கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ரியா மூர்த்தி குறுநாவல்கள் ...திரி

Rhea Moorthy

Moderator
Staff member
நானே நீயாய் வருவேன்....

கதைக்கரு

ஊரையே அச்சுறுத்தும் பேய் ஒன்று நம் சென்னை பசங்ககிட்ட மாட்டிக்கிட்டு அல்லோலப்படும் கதை நானே நீயாய் வருகிறேன்!......


பாகம் - 1

சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலை
நேரம் 11.00pm

"டப் டப்" என்று விழும் மழைத் துளியை ஒதுக்கி விட்ட ஸ்வைப்ரின் சத்தத்தையும் மிஞ்சி ஒலித்தது எப்ஃஎம் ரேடியோவின் குரல்.

"தென் மேற்கு பருவ மழை நேற்றில் இருந்து துவங்கிய காரணத்தினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் பிற கடலோர கிராமங்களில் மிதமானது முதல் அதிக பட்ச மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.." என்று ரேடியோவில் தன் வீணைக்குரலால் பேசினாள் பெண்ணொருத்தி.

அந்த அறிவிப்பை காதால் வாங்கிய படியே காரை நெடுஞ்சாலையில் செலுத்திக் கொண்டிருந்தார் சகாயம் (50).. இரவு நேர பயணம் என்பதாலும், வலுத்துப் பொழியும் மலையின் ஆதிக்கத்தாலும் அதிக வேகம் இல்லாமல் வாகனம் ஊர்ந்து சென்று கொண்டு இருந்தது.

அவரின் மனைவி மற்றும் மகனுடன் மதுரைக்கு, ஊரின் கோவில் திருவிழாவிற்கு சென்று கொண்டு இருக்கிறது அந்த குடும்பம்.

கொட்டும் மழையை வேடிக்கை பார்த்த படி பின் சீட்டில் மகனுடன் அமர்ந்து இருந்தார் அவரின் மனைவி லட்சுமி, வயது 46.

லட்சுமியுடன் அமர்ந்து இருந்தான் விக்கி. சகாயம், லட்சுமி தம்பதியினருக்கு ஒரே மகன். சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். வண்டியில் ஏறியதில் இருந்து தன் கை பேசியையே பார்த்து கொண்டு, வேறு எங்கும் கவனம் செலுத்தாமல் அமைதியாய் அமர்ந்து இருக்கிறான்.

"டேய் விக்கி, முதுகு ரொம்ப வலிக்குது, கொஞ்ச நேரம் நீ வண்டி ஓட்டுறியாடா? நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்" என்றார் சகாயம் தன் மகனிடம்.

அதற்கும் அவனின் பதில் "அதெல்லாம் முடியாதுப்பா" என்றே வந்தது அலட்சியமாய், அப்போதும் அவன் கண்கள் இரண்டும் கைபேசியிலேயே கவனமாய் இருந்தன.

அவனின் இந்த பதிலை எதிர்பார்த்தவர் போல, பெருமூச்சுடன் வாகனத்தை செலுத்திய படி பார்வையை வெளியே சுழற்றினார்.

மழை நின்று இருள் சூழ்ந்து மிகவும் அமைதியாக இருந்தது அந்த நெடுஞ்சாலை. மழைக் காலம் என்பதால் வாகனங்களின் வரத்து எதுவும் அதிகம் இல்லை. மழை என்று கூற முடியாதுபடி இன்னமும் அங்கும் இங்கும் சில துளிகள் தூறி கொண்டு தான் இருந்தது...

நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றும் எரிந்து கொண்டிருக்க, எப்ஃஎம்மின் உதவியோடு பயணித்தார் சகாயம்.

வண்டி திருச்சியை நெருங்குகையில் மணி பதினொன்று முப்பதை நெருங்கிவிட்டது. வயதின் முதிர்ச்சியின் காரணமாக, இதற்கு மேல் வண்டியை ஓட்ட முடியாது என்ற நிலையில் வழியில் தென்படும் ஏதாவது ஒரு ஹோட்டலில் காபி அல்லது டீ பருகலாம் என்று முடிவெடுத்தார்.

அருகில் தெரிந்த ஹோட்டலின் பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்தி திரும்பி பார்க்க லட்சுமி நல்ல உறக்கத்தில் இருந்தார். விக்கி இப்போதும் கைபேசியில் தான் தன் கவனம் முழுவதையும் வைத்திருந்தான்.

"டேய் விக்கி, வா போய் காபி, டீ ஏதாச்சும் குடிச்சிட்டு வரலாம்" என்று அவர் அழைக்க,

அதற்கும் அவன், "எனக்கு அதெல்லாம் வேண்டாம்ப்பா, நீங்க மட்டும் போயிட்டு வாங்க" என சலித்த படியே பதில் அளித்தான்.

சகாயம் மட்டும் உள்ளே சென்றார். மணமணக்கும் இஞ்சி டீ அவர் நாசியை துளைக்க, அதேயே வாங்கி அருந்தியவர் பணம் செலுத்தி விட்டு பார்க்கிங் ஏரியாவினை நோக்கி வந்தார். ஆனால் அங்கு அவரின் காரும் இல்லை, லட்சுமி, விக்கியும் இல்லை.

'விக்கி வாகனத்தை வேறு இடத்தில் நிறுத்தி இருப்பானோ?!' என்று குழம்பிய படியே அங்கும் இங்கும் தேடி அலைந்தார். ஆனால் அவர்கள் இருவரையும் அந்த பார்க்கிங் பகுதி முழுவதிலும் காணவில்லை.

'ஒரு வேளை விக்கியும் லட்சுமியும் காபி குடிக்கலாம் என்று நினைத்து ஹோட்டலுக்கு உள்ளே சென்று விட்டனரா? நான் அவர்களை கவனிக்காமல் வந்து விட்டேனா?' என்று ஹோட்டலின் உள் பகுதி முழுவதும் அங்குலம் அங்குலமாய் தேடிப்பார்த்தார். அவர்கள் உள்ளேயும் இல்லை..

'விக்கி வண்டியை எடுத்துக்கொண்டு அருகில் எங்கேயாவது சென்று இருப்பானோ?' என்று அவனுக்கு அழைத்துப் பார்த்தார்.

மழையின் காரணமாக அவர்கள் இருவரது செலபோனும் டவர் கிடைக்காமல் தகராறு செய்தது. எத்தனை முறை முயன்றாலும் அழைப்பு இணைக்க படவில்லை எனும் பதிலே மீண்டும் மீண்டும் கிடைக்க சோர்ந்து போனார் அவர்.

ஐந்து நிமிடம் ஹோட்டலுக்கு அக்கம் பக்கத்து கடைகள் அனைத்திலும் தேடித்திரிந்தார், எங்குமே அவர்களைக் காணவில்லை.

இப்படியே பத்து நிமிடம் கழிய அவருக்குள் இனம் புரியா பய உணர்வு தோன்றுகிறது. விக்கி கொஞ்சம் பொறுப்பில்லாதவனே தவிர ரொம்பவும் புத்திசாலி, பலசாலி. அவனை மீறி வேறு யாரும் வாகனத்தை தொட்டுக்கூட இருக்க முடியாது என தெரிந்தவராதலால் எதோ சரி இல்லை என்று படுகிறது சகாயத்திற்கு.

இதற்கு மேல் தாமதிக்கலாகாது என்று அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் குடுக்க செல்கிறார்.

புகாரை பெற்ற காவல் துறையினர், "திடீர்னு காணுமா? எதுக்கும் இங்கேயே ஒரு ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி தங்கிங்கோங்க, அப்போத்தான் எங்களுக்கு வேற ஏதாவது தகவல் தேவைனா உங்கள கான்டாக்ட் பண்ண ஈசியா இருக்கும். ஒண்ணும் பயப்படாதீங்க, இப்ப இருக்குற டெக்னாலஜிக்கி நாளைக்கே செல்போன் சிக்னல் வச்சு ஈசியா உங்க ஃபேமிலிய கண்டு புடிச்சிடலாம்" என்று நம்பிக்கை தந்து அனுப்பிவைத்தனர்.

பதட்டத்துடனே அவர்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி வைத்தார் சகாயம். அடுத்த நாள் முழுதும் இவர் ஒரு புறம் காவல் துறையினர் ஒரு புறம் என்று தேடியும் எந்த துரும்பும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அடுத்த நாள் அவர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அறையில் வந்து அமர்ந்த நேரம் கதவு பலமாக தட்ட பட, திறந்தவருக்கு பேரதிர்ச்சி. அங்கு அவர் கம்ப்ளெயிண்ட் கொடுத்த காவலர்களே, அவருக்கு விலங்கு மாட்ட சகல ஏற்பாடுகளுடன் வந்து நின்றிருந்தனர்.

"ஏன்யா, பாக்க பெரிய மனுஷன் மாதிரி இருக்கியேனு பார்த்தா, எவ்ளோ பெரிய கேடியா இருக்குற நீ? நீயே உன் குடும்பத்த மறைச்சு வச்சிட்டு, நீயே வந்து அவங்கள காணோம்னு கம்பளைண்ட்டும் தர்றனா எவ்வளவு தைரியம் இருக்கனும் உனக்கு? போலீஸ்காரன் எல்லாம் கேனப்பயனு நினைச்சுட்டியா?" என்று காட்டுகத்து கத்தினார்கள்.

சகாயம், "சார், என்ன உளர்றீங்க? நான் ஏன் என் பொண்டாட்டியையும் புள்ளையையும் நான் மறைச்சு வைக்கணும்?" என்று ஆர்ப்பரித்தார்.

காவல் துறையினரோ, "அதத்தான் நாங்களும் உன்கிட்ட கேக்குறோம், எதுக்காக உன் பொண்டாட்டியையும் பிள்ளையையும் நீ மறைச்சு வைச்சிருக்க? மறைச்சுதான் வச்சிருக்கியா, இல்ல வேற ஏதாவது செஞ்சுட்டியா?" என்றனர்.

"சார், என்ன பேசுறீங்க நீங்க? நான் யார் தெரியுமா? சென்னையில எவ்ளோ பெரிய கம்பெனியில வொர்க் பண்றேன் தெரியுமா? என் கேரியர்ல இதுவரைக்கும் ஒரு சின்ன பிளாக் மார்க் கூட வாங்கினது கிடையாது, என்னை போய் இப்டி குத்தம் சொல்லுறீங்க? சென்னை கமிஷனோர் வேணும்னாட்ட பேசுறீங்களா? அவர் என்னோட ப்ரெண்டு, அதுவும் இல்லாம எந்த ஆதாரத்தோட நீங்க என்னை கைது செய்யுறீங்க" என்று வாதாடினார் சகாயம்.

"ஆதாரம் வேணுமா சார்ருக்கு? செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு ஆதாரம் வேற கேக்குறியாயா நீ? இதோ பார் ஆதாரம்" தன் கை பேசியில் இருந்த அந்த விடியோவை காண்பித்தார் ஒரு காவலர்.

அதில் நேரம் 11.35 காட்ட பட அவரின் அதே கார். அவரின் மனைவியும், மகனும் பின் சீட்டில் அமைதியாய் அமர்ந்திருந்தனர். விக்கி இப்போதும் தன் கைபேசியில் மூழ்கிய படி இருந்தான்.

கார் அந்த ஹோட்டல் இருந்த திசைக்கு எதிரே வேறு திசையில் பயணித்துச் செல்கிறது. அதன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபரைக் கண்டதும் சகாயத்தின் இருதயம் ஒரு முறை நின்று பின் துடித்தது.

அந்த நபர் அவரே தான், தன் காரை அவரே யாரும் இல்லாத ஒரு பாதையில் ஓட்டி செல்வதாக அந்த வீடியோ காண்பிக்கிறது.

"இப்போ உண்மையை சொல்லுங்க. நீங்க தானே உங்க மனைவி, மகனை மறைச்சு வச்சிருக்கீங்க?" என இப்போது அதிகாரத்தோடு வந்தது கேள்வி.

'இல்லை இல்லை...' என்று சகாயம் பல முறை மறுத்தும், எதிர்த்து அவரின் குரல் எடுபடவில்லை.

மனைவியையும் மகனையும் மறைத்து வைத்ததற்காக உடனே கைது செய்ய பட்டார். அடுத்த ஒரு வாரத்தில் லட்சுமி விக்கி இருவரும் சடலமும் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கிடைக்க, சகாயம் கொலை குற்றவாளிகள் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடைசி வரைக்கும் நான் என் மகனையும் மனைவியையும் கொலை செய்யவில்லை என்று அவர் கதறி அழும் செய்தி காட்டு தீயைப் போல ஊர் எங்கும் பரவியது. அடுத்த சில நாட்களுக்கு அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கத்திலும் இந்த செய்திதான் அச்சிடப்பட்டது.

இருந்தும் அவரை ஒருவரும் நம்ப மறுத்து விட்டனர்.

இரண்டு மாதங்கள் கழித்து
இடம் : ஊட்டி

மலைப்பாதையில் லாவகாமாய் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தினுள், "அப்பா, 'பேட்ட'படத்துல இருந்து 'மரண மாஸ்' பாட்டு போடுங்கப்பா" என்று கத்தி கொண்டு இருந்தான் பின் இருக்கையிலிருந்து ஆகாஷ்...

"இருடா ஆகாஷ்... முதல்ல 'ப்ரேமம்' படத்துல 'மலரே' பாட்டு போட்டு முடிஞ்ச அப்புறம் உனக்கு புடிச்சத மாத்திக்கோ... கொஞ்ச நேரம் மட்டும் பொறுமையா இருடா" என முன் இருக்கையிலிருந்து கெஞ்சி கொண்டிருந்தாள் உமையா.

"ரெண்டு பேரும் சத்தம் போடாதீங்க, இதோ பாருங்க ரிசார்ட்கே வந்துட்டோம். இப்ப உங்க சண்டைய நிறுத்தி வச்சுட்டு, ரூம்க்கு போனதும் அடிச்சிக்கோங்க. வெளி ஆளுங்க முன்னால குடும்ப மானத்த கப்பலேத்தி விட்டா அப்பாவ இப்டியே வண்டிய வீட்டுக்கு திருப்ப சொல்லிடுவேன்" என பிள்ளைகள் இருவரையும் அமைதி படுத்தினார் சாரதா..

மனைவியின் சாதுரியத்தை மெச்சியபடி மெல்லச் சிரித்தான் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த ராம்.

அம்மா அப்படி செய்ய மாட்டார் என்றாலும், அப்போதைக்கு அமைதியாகினர் பிள்ளைகள் இருவரும். ராம் காரை ரிசார்ட்டின் வாசலில் நிறுத்த நால்வரும் மகிழ்ச்சியோடு உள்ளே சென்றனர்.

குழந்தைகளும் மனைவியும் அங்கிலிருந்த சிறிய கார்டனுக்குள் நுழைந்தனர். இரவு நேர வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் பூச்செடிகள் எல்லாம் இன்னுமே அழகாய் காட்சி தந்தது. மூவரும் அதிலேயே கண்ணாய் இருக்க, ராம் அவர்களை தெல்லை செய்யாமல் விட்டுவிட்டு ரிசப்ஷனுக்கு சென்றான்.

அங்கு இருந்த நபரிடம் ராம் இன்முகத்துடன், "ஹலோ நான் ராம், இங்க மூணு நாளுக்கு ரூம் புக் பண்ணி இருந்தேன்" என்றார் கனிவான குரலில்.

"எஸ் சார், சாயங்காலத்துல இருந்து உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். உங்களபத்தி டீடெயில்ஸ் குடுங்க சார், ஃபில் பண்ணிட்டு ரூம் கீ தந்திடுறேன்" என்றான்.

"நான் ராம், வயசு 40. என் மனைவி சாரதா வயது 37, மகன் ஆகாஷ் வயசு 15, மகள் உமையாள் வயசு 18"என்று கூறிய விவரத்தை குறித்துக்கொண்டார் அந்த நபர்.

"சார் உங்களுக்கு ரூம் நம்பர் 404 புக் ஆகி இருக்கு. இந்தாங்க சாவி" என்று நீட்ட,

"தேங்க்யூ..." என்று பெற்று கொண்டு வேகமாய் திரும்பினான் ராம்..

அப்போது அங்கு வந்த வெயிட்டர் தன் கையில் இருந்த சாக்லேட் மில்க்ஷேக்கை அவன் மீது சிந்திவிடாமல் எதிர் திசையில் சாய்க்க, அது தவறுதலாக அவனுக்கு பின்னாலிருந்த சாராதாவின் மேல் கொட்டி விட்டது.

ஒரு நொடியில் வெயிட்டர், 'சாரதா தன்னை திட்டி மேனேஜரிடம் புகார் தெரிவிப்பார்' என்று அஞ்சி நடுங்கி, "சாரி மேடம், ரியலி சாரி.. சார் வேகமா திரும்பினதால நான் தள்ளி பிடிச்சுக்க ட்ரை பண்ணேன்.. வேணும்னு பண்ணல மேம்.. சாரி மேம்' என்று உளறி கொட்டினான்.

சாரதாவோ இன்முகத்துடன், "பரவாயில்லை சார், மில்க் ஷேக்தான நான் ரூமுக்கு போய் கழுவிடுறேன். இனிமே நீங்க பார்த்து கொண்டு போங்க" என்பதைக் கூட பணிவான குரலில் கூறிச் சென்று விட்டார்.

பின் ரிசப்ஷனில் இருந்த நபர் அந்த வெயிட்டரை பார்த்து "ஏன்டா? கவனமா வேலை செய்ய வேண்டாமா? இன்னேரம் இங்க வேற யாராவது இருந்திருந்தா நம்ம ரெசார்ட்டையே உண்டு இல்லனு பண்ணிருப்பாங்க, அந்த சிடுமூஞ்சி மேனேஜர் ஒரே நிமிஷத்துல உன்னோட சீட்ட கிழிச்சு போட்டிருப்பான். எதோ அந்த அம்மா ரொம்ப பொறுமைசாலி போல, அதான் மன்னிச்சு விட்டுட்டாங்க. உன் தலை தப்பிச்சது தகப்பன் புண்ணியம், போய் வேலையப்பாருடா"அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

அங்கே தங்களுக்கென ஒதுக்கிய அறையை அடைந்திருந்தது ராமின் குடும்பம். சிறிது ஓய்வு எடுத்துவிட்டு பின் இரவு உணவுக்கு கிளம்பலாம் என்று சாரதா கூறியதுதான் தாமதம்.. உமையாள் அப்பாவின் செல்போனோடு ஐக்கியமானாள். ஆகாஷ் டிவியோடு ஐக்கியமானான்.

பிள்ளைகளின் குறும்பைப் பார்த்து சிரித்துக்கொண்டே ராம் குளிக்கச் சென்றான். அவன் குளித்து விட்டு வந்தபிறகுதான் அவனுக்கு நினைவிற்கு வந்தது, அவர்களின் லகேஜ் இன்னும் தங்களின் அறை வந்து சேர வில்லை என்று...

ரிசப்ஷன் எண்ணிற்கு அழைத்த ராம், தங்களின் லகேஜ் இன்னும் வராததைக் கூறி, விரைந்து கொண்டு வரும் படி அன்பு நிறைந்தபடியே கேட்டு கொண்டார்.

அதே வெயிட்டரை அழைத்த ரிசப்ஷன் பணியாளர், விவரத்தைக் கூறி லகேஜை கொண்டு செல்லும் படி பணித்தார்.

சென்ற முறை செய்த தவறை இம்முறையில் திருத்த நினைத்த வெயிட்டர் ஐந்து நிமிடத்திற்குள்ளேயே அவர்களின் அறையின் முன் சென்று நின்றான். அந்த அம்மாவிடம் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணியபடியே காலிங் பெல்லை அழுத்தினான். கதவு திறக்கப்படாமல் இருக்க, அறைக் கதவை பலமாக தட்ட ஆரம்பித்தான் அவன்.

பல முறை தட்டியும் அது திறக்காமல் போக, "சார்.. லகேஜ் கொண்டு வந்திருக்கேன் சார், கதவ திறங்க" என்று கத்திப்பார்த்தான்.

அப்போதும் கதவு திறக்கப்படவில்லை, 'இதை இப்படியே வைத்துவிட்டு போகலாமா? நாளை பொருள் ஏதாவது தொலைந்தால் நம் தலை உருட்டப்படுமே? என்ன செய்யலாம்?..' என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது உள்ளிருந்து எதோ பயங்கரமாய் உடையும் சத்தம் கேட்டது.

அதில் பதறியவன் விழுந்தடித்து ஓடிச்சென்று மேனேஜரை அழைத்து வந்தான். அவர் அறைக்கு அருகில் வந்ததும் மீண்டும் ஒருமுறை ஏதோ பலமாய் உடையும் சத்தம் கேட்டது. மேனேஜரும் முடிந்த வரையில் கதவைத் தட்டி அழைத்து பார்த்தார், உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.

காத்திருப்பது வீண் என புரிந்ததும், "வேகமா டூப்ளிகேட் கீ எடுத்துட்டு வாங்க" என்று கத்தினார்.

ரிசப்ஷன் பணியாளர், "சார், இதுக்கு முன்னால இந்த ரூம்ல தங்கின வங்க ரூம் கீ ய தொலச்சிடாங்க. ஸ்பேர் கீ செய்றதுக்கு ஆள் வர சொல்லி இருந்தேன், இன்னும் வரல" என்று தயங்கியபடியே தெரிவித்தான்.

"ஏன் இதெல்லாம் முன்னாலயே சொல்ல மாட்டேங்குறீங்க, சரி அட்லீஸ்ட் ஜன்னல தெறக்க ட்ரை பண்ணுங்க" என்று துரித கதியில் உத்தரவுகளை பிறப்பித்தார்.

அனைத்து ஜன்னல்களும் உள்பக்கமாக பூட்டி இருந்ததால் அதுவும் முடியாமல் போனது. நேரம் ஆக ஆக உள்ளிருந்து சத்தம் அதிகமாக வரத்துவங்கியது, ஆதலால் இறுதியில் கதவை உடைக்க முடிவு செய்தனர். உடைத்தவர்கள் உள்ளே கண்ட காட்சி அதிர வைத்தது...

சில நிமிடங்கள் முன்பு கீழே பாசமாய் பேசி சிரித்துக் கொண்டு இருந்த குடும்பம், இப்போது ஒருவரை ஒருவர் ரத்தம் வடியும்படி அடித்து கொண்டு இருந்தது. பெற்றோர் இருவரும் அவர்கள் கையாலேயே அவர்களின் பிள்ளைகளை கொன்றுவிட்டு, தாங்களும் தங்களையே கொடூரமாய்த் தாக்கி கொண்டு இறந்து விழுந்தனர்...

அனைத்தையும் பார்த்த மேனேஜர் அப்படியே நின்ற இடத்தில் மயங்கி சரிந்தார். அந்த வெயிட்டரும், ரிசப்ஷன் பணியாளரும் பதறியடித்துக் கொண்டு போலீஸ்க்கு தகவல் அனுப்பினார்கள்.

உடனே அவ்விடம் வந்தவர்கள் அங்கிருந்தவர்களின் வாக்குமூலத்தை பெற்று விசாரணையில் இறங்கினர்.

எவ்வளவு முயன்றாலும் எந்த துப்பும் கிடைக்க வில்லை அவரகளுக்கு. மற்ற ஆட்களிடம் கிடைத்த தகவல் அனைத்தும் அந்த குடும்பத்தை பற்றி நல்லபடியாகவே இருந்தது...

அந்த அழகிய குடும்பம் அரை நொடிக்குள் சிதைக்கப்பட்ட காரணம் கிடைக்காமல் குழம்பிய காவல் துறை, கேஸ்ஸை முடிக்க வேண்டும் என்பதால் குடும்பத்தோடு தற்கொலை என்றே கேஸ்ஸை முடித்துவிட்டது...

இரண்டு மாதம் கழித்து,
இடம்: திண்டுக்கல்

சனிக்கிழமை வேலை முடிந்து மல்லிகைப்பூ பண்டலோடு திரும்பி வந்த தேவாவை பார்த்து, "உங்கள எல்லாம் பார்க்கும் போது காதலிச்சு தான் கல்யாணம் பண்ணனும்னு தோணுதுயா எனக்கு" என்றான் கீழ் வீட்டில் வசிக்கும் சந்துரு எனும் இளைஞன்.

"அதுக்கு என்னடா? ஒரு நல்ல பொண்ணா பார்த்து காதலிச்சு கல்யாணம் பணிக்கோ" என்ற படியே மாடிப் படிகளில் ஏறி தன் வீட்டிற்குள் சென்றான் தேவா.

தேவா: ஒரு புகழ் பெற்ற நாளிதழில் ரிப்போர்ட்டராக பணிபுரிகிறான். ஒரு வருடமாக காதலித்த அந்த காதல் பறவைகள், தத்தமது வீட்டினரிடம் கூற இரண்டு குடும்பத்திலும் பலமான எதிர்ப்பு.

வேறு வழி தெரியாத இருவரும் நிகழ்காலத்தை இழக்க மனமின்றி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தேவாவின் மனைவி அஸ்வினி, ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறாள்.

இருவரின் அந்யோனியத்தை பற்றி அந்த காலனியே பேசும் அளவிற்கு இருவருக்கிடையில் காதல் நதி வழிந்து ஓடும்.

அடுத்த நாள் ஞாயிற்று கிழமை, காலை பத்து மணி....

"என்ன சந்துரு லவ் போர்ட்ஸ் ரெண்டு பேரையும் ஆளையே காணோம்? மணி பத்து ஆயிடுச்சு, இன்னும் கதவை திறக்கவே இல்லை" என்றார் எதிர் வீட்டு வெங்கடேசன்.

"தெரியலையே அங்கிள், வாராவாரம் இந்நேரத்துக்கு சிக்கன் கொழம்பு வாசம் மூக்கை துளைக்கும். ஆனா இன்னைக்கு ரெண்டு பேரையுமே காணோம், காலையில போட்ட பாலும் பேப்பரும் கூட கேட்லயே இருந்துச்சு, எங்க அம்மாதான் எங்க வீட்ல எடுத்து வச்சிருக்காங்க. மதியம் வரைக்கும் பாப்போம், இல்லனா கதவை தட்டி வெளிய தூக்கிட்டு வந்துட வேண்டியதுதான்" என்றான் சந்துரு.

மணி மதியம் ஒரு மணியை நெருங்கிட லேசாக தட்டி பார்த்தான் சந்துரு. சத்தமே இல்லாமல் போக, எதிர் வீட்டு வெங்கடேசனை கூப்பிட்டு வந்தான். அவர் வந்து தட்டி பார்த்தும் பதில் எதுவும் இல்லாமல் போனது. அந்த வீட்டு ஓனரிடம் அந்த வீட்டின் டுப்ளிகேட் சாவியால் கதவை திறக்க....

உள்ளே கண்ட காட்சியில் உறைந்து போய் நின்றனர் அனைவரும்...

தேவாவின் உடம்பில் பல காயங்கள், அஸ்வினி உடம்பிலும் பல காயங்கள், இறந்த நிலையில் தரையில் கிடந்தனர் இருவரும்.

பின் போலீஸ் வந்து விசாரணை நடத்தி துப்பு துலக்க, அந்த வீட்டிற்கு யாரும் வந்து போனதாக கூட தெரியவில்லை.

இரண்டு வாரமாக தொடர்ந்த கதை, இம்முறையும் ஆதாரம் இல்லை என்றானது. கணவன்-மனைவிக்குள் பிரச்சனை ஒருவரை ஒருவர் அடித்துக் கொலை செய்தனர் என்ற வார்த்தைகளையோடு கேஸ் மூடி வைக்கப்பட்டது.

ஆனால் கடந்த இரு வழக்கிலும் இருந்த ஒற்றுமை காவலர்கள் மூளையை உசுப்பிவிட்டது. எங்கோ ஏதோ மிகப்பெரிய தவறு நடக்க போகிறது என்று மட்டும் அவர்களுக்கு நன்கு புரிந்தது....

 
Last edited:

Rhea Moorthy

Moderator
Staff member
பாகம் 2

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, அங்கொன்றும் இங்கொன்றுமாய் இதே போன்று சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தது. காவல் துறை முதலில் இது எதோ காரணம் இல்லாமல் யதேட்சையாக நடக்கும் கொலைகள் என்று நினைத்து கேஸ்களை மூடி விட்டன.

நடக்கும் சம்பாவங்கள் அனைத்திலும் சில விஷயங்கள் ஒரே போல் ஒத்து போகிறது என்பதை நான்கு, ஐந்து கொலைகளுக்கு பின்னரே புரிந்து கொள்ள முடிந்தது அவர்களால்.

அதற்குள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடந்து கொண்டு இருந்த கொலைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாகி இருந்தது. வாரத்திற்கு ஒன்று இரண்டு என்று அங்கங்கே கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க, காவல் துறை தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக குழம்பிக் கிடந்தது.

கொலைக்கான காரணம் இன்னதென்று கண்டறிய இயலாமல் காவல்துறை கையாலாகாத துறையாக மாறி கொண்டிருக்க, மற்றொருபுறம் செய்திகள் நாளிதழ்களிலும் இணையத்திலும் பரவி மக்களை பீதியில் ஆழ்த்தியது.

எண் திசைகளிலும் கொலைச் செய்திகள் சூடுபிடிக்க, காவல் துறையினர் இந்த கொலைகளில் அதிக பட்சம் என்னதான் கண்டு பிடித்தனர்? என்று ஊடகங்கள் அவர்களின் மானத்தை பட்டம் விட்டு விளையாட ஆரம்பித்தது.

காவல் துறையினரின் கைவசம் இருக்கும் துப்புகள் இரண்டுமட்டுமே. ஒன்று, இந்த கொலைகள் அனைத்தும் இரவு நேரத்தில் தான் நடைபெறுகிறது, அதிலும் முக்கியமாக இரவு பத்தில் இருந்து பன்னிரெண்டு மணி அளவில் நடை பெறுகிறது.

இரண்டாவது, கொலை செய்யப்பட்ட அனைவரும் குடும்பமாய், சண்டை சச்சரவு இன்றி அழகான அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள்தான் என்பதும் தான்.

கொலையாளி குடும்பங்களைத் தான் அதிகம் தாக்குகிறான், ஒரு வேளை அவன் தனது பாசமான குடும்பத்தை எதாவது விபத்தில் அல்லது வேறு ஏதோ வகையில் இழந்துவிட்டு தவித்தனாய் இருக்கக்கூடும். அதனால் மன உளைச்சல் அதூகமாகி, மற்றவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்வதை காணப் பொறுக்காமல் சைக்கோவாகிய எவனாவது இருக்கக்கூடும் என்ற படி தான் அவர்களின் விசாரணை இந்த நிமிடம் வரையில் சென்று கொண்டு இருந்தது.

ஆனால் அவன் எவ்வாறு தான் வந்து சென்ற தடயமும் கைரேகையும் இல்லாமல், தப்பித்தான் என்பது அவர்களுக்கு புரியாத புதிரே..

இதற்கிடையில் குடும்பங்கள் மட்டுமே தாக்கப்படுகிறது என்ற செய்தி கோடை காலத்து காட்டுத்தீ போல ஊர் எங்கும் அதி விரைவாக பரவிட, அது மேலும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

காவல்துறை சரியாக கண்டுபிடித்தாலே சில நேரங்களில் தங்களுக்குள் குழப்பிக் கொள்ளும் மக்கள் கூட்டம் இம்முறை என்ன செய்யும்? மக்கள் தங்களால் முடிந்த வரை தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றி கொள்ளத் தேவைப்படும் அனைத்து பாதுகாப்பு முயற்சிகளையும் செய்து கொண்டு இருந்தனர்.

அக்கம்பக்கத்து வீட்டினரோடு சண்டை போடுவதை கைவிட்டுவிட்டு, காலையும் மாலையும் சினேகமான புன்னகைகளை பரிமாற ஆரம்பித்தனர். வருடத்திற்கு ஒருமுறை தொடர்புகொண்ட ஒன்றுவிட்ட உறவுமுறைகளுக்கு எல்லாம் தினம் ஒருமுறை தொடர்பு கொள்வது நடைமுறைக்கு வந்து கொண்டிருந்தது. வீட்டின் வாசலிலும், சில வீடுகளுக்குள்ளும் சிசிடிவி கேமராவை பொறுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கத் துவங்கியது...

அப்பார்ட்மெண்ட் வாசிகளோ காவலிற்கு ஆட்களை மிகுதியாகவே எடுத்து தங்களை பாதுகாக்க ஆரம்பித்தனர். அதிலும் நல்ல உடல் வாகு, நல்ல உயரம், ஓரளவிற்கு இளவயது, உடற் குறைபாடு இல்லாத தோற்றம் என ஏதோ மிலிட்டரிக்கே ஆள் எடுப்பது போல வாட்ச்மேன் வேலைக்கே பல கோட்பாடுகள் அமைக்கப்பட்டன.

இவர்கள் இப்படிச் என்றால் மற்றொரு தரப்பினர், "இது நமக்கு நம் முன்னோர்கள் இடப்பட்ட சாபம். அது தான் நோய் வடிவிலும், மர்ம கொலைகள் வழியிலும் நம்மை துரத்துகிறது. இதில் இருந்து எவருமே தப்ப இயலாது, இன்னும் சில மாதங்களில் உலகமே ஒட்டுமொத்தமாக அழியப் போகின்றது" என்று புது விதமாக ஒரு கற்பனை குதிரையை தட்டி கிளப்பி விட்டனர்.

இவர்களால் மாந்த்ரீகர்களையும் போலிச் சாமியார்களையும் நம்பி அர்த்தமற்ற பூஜை பரிகாரத்தை மேற்கொள்ளும் கூட்டம் கூடிக்கொண்டே சென்றது.

இன்னும் சில அதி மேதாவிகள் இவை அனைத்தும் இல்லுமினாட்டிகளின் வேலை தான். நம்மை மறைந்திருந்து தாக்க இத்தனை நாள் அவர்கள் போட்ட திட்டத்தின் விளைவு தான் இந்த மர்மச் சாவுகள். இதில் அரசாங்கம் உடனே தலையிட்டு இல்லுமினாட்டிகளிடம் உடனே பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற படி அரசிற்கு மனுக்கள் பறந்தன.

மற்றொரு புறம் தன்னார்வலர்கள் எனும் பெயரில் உலவும் சில அதி மேதாவிகள், இதெல்லாம் நம் எதிரி நாடுகள் நம் நாட்டினுள் இருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் மூலமாக நிகழ்த்தும் ரகசிய போர். எதோ ஒருவித ரசாயனத்தை நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்களில் அவர்கள் கலந்து விடுகின்றனர்.

அந்த கெமிக்கல் நம் உடலை அடைந்ததும் நமது மூளையில் இருக்கும் நரம்பு மண்டலத்தில் சிறு கோளாறுகளை உருவாக்குகிறது. அதனின் விளைவாக தான் மனிதர்கள் இப்டி புத்தி பேதலித்து, தன் மொத்த நினைவுகளையும் முற்றிலுமாய் இழக்கும் நிலைக்கு வந்து, நம்மை அறையாமலே மிருகமாய் மாறி நம்மைச் சார்ந்தவர்களை கொலை செய்கிறார்கள்.

அதனால் கடைகளில் விற்கும் கார்ப்பரேட் பொருள்கள் அனைத்தையும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும். இறந்தவர்களின் இல்லத்தில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் முழுதாய் ஆராய்ச்சி செய்யப் பட வேண்டும். அவர்கள் உபயோகிக்கும் ஷேவிங் க்ரீம், நாப்கின் வரை அரசாங்கம் தூசி தட்டி பார்க்க வேண்டும் என்று, தனது ஏலியன் மூளையால் பிரச்சனைக்கான முடிவையும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.

மக்களின் அச்சத்தாலும் அசட்டுத்தனமான பிரச்சாரத்தாலும் காவல் துறைக்கும், அரசாங்கத்திற்கும் நெருக்கடி அதிகமாக ஆரம்பித்தது. ஏற்கனவே கொலையை கட்டுப்படுத்தும் முடியாமல் திணறிக் கொண்டு இருந்தவர்களுக்கு, இப்போது மக்களின் மன நிலையையும் வேறு கட்டு படுத்த வேண்டிய நிலை... ஆனால அதை எப்படி செய்வது என்று புரியாமல் போராடி கொண்டு இருந்தனர்.

நாளுக்கு நாள் கொலைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு மூன்று மடங்கு என்று அதிகம் ஆகிக்கொண்டே போனதே தவிர குறைந்த பாடில்லை.

தமிழகம் மட்டும் பரவிக் கிடந்த இந்த செய்திகளும், வதந்திகளும் மாநிலத்தை கடந்து வெளியே செல்ல ஆரம்பித்தது.
இவற்றை கேள்வி பட்ட மற்ற மாநில போலீஸ் காரர்களும் தங்கள் மாநிலத்தை உற்று கவனிக்கத் தொடங்கினர்.

தங்கள் மாவட்டத்திலும் இதே போன்று ஒரு சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதுவும் கடந்த சில வாரங்களில் எல்லாம் கொலைகளின் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டே போகிறது என்ற தகவல்கள் நாட்டின் பல பகுதியிலிருந்து மதியம் அரசிற்கு பறக்கத் துவங்கியது.

இது எதோ கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று கருதிய மதிய அரசு. சிபிஐயின் உதவியை நாடி அவர்களை இந்த வழக்கை எடுத்து நடத்த சொல்லி கோரிக்கை வைத்த நேரம், நாடு முழுவதும் இருந்து சுமார் நூற்றைம்பது கொலைகள் ஒரே நாளில் நிகழ்த்தப்பட்டது.

அடுத்த நாள் இந்தியாவின் அனைத்து பத்திரிகைகளிலும் பாதி பக்கங்களை இந்த மர்மக் கொலைகளை ஆக்கிரமித்து இருந்தது. போதாததிற்கு அனைத்து கொலைகளும் சொல்லி வைத்தார் போல ஒரே நேரத்திலும், ஒரே மாதிரியாகவும் நடந்து இருக்கிறது என்பது அரசாங்கத்திற்கே சிறிது பதட்டத்தையும் பயத்தையும் அளித்தது.

அங்கு கொலை, இங்கு கொலை என்று நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் கொலையைப் பற்றிய பேச்சாகவே இருக்க, மக்களின் மனதில் பயம் பெருகிக் கொண்டே போனது.

பத்து நாட்கள் கழித்து...

இடம் : டிசிஸ் ஐடி பார்க், சென்னை

"மச்சா வாடா... டைம் ஆச்சு, சாப்பிட்டுட்டு வந்துடலாம்" என்று கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்த படியே வந்தான் அருள்.

"இருடா... இன்னும் கொஞ்சம் தான் இருக்கு, முடிச்சிட்டேன்னா இதை ஹெச்ஆர் (HR) கையில மொதல்ல குடுத்துடுவேன். இல்லாட்டி அந்த ஆளு நொய்யி நொய்யினு கெளம்புற நேரத்துல என் உயிர எடுப்பான்டா" என்று கண்ணினியில் தன் பார்வையை வைத்த படியே பதில் அளித்தான் செந்தில்.

செந்திலின் அருகில் வந்த ராகுல், "ஏதோ இதுவரைக்கும் அந்த ஆளுட்ட திட்டே வாங்காத மாதிரி சீன் போடாதடா. அந்த வழுக்கை மண்டை கெடக்குறான் விடு, சாப்டுட்டு வந்து பாத்துக்கலாம் மச்சி. நான் வேற இன்னிக்கி உனக்கு புடிச்ச ஆம்பூர் பிரியாணி வாங்கி வெச்சிருக்கேன். வந்து தொலைடா" என்றான்.

அதுவரை வேலை வேலை என்று உத்தமபுத்திரனாய் இருந்த செந்தில், பிரியாணி என்றதும் உத்தமவில்லனாய் உருமாறினான்.

சடாரென்று தன் இடத்தை விட்டு எழுந்து நின்றவன், "என்னது ஆம்பூர் பிரியாணியா? வாங்கடா சாப்பிட போகலாம், நமக்கு வேலையா முக்கியம்? பிரியாணி தானே முக்கியம்!.."என்றான் அசடு வழிந்து கொண்டு.

மூவரும் தங்களின் ஆஸ்தான உணவு அருந்தும் இடத்தில், ஒரு சேர அமர்ந்து தங்களின் டப்பாக்களை திறந்தனர்.

ராகுல், "என்னடா எப்போ பாரு சாம்பார் பொறியல்னே கொண்டு வர்ற? வித்யாசமா கொண்டு வரவே தெரியாதாடா" என்று சொல்லிக்கொண்டே செந்திலின் டப்பாவிலிருந்து கொஞ்சம் சாதத்தை எடுத்து தின்ன ஆரம்பித்தான்.

செந்தில், "உனக்கு என்னப்பா? நீ பேச்சிலர் பாய், தினமும் வித விதமான சாப்பாடு ஹோட்டலேல இருந்து வாங்கிட்டு வர்ற. நான் அப்டியா? குடுமஸ்தன், ஆசைப்பட்டு ஒரு தோசைக்கு ரெண்டு சட்னி கேட்டா போதும், நான் செத்தேன்... 'உங்களுக்கு ஒண்ணு, உங்க பிள்ளைங்களுக்கு ஒண்ணு, உங்க அம்மாவுக்கு ஒண்ணுன்னா என்னால சமைக்க முடியும்? வீட்டு வேலை, குழந்தைங்க, நீங்க, உங்க அம்மா எல்லாத்தையும் சமாளிச்சுகிட்டு நான் மூணு வேளையும் சமைச்சு போடுறதே பெருசு. இன்னோர் தடவ அது வேணும் இது வேணும்னு ஏதோ ராஜா மாதிரி கேட்டுகிட்டு இருந்தீங்க, உங்களுக்கு உப்புமா செஞ்சி கொடுத்துடுவேன் பார்த்துக்கோங்க'னு மிரட்டுறாடா" என்றான் செந்தில் அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு.

"பொலம்பாதீங்கடா... அதான் இங்க ஷேர் பண்ணித்தான சாப்பிடுறோம், இங்க பாருங்க எங்க அம்மா இன்னைக்கு பரோட்டாவும் சிக்கன் சால்னாவும் செஞ்சி குடுத்து இருக்காங்க. எடுத்து சாப்பிடுங்க" என்றான் அருள் தான் டப்பாவை திறந்த படி.

"வாழ்ந்தா உன்ன மாதிரி வாழணும்டா.. நல்ல வேலை, நல்ல சம்பளம், நினைச்ச நேரத்துக்கு இஷ்டப் படி வகை வகையா சமைச்சு கொடுக்குற அம்மா, லவ்வுக்கு ஓகே சொல்ற அப்பானு சும்மா செம ஜாலியான குடும்பத்துல வாழ்றடா நீ" என சலித்து கொண்டான் ராகுல்.

"இப்போ எல்லாம் குடும்பம்ன்ற வார்த்தைய கேட்டாலே கொஞ்சம் பயமா இருக்குடா. அக்கம் பக்கம் பார்த்து தான் குடும்பத்தை பத்தி பேச வேண்டி இருக்கு. எவன் எங்க இருந்து நம்ப குடும்பத்தை பத்தி கேட்டுட்டு வந்து போட்டு தள்ளிட்டு போவான்னு உள்ளுக்குள்ள பக்கு பக்குன்னு இருக்குடா" என்றான் குடும்பஸ்தனாகிய செந்தில்.

"ஆமாம்டா, நானும் பார்த்தேன். எப்போ நியூஸ் பார்த்தாலும் கொலை கொலை கொலைதான். ஆபீஸ்ல நிம்மதி இல்லாம வீட்டுக்கு போனா, வீட்டுலயும் நிம்மதியவே இருக்க விட மாட்டேங்குறாக" என புலம்பினான் அருள்.

"எனக்கு என்னமோ, நம்ப அரசாங்கமே நம்மளோட மக்கள் தொகையை கட்டு படுத்தத்தான், குடும்பம் குடும்பமா போட்டு தள்ளுதுனு நினைக்குறேன்" என்றான் செந்தில்.

ராகுல், "அட இவன் வேறடா. எதை கொண்டு போய் எங்க முடுச்சிட்டி போடுறான்" என்று சிரித்திட அருளும் அவன் சிரிப்பில் இணைந்துகொண்டான்.

"டேய் நான் சீரியஸா சொல்றேன், செத்தவன் அத்தனை பேரோட பேக்ரவுண்டு, பேங்க் அக்கவுண்ட்னு எல்லாத்தையும் யாராவது வெளியில கொண்டு வந்தா அப்போ எல்லாமே வெளிச்சத்துக்கு வரும். நீங்க வேணும்னா பாருங்க, இன்னிக்கி சம்பவத்தோட ரிசல்ட் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு இந்தியாவோட பொருளாதாரத்துல தெரியும்" என்று எதோ அனைத்தையும் நேரில் பார்த்தவன் போல இந்திய பொருளாதாரத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தான் செந்தில்.

"அதெல்லாம் இருக்காது. இது என்னமோ இல்லுமினாட்டிகள் பண்ற வேலை மாதிரி தான் தெரியுது. மர்மமா வர்றது, கொலை பண்றது எல்லாம் அவுங்களோட கால காலமானா திட்டமா கூட இருக்கலாம்" என்றான் ராகுல் படு சீரியஸாக.

"ஆமாம்டா. அந்த இல்லுமினாட்டிகளோட அடுத்த டார்கெட் நீ தானாமாம், அவங்க காலகாலமா போட்ட திட்டத்தை நீ ஒரே செகண்ட்ல கண்டுபிடிச்சிட்ட. அதனால உன்னை இன்னிக்கி ராத்திரி போட்டு தள்ள போறாங்கன்னு எனக்கு ரகசியமா தகவல் சொன்னாங்க" என்றான் அருள் அதே தீவிரத்துடன்.

"அப்படியாடா?" என்ற ராகுல் ரொம்பவே பாவமாக ஆக்டிங் கொடுத்தான்.

அதில் அடக்கி வைத்திருந்த சிரிப்பு மொத்தமாய் வெளியே வர, புரை ஏறும் அளவிற்கு அவனப் பார்த்து சிரித்தனர் மற்ற இருவரும்.

"பின்ன என்னடா? வாங்குன பிரியாணியை சந்தோசமா சாப்பிடறத விட்டுட்டு இல்லுமினாட்டினு சொல்லுறான் ஒருத்தன்? கவர்மெண்ட்டே கட்டம் கட்டி காலி பண்ணுதுன்னு சொல்றான் இன்னொருத்தன். லஞ்ச் பிரேக்கே முடியப்போகுது பேசாம சாப்பிடுங்கடா, இல்ல அந்த வழுக்க மண்டையன் நம்மளத் தேடி இங்கேயே வந்துடுவான்" தலையில் அடித்து கொண்டு கூறினான் அருள்.

"நக்கல் அதிகம் ஆயிடுச்சிடா உங்களுக்கு. இன்னிக்கி ராத்திரி அந்த கொலைகாரன் உங்க வீட்டுக்கு வரப் போறான், டீமோண்டி காலனில வர்ற பிரெண்ட்ஸ் மாதிரி ரெண்டு பேரும் கதறப் போறீங்க" என்றான் செந்தில் கடுப்புடன்.

"எங்க வீட்டுக்கு வந்தா என் பொண்டாட்டி அடிக்குற அடியில அவனே துண்டக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிடுவான்டா" என்றான் செந்தில் பிரியாணி மேல் கண்ணாய்.

"சிஸ்டர பாத்தா அவ்ளோ டெரர் பீஸா தெரியலியேடா" என்றான் ராகுல்.

"பாத்தா தெரியுமா? அடி வாங்கிப் பாரு அப்ப தான் தெரியும். போன மாசம் என் பிறந்த நாள் அன்னைக்கு எவ்வளவு அடி வாங்கினேன் தெரியுமா? நல்ல நாள்னு கூட பார்க்காம என் பெண்ட நிமித்திட்டா டா" என்று அழுவது போல பாசாங்கு செய்தபடியே லெக் பீசை கடித்து தின்றான்

திடீரென்று நினைவு வந்தவனாய் அருள், "ஆமா, நாளைக்கு உன்னோட ரூம் மேட்ககு பிறந்த நாள்னு சொன்னியே. கிஃப்ட் கேக் எல்லாம் வாங்கியாச்சாடா?" என்றான்.

"ஆர்டர் கொடுத்திருக்கேன், ஈவ்னிங் ரூம்க்கு போறப்போ தான் வாங்கணும். மத்தபடி பலூன், ரிப்பன், கிஃப்ட் எல்லாமே என்னோட ரூம் மேட் ரிஷியும், ரகுவும் வாங்கிட்டு வருவாங்க."

"அப்போ இன்னிக்கி ராத்திரி முழுக்க ஒரே கச்சேரிதான், என்ஜாய்" என்று பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள், தத்தமது வேலைகளில் மீண்டும் மூழ்க ஆரம்பித்தனர்.

ராகுல் ஆபீஸ் முடிந்த உடனே கிளம்பி ஓடி விட்டான். நம்பனுக்கு கேக் மற்றும் இதர ஏற்பாடுகளை செய்து கொண்டு வீடு செல்லும் போது மணி ஒன்பது.

கதைக்கான கருத்துக்களை கீழிருக்கும் லிங்க்கில் போடவும் 🙏🙏🙏

 

அர்பிதா

Moderator
Staff member
ஹா ஹா... நான் ஏற்கனவே இந்த கதை படிச்சி இருக்கேன் அக்கா...

பேய் கதையை சிரிப்போடு தர உங்களால மட்டும் தான் முடியும்...

லவ் திஸ் ஸ்டோரி அக்கா 😍😍😍❤️❤️❤️
 
Top