10.
வாய் விட்டு சிரித்தவள் கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷத்துக்கு மேல நீ என்னை பார்த்து கிட்டு இருக்க... இது போல நான் அடிக்கடி பண்ணிட்டு இருக்கேன் பலமுறை நான் செஞ்சதை நீ பார்த்திருப்ப... அது உன் மைண்ட்ல நல்லா செட் ஆயிடுச்சி அதான் உனக்கு வேற யாரோ செஞ்சது போல தோணிருக்கு…
ம்கூம்...இல்லல்ல...வேற யாரோ...என்று நெற்றிப்பொட்டில் விரல் வைத்து யோசித்தவன்...ராகா நீ இந்தியானு தெரியும்... உன் சொந்த ஊர் எது…
தமிழ்நாடு…
தமிழ்நாட்டுல எந்த ஊர்…
தமிழ்நாடுன்னு அப்பா சொல்லிருக்காங்க...பர்டிகுலர் ப்ளேஸ்னு எதும் சொன்னதில்ல…
உன் அப்பா கிட்ட கேட்டு சொல்லு…
எதுக்கு…
நான் ஊருக்கு போனதும் உன் பாட்டி தாத்தா பத்தி, விசாரிக்க…
அவங்க இருந்தா தானே நீ விசாரிக்க... எனக்கு பாட்டி தாத்தா மட்டும் இல்ல சொந்தகாரங்களே கிடையாது…
அதெப்படி இல்லாம இருப்பாங்க...கண்டிப்பா ஏதாவது ஒரு சொந்தக்காரங்களாவது இருப்பாங்க...
சான்சே இல்ல என்னோட அப்பா சைடு பாட்டி தாத்தா ரெண்டு பேருமே நான் பிறக்கறதுக்கு முன்னாடியே இறந்துட்டாங்க... என் அம்மாவும் இறந்தாச்சி…
அப்புறம் அம்மாக்கு தாத்தா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்கன்னு அப்பா சொன்னாங்க..
பாட்டி,என் அம்மாக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே இறந்துட்டதா சொல்லிருக்காங்க... அம்மாவும் அப்பாவும் அவங்களோட பேரண்ட்ஸ்க்கு ஒரே குழந்தைங்க... அதனால நெருங்கின சொந்தம்னு எனக்கு யாருமே இல்ல …
ஒருவேளை பாட்டி,தாத்தா சைடு யாராவது இருக்கலாம்...அவங்களாம் இப்போ டச்ல இல்ல…ஆமா உனக்கேன் தீடிர்னு என் குடும்பத்தை பத்தி தெரிஞ்சிக்க இவ்ளோ ஆர்வம்…
இல்ல இந்த பப்லி முகம்...எனக்கு ரொம்ப பெமிலியர்... அதான்...சரி விடு இந்தா சாவி...என்றவன் அவளது கையில் கொடுத்துவிட்டு...மெனிமோர் ஹேப்பி ரிட்டர்ன் ஆஃப் தி டே...என்று கூறினான்.
உணர்ச்சியே இல்லாமல் சாவியை பெற்றுக்கொண்டவள் சம்பிரதாயமாக நன்றி தெரிவித்தாள்.
உடனே பூபதி...இதெல்லாம் செல்லாது ராகா...வெறும் தேங்க்ஸ் பத்தாது...எனக்கு டிரீட் வேணும்…
வேறொரு நாள் தர்றேன்..
எண்ணி ரெண்டாவது மாச முடிவில நான் இந்தியா இருப்பேன் அங்க வந்து ட்ரீட் வைப்பியா...என்னை மனப்பூர்வமா மன்னிச்சிட்டா இன்னைக்கே வை…
இல்ல பூபதி நாளைக்கு தர்றேன்...இடம் நீயே சொல்லு... நான் காலேஜ்க்கு லீவ் போட்டுட்டு வர்றேன்..
ஆனா என்னால போட முடியாதே….கோர்ஸ் கம்ப்ளிட் டேட் அனௌவ்ன்ஸ் பண்ணியாச்சி இனி நோ லீவ் என்று விடாகண்டனாக கூறினான்.
கண்மூடி சில வினாடி யோசித்தவள் சரி வா போலாம்... நீயா வந்து என்னோட பேசியிருக்க... அது மட்டுமில்லாம சாரி எல்லாம் கேட்டு இருக்க…
மறுபடியும் ட்ரீட் வைக்கலனு சண்டை போட ஆரம்பிச்சிட்டா என்னால உன்னை சமாளிக்க முடியாது... என்று கூறியவள் இருக்கை மாறி அமர்ந்தாள்…
நீயே ட்ரைவ் பண்ணு... லைசென்ஸ் இருக்குல்ல... என்று கேட்டபடியே சாவியை அவனிடத்தில் கொடுத்தாள்.
அடம் பண்ணி கூட்டிட்டு போறேன்...ஆனா எனக்கு உன்னோட இருக்க பிடிச்சிருக்கு….கிடைக்கற சந்தர்பத்தை விட மனசில்ல ராகா...சோ நீ என்னை தப்பா நினைச்சிகிட்டாலும் பரவால்ல என்று கூறியபடியே வாகனத்தை இயக்கினான்.
நேராக இந்திய உணவகத்திற்கு அழைத்துச்சென்றவன்.. இன்னைக்கு நம்ம ஊர் சாப்பாடு சாப்பிடலாம்...ரொம்ப நாள் ஆச்சி சாப்பிட்டு என்று இருவருக்குமே ஆர்டர் செய்தான்…
வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தாள் ராகா...ஆனால் பூபதி அவளுக்கும் சேர்த்தே ஆர்டர் செய்தான்...இவளுக்கு நெய் ரோஸ்ட் ஆர்டர் செய்தவன் அவனுக்கு ஃபுல் மில்ஸ் ஆர்டர் செய்தான்.
உணவு இருவருக்கும் வர தாமதிக்காமல் சாப்பிட ஆரம்பித்தான்...ராகா சாப்பிடாமல் அமர்ந்திருப்பதை கண்டவன் சாப்பிடு என மீண்டும் கட்டாயப்படுத்தினான்.
அவள் மறுக்கவே அப்படி என்றால் நானும் சாப்பிட மாட்டேன் என பாதி உணவில் எழ வேறு வழியின்றி ராகா கொறிக்க ஆரம்பித்தாள்.
அதன் பிறகு ராகாவை கவனிக்காமல் வேகமாக சாப்பிட்டு முடித்தவன் கை கழுவிக் கொண்டு வந்தான்...பிறகு தான் கவனித்தான்….
ராகாவின் தட்டில் தோசை அப்படியே இருந்தது...ஆச்சர்யமாக அவளின் எதிரில் அமர்ந்தவன்....ஹேய் இங்க தோசை ரொம்ப நல்லா இருக்கும்... தோசைக்கு பேர் போன கடை இது... இந்த கடையோட தோசையை நீ சாப்பிடலைன்னா ஆச்சரியமா இருக்கு... !ஏன் உனக்கு தோசை பிடிக்காதா…? இல்ல இன்னைக்கு இந்த தோசை டேஸ்ட் பிடிக்கலையா..? என்று கேட்டபடி ஓரமாக தோசையை பிய்த்து காரச் சட்னியை தொட்டு வாயில் வைத்து சுவை பார்த்தான்.
பிறகு நல்லாதான இருக்கு ஏன் சாப்பிடல என்று சற்று வருந்தும் குரலில் கேட்டான்.
பசியில்லை என்று கூறவும் நம்ப மறுத்தவன் நீ இன்னைக்கு காலேஜ் வந்ததிலிருந்து உன்னை பாத்துட்டு தான் இருக்கேன்... அளவுக்கு அதிகமா கோவப்பட்ட…. அளவுக்கு அதிகமா அழுத... இப்போ கூட பாரு பசியில்லனு உன்னோட வாய் தான் சொல்லுது... முகம் அப்படி சொல்லல... உன் கண்ணுல பசி அவ்ளோ தெரியுது …
நீ இன்னைக்கு சாப்பிடலன்னு எனக்கு தோணினதால தான் உன்னை ஃபோர்ஸ் பண்ணி சாப்பிடுவதற்காக இங்க கூட்டிட்டு வந்தேன்…
ஆனா நீ இப்படி சாப்பிடாம இருக்குறது எனக்கு ரொம்ப வருத்தத்தை கொடுக்குது... என்ன ஆச்சு உனக்கு இன்னைக்கு…
எப்பவும் துறுதுறுன்னு எனக்கு எரிச்சல் கொடுக்கற பொண்ணு இன்னைக்கு மௌனமா முகத்தை வைச்சிகிட்டு என்னை அதிகமா வருத்தப்பட வைக்கற... ஏதாவது பர்சனலா ப்ராப்ளமா...காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா…என்று அவன் காரணம் கேட்டது என்னவோ சாதாரணமாகத்தான்...ஆனால் கேட்ட வீதம் அவள் சொல்லவில்லை என்றால் விடப்போவதில்லை என்பதை வழியுறுத்தியது...
பெருசா காரணம் ஒன்னும் இல்ல... இன்னைக்கு என் அம்மாவோட இறந்த நாள் ...எப்பவுமே இந்த நாள் அப்பா சாப்பிட மாட்டாங்க...அதை பார்த்து வளர்ந்ததால நானும் சாப்பிட மாட்டேன் …
என் பிறந்த நாளுக்காக என்னோட அப்பா சந்தோஷப்பட்டதை விட என்னோட அம்மா மரணத்துக்காக வருத்தப்பட்டது தான் அதிகம் எனக்குமே அந்த பீல் நிறையவே இருக்கு ...ஒருவேளை நான் என் அம்மாவோட வயிற்றுல கருவா உருவாகி இருக்கலன்னா…!
நான் அவங்களுக்கு மகளா பிறக்கலன்னா என்னோட அம்மாவோட உயிர் அநியாயமா போயிருக்காது…
நான் பிறக்க பிறக்கவே என் அம்மா இறந்ததா என்னோட அப்பா சொல்லுவாங்க அதை கேட்டதுக்கு அப்புறம் என் பிறந்தநாளை எப்படி என்னால சந்தோஷமாக கொண்டாட முடியும்... ஒரு உயிரை சாப்பிட்டுக்கிட்டே நான் வெளிய வந்திருக்கேன்...ஒவ்வொரு முறை இது நியாபகத்துக்கு வரும் பொதெல்லாம் ஒரு வாய் சாப்பாடு கூட உள்ள இறங்காது….அவ்ளோ பசியா உனக்குனு என்னை நானே கேட்டுப்பேன்….இப்படி நினைக்கும் போதெல்லாம் நான் ரொம்ப பலகீனமானவளா உணர்றேன்...என்னையே எனக்கு பிடிக்கல என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
அவளது பிறந்த நாள் என்று சாப்பிட்டவனுக்கு...அவளது தாயாரின் மறைவும் இன்று தான் எனத் தெரியவும் சாப்பிட்டது தொண்டைக்கு வந்து விக்குவது போல உணர்ந்தான்.
வினாடி நேரம் அவளின் அழுகையைக் கண்டு நெகிழ்தவன் அடுத்த வினாடியே அவனை நிலைபடுத்திக் கொண்டான்.
ராகா பிளீஸ்..
கன்ட்ரோல் யூவர் செல்ஃப்...பப்ளிக் பிளேஸ் எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க...என்ற படி அவளது தோளில் கைவைத்து ஆறுதல் படுத்தவும் அவனது கையை கெட்டியாக பிடித்தவள்... என்னால முடியல பூபதி...அம்மா இல்லாம ஒரு குழந்தை வளர்றது எவ்ளோ கொடுமை தெரியுமா... ஒரு பொண்ணுக்கு எப்போல்லாம் அம்மா தேவைப்படுவாங்களோ அப்போலாம் எனக்கு அம்மா இல்லை... எத்தனை நாள் அவங்க மடியில் படுத்து தூங்கனும்னு ஆசைபட்டிருக்கேன் தெரியுமா... எனக்கு இருட்டுனா அவ்ளோ பயம்...ஆனா நான் தினந்தினம் அந்த இருட்டுல தான் தனியா படுத்து தூங்கிட்டு இருக்கேன்…
எல்லா இடத்திலேயும் என்னோட அம்மாவை நான் உணர்றேன்... எனக்கு தெரியும் இது என்னோட மனபிரமைனு... அவங்களுக்காக ஏங்கி ஏங்கி ஒருநாள் நான் பைத்தியமாகப் போறேன்…
என் அம்மாவோட போட்டோவைப் பார்க்கும் போதெல்லாம் அவங்ககிட்ட கேட்கிறது ஒன்னே ஒன்னு தான்….உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா...என்னை வந்து பாத்துட்டு போங்கனு...என்னோட அம்மாவுக்கு அப்படி ஒரு வாய்ப்பு எப்பவுமே கிடைக்காதுல்ல...என்று அதிகபடியாக
உணர்ச்சி வசப்பட்டு பேசினாள்.
கண்டிப்பா...அவங்களுக்கு வாய்ப்பிருந்தா வந்துட்டு போவாங்க…. அவங்களுக்கு உன்னை வந்து பாக்கறதை விட வெறென்ன ஆசை இருக்கும் சொல்லு….
பூமியில பிறக்கற ஒவ்வொரு உயிருக்கும் தனிப்பட்ட கடமை இருக்கு ...அந்த கடமை முடியும் போது தானாவே அந்த உடலை விட்டு ஆன்மா கிளம்பி போயிடும்…. அப்படித்தான் உன்னோட அம்மாவோட கடமை உன்னை இந்த உலகத்துக்கு வர வைக்கறதா இருந்திருக்கும்…. அதான் நீ நல்லபடியா வெளியே வந்துட்டன்னு தெரிஞ்சதும் அவங்க கிளம்பி போயிருப்பாங்க…
அதனால நீ இப்படி அழுது கரையறது சரி கிடையாது ராகா எப்பவுமே நீ துறுதுறுன்னு சுத்தறது…. மத்தவங்களை எரிச்சல் படுத்த மாதிரி நடந்துக்கிறனு நான் உன்மேல பலமுறை கோவப்பட்டு இருக்கேன்…. ஆனா நீ அப்படி நடந்துக்கறதுக்கு காரணம் இப்போ தான் தெரியுது …. உன்னோட அம்மாவை நீ ரொம்ப மிஸ் பண்ணற..
அதை எப்படி சரி பண்றதுன்னு தெரியாம உன்னை நீயே சந்தோஷமாகவும் சுவாரசியமாகவும் வெச்சுக்கிறது போல நடிச்சிருக்க... என்ன மன்னிச்சிடு காலையில கூட இந்த ஊரை விட்டு போக போறேன்னு தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன்...ஆனா இப்போ மனப்பூர்வமா உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்... என்னை மன்னிச்சுடு இனிமே உன்னை மட்டும் இல்ல உன்ன மாதிரியே தன்னைத்தானே சந்தோஷமா வச்சுக்கணும்னு நினைக்கற எந்த பொண்ணுங்களை பார்த்தும் நான் எரிச்சல் பட மாட்டேன்…முடிஞ்சா அவங்க மேலும் சந்தோஷமா இருக்க என்னால என்ன முடியுமோ அதை செய்வேன்..
இது உன் மேல ப்ராமிஸ்...என்று கூறவும்…
என்மேல எதுக்காக சத்தியம் பண்ணற... நான் உனக்கு ஒன்னும் அவ்ளோ முக்கியம் இல்லையே என்பதுபோல் கலங்கிய விழிகளுடன் அவனைப் பார்த்தாள்.
அவளின் பார்வையின் அர்த்தத்தை வினாடியில் கிரகித்துக் கொண்டவன் போன நிமிஷம் வரைக்கும் நீ எனக்கு முக்கியம் கிடையாது யாரோ ஒரு பெண் அவ்வளவுதான்... ஆனா இந்த நிமிஷத்துல இருந்து நீ எனக்கு எவ்ளோ முக்கியமானவன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்... அந்த உரிமைல தான் உன் மேல சத்தியம் செஞ்சேன்…
என் அம்மா அப்பா மேல சத்தியம் செய்தா கூட அதை நான் எந்த அளவுக்கு காப்பாற்றுவேன்னு தெரியாது...உன்மேல சத்தியம் செய்யறதால என் கடைசிமூச்சி வரை அதை காப்பாத்துவேன்…
என்ன பூபதி ஏதோ புரியாத மாதிரி பேசுற நீ என்ன சொல்ல வர்ற...எனக்கு நீ பேசற வார்த்தைகளோட அர்த்தம் வேற மாதிரி புரியுது என்று சற்று பயந்தபடி அவனைப் பார்த்து சொன்னாள்.
வாய்க்குள்ளாக சிரித்தவன்...அவளின் கேசத்தை மென்மையாக வருடி விட்ட படி...இந்த நிமிஷத்துல இருந்து நீ என்னோட நெருங்கின தோழின்னு சொல்ல வர்றேன்…உனக்கு என்னோட நட்பு வச்சிக்க சம்மதமா ராகா...நாம ஃப்ரண்ட்ஸ் ஆயிடலாமா என்று அவளின் முன்புறமாக வந்து அவனின் கையை அவள் புறமாக நீட்டியபடி கேட்டான்.
சில வினாடிகள் யோசித்தவள்...சரி என்பதுபோல தலையசைத்துக்கொண்டே அவனின் கையை பிடித்து குலுக்கினாள்…
குட்...என்று மறுகையால் அவளின் உச்சந்தலையில் கை வைத்து அழுத்தியவன்...இப்போ உன்னோட பாய் பெஸ்ட்டி என்ன ஃபீல் பண்ணறான்னா...அவனோட கேர்ள் பெஸ்ட்டி இப்போ சமத்தா சாப்பிடனுமாம்... அப்போ தான் அவனோட நட்பை முழு மனசா ஏத்துகிட்டதா அர்த்தம்னு நினைப்பானாம்…
என்றபடி வேகமாக கைகளை துடைத்துக்கொண்டவன் அவளுக்காக தோசையை பிய்த்து வாயருகே கொண்டு சென்றான்.
வேணாம் என்று இவள் மறுக்க பிடிவாதமாக ஒரு கையால் அவளின் தாடையைப் பிடித்து வாய்க்குள் உணவைத் திணித்தான்.
கோபமான ராகா எதுக்காக போர்ஸ் பண்ணற பூபதி .
இன்னைக்கு என் அம்மாவோட நினைவுதினம்... இன்னைக்கு நான் சாப்பிட மாட்டேன்னு சொல்லியும் என்னை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தினா எப்படி என்று கேட்டபடியே அவன் ஊட்டிய உணவை அவளது உள்ளங்கையில் துப்பி இருந்தாள்.
உண்மையிலேயே உன் அம்மா மேல பாசம் வச்சியிருந்தா..
அவங்களுக்காக ஏங்கிட்டு இருந்தா... இப்படி உன்னை நீயே பட்டினி போட்டு இருக்க மாட்ட... நீ இப்படி பட்டினி கிடந்தா அவங்க ஆன்மா எப்படி துடிக்கும் சொல்லு… உன் அம்மாவோட கடைசி கட்ட போராட்டம் உன்னோட பிறப்புன்னு நீதான் சொன்ன ...அது உண்மைன்னா நீ சாப்பிட்ட அடுத்த நிமிஷமே உன் அம்மாவோட ஸ்பரிசத்தை உணர்வ ...உன் அம்மாவ நெனச்சுக்கிட்டு நீ சாப்பிடு கண்டிப்பா உன் அம்மா சந்தோஷப்பட்டு இந்த நிமிஷமே உன் பக்கத்துல வருவாங்க... ட்ரை பண்ணிப் பாரேன் என்று கூறவும் சற்று யோசித்தவள் அவளாக தோசையை பிய்த்து வாயில் வைத்தாள்...பிறகு தாயாக காவ்யாவை நினைத்து கண்களை மூடி உணவை அசைபோட... இப்பொழுது கலை காவியாவின் உருவத்தில் ராகாவின் அருகே வந்து நின்று மானசீகமாக அவளின் மனக்கண்ணில் தோன்றினார்.
அந்தக் இடமே இருள் சூழ காவ்யா பிரகாசமாகத் தெரிந்தார்... அவரின் கண்களிலும் மகளைப் பிரிந்த வலி அப்பட்டமாக தெரிந்தது.
இவ்வளவு நேரம் மகள் அழுததை எல்லாம் அருகிலிருந்து பார்த்துக் கொண்டுதானே இருந்தார்… அவருக்கு பூபதியின் மீது தனிப் பாசமே வந்திருந்தது இவன் தானே ராகாவை அவளின் தந்தையிடம் கொண்டு சேர்க்க போகிறவன்…
கடவுள் கலைவாணிக்காக அனுப்பி வைத்திருக்கும் துருப்புச் சீட்டு... இன்று மகளின் கண்ணீரை துடைக்கின்றான்...பின்னாளில் பல குடும்பங்களின் கண்ணீரையும் மகளின் மூலமாக தீர்க்கப் போகிறான்.
கடவுள் யாரையும் கைவிடுவதில்லை என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு மகளை சந்திக்கும் வாய்ப்பையும் அமைத்துக் கொடுத்து விட்டான்.
சற்று முன் தான் மகள் அழுதாள் வாய்ப்பிருந்தால் வந்து போ அம்மா என்று... இதோ வாய்ப்பு கிடைத்துவிட்டது காவ்யாவின் உருவத்தில் கலையின் ஆன்மா அவளின் முன்பு சிரித்தபடியே வர மனக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம் கண்களை மூடி ராகா தாயை ரசிப்பதை... விழி கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பூபதி…
அவனுக்கு கலை ராகாவின் முன்பு நிற்பது தெரியவில்லை...ஏதோ கண்களை மூடி கற்பனை செய்கிறாள் என நினைத்தான்...அவளின் முகபாவத்தை கன்னத்தில் கையூன்றியபடி ரசித்துக் கொண்டிருந்தான்.
மகளின் முன்பு வந்த கலை அவளின் தலை மீது கை வைத்து ஆசீர்வதிக்க அந்த ஸ்பரிசத்தை நன்கு உணர்ந்த ராகவின் உடல் சிலிர்த்தது அதை ஆச்சரியமாக பூபதியும் பார்த்துக் கொண்டிருந்தான் .
அவன் அவளை சாப்பிட வைப்பதற்காக விளையாட்டாகத்தான் கூறினான்... ஆனால் அவள் தாயின் மீதிருந்த அதீத பாசத்தில் அதை அப்படியே நம்பி செயலில் காட்டவும் முதலில் விளையாட்டாக ரசித்தவன் இப்பொழுது ஆச்சரியமாக கண்களை விரித்து பார்த்தான்.
அவளின் மயிர்கால்கள் அனைத்தும் எழுந்து நிற்க தானாகவே ராகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.
அவள் மூடியிருக்கும் கண்களுக்குள் அவளுக்கும் தாயுக்குமான மௌனம் பாஷை போய்க்கொண்டிருக்கிறது... இவள் அம்மா அம்மா என்று கதற கலையோ மகளை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தம் இட்டபடி அப்படியே கரைந்து செல்கிறார்.
ராகாவிற்கு லண்டன் குளிரையும் மீறி உடல் முழுவதும் வேர்த்துக் கொட்ட அம்மா என்று கத்தியபடியே வேகமாக எழுந்தாள்... மனக்கண்ணில் இருக்கும் தாய் கரைந்து போய் விடக்கூடாது அதற்கு முன்பே அவளை பிடித்து விட வேண்டும் என்று கண்களை மூடியபடியே முன்பக்கமாக கைகளை நீட்டியபடி டேபிளின் மீது விழ டேபிளில் இருந்த உணவு பாத்திரங்கள் அனைத்தும் கீழே விழுந்து சிதறவும் தான் நிஜ உலகிற்கு வந்தாள்.
பூபதி சுதாரித்து அவளை பிடிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது ரெஸ்டாரண்டில் உணவருந்திக் கொண்டிருந்த அனைவரும் இவளை அதிர்ச்சியுடன் பார்க்க மேனேஜர் இவர்களை நோக்கி ஓடிவந்தார் .
ராகாவிற்கு கைகள் எல்லாம் நடுங்க பூபதியை பிடித்துக்கொண்டே பூபதி நீ சொன்ன மாதிரி அம்மா வந்தாங்க...அதோ அங்க என் அம்மா போறாங்க ….போகவேணாம்னு சொல்லு...அம்மா...ம்மா...என்று கத்தியபடி
உடனடியாக மயக்கத்திற்கு செல்ல ஆரம்பித்தாள்.