வருவான் 7
ஆர்த்தியின் பிறந்தநாள் விழாவிற்கு, சக்தி, சனா, கீர்த்தி, என மூவரும் சென்றனர். அங்கு கீர்த்தியின் கண்களை யாரோ பொத்தி விளையாட யாரென்று அறியாமல் நின்றாள்.
" யாரு என் கண்ணைப் பொத்தினது? யாருன்னு சொல்லுங்க, இல்லன்னா கையை எடுங்க நானே பார்த்து யாருன்னு சொல்றேன். " என்றாள். அவள் கண்ணிலிருந்து கையை எடுத்திட யாரென்று திரும்பிப் பார்த்தாள். அது அர்ஜூன் தான்.
"ஹேய் அர்ஜூன் இங்க என்னடா பண்ற? " என்றவளின் கண்ணில் ஆச்சரியம் மின்ன,
" ஹாங்... என் வீட்டுல நான் இல்லாம நீயா இருப்ப ?" என கேலியாக கேட்டான்.
" எது, இது உன்னுடைய வீடா? அப்ப நான் அட்ரஸ் மாத்தி வந்துடேன்னா ?" என குழம்பி நின்றாள்..
" அடலூசு, அட்ரெஸ் எல்லாம் மாத்தி வரல சரியான இடத்துக்கு தான் நீ வந்திருக்க " என்றான்.
" அப்ப ஆர்த்தி.... இது ஆர்த்தி வீடுதானே ! "
" ஆமா, இது ஆர்த்தி வீடுதான் ஆர்த்தி என்னுடைய தங்கச்சி தான்" என்றான்.
" அடப்பாவிங்களா ! இவ்வளவு பெரிய அண்ணன் இருக்கான்னு அவளும் சொல்லல, உனக்கு தங்கச்சி இருக்கான்னு நீயும் சொல்லல ப்ராடுகளாக, சண்டை போட்டப்ப கூடத் தெரியுமா நான் ஆர்த்தி பிரண்ட்ன்னு...."
" ம்... தெரியும் காலேஜ் முதல் நாள் இருந்து இப்ப வரைக்கு நீ பண்ற எல்லா விசயத்தையும் சொல்லிட்டா. உன்னுடைய புராணம் தான் எங்க வீட்டுல. நீ அத பண்ண இத பண்ண சொல்லியே வீட்ட ஒரு வழி பண்ணிருவா" என்றான்..
" சரியான ஓட்ட வாய். என்னைப்பத்தி எல்லாதையும் சொல்லிருக்கா. ஆனால் அந்த வாயாடி அவ குடும்பத்தைப் பத்தி சொல்லவே இல்லையே வரட்டும் அவளுக்கு இருக்கு " என்று இருவரும் பேசிக்கொண்டிருக்க..
பாவம் சக்தி, சனவோ மொழி தெரியாத படத்திற்கு வந்தவர்களைப் போல புரியாமல் நின்றனர்.
" ஹேய் சாரி, சக்தி, சனா, இது அர்ஜூன். என் ப்ரண்டு, என்னுடைய பாஸ் அப்புறம் " என முடிப்பதற்குள் சனாவே
" அப்புறம் உன்கூட சண்டை போட்டவர் அதானே....." என்றாள்.
" ஆமா, இது சக்தி, சனா என்னுடைய பெஸ்ட் ப்ரண்ட்ஸ் " என்றாள்.
" ஹாய்.... " என்றான். இருவருமாக சேர்ந்தே " ஹாய்.... " என்றனர்.
" ஹேய் முப்பெரும் தேவிஸ் எப்ப வந்தீங்க? " அங்கு வந்தாள் ஆர்த்தி .
" வாம்மா வா உன்னைத் தான் தேடிக்கிட்டு இருந்தோம் வா" என்றனர்.
" அக்காஸ் இந்த ட்ரஸ் எப்படி இருக்கு? " என்றவளிடம்,
" உனக்கு ரொம்ப நல்லாருக்கு ஆர்த்தி " என்றாள், கீர்த்தி.
" இவன் அர்ஜூன் எங்க அண்ணன் " என்றாள்.
கீர்த்தியும் அர்ஜூன் சேர்ந்து சிரித்தனர்.
" ஏன் சிரிக்கிறீங்க இரண்டு பேரும்? "
அர்ஜூன், " கீர்த்திய எனக்கு ஏற்கெனவே தெரியும் " என்றவன், அனைத்தையும் கூற. அவனது தாயும், தங்கையும் " அடபாவி " என்றனர்.
" டேய் அண்ணா, ஏன்டா எங்ககிட்ட இருந்து மறைச்ச?"
" உன் ப்ர்த்டேக்கு சப்ரைஸ் பண்ணலாம் தான் சொல்லல. உனக்கு
மட்டும் இல்ல கீர்த்திக்கும் தான்.." என்றதும், இருவரும் அவனை முறைத்தனர்.
" சரி சரி... இங்கயே நின்னு பேசமா உள்ள வாங்க," என்றார் அர்ஜூனின் அன்னை ராணி.
" ஹாய் கீர்த்தி " என்றார், ராஜசேகர்.
" சார், நீங்களும் மறைச்சுட்டீங்கல? "எனவும்
" அவன் தான்மா சொல்ல வேணான்னு சொன்னான் "
" சரி சரி... எல்லாரும் வாங்க " என்றவன் ஆர்த்தி முன் கட்டிகையை வைத்தான். ஆர்த்தி, அந்தக் கட்டிகையை வெட்ட எல்லாரும் பாட்டு பாடி கைத்தட்டி வாழ்த்துக் கூறினார்கள்.. தன் அன்னைத் தந்தை, அண்ணன் தோழிகளுக்குக் கேக்கை ஊட்டிவிட்டாள்..
சனா அவளுக்கு கைக்கடிக்காரமும் சக்தி அவளுக்கு புத்தகமும் கீர்த்தி அவளுக்கு பெரிய அளவில் பரிசைக் கொடுக்க, ஆர்த்தி, அதில் என்ன இருக்கிறது என்று பிரித்துப்பார்த்தாள். அதில் ஆர்த்தியை ஓவியமாக வரைந்து அதை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தாள்.. அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தது. ஆர்த்தி அவளைக் கட்டிகொண்டு நன்றி கூறினாள்.
அங்கு அனைவரும் பேசி கொண்டிருத்தனர்.. பின் இரவு உணவையும் உண்டு முடித்துவிட்டு மீண்டும் கதையாளந்தனர்.
சக்தியும் ராணியும் பேசிக்கொண்டிருக்க. சனாவும் ஆர்த்தியும் பேச, அதைப் பார்த்தவாறே, கீர்த்தியும்,அர்ஜூனும் பேசிக் கொண்டுருந்தனர்... சக்தியைப் பார்த்தவாறே, " சக்தி அப்பிடியே உனக்கு நேர் ஆபோசிட் ல" என்றான்.
" ஆமா அவளுக்கு அம்மா செண்டிமென்ட் அதிகம். அதுனால யாரோட அம்மாவ இருந்தாலும் சீக்கிரமா பழகிடுவா. அதுமட்டுமில்ல எங்க அம்மாவுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும், சீரியல் பைத்தியம். எங்க நாலுபேரோட அம்மா இவளும் சேர்ந்து சீரியல் பாப்பாங்க...
நமக்கு அது எல்லாம் அலர்ஜி.... " என்றாள்.
" நீ என்னதான் பார்ப்ப? " என கேட்க," சொன்னா சிரிக்க மாட்டேல " என்றதும்
" சிரிக்க மாட்டேன், சொல்லு.. " என்றான்.
" நானு, ஜீவா,சனா,வர்ஷா எங்கவீட்டுக்குகிட்ட இருக்க சின்ன பசங்கல சேர்ந்து doreman ,hattori பாப்போம் " என்றாள்.
வாய்விட்டு சத்தமாகவே சிரித்தான், எல்லாரும் அவனைத் திரும்பிப் பார்க்க வாயில் கைவைத்து சிரிப்பை அடக்கினான்.
" சிரிக்க மாட்டேன் சொன்ன, எரும சிரிக்காத... " என்றாள்.
" சாரி சிரிப்பு வந்திருச்சு. நீ என்ன சின்ன பிள்ளையா அதேல்லாம் பார்த்திட்டு இருக்க? "
" அது உண்மையில நல்லாருக்கும், அதுவும் பசங்ககூட இன்னும் ஜாலியா இருக்கும். அந்த நேரம் எல்லாத்தையும் மறந்து சின்ன குழந்தைகளோடு சேர்ந்து பார்க்கும்போது நாமும் குழந்தையா மாறிடுவோம் நீயும் பாரு.... " என்றாள்.
" எங்க வீட்டுல குழந்தைகள் இல்லயே " என்று கைகளை விரிக்க,
" அதான் ஆர்த்தி இருக்காளே! அவ கூட பாரு "
" அவளா, அவ சரியான, சீரியல் பைத்தியம். எங்க அம்மாகூட சேர்ந்து அதைத்தான் பார்ப்பா, என்னையும் அப்பாவையும் வீட்டுல எதையும் பார்க்க விட மாட்டாங்க "
" பாவம் நீ, உனக்கு வரபோற பொண்டாட்டியாவது, சீரியில் பார்க்காம இருக்கணும் ப்ரேயர் பண்ணிக்கிறேன் " என்றால் பாவம் பார்த்து.
" ரொம்ப நன்றி.... " என கும்பிடுபோட்டான். நேரமாக சனா, சக்தி, கீர்த்து கிளம்ப தயாரானார்கள்" அப்ப, நாங்க கிளம்பிறோம் லேட் ஆயிருச்சு.... " என்றாள் கீர்த்தி.
" நான் ட்ராப் பண்றேன் வாங்க.. " என அர்ஜூன் அழைத்து செல்ல, சரி என்று அவனோடு மூவரும் சென்றனர்.
அவர்களை வழியனுப்பி வைத்தனர் ராணியும் ஆர்த்தியும்.
சனாவும்,சக்தியும் பின்னாடி உட்கார, கீர்த்தியும் பின்னாடி அமரச் சென்றாள்.
ஆர்ஜூன்,
" நான் என்ன உங்களோட டரைவரா? மூணு பேரும் பின்னாடி சொகுசாக உக்கார்ந்துக்கிட்டீங்க முன்னாடி வந்து உட்காரு கீர்த்தி " என்றான்.
முன்னாடி வந்து அமர்ந்தவள்,
" நீ ட்ரைவர் தானே அர்ஜூன் " என்றவள் அவனிடம் முறைப்பை பெற்றாள்.
" முறைக்காம, வண்டி எடுபோலாம்...."
அர்ஜூனும், கீர்த்தியும் பேசுவது சக்தி பிடிக்கவே இல்லை. வீடு வந்தது மூவருமாக இறங்கினர். சனா அவனுக்கு நன்றி கூற சக்தி எதுவும் கூறாமல், சனாவுடன் வீட்டிற்குச் சென்றாள்.
" அர்ஜூன் வீட்டுக்கு வா.. " என்று கீர்த்தி அவனை அழைத்தாள்.
" இல்ல கீர்த்தி லேட் ஆயிருச்சு, இன்னொரு நாள் வரேன்.. அப்புறம் நீயூ இயர் வருது என்ன ப்ளான்? "
" தெரியல அர்ஜூன், இனிமேல் தான் ப்ளான் பண்ணனும் .... " என்றாள்.
" சரி, பாய் குட்நைட்.. " என்றவன் கிளம்ப அவளும் அவனை வழியனுப்பிவைத்தாள்..
நாட்கள் செல்ல, புது வருடம் பிறக்க இருந்தது. அன்றிரவு அனைவரும் புது வருசத்துக்காக வாசலில் கோலம் போட்டு, கேக் வெட்டி மகிழ கீர்த்தி,சனா,ஜீவா,வர்ஷா,சக்தி ,தருண்,
அஜய், காத்திருந்தனர்... பன்னிரெண்டையும் தொட்டு புது வருடம் பிறந்தது... கேக் வெட்டிக் கொண்டாடினர்..
அன்றிரவு கீர்த்திக்குப் புது எண்ணிலிருந்து இருந்து happy new year மெசேஜ் வந்திருந்தது.
அவளுக்கு அது யாருடைய நம்பர் என்று தெரியவில்லை, சக்தியிடம் " யார் நம்பர் தெரியுமா? " என கேட்டாள்..
" இரு... இந்த நம்பரைப் பார்த்த மாதிரி இருக்கே " என்று தனது போனில் பார்க்க, அவளுக்கும் அதே நம்பரிலிருந்து மெசேஜ் வந்திருந்தது. ஆனால் அவளுக்கு கார்த்திக் என்ற பெயரில் வந்திருந்தது
" ஹேய் இது கார்த்திக் நம்பர் டி" என்றாள்.
" அவன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது? "
" அவன் கொடுத்தான் " என்றவள் கூறி தூங்கச் சென்றாள்.. அனைவரும் உறங்கச் சென்றனர்.
கீர்த்தி மட்டும் உறங்காமல் இருந்தாள், அவனது குறுஞ்செய்தியைப் பார்த்தவாறே இருந்தாள், அவனும் தான் அவளுடைய மெசேஜ்ஜூக்காக காத்துக் கொண்டு இருந்தான்..
" happy new year..... " என்று இவளும் அனுப்பினாள்.
" நன்றி, நான் யாருனு கண்டுபிடிச்சுட்டீயா ?" என்றவன் அனுப்ப.. " ம்ம் " என்றாள்..
" யாரு நான் ? "
" கார்த்திக்.... " என்றாள்.. " நான் தான் உனக்கு எப்படி தெரியும்? "
" சக்தி சொன்னாள்.... " என்றாள்..
" ம்ம்.. ப்ரண்டா நினைச்சு கூட பேசலாமே என் கிட்ட, பேசுவீயா ? எனக் கேட்டான்.
" ம்ம்... ப்ரண்டா பேசலாம். பேசுறேன். "என்றாள்...."தாங்கியூ " என்றவன் மீண்டும் லவ் யூ " என்று அனுப்பினான். அதனைப் பார்த்தவள், பதிலுக்கு அனுப்பவில்லை, போனை வைத்துவிட்டு உறங்கச்சென்றாள். அவனும் சந்தோஷ்த்தில் உறங்கச்சென்றான்..
காலையில் அனைவரும் புது வருடம் என்பதால் கோயிலுக்குச் சென்றனர்.. கீர்த்தி, கீர்த்தியின் அம்மா, தம்பி ,சக்தி, சக்தியின் தம்பி, தங்கச்சி, ஜீவா ,சனா, அனைவரும் சென்றனர்...
கார்த்திக் சக்தியைச் செல்லில் அழைத்து பேச, அவளோ அவர்கள் கோயிலுக்கு வந்திருப்பதைக் கூறினாள், அவனையும் அழைத்தாள்... அவனும் வரேன் என்றான். இதுவரை கோயிலுக்குச் செல்லாதவன், கீர்த்திக்காக முதல் முறையாகக் கோயிலுக்கு வந்தான். கூட்டமாக இருந்தது, அதனால் வரிசையில் நின்றனர்.
கோயிலின் உள்ளே நுழைந்தவன், அவர்களைக் கண்டவன், எதார்த்தமாக வருவது போல் வர, சக்தி அவனைக் கண்டு அழைத்தாள். சக்தியை கண்டதும் அவர்கள் அருகில் வந்தான்.
" ஹாய் கார்த்திக், கோவிலுக்கெல்லாம் வருவீயா நீ? "
" ம்ம்....எப்பையாவது வருவேன் சக்தி...." என்றான். கீர்த்தியின் அன்னை அவனைக் கண்டு.
" நீ ராஜ் ப்ரண்டு தானே அன்னைக்குக் கூட பாடுனீயே அது நீ தானே" என்றார்..
" ஆமா அத்தை, நான் ராஜ்வோட ப்ர்ண்ட் தான், என் பெயர் கார்த்திக் " என்றான்..
" அத்தையா ? " தருண் கேட்டு வாயைப் பிளக்க....
" ஆமா ராஜ்ஜுக்கு அத்தைன்னா எனக்கு அத்தை தானே... " என்றவன், கீர்த்தியைப் பார்த்தான்... ரோஸ் டாப் வொயிட் பேண்ட் சுடி அணிந்து எளிமையாக இருந்தாள். அவனும் அதே ரோஸ் டி சர்ட், பிளாக் பேண்ட் சகிதம் அணிந்து அழகாய் இருந்தான்.
" பரவாயில்லைப்பா, நீ அப்படியே கூப்பிடு. உங்க அம்மா அப்பா வரலையா தம்பி..." என்றார்.
" எனக்கு அம்மா இல்ல அத்தை, அப்பா மட்டும் தான். நான் மட்டும் தான் வந்திருக்கேன்., " என்றான்.
" ஐயோ ! சாரிப்பா "
" பரவாயில்ல அத்தை " என்றான்.
" சரி நீயும் வாப்பா சேர்ந்தே சாமி கும்பிடலாம். " என்று அவனையும் அழைத்தார்...அனைவரும் கடவுளைத் தரிசனம் செய்துவிட்டு, அங்கே அமர்ந்தனர். தேவி எல்லாருக்கும்
பிரசாதத்தைக் கொடுத்தார்.
" ஹேய் நம்ம எல்லாரும் ஓடிப்பிடுச்சு விளையாடுவோமா..... " கீர்த்தி கேட்க,
" என்னாது ஓடிப்பிடுச்சா அதெல்லாம் ஒன்னு வேணாம் விளையாட்டுற வயச பாரு?"
" அம்மா, விளையாட வயசு தேவையில்ல மனசும், தெம்பும் இருந்த போதும் மா, நாங்க விளையாட போறோம் யார் யாருவரீங்க? " என கேட்க, கார்த்தியைத் தவிர எல்லாரும் ஒத்துக்கொண்டனர்.
சக்தி கார்த்தியையும் விளையாட அழைக்க அவனும் ஒத்துக்கொண்டான்.
" கண்டிசன் என்னனா, கோவிலுக்குள்ள தான் விளையாடனும் வெளிய போக கூடாது... " என்றாள் சக்தி, அவள் தான் அவுட்...
" எல்லாரும் ஓடினர்..., சக்தி அவர்களைத் துரத்தினாள்... அனைவரும் கோவில் பிரகாரத்தைச் சுத்தி சுத்தி ஓடினார்கள். சக்தி, கார்த்திக்கை அவுட் ஆக்கினாள்..
இப்போது கார்த்திக்கின் முறையாயிற்றே, கார்த்திக் துரத்த அனைவரும் ஓடினார்கள். அவன், அனைவரையும் துரத்துவது போல் நடித்தவன், கீர்த்தியைத் துரத்தவே, அவளும் அவனைப் பார்த்தவாறே ஓடி வந்தவள், சரியாக அங்கு வந்த அர்ஜூன் மேல் மோதி நின்றாள்.
" ஹோய். என்ன சின்னபிள்னை நினைப்பா ஓடிப் பிடுச்சு விளையாடுறா" என்றான்.
" ஓய் நான் சின்ன பொண்ணு தான் அதுல என்ன சந்தேகம்? "
" ஆமாம்மா நீங்க சின்ன பிள்ளை தான் இப்ப தான் ஸ்கூலுக்குப் போறீங்க இல்ல.... " என்றவன் அவளை வம்பிழுத்தான்..
" ஹேய் வா அம்மா இருக்காங்க..." அவனை அழைத்துகொண்டு தன் தாயிடம் சென்றாள்....
கார்த்திக்கோ ' இவன் யாரென ' பார்த்தவாறே நின்றான்.
" அம்மா இது அர்ஜூன் என்னோட பாஸ், அப்புறம் ப்ரண்டு கூட... "
" வணக்கம் அம்மா.... "
" வணக்கம்தம்பி ...., "
" ஹேய் அக்கா. இவங்கதான் டெடிபியர் பார்ட்டியா? " வர்ஷா கூற "
ஹேய் லூசு சும்மா இரு " அவளை அடக்கியவள். " சாரி " என்றாள் அர்ஜூனிடம். அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.. சக்தி தான் கார்த்திக்கைத் தேடுட அவனோ அதே இடத்தில் நின்றான். அவனை அழைத்தாள் சக்தி...
" வீட்டுக்கு வாப்பா... ...." தேவி, அர்ஜுனைஅழைக்க, " இல்லம்மா, அங்க எல்லாரும் காத்திட்டு இருப்பாங்க இன்னொரு நாள் வரேன். " என்று எல்லாரிடமும் சொல்லிவிட்டுச் செல்ல,
சரியாக, கீர்த்தி கார்த்தியைக் காண அவன் முகமோ குழப்பத்தில் இருந்து. அதைக் கண்டவள், சக்தியிடம் ஏதோ காதில் ககூறினாள். அவளும் சரியென தலையசைத்தாள்..
" கார்த்தி நீ வீட்டுக்கு வாப்பா... "
" இல்ல அத்தை வேலை இருக்கு..., " என்று சமாளிக்க, "
அதேல்லாம் கிடையாது கார்த்தி நீ வர . " சக்தி வம்படியாக அழைக்க மறுக்காமல் வந்தான். எல்லாரும் வீட்டிற்கு வந்தனர்.
" கார்த்திக், உள்ள வாப்பா எப்படி இருக்க? " கிருஷ்ணன் அழைத்தார்.
" நல்ல இருக்கேன் அங்கிள்.நீங்க ?"
" நான் நல்லாருக்கேன்பா..,. " என்றவர் அவனிடம் பேச ஆரம்பித்தார்...
எல்லாரும் சக்தி வீட்டில் இருந்தனர்
ஜீவா அம்மா ,சக்தி அம்மா ,கீர்த்தி அம்மா , சனா அம்மா எல்லாரும் ஒன்றாக சமைத்தனர்... அங்கே மொத்த குடும்பம் சந்தோசமாக இருந்தது...
கார்த்திக் பேசிக்கொண்டே இருந்தாலும், அவ்வபோது கீர்த்தியைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்..
கீர்த்தியும் அவனைப் பார்த்தும் பார்க்காதது போலவே இருந்தாள். இதை எல்லாம் கிருஷ்ணனனும் பார்த்துக் கொண்டே இருந்தார்... கேலிக்கிண்டல் என எல்லாரும் பேசிக்கொண்டிருந்தனர்.
" சாப்பிட்டலாம் வாங்க...., " மாலதி அழைத்தார்..
" எல்லாரும் சாப்பட அமர்ந்தனர் .... கீர்த்தியும் அம்மாக்களும் பரிமாறினார்கள்.
" நீயும் எங்களோடு சாப்பிட வாம்மா...."
" இல்ல அப்பா நீங்க சாப்பிடுங்க நான் அம்மா கூட சாப்பிட்டுகிறேன்..., " என்றாள்..
" அம்மா ! இந்த வடைய பண்ணது யாருமா ?.... " ஜீவா கேட்க, " அதுவா கீர்த்தி டா... "
" என்னாது கீர்த்தியா?" வடையை வாயில் வைத்த தருண் துப்பினான்..
"அப்பா, நாங்க இந்த வடையைச் சாப்பிட மாட்டோம்ப்பா.. " என்றனர், அஜய், வருண், வர்ஷா , சனா, ஜீவா... கீர்த்திக்கு கோபம் வர பக்கத்தில இருந்த கத்தி எடுத்து அவர்களை மீறட்டினாள்.
" யாரு எல்லாம் வடைய சாப்பிடாமல் இருக்காங்களோ, அவங்க எல்லாரும் என் கையால தான் சாகப் போறீங்க... " என்றாள்... வடையையும் கத்தியையும் மாறி மாறி பார்த்து உண்டனர்..
" எப்படி இருக்கு நான் செஞ்ச வடை? " என்றவள் கேட்க
" ரொம்ப நல்லாருக்குமா அவங்க கிடக்கிறாங்க, வடை அருமைடா, என்ன கார்த்திக், நான் சொல்லுறது சரி தானே " என்றார்,
" ஆமா அங்கிள் வடை சூப்பர். " என்றான், மனதில் அவளைத் திட்டிகொண்டே..
" அப்படியாப்பா, அப்ப கீர்த்தி, தம்பிக்கு இன்னொரு வடையை வைம்மா " என்றார் மாலதி.
" இல்லமா போதும் நிறைய சாப்பிட்டேன் மா,. " என்றான்.
" ஏன் கார்த்திக் வடையவே நிறைய சாப்பிட்டியோ.. " என்று ஜீவா காதில் கேட்க அவனோ சிரித்துகொண்டே
" வாய்ல வைக்க முடியல பாஸ் " என்றான் கார்த்திக்.
" அங்க என்ன பேச்சு இரண்டு பேருக்கும் "
" இல்லம்மா, பாஸ். வடைய பத்தி புகழ்ந்து பேசுறாரு " என்று சமாளித்தான் ஜீவா..
" அப்பிடி என்ன புகழ்ந்து பேசுனாரு என் வடை பத்தி?" என்று கேட்டாள், கீர்த்தி.
கார்த்திக்கோ, ஜீவாவைப் பார்த்து வேண்டாம் என்று தலைய அசைத்தான்.. ஜீவாவோ சிரிப்பை அடக்கினான்...
" ஹலோ பாஸ், இது உங்களுக்குகே ஓவரா இல்ல, வடையில உப்பே இல்ல இத எல்லாம் ஒரு வடையா இதுல புகழ்ச்சி வேற , அம்மா வடைய சாப்பிட முடியலமா, அதுக்கு அவ கையில இருந்த கத்தியால் குத்துப்பட்டு கூட செத்திடலாம்.. " என்றான் தருண், அனைவரும் வாய்விட்டே சிரித்தனர்...
கீர்த்தி அப்பாவையும் கார்த்தியையும் பார்த்து முறைத்தாள்... இருவரும் அசடு வழிய சிரித்தனர். நேரம் செல்லவே
" நான் கிளம்புறேன் அங்கிள்... " என்றான்..
" சரிப்பா, அடிக்கடி வா கார்த்திக் இங்க... "
" கண்டிப்பா அங்கிள் வரேன் " என்றவன் கீர்த்தியைத் தேடினான்..,
ஆனால் அவளோ உள்ளே இருந்தாள்..
" ஹலோ யார தேடுற கார்த்திக்?" என சக்தி வந்தாள்..
" வேற யார கீர்த்தியைத் தான்..., " என்றான்.
" அவ வரமாட்டா "
" ம்ம்.. தெரியும், ஆமா இன்னைக்கு, காலையில கீர்த்தி கிட்ட பேசுனது யாரு "
" அதுவா, அவன் அர்ஜூன், அவன் கம்பெனில தான் கீர்த்தி வேலைப் பார்க்குறா, அதுமட்டுமில்ல எங்க காலேஜ் ஜூனியர் பொண்ணோட அண்ணண். கீர்த்தியும் அவனும் ப்ரண்ட்ஸ் " என்றாள்.
அவன் எதுவும் கூறவில்லை...
" என்ன கார்த்திக் அவன் மேல பொறாமையா? " என்றாள்..
" ம்ம்... லைட்டா.."
" இல்லை, அப்படி தெரியலேயே "
" ரொம்பவே போதும்மா " என்றான் சலிப்போடு.. அதைக் கண்டு முறுவலித்தவள் " ம்ம்.. அப்படி வா வழிக்கு" என்றாள்.
" எனக்கு அவன பார்த்தா ஒரு மாதிரி இருக்கு, அவனால எதாவது பிரச்சனை வருமோ பயமாருக்கு " என்றான்.
" அப்படிலாம் வர்றாது கார்த்திக் பயப்படாத நீ."
" ரொம்ப தாங்க்ஸ் சக்தி, என்னையும்
வீட்டுக்குக் கூப்பிட்டத்துக்கு ,நான் இவ்வளவு சந்தோஷ்மா இருந்ததே இல்ல " என்றான்.
" அப்படியா? அப்ப, நீ கீர்த்திக்கு தான் நன்றி சொல்லணும்... அவதான், என் கிட்ட சொல்லி உன்னை அழைக்கச் சொன்னாள். " என்றதும், அவனுக்கு ஒரே ஆச்சரியம் "
நிஜமாவா சக்தி? " என்றான் கண்களில் சந்தோசம் மின்ன.
" ஆமா கார்த்திக்... " என்றாள்.
" இப்ப தான் நான் ரொம்ப சந்தோஷ்மா இருக்கேன். நன்றி சக்தி சொன்னதுக்கு " என்றான் சந்தோசமாகவே, அவன் செல்வதைப் பார்த்துக்கொண்டே நின்றாள்...
வருவான்.