கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே -15

Akila vaikundam

Moderator
Staff member
15 .


இப்போ உனக்கு திருப்தி தானே என்று கேசவன் மனைவியை முறைப்படி கேள்வி கேட்கவும் அவள் நிமிர்த்து கூட பார்க்கவில்லை.


மேலும் கோபம் கொண்டவன் அவளருகில் போய் கைகளைப் பிடித்து தூக்க மிகவும் சோர்வான குரலில் ம்ப்ச் என் கையை விடுங்க என்று தட்டிவிட்டபடி மீண்டும் அமர போனாள்.


உன்ன விடறதா..? முதல்ல இந்த வீட்டிலிருந்து உன்னை அடிச்சு விரட்டிட்டு தான் அடுத்த வேலை..
என்ற படி அமரப்போனவளை தூக்கிவிட.


கௌசியை சமாதானம் செய்து கொண்டிருந்த லட்சுமி இதை கவனித்து விட்டு வேகமாக ஓடி வந்து கேசவனின் கைகளை கோபமாக தட்டி விட்டார்.


உனக்கு என்ன அறிவு மழுங்கி போச்சா..இவளை ஒரு அடி அடிச்சதற்கே அவ அண்ணங்காரன் சாமி ஆடிட்டு போயிருக்கான்..


இப்போ மறுபடியும் உடம்பு சரியில்லாதவ கிட்ட உன் வீரத்தை காட்டினா என்ன பண்ணுவான்னு தெரியும்ல்ல என்று சிறு கோபத்துடன் கேட்டார்.


என்ன பண்ணிடுவான்..அவனால ஒன்னும் பண்ண முடியாது.. என்னை என்ன செஞ்சாலும் பாதிக்கப்பட போறது அவன் தங்கச்சி தான் என்று கூறவும்.


அதையே தாண்டா நானும் சொல்றேன் இவளை நீ என்ன செஞ்சாலும் பாதிக்கப்பட போறது உன் தங்கச்சி தான் ஞாபகத்துல வச்சுக்கோ என்று சொல்லவும் ஜானுவை விட்டவன் தங்கையை சமாதானப்படுத்துவதற்காக சென்றான்.


ஆனால் அவள் சமாதானத்திற்கு வந்த அண்ணனின் முகத்தை பார்க்க விரும்பாதது போல தலைகுனிந்து மௌனக் கண்ணீர் வடித்தாள்.


குட்டிம்மா…சாரி என்னால தான் உனக்கு…என மேற்கொண்டு பேச முடியாமல் நா தழுதழுக்க..


எதுவும் என்கிட்ட பேசாத.. உனக்கும் அண்ணிக்கும் சண்டைனா இடைல நான் என்ன பண்ணினேன்..உங்க ஈகோக்கு இப்போ நான் பலிகடா ஆகிருக்கேன்.

நேத்தே அண்ணிகிட்ட
ஒரு சாரி கேட்டிருந்தா பிரச்சனை இங்கேயே முடிச்சிருக்கும்.. உன் ஈகோ எங்க முன்னாடி கேக்க விடல..


சரி உன் ரூம்குள்ள போயாவது கேட்டு இருக்கலாம்ல்ல.. அதை விடு அவர் வந்தார்ல்ல அவர் முன்னாடியாவது கொஞ்சம் தன்மையா பேசி இருக்கலாம்ல்ல.


அவர் கோபத்தோட அளவை தெரிஞ்சுக்கிட்டே நீயும் கூட கூட பேசற.. இப்போ…அண்ணியை நீ ஒரு அடி தான் அடிச்ச… ஆனா அவரு என்னை.. என்று முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்.


அதான் சாரி கேக்கறேனேடா..


உன் சாரியை தூக்கி குப்பைத்தொட்டியில போடு.. ம்மா..நான் ஆஃபீஸ் போறேன் என்றவள் கைப்பையை தூக்கியபடி வேகமாக வாசலை விட்டு இறங்கிச் சென்றாள்.


ம்மா ‌.அவ சாப்பிடல ..வண்டியும் எடுத்துக்காம நடந்து போறா நீங்க பாத்துட்டு இருக்கீங்க..


என்ன என்னடா பண்ண சொல்ற.. அவ என்ன புதுசாவா பண்ணிக்கிட்டு இருக்கா..


யாரு மேல கோவம் இருந்தாலும் சாப்பாட்டு மேல தான் காட்டுவா..


இதோ குழந்தைக ரெண்டும் முழிச்சி ரொம்ப நேரமா அழுதுகிட்டு கெடக்குது…நான் அவர்களை பார்க்க போறதா..? இல்லை உங்க பஞ்சாயத்தை பாக்கறதா சொல்லு.


உன் அப்பா வீட்ல என்ன வேணாலும் நடக்கட்டும் எனக்கென்னன்னு விடிஞ்சதும் வேலைக்கு கிளம்பிடறாரு..


நான் தான் உங்களுக்குள்ள மாட்டிகிட்டு முழிக்க வேண்டியிருக்கு என்றபடி குழந்தைகளை தேடிச் சென்றார்.


கேசவனோ மனைவியை முறைத்தபடியே அறைக்குள் செல்ல பின்னாலே தயங்கியபடி ஜானுவும் சென்றாள்.


என்னங்க…என்னங்க..


***


நான் அண்ணனை வர தான் சொன்னேன்…உங்க கிட்ட பேசுவாருன்னு நினைச்சேன்…இப்படி கௌசியை போட்டு அடிப்பாருன்னு எனக்கு தெரியாது.


***


என்னை நம்புங்க ‌.. நான் எதையும் திட்டம் போட்டெல்லாம் செய்யல..


ஆமா நீ திட்டம் போட்டு எதுவுமே செய்யல எல்லாம் தானா தான் நடந்தது உன் அண்ணன் கூட இன்னைக்கு எதார்த்தமா தான் நம்ம வீட்டுக்கு வந்தாரு..
நீயும் அவர்கிட்ட எதார்த்தமா தான் இல்லாததை எல்லாம் இட்டுகட்டி சொன்ன…அதுக்கப்புறம் இங்க நடந்தது எல்லாமே எதார்த்தமா தான் நடந்தது.


ஐயோ நேத்து இங்க நடந்த சண்டையை ஏன் சொன்னேன்னா அதை காரணம் வெச்சாவது கௌசியை அவரோட கூட்டிட்டு போவாருன்னு நினைச்சேன்.


தயவு செஞ்சு பேசாத ஜானு நான் உன் மேல பயங்கரமான கோபத்தில இருக்கேன்..உடம்பு முடியாம இருக்கற உன்னை மறுபடியும் அடிச்சிட போறேன்…ஆமா கௌசி இங்க இருக்கிறதால உனக்கு என்ன பிரச்சனை.


அவளே என் லைஃப்பை நான் பார்த்துக்குறேன்னு பேசாம இருக்கா நீ எதுக்காக அவளோட வாழ்க்கைக் குள்ள போற .


உன் அண்ணன் இவ்வளவு நாளா நல்ல புருஷனா இல்லன்னு மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன்.


இன்னைக்கு தான் தெரியுது அவன் ஒரு நாகரிகம் இல்லாத மனுஷன்ன்னு.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நம்மளோட பெட்ரூமுக்குள்ள அவன் பாட்டுக்கு வந்துட்டு போறான்.


அதோட விட்டானா..?அம்மா இருக்காங்க, குழந்தைக்கு ரெண்டும் உள்ள தூங்கிட்டு இருக்கு …கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம காட்டான் மாதிரி நடந்துக்கிறான்.


நல்ல வேளை என் தங்கச்சி அவனோட குடும்பம் நடத்தாம இங்க கிளம்பி வந்தா.. இல்லன்னா இந்நேரம் அவளை கொன்னு புதைச்சிருப்பான்…காட்டுப்பய…இவனெல்லாம் என்ன படிச்சானோ..இதுல பிஸினெஸ் மேன்னு வேற சொல்லிட்டு திரியறான் என்று திட்டித் தீர்த்தவன்..


பிறகு நல்லா கேட்டுக்கோ ஜானு..இனி உன் அண்ணனா விரும்பி என் தங்கச்சியை கூப்பிட்டா கூட நான் அவன் பின்னாடி அனுப்ப மாட்டேன்.


அவனுக்கு பொண்டாட்டியா வாழறதை விட என் வீட்டுல தங்கச்சியா வாழட்டும் ..அவளுக்கு நிம்மதியாவது மிச்சம் ஆகும்..என்றவனிடம்.


ஆதங்கமாக ஜானுவும் உங்ககிட்ட இப்போ பேச முடியாது ..கிளம்பி போங்க.. நான் பேசாம படுக்கறேன்.



தாராளமா படுத்துக்கோ…எல்லாரையும் அழவிட்டுட்டு நீ மட்டும் எதை பத்தியும் கவலை படாம நிம்மதியா படுத்து தூங்கு..என்ற படி அவனும் லேப்டாப் பேக்கை தூக்கிய படி கிளம்பிவிட.


ஜானுவிற்கு காய்ச்சல் மீண்டும் அதிகரிப்பது போல் இருந்தது.


நேற்றைய இரவு அவளது அண்ணனிடம் கூறியதற்கான முக்கிய காரணம் கௌசல்யா இங்கு இருப்பதால்தான் தங்கையின் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது எனப் புரிந்து அழைத்துச் செல்வான் என நினைத்தாள்.


ஆனால் அவன் உடனே வராததால் ஏமாற்றம் அடைந்தவள் காலையில் அவன் வரவும் காய்ச்சலின் தாக்கத்தில் ஏதேதோ உளறி விட்டாள்..


இனி கௌசல்யாவை சுலபத்தில் அண்ணனுடம் சேர்த்து வைப்பது முடியாத காரியம் என்பது தெளிவாக தெரியவும் மனதளவில் மிகவும் சோர்ந்தாள்.


வயிறு வேறு பசியில் கூப்பாடு போட. சரி ..நடந்த எதையும் மாற்ற முடியாது அதனால் எதையாவதை சாப்பிட்டு உடலையாவது தெம்பாக வைத்துக் கொள்ளலாம் என நினைத்தபடி வெளியே வரவும்‌.


குழந்தைகள் இருவரையும் டைனிங் டேபிளில் அமர வைத்த லட்சுமி உணவை ஊட்டிக் கொண்டிருந்தார்.


ஜானு டைனிங் டேபிளை நோக்கி வரவும் அவளை கண்டு கொள்ளாமல் நிஷாத்தை டேபிளிலேயே அமர வைத்துவிட்டு அனுவை மட்டும் இடுப்பில் வைத்துக் கொண்டு உணவு கிண்ணத்தை எடுத்தபடி வெளியே சென்றார்.


ஜானுவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது .


மத்த நாளில் மாமியார் இதுபோல் செய்திருந்தால் .. கோபத்தில் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அதை பெரிது படுத்திருக்க மாட்டாள்.


ஆனால் இன்று அவளுக்கு உடல் நலமில்லை.. இந்த சமயத்தில் உன் பையனை நீயே பார்த்துக்கோ என்பது போல மகனை விட்டுச் செல்வது எந்த வகையில் நியாயம் என கோபமும் கொண்டாள்.


பேரனோ பாட்டி விட்டுச் செல்லவும் சினுங்கிய படியே டைனிங் டேபிளில் இருந்து இறங்க முயற்சித்தான்.


மௌனமாக மகனை டேபிளில் இருந்து இறக்கி விட்ட ஜானு அவன் பாட்டியிடம் செல்லும் வரை எட்டிப் பார்த்தாள்‌


மகன் பாட்டியின் புடவை முந்தியை பிடித்து இழக்கவும் திரும்பிப் பார்த்தவர் எதுவுமே பேசாமல் பேரனை படிக்கட்டில் அமர வைத்து அனுவுடன் அவரும் அங்கேயே அமர்ந்து இரு குழந்தைகளுக்கும் உணவை ஊட்டி விட ஆரம்பித்தார் .


அதை பார்த்து சற்று நிம்மதியுற்ற ஜானு ஒரு தட்டில் இரு இட்லிகளை எடுத்து வைத்து உண்டாள்.


மருமகள் சாப்பிடுவதை வாசப்படியில் இருந்தே எட்டிப் பார்த்த லட்சுமி குழந்தைகளை அங்கேயே உட்கார வைத்துவிட்டு வேகமாக சமையல் கட்டத்திற்கு சென்றவர் அங்கிருந்த சிறிய ரக பாத்திரத்தை தூக்கி வந்து டேபிளில் வைத்து விட்டு நகர்ந்தார்.


என்ன என்று பாத்திரத்தின் முடியை திறந்து பார்த்த ஜானகியின் கண்கள் நொடியில் குளம் கட்டியது.


குழைவான சாதத்தில் சுட சுட மிளகு ரசத்தை அதிகளவில் உற்றி அதை நன்றாக மசித்து அவள் உண்பதற்கு ஏதுவாக ஒரு ஸ்பூனையும் அதற்குள் வைத்திருந்தார்.


தாய் இருந்திருந்தால் கூட அவளின் உடல்நலம் தெரிந்து இப்படி சேவை செய்வாரோ என்னவோ என்று எண்ணாமல் இருக்க தோன்றவில்லை.


சாப்பிட்டுக் கொண்டிருந்த இட்லியை அப்படியே வைத்துவிட்டு ரச சாதத்தை கையில் எடுத்துக்கொண்டு மாமியாரின் அருகில் சென்றாள்.



அவர் வெளிபக்க படிக்கட்டில் அமர்ந்திருக்க ஜானு உள்பக்கமாக அமர்ந்து கதவில் சாய்ந்து கொண்டாள்.



அத்தை என்னை மன்னிச்சிடுங்க..நேத்து நடந்த பிரச்சனையை நான் ரொம்பவே பெருசு படுத்திட்டேன்..


எனக்கும் கௌசிக்கும் ஒத்து போகல அப்படிங்கிறது போல என் அண்ணன் நம்பத் தொடங்கினா அவளை இங்கிருந்து சீக்கிரமா அழைச்சிட்டு போயிடுவார்ன்னு தான் எப்பவுமே நான் கௌசி கிட்ட கொஞ்சம் கோபத்தை காட்டுவேன்.


அப்படித்தான் நேத்தும் என் அண்ணனுக்கு போன் பண்ணி சொன்னேன்…


கௌசியால தங்கச்சி குடும்பத்துல சண்டை வருதுன்னு புரிஞ்சி..உடனே அவகிட்ட சமாதானம் பேசுவாருன்னு நினைச்சேன்.. மத்தபடி கெட்ட எண்ணத்துல நான் அவருக்கு போன் பண்ணல..என்ற ஜானுவிடம்.


நீ சொல்றதை கேட்கும் போது நல்லா தான் இருக்கு அதே மாதிரி நடந்திருந்தாலும் நல்லா தான் இருந்திருக்கும்.


ஆனா காலைல உன் அண்ணன் வந்தப்போ நீ அந்த மாதிரி நினைச்சு பேசினதா எனக்கு தெரியல..


என்னதான் பூட்டின அறைக்குள்ள நீ உன் அண்ணன் கிட்ட பேசினாலும் எங்க காதிலேயும் கொஞ்சம் விழுந்தது .


மாமியாரும், நாத்தனார் இனி மதிக்க மாட்டாங்க ..என் மேல பயம் இருக்காது…என் பையன் நல்லவனா வளர மாட்டான்… அப்படி இப்படின்னு எதையோ சொல்லிட்டு இருந்தியே..


அந்த வார்த்தைகள் எல்லாம் நீ சொன்னியே அது கூட சேர்ந்ததா என்ன ..?என்று நக்கலாக கேட்டபடி குழந்தைகளுக்கு ஊட்டுவதிலேயே குறியாக இருந்தார் லட்சுமி.


அதிர்ச்சியடைந்த ஜானு…அத்தை நீங்க என்னை தப்பா புரிஞ்சிகிட்டீங்க…கௌசி கிட்ட அவங்க அண்ணன் ரொம்ப பிரியமா இருக்கிறதை பார்த்தவுடன் எனக்கு ஒரு நப்பாசை ‌.
எனக்கு ஓரு பிரச்சனைனு சொன்னா உடனே என் அண்ணன் ஓடி வருவான்ல்ல…அதான் ஃபோன் பண்ணி கூப்பிட்டு பார்த்தேன்.


நேத்து நான் கூப்பிட்ட உடனே அண்ணன் வந்திருந்தாங்கன்னா கண்டிப்பா நான் கௌசியை கூட்டிட்டு போறதை பத்தி தான் பேசியிருப்பேன்.


ஆனா அண்ணா வராததால் ரொம்ப ஏமாற்றமா போயிடுச்சு…நைட் ஃபுல்லா அழுததுல காலைல உடம்பும் முடியல…எனக்கு யாருமே இல்லையோன்னு மனசு வெறுமை ஆயிடுச்சி..


அதான் அண்ணனை பாத்ததும் என்ன பேசறோம்னு தெரியாம வாய்ல வந்ததையெல்லாம் பேசிட்டேன்.. ஆனா சத்தியமா வீட்டுக்குள்ள இவ்வளவு பெரிய சண்டை வரும்னு நான் எதிர்பார்க்கல..


இனிமே கண்டிப்பா என்னால இந்த வீட்டுக்குள்ள பிரச்சனை வராது… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா என் அண்ணன் மனசை மாத்தி கௌசல்யாவை இங்கிருந்து கூட்டிட்டு போக வைக்கறேன்..


இன்னிக்கு அண்ணன் இங்க நடந்து கிட்டதையோ…நான் பேசினதையோ மனசுல வச்சுக்காதீங்க..


அண்ணனுக்கு நம்ம கௌசியை ரொம்ப பிடிக்கும் ..அவர் ரொம்ப ஆசை பட்ட பொண்ணு…அப்படிப்பட்டவளை பிரிஞ்சு இருக்கறது அவருக்கு எவ்ளோ வேதனையை குடுக்கும்…அதனால தான் அவங்களை சேர்த்து வைக்க நான் அப்பப்போ பிரச்சினை பண்ணறது.


ஒருவேளை இங்க நான் கௌசல்யாவுக்கு பிரச்சனை கொடுத்தா அவளே கூட மனசு மாறி என் அண்ணன தேடி போகலாம்ல்ல என்றவள்..கண்களை துடைத்துக் கொண்டு..
என்னை புரிஞ்சிக்கோங்க அத்தை என்றாள்.


ம்ம்…இனி நீ இது மாதிரி எந்த முயற்சியும் செய்ய வேணாம்…நானும் இதுவரைக்கும் நீ எங்களை பேசினது…நேத்து நம்ம வீட்டுல நடந்த பிரச்சனை அதால இன்னிக்கு காலையில நடந்த அசம்பாவிதம் எல்லாத்தையும் மொத்தமா மறந்துடறேன்..


தேங்க்ஸ் அத்தை…என்று சந்தோஷம் கொண்டவளிடன்.


நான் இன்னும் முழுசா பேசி முடிக்கல ஜானு…பேசி முடித்ததும் மொத்தமா சந்தோஷ பட்டுக்கோ..


இனி உன் அண்ணனே மனசு மாறி வந்தாலும் கூட இனி நான் என் பொண்ணை அங்க அனுப்ப மாட்டேன்.என் கண்ணு முன்னாடியே என் பொண்ணை எப்படி போட்டு அடிக்கறான்…நாங்க இல்லன்னா என்னென்ன பண்ணுவான்…பாவம் ஒரு வருஷம் என் பொண்ணு அவனோட இருந்து என்னென்ன கஷ்டங்களை அனுபவிச்சாளோ…


இவ்வளவு நாள் என் பொண்ணுக்கு உன் அண்ணன் கிட்ட இருந்து விவாகரத்தாவது வாங்கி அவளுக்கு வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன்..


ஆனா இனிமே உன் அண்ணன் என் பொண்ணுக்கு விவாகரத்து கொடுக்கலனா கூட பரவால்ல…அவ வாழாவெட்டியா கடைசி வரைக்கும் இந்த வீட்ல என் பொண்ணாவே வாழ்ந்துட்டு போகட்டும்..


எக்காரணம் கொண்டும் உன் அண்ணன் மாதிரி ஒரு கொடுமைகாரனோட வாழறதை என் மனசு ஏற்காது.


விவாகரத்துக்கு கூட அவன் முன்னாடி இனிமே நாங்க போய் நிக்க போறது இல்ல.


இவ்ளோ நாள் எனக்கு ஒரு பொண்ணு கிடையாது.. மூணு பொண்ணுன்னு நினைச்சேன்…அதான் உன்னை, மஞ்சு, கௌசல்யான்னு மூணு பேரையும் ஒரே மாதிரி பாத்துட்டு இருந்தேன்.


ஆனா இனிமே அப்படி இல்ல…எனக்கு ஒரு பொண்ணு, ரெண்டு மருமகள்..


ஒரு மாமியார் மருமக கிட்ட எப்படி நடந்துக்கனுமோ அது போலவே நானும் நடத்துகறேன்…


எங்கிட்ட மாமியார் என்கிறதை தவிர வேற எதையும் எதிர்பார்க்காத என்றவர் .


குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி முடிச்சிட்டேன்..அனுவை நான் பார்த்துக்கறேன்…


கொஞ்ச நேரம் மட்டும் நிஷாந்த்தை நீ பாத்துக்கோ… உடம்பு முடியலன்னா உன் புருஷனுக்கு ஃபோன் பண்ணி வீட்டுக்கு வர சொல்லு …


என்னால குழந்தைகளை மட்டும் தான் பாக்க முடியும் என்றபடி அனுவை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார்.


ஜானகிக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்து விட்டது… கணவனும் சரி, மாமியாரும் சரி , இனிமேல் கௌசி,ஹரி தம்பதியினரை சேர்ந்து வாழ விடப்போறதில்லை.


ஒருவர் மனம் மாறினாலும் மற்றொருவர் கண்டிப்பாக மாறவிட மாட்டார்கள்.. அப்படியே மாறினாலும் கௌசியின் மனதை மாற்றுவது அதைவிட கடினம்.


இனி கடவுளே நினைத்தாலும் கூட அண்ணனின் வாழ்க்கையில் வசந்தம் வீசுவது கேள்விக் குறியே..


எல்லாம் கைமீறி போய்விட்டது..இனி பழைய படி மாமியார்,நாத்தனாரோடு தன்னால் ஓன்றி வாழ முடியுமா..?.


கணவனின் அன்பு பழைய படி தனக்கு கிடைக்குமா..?என பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தது.


தன்னுடைய அவசர புத்தியால், அறிவு கெட்ட தனத்தால் தெளிந்த நீரோடை போல் போய்க் கொண்டிருந்த தன்னுடைய வாழ்க்கையில் தானே கல் எரிந்து விட்டோமே என்று நினைத்தவள் மீண்டும் கண் கலங்க ஆரம்பித்தாள்.
 
Last edited:
Top