்க, மறு பக்கம் கார்பாதை ஓட, வீட்டின் முன் போர்ட்டிகோவில் சென்று நின்றது கார்.



அங்கே இறங்கியவர்கள், நேரே ஹாலுக்கு சென்றார்கள். ஏதோ அவர்களை எதிர்பார்த்திருந்தது போல் அவன் தாயும் தந்தையும், கூடவே ஒரு பதினைந்து வயது மதிக்கத் தகுந்த ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர்.



அந்த பெண்ணைப் பார்த்ததுமே புரிந்து போனது அவளுக்கு. ஆட்டிசத்தால், மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பவள் என்று. முழு மோசம் இல்லை போலும். ஆனாலும் பாதிப்பு வெளிப்படையாகவே தெரிந்தது.



"வாம்மா. வா. இப்பதான் இங்கே வர வழி தெரிந்ததா. டேய் ஜீவா நீ இவளை இன்னமும் முன்னமே கூட்டிக்கிட்டு வருவேன்னு எதிர்பார்த்தேன்..”, என்றார் கண்டனக்குரலில் அவன் தாய்.



ஏற்கனவே காவேரி அவன் அன்னை சாருமதியை அவர்கள் வீட்டில் பார்த்திருந்தவள் அவரைக் கண்டு முறுவலித்தாள்.



"ம்ம்.நான் நினைச்சேன்தான். ஆனால். அவளும் நினைக்கணும் இல்லை? அது போகட்டும். காவேரி இது தான் தரணி. என்னோட சிஸ்டர்..”, என்றவன்,



"தருக்குட்டி, காவேரிக்கு ஹாய் சொல்லு. உன்னைப் பார்க்க வந்திருக்காங்க பாரு..”, என்று அறிமுகப்படுத்தினான்.





சங்கடமாய் ஒரு கணம் விழித்தாலும், அடுத்த நொடி தன்னை சுதாரித்துக் கொண்டவள், தரணியின் அருகில் சென்றவள், அவள் கைகளைப் பற்றி மெல்ல குலுக்கியவள், "ஹாய் தரு. எப்படி இருக்க..”, என்று சொல்லி அவளைப் பார்த்து மென்மையாய் சினேகிதமாய்ச் சிரித்தாள்.



தரணிக்கும் அவளைப் பிடித்து போனது போல், அடுத்த சில நிமிடங்கள், திக்கித் திணறி, மெல்லப் பேசியவள், தன் அறைக்குச் சென்று தான் வரைந்த படங்கள், செய்த கைவினைப் பொருட்கள் என்று கொண்டு வந்து அடுக்கிவிட்டாள்.



"ஓ சூப்பரா இருக்கு. எனக்குக் கூட வரையப் பிடிக்கும். நிறைய கலர்ஸ் இருக்கு எங்கிட்ட, கேன்வாசும்தான். உனக்குத் தரட்டுமா. எனக்கு இப்போ வேற வேலை வந்ததிலே டைம் இல்லை. எல்லாம் வேஸ்டாகிடும்னு பயமா இருந்தது. நல்லவேளை என் ஃப்ரெண்ட் உங்கிட்டயே கொடுத்துடறேன்..”, என்று ஒட்டிக் கொண்டாள்.



அதற்குள் அவன் தாய் ஏதோ தின்பண்டங்களை எடுத்துவர உதவியாளிடம் சொல்ல, கலகல என்று பேசியபடி பொழுது நன்றாகவே கழிந்தது அன்று.



சாயங்காலம் ஆறு மணி போல் அவளை அவனே அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடப் போகும்போது பேசுவான் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றம் தான்.



அவன் ஒன்றும் சொல்லவில்லை.



கொஞ்சம் யோசித்திருந்தால் அவன் என்ன நினைத்தானோ அவளுக்கே புரிந்திருக்கும் என்பது தான் நிஜம்.



அவளாகவே தரணியைப் பற்றிக் கேட்க, "அது ஒரு பெரிய கதை. அவள் என் அம்மாவின் தங்கை, என் சித்தி மகள். என் அம்மாவும் சித்தியும் ட்வின்ஸ். சித்தி என் சித்தப்பாவையே மணந்தார். அண்ணனும், தம்பியும்.. அக்காவும் தங்கையை என்று மணந்து கொண்டவர்கள். சித்திக்கு வெகுகாலம் கழித்துப் பிறந்த குழந்தை தான் தரணி. வயிற்றில் இருக்கும்போதே தெரிந்து போனது அவள் டவுன் சிண்ட்ரோம் பேபீ என்று. சித்தி பிடிவாதமாக குழந்தையைப் பெற்று கொண்டாள். நல்லபடியாகத்தான் வளர்க்க நினைத்தாள். ஆனால் எதிர்பாராவிதமாக சித்தி பிரசவத்தில் இறக்க, என் சித்தப்பா மனமுடைந்து அவரும் இறந்து போனார். தரணி எங்களுடனேயே அதன்பின்னர் தங்கிவிட்டாள். என் தங்கையாக. எனக்கும் அவளுக்கும் பதினைந்து வயதுக்கும் மேல் வித்தியாசம். என் அம்மாவுக்கு செல்லக்குட்டி அவள். அப்பாவுக்கும் தான். என் உயிர் அவள். அவள் பிறந்ததும் நான் தான் கையில் வாங்கிக் கொண்டேன்..”, என்று ஒரு வித கடினக் குரலில் பேசினான்.



"ஓ அதனால் தான் நான் இந்த ஒரு காரணத்திற்காக தான் என்னை அங்கே உள்ளே அழைச்சீங்களா? இங்கேயும் கூட்டி வந்தீங்களா?.. அதான் இதுக்காக நான் செய்யப் போறேன்னு என்னையும் பிடிச்சுதா?.."



"அதுவும் ஒரு காரணம். ஆனால் நீ பேசும் போது. நிஜமாகவே உன்னைப் பிடித்துப் போனது. ஆனால். நீ கையில் எடுத்திருக்கும் வேலை அவ்வளவு எளிது கிடையாது என்பதை உனக்குக் காட்ட விரும்பினேன். எந்த ஒரு ஒரு வேலையாக இருந்தாலும், நிஜத்தில் களத்தில் இறங்கிப் பார்த்து அனுபவம் பெற வேண்டும் என்றே நான் நினைப்பேன். அதைத் தான் உனக்கும் காட்ட விரும்பினேன். உன் ஈஸ்வர் நிஜமாகவே இந்த மாதிரியான ஒரு காரணத்திற்காகவா உன்னை அனுப்பினான்? உனக்கு நீயே யோசிக்க ஒரு சின்ன விளக்கம் தேவை என்று தோன்றியதால் தான் உன்னை அங்கே அழைத்துப் போனேன் இன்றைக்கு. அப்படியே என் வீட்டிக்கும்தான்..”,



மௌனமாய் யோசனையிலாழ்ந்தாள் காவேரி.



அவள் வீடு நெருங்கியதும் அவளை வாசலிலேயே விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டான் ஜீவா.





பால்கனியிலிருந்து அனைத்தையும் பார்த்தபடியே நின்றிருந்த ஈஸ்வரின் முகத்தில் ஏதோ ஒரு வித ஆத்திரம் வெளிப்படையாகவே தெரிந்தது.


 
Top