கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ 18

Akila vaikundam

Moderator
Staff member
18.


மிக நீண்ட பயணத்திற்கு பிறகு ராகாவும் பூபதியும் மதுரை வந்து இறங்கும் பொழுது மறுநாள் மதியத்தை தொட்டிருந்தது.


ராகாவிற்கு ஏறியது மட்டும் தான் நியாபகம் இருக்கிறது... அப்படி ஒரு தூக்கம்... அருகில் பூபதி இருக்கிறான் என்ற தைரியத்தில் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கண்ணயர்ந்து விட்டாள்.


இடையிடையே பூபதி தான் அவளுக்கு தூக்கத்திலேயே உணவை ஊட்டி விட்டிருக்கிறான்…


செக்கிங்கை முடித்தபின் பயணபையை சரி பார்த்து எடுத்து வெளியே வரும் பொழுது இவர்களுக்காக சொகுசு கார் ஒன்று காத்திருந்தது.


அதில் ஏறி அமர்ந்ததுமே முன்புறம் இரு கார்கள் செல்ல... பின்புறம் இருகார்கள் பின்தொடர்ந்தது வந்தது…


சில தூரம் சென்ற பிறகு தான் ராகா அதை கவனித்தாள்...ஹேய் பின்னாடி கார் ஃபாலோ பண்ணறது போல இருக்குல்ல…



ம்ம்...அது நம்மளோடது தான்...என் பாதுகாப்புக்காக வருது…


எஸ் ஃகார்ட்டா..என்று ஆச்சரியமாக கேட்டவள்...பிறகு வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டாள்…



திருநெல்வேலியை நெருங்கும் சமயத்தில் தென்பட்ட இடங்களையெல்லாம் ராகாவிற்கு காண்பித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டான்..அவர்களின் சொத்துக்களையும் காண்பித்தான்.



முதலில் ஏதோ பிஸினஸ் செய்பவர்கள் என நினைத்திருந்த ராகா அவன் சொல்வதை கேட்டு மலைத்துவிட்டாள்.
அவனின் பின்னணியை கேட்ட பிறகு தேவையில்லாமல் லண்டன் வந்து சிரமப்பட்டது போல தோன்றியது...அதை வெளிப்படையாகவும் கேட்டாள்.



நீ இங்க இவ்ளோ வசதியா இருந்துகிட்டு அங்க எப்படி சமாளிச்ச...இங்க இல்லாத படிப்பா அங்க இருக்கு…?.



உண்மைதான்...இந்தியாவிலேயே வேர்ல்டு ரேங்கிங் யுனிவர்சிட்டி இருக்குது...எத்தனையோ பேர் அங்க படிக்கறதுக்காக தவம் கிடக்கறாங்க...அங்கலாம் நான் படிக்கனும்னா...நான் டாப் ரேங்க் ஸ்டூடண்ட்டா இருக்கணும்... நான் அவ்ரேஜ் ஸ்டுடண்ட்... இரண்டாவது என்ன காரணம்னா நம்ம நாட்டில் இருக்கிறவங்களுக்கு வெளிநாடு போய் படிச்சிட்டு வந்தா அதை ஒரு கௌரவமா பார்க்கிறாங்க…. பணம் இருந்தா போதும் வெளிநாட்டில இருக்கற ஏதாவது ஒரு காலேஜ்ல டிகிரி முடிச்சிட்டு வந்திடலாம்... ஃபாரின் ரிட்டர்ன்னு பேரும் கிடைக்கும்...அதை பல குடும்பங்கள் விரும்புது…ஆனா நான் அதுக்காக வரல….


முதல் முதல்ல என்னோட கடைசி மாமா லண்டன் வந்து படிச்சாங்க அப்போ எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே ரொம்ப பெருமையா நினைச்சாங்க... அவர் ரொம்ப புத்திசாலி... எங்க ஃபேமிலியோட ஒட்டுமொத்த பிசினஸையும் அவர்தான் பார்த்துப்பாருன்னு ரொம்ப நம்பிக்கையா எங்க குடும்பமே இருந்துச்சாம்...ஆனா அவரோட பர்சனல் பிராப்ளத்தால எல்லாத்துல இருந்தும் ஒதுங்கிட்டாங்க…அவர் தான் என்னை மேல்படிப்புக்கு வெளிநாடு போ...அங்கத்த நிர்வாகம் புரியும்...இங்க பிஸினஸ் பாக்க சுலபமா இருக்கும்னு அட்வைஸ் பண்ணினாங்க... எனக்கும் சரின்னு பட்டது….என்றவன் யோசனையாக...


எல்லாத்தையும் நான் தான் எதிர்காலத்தில் பார்க்கணும்னு வரும்பொழுது அதுக்கான படிப்பும் எனக்கு வேணும்னு தோணுச்சு அதனாலதான் நானும் லண்டனை தேர்தெடுத்து அங்க மேனேஜ்மென்ட் படித்தேன்... அப்போதான் எக்ஸ்ட்ராவா திறமையை வளர்த்துக்க முடியும்னு நம்பினேன் …. மத்தபடி ஃபாரின் ரிட்டர்ன் பேரோ…. லண்டன்ல படிச்சேன்ங்கற கௌரவமோ எனக்கு தேவையில்லை... இப்போ என் குடும்பத்தோட விடிவெள்ளி நான் தான்…என சுருக்கமாகப் பேசி முடித்தான்.


அதன் பிறகு அவர்களின் குடும்ப விவரங்களையும், யார் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் சொல்லி வைத்தான்…



முதல் இரண்டு நாட்கள் முழுக்க ராகாவிற்கு ஓய்வு... அதன்பிறகு இரண்டு நாட்கள் ஊரை சுற்றி காண்பிப்பது...அதன் பிறகு ஒருநாள் முழுக்க குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது... அடுத்த நாள் இருவர் மட்டும் லண்டன் கிளம்புவது...அங்கு ராகாவை ப்ரியாவின் கையில் ஒப்படைத்து விட்டு ... பூபதி மீண்டும் திரும்பி வந்து வீட்டில் இருக்கும் பெரியவர்களை அழைத்துக்கொண்டு ராகாவை முறைப்படி பெண் கேட்பது...




ராமை சரி கட்டி இருவருக்கும் லண்டனில் எளிய முறையில் திருமணம் முடிந்ததும் சில நாட்கள் ராகாவை ராமின் விட்டிலேயே தங்க வைப்பது... அதன்பிறகு இவன் லண்டனில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வது...அதன் பிறகு மாதமொருமுறை இவன் மட்டும் ஊர்வந்து குடும்பத்தாரை சந்திப்பது….இல்லை அவர்கள் வந்து இவர்களை சந்திப்பது என் எதிர்கால திட்டத்தையும் கூறினான்.



ஒருவேளை குடும்பத்தில் இருக்கிறவங்க நீ லண்டன்ல தங்கறதை அனுமதிக்கலனா...என்று கவலையாக கேட்டாள்.


அப்படி சொல்ல மாட்டாங்க ராகா அவங்க எல்லாரையும் ரொம்ப நல்லா புரிஞ்சி வைச்சிருக்கேன்…
நான் ஒரு விஷயத்துக்கு ஆசைப்படுறேன்னு தெரிஞ்சா கண்டிப்பா அதுக்கு முட்டுக்கட்டை போட மாட்டாங்க…


நான் பிசினஸ் பாத்துக்க ஆரம்பிச்சுட்டா மாசத்துல முப்பது நாளுமே வீட்டுல தங்கப் போறதில்லை நாடு நாடா ஊர் ஊரா சுத்த போறேன் அதனால நான் லண்டன்ல இருந்தாலும் ஓண்ணுதான் இந்தியாவில் இருந்தாலும் ஒண்ணுதான்...சோ கண்டுக்க மாட்டாங்க...என்றவன் மிக இயல்பாக அவனது வாலட்டில் இருந்து ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை எடுத்து அவளது நெற்றியில் வைத்துவிட்ட படியே... சரி வீடு வரப்போகுது தலையை வாரிகட்டிக்கோ...இங்க இருக்கற வரைக்கும் அங்கிருந்து எடுத்துட்டு வந்த டிரஸ் எதும் போட வேணாம்... உனக்கு சாயங்காலம் இங்க போடறது போல வாங்கித் தர்றேன்...என்றான்.


சிறு புன்னகையுடன் மறுத்துப் பேசாமல் தலையசைத்துக் கொண்டாள்... ராகாவின் அச்செயல் மேலும் அவள் வசமாக பூபதியை இழுத்தது…

தேங்க்ஸ் ராகா...எதை போடனும்,எப்படி இருக்கனும்னு முடிவு பண்ணவேண்டியது என் இஷ்டம்னு சண்டைக்கு வந்திடுவியோன்னு...பயந்துகிட்டே சொன்னேன்...என்றபடியே அவளின் முகத்தை வெளிபக்கமாக திருப்பி அவளது கூந்தலையையும் ஒன்றாக இணைத்து பின்னல் போல போட்டு விட்டான்.


எதுவுமே பேசாதவள் அவனது தோளில் தலைசாய்ந்தாள்... அவனின் ஒவ்வொரு செயலும் ராமை நியாபகப்படுத்த...உடனே தந்தையை பார்க்க வேண்டும் போல தோன்றியது...அவளின் தலையை மிருதுவாக தடவிக்கொடுத்தவன்... என்னாச்சு ஏன் திடீர்னு சைலன்ட் ஆகற….


அப்பா ஞாபகம் வந்துடுச்சு பூபதி அப்பாக்கு நான் துரோகம் செய்யறது போல இருக்கு ...நான் தப்பெதும் செய்யலையே... என்று சாய்ந்தாவாறே முகத்தை மட்டும் தூக்கி அவனின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.


நெற்றியில் மென் முத்தமிட்டவன் எனக்கு சொல்ல தெரியல ராகா... நம்மளோட எதிர்காலத்திற்காக நாம எடுத்த முடிவு... இன்னைக்கு இது தப்பா தெரிஞ்சாலும் பின்னாடி நம்மளோட வாழ்கை முழுமைடையும் பொழுது சரின்னு தோனலாம்... சரியோ தப்போ ஒரு முடிவெடுத்து இவ்வளவு தூரம் வந்துட்ட இனி அதை பத்தி யோசிச்சு தேவையில்லாம மனசை குழப்பிக்காத... எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ... எந்த ஒரு விஷயமும் காரணம் இல்லாம நடக்காது….நீ இங்க வரதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்... அதனாலதான் கடவுள் உன்னை இவ்வளவு தூரம் வர வைச்சிருக்காரு...என்று ஆறுதல் கூறினான்...ஆனாலும் ராகாவின் கண்களில் இருந்து மௌனமாக கண்ணீர் வழிந்தது…


ம்ச்...ராகா என்ன இது குழந்தை மாதிரி... டிரைவர் அண்ணா நம்மளை தான் கவனிக்கறாங்க...ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப்... என்று அவளை அமைதிப்படுத்தினான்…



கிட்டத்தட்ட மூன்று மணிநேர வாகனப் பயணத்திற்கு பிறகு பூபதியின் வீடு வந்தது...ராகா கண்கலங்கியபடியே பூபதியின் தோளிலேயே குட்டி தூக்கம் போட்டு விட்டாள்.


ராகா எழுந்திரு நம்ம வீடு வந்துருச்சு என்று சொல்லவும் சோம்பல் முறித்தபடியே கண்களைத் திறந்து பார்த்தாள்... பார்த்தவுடனேயே கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது இது வீடா இல்ல அரண்மனையா என்று கேட்கவும்…


ஒரு காலத்துல ஜமீன் வீடா இருந்தது...அதுவே கொஞ்சம் கொஞ்சமா நாகரீகத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றி இந்த காலத்துல ஏத்த வீடு போல மாற்றி இருக்கோம்…. என்றவனிடம்…


கடவுளோட படைப்பை பாத்தியா பூபதி...வர்ற வழியில ஏகப்பட்ட பேர் ரோட்டுல சமைச்சி சாப்பிட்டுட்டு இருக்கறதை பாத்தேன்...பல பேரு ரோட்டுல பிச்சை எடுக்கறதை பாத்தேன்...ஆனா உன் ஒருத்தன் கிட்ட இவ்ளோ பணம்..
இவ்ளோ பெரிய வீடு உன்கிட்ட இருக்கறதை நீ பிரிச்சி குடுத்தா நாம வர்ற வழியில பாத்தது போல யாருமே இருக்க மாட்டாங்கல்ல..என்று பிரமாண்டமான வீட்டை பார்த்தபடி கூறினாள்.


அவளை ஆச்சர்யமாக பார்த்த பூபதி... இதுபோல் எல்லாம் வீட்டுக்குள்ள வந்து பேசிக்கிட்டு இருக்காதே அப்புறம் என் தாத்தா உன்னோட சேர்த்து என்னையும் துரத்தி விட்டிடுவாரு…என்று கிண்டலாக சொன்னான்.


உண்மைய சொல்லனும்னா எனக்கு இந்தியா வரணும்னு ரொம்ப வருஷமாவே கனவு ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம்தான் நான் பார்க்க ஆசைப்பட்ட இந்தியா இது இல்லைன்னு தோணுது…


எங்க பார்த்தாலும் மக்கள் கூட்டம்... ஏர்போர்ட் உள்ள அவ்வளவு சுத்தம் ….மேல்தட்டு மக்களை மட்டுமே பார்த்தேன்…அட இந்தியா கேள்விப்பட்ட மாதிரி ஏழை நாடெல்லாம் இல்லனு சந்தோஷப்பட்டேன்…



அதைத் தாண்டி வெளியே வந்துட்டா….பார்த்ததுல பாதி இடம் குப்பை மேடு…. எங்க பார்த்தாலும் அடித்தட்டு மக்கள்…. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுகிட்டு அடுத்தவங்கிட்ட கையேந்தர மக்கள் அதையெல்லாம் பார்க்க பிடிக்காமல் தான் கண்ணை மூடி தூங்க ஆரம்பிச்சுட்டேன் …


ஆனால் இங்கு வந்து பார்த்தா மறுபடியும் எல்லாமே நேர்மாறு…

ஒரு ஊரையே வளைச்சிபோட்டது போல இடம்….அதுல பக்கிங்காம் அரண்மனை போல பல அடுக்கு வச்ச அந்த காலத்து வீடு... பேருக்கு கூட ஒரு மணல் இல்ல...எத்தனை காரு...எத்தனை வேலை ஆட்கள்... வீட்டை சுத்தி போட்டுக்கிற மதில் சுவற்றுக்கு ஆன செலவுல நீங்க ரோட்ல இருக்கற பாதிபேருக்கு வீடு கட்டி தந்திருக்கலாம்….கடவுள் இப்படி ஒருத்தன் கிட்ட எல்லாத்தையும் கொடுக்கறதுக்கு பதிலா இல்லாதவனுக்கும் சரிசமமா பிரித்துக் கொடுத்து இருக்கலாம்ல்ல...
இருக்கிறவனே எல்லாத்தையும் வெச்சுக்கிட்டா இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க...என்று சற்று எரிச்சலுடனே கூறினாள்.


இம்முறை அவளை சற்று கோபமாக பார்த்த பூபதி இதுபோல என்னைக்குமே நாங்க யோசித்ததில்லை இனிமேலும் யோசிக்க மாட்டோம் நீ சொல்றத போல நாங்க யோசிக்க ஆரம்பிச்சா ஜாக்வார் கார்ல இப்போ வந்தது போல சவாரி செய்ய முடியாது... அதனால இந்த அன்னை தெரசா மாதிரி பேசுறதை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு ரெண்டு நாளைக்கு வாய மூடிக்கிட்டு இரு புரியுதா என்று முதல் முறையாக அவளின் பேச்சை அடக்கினான்…


மற்றவர்களுக்காக கருணை காட்டுவதற்கும் , பரிதாபப் படுவதற்கும் யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது அது கருவிலே வரவேண்டும்..
அது தான் இப்பொழுது ராகாவை பேசவைக்கிறது... லண்டனில் இருந்தவரை ராமின் மகளாக யோசித்தவளுக்கு பிறந்த ஊருக்கு வரவும் கலைவாணியின் மகளாக சிந்திக்க ஆரம்பித்து விட்டாள்.


அதற்குள்ளாக வீட்டிலிருந்த அனைவருமே இவர்களை வரவேற்பதற்காக ஆரத்தி தட்டுடன் வெளியே வர குடும்ப உறுப்பினர்களை கண்டும் சற்று மிரண்டு விட்டாள்…


பெரிய குடும்பம் கூட்டுக் குடும்பம் என்று கூறியிருந்தான்...ஆனால் இத்தனை உறுப்பினர்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள் என நினைக்கவில்லை.



கிட்டத்தட்ட பத்து பேர்களுக்கும் மேலாக ஆண்களும்,பெண்களுமாக கலந்து நின்று கொண்டிருந்தார்கள். அனைவருமே ஓரளவிற்கு வயது முதிர்ந்தவர்கள்... கருப்பும் அல்லாது கலரும் அல்லாது புதுவித நிறத்தில் இருந்தார்கள்... உயரத்திற்கேற்ற உடல்வாகு...அதற்கேற்றது போல கம்பீரம்... பெண்களும் பட்டு புடவை அணிந்தபடி வாட்டசாட்டமாக காதுகளில் பெரிய கம்மலும் மூக்கில் பெரிய மூக்குத்தி அணிந்து இருக்க ஆண்கள் சொல்லிவைத்தது போல் வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தார்கள்…


பெண்கள் புன்னகையுடன் ஆரத்தி எடுக்க பூபதி ஒவ்வொருவரையும் முறை வைத்து கூப்பிட்ட படி அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்…


அனைவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு என்பது போல் ராகாவை பூபதி பார்க்க அவளுக்கு இதெல்லாம் பழக்கம் இல்லாததால் வெளிப்படையாகவே தலையசைத்து மறுத்தவள் ஓரமாக நின்று கொண்டாள்... அது அங்கிருந்த ஆண்களின் முகத்தை சுருங்க வைத்தது… பெண்களில் ஒருவர் மட்டும் முன்வந்து ராகாவை பார்த்து இவ தான் என் மருமகளா என்று கேட்டார்... பூபதி ராகாவின் காதில் இதான் என் அம்மா போட்டோல காமிச்சேனே அதுக்குள்ள மறந்துட்டியா என்று காதை கடித்தான்...


ராதாவிற்கு பதில் சொல்லத் தெரியாமல் அசடு வழிய...

அதில் வாட்டசாட்டமாக நின்றுகொண்டிருந்த ஒரு ஆண் ஆமா சீமையிலே இல்லாத உன் மருமக வெளிநாட்டில் இருந்து உனக்கு சேவகம் பண்ணறதுக்காக இவ்வளவு தூரம் வந்து இருக்கா என்று நக்கலாக பேசினார்.



சும்மா இருங்க மாமா நம்ம வீட்ல இத்தனை ஆளுக இருக்கும்போது எதுக்காக அங்கிருந்து வந்து எனக்கு சேவகம் பண்ணனும்... என் பையன் ஏதாவது வெள்ளைக்காரியை கூட்டிட்டு வந்திடுவானோன்னு பயந்துகிட்டு இருந்தேன்... ஆனா நம்ம பூபதி தமிழ் பேசறவளையே கூட்டிட்டு வந்து என் வயித்துல பாலை வார்த்துட்டான்... என்றவர் பூபதியை பார்த்து சரி பூபதி மொதல்ல போய் ரெண்டு பாட்டிக கிட்டயும் தாத்தா கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிக்கோ என்று உள்ளே அனுப்பி வைத்தார்.


பூபதி ராகாவை அழைத்துக்கொண்டு முன்பக்கமாக இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்... மிகப் பெரிய அறை அது...உள்ளே சகல வசதிகளும் இருக்க முதியவர் ஒருவர் சாய்வாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க அதன் அருகிலேயே வயதான ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தார்.


நேராகச் சென்றவன் அவர்கள் இருவரின் கால்களையும் தொட்டு கும்பிட்டு விட்டு ராகாவையும் விழ வைத்தான்... இவங்க தான் என்னோட பெரிய தாத்தா பாட்டி இவங்களுக்கு மொத்தம் மூணு பசங்க... அதுல ரெண்டு மாமாவையும் அத்தையையும் வெளியே பார்த்த கடைசி மாமா வீட்ல இல்லை போல... என்றான்.


அவன் கூறியவற்றை நன்கு உள்வாங்கிவள் எதுவும் பேசாமல் தலையை அசைத்தபடி நிற்க முதியவர்கள் இருவரும் சம்பிரதாயமாக இவர்களை விசாரித்துவிட்டு அனுப்பி வைத்தனர்.


பிறகு நேராக மற்றொரு அறைக்கு அழைத்துச் செல்ல அங்கே முதலில் பார்த்த முதியவர் போலவே அச்சு அசலாக இருந்த மற்றொருவர் இருந்தார்...பார்த்ததுமே தெரிந்து விட்டது...இதுவும் அவனுக்கு தாத்தா என்று...ஆனால் அருகில் சற்று வயது குறைந்த தோற்றத்திலிருந்து பெண்மணியும் இருந்தார்... இருவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டவன்... இது என்னோட அம்மாவோட அப்பா அதாவது எனக்கு தாத்தா என்று கூறவும் அப்போ இவங்க என்று கேட்கவும்...இவங்க என் சின்ன பாட்டி...என்றவன் சரி வா என்று வெளியே அழைத்து வந்தான்.


சின்னப் பாட்டின்னா என்று சந்தேகத்தை கேட்டாள் ராகா.


அதாவது என்னோட தாத்தாக்கு இரண்டு மனைவி முதல் மனைவிக்கும் பிறந்தவர் தான் என்னோட ரெண்டு தாய்மாமன்கள் என்னோட அம்மா மூணு பேரு ரெண்டாவதா இவங்களை சேர்த்து கிட்டாங்க...குழந்தைகள் யாரும் கிடையாது ஆனால் மூன்று தம்பிகள் அவங்களும் இந்த வீட்டில தான் இருக்காங்க அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு...குழந்தைக இருக்காங்க…. இவங்க கடைசி தம்பியை தான் என்னோட அம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க... அதாவது பாட்டியோட ரெண்டு தம்பிகளும் எனக்கு பெரியப்பா பாட்டி ஒருவகையில் எனக்கு அத்தை என்று கூறி சிரித்தான்…



எனக்கு உன் உறவுமுறை எதுவுமே புரியல கொஞ்சம் தெளிவா சொல்லு…


இது கூட்டுக்குடும்பம் ராகா... சின்ன பாட்டிகளோட தம்பிக்க ஒரு வகையில என்னோட அம்மாவுக்கு தாய் மாமா முறை வேணும்... அந்த முறை வச்சு என்னோட அம்மாவை திருமணம் செஞ்சு கொடுத்திருக்கலாம்... இப்போ வா என் பாட்டியை பார்க்க போகலாம் என கூட்டிச்சென்றான்…



வயதான பெண்மணி ஒருவர் பூஜையறையில் அமர்ந்து கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார் அவர் வேண்டுதல் முடித்து வெளியே வரும் வரை ராகாவை வெளிய வராண்டாவில் நிற்க வைத்தான்... அவர் வெளியே வரும் வரை ஏன் ஒரே இடத்தில் நிற்க வேண்டுமென நினைத்த ராகாவும் பூபதியும் அந்த இடத்தையே சுற்றிவர ஆரம்பித்தனர்.


சற்று நேரத்திற்கெல்லாம் பூஜை முடித்து அவர் வெளியே வந்தார்... காரிடாரில் சுற்றிக்கொண்டிருந்த ராகாவை பார்த்து யாரது...என சத்தமாக கேட்டார்..


பாட்டி நான்தான் பூபதி...என ராகாவின் அருகிலிருந்து பாட்டியிடம் ஒடிவந்தான்.‌.
அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவனை கட்டி அணைத்து உச்சி முகர்ந்த பாட்டி எப்படா ஊர்ல இருந்து வந்த….பாட்டி கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே என்றவர் ஆமா இங்க யாரு என்னை மதிக்கிறா... நீ என்னை மதிக்க என்று சற்று வேதனை கலந்த குரலில் கூறினார்.


என்ன பாட்டி இப்படி எல்லாம் பேசறீங்க நான் என்னைக்காவது உங்களை மதிக்காம இருந்திருக்கேனா சொல்லுங்க என்றவன் அப்போது தான் கவனித்தான்...ராகா அருகில் இல்லாததை…


எங்கே எனத்தேட எந்த இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வந்தானோ அதே இடத்தில் நின்றபடி இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் .


உடனே அவளை வா என்பது போல் கையசைத்தவன்… பாட்டி அங்க பாருங்க நான் யாரை கூட்டிட்டு வந்திருக்கேன்னு என்று நடந்து வரும் ராகாவை காண்பித்தான்..


புது இடம் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் பூபதி இருக்கிறான் என்ற தைரியத்தில் கம்பீரமாக நடந்து வந்த ராகாவைப் பார்த்த பாட்டி கண்களில் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி மீண்டும் போட்டபடி... யாருடா இந்த பொண்ணு அசப்புல நம்ம ராஜா நடந்து வர்ற மாதிரியே இருக்கே …
சின்ன வயசுல மீசை மூலைக்கறதுக்கு முன்ன நம்ம ராஜா இப்படித்தான் இருப்பான் என்று கூறவும்... பூபதியும் ராகாவை இப்பொழுது சற்று கூர்ந்து கவனித்தான்.


ஆம் பெரிய தாத்தாவின் மகனான ராஜபூபதி இவளைப் போல் தான் கிட்டதட்ட நடப்பார்….என்ன ராகாவின் நடையில் பெண்மைத்தனம் எட்டிப் பார்க்கிறது... அதற்குள் அருகில் வந்த ராகா இம்முறை பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள பூபதி அவளைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்…


இப்பொழுது மெதுவாக பூபதியின் பெரியப்பாக்கள் அத்தைகள் பெரியம்மாக்கள் என வீட்டிற்குள் உலாவ ஆரம்பித்திருந்தார்கள்…


என்ன பூபதி புதுசா பாக்குற மாதிரி பாக்கற என்ற ராகா சிரித்தபடி பூபதியை பார்த்து கேட்கவும் அவனது கையை எடுத்து படுத்த வாக்கில் ராகாவின் மூக்கின் மீது வைத்தான் .


மூக்கிற்கு மேலாக கண், நெற்றி,புருவம் என அனைத்துமே அவனின் மாமாவை ஞாபகப்படுத்த …

ஹேய் ராகா
நான் உன்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன் இல்ல உன் முகத்தை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன்னு... ரொம்ப ஃபேமிலியர் ஃபேஸ்னு…


இப்போ தான் புரியுது... கிட்டத்தட்ட என் மாமாபோல ஜாடை உனக்கு... அவர் மீசை தாடி எல்லாம் வெச்சிருக்கிறதால எனக்கு சொல்ல தெரியல... ஆச்சர்யமா இருக்கில்ல என்று கூறவும்... பூபதியின் பெரியப்பாக்கள் இருவரும் ராகாவின் பின்புறமாக வந்து நின்றபடி அவளையே குறுகுறுவென பார்க்கத் தொடங்கினர்.


இதை அறியாத ராகா வெள்ளந்தியாக... யார் ராஜா எனக் கேட்டாள்…


பெரிய பாட்டி தாத்தாவோட கடைசி பையன்... லண்டன்ல படிச்சதா சொன்னேனே... அவர் தான்…


ஓஓஓ... அவர் இப்போ இங்க இல்லையா…


அவர் அதிகமா வீட்டில இருக்கமாட்டாரு...அவர் வந்தா உன்னை அவர்ட்ட கூட்டிட்டு போறேன்... பார்த்து நீயும் உன் பங்குக்கு ஆச்சரியப்படு என்று கூறவும் சரி என தலையசைத்தாள்..


அதற்குள்ளாக பூபதியின் தாயாரான காமாட்சி மொதல்ல ரெண்டு பேரும் போய் குளிச்சிட்டு வாங்க சாப்பிடறதுக்கு எல்லாம் தயாரா எடுத்து வைக்கிறேன் என்றவர் அண்ணி இவளை அவ ரூம்க்கு கூட்டிட்டு போங்க என்று அனுப்பி வைத்தவர்...
மகனிடம் நீ உன் ரூமுக்கு போ என்று அனுப்பி வைத்தார்.



இருவரும் எதிரெதிர் திசையாக சொல்லவும் தாயாரைப் பார்த்த காமாட்சி அம்மா உங்களுக்கு ஏதாவது வேணுமா என்று கேட்கவும் இல்லடி அம்மா நான் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கிறேன் என்றபடி அவரும் நடந்து செல்ல ஆரம்பித்தார் .



சரி என்றபடி காமாட்சி அங்கிருந்து நகர போக…

காமாட்சி ஒரு நிமிஷம் நில்லு என்று இரு ஆண்களில் ஒருவர் அழைத்தார்.


என்ன முத்து மாமா என்று கேட்டபடி திரும்ப இப்போ வந்திருக்கிறாளே எந்த ஊர்காரி இவ….அவளோட அம்மா அப்பா எங்க இருக்காங்க... எனக்கேட்டார்.


எனக்கு எப்படி அத்தான் தெரியும் திடீர்னு ஒரு நாள் போன் பண்ணி ஒரு பொம்பள புள்ளைய விரும்பறேன்னு சொன்னான்…


ஆரம்பத்தில இதெல்லாம் சரி வராதுன்னு எவ்வளவோ சொல்லி பார்த்தேன்... நம்ம ஊரு பொண்ணு தான் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருவான்னு ரொம்ப பிடிவாதமா இருந்தான்...எங்க நான் வேணான்னு சொன்னா கல்யாணத்தை பண்ணிகிட்டு அங்கேயே இருந்திடுவானோன்னு பயந்து…


சரி பொண்ணை இங்க கூட்டிட்டு வா நாங்களும் ஒரு தடவை பார்த்துட்டு புடிச்சா நானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்ன என் வார்த்தையை நம்பி இந்த புள்ளையை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்திருக்கான் இனிதான் ஒவ்வொன்னா விசாரிக்கனும் என்று கூறியபடி அங்கிருந்து நகர்ந்து செல்ல முத்துவும் அவரின் அண்ணனான பாலனும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்து தலையசைத்துக் கொண்டனர்.
 
Top