கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே.7

Akila vaikundam

Moderator
Staff member
7.


கௌசி செல்லும் ஹரியை பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க விக்கியோ மீண்டும் இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்தான்.பிறகு தோழியிடம்
கௌசி வண்டில ஏறு டைம் ஆச்சு நாம போகலாம்…


காதில் போட்டுக் கொள்ளாதவள்…அப்போல இருந்து அவர்தான் பின்னாடி ஹாரன் கொடுத்துக்கிட்டே வந்திருக்காரு விக்கி என்று பயந்த தோணியில் கூறினாள்.


ஏன் கௌசி நீ கவனிக்கலையா… நீ கவனித்திருந்தா அவர் அப்பவே கிராஸ் பண்ணி போய் இருந்திருப்பார்ல்ல …மனுஷன் மார்க்கெட்டுக்கு வந்திருக்கற புது மாடல் காரை ஒட்டிட்டு வந்திருக்காரு…நீ கவனிக்கனும்னு தான் இவ்ளோ தூரம் ஃபாலோ பண்ணிருக்காரு…


அப்படி ஃபாலோ பண்ணிட்டு வர்ற ஆள் எல்லாம் கிடையாது விக்கி. இந்த பக்கம் ஏதாவது வேலையா வந்திருப்பாரு… தப்பா பேசாத… என்று சட்டென்று கோபத்தைக் காட்டியவள்…



கார் புதுசு தான்…அதான் என்னால கண்டுபிடிக்க முடியல.. எப்பவும் ப்ளூ கலர் பிடிக்கும்… இந்த தடவை மெருன் கலர் வாங்கியிருக்காரு…என்றவள்.


சரி விக்கி நான் வீட்டுக்கு போறேன்…நீ பார்ட்டிக்கு போ…என்றாள்.


சட்டென கோபம் கொண்டவன் என்ன விளையாடறீயா…

உனக்காகத்தான் சாயங்காலம் ஐந்து மணியிலிருந்து காத்துட்டு இருக்கேன்…இதோ இப்போ கூட இவ்ளோ தூரம் வந்தாச்சி இன்னும் கொஞ்ச தூரம் தான் போகனும்…இப்போ வரமாட்டேங்கற…முதல்ல வண்டியில ஏறு…


புரிஞ்சுக்கோ விக்கி அவர் வேற என்ன பார்த்துட்டு போறாரு இப்போ நான் உடனே வீட்டுக்குப் போகலன்னா வேற மாதிரி பிரச்சினை வரும் …நான் வரல நீ கெளம்பு.


என்ன பிரச்சனை வரும் மொதல்ல அதை தெளிவா சொல்லு… இப்போ நீ என்னோட வர்றது உன் அம்மாக்கு தெரியும்ல… அப்புறம் ஏன் இவ்வளவு பயம் .


பார்ட்டிக்கு உன்னை நான் தான் கூட்டிட்டு போகிறேன் பார்ட்டி முடிஞ்சதும் நானே உன் வீட்டுல விடவும் போறேன்…


வேணும்னா உன் அண்ணன், அம்மா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு போறேன்…போதுமா…வா கௌசி டைம் ஆச்சு எல்லாரும் நமக்காக காத்திருப்பாங்க…என கிட்டத்தட்ட கெஞ்ச துவங்கினான்.


வரலைன்னு ஒரு தடவை சொன்னா கேக்க மாட்டியா ஏன் இப்படி குழந்தை மாதிரி புரிஞ்சுக்காம அடம் பண்ற… நான் வீட்டுக்கு போறேன்… நீ கிளம்பு… தயவுசெஞ்சு என்னை ரோட்டுல கத்த வைக்காத என பற்களைக் கடித்தபடி பேசினாள்.


சரி நான் போறேன்…நீ எப்படி வீட்டுக்கு போவ…

கால் டாக்ஸி, இல்ல பஸ், ஆட்டோ ஏதாவது ஒன்னு… நான் மேனேஜ் பண்ணிப்பேன் நீ கெளம்பு..


நல்லாயிருக்கு கௌசி…உன்னை இந்த மாதிரி ரெண்டும் கெட்டான் இடத்தில இறக்கி விட்டுட்டு போற அளவுக்கு என்னை ஈரம் இல்லாதவன்னு. நினைச்சியா…ரெண்டு பேரும் சேர்ந்து போறதா முடிவு செஞ்சோம் அதே மாதிரிதான் இப்போ அங்க போகலைன்னு ரெண்டு பேரும் சேர்ந்தே முடிவு செய்யலாம்.



இப்போ நீ பார்ட்டிக்கு வர்றதா சொன்னாலும் சந்தோஷமா உன்னை கூட்டிட்டு போறேன்… இல்ல வேணாம் வீட்டுக்கு போலாம்னு சொன்னாலும் தாராளமா வீட்டுக்கு போகலாம்… எனக்கு காலேஜ் பிரண்ட்ஸ்சை பார்க்கணும்ங்கற ஆசையை விட உன்னோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம்… வண்டியில ஏறு… உன்னை உன் வீட்ல டிராப் பண்ணறேன்.


எனக்காக நீ பார்ட்டியை கேன்சல் செய்ய வேணாம் விக்கி… எவ்வளவு ஆசையா சாராவ‌ பாக்கணும்னு வண்டி எடுத்துட்டு வந்திருக்க…அதை கெடுத்துக்காத…அவளும் தான் உன்னை பாக்கனும்னு ஆசையா காத்திட்டு இருப்பா…அவளை ஏமாத்தாத…பாவம்…நீ கிளம்பு.


ம்கூம்…இல்ல கௌசி…சாரா,ரகு…இவங்க எல்லாருமே உன் அளவுக்கு முக்கியம் கிடையாது…அவங்களுக்காக உன்னை இந்த இடத்தில் இப்படியே விட்டுட்டு என்னால போகவும் முடியாது.


பிரெண்ட்ஸ் தானே… இந்த வருஷம் இல்லனா அடுத்த வருஷம் எல்லாரையும் ஒரே இடத்துல பாத்துக்கலாம் ஆனா… அவங்களுக்காக உன்னை தனியா அனுப்பி வைச்சேன்ங்கற குற்ற உணர்ச்சி என்ன ஆயுளுக்கும் குத்தி கிட்டே இருக்கும் வண்டில ஏறு வீட்டுக்கு போகலாம் என்று உறுதியாகக் கூறினான்.


சொன்னா கேளு விக்கி எல்லாருமே உன்னை பாக்க ஆசையா காத்துக்கிட்டு இருக்காங்க அவங்களை ஏமாத்தாதே… வர்றேன்னு நீ மெசேஜ் பண்ணிருக்க தானே… உனக்காக எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க…என நண்பனை மட்டும் அனுப்பி வைக்க முயன்றாள்.


ஆனால் விக்கியோ பிடிவாதமாக அவங்க உன்னை பாக்கவும் தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க… இப்போ நான் மட்டும் தனியா போனா கண்டிப்பா உன்னை பத்தி கேக்க தான் செய்வாங்க…



அவங்க கிட்டே என்ன பதில் சொல்லட்டும் நான் அவளும் சேர்ந்து ஓரே வண்டியில தான் வந்தோம்…. இடையில் அவ ஹஸ்பண்டை பார்த்ததும் பயந்து என்னோட வர மாட்டேன்னு சொல்லிட்டா அதனால அப்படியே நடுரோட்டில் இறக்கிவிட்டு நான் மட்டும் உங்களை பார்க்க வந்துட்டேன்னு சொல்ல சொல்றியா…?.


என்னால் அப்படி சொல்ல முடியாது கௌசி …அவங்க கிட்ட ஏதாவது ஒரு பொய்யை சொல்லி சமாளிக்கறதை விட… என்னாலயும் கௌசியாலயும் வர முடியலன்னு ஒரு மெசேஜ் அனுப்பிக்கறேன்…வா நாம போகலாம்.


விக்கி ப்ளீஸ்…என இழுக்க.

கௌசி ப்ளீஸ் என பேச்சை துண்டித்தான்.

வேறு வழியில்லாமல் அவனது வண்டியில் அமர்ந்தவளுக்கு பல குழப்பங்கள்…கணவன் பின் தொடர்ந்ததை கூட கவனிக்க முடியாத அளவிற்கு விக்கியுடன் பேசிக்கொண்டு வந்திருக்கிறேன்.



விக்கி என்ன எனது வாழ்க்கையில் அவ்வளவு முக்கியமானவனா என அவளுக்குள் கேள்வி கேட்க… ஆம் கணவனை விட நண்பன் முக்கியமானவன் தான் என்று அவளாகவே பதிலையும் கொடுத்துக்கொண்டாள்.


வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த விக்கியின் மனதிலோ வேறு மாதிரியான குழப்பங்களும் கேள்விகளும் எழுந்திருந்தது.



நாகரீகம் கருதி இதுவரை கௌசியின் குடும்ப வாழ்க்கையை பற்றி கேட்டது கிடையாது.

அவளாக என்றாவது சொல்லும் பட்சத்தில் கேட்டுக் கொள்ளலாம் என விட்டு வைத்திருந்தான்.


ஆனால் இன்று நடந்த சம்பவத்தை கண்முன்னால் கண்ட பிறகு கௌசியின் தனிமை வாழ்க்கைக்கு தானும் ஒரு காரணமோ என்று அவனது மனதில் புதுவிதமான சந்தேகம் எழுந்தது.

இதை எப்படி சரிசேய்வது…

பிரிந்திருக்கும் கணவனைக் கண்டு ஏன் இந்த அளவிற்கு பயம் கொள்ள வேண்டும் …?.அதே சமயம் கணவனை தன்னிடம் விட்டுக் கொடுக்கவும் இல்லை.
அப்படியென்றால் அவளின் மனதில் கணவன் மீது வெறுப்பொன்றும் கிடையாது.

சிறு கோபம் அல்லது மனஸ்தாபம்.
அவ்வளவு தான்..அதைத்தான் பெரிதுபடுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான்.


இவ்வளவு நாட்கள் எப்படியோ விட்டாயிற்று இனியாவது அவளின் வாழ்க்கையை ஒரு நல்ல நண்பனாக சரி செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

ஏனோ அவள் ஹரியைப் பார்த்து பயந்து நடுங்கியது அவனது மனதை மிகவும் பாதித்தது.


அவளின் வீடு செல்லும் வரை இருவருமே பேசிக்கொள்ளவில்லை.வழியெங்கிலும் கனத்த மௌனம் மட்டுமே ஆட்சி புரிந்தது.


கௌசி உன் வீடு வந்திடுச்சு என்று சொல்லும் வரை உணர்வே இல்லாதது போல அவனின் பின்புறம் அமர்ந்து வந்தாள்.

ஹான்…அதுக்குள்ளையா…என கேட்டபடி சுற்றிலும் பார்க்க கேட்டின் அருகே இடுப்பில் அனுவை வைத்தபடி லட்சுமி இவர்களை தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவரின் முகத்தில் உணர்ச்சி துடைத்து வைக்கப்பட்டிருந்தது.


தலைவாசல் அருகே நின்று மகனுக்கு பாட்டில் பாலை புகட்டிக்கொண்டிருந்த ஜானுவின் முகத்தில் கௌசி விக்கியுடன் வந்ததில் உடன்பாடில்லை என்பதை பறைசாற்றியது.


விக்கிக்கு தர்மசங்கடமான நிலைமை அவன் கௌசியின் வீட்டிற்கு அதிகம் வந்ததெல்லாம் கிடையாது…கல்லூரி படிக்கும் காலத்தில் ஒரு முறை வந்திருக்கிறான்.அதன்பிறகு கௌசி,ஹரி திருமணத்தின்போது வந்திருக்கிறான்.

அதன்பிறகு இன்று தான் வருகிறான்…பொதுவாக கௌசியின் வீட்டில் அவனுக்கு அவ்வளவு வரவேற்பு இருக்காது…தெரிந்ததும் தோழியை தனியே அனுப்ப மனமின்றி வீட்டு வாசல் வரை வந்திருக்கிறான்…


வண்டியிலிருந்து கீழே இறங்கிய கௌசல்யா நண்பனை பார்த்து விக்கி வீட்டுக்குள்ள வந்துட்டு போ என அழைத்தாள்.



விக்கியோ இல்ல கௌசி நான் அப்படியே வீட்டுக்கு போறேன் என்றான்.


இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்குள்ள வர மாட்டேங்குற என்று குறைபட்டுக் கொள்ள அதான் கூப்பிடறாள்ல உள்ள வந்துட்டு போங்க என்ற லட்சுமியின் குரல் அவனை வண்டியில் இருந்து இறங்க வைத்தது.


கௌசி வாசலுக்கு வந்து என்னமா பாப்பா டிரஸ் இவ்ளோ அழுக்கா இருக்கு…விளையாட விட்டுட்டு அப்படியே தூக்கி வச்சிகிட்டீங்களா‌…எனக் கேட்டவள் குழந்தையை கைகளில் வாங்கியபடி உள்ளே செல்ல லட்சுமி அவனுக்கு வழி விடுவதுபோல் ஒதுங்கி நின்றார்.


சிறு புன்னகையுடன் லட்சுமியை கடந்தவன் வாசலை மறிப்பது போல நின்ற ஜானுவை பார்த்து புன்னகைக்கவும் ம்கூக்கும்..என முகத்தை திருப்பியபடி உள்ளே சென்றாள்.



எப்படி ரியாக்ட் செய்வது எனத் தெரியாமல் திரும்பி லட்சுமியை பார்க்க… நீங்க உள்ள போங்க வாசலையே நிக்க வச்சா என் பொண்ணு கோவிச்சிப்பாள்ல என்றார்.


எச்சிலை கூட்டி முழுங்கியவன் இனி உள்ளே சென்றால் இருக்கும் மரியாதையும் காணாமல் போகும் அபாயம் இருக்கிறது என உணர்ந்தவன் எதோ நினைவு வந்தது போல ஆன்ட்டி இப்போ தான் ஞாபகம் வருது…ஃப்ரெண்ட் ஒருத்தன் மெயின் ரோட்ல வெயிட் பண்றதா வரும் போது ஃபோன் பண்ணி சொன்னாள்.



நான் வெயிட் பண்ணு கௌசியை அவ வீட்ல விட்டுட்டு இப்போ வர்றேன்னு சொன்னேன்…செகண்ட் மறந்துட்டேன்…அடுத்த முறை வரேன் டைம் ஆச்சு என்றபடி வீட்டிற்குள் செல்லாமல் அப்படியே திரும்பினான்.


பரவால்லப்பா அந்த பிரண்டுக்கு ஃபோன் பண்ணி ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வரேன்னு சொல்லிடு இப்போ நீ உள்ள வா என்று கையைப் பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக உள்ளே அழைத்துச் சென்றார்.


தயங்கியபடி விக்கி உள்ளே வர கௌசி அவளது அறையில் இருந்து குரல் கொடுத்தாள்..விக்கி கொஞ்சம் வெயிட் பண்ணு.. அனுக்கு டிரஸ் மாத்தி எடுத்துட்டு வரேன் என்று…சரி என தலையசைத்தவன் முள் மீது அமர்வது போல குஷன் ஷோபாவில் அமர்ந்தான்.


அதே நேரம் அறைக்குள் இருந்த ஜானு கணவன் கேசவனிடம் அவளின் கோபத்தை காட்டிக்கொண்டிருந்தாள்.


எவ்ளோ தைரியம் இருந்தா அவன் வீட்டுக்குள்ளையே வருவான்…இருங்க அவனுக்கு ‌நான் போய் புரியற மாதிரி புத்தி சொல்லிட்டு வரேன்.


ஜானு அதான் அம்மா பேசறதா சொல்லிருக்காங்கல்ல நீயேன் முந்தற…பேசாம ரூம்ல உக்காரு…நான் ஒரு ஹாய் சொல்லிட்டு வரேன் என்றான்.


நல்ல அண்ணன்…இன்னும் எப்படி எங்க அண்ணன் பேசனும்னு எதிர்பாக்கறீங்க…கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே ஃபோன் பண்ணி ஸ்பீக்கர்ல எல்லாரோட நாக்கையும் பிடிக்கிற மாதிரி நறுக்குன்னு கேள்வி கேட்டாரு…


பொண்ணு உங்க வீட்டுக்கு வந்துட்டா அவளுக்கு புத்தி சொல்லி அவளை வாழ வைக்கிற வேலையெல்லாம் அங்கே யாரும் செய்ய மாட்டீங்களா..அவ இஷ்டம் போல கண்ட மேனிக்கு சுத்த விடறதுக்கு எதுக்காக கல்யாணம் செஞ்சு வச்சிங்க…


அவளால என் வாழ்க்கை மட்டுமில்லாம என் பொண்ணு வாழ்க்கையும் சேர்ந்து போகுது…அவ புருஷனோட சேர்ந்து வாழறதுல விருப்பம் இல்லாம‌ இருக்கலாம்…எதுக்காக என்னோட பொண்ணு அப்பா இல்லாம வளரனும் அவளுக்கு என்ன தலையெழுத்தா…


பெரியவங்க புத்தி சொல்லி அனுப்பி வைப்பீங்கனு நானும் ரெண்டு வருஷமா காத்துகிட்டு இருக்கேன் ஆனா அவ வாழ்க்கையை இஷ்டம் போல வாழ்ந்துகிட்டு போகட்டும்ன்னு சொல்றதுக்கு தான் அந்த வீட்ல பெரியவங்க இருக்கீங்க போல… தெரியாம நான் தான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்க சீரழிய வேண்டியிருக்கு…அவ ஹாயா ஹைவேஸ்ல டூவீலர்ல அந்த விக்கியோட சுத்திக்கிட்டு இருக்கா…தாய்க்கு ஏங்கிட்டு இருக்கற குழந்தையையும் மறந்துட்டா…என்னையும் மறந்துட்டா..இப்படியே அவ செய்யறதை எல்லாம் ஆதறீங்க…குடும்பம் சீக்கிரமா விளங்கிடும்…என்றபடி கோபமாக ஃபோனை வைத்துவிட்டான்.


அதிர்ச்சியில் ஜானுவை பார்த்து லட்சுமி என்னடியம்மா மாப்பிள்ளை இப்படி எல்லாம் பேசறாரு…என்னவோ நம்மை யாருக்கும் கௌசி மேல அக்கறையே இல்லாததுபோல பேசுறாரு..
அவ புருஷனோட சேர்ந்து வாழனும்னு தானே தினந்தினம் கோயில் குளம்னு சுத்திகிட்டு இருக்கேன் இதைவிட வேற என்ன எதிர்பார்க்கிறாரு என கேட்டார்.


உடனே ஜானு பொங்கிவிட்டாள்…உண்மையிலேயே உங்களுக்கு புரியலையா …இல்ல புரியாதமாதிரி நடிக்கிறீங்களா அவ புருஷனோட சேர்ந்து வாழனும்னா கோவில்குளம்னு சுத்தினா மட்டும் பத்தாது.

பொண்ணை உட்காரவைத்து புத்தி சொல்லணும்…அதை விட்டுட்டு என்கிட்ட கேக்கறீங்க…நியாயத்துக்கு அண்ணன் உங்களுக்கு போன் பண்ணிருக்கணும்… இல்லன்னா உங்க பையனுக்கு ஃபோன் பண்ணிருக்கணும் …உங்களை விட்டுட்டு எனக்கு ஃபோன் பண்ணி ஸ்பீக்கர்ல போட சொல்லறாருன்னா என்ன அர்த்தம்…



உங்ககிட்ட ஃபோன்ல கூட பேச விரும்பலனு அர்த்தம்னு…
இன்டைரக்டா சொல்றாரு அதை கூட உங்களால புரிஞ்சுக்க முடியல …


ஆமா நானும் தெரியாம தான் கேக்குறேன் …பச்சபுள்ள இங்க ஏங்கிட்டு இருக்கும்போது அவளுக்கென்ன அந்த விக்கியோட வண்டியில் சுத்த வேண்டிக்கிடக்கிறது இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சு நடக்குதா இல்ல தெரியாம நடக்குதா..என பேசுபவளை இடைமறித்த லட்சுமி.


ஜானு உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன்…உன் வாயால என் பொண்ணை தப்பா பேசிடாத…என்கிட்ட காலையில அவ சொல்லிட்டுத்தான் போனா..



அவ கூட படிச்ச பிள்ளைங்க எல்லாரையும் பார்க்க போறேன்…துணைக்கு அந்த பையனும் வர்றான்னு சொன்னா…நான் தான் சரி போய்ட்டு வான்னு சொன்னேன்…என்ன நடந்ததுன்னு தெரியாம மாப்பிள்ளை பேசினதை மட்டும் வெச்சுகிட்டு நாம ஏன் தேவையில்லாமல் சண்டை போட்டுக்கனும்… எதா இருந்தாலும் கௌசி வரட்டும்… என்னன்னு விசாரிக்கிறேன்…தேவை பட்டா அந்தப் பையன் கிட்டயும் பேசறேன்.



எங்க அண்ணா தான் தெளிவா சொல்லறார்ல ஹைவேஸ்ல டூ வீலர்ல அவனோட போனானு…அவ போனதால தானே அண்ணா இன்னைக்கு ஃபோன் பண்ணி எல்லாரையும் திட்டுற மாதிரி ஆயிடுச்சு…
அவ எதுக்காக எல்லார் பார்வைக்கும் தீனி போடுவது போல டூவீலர்ல போகனும்…அந்தப் பையன் கிட்ட இல்லாத காரா அதுல கூட்டிட்டு போக வேண்டியதுதானே …அப்படியும் எல்லா காரும் சொல்லி வச்சமாதிரி சர்வீஸ்க்கு போயிருந்தா கூட பிரைவேட் கால் டாக்ஸி புக் பண்ணி அதுல கூட்டிட்டு போய் இருக்கலாம்ல்ல…


இது ஏதோ திட்டம் போட்டு கௌசியை பிரச்சினையில மாட்டி விடறதுக்காகவே பண்ணின மாதிரி எனக்கு தோணுது…

நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது அத்தை… கௌசி வந்த உடனே இன்னைக்கு என்ன ஏதுன்னு பேசி தீர்க்கமான முடிவை என்னோட அண்ணனுக்கு சொல்லிடுங்க…


என்னால என்னோட பெரியம்மா பெரியப்பாக்கு பதில் சொல்லவே முடியல… உன் பேச்சைக் கேட்டுகிட்டு தானே அந்த குடும்பத்திலிருந்து பெண் எடுத்தோம்…இன்னைக்கு அவ சந்தோஷமா சுத்தறா… என் பையனோட வாழ்க்கைதான் பாழா போய்ட்டு இருக்குன்னு வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்க…


எனக்கு என்ன தலையெழுத்தா…அவங்க கிட்ட எல்லாம் பேச்சி வாங்க… என்று சிடுசிடுத்தாள்.


அதுவரை பொறுமையாக இருந்த கேசவனும் ஓரு டூவீலர்ல போறது அவ்ளோ பெரிய தப்பா ஜானு… உன் அண்ணன்தான் புரிஞ்சிக்காம பேசுறாருன்னா.

நீயும் ஏன் அவர்கூட சேர்ந்து ஜால்ரா தட்டற.. எனக்கு விக்கியை பத்தி ரொம்ப நல்லா தெரியும்…


அவன் கௌசல்யாவை பிரச்சினையில மாட்டி விடனும்னு நினைச்சு எதையும் செய்ய மாட்டான் புரிஞ்சுக்கோ…உன் அண்ணனுக்கும் புரிய வை என பேசி முடித்தான்.


ஆஹா…வந்துட்டீங்களா..

அன்பு தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ண..
இதுக்குத்தான் இவ்வளவு நேரமா உங்களை தேடிக்கிட்டு இருந்தேன்..


சரி நான் ஓண்ணு கேக்கறேன்…பதில் சொல்லுங்க…

எனக்கும் கூட படிச்ச ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க..
நானும் உங்க தங்கச்சி பண்ணினது போல என் பிரண்ட்ஸ் பாக்கறதுக்காக கூட படிச்ச பையனோட வண்டியில போனா ஓத்துப்பீங்களா சொல்லுங்க…
மாட்டிங்கல்ல…என்றவள்…அவனின் முகம் பார்த்து.. கல்யாண லீவ் முடிஞ்சு நான் வேலைக்கு கிளம்பின முதல் நாள் எனக்கு எத்தனை ரூல்ஸ் போட்டிங்க…ஞாபகம் இருக்கா…இல்ல நான் ஞாபகப் படுத்தவா…எனக்கேட்டவள் அன்று அவன் கூறியதை அப்படியே பேசி காட்டினாள்.

இங்க பாரு ஜானு…நீ வேலைக்குப் போய் தான் சாப்பிடணும்னு எந்த அவசியமும் இந்த குடும்பத்திற்கு கிடையாது..



எனக்கு ரொம்ப நல்லாவே வருமானம் வருது கூடவே என்னோட அப்பாவிற்கும் ஓரளவுக்கு வருமானம் வருது.


நீ வேலைக்கு போகணும்னு ரொம்ப ஆசைப்பட்டதால தான் உன்னை வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என்றவன்…அப்புறம் ஆபிஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்திடனும் …வேறு எங்கேயும் போகக் கூடாது. அப்படி போறதுன்னா என் கிட்ட சொல்லு நான் உன்னை கூட்டிட்டு போறேன்னு…அதை விட்டுட்டு தனியா போகனும்னு ஆசை படக்கூடாதுன்னு சொன்னது நீங்கதான… எனக்கு மட்டும் டூல்ஸ் போடறீங்களே ஏன் இந்த வாய் உங்க தங்கச்சிக்கு ரூல்ஸ் போட மாட்டேங்குது…


உங்க வீட்டு பொண்ணுக்கு நான் ஒரு நியாயம் இதே அடுத்தவீட்டு பொண்ணுக்குன்னா ஒரு நியாயம் நல்லா இருக்குங்க என்று கூறியபடி அறைக்குள் சென்று கதவை அடித்து சாத்தினாள்.



நொடியில் கோபம் கொண்டவன் கதவருகே சென்று…ஏய் உனக்கென்ன கொழுப்பா… பேசிக்கிட்டு இருக்கும்போதே முகத்தில அடிச்சமாதிரி ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்தற…இப்போ என்னடி சொல்ல வர்ற என்றபடி கேசவன் வெளியில் நின்று கதவைத் தட்ட பின்னால் வந்த லட்சுமி கேசவா விடு… இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு நீ வேற ஆரம்பிக்காத கொஞ்ச நேரம் கழித்து அவளே வெளியே வருவா என்றவரிடம்.




நீங்க தலையிடாதீங்கம்மா…வரவர அவளுக்கு ரொம்ப திமிர் ஆயிடுச்சி…காலையில உங்ககிட்ட பேசும்போதே அவ பல்லை கழட்டி கையில கொடுத்து இருக்கனும்…பேசினா பேசட்டும்னு பொறுமையாக கேட்டுட்டு விட்டதால தான் இப்போ இந்த அளவுக்கு சாமி ஆடிட்டு போறா..


இவ பேசறதை பாத்தா

மாப்பிள்ளை கூட அவரா யோசிச்சு பேசுற மாதிரி தெரியல… இவ தான் அவர்கிட்ட எதையோ சொல்லிக் கொடுத்து தூண்டி விடற மாதிரி எனக்கு தோணுது… முதல்ல இதெல்லாம் என்னனு அவகிட்ட விசாரிக்கிறேன்… அப்படி இல்லன்னா அண்ணனும் தங்கச்சியும் அடிக்கிற கூத்தை நம்மாள தாங்க முடியாது…என மீண்டும் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான்.


இனி கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைக்குள் தலையிடவும் முடியாது… மகனே கூறிவிட்டான்… இதில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று.



இதற்கு மேல் நடுக்கூடத்தில் நின்று கணவனும் மனைவியும் சண்டையிடுவதை எங்கனம் பார்த்துக் கொண்டிருப்பது என குழந்தைகளை அழைத்தபடி வெளியே வந்துவிட்டார்.


குழந்தைகளை வெளியே விளையாட விட்டபடி போட்டிக்கோவில் அமர்ந்திருக்க சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டுக்குள் இருந்து ஜானுவிற்கும் கேசவனுக்கும் வாக்குவாதம் நடப்பது நன்றாக கேட்டது.


பெற்றோர்களின் சப்தத்தைக் கேட்ட குழந்தை நிஷாந்த் அழுதபடியே உள்ளே ஓட எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில் லட்சுமி இல்லை .


இது அனைத்திற்கும் காரணம் கௌசல்யா விக்கியுடன் சென்றது மட்டும்தான் என்று அவரின் மனதில் பதிவாகி இருந்தது .


சரியாக அப்பொழுது விக்கியும் கௌசல்யாவை அழைத்துக் கொண்டுவர மொத்த கோபமும் விக்கியின் பக்கம் திரும்பி விட்டது.


ஆனால் கோபத்தை வாசலிலே காட்டவும் முடியாது… கௌசல்யாவின் வாழ்க்கையில் பிரச்சினையாக விக்னேஸ்வரன் இருப்பதைக் கூறவும் முடியாது.



ஆனால் அவனும் கௌசியின் இந்த தனிமை வாழ்க்கையில் ஒரு பங்கு வகிக்கிறான் என்பதை புரியவைத்து விட வேண்டும் என்ற முடிவுடன் தான் லட்சுமி விக்னேஷை உள்ளே அழைத்தது.


அவனும் விருப்பமே இல்லாமல் வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறான்…உள்ளே ஜானுவிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்த கேசவன் இப்போ நீ வாயை மூடிட்டு போறியா இல்லையா ஏதாவது வாய் திறந்த..

கௌசல்யா மாதிரி நீயும் உன் பிறந்த வீட்ல இருக்க வேண்டியது தான்…என விரல் நீட்டி எச்சரிக்கை செய்தவன்..


மேலும் அவளிடம் இனி நீ என் தங்கச்சி வாழ்க்கையில தலையிடாதே… தெரியாத்தனமாக பார்க்க நல்லா இருக்கான்…கையில நாலு காசு பணம் வச்சிருக்கான்னு அவசரப்பட்டு தங்கச்சியை உன் அண்ணனுக்கு கட்டிகுடுத்து தொலைச்சுட்டேன்… அதோட பலனை தான் இன்னைக்கு என் குடும்பமே அனுபவிச்சுட்டு இருக்கு…



உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி…ஆனா மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் இடின்னு சொல்லறது சரி தான் போல..

ஒரு பக்கம் உன்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன் இன்னொரு பக்கம் என் அம்மா கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்..
பத்தாததுக்கு உங்க அண்ணன் வேற அடிக்கடி டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கான் ‌..


நல்லா கேட்டுக்கோ விக்கி வெளிய போற வரைக்கும் நீ ரூம் விட்டு வெளியே வரக்கூடாது வந்தா நடக்கிறதே வேற என்று பற்களைக் கடித்தபடி கூறியவன் கதவைத் திறந்தபடி முன் அறைக்கு வந்தான்.


வாங்க விக்னேஸ்வரன் எப்படி இருக்கிறீங்க என்று கேட்டபடி வரவும்…அவரைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட விக்கி நல்லா இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க என்று கேட்டபடி குஷனில் இருந்து எழுந்தான்.



இருவரும் பரஸ்பரம் கை கொடுப்பதற்காக கைகளை நீட்ட லட்சுமி குறுக்கிட்டு சரி தம்பி நீங்க கிளம்புங்க என முகத்தில் அடித்தது போல் கூறினார்.


அதிர்ச்சியில் இரு ஆண்களுமே லட்சுமியை பார்க்க சொன்னது காதுல விழலையா…என கேட்கவும்..

ம்மா…என்ன பேசுறீங்க என்று கேசவன் அதிர்ச்சியில் தாயின் தோளைப் பிடித்து உலுக்க கைதூக்கி அவனைத் தடுத்தவர் இதுல நீ தலையிடாதே என்று முகத்தில் அடித்தது போல் கூறினார்.


விக்கியோ லட்சுமியின் இந்த அவதாரத்தில் மிரண்டு போய் ஆன்ட்டி என அதிர்ச்சி காட்டவும்.


உன்னை வெளிய போக சொன்னேன் என்றார்.


அவமானத்தில் முகம் கறுக்க..சாரி ஆன்ட்டி என்றபடி வெளியேற முற்பட்டான்…கேசவனோ விக்கியின் அருகில் ஓடி வந்து சாரி விக்கி…அம்மா எதோ டென்ஷன்ல பேசறாங்க மனசுல வச்சிக்காதீங்க என தாய்க்கு வக்காலத்து வாங்க.

இட்ஸ் ஓகே என்றபடி நகர.


உள்ள வான்னு கூப்பிட்டுட்டு உட்கார்றதுக்கு முன்னாடியே வெளியே போகச் சொல்லறாளேன்னு என் மேல உனக்கு கோவம் வருதுல்ல எனக் கேட்கவும்.


நின்ற விக்கி இல்லை என்பது போல் தலையசைத்தான்.



கோபம் வரனும்.கோபம் வரலன்னாலும்
வர வச்சிக்கோ..

ஏன்னா உனக்கு கோபம் வந்தா தான் எங்க எல்லாருக்கும் நல்ல காலம் பிறக்கும் என்று கூறவும்.


புரியாமல் புருவத்தை சுருக்கியவன்..
என்ன சொல்ல வரீங்க ஆன்ட்டி என நேரடியாக கேட்டான் .


எதுக்காக உன்னை உள்ள வர சொல்லிவிட்டு உடனே வெளியே அனுப்பறேன் தெரியுமா…



ஏற்கனவே என் பொண்ணு புருஷனோட வாழாம பிறந்த வீட்டில் இருக்கிறான்னு அக்கம்பக்கத்து வீட்டாளுக என் காதுபடவே பேசிக்கிறாங்க…


இதுல கண்ட நேரத்துல நீ வேற கொண்டுவந்துவிட்டா..கேக்கவா வேணும்.


லட்சுமியோட பொண்ணு ஓரு பையனோட வண்டில வந்து இறங்கறான்னு நாளைக்கு காலையிலகுள்ள அவங்களே ஒரு கதைய எழுதி அதுக்கு தலை வாரி பூ வெச்சு அழகா ஜோடித்து ஊர் ஃபுல்லா தந்தி அனுப்பிடுவாங்க…

அவங்க வாய்க்கு பயந்து

உள்ள கூப்பிட்டேன்…அதை காரணம் காட்டி உன்னை வீட்டுக்குள்ள வெச்சுக்கவும் எனக்கு விருப்பம் இல்லை .


அதான் உள்ள கூப்பிட்ட அடுத்த செகண்டே வெளியே போக சொல்லறேன்..

இப்போ யாராவது கேட்டா கூட சொந்தகார பையன்னு சொல்லிக்கலாம்…நீயும் உள்ள வந்துட்டு போறதால அவங்களும் பெருசா ஆராய்ச்சி எல்லாம் பண்ண மாட்டாங்க…
என்றார்.

தேங்க்ஸ் ஆன்ட்டி கௌசிக்காக இந்த அளவுக்கு யோசிக்கிறீங்களே அதுவே போதும்…

இதே அக்கறையை அவ புருஷன் வீட்டுக்கு போறதுக்காகவும் காமிச்சா ரொம்ப நல்லா இருக்கும் என்று கூறியபடி வேகமாக வெளியேறினான்.
 
Last edited:
Top