கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே-11

Akila vaikundam

Moderator
Staff member
11.


இப்பொழுது ஜானு பேசியதெல்லாம் பின்னுக்குச் செல்ல கேசவன் அவளை அடித்தது மட்டுமே பூதாகரமாக எழுந்திருந்தது.


தொலைச்சிடுவேன் இனி ஒரு முறை அவளை வெளியே போக சொல்லறது போல பேசினா என விரல் நீட்டி மனைவியை எச்சரித்தவன் லட்சுமியிடம் இருந்து பையனை வாங்கியபடி சென்றான்.


பின்னாலே சென்ற லட்சுமி மகனை பாதி வழியில் நிறுத்தி..என்னடா இது புது பழக்கம் ..எங்கிருந்து வந்தது…யாரை பாத்து கத்துகிட்ட…இதையாடா உனக்கு சொல்லி குடுத்து வளர்த்தினேன்…முதல்ல ஜானு கிட்ட மன்னிப்பு கேளுடா என்று அதட்டினார்.


ம்மா அவ என்ன பேசினான்னு கேட்டீங்கல்ல..
என் முன்னாடியே கௌசியை வெளிய போக சொல்லறா என்னை என்ன பண்ண சொல்றீங்க.


டேய் அறிகெட்டவனே ஒரு வீட்ல ஒன்னுக்கு ரெண்டு பொம்பளை இருந்தாலே இந்த மாதிரி பேச்சிக்கள் எழறது இயல்பு தான்.


அதுவும் நம்ம வீட்டில் மூன்று பேர் இருக்கிறோம் அப்படி இருக்கும்போது எங்க பேச்சுக்குள்ள உன்னை யாரு வரச் சொன்னது.


முதல்ல ஜானுவை சமாதானப்படுத்துற வழியை பாரு என்று சொல்லவும்..எதுவும் பேசாமல் குழந்தையுடன் அறைக்குள் சென்றான்.


ஜானுவோ கன்னத்தை ஒரு கையால் தாங்கியபடி கௌசியை தீப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள்.


கண்கள் குளம் கட்டியிருக்க அவமானத்தில் முகம் சிவந்திருந்தது.


அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்…இதை பெருசு படுத்தாம விட்டிடு என்று மருமகளை சமாதானப் படுத்தும் விதமாக பேச அவரை திருப்பு முறைத்த ஜானு..



வீட்டுக்குள்ள உங்க பொண்ணு கத்தலாம்… ஆனா நான் சத்தம் போட்டு பேசக்கூடாது.. அவளுக்கு தலைவலி வந்தா லீவு போட்டுட்டு எல்லாரையும் அதிகாரம் பண்ணுவா…ஆனா நான் தலைவலியோட வேலைக்கு போய்ட்டு வந்தாலும் அடங்கி போகனும் நல்லா இருக்கு உங்க நியாயம்…



இவ இங்க உக்காந்திருக்கறது போல நானும் என் அம்மா வீட்ல போய் இருக்கனும்னு நினைக்கறா போல எல்லாம் என் தலையெழுத்து இந்த குடும்பத்தில் வந்து மாட்டிக்கிட்டு முழிக்கிறேன் என்று கூறியபடி அங்கிருந்து நகர.



அம்மா நான் சாதாரணமா தான் சொன்னேன்..நிஜமாவே தலைவலிம்மா அதான்… தப்பாம்மா என்று கேட்கவும்.


யாருக்கு தாண்டி தலைவலி இல்ல உன்ன மாதிரி தான் அவளும் வேலைக்கு போயிட்டு வர்றா… நானும் காலையிலிருந்து ரெண்டு குட்டிகளையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பாத்துட்டு இருக்கேன் எல்லாருக்கும் தலைவலி இருக்குது.
நீ மட்டும் ஸ்பெஷல் கிடையாது.


ம்மா…நான் சாதரணமா தான சொன்னேன்..அண்ணி தான் மா பிரச்சனையா மாத்தினாங்க..


ஆமா…அவ தான் பிரச்சினை பண்ணினா..ஓத்துக்கறேன்..எதுக்காக அப்படி பண்ணினா…என கேள்வி எழுப்பியவர்.


பதிலையும் அவரே கொடுத்தார்.. அவளுக்கு நீ இங்க இருக்கறது சுத்தமா பிடிக்கல…எப்போடா நீ வாய் குடுப்பன்னு காத்திட்டு இருந்தா இன்னைக்கு நீ வாய் விடவும் புடிச்சி கிட்டா…


இப்படி எதுவும் ஆகிட கூடாதுன்னு தான் ஒவ்வொரு முறையும் நான் ஜானுகிட்ட இறங்கி போனது…இன்னைக்கு வாய்ப்பு கிடைக்கவும் முழுசா போட்டு உடைச்சிட்டா.


நீயும் பாத்துட்டு தானே இருக்க…உன் அண்ணனும் அண்ணியும் ஒரு நாளைக்கு எத்தனை முறை சண்டை போடுறாங்க என்னைக்காவது அவங்களுக்காக அவங்க சண்டை போடறாங்களா உனக்காக மட்டும் தான் சண்டை போடுறாங்க அதை புரிஞ்சுக்காம நீயா இன்னைக்கு வந்து மாட்டிகிட்ட என்று புலம்பியவரிடம்.


அவங்களுக்கு என்னை பிடிக்கலன்னு நான் பேசாம இருக்க முடியுமா…இது எனக்கும் தான வீடு..என்று ஆதங்கமாக கூறியவளிடம்.


இது உன் பொறந்த வீடு அவ்வளவு தான் முழு உரிமையும் அவளுக்கு தான் இருக்கு…இனி நீ எப்பவுமே அவ முன்னாடி வாய் திறக்காத..
ஏதாவது சொல்லனும்னாலும் நான் தனியா இருக்கும் போது என்கிட்ட மட்டும் சொல்லு..என்றவர் மேலும் வாய்க்குள்ளாக…


கடவுளே
பிரச்சனையை ஜானு சாதாரணமாக விட்டுட்டா பரவால்ல ..அவ அம்மாகிட்ட சொல்லி ஏதாவது பெருசா இழுத்து விட்டிடுவாளோன்னு பயமா இருக்குது.


நாளைக்கு அவ அம்மாவும், அப்பாவும் எனக்கு ஃபோன் பண்ணி ..
நீங்க நல்லா பாத்துப்பீங்க என்கிற நம்பிக்கைல தானே என் பொண்ணை உங்க கிட்ட ஓப்படைச்சிட்டு நாங்க என் பையனோட அமெரிக்காவில வந்து செட்டில் ஆனது…


இப்போ நாங்க பக்கத்துல இல்லனதும் எங்க பொண்ணை அடிச்சி கொடுமை படுத்தறீங்களான்னு கேட்டா அவங்களுக்கு என்ன பதில் சொல்றது..


அவங்க பொண்ணு சொன்னதை சொல்லுங்க…எப்படி என் பொண்ணை வீட்டை விட்டு வெளிய போன்னு சொல்லலாம்ன்னு நீங்களும் பதிலுக்கு கேளுங்க..


அதுக்கு…என் பொண்ணு வாய்ல தான பேசினா…உங்க பையனும் வாய்ல தான பதில் சொல்லனும் எதுக்காக கை நீட்டினானானு கேப்பாங்க என்ன பதில் சொல்லறதாம்.


விடுங்கம்மா…எதுக்கு தேவையில்லாத வாக்குவாதம்.. நான் இங்க இருக்கிறது அவங்களுக்கு பிடிக்கல அவ்வளவு தானே ..நாளைக்கே ஹாஸ்டல் பார்த்து போய்க்கிறேன்.


சரி நீ ஹாஸ்டல் போய்க்குவ.. குழந்தையை என்ன செய்வ..


அவளை ஏதாவது ஒரு க்ரீச்ல விட்டுப்பேன்.


ஆமா நீங்க ரெண்டு பேரும் யாருமே இல்லாத அனாதைக பாரு..அதனால நீ ஹாஸ்டல்லையும் அவ க்ரீச்ல இருக்குறதுக்கு..


எல்லாரும் இருந்தும் இப்போ நாங்க அப்படித்தானே இருக்கோம்.


நீ தான் அப்படி ஒதுங்கி இருக்கன்னு சொல்லு… என் பேத்தியை அப்படி சொல்லாத…அவளுக்கு அம்மாகாரியை தவிர எல்லா உறவும் திடமா இருக்கு.


அப்போ என்னை நல்ல அம்மா இல்லன்னு சொல்ல வர்றீங்களா..?


நீ நல்ல அம்மாவா ! ஒரு நல்ல அம்மா என்ன செய்வா தெரியுமா.. ?.அந்த குழந்தைக்கு நியாயமா கிடைக்க வேண்டிய எல்லா உரிமைகளையும் கொடுப்பா..நீ அப்படியா செய்ற.


அந்த குழந்தைக்கு இப்பவே அவ தகப்பன் பாசம் கிடைக்க விடாம செய்யற.. இது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா.


நீயும் காலையில அவளை விட்டுட்டு வேலைக்கு போயிடற…அதுவும் அப்பான்னா என்னன்னே தெரியாம வளர்ந்துட்டு இருக்கு இது ஒரு நல்ல தாய் பண்ற காரியமா..?.


என்ன பேசினாலும் முடிக்கும்போது அந்த ஆள் கிட்ட கொண்டு வந்து முடிக்கற..


பின்ன அவர் தான உன் கணவன்..அனுவோட அப்பா ..அப்போ பேச்சி அங்க தான வந்து நிக்கும்.


யாருமா என் குழந்தைக்கு அப்பா.. நான் மாசமா இருக்கும்போது எவ்வளவு கஷ்டப்பட்டனேன்… நீங்க கூட இருந்து பார்த்து கிட்டு தான் இருந்தீங்க..


என்னைக்காவது அந்த மனுஷன் ஒருமுறை என்னை வந்து பார்த்திருப்பாரா? சரி அதை விடுங்க அட்லீஸ்ட் ஒரு ஃபோன் பண்ணியாவது உடம்பு எப்படி இருக்குன்னு உங்க யார்கிட்டயாவது விசாரிச்சு இருப்பாரா..?


இதுக்கு அந்த மனுஷனுக்கு விஷயம் தெரியாம இருந்தா கூட பரவால்ல.. நான் மாசமா இருக்கிற விஷயம் தெரிந்த உடனே அவருக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டீங்க.


அப்படி இருந்தும் கல் மனசா அவர் வீட்ல தான உட்கார்ந்து இருந்தார்.


சரி நான் தான் ஏதோ ஒரு கோபத்துல அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன்.. என்னைக்காவது ஒரு நாள் வந்து என்னை சமாதானப் படுத்தறது போல.. நடந்தது நடந்து போச்சு ..நம்ம வீட்டுக்கு வான்னு ஒரு ஃபோன் பண்ணியாவது கூப்பிட்டு இருப்பாரா.


இல்ல என்னை பாக்க தான் வந்திருப்பாரா..


நம்ம அனு பொறந்தப்போ கூட யாருக்கோ குழந்தை பிறந்த மாதிரி என் குழந்தையை மட்டும் தூக்கி பாத்துட்டு என் மூஞ்ச கூட பாக்காம போனாரே அந்த மனுஷனையா அப்பான்னு சொல்லிக் கொடுத்து வளர்த்த சொல்ற.. அந்த மாதிரி அப்பாவோட பாசம் கிடைக்கறதுக்கு பதிலா கிடைக்காமலே அனு வளரட்டும்.


சரி நீ சொல்ற மாதிரியே வச்சுக்கலாம்.. அவர் உனக்கு நல்ல கணவனாவும் இல்ல.. குழந்தைக்கு நல்ல அப்பாவாவும் இல்லை… அந்த மாதிரி மனுஷனை எதுக்காக பிடித்து தொங்கிட்டு இருக்க அத்து விட்டுட்டு உன் வாழ்க்கையை பாக்க வேண்டியது தான…


இப்படி மதில் மேல் பூனையா நின்னுக்கிட்டு இருக்கிறதால யாருக்கு என்ன லாபம்.. உன்னால் அந்த மனுசனோட வாழ்க்கையும் கெட்டுப் போகுது ..அதுக்காகவாவது நீ ஒரு பக்கமா இறங்கலாம்ல.


ஒன்னு அந்த மனுஷனை அனுசரித்து வாழப்பழகு.. அப்படி இல்லையா அத்து விட்டுட்டு உனக்கான வாழ்க்கையை பாரு.


உன் பேச்சுல என் மேல இருக்கற அக்கறையை விட உன் மாப்பிள்ளை மேல இருக்கிற அக்கறை தான் அதிகமா தெரியுது.


இப்போ அவர் தனியா இருந்து கஷ்டப்படறாரு அதுதான் உன் பிரச்சனை .


உன் பொண்ணு அவரால இங்கே கஷ்டப்படுறது பெருசா தெரியல.. நல்லா இருக்குமா உன் பேச்சி..


இந்த வாழ்க்கையை நானா தேர்ந்தெடுக்கல… நீங்க எல்லாரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி என்னை தள்ளிவிட்டுங்க அதை மறந்துடாதீங்க.


அந்த மனுஷனை எந்த ஒரு காரணத்தை காட்டியும் சந்திக்கக் கூடாதுன்னு தான் இந்த நிமிஷம் வரைக்கும் மௌனமா இருக்கேன்.


மத்தபடி யாரோட வாழ்க்கையும் கெடுக்கணும் என்கிற எண்ணம் எனக்கு கிடையாது …


விவாகரத்துன்னா அவரை நேருக்கு நேரா சந்திக்க வேண்டியது இருக்குமோன்னு தான் பேசாம இருந்தேன்..ஆனா என்னோட விவாகரத்து தான் உங்களுக்கு நிம்மதி தரும்னா நாளைக்கே ஏற்பாடு பண்ணுங்க நான் கையெழுத்து போட்டு தர்றேன் ஆனா எந்த காரணம் காட்டியும் அவர் முன்னாடி வர மாட்டேன்..என்று கௌசி உறுதியாக கூறவும்.


இத்தனை நாள் இந்த காரணத்துக்காக தான் மௌனமா இருக்கிறேன்னு நீ வெளிப்படையாக சொல்லி இருந்தா இன்னைக்கு இந்த பிரச்சனை வந்திருக்காதுல்ல..அப்படி என்ன உனக்கு ஒரு வீம்பு..என லட்சுமி பொரிந்தார்.


அதான் இப்போ சொல்லிட்டேன்ல..


சொல்லி என்ன பிரயோஜனம்.. அண்ணன் தனியா இருக்கறான்னு தான் ஜானகி இந்த ஆட்டம் போட்டுட்டு இருந்தா.


இப்போ நீ முகத்துல அடிக்கறது போல கையெழுத்து போட்டு தர்றேன்ங்கற இனி என்ன பண்ணப் போறாளோ அதை நினைச்சா இப்பவே பயம் வருது.


பெருசா என்ன பண்ணிடுவாங்க… எப்படியும் அண்ணன் என்னை வீட்டை விட்டு வெளியே போக விட மாட்டாங்க.. அண்ணியும் கண்டிப்பா அவங்க அம்மாக்கு எல்லாம் ஃபோன் பண்ணி சொல்ல போறதில்லை.


வயசான காலத்துல பெத்தவங்க நிம்மதியா இருக்கணும்னு தான் எல்லா பொண்ணுங்களும் நினைப்பாங்க கண்டிப்பா அண்ணியும் அப்படித்தான் நினைப்பாங்க..


என்ன இன்னைக்கு அண்ணன் அடிச்சதை காரணம் காட்டி தனிக்குடித்தனம் போகனும்னு பிரச்சனை பண்ண வாய்ப்பிருக்கு என்று அப்போதைய நிலவரத்தை சொன்னாள்.


அதாண்டி எனக்கும் பயமா இருக்குது… அப்படி ஏதாவது பிரச்சனை பண்ணினா கேசவனோட நிம்மதி தான் பாழா போகும்‌.


பெரியவனும் இதே போல தான் கிளம்பினான்..இப்போ சின்னவனுக்கும் அதே பிரச்சினை..


அம்மா தங்கச்சிக்காக பேசுவானா இல்ல மனைவிக்காக பேசுவானா..?


பெரியவனை அனுப்பி வச்சது போல இவனும் தனியா இருக்கட்டும்னு அனுப்பி வச்சா… அப்புறமா நம்மளோட நிலைமை …அதை நினைச்சா இன்னும் கவலை ஜாஸ்தி ஆகுது..என்று லட்சுமி கலங்கினார்.


அப்படியெல்லாம் சின்ன அண்ணன் போக மாட்டாங்கம்மா…அப்படியே போனா கூட நான் உங்களை பாத்துக்க மாட்டேனா ..நானும் தானம்மா வேலைக்கு போறேன் கை நிறைய சம்பளம் வாங்கறேன் அப்புறமா ஏன் இவ்ளோ கவலை.


அடி போடி இவளே..
இப்போ நீ எங்களோட இருக்கறதுக்கே அக்கம் பக்கத்துல இருக்கறவங்க காது பட என்னென்னவோ பேசுறாங்க.. இனி அவனையும் தனிக்குடித்தனம் அனுப்பி வச்சிட்டு உன்னோட நான் இருந்தேன்னா முகத்துக்கு நேராவே கேட்க ஆரம்பிச்சுடுவாங்க.


பிள்ளைங்க ரெண்டு பேரும் தனித்தனம் போயிட்டதால பொண்ணு சம்பாத்தியம் வேணும்னு புருஷன் வீட்டுக்கு அனுப்பாம வச்சிருக்கியா லட்சுமின்னு எனக்கு தேவை பாரு.


என்ன பேசினாலும் மடக்கினா என்ன சொல்லறது.


நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. விவாகரத்துக்கு கையெழுத்து போடுறேன்னு சொன்ன விஷயத்தை என்கிட்ட சொன்ன மாதிரி உன் அண்ணன்,அண்ணி கிட்ட உளறி வச்சிடாதே.


அவ உடனே இதுதான் சாக்குன்னு மறுபடியும் எதாவது பஞ்சாயத்தை ஆரம்பிப்பா…


நான் இந்த விஷயத்தை மெதுவா அப்பாகிட்ட சொல்லி மாப்பிள்ளை மனசுல என்ன இருக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்க சொல்றேன்.


ஒருவேளை அவர் விவாகரத்துக்கு சம்மதிக்கலன்னா என்ன செய்யறது..என்று யோசனையாக மகளை நோக்கியவர்.


அருகில் வந்து
இங்க பாரு கௌசல்யா அம்மாக்காக நீ ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணனும்.


ஒருவேளை மாப்பிள்ளை விவாகரத்துக்கு சம்மதிக்காம உன் கூட சேர்ந்து வாழ ஆசைப்படறேன்னு சொன்னா அம்மாக்காக கொஞ்சம் அதை பத்தி யோசிக்கணுமா…


வயசான காலத்துல எங்களை தனியா தவிக்க விட்டிடாத.. அவர் சேர்ந்து வாழ விரும்பி நீ ஒத்துக்கலன்னா கண்டிப்பா ஜானு நம்மளோட இருக்க மாட்டா அவளுக்கு அண்ணன் மேல அவ்ளோ பாசம்..


இப்பவும் இங்க நடக்கறதை அப்பப்போ அவருக்கு அவ தான் சொல்லிட்டு இருக்கறா.. அதான் மாப்பிள்ளை உன் விஷயத்துல தலையிடாம இருக்கறதா நினைக்கறேன்.


தெரியும் மா…அண்ணியும் என் கணவரும் ரொம்ப க்ளோஸ்..டெய்லியும் பேசிப்பாங்க…அதுக்காக எல்லாம் என்னோட சேர்ந்து வாழணும்னு ஆசைப்பட மாட்டார்.


காலத்துக்கும் அவருக்கு கீழே நான் இருக்கணும்… நான் சந்தோஷமா இருக்க கூடாது அதுதான் அவருடைய எண்ணம் .


உண்மையிலேயே அவருக்கு என் மேல அக்கறை இருந்தா, சேர்ந்து வாழணும்னு நினைச்சிருந்தா எப்பவோ என்னை தேடி வந்திருப்பார்.


சும்மா உங்களை மிரட்டி பார்க்கிறதுக்காகவாவது விவாகரத்து தரேன்னு பேச்சை ஆரம்பிச்சிருப்பாரு…


இவ்ளோ நாள் மௌனமா இருக்காருன்னா அவரோட ஒரே ஒரு ஆசை நான் என்னைக்குமே சிரிக்க கூடாது அது தான்.


அதனால் தேவை இல்லாம நீங்க கண்டதைப் போட்டு குழப்பிக்காம உங்க வேலைய பாருங்கம்மா என்றபடி நகர்ந்தாள்.


அனு தூங்கிட்டா பெட்ல போட்டுட்டு சாப்பிட வா என்ற தாயிடம் ம்ம்…என்று தலையசைத்தவள்..


அண்ணனும்,அண்ணியும் என்று இழுக்க..


அவங்கள பத்தி எல்லாம் நீ யோசிக்காத கௌசி.. உன் அண்ணிக்கு கோவம் வந்தா என் சமையலை தான் சாப்பிட மாட்டா… ஆனால் கடையில் வாங்கி சாப்பிட்டுப்பா.. இன்னும் பத்து நிமிஷத்துல பாரேன் காலிங் பெல் அடிச்சிட்டு எவனாவது ஒருத்தன் சாப்பாட்டு பையோட நிற்பான் என்று சொல்லிவிட்டு சென்றார்.


அதே நேரம் கேசவனின் அறைக்குள் மகனை படுக்கையில் கிடத்தி அருகில் அவனும் படுத்து குழந்தையை தூங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

மனைவியை பார்க்க பாவமாக இருந்தது.. அழுத கண்களும், வீங்கிய கன்னமும் அவனின் கோபத்தை பறைசாற்றியது.


திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஒரு முறை கூட அவளை கையோங்கியது கிடையாது எவ்வளவோ சண்டைகள் வந்திருக்கிறது ஆனாலும் நிதானத்தை இழந்ததில்லை இன்று எல்லை மீறிவிட்டான்.


இப்பொழுது அவளிடம் பேசவும் பயந்தான்.. குழந்தை வேறு உறங்க வில்லை.. இவன் பேச ஆரம்பித்து அவள் பிடித்துக் கொண்டாள் குழந்தை பயந்து விடுவான்..அதனால் மகன் உறங்கிய பிறகு மனைவியை சமாதானப்படுத்தலாம் என்ற எண்ணத்துடன் மகனின் மீது ஒரு கண்ணையும் அவ்வப்போது மனைவியையும் கவனித்துக் கொண்டபடி படுக்கையில் கிடக்க.


கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து தரையை வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜானு திடீரென அவளின் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தாள்.


யாரிடம் பேசப் போகிறாள் என்ற கேள்வியுடன் மனைவியை கேசவன் பார்த்துக் கொண்டிருக்க அவள் பேசுவது யாரிடம் என தெரிந்ததும் ஹேய்..என்ன செய்ற என்று பதறி எழ…


அருகில் படுத்திருந்த மகன் அவனது பிஞ்சு கைகளால் தந்தையின் கைகளை பிடித்து அப்பா பக்கத்துல படுங்க எழுந்து போகாதீங்க என்று மழலை மொழியில் கூறவும் மகனின் பேச்சை தட்ட முடியாமல் அங்கிருந்த படியே மனைவி பேசுவதை கலக்கத்துடன் கவனிக்க ஆரம்பித்தான்.
 
Last edited:
Top