கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வானபிரஸ்தம்

Puvana Chandrasekaran

Moderator
Staff member
தினமலர் வாரமலர் 04/072021 அன்று பிரசுரமான கதை

வானபிரஸ்தம்

அனிதா தன்னுடைய கணவன் ஆனந்த்
ஆஃபிஸில் இருந்து வரும் அந்த நொடிக்காகப்
பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள்.

ஆனந்த் வந்து நுழைந்து உடை மாற்றிக் கொள்ளத் தன்னுடைய அறைக்குப் போனான். உடனேயே அவன் பின்னாலேயே போய்ப் படபடவென்று பொரிந்து தள்ளி விட்டாள் அனிதா.

"என்னங்க உங்களுக்கு விஷயம் தெரியுமா? இரண்டு மூன்று நாட்களாக மாமா ( அதாவது ஆனந்தின் அப்பா; அனிதாவின் மாமனார்) ஏதோ பரபரப்பாக இருக்காரே கவனிச்சீங்களா? நேத்து வெளியே போய் விட்டு வந்த போது ஏதோ கையில் புடவைக்கடைப் பை மாதிரி இருந்தது. முந்தா நாள் போன‌போது
கையில பாங்க் பாஸ்புக், செக்புக் எல்லாம் எடுத்துட்டுப் போனார். திரும்பி
வரும் போது கையில ஏதோ நகைப்பெட்டி மாதிரி இருந்தது. உள்ளே கொண்டு போய் அலமாரியில வைச்சுப்
பூட்டிட்டாரு. உங்க கிட்டே ஏதாவது சொன்னாரா? யாருக்காக வாங்கியிருப்பார்? சாதாரணமாக ஏதாவது வாங்கினா எங்கிட்ட காண்பிச்சுட்டுத் தான் உள்ளே வைப்பாரு. இந்தத் தடவை இரண்டு நாட்கள் ஆகியும் வாங்கிட்டு வந்ததைக் காட்டவும் இல்லை. ஒண்ணும் சொல்லவும் இல்லை",

என்று சொல்லி அங்கலாய்த்தாள்.

" வேற யாருக்குடி வாங்கியிருக்கப் போறார்? உனக்கோ இல்லை தன்னோட பேத்திக்கோ கொடுக்கத் தான் வாங்கியிருக்கப் போறார்! ஏதாவது விசேஷத்தின் போது எடுத்துக் குடுத்துட்டுப் போறாரு! உனக்கென்ன அவசரம் அதுக்குள்ளே! பொறுமையா இரு. பாத்துக்கலாம்" என்று சொல்லி அவள் வாயை அடக்கினான்.

ஆனால் அனிதாவிற்கு யோசித்து யோசித்து மண்டையே வெடித்து விடும் போல இருந்தது. ஆனந்திற்கும் ஏதோ சரியில்லை என்று தான் மனதிற்குப் பட்டது. சாதாரணமாக அப்பா என்ன‌ செய்தாலும் அவனிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுத் தான் செய்வார்? இந்த முறை அனிதா சொல்வதைப் பார்த்தால் இரண்டு நாட்களாகியும் அவனிடம் ஒன்றுமே ஆலோசிக்கவில்லை. அப்படி என்ன இத்தனை இரகசியம் காக்க வேண்டும்?

புரியாமல் குழம்பித் தான் போனான் ஆனந்த். அனிதா எதிரே வெளியே காட்டிக் கொள்ளவில்லை. என்ன தான் இருந்தாலும் மனைவியின் எதிரே அப்பாவை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் தான்.

அடுத்த நாள் காலையில் ஆஃபிஸ் கிளம்புவதற்கு முன்னால் ஒரு நிமிடம் நின்று அப்பாவிடம் பேசினான்.

"அப்பா,உங்களுக்குக் கைச் செலவுக்குப்
பணம் ஏதாவது வேணுமாப்பா? கொடுத்துட்டுப் போட்டுமா?"
என்று வேண்டுமென்றே கேட்டான்.

" அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் பா. நீ போன மாசம் கொடுத்ததே கையில் இருக்கு. அப்படி திடீர்னு ஏதாவது தேவையிருந்தா அனிதா கிட்டே வாங்கிக்கறேன்பா" என்று சொல்லி விட்டுச் செய்தித் தாளில் மூழ்கி விட்டார்.

ஒரு வரி விடாமல் படித்து விட்டுத் தான் வைப்பார் அந்தப் பேப்பரை. வேறு என்ன பொழுது போக்கு அவருக்கு? ஓய்வு பெற்ற ஆண்களுக்கு வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பது பெரிய கஷ்டம்.

அப்பாவின் பதிலால் இன்னும் கொஞ்சம் குழப்பமடைந்தான் ஆனந்த்.

"இந்த மாதிரி பதில் சொல்கிறார் இவர். அனிதா என்னவோ பாங்கிற்குப் போய்ப் பணம் எடுத்ததாகவும் ஏதோ ஷாப்பிங் செய்ததாகவும் சொல்கிறாளே! எது உண்மை என்று ஒன்றுமே புரியவில்லை. அனிதாவும் மாமனாரைப் பற்றித் தவறாக எதற்குச் சொல்ல வேண்டும்? அவருக்குப் பணிவிடை செய்வது ஒன்றும் அவளுக்குப் பிடித்த வேலை இல்லை தான். ஆனால் செய்யத் தவறியதில்லை" என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டே ஆஃபிஸுக்குக் கிளம்பினான். ஆஃபிஸ் வேலையில் மூழ்கியிருந்த ஆனந்த் இந்த விஷயத்தை முழுவதும் மறந்து போயிருந்தான்.

மாலை வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பி வரும் வழியில் ஸெல்ஃபோன் அடித்துக் கொண்டே இருந்தது. வீட்டிற்கு அருகே வந்துவிட்டதால் எடுக்கவில்லை. ஸ்கூட்டர் வேறு ஓட்டிக் கொண்டிருந்ததால் ஃபோனை எடுக்க முயற்சிக்கவுமில்லை. வீட்டில் நுழைந்தவுடன் அனிதா பரபரப்பாகக் காத்துக் கொண்டிருந்தாள்.

" என்னங்க, எத்தனை தடவை ஃபோன் அடித்துக் கொண்டே இருந்தேன்? எடுக்கவேயில்லையே நீங்க?" என்ற
மனைவியின் தொணதொணப்பில் எரிச்சலுடன் பதில் சொன்னான் ஆனந்த்.

" என்ன அப்படித் தலை போகிற விஷயம்? அது தான் வீட்டுக்குத் தானே வந்துட்டு இருந்தேன்? அதனால எடுக்கலை" என்று பதில் சொன்ன கணவனைக் கோபத்துடன் பார்த்தாள் அனிதா.

"வரவர உங்கள் அப்பா போக்கே சரியில்லைங்க. இன்னைக்குக் காலையில் இருந்தே ஏதோ நல்ல மூடில் சந்தோஷமாகவே இருந்தார். வாய் விட்டுப் பாட்டுப் பாடிட்டே வேறே இருந்தார். அவரோட நடவடிக்கைகள் எல்லாமே புதுமையாத் தாங்க இருந்தன."

"சாயந்திரம் நல்லா டிப்டாப்பா டிரஸ் பண்ணிட்டு முகத்தில் பவுடர் போட்டுக் கொண்டு நெற்றியில் சந்தனம் தீற்றிக் கொண்டு கைத்தடியையும் எடுத்துட்டு எங்கேயோ வெளியே கிளம்பிட்டார்.
அடையாறு பார்க்கில் யாரையோ முக்கியமானவரைப் பார்க்கப் போறேன். நைட் டின்னர் வெளியே சாப்பிட்டுட்டுத் தான் வருவேன். எனக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுக் கிளம்பிப் போய் விட்டார்.".

"போகும் போது கையில் அவர் இப்போ சமீபத்தில் வாங்கின சாமான்களை எல்லாம் பேக் பண்ணி ஒரு பையில் போட்டுக் கொண்டு போறாருங்க. அவர் போற போக்கே சரியாப் படலைங்க எனக்கு. இவர் வயசுக்கு இதெல்லாம் தேவையா என்ன? சீக்கிரம் கிளம்புங்க. நாம நேரில கிளம்பிப் போய் அவரைக் கையும் களவுமாப் பிடிக்கணும். நம்ப பையனைப் பக்கத்து வீட்டுக்கு அனுப்பிச்சுட்டேங்க. நாம வர வரைக்கும் அங்கேயே விளையாடிட்டு இருப்பான். வாங்க போகலாம்" என்று அனிதா சொல்ல அந்த விஷயங்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் ஆனந்த். மனைவி சொன்னதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் விடவும் முடியவில்லை.

"சரி வா, போய்ப் பாத்துட்டுத் தான் வருவோம். நீ சொல்லற‌ மாதிரி என்ன தான் விஷயம்னு கண்டுபிடிப்போம் இன்னைக்கு. இரு, பத்தே நிமிடங்களில் கிளம்பி வருகிறேன்" என்று சொல்லி விட்டு உடையைக் கூட மாற்றாமல் அவசரமாக ஒரு காஃபியை மட்டும் குடித்து விட்டு மனைவியைக் கூட்டிக் கொண்டு ஸ்கூட்டரில் கிளம்பினான்.

அவர்கள் வசிக்கும் பெசண்ட் நகரில் இருந்து அடையாறு பார்க் ஒன்றும் அதிக தூரமில்லை. இருந்தாலும் சாயந்திர டிராஃபிக். அந்த இடத்தை அடைவதற்குள் இருட்டி விட்டது.

ஸ்கூட்டரை வெளியே இருந்த ஒரு ரெஸ்டாரெண்ட் எதிரே பார்க் செய்து விட்டுக் கணவனும் மனைவியும் பார்க்கை நோக்கி நடந்தார்கள்.

பார்க்கில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தார் அப்பா. அருகில் இருந்த பெண்ணை அப்பாவின் உருவம் மறைத்ததால் அவர்களால் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் அப்பா தன் பையைத் திறந்து ஏதோ சாமான்களை
எடுத்துக் கொடுப்பது நன்றாகத் தெரிந்தது.

சிறிது நேரத்தில் அவர்கள் இரண்டு பேரும் கிளம்பி வெளியே வருவதற்காக நடக்க ஆரம்பித்தார்கள்.

அனிதாவும் ஆனந்தும் அங்கே நுழையும் இடத்தில் நிறுத்தப் பட்டிருந்த ஒரு பெரிய காரின் மறைவில் அப்பாவின் கண்களுக்குப் புலப்படாதபடி நின்று கொண்டார்கள்.

கேட்டிற்கு அருகில் வந்தவுடன் அந்தப் பெண்ணின் உருவம் நன்றாகக் கண்களுக்குப் புலப்பட, இரண்டு பேரும் அதிர்ச்சி அடைந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

" அம்மா" என்று தொண்டை வரை குரல் வந்து விட்டது ஆனந்திற்கு. கண்களில் கண்ணீரும் தானாகப் பெருகி வந்தது.

" சே! அப்பாவைப் போய்க் கீழ்த்தரமா நினைச்சு அவரை வேவு பார்க்க வந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! எல்லாம் இவளால் தான் வந்தது"
என்று நினைத்துக் கொண்டே கோபத்துடன் அனிதாவைப் பார்க்க அவளும் தலை குனிந்து நின்றாள்.

அப்பாவும் அம்மாவும் கைகளைக் கோர்த்துக் கொண்டு எதிரே இருந்த ரத்னா கஃபேக்குள் நுழைந்தார்கள். தன் ஸ்கூட்டரை அங்கே தான் நிறுத்தி இருந்ததால் அவர்கள் கண்ணில் படாமல் எப்படி எடுப்பது என்று தயங்கி நின்றான் ஆனந்த்.

அதற்குள், "ஆனந்த்! ஆனந்த்", என்று யாரோ மெல்லிய குரலில் கூப்பிடுவது போலத் தோன்ற சுற்றுமுற்றும் பார்த்தான் ஆனந்த்.

எதிர்ப்பக்கத்தில் இருந்து ஆனந்தின் தம்பி வசந்தும் அவன் மனைவி வேணியும் வந்தார்கள்.

"அண்ணா நீங்கள் எங்கே இப்படி?", என்று வசந்த் கேட்க ஆனந்தும் அனிதாவும் திருதிருவென்று முழித்தார்கள். என்ன பதில் சொல்ல முடியும்? அப்பாவை வேவு பார்க்க வந்தோம் என்று சொல்ல முடியாதே!

அப்போது தான் தங்களைப் போலவே அவர்களும் அம்மாவைத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும் என்பது ஆனந்த் மனதில் ஸ்டிரைக் ஆனது.

நான்கு பேரும் தங்களுடைய நிலையைப் புரிந்து கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் நெளிந்தார்கள். தர்மசங்கடமான நிலைமை தான்.

தவறையெல்லாம் தங்கள் பேரில் வைத்துக் கொண்டு அப்பா, அம்மாவை சந்தேகப் பட்டு அவர்களைப் பின்தொடர்ந்து வந்து வேவு பார்த்தது எவ்வளவு கேவலமான செயல்!

ஆனந்த், வசந்த் இரண்டு பேரின் அப்பா ஆனந்துடனும், அம்மா வசந்துடனும் இருக்கிறார்கள். ஆனந்தின் அப்பா மத்திய அரசு அலுவலகத்திலும் அம்மா வங்கியிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள்.

இரண்டு பிள்ளைகள். இரண்டு பேரும் ஓய்வு பெற்றதும் கிடைத்த பணம் தங்களுடைய பல வருட சேமிப்பைப் போட்டு இரண்டு 'டூ பெட்ரூம் வீடு'களை வாங்கி இரண்டு மகன்களுக்கும் சந்தோஷமாகத் தங்களுடைய பரிசாகக் கொடுத்தார்கள்.

இரண்டு பசங்களின் படிப்பு, வேலை, கல்யாணம் எதிலேயுமே குறை வைக்காத அந்தப் பெற்றோர் வீடுகளையும் வாங்கி அவர்கள் பேரிலேயே ரெஜிஸ்டரும் செய்ய நண்பர்களெல்லாம் அறிவுரைகள் தந்தார்கள் அவர்களுக்கு.

"எல்லாப் பணத்தையும் இப்படிப் பசங்களுக்கே செலவழிச்சிட்டு நீங்கள் ஒன்றுமே வைத்துக் கொள்ளவில்லையே" என்று நண்பர்கள் கேட்ட போது மணிகண்டன் அதாவது ஆனந்த், வசந்தின் அப்பா,

"எங்களுக்கென்ன வேணும் இனிமேல்?. இரண்டு பசங்களும் போட்டி போட்டுக் கொண்டு எங்களைப் பார்த்துக் கொள்வார்கள்" என்று பெருமை அடித்துக் கொண்டார்.

சில வருடங்கள் ஓடின.இரண்டு பேரும் மாறி மாறி மகன்களுடன் தங்கி நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று இரண்டு மகன்களும் மருமகள்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு போட்டி போட ஆரம்பித்தார்கள்.

யாரை யார் வைத்துக் கொள்வது என்று போட்டி. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஒரே வீட்டில் இருந்தால் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய வேலை கூடுகிறது என்று மருமகள்கள் போர்க் கொடி உயர்த்த, அம்மா ஒரு வீட்டிலும் அப்பா ஒரு வீட்டிலும் என்று அவர்களாகவே முடிவு செய்து அந்த முதியவர்களை வயதான காலத்தில் பங்கு போட்டுக் கொண்டார்கள். அந்த ஜோடிப் பறவைகளைப் பிரித்து விட்டார்கள்.

பெரியவன் ஆனந்திற்கு ஒரு மகன். அனிதா வேலைக்குப் போகவில்லை. ஆனால் சின்னவன் வசந்தின் மனைவி வேணி வேலைக்குப் போகிறாள். அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. அதனால் அம்மா தங்களுடன் இருக்கட்டும் என்று முடிவு செய்து அம்மா லலிதாவைத் தங்கள் வீட்டில் வைத்துக் கொண்டான் வசந்த். வேறு வழியில்லாமல் அப்பா மணிகண்டன் ஆனந்த் வீட்டில் இருப்பார் என்று அவர்களாக முடிவு செய்தார்கள்.

விளையாட்டுப் போல இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இரண்டு வருடங்களில் பெற்றோர் இருவரும் சந்தித்துக் கொண்டது மூன்று நான்கு முறைகள் தானிருக்கும். ஏனென்றால் அனிதாவிற்கும் வேணிக்கும் அவ்வளவாக ஒத்துக் கொள்ளாது. அடிக்கடி சந்திப்பதைத் தவிர்த்து விடுவார்கள்.

"வேலைக்குப் போறோம்னு பயங்கர அலட்டல். என்ன பெரிய உலகத்தில் இல்லாத அதிசயமோ தெரியலை!"
என்று வேணியைப் பற்றி அனிதாவும்,

" நான் வேலைக்குப் போறது அவங்களுக்குப் பொறாமை" என்று வேணி அனிதாவைப் பற்றியும் நினைக்கும் போது ஒற்றுமை எப்படி வளரும்?

பாவம் மணிகண்டனும் லலிதாவும் குழந்தைகளுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று அவரவர் இடத்தில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு அமைதியாகவே இருந்தார்கள்.

நான்கு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துத் தயங்கித் தயங்கிப் பேசிக் கொண்டிருந்த போது மணிகண்டனும் லலிதாவும் சாப்பிட்டு முடித்து விட்டு
வெளியே வந்தார்கள். மகன்களையும் மருமகள்களையும் பார்த்து விட்டு அவர்களை நோக்கி வந்தார்கள்.

" அட, நீங்கள் இரண்டு பேரும் எப்படா வந்தீங்க? உள்ளே வந்திருந்தால் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாமே! இன்று எங்களுடைய நாற்பதாவது திருமண நாள் என்பதால் நாங்கள் திடீரென்று பிளான் போட்டுச் சந்தித்துக் கொண்டோம். நானும் அம்மாவிற்கு ஸர்ப்ரைஸா கிஃப்ட் வாங்கி வச்சிருந்தேன். இதோ பாருங்கள்",

என்று மணிகண்டன் சிரித்துக் கொண்டே, அவர்களிடம் புடவையையும் தங்க வளையல்களையும் காண்பிக்க இரண்டு மகன்களும் வெட்கித் தலை குனிந்தனர்.

"சே, இதைக் கூட நாம் ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லையே" என்ற குற்ற உணர்வு அவர்களுக்கு.

" ஹேப்பி அனிவர்சரிப்பா! ஹேப்பி அனிவர்சரிம்மா!" என்று எல்லோரும் அவர்களை வாழ்த்த மணிகண்டன் வசந்திடம் ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.

"இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நீ அம்மாவையும் உன் மனைவி குழந்தையையும் கூட்டிக் கொண்டு ஆனந்த் வீட்டுக்கு வா. முக்கியமான விஷயம் பேசணும்" என்றார் அப்பா.

மனதிற்குள் என்ன விஷயமாக இருக்கும் என்று கவலையுடன் அனைவரும் கலைந்தார்கள். ஞாயிறு மாலையும் வந்தது.

அப்பா பேச ஆரம்பித்தார்.

"எனக்கும் லலிதாவிற்கும் கொஞ்சம் பணம் அரியர்ஸ் வந்திருக்கிறது. அதை வைத்து நாங்கள் ஓ.எம்.ஆரில் இருக்கும் ஸீனியர் ஸிட்டிசன் ஹோமிற்குப் பணம் கட்டி விட்டோம். ஒரு ரூம், கிச்சன்,டாய்லட் வசதியுடன் தனி ஃப்ளாட். சாப்பாடும் அங்கேயே பணம் கட்டினால் கிடைக்கும். என்னுடைய நண்பர்கள் பலர் அங்கே இருக்கிறார்கள். நல்ல வசதியாக இருக்கிறதாம். எங்களுடைய பென்ஷன் பணத்தை வைத்து மாதாந்திரப் பணத்தைக் கட்டி விடுவோம். செலவும் சமாளித்து விடுவோம். அடுத்த மாதமே அங்கே போய் இனிமேல் சேர்ந்தே இருக்கலாம், பிரிந்திருக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம் நானும் அம்மாவும். உங்களுக்கு முடியும் போது எங்களை வந்து பார்த்தால் போதும். இந்த அரேஞ்ச்மெண்ட் எல்லோருக்குமே வசதியாக இருக்கும்" என்று சொல்லி முடிக்க ஒன்றும் பதில் பேசத் தெரியாமல் ஆனந்தும் வசந்தும் தங்கள் மனைவிகளைப் பார்க்க அவர்களும் வாயடைத்துப் போய் நின்றார்கள். பேரனும் பேத்தியும் மட்டும் ஓடி வந்து ,

" தாத்தா பாட்டி நீங்கள் இரண்டு பேரும் எங்கள் கூடத் தான் இருக்கணும். எங்கேயும் போகக் கூடாது"
என்று கெஞ்சினார்கள் . அதற்குப் பிறகு, தங்கள் தவறை உணர்ந்த மகன்களும் மருமகள்களும் தங்களுடனே இருக்கும் படி பெற்றோரை வற்புறுத்தப் புன்முறுவலுடன் மறுத்து விட்டார் மணிகண்டன். அவருடைய முடிவை மனதார ஏற்றுக் கொண்டார் லலிதா.

அவர்கள் இனியாவது மனநிறைவுடன் சேர்ந்தே இருப்பார்கள். இனி மீதியுள்ள வாழ்க்கை இனிக்கட்டும் அவர்களுக்கு!

இதுவும் ஒரு புதுமையான வான ப்ரஸ்த வாழ்க்கை தான் முதியவர்களுக்கு.



புவனா சந்திரசேகரன்.




 
Top