அத்தியாயம்-11
வீட்டுக்கு போனதும் தனு அஸ்வின் சேர்ந்து வருவதை கண்டு ராதை என்ன டா எப்போ வந்த? என்றார்.
''காலையில் அம்மா'' என்றவன் சூட்கேஸ் சோஃபாவில் வைத்தான்.
''காலையில் வந்து... இப்ப வர்ற?'' என்று கேட்டார்.
''நான் பெங்களூர் போகலை. ஆஸ்திரேலியா போனேன். ராம் அக்கா மாமாவை கூப்பிட்டு வந்தேன். நிஷாவுக்கு கொஞ்சம் பிரச்சனை.'' என்றான்.
''என்ன டா பிரச்சனை..?'' என்று அன்னை கேட்க சித்திக் பற்றி சொல்ல முடியுமா?
''அது அது வந்து அவளுக்கு பேபிகாக ட்ரீட்மென்ட் எடுத்து அது தோற்றுடுச்சு சோ கவலையா இருக்கா. அம்மா நான் குளிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கறேன்'' என மாடிக்கு ஏறினான்.
தனுவோ அப்போ அந்த லேடி ராமின் அக்காவா? அந்த இன்னோருத்தர் ராமின் மாமா என யோசித்தாள்.
''நீ என்ன யோசிக்கற... பாலை குடி'' என ராதை அதட்டினார்.
''நீ என்ன அஸ்வின் கூட சேர்ந்து வந்த தனு'' என சுவாதி கேட்டதும்,
''நான் இன்னிக்கு காலேஜ் போகலை அண்ணி. அண்ணா தான் என்னை அந்த நி..ஷா அ..க்கா அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு போய் அவங்க கூடவே இருக்க சொன்னாங்க. இன்னிக்கு காலையில் நான் தான் பாலை காய்ச்சி விளக்கு ஏற்றினேன். அவங்க ஒரே வருத்தமா இருந்தாங்க. எதுவும் பேசலை. ஆனா ரொம்ப கலங்கி இருந்தாங்க. அண்ணா அப்பறம் அவர் பிரென்ட் சேர்ந்து வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் வாங்கி செட்டில் பண்ணி கொடுத்துட்டு தான் அண்ணா என்னை இங்க கூப்பிட்டு வந்தார்'' என்றதும் விஸ்வநாதன்-ராதை, சுவாதி-ஆகாஷ் எல்லோருக்கும் நிஷா அவளின் வருத்தத்தை எண்ணி வருந்தினார்கள்.
''இப்போ எப்படி இருக்காங்க?'' என்றாள் சுவாதி.
''வரும் பொழுது இருந்த மாதிரியே தான் சோகமா இருந்தாங்க''
''தனு நீ போய் வேலையே பாரு'' என்று ராதை சொல்லிட நகர்ந்தாள்.
''ஹ்ம் எல்லாருக்கும் ஒரு சோதனை கடவுள் வைக்கிறார் அதுக்கு பிறகே நல்லது செய்வார்'' என நடைமுறை வேலைய பார்க்க துவங்கினார்கள்.
அஸ்வின் குளித்து முடித்து நீண்ட உறக்கம் ஒன்றில் திளைத்தான.
எழுந்த பொழுது மணி ஏழு என்று காட்டிட, வேகமாக முகம் அலம்பி ஹாலில் வந்திட, அங்கே எல்லோரும் இருக்க, சுவாதியிடம் காபி வாங்கி பருகியவாறு,
''அம்மா எனக்கும் ராமிற்கும் நைட் சாப்பிட கொடுத்திடுங்க நான் அங்க போய் சாப்பிடுகிறேன்'' என்றதும்
''ஏன் டா இன்னிக்கு தானே வந்த அதுக்குள்ள கிளம்பிட்ட?''
''அம்மா ஒன்னு ஒண்ணா சொல்லிட்டு இருக்க முடியாது''
''ஏன் கொளுந்தனாரே பவித்ரா இல்லைனா நீங்க இப்ப எல்லாம் வீட்ல தங்கறதே இல்லையே?'' என்றே சுவாதி சிரிப்புடன் சொல்ல
''ஹ்ம் ஏன் உங்களுக்கு இந்த வத்தி வைக்கற வேலை அண்ணி?'' என்றான் அஸ்வின்.
''சும்மா போரடிக்கு அதான்''
''நீங்க என்ன தான் வத்தி வைக்க ட்ரை பண்ணினாலும் எங்க அம்மாவுக்கு என்னை பற்றி தெரியும்'' என ராதையை சொல்ல அஸ்வினின் தலையை கலைத்துவிட்டு சிரித்தபடி சென்றாள் ராதை.
''அம்மா நான் நைட் வர லேட்டா ஆகலாம். கீ எடுத்துக்கிட்டு போறேன்'' என சொல்லி சென்றான்.
ராமின் வீட்டுக்கு வந்தபொழுது மணி எட்டினை தொட்டது.
''நிஷா சாப்பிட வைச்சிட்டு வந்தியா?'' என்றதும்
''ஹ்ம்... ஒரே கண்ணீர் தான். ஏன்டா என்கிட்ட நீ சொல்லாமல் வந்த என்று''
''ஹ்ம் ... வேற?''
''வேற எதையும் பேசலை. நீ அழாம இருன்னு சொன்னேன். வேற என்ன செய்ய?'' என்றான் சோகமாக.
''சித்திக்?'' என்று அவனை பற்றி கேட்டான்.
''அவன்கிட்ட பேச பிடிக்கலை. சரி இப்போ சொல்லு என்ன ஆச்சு எப்படி நடந்துச்சு'' என்றதும் அஸ்வின் சொல்ல துவங்கினான்.
''முதல் நாள் எதையும் காட்டிக்கலை. நான் வந்ததே உனக்கு தெரியாது என்ற உண்மை தான் சொன்னேன். சித்திக் என்னை பார்த்து கொஞ்சம் நிம்மதி ஆனான். நிஷா என்னை சந்தோஷமா வரவேற்றா.
நிஷாவுக்கு முதலில் நான் சொல்ல போற விஷயத்தால் பாதிக்க கூடாது என்று நினைச்சேன். முதலில் அவகிட்ட என் பிரென்ட் ஒருத்தருக்கு பிரச்சனை என்றேன்.
''நிஷா எனக்கு தெரிஞ்ச ஒரு பிரென்ட்டோட சிஸ்டர்க்கு ஒரு கவுன்சீல் தரணும் எப்படி கொடுக்க'' என்றேன்.
''என்ன பிரச்சனை என்று சொல்லு நான் எப்படி என்று சொல்றேன்'' என்றாள் நிஷா.
''என் பிரென்ட் சிஸ்டரோட ஹஸ்பண்ட் கூட ஒர்க் பண்ற கொலிக் கூட எல்லை மீறி பழகறான். அந்த பொண்ணுக்கும் அதுல பிரச்சனை இல்லை. ஆனா என் பிரென்ட் சிஸ்டர்கிட்ட சொல்லணும் அதுவும் பீல் பண்ற மாதிரி இல்லாம தைரியம்மா. அவங்களுக்கு குழந்தையும் இல்லை என்ன செய்ய சொல்லு'' என்றேன். கொஞ்ச நேரம் நிஷா யோசிச்சா பிறகு
''அஸ்வின் இதுக்கு இரண்டு வழி இருக்கு பர்ஸ்ட் அந்த பொண்ணு வேற வழி இல்லை அவன் கூடவே சகிச்சுக்கிட்டு வாழனும். தமிழ்நாட்டு முறைப்படி. ரெண்டு டிவோர்ஸ் கொடுத்துவிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கணும் பிடிக்கலையா தனியா வாழ முயலனும். ஆனா இது அந்த பொண்ணு தானா முடிவு எடுக்கணும். அதை விடுத்து முட்டாள்தனமா சூசைட் பண்ணிக்க கூடாது. எப்படியும் திடமான பெண்ணா இருந்தா கொஞ்சம் நல்லபடியா யோசிப்பா. அந்த பொண்ணு எப்படி''
''தெரியலை நிஷா பேசி பார்க்கறேன் தேங்க்ஸ் நிஷா'' என சொல்லிட்டு வந்துட்டேன்.
அடுத்த நாள் நேரா சித்திக்-நிஷா ஒர்க் பண்ற ஹாஸ்பிடல் MD போய் பார்த்தேன் தெளிவா பிரச்சனை பற்றி சொன்னேன். ரொம்ப கூலாக அவர் "மேக்னா லைப் நான் தீர்மானிக்க முடியாது. ஏன் என்றால் இது தனிப்பட்ட ஒரு பெண்ணின் விருப்பம். இங்க அப்பா அம்மா என்றவர்கள் சும்மா தான். அறிவுரை சொல்லி ஏற்றுக்கொள்ளும் நிலை எல்லாம் இல்லை'' என்ற பொழுது தான் எனக்கு நகுலன் கால் செய்தார்.
அவர்கிட்ட எக்ஸ்கியூஸ் கேட்டுட்டு போன் பேசினேன்.
''சொல்லுங்க நகுலன்''
''.......''
''அப்படியா வாழ்த்துக்கள் நகுல். குழந்தை எப்படி இருக்கு?''
''.............''
''ஆமா நகுலன். இங்க அந்த ஹாஸ்பிடல் MD கூட தான் பேசிட்டு இருந்தேன்''
''..........''
''இருக்கார். இருங்க தருகின்றேன்'' என போனை கையில் பொத்தி உங்க ரிலேட்டிவ் நகுலன் பேசறார்'' என கொடுத்தேன். கொஞ்ச நேரம் பேசி திரும்ப கொடுத்தார்''
''நகுலன்... சே சே அதெல்லாம் பிரச்சனை இல்லை. என் ஒய்ப்க்கு இன்னும் ஒன் மந்த் இருக்கு டெலிவரிக்கு.. ஓகே அப்பறம் மறுபடியும் போன் பண்றேன்'' என வைக்கும் பொழுது தான் டீன் கேட்டார்.
''நகுலனை உங்களுக்கு எப்படி தெரியும்?''ன்னு
''ஜஸ்ட் ரயில் சினேகிதம் மாதிரி விமான சிநேகிதம். ஆனா நல்ல தோழனா இப்போ... ஏன் கேட்கறீங்க?'' நகுலனின் நட்பு எனக்கு அந்த நேரம் பலமா இருந்தது அது எனக்கே தெரியலை.
''நத்திங்... அஸ்வின் நான் முடிவு செய்து இருக்கேன் நீங்க சொல்றதுக்கு கேட்கறேன். என் பொண்ணு மேக்னாவை நான் பார்த்துக் கொள்வேன். உங்க சித்திக் இதுல திரும்ப தலையிடாம இருக்க நீங்க பார்த்துப்பீங்களா? என்றார். சரி என்றதும் மேக்னா சித்திக் ரெண்டு பேரையும் அழைத்தார்.
சித்திக்கிற்கு என்னை அங்க பார்த்ததும் செம கோவம். பயம் இருந்தாலும் சமாளிக்க ட்ரை பண்ணினான்.
''என்ன டா ஒருத்தன் அப்படியே அமைதியா போயிட்டானே என்று இருந்தேன். நீ வந்ததும் பக்குனு இருந்துச்சு. அவன் எப்படியும் உங்கிட்ட சொல்லாமலா, இங்க வந்த என்று எனக்கு டவுட் இருந்துச்சு'' அப்படின்னு சித்திக் திமிரா பேசினான்.
''என்ன முடிவு எடுக்க போற?''- அஸ்வின்.
''என்ன டா இரண்டு பேரும் மரியாதையை தர மாட்டிங்களா? போங்க டா நான் நிஷாவுக்கு டிவோர்ஸ் தந்துட்டா....'' என்றதற்குள் ஒரு அரை சித்திக் கன்னத்தில் விழுந்தது.
''ஏய் அடிக்கற... நிஷாவுக்கு டிவோர்...'' என்றதும் மீண்டும் ஒரு அடி விழ கொஞ்சம் இம்முறை மெல்ல எழுந்தவன் தள்ளாடி நிற்க அஸ்வின் பேசினான்.
''இன்னோரு முறை அப்படி வார்த்தை விடு உனக்கு இங்க போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டு நான் நிஷாவை இங்கிருந்து கூட்டிட்டு போய் வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். மவனே நேரா வீட்டுக்கு வர்ற ஊருக்கு கிளம்பற'' என்று சொல்லிட்டு அந்த எம்.டி கிட்ட அவனோட ஒர்க் லெட்டர் காண்டாக்ட் செர்டிபிக்கேட் அப்பறம் திருந்தின பிறகு கொடுக்க சொல்லி அவர் என்கிட்ட கொடுத்துட்டார். இருந்து கையோட வாங்கிட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன். சித்திக் அங்கயே மெடிசின் எடுத்து கன்னத்துக்கு மருந்து தடவி வந்தார்.
அதுக்குள்ள வீட்ல நிஷாகிட்ட சொன்னேன். நிஷா அந்த பொண்ணுக்கு நான் சொல்றதை விட உன்னை மாதிரி ஒரு பொண்ணு அதுவும் டாக்டர் சொல் கேட்டா பெட்டர் என்று நினைக்கறேன் நீ பேசறியா?'' என்றேன்.
''போன் பண்ணி கொடுடா நானே பேசறேன்'' என்றாள் நிஷா.
நான் அமைதியா போட்டோஸ் எல்லாம் அவள் முன் பரப்பிட்டு கண்ணாடியை எடுத்து அவளின் முன் நீட்டினேன். ரொம்ப அழுதா..... என்ன என்னவோ பேசினா. சித்திக்கை உயிரா நினைச்சேன் என்று சொன்னா. தம்பி ஒருத்தன் தனியா இருப்பதை கூட மறந்து இங்க சித்திக் அன்பில் இருந்தேன்டா ஆனா அவன் இப்படியா? என்ற பொழுது சித்திக் வந்தார். சித்திக் மனம் கொஞ்சம் மாறி போச்சு. நிஷாவுக்கு செய்தது புரிந்தது.
அடுத்த பிளைட் ஏறி இங்க வந்துட்டேன். இனி அங்க என்ன வேலை'' என்றதும் ராம் கலங்கி போனான்.
''அஸ்வின் நாலு நாளில் எப்படி டா? எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டேய் நிஜமாவே அடிச்சிட்டியா?'' என்றான் மகிழ்சியாக.
''அவன் முகத்தை பார்த்தா தெரியலை. சாரி டா ராம் என் எதிர்ல அப்படி பேசியதும் அடிச்சிட்டேன்'' என்று வருந்தினான்.
''எனக்கே அடிக்கணும் என்று தோணுச்சு பட் நிஷா வாழ்க்கை நினைச்சு விட்டுட்டேன். இப்போ சித்திக் நிஷாவை ஏற்றுப்பானா?'' என்று சோகமானான்.
''டேய் இப்போ நிலைமையே வேற? நிஷா தான் அவனை ஏற்றுக் கொள்ளணும் அவன் நிஷாகிட்ட ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்டுட்டான். நிஷா தான் ஒரு வார்த்தை கூட பேசலை. ராம் நீயே முதலில் இதை செய்து கூப்பிட்டு வந்து இருக்கலாமே? ஏன்டா விட்டுட்ட?'' என்று திட்டினான்.
''அஸ்வின் நீ எப்பவும் தப்பு என்றால் சரி தவறு மட்டும் யோசிச்சு முடிவு எடுப்ப. உடனே கோவப்படுவ... எதிரில் யாரு என்ன என்று கூட பார்க்க மாட்ட. ஆனா நான் எப்பவும் பொறுமை தான் எதிரில் இருப்பது என் அக்கா அப்பறம் தப்பு சரி என்ற யோசனை கூட போக முடியலை. நான் எதாவது செய்ய போய் அது இருக்கற இந்த வாழ்க்கையும் கேட்டுடுமோ என்ற பயம் தான். அப்பாவும் இல்லை நிஷா சித்திக் தான் உலகம்ன்னு இருந்தா'' என்று தன் பக்க காரணம் உரைத்தான்.
''இப்படி பார்க்கறதால தான் தப்பு செய்யறவனு
க்கு ஈஸியா போகுது. சரி சாப்பிடு அம்மா கட்டி கொடுத்தாங்க'' பரிமாறியபடி மேலும் பேசி களைத்தார்கள்.
-தொடரும்
-praveena thangaraj