கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விந்தையென வந்த வரவே

Indu Shyam

Moderator
Staff member
கண்களில் எதிர்பார்ப்பும் மனதில் சிறு நடுக்கமும் கொண்டு கையிலிருந்த கருத்தரிப்பு பரிசோதனை கருவியை பார்த்தவளுக்கு அது சட்டமாக ஒரு சிவப்பு நிற வரியை மட்டும் காட்டியது. இருபத்தி இரண்டாவது சோதனையிலும் எதிர்மறையான முடிவை கண்டவளுக்கு இம்முறை மனதில் கனத்த வலி. கண்களில் வழிந்த நீர்துளிகளை துடைத்தவாறு சிறிய மஞ்சள் நிற காகிதத்தில் 'மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை நோக்கி' என்று எழுதிவிட்டு அதை குளியறையில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டிவைத்தாள். வழக்கமான காலை வேலைகளை முடித்துவிட்டு, அலுவலுகம் செல்ல முற்பட்டாள். துயில் கொண்டிருக்கும் கணவனிடம் மெல்ல நெருங்கி கேசத்தை கோதிவிட்டு ஆழ்மூச்சு விட்டவள் பிறகு அவன் நெற்றியில் தன் இதழை பதித்து விட்டு அலுவலுகத்திற்கு பறந்தாள்.

கைபேசியின் தொடர் ஒலியால் கண்விழித்தவன், அதை அணைத்து விட்டு மீண்டும் உறங்க சென்றான். அடுத்த சில நொடிகளில் மீண்டும் தொடர்ந்து ஒலித்ததால் தூக்க கலக்கத்தில் பேச தொடங்கியவன், எதிர்முனையிலுருந்து வந்த பேச்சை கேட்டுவிட்டு, 'கண்டிப்பாக இம்முறை பணத்தை செலுத்திவிடுகிறேன்' என்று உறுதியளித்த பிறகு, மனமின்றி எழுந்து புத்துணர்ச்சி பெற சென்றான். முகத்தில் தண்ணீரை தெளித்து தூக்கம் கலைந்தவனின் கண்கள் எதிரிலிருக்கும் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த செய்தியை பார்த்ததும் மீண்டும் ஒரு எரிச்சல். காகிதத்தை கசக்கி எறிந்தவன் தன் மனைவியை அழைத்தான். இரண்டு முறை தொடர்ந்து அழைத்தவனுக்கு எதிர்முனையில் பதில் இல்லாததால் தன் நான்கு சக்கிர வாகனத்தில் அலுவலகத்திற்கு புறப்பட்டான்.

செந்தில்நாதன் சென்னையில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிபவன். அமெரிக்காவிற்கு சொந்தமான அலுவலுகத்தில் பணிபுரிவதால் அந்த நாட்டின் நேரத்தின் அடிப்படையில் வேலை செய்ய நிர்பந்தம். அதாவது இரவு நேரத்தில் பணிபுரியும் கட்டாயம். திவ்யா அவனது மனைவி, பிரபல ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் பணிபுரிகிறாள். திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் உருண்டோடின. முதல் இரண்டு ஆண்டுகள் பிள்ளை பெறுவதை தள்ளி வைத்தவர்கள் அடுத்து வந்த காலத்தில் அதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் பயனில்லை. மருத்துவர் ஆலோசனைப்படி அனைத்தும் பின்பற்றியும் முடிவு சாதகமாக இல்லை. வேலை பளு, மன அழுத்தம், பண நெருக்கடியால் ஏற்படும் மன உளைச்சல் என்று அனைத்தையும் சுமக்கும் இவர்களால், மருத்துவர் கொடுக்கும் மருந்துகளும் பயனில்லாமல் போனது.

நகரத்தின் பிரத்யேக சக மேல் வர்கத்தினர் வாழும் மனிதர்களில் இவர்களும் அடக்கம். வாழ்க்கையில் தேவைக்கு மீறி பார்ததனைத்தும் வாங்கும் குணம். ஊருக்காக செலவு செய்து அதில் பெருமிதம் கொள்பவர்கள். இருவர் மட்டும் வாழ்வதற்கு மூன்று படுக்கையறை கொண்ட வாடகை வீடு. இதை தவிர சொந்தமாக ஒரு வீடு வேண்டுமென்று நகரத்தின் எல்லையில் பல லட்சத்தில் பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடும் உள்ளது. வங்கியில் கடனாக பெற்று வாங்கிய வீட்டிற்கும் வசதியாக வாழ ப்ரம்மாண்டமாக வீடடிருக்கும் சம்பளத்தில் முக்கால் பணத்தை வீண் செய்பவர்கள். ஒரு கட்டத்திற்கு மேல் செலவை சமாளிக்க முடியாததால் வங்கி மூலமாகவும் கடன் அட்டை மூலமாகவும் அளவு தெரியாமல் கடனை ஏற்றிக்கொண்டு இன்று அது கழுத்து வரை முட்டும் அளவிற்கு நிற்கும் நிலை. கொஞ்சம் கொஞ்சமாய் சரி செய்ய முயற்சித்தபோது தான் செந்திலின் தங்கையிற்கு திருமணம் நிச்சியிக்கப்பட்டது.

செந்தில் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் ஒரு அழகிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அப்பா, சொக்கலிங்கம் இன்றும் அவர்களின் குலத்தொழிலான நாட்டு மருந்துக்கடையை வைத்து, சில மூலிகை செடிகளை வளர்த்து மருந்தாக பயன்படுத்துபவர். அவரின் துணைவி மீனாட்சி மருந்து தயாரிப்பதில் அவ்வப்போது உதவி செய்வார். தங்கை தமிழ்ச்செல்வி பட்டப்படிப்பை முடித்து ஆசிரியர் தேர்வை எழுதிவிட்டு தேர்வின் முடிவை எதிர்நோக்கும் பெண். தேர்வின் முடிவு வெளிவரும் முன்பே அதே ஊரில் வசிக்கும் பண்ணையாரின் மகனுடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த இடத்திலும் வங்கியிலும் பணத்தை திரட்ட முடியாததால் செந்தில் திகைத்துப்போனான். பணம் இல்லையென்று சொல்லவும் முடியாமல் அதற்கான வழியும் தெரியாமல் கவலையில் இருந்தான். சொக்கலிங்கத்தின் சேமிப்பிலேயே அனைத்து திருமண செலவுகளையும் எதிர்கொள்ள முடிந்தபோதும், அண்ணன் என்று தான் செய்ய நினைக்கும் சீரை செய்யமுடியாமல் கடன்கள் அவன் கைகளை கட்டிப்போட்டது. இப்படியே எவ்வளவு நாள் தான் கடத்துவது என்றெண்ணிய வேளையில் திவ்யா ஆறுதலாக பேசினாள். 'செல்வியின் திருமணம் நெருங்குகிறது. கையில் இருக்கும் பணத்தை வைத்து முதலில் பட்டு புடவைகளும் சில நகைகளும் வாங்குவோம். அப்படியும் பணம் தேவைப்பட்டால் சமாளித்து கொள்வோம். முதலில் ஊருக்கு சென்று அங்குள்ள நிலைமையை காணலாம்' என்று சொன்னதும் செந்திலிற்கு சரி என்று பட்டது. எப்பொழுதும் ஊருக்கு சென்றாலும் தங்களது மடி கணினியை மறவாமல் எடுத்து செல்லுவார்கள். விடுமுறை நாட்களில் கூட வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதற்கு தீர்வாக இருக்கும் என்பதால். அன்றும் அதே வழக்கம் போல் எடுத்து சென்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தவர்களை ஆசையுடன் வரவேற்ற சொக்கலிங்கமும் மீனாட்சியும் மகிழ்ச்சியில் இருந்தனர். பரஸ்பர உபசரிப்பிற்கு பிறகு மாமியாருடனும் நாத்தனாருடனும் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தாள். மகனும் மருமகளும் என்னதான் கைநிறைய சம்பாதித்தாலும் அதில் எந்த வித பண ரீதியான உதவியை என்றும் எதிர்பாராத தம்பதியர். மகளின் திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் அவர்களின் சேமிப்பிலேயே செய்தனர்.

வீட்டில் எப்படி பணத்தை பற்றி சொல்லி சமாளிப்பது என்ற கவலையில் இருந்த மகனின் வாட்டத்தை கண்ட சொக்கலிங்கம் 'என்ன ப்பா? ஏதோ வாட்டமாக இருக்கிறாய். ஏதாவது உதவி வேண்டுமா? என்று தோழமையாக கேட்டவுடன் உண்மையை சொல்லி கஷ்ட படுத்த வேண்டாம் என்றெண்ணினான். மீனாட்சி மகனின் என்ன ஏட்டை படித்ததாற்போல் 'செல்வி மாமியாரின் வீட்டில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நாமாக விரும்பி செய்வது தான் செந்தில். பெரிய இடம் என்றாலும் முதலில் இருந்த பயம் பழகிய பிறகு அவர்களின் பெருந்தன்மை புரிந்தது. அதனால் செல்விக்காக செய்த நகைகளில் அனைத்தையும் போடாமல் சிலவற்றை நிறுத்திக்கொண்டு, மெதுவாக அடுத்தடுத்து வரும் சுப விசேஷங்களுக்கு மீதி நகைகளை கொடுத்துவிடலாம் என்று இருக்கிறோம்' என்று சொன்னார். அதை கேட்ட செந்தில் தன் அன்னை அவனின் கவலையை முகத்தை வைத்தே எப்படி புரிந்துகொண்டார் என்று வியந்தான். 'அம்மா, அவர்கள் பெருந்தன்மையாக சொன்னாலும் நாம் செய்வதை எதையும் குறைக்காமல் செய்ய வேண்டும். ஒரு அண்ணனாக நான் செய்யும் சீரை சிறப்பாக செய்ய நினைக்கிறேன். எல்லாம் நல்ல படியாக முடியும்' என்று நம்பிக்கை கொடுத்தான்.

திவ்யாவும் செந்திலும் இருந்த பணத்தில் தங்கைக்கு தேவையான பட்டு துணிகளும் ஒரு அட்டிகையும் வாங்கினர். மீதமுள்ள பணத்தை கை செலவிற்காக வைத்துக்கொள்ளலாம் என்றெண்ணினர். வந்த வேலை முடிந்ததும் மீண்டும் சென்னை திரும்ப தயாராகினர். திருமணம் நெருங்கினாலும் ஒரு முறை சென்னை சென்று சில பணிகளை முடித்துவிட்டு மீண்டும் திருமண நாளையொட்டி விடுப்பு எடுத்துக்கொண்டு வரலாம் என்று திட்டம் போட்டனர்.

காலை விழித்தவுடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தியை கண்டு ஸ்தம்பித்தனர். நாடு முழுவதும் பல உயிர்களை கொன்று பரவி வரும் கொரோனா என்கிற உயிர்கொல்லி கிருமி மிக வேகமா பரவி இந்தியாவிலும் பரவியது. தொற்று அதிகமாக ஏற்பட்டதால் தேசிய ஊரடங்கு உத்திரவாதம் போடப்பட்டுள்ளது. அதனால் ஊர் திரும்ப முடியாமல் தவித்தார்கள். அவர்களின் அலுவலுகத்தை தொடர்புகொண்ட பொழுது தற்காலிகமாக வீட்டிலிருந்தே பணி புரிய உத்தரவிட்டனர். கண்களுக்கு தெரியாமல் பழிக்கும் கிருமியால் உலக அளவில் உயிர் இறந்தவர்களின் பட்டியலை கண்டு மனம் துடித்தார்கள். திருமணம் ஒருபுறம் கேள்வியாக நிற்க, மறுபுறம் ஊர் திரும்ப முடியாமல் தவித்தார்கள்.

முதல் வாரம் கொஞ்சம் கடினமாக அலுவலுக பணியை செய்தவனுக்கு பிறகு அது பழகி போனது. திவ்யா விற்பனை துறையில் இருப்பதால் அவளின் நிறுவனம் தற்காலிகமாக பணியாளர்களுக்கு ஓய்வளித்திருந்தனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு திவ்யா இப்பொழுது ஒரு முழு நேர இல்லத்தரசியாக மாறினாள். நாட்கள் மெல்ல நீந்தி செல்ல, செந்தில் மற்றும் திவ்யாவின் மனதில் ஒரு மாற்றமும் நிம்மதியும் ஏற்பட்டது. கொரோனாவால் வங்கியில் கடன்களுக்கு தற்காலிக தள்ளுபடி போடப்பட்ட நிலையில், செந்தில் அதை உபயோகித்து, கையில் இன்னமும் பணத்தை கண்டான்.

ஒரு நாள் சொக்கலிங்கத்தின் கடையில் வாடிக்கையாளர்கள் சற்று அதிகமாக பெருகினர். கபசுர குடிநீர், நிலவேம்பு, சித்தரத்தை போன்ற கஷாயம் சார்ந்த மருந்துகளை மக்கள் வாங்கினர். அதன் உற்பத்தியிலும் அதிக கவனம் செலுத்தியதால், சில உதவிகளுக்காக மகனை நாடினர்.. அந்த மருந்துகளின் பயன்பாட்டை அறிந்த மக்கள் வியாதியிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள கொரோனாவில்லா கிராமமாக மாற்றினர். அதில் ஆச்சரியம் கொண்டவன் மெல்ல கடையிலுள்ள அனைத்து மருந்துகளையும் ஆராய்ந்தான். ஒவ்வொரு நோய்க்கும் இயற்கை வழியில் மருந்தாக இருக்கும் பொருட்களை பார்த்து வியந்தான். ஆரம்பத்திலிருந்து அவர்களது குலத்தொழிலில் பெரிதும் ஈடுபாடு இல்லாததால் சொக்கலிங்கம் ஓரளவிற்கு மேல் செந்திலை வற்புறுத்தவில்லை. என்றாவது ஒரு நாள் இதன் தனித்துவத்தை புரிந்துகொள்ளவான் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

கண்களை சுழல விட்டவனுக்கு ஆண்களின் விந்தணு எண்ணிக்கை பெருக்குவதற்காக பயன்படும் ஒரு மருந்தின் மீது நிலைத்தது. அதை ஆர்வமாக எடுத்தவன் அதன் கலவையின் பொருட்கள், பயன்பாடு மற்றும் அதனை உபயோகிக்கும் முறையை படிதான். குழந்தை பெற தவமிருந்த நிலையில், அவர்களது மருத்துவர் சொன்ன காரணம் மனதில் மின்னல் வேகத்தில் வந்தது. செந்திலின் விந்தணு எண்ணிக்கை சற்று குறைவாக இருப்பதால் தான் குழந்தை பாக்கியம் தள்ளிப்போகிறது என்று. சில மாத்திரைகளை கொடுத்து, யோகா மற்றும் அழுத்தத்திலிருந்து வெளிவர பயிற்சிகளை செய்ய சொல்லி ஆலோசனை தந்தார். மாத்திரைகளை மட்டுமே சாப்பிட நேரம் இருந்தவனுக்கு பண நெருக்கடியிலிருந்து விடுப்பு கிடைக்கவில்லை. அதனால் அந்த மருந்தின் ப்ரியோஜனமும் இல்லாமல் போனது.

கடையில் இருக்கும் அந்த குறிப்பிட்ட மருந்தை எடுத்துக்கொண்டு எவருக்கும் தெரியாமல் உபயோகம் செய்தான். விடியற்காலையில் இளம் வெயிலில் நடைப்பயிற்சி மேற்கொண்டான். அந்திசாயும் வேளையிலும் சிறு நடை பழகினான். வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் அமர்ந்து உணவுண்டு கூடி பேசியதில் வாழ்க்கை இன்பமாயமாக மாற துவங்கியது. இருந்தபோதும் தங்கையின் திருமண செலவை எண்ணி குழம்பினான். அவனின் குழப்பத்தை தீர்ப்பதற்காகவே அமைந்ததுபோல், அரசாங்கம் சில விதிமுறைகளை அறிவித்தது. அதில், திருமணம் சடங்கிற்கு மொத்தத்தில் முப்பதுபேர் மட்டுமே அனுமதியென்று. அரசாங்க கட்டளை படி நல்லபடியாக திருமணத்தை முடித்தவன் மனதில் ஆயிரம் கேள்விகள். ஒரு நோயால் வாழ்க்கையில் சிலவற்றை கற்றுக்கொண்டோம். ஆடம்பரமில்லாமலும் திருமணம் நடத்தலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாக இருந்தது. பிரம்மாண்டமாக செய்யாவிட்டாலும் தங்கையின் பெயரில் வங்கி கணக்கில் ஒரு தொகையை போட்டுவிட்டான்.

நாட்கள் உருண்டோட இவர்களிடம் இருக்கும் மருந்திற்கு தேவை பெருகியதால் திருநெல்வேலியிலும், திருச்சி, மதுரை மற்றும் சென்னையிற்கு விநியோகம் செய்து குறுகிய காலத்தில் அதிக லாபத்தை கண்டனர். இருப்பினும் இந்த நோய் விரைவில் உலகத்தை விட்டு செல்ல வேண்டும் என்று மனதார வேண்டினர். இரண்டு மாதங்கள் மின்னல் வேகத்தில் ஓடியது. அன்று காலை மீண்டும் திவ்யா நடுங்கிய கைகளுடன் கருத்தரிப்பு சோதனையை மேற்கொண்டாள். அந்த கருவியில் முதலில் ஒரு வரியை சிவப்பாக மாற்றி அடுத்த சில நொடிகளில் இரண்டாவது வரியின் நிறத்தை மாற்றியது. முதல் முறை இரு வரிகளை கண்டவளுக்கு சந்தோஷத்தில் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இந்த இனிப்பான செய்தியை செந்திலிடம் தெரியப்படுத்த, அவள் எப்பொழுதும் உபயோகப்படுத்தும் குறிப்பு தாளில் 'மகிழிச்சியுடன் எதிர்நோக்கும் குட்டி கண்ணனோ குட்டி ராதையோ, விரைவில் ! என்று எழுது அவனின் மடி கணினியில் ஒட்டி வைத்தாள். அவன் எப்பொழுதும் இரவு நேரத்தில் வேலை செய்வதால் பகலில் நன்கு துயில் கொண்டிருந்தான். அவன் எழும் வரை பொறுக்க முடியாமல் இருந்தாள் திவ்யா. வீட்டிலிருந்த பெரியவர்களிடம் சந்தோஷ செய்தியை பகிர்ந்து ஆசிர்வாதமும் பெற்றாள். மீனாட்சி உடனடியாக இனிப்பு செய்து மகிழ்ச்சியில் நிறைந்திருந்தார்.

மதியம் கண் விழித்தவன் தன் மடிக்கணினியில் ஒட்டியிருந்த செய்தியை பார்த்து, கண்கள் அருகிலிருந்த கருத்தரிப்பு சோதனை கருவியிடம் சென்றது. இரண்டு வரிகளை காட்டிய கருவியை கையில் எடுத்துக்கொண்டு தன் மனைவியை தேடி வந்தவன் சந்தோஷத்துடன் அவளை அணைத்து தன் முத்தங்களை பரிசாக தந்தான். பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கியவன், ஊர் எல்லையிலிருக்கும் கருப்பன்சாமி கோயிலுக்கு சென்று தன் மனமார்ந்த நன்றிகளை செலுத்தினான்.

தங்களிடமே இருக்கும் சக்தி வாய்ந்த இயற்கை மருந்தை விட்டு எங்கெங்கோ சென்றிருக்கோம். இந்த தொழிலை எக்காலத்திலும் விட கூடாது என்றெண்ணினான். மனைவியிடம் தனிமையில் பேசிய நேரத்தில் மனதிலிருந்ததை பகிர்ந்தான். கையில் வைத்துக்கொண்டே ஊரெங்கும் தேடின கதையையும், அவன் உட்கொண்ட மருந்தின் அருமையையும் கூறினான். அதற்கு திவ்யா, மருந்து மட்டுமில்லாமல் தாங்கள் சில காலமாக ஒழுங்கு முறையில் வாழ்க்கையை நடத்தி வருவதனால், மனதில் அழுத்தம் குறைந்து நிம்மதியாக இருப்பதாக சுட்டிக்காட்டினாள். ஆடம்பரமில்லாமல் எளிமையாக வாழ்வதே சிறந்தது என்று உணர்ந்தார்கள். கலந்து யோசித்ததில் மீண்டும் நகரத்து வாழ்வில் சிக்கி வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம். பிறக்கப்போகும் குழந்தை இந்த இயற்கையான சூழலில் வளர்வதே சரியான முடிவு என்றெண்ணினர். தங்களின் முடிவை பெரியவர்களிடம் கூறியதும் எல்லையில்லா ஆனந்தத்தில் இருந்தார்கள். சொக்கலிங்கம் தன் மகன் எடுத்த முடிவை எண்ணி கருப்பன்சாமி கோயிலுக்கு சென்று அவரின் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
 
Last edited by a moderator:

Latha S

Administrator
Staff member
இருப்பதை தொலைத்துவிட்டு, இல்லாததைத் தேடி செல்வது... அருமையாக இருந்தது. செந்தில் மாதிரி எத்தனையோ பேருக்கு எடுத்து சொல்லதான் கொரோனா வந்தது போல.. உங்கள் எழுத்துநடை நன்றாக இருக்கிறது.. வாழ்த்துகள்.
 

Indu Shyam

Moderator
Staff member
இருப்பதை தொலைத்துவிட்டு, இல்லாததைத் தேடி செல்வது... அருமையாக இருந்தது. செந்தில் மாதிரி எத்தனையோ பேருக்கு எடுத்து சொல்லதான் கொரோனா வந்தது போல.. உங்கள் எழுத்துநடை நன்றாக இருக்கிறது.. வாழ்த்துகள்.
Thank you so much mam !
 
Top