கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -21

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-21

அன்று தன்யாவின் பிறந்த நாள். ஸ்ரீராம் அவனின் பிறந்தநாளை எப்படி சொல்லவில்லையே அவளும் சொல்ல கூடாது என்று இருந்தாள். ஆனால் அன்று அவர்கள் இருவரும் நேரில் சந்திக்கும் நாள் என்பதால் அவளுக்கு அன்றைய நாளினை போலவே கோவிலுக்கு சென்று பின்னர் ஹோட்டலில் செல்லலாமா? என தோன்றியது.

ஸ்ரீராம் கண்டுபிடித்திடுவான் என்று வீட்டில் இருந்தே லேட்டா தான் கிளம்பினாள். ராமோ போனில் எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு மதியம் மீட் பண்ணலாம் என்று சொல்லியதும் காலேஜ் சென்று நேரத்தை நகர்த்தினாள். பின்னர் மதியம் வரை காத்திருந்தவளை அவனே அன்றைய ஹோட்டலில் அழைத்து சென்றான். அவன் பெர்த்டேவிற்கு வந்த அதே ஹோட்டல்.
ராமிற்கு என் பிறந்த நாள் என தெரிந்து இருக்கா? என்று அவனை கூர்ந்து கவனிக்க அவனோ இயல்பாக இருந்தான். வெய்ட்டர் வர முதலில் கேக் வருமோ ராமிற்கு தெரிந்து எதாவது ஏற்பாடு செய்து இருப்பானோ? என்றெண்ணினாள்.

அந்த வெய்ட்டர் வர தன்யா கொடுக்கும் வகைகளை ஆர்டர் சொல்லிவிட்டு மெனுவை தீவிரமாக படிக்கச் ஆரம்பித்தான். தன்யாவோ மனதினுள் 'சே ராமிற்கு நிஜமாவே என் பெர்த் டே தெரியாது' போல என சாப்பிட செய்ததாள். முகம் கொஞ்சம் வாடி கூட போனது. சொல்லிடலாம்? என்று நினைத்து பார்த்தவளுக்கு அவனோ போனில் யாருடனோ மெசேஜ் செய்வதும் பார்ப்பது என்றே தீவிரமாக இருக்க வேண்டாமென்று இருந்தாள். அவள் மீண்டும் சாப்பிட குனியும் சமயம் ராமோ அவளை பார்த்து சப்தமின்றி சிரித்து கொண்டான். தன்யாவிற்கு அவனிடம் சொல்லாமல் இருக்கவும் மனம் இருப்பு கொள்ளாமல் தவிக்க அதற்கு மேல் ராமும் தன்னால் சிரிப்பில் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தான். எழுந்து சென்றவன் கை அலம்பும் இடத்தில் இருந்து தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் வந்தான். அப்பொழுது இறுதியில் சாப்பிடாமல் ஸ்பூனால் உணவினை கோலமிட்டவளுக்கு... எதிரில் அமர்ந்தான்.

''ராம் இன்னிக்கு... இன்னிக்கு என் பெர்த்டே நான் பே பண்ணவா?'' என்றாள்.

''ஏய் ரியலி... மேனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே தன்யா...'' என கரம் குலுக்கி வாழ்த்தினான்.

''என்னாச்சு.... தன்யா முகம் ஏன் இன்னிக்கு டல் ஆகுது...''

''தெரியலை... நான் உங்க கூட நிறைய பிளான் போட்டு வந்தேன் உங்க கூட நேரம் செலவழிக்க ஆனா நீங்க முதலில் ஒர்க் இருக்கு என்று சொல்லிட்டீங்க... அப்பறம் மதியம் சொல்லி ஹோட்டல் வந்து கொண்டாடலாம் என்றால் எனக்கு சொல்ல தயக்கமா இருந்துச்சு அதனால சொல்லலை... இப்போ ஏதோ வருத்தமா இருக்கு'' என முடித்தாள்.

''உன் வருத்தத்தை ஒரு நொடியில் மாற்றி காட்டவா?'' என்றான் வெகுயில்பாய்

''எப்படி...?''

''ஒன் செகண்ட்........'' என வெய்ட்டர் பார்த்து ''அண்ணா இப்போ கொண்டு வாங்க'' என்றதும் அங்கேயிருந்து ஒரு வெய்ட்டர் ஒரு கேக் கொண்டு வந்து முன் வைத்தார்.

தன்யாவிற்கு எப்படி வெய்ட்டர் கேக் கொண்டு வந்து கொடுத்தார். அதுவும் பிறந்த நாள் கேக்...? ராமோ கொண்டு வர மட்டும் தானே சொன்னார். பின்ன கேக் என்று கூட சொல்லவில்லை... அப்படி என்றால் என் பிறந்த தினம் ராம் தெரிந்து வைத்து இருக்கின்றாரா? என்றதும் வருத்தம் மாயமானது.

முகமெங்கும் மலர்ச்சி பூத்தது. ''என்ன இப்ப ஹாப்பியா?'' என்றான்.

''உங்களுக்கு எப்படி தெரியும்?''

''சொன்னேனே.... மனசுக்கு பிடிச்சவங்களை பற்றி எல்லாம் தெரிஞ்சுக்கறது சுலபம்... சரி கேக் கட் பண்ணு'' அவளும் கட் செய்து அவனுக்கு ஊட்டி விட அவனும் அவளுக்கு ஊட்டி விட்டான். அதனை இருவிழிகள் பார்த்து யோசிக்க செய்தது.

பெரும்பாலும் யாரும் பார்க்க முடியாத தடுப்பு இருப்பினும் ராம் கை அலம்பி அந்த இடத்தை பார்த்து சிரிப்பதை கண்ட அக்கண்கள் ராமை பார்க்க வந்தது.

ஏன் ராமிடம் பேச கூட வர செய்த கால்கள் அங்கு தன்யா இருப்பதை கண்டு அப்படியே புருவம் சுருக்கி யோசனையோடு திரும்பின.

இதை அறியாமல் ராமோ தன்யாவிற்கு மேலும் மலர்ச்சியை கொடுக்க எண்ணி கிப்ட் பாக்ஸ் ஒன்றை நீட்டினான். தன்யாவிற்கு கண்கள் மேலும் விரிந்து அதனை பிரித்து பார்க்க அதில் தங்க கொலுசு இருந்தது.

''உங்களுக்கு எப்படி எனக்கு இது பிடிக்கும் என்று தெரியும்''

''எல்லாம் தெரியும்... போடு....''

''அச்சச்சோ போட்டுட்டு போனா வீட்ல யாரு வாங்கினா யாரு கொடுத்தா என்ற கேள்வி வரும் நீங்களே வச்சிக்கோங்க...'' என திருப்பி கொடுத்தாள்.

''ஏய் உனக்கு தான் வாங்கியது திருப்பி கொடுத்தா என்ன அர்த்தம்... ஹ்ம்ம் பிடி'' என்று அவளின் அருகே வைக்க, ''இல்லை வேண்டாம் நான் உங்க...களுக்கு... சொ...ந்தம் ஆன பிறகு வேண்டும் என்றால் வாங்கிக்கறேன்... ப்ளீஸ் இப்போ வேண்டாம்'' என முடித்தாள்.

ராமிற்கும் அவள் இதை வீட்டில் எடுத்துக் கொண்டு போக முடியாது. ஏன் போடவும் முடியாது என்ற உண்மை உணர்ந்து ''அட்லீஸ்ட் இப்போ கொஞ்ச நேரம் போட்டு காட்டு...'' என்றதும் அணிந்து அவனிடம் காட்டினாள்.

''நேத்ரா பாப்பாவுக்கு நீங்க பெயர் வைக்கும் பொழுது தங்க கொலுசு போட்டீங்க அப்போ அம்மாகிட்ட நான் கேட்டேன் அதை எப்போ நீங்க கேட்டீங்க?'' என்று காலில் கொலுசு அணிந்தபடி கேட்டாள்.

''நீ விரும்பியது நினைக்கறது எல்லாம் கண்டு புடிச்சுடுவேன்... புரியுதா... உனக்கு பிடிச்சிருக்கா?''

''ஹ்ம்ம் ரொம்ப...'' என கழட்டி அவனிடமே கொடுத்துவிட்டாள்.

''இன்னும் கொஞ்ச நேரம் போட்டு இருக்கலாமே....? ஏன் கழட்டிட்ட?'' என்றான் சிறிது வருத்தத்துடன்.

''இல்லை மழை வர்ற மாதிரி இருக்கு வீட்டுக்கு போகணும் அதனால சீக்கிரம் கிளம்பலாம்...''

''இரு உனக்கு பக்கத்துல இன்னும் ஒரு இடம் இருக்கு கூட்டிட்டு போயிட்டு அப்பறம் கிளம்பலாம்'' என நேச இல்லத்தில் அழைத்து சென்றான்.

அங்கிருந்த சிறு சிறு குழந்தைகள் கண்டு குதூகலித்தாள். அவளுக்கு என்று தனியாக பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடினார்கள். '

'ஏன் எல்லோரும் என்னையே பார்க்கறாங்க. அப்பறம் அந்த பெரியவங்க ஏன் நன்றி சொன்னாங்க?''

''அவங்க இன்னிக்கு சாப்பிடற புட் எல்லாம் நீ தந்தது அதனால நன்றி சொன்னாங்க''

''நான் எப்போ தந்தேன்....'' என்றவள் பார்வை ராமின் மேல் திரும்பியது.

'' நீங்க ...பண்ணிய ஏற்பாடா?'' என்று வியந்தாள். திருமணம் ஆனைப்பின் செய்வது வேறு. காதலிக்கும் போது எந்த காதலன் இப்படி செய்கின்றான்?

''ஹ்ம்ம்... பிடிச்சு இருக்கா?''

''ராம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு உன்னை....'' என்றே அவனின் தோளில் சாய்ந்தான். ''ஏய் இப்போ என்ன சொன்ன ராம்... மா? அப்பறம் என்ன சொன்ன உன்னை..யா?'' அச்சச்சோ பேர் சொல்லிடேனா...?! என முழித்தவள்... அந்த பக்கம் திரும்ப ராம் அந்த பக்கம் வந்து நின்றான்.

''தன்யா இந்த பக்கம் பார்த்து என் கண்ணை பார்த்து சொல்லும்மா... ப்ளீஸ்...''

''முடியாது போங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு''

''ஏய் உனக்கு வெட்கம் எல்லாம் கூட வருமா?''

''ஹலோ ஹலோ ஏதோ நானா என் லவ் உங்ககிட்ட சொலிட்டேனு எனக்கு வெட்கம் எல்லாம் வராது என்று முடிவே கட்டிட்டிங்களா?'' என முறைத்தாள், ''ஒய் உனக்கு என்னை பார்த்து முறைக்க வேற தெரியுமா? எனக்கு தெரிந்து தன்யா ரொம்ப சின்ன பொண்ணு என்னை பார்த்தாளே பயப்படுவா என்று தானே நினைத்து இருந்தேன் இன்னிக்கு புதுசு புதுசா அசத்துற...?'' என்று அனுஅனுவாய் வியந்தான்.

''நான் ஒன்னும் செய்யலை நீங்க செய்ததுக்கு ரியாக்ஷன் தர்றேன்... அது உங்களுக்கு புதுசா தெரியுது''

''நீ வாயாடி என்று தெரியும் ஆனா என்கிட்ட இப்படி செமயா வாயாடுவ என்று இன்னிக்கு தான் தெரியுது. ஆனா இந்த இடம் ஸ்பெஷல் தெரியுமா பவித்ரா கூட அஸ்வினை இங்க வந்த அப்போ தான் முதன் முதலில் பேர் சொல்லி அழைத்தாள். இப்போ நீயும்....'' என்ற பொழுதே மழை தூவ வேகமா காரில் ஏறிட நினைத்தாலும் பாதி நனைந்து போனார்கள்.

''போச்சு நான் அப்பவே கிளம்ப சொன்னேன்... இப்போ மழையில் நல்லா மாட்டிகிட்டோம்...'' என்றாள்.

''வீட்டுக்கு போறதுக்குள்ள கொஞ்சம் காய்ந்திடும் தனும்மா....'' என்ற பொழுதே 'அச்' என்று தும்ப ஸ்ரீராம் அவளின் உடல், புது மழைக்கு உடனே தும்மல் வருகின்றது என்று புரிந்துக் கொண்டான்.

''சாரி தன்யா நான் அப்பவே உன்னை வீட்ல இறக்கி விட்டு இருக்கனும் என் தப்பு'' என்றே வண்டியை ஓட்டினான்.

பாதி தூரம் செல்வதற்குள் பல தும்மலை தும்பிட, ஸ்ரீராமிற்கு அவ்வோசைனை உதயமானது. நேராக தனது வீட்டிற்கு அவளை அழைத்து சென்றான்.

''இங்க எதுக்கு? வந்தோம்''

''நீ வீட்டுக்கு போக இன்னும் அரை மணி நேரம் ஆகும் இப்பவே ஓவரா தும்மற... இங்க முதலில் தலையை காயாவை அப்பறம் போகலாம்'' என சொல்லிட முதன் முதலில் ஸ்ரீராமின் வீட்டுக்கு வருவதால் அதுவும் அவளின் பிறந்த நாளுக்கு வருவதால் மறுக்க தோன்றாமல் வந்தாள்.

''சாரி உன்னை வீட்டுக்கு ஆரத்தி எடுத்து உள்ள வரவேற்க இங்க யாருமில்லை. நான் தான் இருக்கேன்" என கைகளை நீட்ட அவனின் கரத்தில் மென்கைகளை வைத்தாள்.

நேராக ஹேர் ட்ரய்யர் எடுத்து கொடுத்து ''முதலில் தலையில் ஈரத்தை உலர்த்து'' என்று கொடுக்க வாங்கி உலர வைத்தாள்.

மழை விடாது பெய்து கொண்டே இருக்க, ''செம மழை கோடைகாலத்தில் வர்ற மழை அபூர்வமா இருக்கு இப்போ எல்லாம்... ஆனா இருக்கற வெதர்ல இந்த மழையில் நீ நனையறது வேண்டாம் உனக்கு ஒத்துக்க செய்யாது'' என ஜன்னலை சாற்றினான்.

''நீ யாரோட ப்ரெண்ட் இப்படி தான் பேசுவ'' என அஸ்வினை மனதில் வைத்து இவனை சாடினாள்.

வீட்டினை சுற்றி பார்த்துக் கொண்டே ஹேர் ட்ரய்யர் கொண்டு முடியினை உலர்த்த செய்தாள்.

கீழே ஒரு அறை அட்டாச் பாத்ரூம் பெரியஹால் அதன் அருகே கிச்சன் என்றிருக்க மாடியில் ஒரு அறைக்கு படிகள் சென்றது.

''என்ன வீடு பிடிச்சு இருக்கா? அப்பா இருந்தா இன்னும் பெருசா கட்டணும் என்று சொல்லிக்கிட்டு இருந்தார் அம்மா இறந்த பிறகு அப்பாவும் போன பிறகு இந்த வீடே எனக்கு போதும் என்று தோணுச்சு. அதனால அதுக்கு பிறகு வீட்டை மாற்றி கட்டலை... இது நமக்கு போதும் தானே?'' என தன்யாவை பார்க்க அவளோ முடி கற்றைகள் முழுதும் உலர்ந்து முகத்தில் விழுந்தது.

ராமிற்கு அவளின் அமைதி முகம் இந்த வீடே போதும் என்ற குறிப்பும் வெட்கமும் கலந்து தர அவளின் கைகளை பற்றினான்.

காதல் சொல்லிய பிறகு கைகளை பற்றாமல் இல்லை ஆனால் அதில் வெறும் தொடுகை என்றிருந்தது.

இந்த தொடுகை வேறாக தோன்ற தன்யா செய்வது அறியாமல் விழிக்க, ராமோ அவளின் முகத்தின் அருகே வந்து மெல்ல அவளின் கண்களில் கலந்தான்.

கொஞ்சம் நேரம் போக அவனின் பார்வை வீச்சில் உதடுகள் துடிக்க நின்ற தன்யாவை கண்டு அந்த அதரத்தை நோக்கி குனிந்தான். அவனின் செய்கை உணர்ந்து தடுக்க முடியாமல் கண்களை இறுக மூடிய தன்யாவை கண்டதும் ராமிற்கு எப்படி நிலைமை உணர்ந்தானோ வேகமாக அவளின் அருகாமையை தவிர்த்து சென்றான்.

''இரு உனக்கு ஏதாவது சாப்பிட ரெடி பண்றேன்'' என நகர்ந்தான்.

தன்யா இமையை திறந்த பொழுது ராம் கிச்சனுள் இருந்தான். இப்போ என்ன நடந்தது. ஒன்னுமே நடக்கலை இருந்தாலும் அவர் ஏன் என் அருகே வந்தார் அப்படி பார்த்தார். தன்யா குழம்பி இருக்க அங்கோ ராம் மனதினுள் அவனையே திட்டி கொண்டான்.

'சே நான் என்ன செய்ய பார்த்தேன். நல்ல வேளை சுதாரிச்சுட்டேன். முதலில் அவளை இங்க அழைத்து வந்ததே தப்போ?! வீட்ல கொண்டு போய் விடும் வரை எட்டியே இரு ஸ்ரீராம் என அவனுக்குள் சொல்லி கொண்டான்.

சூடாக காபி கலந்து ரெடிமேட் பாப்கார்ன் ஓவனில் பொறித்தான். செல்லில் அஸ்வினிடமிருந்து போன் வந்தது.

''சொல்லு டா?''

''ராம் எங்க இருக்க?'' என்றான் அஸ்வின்.

''வீட்ல தான் டா ஏன்?'' என்றான் ராம்.

''அது ஒன்னுமில்லை டா இன்னிக்கு என் தங்கைக்கு பிறந்த நாள் அவள் இன்னும் வரலையா? சரி ப்ரெண்ட்ஸ் கூட இருக்காளா? இல்லை எங்கனு தேடினேன்.

சரி டா மழை பொழியுதா அவளை கூப்பிட போகலாம் என்று இருந்தேன். சரி ஒரு வேலை... உன்கூட...'' என நிறுத்தினான். என்ன தான் இருந்தாலும் என் தங்கை உன்கூடவா இருக்கா என்று கேட்க அஸ்வினுக்கு தயக்கம். பின்னர் "ஓகே டா அவள் ப்ரெண்ட்ஸ் கூட இருக்கலாம் நான் போய் பார்த்து கூப்பிட்டுக்கறேன்'' என்றதும் ''அஸ்வின் அஸ்வின் நீ எங்கயும் போக வேண்டாம். அவள் என் கூட தான் இருக்கா காபி குடிச்சு முடிச்சதும் கூட்டிட்டு வந்து விட்டுடுவேன்'' என்றான்.

''நீ வீட்ல இருக்கேன்னு சொன்ன...'' என்று அஸ்வின் நிறுத்த, ''அஸ்வின் நீயும் பவித்ராவும், ஆகாஷ் கல்யாண பத்திரிகை கொடுக்க ஆன்ட்டி அங்கிள் வெளிய போனப்ப வீட்ல இருப்பிங்கள அப்படி தான்... நானும் தன்யாவும் இருக்கோம். டேய்...டென் மினிட்ஸ் அவ வந்துடுவா'' என சொல்ல அஸ்வின் அதற்கு மேல் பேசாமல் போனை அணைத்தான்.

காபி பருகி முடித்து பாப்கார்ன் கொஞ்சம் கொறித்தவள் ப்ரிட்ஜ் வாட்டர் குடிக்க திறக்க, அங்கே பெரும்பாலும் ரெடிமேட் உணவுகள் பாதி இருந்தது. ''என்ன இது?'' என்றாள்.

''சில நேரம் சாப்பிட நினைக்கும் பொழுது எல்லாம் ஹீட் பண்ணி சாப்பிட ரெடிமேட் புட்'' என சொல்லிட அவள் எதற்கு ப்ரிட்ஜ் திறக்கின்றாள் என்று அறிந்து ''ஸ்டவ் பக்கத்துல வெந்நீர் இருக்கு அதை குடி ஐஸ் வாட்டர் வேண்டாம் ப்ளீஸ் தன்யா'' என்றான்.

''போங்க'' என சொன்னாலும் அவன் கூறியது போல வெந்நீர் அருந்தினாள். கொஞ்ச நேரத்தில் கிளம்பி அவளின் வீட்டின் அருகே இருக்கும் தெருவில் காரினை நிறுத்தினான்.

''எப்படியும் நனைந்துடுவேன்... இதுக்கு அப்பவே வந்திருப்பேன்'' என்றவளிடம் குடையை நீட்டினான். ''குடை யாருது என்று கேட்க மாட்டாங்களா?'' என்றாள் தனு.

''உனக்கு பொய் சொல்லவே தெரியாது பாரு... போ பிரெண்ட் கொடுத்ததா சொல்லு'' என ராம் சொல்ல ''பொய்யா?'' என தன்யா கேட்க ''இல்லையே நிஜமாவே அஸ்வினுக்கு நான் பிரென்ட் தானே'' என்றான் மென்னகையுடன்.

''உங்களை... '' என்று குடையை வாங்கி கொண்டு பை சொல்லி நடந்தாள். மேல தனது அறையில் இருந்து தனு வீட்டுக்கு
வந்து குடையை அவளின் அறைக்கு மெல்ல எடுத்து சென்றதை அஸ்வின் கவனித்தும் அவள் பார்க்கும் பொழுது வேறு புறம் திருப்பினான்.

பிரவீணா தங்கராஜ்.
 
Top