கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 8

Akila vaikundam

Moderator
Staff member
8.


விக்கியின் பேச்சால் லட்சுமியின் முகம் நொடியில் வாடி விட்டது.


விக்கியிடம் இப்படி நடந்து கொள்வதற்கு அவருக்கு விருப்பமே இல்லை தான்… வீட்டிற்கு வந்தவனை இப்படி அவமானப்படுத்தி விடுவோமே என்று மனதளவில் வேதனையும் கொண்டார்.


இப்படி நடந்து கொண்டாலாவது தன் பெண்ணை விட்டு சற்று விலகி இருக்க மாட்டானா என்ற ஆதங்கத்தில் சற்று அதிகப்படியாகவே நடந்துகொண்டார்.


ஆனால் விக்கி கௌசிகன் குடும்ப வாழ்க்கையில் லட்சுமி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பது போல் பேசிவிட்டு செல்ல…டேய் கேசவா அந்த பையன் என்னடா சொல்லிட்டு போறான் எனக்கு புரியலையே என்றார்.


கேசவனுக்கு தாயர் விக்கியிடம் அப்படி நடந்து கொண்டதில் மிகுந்த கோபம் இருந்தது அதனால் அந்தக் கோபத்தை வார்த்தைகளிலும் கலந்தவன் சற்று நக்கலாக நீங்க எப்படி கௌசியோ
ட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு அவன் காரணம்னு நினைக்கறீங்களோ அதே மாதிரி அவனும் கௌசி தனியா இருக்கறதுக்குஉங்களோட அலட்சியம் தான் காரணம்னு சொல்லிட்டு போறான் என்ற படி சென்று விட்டான்.


என்ன என் பொண்ணு இங்க இருக்க நானும் ஒரு காரணமா என மனதிற்குள் கேள்வி எழுப்ப.



அதற்குள் அனுவை குளிப்பாட்டி ஆடை மாற்றி எடுத்துக்கொண்டு வந்த கௌசி விக்னேஸ்வரன் அங்கே இல்லாததை கண்டதும் அதிர்ச்சி அடைந்து அம்மா விக்கி எங்கே எனக் கேட்டாள்.


உடனே அவர் சுதாரித்துக் கொண்டு ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு உடனே கிளம்பி போயிடுச்சி அந்த தம்பி… உன்கிட்ட சொல்ல சொல்லுச்சு என்று தலை குனிந்த படி கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.



என்னது அவசரமான வேலை வந்துருச்சுன்னு உடனே கிளம்பி போயிட்டானா எப்படி என்கிட்ட சொல்லாம போனான் என்று யோசித்தபடி வாசலுக்கு வர விக்கியின் வாகனம் தெருவை கடந்திருந்தது.


ஏனோ மனதிற்குள் ஒரு பாரம் ஏறிக்கொள்ள தூரத்தில் புள்ளியாகத் தெரியும் விக்கியின் வாகன வெளிச்சத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள் கௌசல்யா.


பின்னாலே வந்த லட்சுமி குழந்தையை கையில் இருந்து வாங்கியபடியே ஏன் சீக்கிரமா வந்துட்ட எனக்கேட்டார்.


அங்க போகலம்மா…பாதிவழில திரும்பிட்டேன்.


ஏன்..


அது…என இழுத்தவள் பாதிவழி போகும் போது..அவரை பாத்தேன்..ஏனோ அதுக்கப்புறம் அங்க போக பிடிக்கல என உண்மையை கூறியவள்…எப்படியும் உன் மாப்பிள்ளை கூப்பிட்டு கம்ப்ளைண்ட் செய்வாரு…ஏதாவது சொல்லி சமாளிச்சிக்கோ என்னபடி உள்ளே நடந்தாள்.


ம்ம் என்றவர் ஏற்கனவே ஹரி ஃகால் செய்து கத்தி விட்டான் எனக்கூறவில்லை.

மகள் தன்னிடம் பொய் கூறினாள் அவளிடம் ஏன் மாத்தி பேசறன்னு சண்டையிடலாம் ஆனால் என்ன நடந்தது என்பதை தெளிவாக கூறி விட்டுச் செல்கிறாள்…இனி மேற்கொண்டு அவளிடம் என்ன கேட்பது.


நடப்பதை எல்லாம் பார்க்கும் பொழுது இவளின் மனதில் எந்த ஒரு கள்ளம் கபடமும் கிடையாது. மாப்பிள்ளை தான் மகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கஷ்டப்படுத்துகிறார் என நினைத்தார் .


கௌசியின் யதார்த்தமான பேச்சு அவரை மேலும் கலங்கடித்தது… தேவையில்லாமல் வீட்டுக்கு வந்த பையனையை வேதனைப்படுத்தி அனுப்பி விட்டோமே. நாளை இந்த விஷயம் கௌசிக்கு தெரியவந்தால் வீட்டிற்குள் எந்த மாதிரியான பிரளயம் வெடிக்குமோ… இறைவா எனை காப்பாற்று என வேண்டிக்கொண்டார்.


அதேநேரம் வீட்டுக்குச் சென்ற விக்கிக்கு நண்பர்கள் இடத்திலிருந்து அழைப்பு மேல் அழைப்பும்…வாட்ஸ்அப் மெசேஜ்ஜூம் வந்து குவிந்து கிடந்தது.



எல்லாவற்றையும் புறம்தள்ளிவனின் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.


கௌசல்யாவின் தனிமை வாழ்க்கைக்கு நானும் ஒரு காரணமா..? எப்படி …நான் காரணமாவேன்.


அவள் என்னிடம் வேலைக்கு வருவதற்கு முன்பே கணவரை பிரிந்து விட்டாளே…அப்படி இருக்கும் பொழுது எனக்கு ஏன் தீடிரென இதுபோல் தோன்றுகிறது.


அவள் தனியாக தாய் வீட்டில் இருக்கிறாள், வேலை தேடிக் கொண்டிருக்கிறாள் எனத் தெரிந்த பிறகுதான் கேசவனிடம் இவனாக சென்று கௌசியை அழைத்தது.



ஒருவேளை கௌசி இங்கு வேலைக்கு வந்த பிறகு கணவனைப் பிரிந்து இருந்தாள் லட்சுமி மறைமுகமாக கூறிய விஷயத்தை நம்பி இருப்பான்…ஆனால் நடந்தது வேறு…


பிறகு ஏன் கௌசியின் வீட்டினர் நான் தான் காரணம் என்பது போல் நினைக்கிறார்கள்…இதற்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்..
இல்லையென்றால் என்னால் அடுத்து வரும் ஒவ்வொரு நிமிடமும் நிம்மதியில்லா வாழ்க்கையை வாழவேண்டியது வரும்…என பலவாறாக யோசித்தவன்.



இதுவரை நாகரீகம் கருதி கௌசியின் வாழ்க்கையை தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது போதும் இனி அவளது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட ஹரியிடம் நேரடியாகவே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என முடிவு எடுத்த பிறகு தான் அவனால் அன்றைய இரவில் உறக்கம் கொள்ள முடிந்தது.

மறுநாள் காலை வழக்கம் போல கௌசல்யா அலுவலகம் சென்றாள்.
அவளுக்கு முதல் நாள் நடந்ததை நினைத்து சற்று குற்ற உணர்ச்சி இருந்தது.


ஏதோ உணர்ச்சி வசப்பட்டு விக்கியையும் பார்ட்டிக்கு செல்ல விடாமல் அழைத்து வந்து விட்டாள்.

அதன் பிறகு வீட்டிற்கு வந்தவள் அவனை வரவேற்று உபசரிக்காமல் அனுவை தூக்கியபடி வீட்டிற்குள் சென்று விட வெளியில் என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியவில்லை.


அவள் வெளிவரும் பொழுது விக்கி அந்த இடத்தில் இல்லாதது அவளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.



ஒருவேளை தாய் ஏதாவது அவனிடம் கூறியிருப்பாரோ என்ற சந்தேகம் அவளுக்குள் இருந்தது.



லட்சுமியும் கௌசியின் முகம் பார்த்து பேசாமல் செல்ல சந்தேகம் உறுதியானது.


பல வருடங்கள் கழித்து வீட்டிற்கு வந்தவனுக்கு இப்படி ஒரு வரவேற்பை அளித்து விட்டோமே என்று விடியவிடிய உறங்காமல் இருந்தவள் காலை எழுந்ததும் முதல் வேலையாக அரக்கப் பரக்க அலுவலகம் கிளம்பி வந்துவிட்டாள்.


முந்த நாளைப்போலவே அலுவலகத்திலும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது காரணம் விக்கி அலுவலகம் வரவில்லை.


சரி வேலை விஷயமாக எங்காவதுக சென்றிருப்பான் எப்படியும் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரத்தில் வந்து விடுவான் என வேலையை சரிவர கவனிக்காமல் மணிக் கடிகாரத்தையும் வாசலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஆனால் கடைசிவரை விக்கி வரவே இல்லை… இடையில் தேனீர் இடைவேளையின்போது அவனுக்கு அழைத்து பார்க்க அவளது அழைப்பை அவன் ஏற்கவில்லை.


மதிய உணவு இடைவேளையில் அவனுக்கு அழைக்க அப்பொழுது மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது.


ஏற்கனவே அவனைப் பற்றி யோசித்துக்கொண்டு இருந்ததால் அவளால் மேற்கொண்டு எந்த ஒரு வேலையையும் தொடரமுடியவில்லை.



அலுவலகத்தின் வரவேற்பு பெண்மணியிடம் விக்கியைப் பற்றி விசாரிக்க.. சார் இன்னைக்கு வரமாட்டாருன்னு காலையிலேயே மெயில் வந்திடுச்சி கௌசி என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார்.


ஏன் என்று உலகம் அறியா பிள்ளையாக அவளிடம் கேள்வி கேட்க கௌசியை ஒரு மாதிரியாக பார்த்த அந்த பெண்… அவர் இந்த ஆபிஸோட எம் டி அவர் நினைச்சா வரலாம் வராமலும் போகலாம் அதற்கான காரணத்தை நாம எப்படி கேட்க முடியும் என்று எரிச்சலை காண்பிக்கவும் மேற்கொண்டு அவரிடத்தில் எதுவும் கேள்வி கேட்காமல் அரை நாள் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பினாள்.


வாசலிலேயே லட்சுமியை எதிர்கொண்டவள் எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்.


பின் வந்த லட்சுமி என்னாச்சு கௌசி மதியமே வீட்டுக்கு வந்துட்ட… உடம்பு ஏதும் சரியில்லையா என அக்கறையாக விசாரித்தார்.

அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் யோசனையாக திரும்பியவள் அம்மா நேத்து விக்கியை என்ன சொனீங்க எனக் கேட்டாள்.


உடனே என்ன சொல்வது என தெரியாமல் திணறியவர்…நான் என்ன சொல்ல போறேன்…உடனே கிளம்பறேன்னு சொன்னவன் கிட்ட நீ வர வரைக்கும் வெயிட் பண்ணனும் னு சொன்னேன்… அவன் தான் முக்கியமான வேலையிருக்கு நான் போறேன்னு உடனே கிளம்பி போயிட்டான்…ஏன் ஆபீஸ்ல ஏதாவது சொன்னானா என சற்று பயந்த படியே கேட்டார்.



இல்லமா அவன் ஆஃபிஸ் வரல…என்ன காரணம்னும் என்கிட்ட சொல்லல… இதுபோல எப்போது ஆஃபீஸ்க்கு லீவ் போடுறது வழக்கம் தான்.


ஆனா ஆபீஸ்க்கு மெயில் பண்றதுக்கு முன்னாடியே என்கிட்ட சொல்லிடுவான் ஆனா இன்னைக்கு என்கிட்ட சொல்லவும் இல்ல… நான் ஃகால் பண்ணாலும் அட்டென்ட் பண்ணல… மனசு ரொம்ப பாரமா இருக்குமா நேத்து ரொம்ப அதிகமா அவன்கிட்ட நடந்துகிட்டேனோனு தோணுது.


பார்ட்டிக்கு போலாம்னு கூட்டிட்டு போய்ட்டு பாதி வழியில திருப்பி கூட்டிட்டு வந்துட்டேன்.


அதோட விட்டா கூட பரவால்ல வாசல் வரைக்கும் வந்தவனை பேச்சுக்கு வான்னு சொல்லிட்டு கண்டுக்காம உள்ள போயிட்டேன்.

கூட இருந்து உபசரித்து இருக்கணும்.. அதையும் செய்யல.. நான் வெளிய வரும் போது அவன் தெருவையே தாண்டிட்டான்.. நேத்து அவனை ரொம்ப சங்கட படுத்திட்டேன் இல்லம்மா…

விட்டு தள்ளு கௌசி.இதெல்லாம் ஓரு விஷயமா…இதுக்காக கவலைப்பட்டுக்கிட்டா ஆபீஸ்க்கு லீவு போட்டுட்டு வந்த… அவன் யாரு முதல்ல சொல்லு.


நீ நம்ம குடும்பத்துல இருக்கிற யாரையாவது கஷ்டப் படுத்தி இருந்தா தான் கவலைப்படணும்.


இந்த மாதிரி கவலையே என்னைக்காவது மாப்பிள்ளை விஷயத்துல நீ பட்டிருந்தா எப்பவோ உன் வாழ்க்கை சரியாகியிருக்கும் என்று முடித்தார்.


உங்க கிட்ட பேசவே முடியாதும்மா… என்ன பேசினாலும் முடிக்கும்போது உங்க மாப்பிள்ளை கிட்ட தான் கொண்டுவந்த முட்டிப்பிங்க.



இங்க நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க …போங்கம்மா விக்கியை சங்கட படுத்திட்டேனோனு நான் பேசினா.. என்னை பத்தி கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காத அந்த ஆளை பத்தி பேசிகிட்டு இருக்கீங்க.


உங்களுக்கு என்னை விட என் பொண்ணை விட அந்த ஆள் தான் முக்கியமா போயிட்டான்.


மொத்தத்தில் நான் இங்க இருக்கறது பிடிக்கலன்னு நினைக்கிறேன் அதான் என்ன பேசினாலும் அவரை பத்தி பேசி முடித்து முடிக்கறிங்க என்றபடி அவளின் அறைக்குள் சென்றாள்.


வெளியில் இருந்தபடியே லட்சுமியும் அவரின் பங்கிற்கு கத்தினார் ஆமாண்டி பேசவேண்டியவங்களை பத்தி பேசினா உனக்கு கோபம் தான் வரும்.



தேவையே இல்லாத ஆளுகளை பத்தி நீ பேசுறதை நான் கேட்டுக்கனும்… ஆனா உன் புருஷனை பத்தி பேசினா உன்னால நின்னு கூட கேட்க முடியாது அப்படித்தானே…


உன் மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க இப்படியே காலத்துக்கும் இப்படியே இருந்திடலாம்ன்னியா…


கொஞ்சம் உன்ன பத்தி மட்டும் கவலைப்படாம சுத்தி இருக்கிற எல்லாரும் பத்தியும் கவலைப் படு…உன்னோட சுயநலத்தால உன் பொண்ணு அப்பா பாசம் இல்லாம வளர்ந்துட்டு இருக்கா.

அப்பாங்கற பாசமே கிடைக்காம ஏங்கறது உனக்கு புரியலையா…என்று கேட்கவும்.


கதவைத் திறந்து வெளியே வந்த கௌசல்யா என்னமா உங்க பிரச்சனை முதல்ல அதை சொல்லுங்க… நான் இந்த வீட்ல இருக்கிறதா… இல்லை என் பொண்ணை நீங்க பார்த்துக்கறதா…?. எதா இருந்தாலும் வெளிப்படையா பேசிடுங்க.

ரெண்டும் இல்ல கௌசி…வாழ வேண்டிய வயசுல இப்படி தனி மரமா பொம்பள பிள்ளைய கையில வெச்சி கிட்டு நிக்குறியே அதுதான் என் பிரச்சினை.



உன் வாழ்க்கைக்கு சீக்கிரமா ஒரு முடிவெடு… உனக்கு மாப்பிள்ளை கூட சேர்ந்து வாழ விருப்பம் இல்லனா முறையா ரெண்டு பேரும் பேசி பிரிஞ்சிடுங்க… அதுக்கப்புறம் உனக்கான ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொடுக்க நானும் அப்பாவும் தயாராக இருக்கோம் அதை விட்டுட்டு இப்படி தனியா இருந்து ஊர் வாய்க்கு அவுல் அள்ளி கொடுக்காத…


மா ப்ளீஸ் ஏற்கனவே தலைவலியோட ஆபிஸ்ல லீவு போட்டுட்டு வந்து இருக்கேன்… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்க…ஏண்டா லீவ் எடுத்தோம்னு பீல் பண்ண வைக்காதீங்க..



தெரிஞ்சோ தெரியாமலோ உங்க எல்லோரோட பேச்சையும் கேட்டுட்டு கொஞ்சம் கூட யோசிக்காம ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டேன்.


அதோட விட்டேனா… ஒரு பிள்ளையையும் பெத்துகிட்டேன்…எனக்கு அவ மட்டும் போதும்மா…வேற ஒரு கல்யாணமும் வேண்டாம் ஏற்கனவே செஞ்சுவச்ச கல்யாணமும் எனக்கு வேண்டாம். விட்டுடுங்க அம்மா… உங்களை கையெடுத்து கும்பிடுறேன் என்று கண்களில் நீருடன் கையெடுத்துக் கும்பிட்டவள் அழுதபடியே அறைக்குள் சென்று பெட்டில் குப்புற விழுந்து கதறி அழ ஆரம்பித்தாள்.


உள்ளே மகள் அழ… அதைக்கண்ட லட்சுமி வெளியே நின்று கண்கலங்க மற்றொரு அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளோ நாங்களும் இருக்கிறோம் என்பது போல சினுங்கத் தொடங்கினர்.



வளர்ந்த மகளை சமாதானப்படுத்துவதா… இல்லை சினுங்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவதா என்று சில வினாடிகள் யோசித்த லட்சுமி மகளை விட்டுவிட்டு பேரக்குழந்தைகளின் அறைக்குள் சென்றார்.
 
Last edited:
Top