கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -14

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-14

நேற்றே நிஷா ஈவினிங் ஷாப்பிங் செல்லலாம் என்றதற்கு தனுவும் சரி அண்ணி வருகின்றேன் என சொல்லி இருந்தாள். ராமின் அக்காவோடு துணி மணி வாங்க, உதவி செய்ய போவதே அவளுக்கு மகிழ்ச்சி தந்தது. அதே உற்சாகத்தோடு நிஷா வீட்டுக்கு வந்து நின்றாள். கதவு திறந்து இருக்க கிச்சனில் ராம் நிஷா பேச்சு கேட்டது.

ஆஹா ராம் கூட இருக்காரா? அவரும் ஷாப்பிங் வர போகிறாரா? என்ற மகிழ்ச்சியில் சுழன்று கொண்டு இருக்க நிஷா பேசியது கேட்டது.

''ராம் எப்ப பாரு ஆபிஸ் கட்டி அழுவுற... நீ எப்படா கல்யாணம் பண்ண போற?'' என்ற கேள்வியில் தனு திக்கென்று உணர்ந்தாள்.

''நிஷா உனக்கு இன்னிக்கு நான் தான் கிடைச்சேனா?'' என்று தக்காளி பழத்தை தூக்கி விளையாடிக் கொண்டிருந்தான்.

''அஸ்வின் எல்லாம் கல்யாணம் பண்ணிட்டான். உனக்கு அக்கா என்று கூட இருந்து நான் என்ன பிரயோஜனம். சொல்லுடா பொண்ணு பார்க்கவா?'' என்று தாய் தந்தை இடத்திலிருந்து தற்பொழுது யோசித்தாள்.

''அஸ்வின் கல்யாணம் பண்ணிக்கிட்டா நானும் பண்ணிக்கணுமா? எனக்கு இப்போ வேண்டாம்'' என்று தக்காளியை வைத்து விட்டு நழுவ பார்த்தான்‌.

''ஏன்டா நீயாவது குழந்தை குட்டி என்று இருந்தா இந்த அக்காவுக்கு சந்தோஷமா இருக்குமே'' என்றாள் வாஞ்சையாக.

''சும்மா இரு நிஷா கடுப்பை ஏற்றாதே'' என்று எரிச்சல் பட்டான் ஶ்ரீராம்.

''உன்னை விட சின்ன பசங்கள் எல்லாம் ஆஸ்திரேலியால லவ் என்று நிற்பாங்க தெரியுமா?''

''இது ஒன்னும் வெளிநாடு இல்லை'' என்று முகம் தூக்கினான்.

''போடா நேற்று காய்கறி மார்க்கெட் போனேன். சூப்பர் மார்க்கெட்ல ஸ்கூல் பசங்க எத்தனை பேர் ஜோடி ஜோடியா போறாங்க தெரியுமா?'' என்று கண்ணுற்றதை வைத்து கூறினாள் நிஷா.

''ஹ்ம் எல்லாம் கொழுப்பு. அப்பா அம்மாவுக்கு உண்மையா இல்லமா ஊரை சுற்றுற கழுதைங்க. இதுல பசங்க பொண்ணு என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. வர்ற தலைமுறை எந்த அளவுக்கு புத்திசாலியா இருக்காங்களோ அதே அளவு அழிவு பாதையில போறாங்க. அதுவும் இந்த பொண்ணுங்க சர்வசாதாரணமாக சுத்தறது இருக்கே சே.'' என்றான்.

''போடா நான் உன் கல்யாணத்தை பற்றி பேசினா நீ ஏதோ அடுத்த தலைமுறைக்கு அட்வைஸ் பண்ண வந்துட்ட? மாடில மிளகாய் காயா வச்சிட்டு வர்றேன்'' என்று படிகளில் ஏறிட, ராம் ஹாலில் திரும்ப வந்து நிற்க எதிரில் தன்யா கண்ணீரில் நிற்பதை பார்த்து எதற்கு அழுகிறாள் என குழம்பினான்.

''நான் என்ன கழுதையா?'' என்ற தனு சொல்வதில் புரியாமல் விழித்தவன் அடுத்த நொடி தனு தனது பேச்சால் அழுகின்றாள் என்றது தாமதமாக புரிய தலையில் அடித்து கொண்டான்.

''தனு நான் உன்னை மீண்(mean) பண்ணி பேசலை பொதுவா தான் சொன்னேன்'' என்றதற்கு

"போதும்... என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தோணுது'' என்று அவனின் சட்டையை பிடித்தாள்.

''நானா உங்களிடம் என் லவ் சொன்னதால உங்களுக்கு என் மேல பேட் ஒப்பீனியனா? பட் நான் உங்களை ட்ருவா தானே விரும்பறேன். நீங்க திட்டினா பிறகு உங்களை எப்பயாச்சும் இம்சை செய்து பேச முயன்றேனா? நான் பாட்டுக்கு தானே இருக்கேன், ஏதாவது பேசினா போன முறை மாதிரி எங்கயாவது போய்டுவீங்களோனு பயந்து, எனக்குள் தானே என் காதலை வச்சிக்கிட்டேன். உங்களை டார்ச்சர் பண்ணலை. உங்களுக்கு என் காதலை புரிய வைக்க முயற்சி கூட பண்ணலை. அதுக்கு பிறகும் ரோட்டில் போற பொண்ணு மாதிரி என்னை 'சே'னு சொல்லறிங்க'' என்று தேம்பியபடி சட்டையினை விடுவித்தாள்.

''தன்யா நான் உன்னை மீண் பண்ணலை'' என்றான்.

''ப்ளீஸ் எதுவும் பேசாதீங்க. பேசின வரை நீங்க என்னை ரொம்ப காயப்படுத்திட்டீங்க. தேங்க்ஸ்'' என்று பெரிய கும்மிடு போட்டு வேகமாக வெளியேறிவிட்டாள்.

ராமோ மாடியில் நிஷா பார்த்துவிட்டாளா என கவனித்து தன்யா போனதை அறிந்து அப்படியே அங்கிருந்த படியில் உட்கார்ந்துவிட்டான்.

தலையை பிடித்து குனிந்தவன் கண்களை இறுக மூடி கவலையில் மூழ்கினான்.

இதையெல்லாம் ராமை பார்க்க வந்த அஸ்வின் அப்படியே உறைந்து நின்றான். தனு வேகமாக சென்றதால் உடனடியாக இடது பக்கம் அப்படியே மறைந்த அஸ்வினை அவள் கவனிக்கவில்லை. கேட் தாண்டி எப்பொழுதும் போல வலது பக்கம் சென்று விட்டாள். இடது பக்கம் இருந்த அஸ்வின் பைக் அவள் கண்ணில்படவில்லை.

உள்ளே சென்று ராமிடம் எதையும் பேச தோணாது. அப்படியே வெளியேறினான். பைக் பெசன்ட்நகர் பீச் நிறுத்தி அப்படியே மணலில் உட்கார்ந்தான் அஸ்வின்.

தனு... தன் தங்கையா? என் ஒரு குரலுக்கு ஓடி ஒளிபவள். எல்லோருக்கும் குட்டி செல்லம்.

அன்பு தங்கை வளர்ந்து விட்டாளா? எப்பொழுதும் நம் கூடவே வளரும் தங்கை நம் கண்களுக்கு சிறுபிள்ளை தான் அவளுக்கு எத்தனை வயது ஆனாலும். அதே நினைவுடன் தான் அஸ்வினுக்கு தோன்றியது.

ராமை விரும்பி இருக்கின்றாள். ராம் அதற்கு மறுத்திருக்கின்றான். தனுவிற்கு பயந்தா ராம் ஆஸ்திரேலியா சென்றான்.

அஸ்வினுக்கு அந்த நிலையிலும் சிரிப்பு வந்தது. தனுவிற்கு பயந்தா அவன் வெளிநாடு சென்றான் என்பதே.

தனு நிஷா இங்கே வந்த முதலில் இருந்தே ராமின் அருகே தான் இருக்கின்றாள் ஆனால் என்னால் எதையும் பார்க்காமல் எப்படிஇருந்தேன். என் கண்ணில் இருந்து எப்படி தப்பியது.

ராம் எப்படி துடித்திருப்பான். ஏற்கனவே நிஷா பிரச்சனை இதில் தனு வேறு அவனை காயப்படுத்தி இருக்கிறாளே.

இப்போ நான் என்ன செய்வேன். தனு ஒரு பக்கம் ராம் ஒரு பக்கம் நான் யாரை இழப்பேன்.

சே இதை தான் அன்று ராம் சொன்னனா? எதுக்காகவும் உன் நட்பை இழக்க மாட்டேன் என்று. இதனால் தான் குற்ற உணர்வோடு என் முகம் பார்க்க அஞ்சினானா? இந்த தனு ஏன் இப்படி செய்து விட்டாள்.

யோசித்த பொழுது தனு பேசிய வார்த்தைகள் நினைவு வர இம்முறை தனு சிறுபிள்ளை போல பேசியதாக தெரியவில்லை. அவளின் மனம் முழுதும் ராம் நிறைந்து இருப்பது புரிந்தது. ஆனால் அதுக்காக ராமின் வாழ்க்கை?

எப்பொழுதும் குழப்பமானால் நேராக பைக் எடுத்துக் கொண்டு ராமின் வீட்டுக்கு சென்று மனதின் எண்ணத்தை தெளிவாக அவனிடம் பேசிவிட்டு அதன் பின் இருவருக்கும் தோன்றிய யோசனையில் செயல் படுவான். பவித்ரா தன் வீட்டில் படிக்க இருக்கும் பொழுது நடக்கும் விஷயம் இது.

பவித்ரா பார்த்த முதல் நாள் ராமிற்கு போனில் சொல்லியதில் இருந்து, அவளை காலேஜில் சேர்த்த அன்றும், அதன் பின் அவளை அடித்து விட்டு அடுத்த மறுநாளும், சிக்கன் சாப்பிடாமல் அவள் இருந்த போதும், அவளை முதல் முறையாக பிரிந்த அன்று அவளுக்கு முத்தமிட்ட நாளிலும், பின்னர் சூர்யாவுக்கு திருமணம் என்று கேள்விப்பட்ட அன்றும், இப்படி எல்லா சூழ்நிலைகளிலும் ராமிடம் பேசியவன். ராமின் விஷயத்தை எப்படி அவனிடமே பேச?

இதனால் தான் ராம் தன்னிடம் சொல்ல தயங்கி தவிர்த்தானா? அவனிடம் பேச முடியாதா?

ஏன் பேச முடியாது. அஸ்வின் எப்பொழுதும் எடுக்கும் முடிவே சரி நீ எப்பொழுதும் போல செய்' என்ற ஆழ்மனம் எடுத்து சொல்ல அதன்படியே ராமின் வீட்டுக்கு பைக் எடுத்து கிளம்பினான்.

இம்முறை கிளம்பினாலும் ராமின் மனதில் என்ன இருக்கும்? தனுவை பற்றி அவனின் கருத்து என்ன? எப்பொழுதும் ஒரு பெண் காதலை சொன்னால் இந்த உலகம் அவளை எப்படி விளிக்கும் என்று அறியாதவனா அஸ்வின். எதுவானாலும் மனதை அழுத்தும் பாரத்தை களைந்திட எண்ணினான்.

எப்பொழுதும் உரிமையாக வண்டியை நிறுத்தி உற்சாகத்தோடு வரும் இந்த தோழனின் வீட்டிற்கு முதல் முறையாக கொஞ்சம் தயங்கிய வந்தான். கதவை தட்ட நினைத்தவன் அது திறந்தே இருப்பதை அறிந்து மெல்ல தள்ளினான்.

சோபாவில் கால்களை நீட்டி ஒரு கையை தலைக்கு தோதுவாக தலையணை போல கொடுத்துவிட்டு படுத்திட மற்றொரு கையில் ஒரு புகைப்பட சட்டம் தன் நெஞ்சில் அணைத்தவாறு இருந்தான் ராம்.

அஸ்வினுக்கு அந்த போட்டோவில் யார் என்பதே திகிலை தந்தது.

நடுங்கிய கைகளை எடுத்து அந்த புகைப்படத்தை பார்த்தான். அதில் தன்யா சிரித்துக் கொண்டு இருக்க அஸ்வினுக்கு மூச்சு வந்தது.

ராமிற்கோ புகைப்படத்தை எடுத்ததும் சட்டென விதிர்த்து எழுந்தவன் அஸ்வின் எதிரே இருப்பதை கண்டதும் மூச்சே நின்றது.

அஸ்வின் எப்பொழுதும் போல ராமை நேரிடையாக பார்த்தான். ராமிற்கு தான் அவனின் கண்களை கண்டு நேரிடையாக பார்க்க திறனின்றி தலைக் குனிந்தான். மனதினுள் போச்சு என் அஸ்வின் என் தன்யா இரண்டு பேர் மனசுலயும் இன்னிக்கு நான் தரம் தாழ்ந்துவிட்டேன் என எண்ணினான்.

''ராம் என்னடா இது?'' என்று அஸ்வின் கேட்க, பதறிய ராமோ

''அஸ்வின் அப்படி பார்க்காத டா நான் துரோகி இல்லைடா. நான் சொல்றதை கேளு'' என்றான் ராம்.

''எல்லாம் கேட்டேன்... நிஷா வீட்ல தன்யா உன் சட்டையை பிடிச்சு பேசினப்பவே'' என்ற வார்த்தையில் ராம் எல்லாம் முடிந்தது. இந்த தன்யா பேசியதை கேட்டு என நொந்தான்.

''அவ சின்ன பொண்ணுடா தெரியாம பேசிட்டா... அவ மேல எந்ததப்பும் இல்லை. நானும்...''

''ராம் எனக்கு எல்லாம் புரியுது டா. அவள் உன்னை விரும்பி இருக்கா... நீ அவளை தப்பா நினைச்சுட்ட என்று மன்னிப்பு கேட்க வந்தேன் டா. ஆனா நீயும் அவளை விரும்பற...'' என்று ஆச்சரியப்பட்டான்.

ராமிற்கு என்ன சொல்வது என்று புரியாத நிலையில் தலையை குனிந்தான்.

''ராம் என் கண்ணை பார்த்து பேசு. சரியோ தப்போ ப்ளீஸ் டா. நீ என் முன்னால கூனிக்குறுகி நிற்பதை நான் விரும்பலை. ராம் என் எதிரில் நீ யார்கிட்டயும் இப்படி நிற்கறது எனக்கு பிடிக்காது அது என் முன்னால என்றாலும்'' என்றான் நட்பின் நேசத்தோடு.

''அஸ்வின் அந்த நட்பு கெடக்கூடாது என்று தான்டா பயமா இருக்கு'' என்று கூறினான்.

''ஏன் டா நான் கூட தான் பவித்ராவை விரும்பினேன். அப்பாவுக்கும் நந்தன் மாமாவுக்கும் நட்பு கெடவா செய்தது''

''நீ பவித்ரா இங்க வருவதற்கு முன்னாலே விரும்பின. அதனால அது அப்படியில்லை. ஆனா தன்யா உன் தங்கை என்று எனக்கு தெரியும் அதுவும் உன் வீட்டுக்கு வந்த பிறகு பரிச்சயமானா அதனால தான்'' என்று தயங்கினான்.

''டேய் நிஜமாவே தன்யா இந்த நேரம் யாரையோ விரும்பறா என்று தெரிஞ்சதும் என் ரியாக்ஷன் ஒரு அண்ணனா கோவம் வரும். வரணும். அது தான் நிதர்சனம். ஆனா அவள் விரும்பறது என் ஶ்ரீராமை உனக்கு என்னடா குறை.? அப்படி இருக்கும் பொழுது தன்யா மேல கோவமே வரலை. ஆனா அவள் இந்தளவு மெர்சூர்டா யோசிப்பா என்று யோசிச்சது இல்லை. என் கவலை எல்லாம் உனக்கு அவள் மேட்சா என்று தான். அவளை நான் இன்னும் குழந்தையா தான் ட்ரீட் பண்றேன்'' என்று கருத்து தெரிவித்தான்.

''அஸ்வின் எனக்கும் அவளை பிடிக்கும் டா. ஆனா நான் உன் நட்புக்கு துரோகம் செய்யலை''

''எதுக்கு இப்படி பேசற? நட்பு தாண்டி ரிலேட்டிவ் ஆகா எனக்கு ஹாப்பி தான். இனி துரோகம் அப்படி இப்படி என்றெல்லாம் பேசாதே. உனக்கு தான் என்னை பற்றி தெரியுமே அப்பறம் என்ன புடலங்கா பயம். ''

''இல்லை டா ஸ்கூல் லைப்ல இருந்து, காலேஜ் முடிச்சு, ஜாப் வந்த பிறகும் ஒரே ப்ரெண்ட்ஷிப்பா இருக்கறது அபூர்வம். ஸ்கூல் பிரென்ட் காலேஜ் வந்ததும் டச் கம்மியாகிடும். காலேஜ் பிரென்ட் ஜாப் வந்ததும் டச் இருக்கும் இருந்தாலும் டெய்லி மீட் பண்ணி ஷேர் பண்ற அளவுக்கு இருக்காது. ஆனா நாம அப்படியில்லை.

அதனால இந்த நட்பை பாதுகாப்பா இருக்கவும் அது எந்த விதத்திலயும் இழக்க எனக்கு மனசில்லை. தன்யா என்னை விரும்பறதா சொல்லிய பொழுதும் எனக்கு சந்தோஷமா இருந்தாலும் அதனை மறைச்சுக்கிட்டு அவளிடம் அட்வைஸ் தான் பண்ணினேன்'' என்று வாய் திறந்தான்.

''எப்பதிலேருந்து டா?'' என்று தன்யாவின் புகைப்படத்தை ராமிடமே கொடுத்தான்.

''பவித்ரா வீட்டுக்கு பொண்ணு பார்க்க போனோமே... அப்போ உன்னையும் பவித்ராவையும் பேச பிரைவசி கொடுக்க எண்ணி தன்யா கையை பிடிச்சு கீழே கூட்டிட்டு போனேன் அதிலேருந்து அவளுக்கு தோன்றிருக்கலாம்.''‌என்று யூகித்ததை உரைத்தான்.

''உனக்கு?'' என்று புருவம் உயர்த்தி கேட்டான்.

''தெரிலை... எப்போ என்று எனக்கு சொல்ல தெரிலை டா. வீட்டுக்கு வரும் பொழுது, அவளை பார்க்கும் பொழுது எனக்குள்ள அப்படி எல்லாம் தோணலை. அவளை பார்த்தாலே அஸ்வின் தங்கை அப்படி மட்டுமே பார்த்தேன்.

ஆனா சில சமயம் உங்க வீட்ல இருக்கும் பொழுது இந்த மாதிரி பேமிலி எனக்கு வேணும் என்று தோணும் அப்போ தன்யாவை என்னை அறியாமை பார்ப்பேன். அது கூட காதலின் முதல் அறிகுறியா இருக்கும். அதுக்கு பிறகு பவித்ரா வீட்ல தான் பார்த்தப்ப தனு கையை பிடிச்சு கூட்டிட்டு வந்தது தப்போனு தோணுச்சு. அவள் வேற அமைதியா இருந்தாளா... எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா போச்சு.

உன்னை பார்க்க ஒரு முறை...'' என்று சொல்லி கொண்டே போனவன் அஸ்வின் கையை போதும் என்ற செய்கையில் நிறுத்தினான்.

''ராம் என் தங்கை லக்கி டா'' என்று கட்டிப் பிடித்தான்.

''அஸ்வின் நமக்குள்ள எப்பவும் நட்பில் பிரிவு இருக்காதுல டா'' என்று ஐயத்தை கேட்டான்.

''இருக்காது இருக்கவும் விட மாட்டேன்'' என்றான் அஸ்வின்.

''ப்ராமிஸ்?'' என்றான் ராம்.

''ஹ்ம்ம். ஏன்டா இந்த புள்ளபூச்சிக்கு பயந்தா ஆஸ்திரேலியாவுகாகு ஓடிப்போன?'' என்றான்.

''அவளுக்காக பயந்து போகலை. உனக்கு பயந்து தான் போனேன். நான் இங்கயே இருந்தா, நீ என் முகத்தை பார்த்தே, நான் லவ் பண்ற விஷயத்தை கண்டு பிடிச்சுடுவ என்று தான் பயந்தேன்.

தன்யாவுக்கு பயந்து இல்லை. ஆனா அவளோட காதலில் பயம் இருந்தது. எங்கே உன் நட்பை விட அவள் காதல் முக்கியம் என்று என்னையே அது மாற்றிடுமோனு பயப்பட்டேன்.‌
அதுக்கு முன்னவே அவள் காதலில் விழுந்துட்டேன் என்று புரியலை'' என்று ராம் அசடு வழிந்தான்.

''அதுசரி. ஆமா சாப்பிட்டியா?'' என்றான் அஸ்வின் பேச்சினை மாற்றினான்.

''நிஷா கொடுத்து விட்டா. வா சேர்ந்தே சாப்பிடலாம்'' என்று இருவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்தார்கள்.

''எதுக்கு வீட்டுக்கு வந்தேன் என்பதையே மறந்துட்டேன். சித்திக் இந்த ஹாஸ்பிடலில் கூப்பிட்டு இருக்காங்க. ஓகே என்றால் போகட்டும் என்று கொடுக்க வந்தேன்'' என்று மருத்துவ தேவைக்கான இடம் பற்றி கூறினான்.

''ஹ்ம் கொடுக்கறேன்''

''சரிடா கிளம்பறேன் பவித்ரா போன் செய்வா. அதுக்குள்ள வீட்டுக்கு போறேன்'' என்று வேகமாய் சாப்பிட்டான்.

''அஸ்வின் பவித்ராகிட்ட நானே கொஞ்ச நாள் கழிச்சு தன்யா விஷயம் சொல்லிக்கறேன். ஏன்னா தன்யாகிட்டயே நான் என் லவ்வை சொல்லலை'' என்று இழுத்தான்.

''வாழ்த்துகள் பவித்ராகிட்ட நான் சொல்ல மாட்டேன் போதுமா'' என்று பைக்கை உயிர்ப்பித்தான்.

ராமிற்கு மனதில் இருந்த பாரமெல்லாம் நொடியில் விலகிய உணர்வு. நாளைக்கு என்ன செய்ய என திட்டமிட்டான்.

அஸ்வின் வீட்டுக்கு வந்து ஹாலை கவனித்தான். தன்யா இல்லை எங்க என்று கிட்சேனுள் பார்க்க அங்கே சுவாதி விகாஷிற்கு பாலை சூடுப்படுத்தவும், ராதை தோசை சுடவும், தனு அறை கதவில் கை வைத்தான். அது திறந்து சப்தம் கேட்டு வேகமாக கன்னங்களை அழுத்த துடைத்து கண்ணீரை அவசரமாய் மறைத்தாள்.

''தூங்கிட்டியா தனு'' என்று வந்தான்.

''ஆமா அண்ணா." என தடுமாறினாள்.

''சாப்பிட்டியா?'' என்றான்.

''வயிறு வலி அண்ணா வேண்டாம்''

''எழுந்து வா கொஞ்சம் போல இரண்டு தோசை சாப்பிடு" என்றதும்

''இல்லைணா பசிக்கலை'' என்று மறுத்தாள். ராமிடம் பேசியதற்கு உணவு இறங்குமா?!

''பரவாயில்லை கொஞ்சம் போல சாப்பிட்டு தூங்கு. வா‌'' என தட்டில் தோசை வைத்து சட்னி ஊற்றினான்.

வேறு வழியின்றி தொண்டையில் சிக்கிய பறவையாக உணவை விழுங்கினாள்.

''நான் சாப்பிட சொல்லி எத்தனை முறை கேட்டேன் எல்லாம் எங்க கேட்டா? அஸ்வின் சொன்னதும் சாப்பிடறா'' என்று ராதை முனங்கினார்.

அஸ்வின் தனுவின் தலையில் இருமுறை தடவி அறைக்கு சென்றான். தனுவோ தான் இருக்கும் கஷ்டத்தில் இந்த அண்ணன் வேறு வலுக்கட்டாயமாக சாப்பிட வைக்கின்றானே என அஸ்வின் மீது சினம் கொண்டாள் பேதை.

-தொடரும்.
-praveena thangaraj
.
 
Top