கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -18

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம் -18

இன்று வீட்டில் எல்லோரிடமும் வாக்குவாதம் செய்தான் அஸ்வின். குழந்தை பிறந்த பிறகு தாயின் வீட்டுக்கு சென்று விடுவார்கள் என்ற கலாச்சாரத்தால்...

பவித்ரா மற்றும் அவனின் குட்டி இளவரசி இருவரும் தஞ்சை செல்வார்கள் என்ற செய்தி அவனுக்கு கசந்தன. தனது அம்மா ராதை, தந்தை விஸ்வநாதன் எவ்வளவு சொல்லியும் அவர்களிடம் பவித்ராவை பிரிவதற்கு மறுப்பு சொல்லி விட்டான்.

ஆகாஷ் கூட ''டேய் சுவாதி அத்தை வீட்ல தானே இருந்தா.. ஒன் மந்த் டா சீக்கரம் ஓடிடும்'' என்றவனை முறைத்தவன்

''சுவாதி அண்ணி இங்க சென்னையில் இருந்தாங்க உனக்கு பார்க்கணும் என்றால் நினைச்சதும் போய் பார்ப்ப, பவித்ரா தஞ்சை போயிட்டா நான் அப்படி பார்க்க முடியுமா?'' என பதிலை சொன்னவன் வீட்டில் யார் பேச்சை கேட்காமல் இங்கயே பவித்ரா இருக்கட்டும் என்ற முடிவில் இருந்தான்.

பவித்ரா வீட்டில் பெரியவர் முதல் எல்லோருமே மாப்பிள்ளையிடம் எப்படி எதிர்த்து சொல்ல என அமைதியாக மாறினார்கள்.

அஸ்வினுக்கு இதே முறையை மற்றவரிடம் கையாளலாம் என தோன்றியது. பவித்ராவுக்கு சுவாதி மூலமாக இவ்விஷயம் தெரியவர ''அஸ்வின் இங்க வந்ததும் நான் பேசிக்கறேன்'' என்ற ஒற்றை வரியில் எல்லோருக்கும் எப்படியும் பவித்ரா பேச்சை கேட்பானா என கொஞ்சம் தயக்கத்துடன் இருந்தார்கள்.

ராம் மட்டும் கூலாக நந்தனிடம் ''அப்பா அவன் பவித்ராகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வரட்டும், அவனா உற்றுனு முகத்தை வச்சிக்கிட்டு பவித்ரா குழந்தையை கூட்டிட்டு போக சொல்லுவான் பாருங்க'' என்றான்.

மருத்துவமனையில் அஸ்வின் பவித்ரா அறைக்கு சென்றதும் முதல் வேலையாக

''இங்க பாரு ஏதாவது பேசி என்னை குழப்பி நீ ஊருக்கு போக முயலாதா. நீ இங்க நம்ம வீட்ல வர்ற'' என்றதும் பவித்ரா மெதுவாக தலையை ஆட்டினாள்.

'அப்பாடி இவளா சீக்கிரம் ஓகே சொன்னா' என்ற நம்பாத பார்வை பார்க்க அவளோ குழந்தையை தீவிரமாக பார்த்தாள்.

''ஏன் அஸ்வின் நம்ம பாப்பாவுக்கும் குழந்தை பிறந்தா அப்போ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர மாட்டாங்களா? அவள் வீட்டுக்கு போய்டுவாளா? உன் மாப்பிள்ளையும் இதே மாதிரி தான் அடம் பிடிப்பாரா?'' என்ற கேள்வி எழுப்ப அதுவரை அமைதியாக குழந்தையை கண்டு ரசித்தவன் அவளின் பேச்சில் அவளை முறைத்தவன் வேகமாக வெளியே சென்று விட்டான்.

ஹாஸ்பிடலில் எல்லாம் முடித்து கிளம்பும் சமயம் "ராம் அந்த காரில் நீ அத்தை மாமாவை எல்லோரையும் கூட்டிட்டு வா'' என்றான்.

''எங்க டா...''

''அதான் உனக்கே தெரியுமே அப்பறம் தெரியாத மாதிரி நடிக்கற. எல்லாம் தஞ்சைக்கு தான்'' என முகத்தை ராம் சொல்லியது போலவே உற்றென்று வைத்து காரினை ஓட்டினான்.

மற்றவர்கள் சிரிப்பது தனக்கு கேட்காதது போலவே கடந்தான்.

வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு மறுதினம் சென்றாலும் பவித்ராவிடம் அஸ்வின் பேசவில்லை. பவித்ராவும் பேச முயலவில்லை. அசதி குழந்தைக்கு புது இடம் குட்டி இளவரசியின் கண் விழிப்பு என்று நேரம் போனது.

மூன்றாம் நாள் நிதானமாக அஸ்வினுக்கு போன் செய்தாள்.

''மேடத்துக்கு இப்ப தான் கால் பண்ண தோணுச்சா?'' என்று இயல்பாய் பேசினான்.

''அஸ்வின் உனக்கு என் நிலைமை. சொன்னா புரியாது'' என்றபடி சலிப்பாய் கூற அஸ்வின் இடை புகுந்தான்.

''நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், வருண் எல்லாம் சொல்லிட்டான். என் பொண்ணு செம சேட்டையாமே. இரண்டு நாள் ஒரே அழுகை கைக்குள்ளயே இருக்கனும் என்று‌உன்னை படுத்திவிட்டாளாமே'' என நகைத்தான்.

''ஹ்ம்ம். ஆமா அச்சு. கையிலயே வச்சிக்கணும்னு சிணுங்கறா.
அஸ்வின் உனக்கு போன் பண்ணலைனு கோவமில்லையே?''

''முதலில் இருந்துச்சு அப்பறம் கொஞ்சம் புரிஞ்சுடுச்சு. போன முறை நீ சொன்னது தான். இந்த முறை மறுபடியும் பதியற மாதிரி நானே எனக்கு சொல்லிகிட்டேன். என்ன குழந்தையை பார்த்ததும் இங்கயே இருக்க சொல்லிடலாம் என்று மனசு அடிச்சுகிச்சு''

''தேங்க்ஸ் டா அச்சு நீ புரிஞ்சுக்கிட்டதுக்கு... அப்பறம் ஏன் போன் செய்யலை? என்ன ஈகோ வா?'' என்றாள்.

''உங்கிட்ட எனக்கு என்ன டி ஈகோ... பாப்பா உன்னை கொஞ்ச கூட ரிலாக்ஸ் பண்ண விடலை என்று வருண் சொன்னான். அதான் நீயா ரிலாக்ஸ் பண்ணிட்டு கால் பண்ணுவ என்று வெயிட் பண்ணினேன்''

''ஹ்ம்ம் ஆமா அச்சு.. நீ இப்போ எங்கயிருக்க?''

''ஆபிஸ் தான்.. ஏன் டி'' என்றான்.

''வேலை நேரத்துல... அச்சச்சோ அஸ்வின் பாப்பா அழ ஆரம்பிச்சுட்டா... நான் அப்பறம் கால் செய்யவா?'' என்று வினவினாள்.

''சரி அவளை கவனி'' என அஸ்வின் போனை அணைத்தான். அணைத்து முடித்து கொஞ்ச நேரம் அந்த போனையே பார்த்தவன் மீண்டும் நிகழ்காலம் வந்து வேலையை ஆரம்பித்தான்.

ராமிற்கு காலையில் சுறுசுறுப்பாக எழுந்து கிளம்பி, தன்யாவை டிராப் செய்து, அலுவலகம் சென்று, பணியை பார்த்து கொள்வது, மாலையில் தன்யாவோடு ஒரு போன் உரையாடல் பின்னர் நிஷாந்தினி வீட்டுக்கு சென்று கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்து விடுவது. சில சமயம் அஸ்வின் வந்து பார்ப்பான் அவனோடு நேரம் போக பின்னர் தனு புகைப்படம் மெஸேஜ் என்று எல்லாம் பார்த்து சாப்பிட்டு உறங்குவது என்று நேரங்கள் அழகானது.

அன்று காலையிலே தன்யாவை எப்பொழுதும் போல காரில் ஏற்றி கொண்டு வழக்கமாக காலேஜில் செல்லாமல் வேறு ஒரு பக்கம் சென்றிருந்தான்.

''காலேஜ் போகலையா? இங்க எதுக்கு?'' என்று கலவரத்தோடு கேட்டாள்.

''கோவிலுக்கு எதுக்கு வருவாங்க? சாமி கும்பிட தான்'' என்றான் ராம்.

''அச்சோ இந்த கோவிலுக்கு அம்மா அடிக்கடி வருவாங்க... அதுக்கு தான் கேட்கறேன்'' என்று பயந்தாள்.

''எனக்கும் இந்த கோவில் தான் ரொம்ப பிடிக்கும். மலை மேல இருக்கு கொஞ்சம் பாறையில் உட்கார்ந்து பேசலாம்''

''எனக்கு பயமா இருக்குமே'' என்று கவலை கொண்டாள்.

''பச் சும்மா பயப்படாதே வா.'' என அர்ச்சனை தட்டு வாங்கினான். கோவில் குருக்களிடம் அதனை நீட்டினான்.

அவரோ ''யார் பேரில் அர்ச்சனை'' என்றதும் ராம் சாமி பேரில் என்று சொல்ல வாய் எடுக்க, தனுவோ யோசிக்காமல் ராமின் பெயர், ராசி, நட்சத்திரம் சொல்லி அதற்கு அர்ச்சனை செய்ய சொல்லிட அவனோ பேச்சிழந்து அவளையே பார்த்தபடி இருந்தான்.

விபூதி குங்குமம் என்று கொடுத்ததை அப்படியே தன்யாவின் கைகளில் தள்ளினான். அவனுக்கு திருநீறு பூச செல்ல அவனோ ஒரு அடி நகர, எப்பொழுதும் போல நாயகி முறைத்து அதன் பின்னர் அவனே அவளுக்கு நெற்றி காட்ட திருநீறு பூசி ஊதியும் விட்டாள். அவளின் மூச்சு காற்று நெற்றியில் வருட கண்களை மெல்ல மூடியவன்,

''ஏய் கேசரி பிரசாதம் நான் வாங்க போறேன்'' என்ற குரலில் கலைந்தவன் அவளை தேட, அவளோ கையில் தொன்னையில் கேசரியை ஊதியபடி வந்தாள்.

''செம டேஸ்ட்'' என சூடாக சுவைத்தவள். அதே சுட சுட அவனுக்கு ஊட்டிட மறுக்கவில்லை.

''நீங்க திட்டுவவிங்க என்று நினைச்சேன் நீங்களும் என்னை மாதிரி ரசிச்சு சாப்பிடறிங்க'' என்றாள் தனு. ஏன் என்றால் அஸ்வின் அவளை பிரசாதம் வாங்க வேண்டாம் என தடுப்பான். அதனாலே அவளுக்கு வாங்க வேண்டும் என்ற உந்துதல்... அவனின் நண்பன் ராமிற்கும் பிடிக்காது என எண்ணி கேள்வி கேட்டாள்.

''எனக்கு பிடிக்காது தான். ஒருவேளை சாப்பிடாதவங்களுக்கு தான் பிரசாதம் கிடைத்தால் நல்லது என்று வாங்க தோன்றாது. பட் இன்னிக்கு நீ ஊட்டவும் பிடிக்குது. அதோட எனக்கும் பசிக்குது. காலையில் இருந்து நானும் சாப்பிடலை'' என முடித்தான்.

''என்ன? எதுக்கு சாப்பிடலை?'' என தன்னுடைய டிபன் பாக்ஸ் எடுத்து சாப்பிட கொடுத்தாள். சிரித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்.

''உனக்கு எப்படி என் ராசி நட்சத்திரம் தெரியும்?'' என்றான்.

''அஸ்வின் அண்ணாவோட குழந்தை பிறந்த அன்னிக்கு தேதி, நட்சத்திரம், ராசி பற்றி பேசிக்கிட்ட பொழுது கயல் அத்தை உங்க ராசி நட்சத்திரம் விசாரிச்சாங்க அப்போ நீங்க சொன்னிங்களே.'' என்றாள்.

''அப்போ நீ வெளிய இல்லை இருந்த? ஏய் ஒட்டு கேட்டியா?'' என்றான் ராம்.

''ஆமாம்... ஆன உங்களை பற்றி தெரிஞ்சுக்க தான் கேட்டேன்'' என திருட்டு முழியோடு உரைத்தாள்.

''சும்மா மிரட்டினேன் உடனே பயப்படற'' என ராம் புன்னகைக்க,

''நீங்க என் கூட சிரிச்சு பேசியதே இப்போ கொஞ்ச நாளிலிருந்து தான். அதுக்கு முன்ன எல்லாம் திட்டுவிங்க அதனால தான் உங்களை கண்டா கொஞ்சம் பயம்'' என பதில் தந்தாள்.

''ஏய்... அஸ்வின் பவித்ரா கல்யாணத்துல வேஷ்டி சட்டை அழகா இருங்குங்க என்று எழுதியது நீதானே?'' என்றான்.

''ஹ்ம்ம்.... அப்பவே கண்டுபிடிச்சு இருப்பிங்க என்று நினைச்சேன்''

''அப்போ நான் அதை பெரிசா எடுத்துக்கலை.'' என்றான் ராம்.

''அந்த பேப்பரை நீங்க குப்பை தொட்டியில் போடும் பொழுதே நினைச்சேன்'' என்றாள் முகம் வாட்டத்துடன்.

அவளின் முகம் வாடுவதை உணர்ந்தவன் தனது பேக்கெட்டில் இருந்து பர்ஸ் எடுத்து

''இந்த பேப்பர் தானே அது'' என நீட்ட, வேகமாக வாங்கி பார்த்தவள் தலையை ஆம் என்றே ஆட்டினாள்.

''எப்படி நீங்க தானே குப்பையில் போட்டு விட்டு போயிட்டீங்க?''

''எழுதனவங்க பார்த்து எடுக்க வருவாங்க என்று போட்டேன் ஆனா யாருமே வரலை என்றதும் விட்டுட்டேன். அப்பறம் மறுபடியும் ஒரு முறை அறைக்கு வந்தபொழுது என்னவோ எடுத்து வை என்று மனசு சொல்லுச்சு எடுத்து வைத்தேன். ஆனா அதுக்கு பிறகு மறந்துட்டேன். நீ என்னை விரும்பற என்றதும் தான் ஒரு நாள் உன் அசைன்மென்ட் பார்த்தேன் அப்படியே ஒரு போட்டோ எடுத்துவிட்டு வந்து கையெழுத்து மேட்ச் ஆகுதா என்று பார்த்தேன் ஆச்சு அதுல இருந்து பர்சில் எடுத்து வைத்தேன்'' என்றான்.

''இன்னிக்கு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு... ஏன்னு தெரியலை..'' என்று குழந்தையாய் சொல்லி கொண்டு வேடிக்கை பார்த்தவளை அவன் பார்த்து ரசித்தான்.

நடுவில் தனு புகைப்படத்தோடு இந்த பேப்பரையும் பீரோவில் பூட்டியவன் அஸ்வின் சம்மதம் கிடைத்த பின்னரே மீண்டும் பர்சில் புகைப்படம் மற்றுமிந்த பேப்பர் எடுத்து வைத்தான்.

இன்றைய நாளின் சந்தோஷம் இது மட்டுமில்லாமல் மீண்டும் ஆச்சரியமூட்ட ராம் நினைத்தான்.

அங்கங்கே இருப்பவர்கள் கோவில் நடை சாற்ற கிளம்பினார்கள்.

''எதுக்கு என்ன விரும்பின?''

''இந்த கேள்வி எனக்கும் பல முறை வந்து இருக்கு தெரியலை... ஆனா ஒரே ஒரு பதில் தான் எனக்கு தெரியும் சொல்லவா.'' என்றதும் ''ஹ்ம் சொல்லு'' என்றான் ராம்.

''அழகை பார்த்து வந்தா அழகு போனதும் அந்த காதலும் போயிடும்... என்று சொல்வாங்க அது மாதிரி எனக்கு உங்க மேல என்ன காரணத்துல வந்தது என்று கேட்டேன் ஒரு காரணமும் மனசு சொல்லவே இல்லை... எதுக்கு என தெரியாத காரணம் அதனால என்ன என்று சொல்ல தெரியலை ஆனா இந்த லவ் எனக்கு பிடிச்சிருக்கு.'' என்று புரியாமல் சொல்லி முடிக்க ராமிற்கு சிரிப்பு தான் வந்தது.

அவனுள் சின்ன உறுத்தல் அஸ்வின் குடும்பம் போல தனக்கு வேண்டும் என்ற தோன்றலில் தனக்கு இந்த காதல் பூத்தது என்றால் குடும்பம் என்ற ஒன்று தோன்றியதும் இந்த காதல் தனக்கு போய்விடுமா?

நானாவது இப்படி ஆனால் தன்யா அப்படி இல்லை அவளின் எவ்வித எண்ணமும் இன்றி என்னை விரும்புகிறாள். அதற்கு நான் என் அன்பை என்றும் நிறைவுடன் அவளுக்கு தர வேண்டும் என எண்ணினான்.

அவனுக்கு ஒன்று புரியாமல் போனது என்றைக்கு தனு கையினை பிடித்து இழுத்து வந்த பொழுது அந்த சில நொடிகள் எவ்வித தோன்றலிலும் வராது தான் அவனின் காதலை கண்ணில் வழியே அவளுக்கு உணர்த்தினான் என்று...!

''ஹ்ம்ம் தன்யா போகலாம்'' என்றதும் எழுந்து கார் இருக்கும் திசைப்பக்கம் நடந்தார்கள்.

''இப்போ எங்க போறோம்.''

''முன்ன எல்லாம் எதுவும் கேட்காம காரில் ஏறுவ... இப்போ நிமிஷத்துக்கு ஒரு முறை ஏன் எதுக்கு என்று கேட்கற?''

''அப்படி தான் சொல்லுங்க''‌ என்றாள் குழந்தை தனமாக.

''மணி என்ன ஆகுது தெரியுமா?''

''ஹ்ம்'' என வாட்சை பார்த்து ''மணி இரண்டு... அச்சோ எனக்கு பசிக்குது'' என்றாள்.

''இவ்ளோ நேரம் உனக்கு தெரியலையா? லஞ்ச் டைம் அதான் சாப்பிட ஹோட்டல் போறோம்'' என்று காரினை செலுத்தினான்.

''ஓஹ் ஓகே'' என்றதும் ஒரு ஹோட்டல் அருகே நிறுத்தினான்.

இருவரும் உள்ளே செல்ல தனி தனியாக பிரைவஸிகாக தடுப்பு கொண்ட அறை போல இருந்தன அந்த ஹோட்டல். இருவரும் ரிசர்வே செய்த டேபிளில் அமர்ந்தனர். கொஞ்ச நேரத்திலே வெய்ட்டர் வர தனுவிற்கு பிடித்த உணவுகள் எல்லாம் வரவழைத்தான்.

''வாவ் நீங்க சொன்ன டிஷ் எல்லாம் எனக்கு பிடிச்சது.'' என்றாள் தன்யா.

''தெரியும்'' என பின்னாளில் இருந்தவருக்கு கைகளில் செய்கை செய்ய ஒரு மினி கேக் கொண்டு வந்து டேபிளில் வைத்தனர்.

''சாப்பிடற நேரத்துல கேக் எதுக்கு? அதுவும் பர்த்டே கேக் மா.....திரி... இருக்கு.'' என ராமை பார்த்தாள்.

''உங்களுக்கு... பெர்த்டே... வா?'' என்றாள் கொஞ்சம் தயக்கத்தோடு, அலை அலையாக காற்றில் முடி பறக்க அதனை கையில் கோதியபடி தலையை ஆமென அசைத்தான்.

தனுவிற்கு உடனே வருத்தம் மட்டுமே. 'சே இவர் பெர்த்டே கூட தெரிஞ்சுக்கலையே' என்ற வருத்தத்துடன் இருக்க,

''என்ன என் பெர்த் டே கூட தெரிஞ்சுக்கலையே என்ற வருத்தமா?'' என்றதும் தலையை நிமிர்த்தி அவனின் கண்களை பார்க்க, அவனோ புன்னகையோடு,

''அதுக்கு பதில் தான் நீயே எனக்கு அர்ச்சனை செய்ய கேட்ட பொழுது நீயா என்னோட ராசி நடச்சத்திரம் எல்லாம் சொன்னியே அப்பறம் என்ன?'' என்றான்.

''இருந்தாலும் பிறந்த தேதி எல்லாம் தெரிந்து வச்சிக்கலையே'' என்று லேசாய் கண் கலங்கினாள்.

''உஃப் அவளோ தானே இப்போ தெரிஞ்சுக்கோ.'' என்று மடமடவென சொல்லி முடித்தான். இருந்தும் அவள் அமைதியாகவில்லை.

''ஏற்கனவே சொல்லி இருந்தா நான் கிப்ட் வாங்கி இருப்பேனே'' என்று வருந்தினாள்.

''முதலில் எனக்கு விஷ் பண்ணு அது போதும்'' என்றதும் தான் இன்னும் அவனுக்கு வாழ்த்தை கூறவில்லை என்ற நினைவு வந்தது.

''சாரி சாரி... ஆனா சாதாரணமா நீங்க சொல்லி நான் விஷ் பண்ண ஒரு மாதிரி இருக்கு'' என்றதும் கண்களை மூடி அவனுக்காக கடவுளை வேண்டினாள்.

''என்ன வேண்டின?''

''அது கோவிலில் வேண்டியது தான். வேண்டியதை சொல்ல கூடாது'' என முடித்து, ''ஓகே கேக் கட் பண்ணுங்க'' என்றதும் அவனும் கேக் கட் செய்தான்.

மெல்லிய குரலில் அவனுக்கான பிறந்த நாள் பாடலை பாடினாள்.

''தன்யா உன் குரல் நல்லா இருக்கு... இனிமையா பாடற.'' என்றப்படி கேக் ஊட்ட அவனுக்கும் ஊட்டி விட்டாள்.

''இந்த இடம் அமைதியா இருக்கு''

''ஸ்பெஷல் தான். யாரையும் மற்றவங்க பார்க்க மாட்டாங்க...''

''ஆமா எல்லாம் தடுப்பு இருக்கு.''

''தனு எனக்கு ஒரு ஆசை.. சரினு சொல்லுவியா''

''என்ன?'' என விழித்தாள்,

''எனக்கு ஊட்டி விடுவியா?''

சுற்றி முற்றி பார்த்திட ''யாரும் இல்லை மேல கேமரா இருக்கு அது மட்டும் தான்'' சரியென்று தலையை அசைத்தாள்.

தன்யா அவனுக்கு ஊட்டி விட சாப்பிட்டவன் நினைவு வந்தவனாக உனக்கும் பசிக்கும்ல என்று அவனும் ஊட்டி விட்டான், இருவருமே ஊட்டி விடுவதால் இன்று வழக்கத்துக்கு மாறாக தனு அதிகமாவே சாப்பிட்டு முடித்தாள்.

''உங்ககிட்ட ஒன்னு கேட்கவா?'' என்றதற்கு என்ன என்பது போல ராம் அவளை பார்த்தான்.

''எனக்கு இப்படி லைப் முழுக்க ஊட்டி விடுவிங்களா?'' என்றாள்.

''யாருமில்லாத பட்சத்தில் இனி நான் தான் ஊட்டி விடுவேன் போதுமா'' என்றான்.

''நிஜமா?''

''நிஜமா.'' என சொல்ல போன் மணி அடித்தது.

பவித்ரா போன் தான். எடுக்க தயங்கினான். ஆனால் எடுக்கவில்லை என்றால் அஸ்வினுக்கு போன் செய்வா' என்று எடுத்தான்.

''மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ராம்'' என்றாள் பவித்ரா.

''தேங்க்ஸ் பவித்ரா... ஏஞ்சல் எப்படி இருக்கா?''

''அவளுக்கு என்ன நல்லா தூங்கறா... எப்படி போகுது உன்னோட பெர்த்டே?''

''எப்பவும் போல தான்'' என்றான்.

''டேய் அச்சு இருக்கானா சத்தமே இல்லை?'' என்று தன் கணவனை கேட்டாள்.

''அவன் இல்லை பவித்ரா. நான் ஆபீஸ்ல இருக்கேன். அஸ்வின் ஈவினிங் வர்றேன்னு சொல்லி இருக்கான்'' என உரைத்தான்.

''என்னடா இது? அதிசயமா இருக்கு. எப்பவும் உன் பிறந்த நாளுக்கு காலையில் இருந்து உன்கூடவே தான் இருப்பானாமே? இப்போ எப்படி?'' என்று கேள்விக்கணையை துளைத்தாள்.

''இல்லை எனக்கு கொஞ்சம் ஆபீஸ் ஒர்க் அதான்'' என்று சொல்லும் பொழுது வெய்ட்டர் வந்து ராம் போனில் பேசுவதால் "வேற ஏதாவது வேண்டுமா மேடம்?" என்று தன்யாவிடம் கேட்க, அவளோ திருதிருவென விழித்தாள்.

ராமோ போனில் பேசிக்கொண்டே மெனு புக் எடுத்து அவளிடம் திருப்பி பலோடா காட்டினான். வெய்ட்டரிடம் செய்கையில் இரண்டு என காட்டிட, வெய்ட்டர் ரெண்டா சார் என்று உறுதி செய்திட தலையை அசைத்தான்.

''சரி நான் அப்பறம் பேசறேன் ராம்'' என பவித்ரா போனை துண்டித்தாள்.
ராமோ 'ஆஹா பவித்ரா இந்நேரம் மிஸஸ் அஸ்வினா மாறி இருப்பாளோ? எதுவா இருந்தா என்ன எனக்கு என் அஸ்வின் துணையாக இருக்கான்' என வெய்ட்டர் கொண்டு வந்த பலோடா எடுத்து சாப்பிட துவங்கினான்.

தன்யாவோ ''போனில் அண்ணி தானே?'' என்றதற்கு ஆம் என்பது போல தலையை அசைக்க,

''அண்ணா கூட இருக்கேனு நினைச்சிருப்பாங்களா?.'' என்று கேட்டாள்.

''நான் என் பெர்த்டே எப்பவும் அஸ்வின் கூட தான் செலிப்ரேட் பண்ணுவேன். எனக்கு எல்லாமே அவன் தான் என்னை தனியா அதுவும் இந்த டேஸ்ல விடவே மாட்டான்'' என்று கர்வமாய் நண்பனை பற்றி பேசினான்.

''அப்போ இன்னிக்கு ஏன் நீங்க வரலை என்று அண்ணா கேட்கலை?''

''கேட்க மாட்டான்... ஆமா நீ என்ன என்னை வாங்க போங்க என்ற ரீதியிலே கூப்பிடற'' என பேச்சை மாற்றினான்.

''தெரியலை முதலில் இருந்தே நீங்க வாங்க போங்கனு வருது'' என்றாள்.

''ஸ்ரீராம் கூப்பிடு''

''மாட்டேன் நீங்க பெரியவங்க" என்றாள்.

ராமோ சிறு பெண்ணிடம் வற்புறுத்தவில்லை‌

பின்னர் தனுவை அவளின் வீட்டின் அருகே, சற்று தள்ளி நிறுத்தி இறக்கி விட்டான்.

''எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு தன்யா''

''எனக்கு உங்களுக்கு கிப்ட் கொடுக்கலை என்ற வருத்தம் கொஞ்சம் இருக்குங்க'' என்றாள்.

''ஏ... இன்னிக்கு முழுக்க என் கூட நீயிருந்தது எனக்கு கிப்ட் தான்'' என கூற இருவருமே பிரிந்தார்கள்.

மாலையில் அஸ்வின் ராம் வீட்டுக்கு வந்து நின்றான். ராமை பார்த்தான் அவனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, தான் இல்லாவிட்டாலும் இன்றைய பொழுது அவனுக்கு நிறைவை கொண்டுள்ளது என்ற நிம்மதி தந்தன. எப்பொழுதும் ராமின் பிறந்த நாளுக்கு யாருமில்லை என்ற எண்ணம் அவனுக்கு ஒரு நொடி கூட வரகூடாது என்று அவனின் பிறந்த நாளில் முழு நாளும் அவனோடவே இருப்பான்.

இன்று மட்டும் விதிவிலக்காக இருக்க நேராக நண்பனிடம் வாழ்த்தை கூறினான்.

ராமிற்கு தான் அவனிடம் ஷேர் செய்ய முடியா நிலை. காதலிப்பது அவன் தங்கை என்பதால் அவனிடமே பகிர தயக்கம் இருந்தது.

''பவித்ரா மதியம் கால் செய்தா அஸ்வின்'' என்று கூறினான்.

''ஹ்ம்ம்'' என்றான் அஸ்வின்.

''நீ கூட இருக்கறியானு கேட்டா. இல்லை எனக்கு ஆபிஸ் ஒர்க் என்று சொல்லி இருந்தேன். அவ நம்பாத தனம் தெரிந்தது. உன்கிட்ட என்னை பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்" என்றதும் அஸ்வின் முறுவல் செய்தான்.

"அஸ்வின் எங்கடா என் கிப்ட்'' எப்பொழுதும் டிரஸ், வாட்ச், கிளாஸ் என மாறிமாறி வாங்கி கொடுப்பான்.

அஸ்வின் அவனையே பாத்து கொண்டு ''எப்பவோ கொடுத்துட்டேன்... இங்க தான் இருக்கு கண்டுபுடி'' என அவனுக்கு கொடுத்த கேக்கை சாப்பிட்டு கொண்டிருந்தான்.

''எப்பவோ... வா..?'' என தேடினான். ராம் கொஞ்ச நேரம் தேடியவன் அஸ்வின் தன்யாவை சொல்றானா? சே சே இங்க தான் இருக்கு' என்று சொல்றான் சோ அப்படி இல்லை" என தேடினான்.

அஸ்வின் புன்னகைத்துக்கொண்டு ''சரி நான் வர்றேன்'' என கிளம்ப ராம் முறுவலுடன் ''தேடுறேன் டா இன்னிக்கு உன்கூட இல்லை என்று தண்டனையா..? தேடி எடுக்கறேன்'' என வழி அனுப்பி வைத்தான்.

உண்மையாகவே ராமோடு தான் நேரம் செலவழிக்காததால் தேட வைத்தான்.

வீடு முழுதும் தேடினான். அஸ்வின் வந்து ஹாலில் உட்கார்ந்தான். வேற எங்கயும் போகலை. அப்படினா கிப்ட் எங்க வச்சிருப்பான்" என குழம்பினான்.

அஸ்வினுக்கு வழி நெடுகிலும் புன்னகை தான் ''எப்படியும் களைச்சு போய் உட்கார்ந்து யோசிப்ப அப்பறம் என் கிப்ட்டை பார்ப்ப'' என தனக்குள் பேசினான்.

praveena thangaraj
 
Top