கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ -2

Akila vaikundam

Moderator
Staff member
2.


எவ்வளவு நேரம் அப்படி அழுதார் என தெரியவில்லை...வாயிலில் இவர் கதறலை மிஞ்சும் வண்ணம் ஒரு வயதான பெண்மணி கத்தவும் தான் நினைவுக்கு வந்தார்.



ஐய்யா... டாக்டர் ஐய்யா...என் பொண்ண காப்பாத்துங்க அய்யா என்றபடி…


விட்டிருந்த மழை மீண்டும் அடித்து ஊத்த தொடங்கியிருந்தது.


காதில் விழுந்தாலும் விழாதது போல மனைவியின் புகைபடத்தை கீழே வைத்தவர் மீண்டும் மதுக்கோப்பையை நிறைத்து கையில் ஏந்திக்கொண்டார்.



இப்பொழுது வாயில் கதவை யாரோ திறப்பது போல் சத்தம் கேட்டது...அதற்கும் ராம்பிரசாத் அசரவில்லை…


இனிமேல் மருத்துவ உதவி என்று அவர் யாருக்கும் செய்யப்போவதே கிடையாது ஒருவேளை மருத்துவ உதவிக்காக வராமல் திருடுவதற்காக வந்திருந்தாலும் அவர்களிடத்தில் இவர் எந்த ஒரு எதிர்வினையையும் காட்டப் போவதில்லை .


தாய் ,தந்தை, மனைவி,குழந்தையை என எல்லோருமே போய்விட்டார்கள்...இனி யாருக்காக வாழ வேண்டும்... இங்கு இருக்கும் பணம்தானே அவர்களுக்கு வேண்டும் எது எல்லாம் வேண்டுமே எல்லாவற்றையும் எடுத்து விட்டுச் செல்லட்டும்…. இல்லையா தன்னையும் கொன்று விட்டுத்தான் போகிறார்கள் என்றால் அப்படியும் செய்யட்டும் எது நடந்தாலும் எனக்கு சம்மதமே என்பது போல் கால்களை நீட்டி வைத்தபடி மீண்டும் மதுவை வாயருகே கொண்டு சென்றார்.


இப்பொழுது வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் கோபமடைந்தவர் கையிலிருந்த மதுக்கோப்பையை சுவற்றில் அடித்தார்…


பிறகு தள்ளாடிய படி எழுந்தவர் கட்டுபோட்ட காலை இழுத்தபடி கதவை திறந்தார்.


வாசலில் நடுத்தர வயது பெண்மணியுடன் அவர் மருத்துவ மனையில் பணிபுரியும் செவிலியப்பெண் சுதாவும் நின்று கொண்டிருந்தார்…


சுதா கடந்த ஏழு ஆண்டுகளாக அவரின் மருத்துவ மனையில் செவிலியராக பணி புரிபவர்...ராமின் தாயாரின் பேறுகால மருத்துவ மனையில் பிரசவத்திற்கு உதவுவதில் தனித் தன்மை பெற்றவர்... அவர் தவறவும் ராம் பிரச்சாரத்தின் கீழ் பணிபுரிகிறார்…



முப்பத்தி ஒரு வயது பெண்...ராமை அவருக்கே தெரியாமல் ஒருதலையாக காதலித்த பெண்…வேலைக்கு சேரும் பொழுது ராம் தலைமை மருத்துவரின் மகன் என தெரியாமல் மனதை பறிகொடுத்தவர் அதன் பிறகு தெரிந்ததும் மனதை மாற்றிக்கொள்ள முடியவில்லை…



தீடிரென அவர் காவ்யாவை திருமணம் செய்யவும் காதலை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டார்... இன்று வரை வெளிக்காட்டிக் கொண்டதில்லை வேலைக்கு வந்த சில நாட்களிலேயே ராமின் தாயார் அவ்வப்போது சுதாவிடம் கேட்பார்... எப்பொழுது திருமணம் என்று.



அப்பொழுதெல்லாம் மனதில் ஒருவர் இருப்பதாக கூறியவர் கூடிய விரைவில் திருமணத்தை அவரின் சம்மதத்தோடு அறிவிப்பேன் என்றார்... அதன் பிறகு ராமை பற்றி தெரியவும் மிகவும் பெரிய இடம் ஒத்து வராது அதனால் விட்டுவிட்டேன் என்று கூறிவிட்டார்.


அதன் பிறகு ராமின் தாயார் கண்டு கொண்டதில்லை...ஆனால் ராம் சுதாவிடம் அவ்வப்போது திருமணத்திற்காக வற்புறுத்துவதுண்டு.. இப்படி தனியாக இருக்க கூடாது உனக்கென ஒரு துணை கண்டிப்பாக வேண்டும் ஒருதலைக் காதலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதே என்று புத்தியும் கூறுவதுண்டு... ஆனால் சுதா நாசுக்காக அந்த பேச்சை தவிர்த்து விடுவார்…


சில நாட்களில் ராம் காவ்யாவை காதலித்து பெற்றோர் சம்மதத்தோடு கைபிடிக்க மனதளவில் சுதா நொறுங்கி விட்டார்…


அதன் பிறகு அவரின் வாழ்க்கையை நோயாளிகளை கவனிப்பதற்கே அர்ப்பணித்த விட்டார்.



ராமின் தாயாரின் மறைவுக்குப் பிறகு கூட ஒருமுறை ராம் சுதாவின் மீது இருந்த உண்மையான அக்கறையில் அவரை திருமணம் செய்து கொள்ள பேசினார்…


இங்க பாருங்க சுதா என்னைக்கோ ஒரு நாள் யாரையோ காதலிச்சீங்கனு இத்தனை காலம் கல்யாணம் செஞ்சுக்காம இருக்கிறது சரி கிடையாது இன்னைக்கு பாருங்க என்னோட அம்மா அப்பா ரெண்டு பேருமே ஒரே சமயத்தில தவறிட்டாங்க... ஆறுதலுக்கு காவ்யா தான் இருக்கறா…
ஒருவேளை அவ இல்லனா நான் என்ன ஆகி இருப்பேன்னு தெரியல... இப்போ எதுக்காக நான் காவ்யாவை பத்தி பேசறேன்னா….எனக்கு அவ வாழ்க்கை துணையாக இருந்ததால தான் இந்த மாதிரி கடினமான நேரத்துல என்னால சுலபமா வெளிய வர முடிஞ்சது அது போல தான் உங்களுக்கும் ஒரு வாழ்க்கை துணை இருந்தா கஷ்ட காலத்துல கூட உங்களால சுலபமாக வெளியே வரமுடியும் புரிஞ்சுக்கோங்க சுதா என்று எவ்வளவோ சொல்லி பார்த்தார்…


ஆனால் சுதா பிடிவாதமாக சார் நான் ரொம்ப ஆசைப்பட்டு இந்த நர்சிங் படித்தேன்... மக்களுக்கு நிறைய சேவை செய்யுனும் அது என்னோட ஆசை
.. அதுக்கு என்னோட கல்யாணம் தடையாக இருக்கும்னு என்னோட அபிப்பிராயம்..


அதனால ப்ளீஸ் சார் இனிமே என்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசாதீங்க அது மட்டும் இல்லாம இப்போ நம்ம ஹாஸ்பிடலோட பில்லர்ஸ்ஸான நம்ம டாக்டர்ஸ் நம்மளோட இல்ல... டியூட்டி டாக்டர்ரை வச்சி தான் ரன் பண்ணறோம்... அதனால இப்போதைக்கு என்னோட கல்யாணம் முக்கியம் கிடையாது சார் ...நம்ம ஹாஸ்பிட்டலுக்கு என்னோட பங்களிப்பு தான் முக்கியம்னு நினைக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்... அதன்பிறகு சுதாவிடம் எப்பொழுதுமே திருமணத்தைப் பற்றிப் பேசுவதில்லை மருத்துவமனையில் கூட வேலை சம்பந்தமாக மட்டுமே பேசுவார் அதுவும் அவரின் மனைவியின் இறப்பிற்குப் பிறகு சுதாவை சந்திக்கவேயில்லை தனிமையிலே கழித்தவருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சுதாவை சந்திக்கிறார்.



அவரை கண்டதும் வார்த்தைகள் குளற சுதாவை பார்த்து இப்போ எதுக்கு இங்க வந்து என்னை டிஸ்டர்ப் செஞ்சுகிட்டு இருக்க… ஆமா யார் இந்த அம்மா எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த என்று முகத்தை கடுகடுவென வைத்தபடி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவருடன் வந்த நடுத்தர வயது பெண்மணி ராம்பிரசாத்தின் காலில் விழுந்தார்.


அய்யா என் பொண்ணை எப்படியாவது காப்பாத்துங்க...என்று கதறவும்...வினாடியில் பேலன்ஸ் இழந்தவர் சுதாரித்து பின் நகர்ந்து நின்று சுதாவிடம் இது என்ன ட்ராமா...என்று கோபப்பட்டார்.


அந்த பெண்ணோ இவரை விடாமல் அய்யா என் பொண்ணு உயிருக்குப் போராடிகிட்டிருக்கா... அவளை நீங்க தான் காப்பாத்தனும் என்று மேலும் கதறினார்…



கோபமாக சுதாவை பார்த்தவருக்கு இப்பொழுது அவர் அருந்தியிருந்த போதை இறங்க ஆரம்பித்தது.



மன்னிச்சிடுங்கம்மா...நீங்க ஏதோ தப்பான விலாசத்துக்கு வந்துட்டீங்கன்னு நினைக்கறேன்... தயவுசெய்து இங்கிருந்து கிளம்புங்க... யாருக்கும் வைத்தியம் பார்க்கிற அளவுக்கு என்னோட மன நிலைமை கிடையாது..
என்றவர் சுதாவை பார்த்து ஆங்கிலத்தில் உனக்கு தெரியாதா
நான் யாருக்கும் இனிமே ட்ரீட்மென்ட் செய்ய மாட்டேன்னு சொல்லி இருக்கேன் இல்ல அப்புறம் எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த...இனியொரு முறை இதுபோல செஞ்ச நான் மனுஷனா இருக்க மாட்டேன் என்று எச்சரிக்கையும் செய்தார்...பிறகு இருவர் நிற்பதையும் பொருட்படுத்தாது கதவை சாத்த போக சுதா செய்வதறியாது கைகளைப் பிசைந்தபடி நின்றார்.



ஆனால் அருகில் இருந்த பெண்மணி ராமை கதவை சாத்த விடாத வண்ணம் வெளியில் இருந்தபடியே அவரின் கால்களை படுத்த வாக்கிலேயே கெட்டியாக பிடித்துக் கொண்டார்.


தள்ளாடியவர் பெண்மணியிடம் இருந்து அவரை மீட்க போராடினார்...காலை எத்தி விட அவரின் வளர்ப்பு முறை இடம் கொடுக்கவில்லை...அதனால் முடிந்த அளவுக்கு பெண்மணியிடம் கடுமையாக நடந்து கொள்ளதவாறு பார்த்துக் கொண்டார்.


ம்மா...காலை விடுங்க...அப்புறமா கோபத்துல ஏதாவது செஞ்சிடப் போறேன் தயவுசெஞ்சு விடுங்க…



இல்ல அய்யா நீங்க உதவறேன்னு சொல்லற வரைக்கும் நான் இங்கிருந்து போகமாட்டேன் என் பொண்ணு என் முன்னாடி கொஞ்சம் கொஞ்சமா சாகுறதை என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது... அதனால தயவு செஞ்சு நீங்க எனக்கு உதவனும்…



இப்பொழுது அவரது கோபம் எல்லை மீற யோசிக்காமல் காலை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியை காலை தூக்கி உதறி விட்டபடி காலை இழுத்தபடி வேகமாக உள்ளே செல்ல ஆரம்பித்தார்‌…



ஆனால் சற்று தள்ளி விழுந்த அந்த பெண்மணி மீண்டும் எழுந்து வேகமாக ஓடி வந்து அவரின் முன்பு மண்டியிட்டு அமர்ந்து கெஞ்சத் தொடங்கினார்.


ஐயா தயவு செஞ்சு என் பொண்ணை எப்படியாவது காப்பாத்தி கொடுங்கய்யா ரெண்டு உசுரு துடிச்சிகிட்டு இருக்கு என்று கூறவும் ஏறியிருந்த போதை அனைத்தும் உடனே இறங்கியது...அவரது மனக்கண்ணில் காவ்யா வந்து சென்றார்…


நிறை மாத கர்ப்பிணியாக அழகிய காட்டன் புடவையில் வீங்கிய வயிற்றில் கைவைத்து இவரை பார்த்து சிரிப்பது போல் இருந்தது…


நிமிடத்தில் கஷ்டபடும் இடத்தில் காவ்யாவை வைத்து பார்த்தவர் கண்கலங்க திரும்பி சுதாவை பார்த்தபடி என்ன பிரச்சினை நம்ம ஹாஸ்பிட்டல்ல டியூட்டி டாக்டர்ஸ் இல்லையா..ஏன் பிரசவ வலில துடிக்கற பொண்ணை அங்க விட்டுட்டு இவங்களை இங்க கூட்டிட்டு வந்த என்று கோபம் கொண்டார்.


இல்ல சார் அதுல தான் பிரச்சனை குழந்தையை சிசேரியன் பண்ணி தான் எடுக்கனும்... ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டோம் ஆனா அனஷீசியா குடுக்கறவர் வரலை... அதான் நீங்க வந்தா உடனே சர்ஜரியை ஸ்டார்ட் பண்ணிடலாம்…


அவர் வரலன்னா ஏன்னு காரணம் கேக்கனும்...இல்ல அவர் வர்ற வரை வெயிட் பண்ணனும் அதை விட்டுட்டு இங்க வந்தா எப்படி..


சார் வர்ரேன்னு தான் சொன்னாரு கடைசி நிமிஷத்துல வர மாட்டேன்னு சொல்லிட்டாரு ஆபரேஷனுக்கு எல்லாமே ரெடி பண்ணி வச்சிட்டு கடைசி நிமிஷத்துல என்ன பண்றதுன்னு தெரியல அதனாலதான் உங்க கிட்ட வந்தேன்... பலமுறை ஃகால் செஞ்சேன் உங்ககிட்ட இருந்து எந்த ஒரு ரெஸ்பான்ஸூம் இல்லாததால்தான் நேரிலேயே பாத்துட்டு போலாம்னு வந்தேன் கூட இவங்களும் வரேன்னு சொல்லும்போது என்னால மறுத்து பேச முடியல சார் ...ஒருவேளை எனக்காக நீங்க வரலனா கூட இந்த அம்மாவுக்காக வரலாம்ல்ல...அதனால தான் கூட்டிட்டு வந்துட்டேன் மன்னிச்சுடுங்க சார் என்று படபடவென பேசி முடித்தார் சுதா.



ஏன் இருக்கற டாக்டர் வச்சி நார்மல் டெலிவரிக்கு ட்ரை செய்யலாமே...அப்படி என்ன சிசேரியன் பண்ண வேண்டிய அவசியம் வந்தது…



சார் அதுல தான் மிகப் பெரிய பிரச்சினையே இருக்கு இப்போ டெலிவரிக்கு வந்திருக்கிற பொண்ணுக்கு பாதுகாப்பில்லைனு பத்து நாளைக்கு முன்னாடியே அவங்களோட ஹஸ்பன்ட் நம்ம ஹாஸ்பிடல்ல வந்து அட்மிட் பண்ணிட்டாங்க…


ரொம்ப நார்மலா இருந்தாங்க ஆனா மத்தியானம் அவங்க சொந்தக்காரங்க யாரோ ஒருத்தர் அவங்களுக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுத்து இருக்காங்க... அந்த சாப்பாட்டை சாப்பிட்டதுல இருந்து அவங்களுக்கு பயங்கர வாந்தி... கண்ட்ரோல் இல்லாம வாமிட் பண்ணிட்டு இருந்ததால அவங்களை முழுசா செக் பண்ணினோம்...அப்போ தான் அவங்க ரத்தத்துல ஸ்லோ பாய்சன் மாதிரி எதோ கலந்து இருக்கறது எங்களுக்கு தெரிஞ்சது…டயாலிஸ் பண்ணறதுன்னாலும் இப்போ முடியாது... அதான் குழந்தையை வெளியே எடுத்ததும் பண்ணலாம்னு உடனே சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ணிட்டோம்…லேட் பண்ணற ஒவ்வொரு செகன்ட்டும் பேபியோட உயிருக்கும் ஆபத்து...என்று கூறியவரிடம் ராம் யோசனையாக
அப்போ சாப்பாட்டுல ஏதோ ஒன்னு கலந்திருக்கும்னு சொல்ல வர்றீங்களா..?


மேபீ சார் ஆனா ஸ்யூரா சொல்ல முடியாது…


சாப்பாட்டில் ஏதாவது கலந்து இருக்குதுன்னா
கிட்டத்தட்ட இது அவர்களை கொலை பண்ற காண முயற்சி மாதிரி தெரியுது…நீங்க மொதல்ல போலீஸ் ஸ்டேஷன் போங்க என்றார்..



இருவரின் சம்பாசனைகளையும் பதட்டத்தோடு கேட்டுக்கொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணி இப்பொழுது ஐயா அதுக்கெல்லாம் இப்ப நேரம் கிடையாது சொல்லப்போனா என் பொண்ணை ஏதாவது செஞ்சிடுவாங்கன்னு தான் பயந்து போய் என் மாப்பிள்ளை இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டு போனார் அப்படி இருந்தும் கூட அவங்க குடும்பத்து ஆளுக பாசமா பேசி நான் இல்லாத நேரமா பாத்து என் பொண்ணுக்கு எதையோ கொடுத்துட்டுப் போயிட்டாங்க நீங்க தாமதிக்கற ஒவ்வொரு நிமிஷமும் என் பொண்ணோட உயிருக்கும் அவ வயித்துல இருக்கற
குழந்தைக்கு மிகப்பெரிய ஆபத்து தயவு செஞ்சு புரிஞ்சிக்கோங்க ஐயா..



பேசிட்டு இருக்க நேரமே கிடையாது முதல்ல தாயையும் குழந்தையையும் நல்லபடியா காப்பாத்துங்க அதுக்கப்புறமா நீங்க எங்க போய் புகார் தர சொல்லறீங்களோ அங்க போய் நான் புகார் தர்றேன் தயவு செஞ்சு வாங்க ஐயா என்று கதறினார் அந்தப் பெண்மணி.



உடனே சுதாவும் சார் ப்ளீஸ் சார் நான் வரும்போதே அந்தப் பொண்ணோட நிலைமை ரொம்ப க்ரிட்டிக்கலா இருந்தது... இங்கே வந்தும் கிட்டத்தட்ட பத்து நிமிஷத்துக்கு மேல ஆயிடுச்சு...நாம போறதுக்குள்ள என்ன ஆகப் போகுதுன்னு தெரியல சார்... கொஞ்சம் வாங்க…என்று அவரின் பங்கிற்கு கெஞ்ச ஆரம்பித்தார்.



இங்க பாருங்க சுதா நான் ட்ரிங்க்ஸ் பண்ணியிருக்கேன் இந்த சமயத்தில் நான் ட்ரீட்மென்ட் பண்ண கூடாது இது சட்டப்படி தப்பு…



ஆனா தர்ம படி தப்பு கிடையாது சார்...என்னதான் இப்போ நீங்க போதைல இருந்தாலும் வேலைன்னு வந்துட்டா கண்டிப்பா நீங்க தப்பு பண்ண மாட்டேங்கறீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு சார் ப்ளீஸ் சார் அந்த பொண்ணை காப்பாத்துங்க சார் என்றார்...



ம்ம்...இல்லல்ல சுதா... எனக்கு கைல கால்ல அடிபட்டு இருக்கு அதுவுமில்லாம இனிமே இந்த ஊர் மக்களுக்கு உதவி பண்ண கூடாதுனு முடிவுல இருக்கேன் தயவு செஞ்சு என் மனசை மாத்தாதீங்க இங்கிருந்து போயிடுங்க… யார் எப்படி போனா எனக்கென்ன…என் மனைவிக்கு யாராவது உதவி செஞ்சாங்களா...இல்லையே…
ஒருத்தர் காரை நிறுத்தி என் மனைவியை கூட்டிட்டு போய் ஹாஸ்பிடல் சேர்த்திருந்தா கூட அட்லிஸ்ட் என் குழந்தையை மட்டுமாவது என்னால காப்பாற்றி இருக்க முடியும்... எதுவும் இல்ல... என் அம்மா, அப்பா ,மனைவி ,குழந்தைனு எல்லாருமே போயாச்சு இனியும் நான் மத்தவங்களுக்காக சேவை செஞ்சி நல்ல பேர் வாங்கி என்ன ஆகப்போகுது ப்ளீஸ் இங்கிருந்து போங்க என்று வெளியே செல்லுங்கள் என்பது போல் கைகளை ஆட்டியபடி பேசினார்.


சார் நீங்க அப்படி சொல்ல கூடாது உங்க அம்மாவும் அப்பாவும் இருந்திருந்தா கண்டிப்பா இந்த மாதிரி சமயத்துல இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்க மாட்டாங்க சார் யாரோ ஒருத்தர் உங்களுக்கு உதவலன்னு இப்படி ஒட்டுமொத்தமாக இந்த ஊர் மக்கள் மேல கோபத்தைக் காட்டுவது ரொம்ப தப்பு சார்... உங்க அம்மா எத்தனையோ குழந்தைகள் இந்த உலகத்துக்கு வர்றதுக்காக உதவி பண்ணியிருக்காங்க …



உங்கப்பா எத்தனையோ பேர் உயிரை காப்பாற்றி இருக்காங்க ப்ளீஸ் அவங்களோட பிள்ளையான நீங்க இன்னைக்கி ரெண்டு உயிரை காப்பாற்றும் போது தான் அவங்களோட பிள்ளைனு சொல்லிக்கறதுலேயே உங்களுக்கு ஒரு பெருமை கிடைக்கும்... அவங்களுக்கும் உங்களை ஒரு மருத்துவரா வெள்ளை கோர்ட் போட வச்சி அழகு பார்த்ததுல
ஒரு அர்த்தம் கிடைக்கும்…
ப்ளீஸ் சார் வாங்க சார் உங்க கால்ல வேணாலும் விழுறேன் நீங்க ஒரு முறை அந்த பொண்னை பார்த்தீங்கன்னா இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டிங்க சார் என்று கெஞ்ச தொடங்கவும் அவரின் மனது மெல்ல மாறத்தொடங்கியது…


ம்ம்... என்னை குழப்பறீங்க சுதா... ஆனாலும் கர்ப்பிணி பொண்ணுன்னு கேட்கும்போது என்னால மனசை கல்லாக்கிட்டு இங்க நிக்கமுடியல... என் மனைவிதான் காரணமே இல்லாம என் கண்ணு முன்னாடி வர்றா... சரி வாங்க போகலாம்... ஆனா இதுதான் நான் மருத்துவத்துறையில் செய்கிற கடைசி பணியா இருக்கும் இதுக்கு அப்புறம் இந்த ஊர் மக்களுக்கோ... இல்ல நம்ம ஹாஸ்பிடலுக்கோ வர சொல்லி எதுக்காகவும் என் முன்னாடி வந்து நிற்க நிற்க கூடாது...என்றபடி மழையில் இறங்கி மருத்துவமனையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.


முன்னால் செல்லும் ராம்பிரசாத்தை பார்த்தபடி இருந்த பெண்கள் இருவருமே கைகூப்பி மேல்நோக்கி இறைவனுக்கு நன்றி கூறினார். பிறகு அவரின் பின்னால் ஓட தொடங்கினர் …


ராமின் வீடு இருக்கும் தெருவை தாண்டினால் அவரின் மருத்துவமனை...அதனால் மழையையும் பொருட்படுத்தாது நடக்க ஆரம்பித்து விட்டார்... என்னதான் மருத்துவம் பார்க்கக் கூடாது என அந்த ஊர் மக்களின் மீது கோபம் இருந்தாலும் உதவி என்று வரும்பொழுது அவரின் மருத்துவ தொழிலுக்கு துரோகம் செய்ய மனம் வரவில்லை…



குடை பிடித்தபடி வேகமாக ஓடி வந்த சுதா அவருக்கும் சேர்த்து குடையை பிடிக்க நான் ட்ரிங்க்ஸ் பண்ணி இருக்கேன் மழைல நடந்ததா கொஞ்சம் பெட்டாரா பீல் ஆகும் சோ ப்ளீஸ் தள்ளிப் போங்க என்று கூறியபடி உடைந்த காலுடன் கம்பீரமாக நடக்க ஆரம்பித்தார்.


 
Top