கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -24

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-24

ராமிற்கு மனமெங்கும் சந்தோஷ வானில் சஞ்சரித்தது. ராதை பேசிய பேச்சுக்கள் ஓரளவு அவனுக்கு நம்பிக்கை தந்ததால்...

தனக்காக அஸ்வின் வீட்டில் பேசாமல் உணவினை கூட தவிர்க்க செய்திருக்கின்றான். தன்யா உனக்காக கூட நான் என் அஸ்வினை எப்பொழுதும் விட்டு கொடுக்க மாட்டேன். என் நட்பை நான் என்றும் இழக்க மாட்டேன் என்று அவனுக்கே சொல்லி கொண்டான். இந்நிலை மாறுமா?! அஸ்வின் அதே நேரத்தில் வந்து சேர இருவருமே வெளியே கிளம்பினார்கள்.

இருவரும் உணவகத்திற்குள் நுழைந்தார்கள். ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தபொழுது, ''என்ன அஸ்வின் இப்போ எல்லாம் வீட்டுல சாப்பிடறது இல்லை போல...?'' என்று கேட்டான் ராம்.

''உனக்கு யார்...?'' என்றவன் யோசிக்க தனுவிற்கு வீட்டில் நடப்பது தெரியாது. பவித்ராவுக்கு தான் இன்னும் சொல்லவில்லை... பின்ன யார் சொல்லியது என்றே நினைக்க தந்தை...? ''என்ன மறுபடியும் உங்க மாமனார் ஆபிஸ் வந்தாரா? என்னை பற்றி புகார் சொல்ல?'' என்றான்.

''சே சே புகார் இல்லையே... ஆனா சொன்னது மாமனார் இல்லை மாமியார்'' என்றதும் அஸ்வின் ''அம்மாவுக்கு உன் ஆபிஸ் தெரியாதே உன் வீட்டுக்கு வந்தார்களா?'' என்றதற்கு இல்லை என்று தலை அசைத்தான்.

''பின்ன?''

''ஈவினிங் கோவிலில் பார்த்தேன். பேசினாங்க... ஏன் டா இப்படி பண்ற? வீட்ல ஆண்ன்ட்டி அங்கிள் இரண்டு பேருகிட்டையும் பேசறது இல்லையா?'' என்று எகிறினான்.

''அவங்க என்ன பேசினாங்க என்று உனக்கு தெரியாது'' என்று அஸ்வினும் முகம் திருப்பினான்.

''என்ன பேசினாங்க. உண்மையை தானே சொன்னாங்க எனக்கு என்று வீட்டில் யார் இருக்கா? நிஷாக்கா இப்ப வந்திருக்கா... ஆனாலும் எனக்குன்னு எதுவா இருந்தாலும் நானே தான் பார்த்துக்கணும்''

''டேய்... இப்படி பேசின கொன்றுவிடுவேன்... உனக்கு நான் இல்லையா?'' என்ற அஸ்வின் சினத்துடன் கேட்டான்.

''சரி டா எனக்கு நீ இருக்க தான். ஆனா உன்னால என் கல்யாணத்துல என் வீட்டு சார்பா இருக்க முடியுமா? நிச்சயமா முடியாது நீ பொண்ணு வீட்டுக்காரன் தான்... அப்படி பார்த்தா எனக்கு யாருமில்லை தான்'' என்றான்.

''என்ன டா இங்கயும் கண்ணாடி டேபிள் உடையனுமா? இது ஹோட்டல் என்று பார்க்கறேன்... இல்லை அட்லீஸ்ட் உன்னை அடிச்சு என் கோவத்தை கட்டுப்படுத்திப்பேன்'' என்று குரல் உயர்த்தினான்.‌

‌ ''அப்போ வீட்ல கண்ணாடி டேபிள் உடைச்சிருக்க? ஏன் டா உனக்கு இப்படி கோவம் வருது. அவங்க என்னை தானே சொன்னாங்க'' என்று நண்பனை கடிய ஆரம்பித்தான்.

''என் எதிரில் என் ஸ்ரீராம் பற்றி யாரும் சொல்ல கூடாது அப்படி பேசினா அது தான் நடக்கும்''

''அதுக்காக இப்படியா? அஸ்வின்'' என்றபொழுது உணவு வர சாப்பிட படியே ''வேற என்ன சொன்னாங்க உங்க ஆன்ட்டி....?'' என்றான் அஸ்வின் இடக்காக.

''ஹ்ம்ம் வேற எதுவும் பேச முடியலை... என் கூட நிஷா சித்திக் இருந்தாங்க... அதனால... ஆனா என்னை 'உன்னை என்று ஆரம்பித்து உங்களை என்று மாற்றி பேசினாங்க' எனக்கு ஏனோ அப்படி சொன்னதும்...'' ''மாப்பிள்ளைக்கு மரியாதையை தர்றாங்க என்று நினைச்சு இருப்ப'' என்றான் கேலியாக.

''ஏன் டா அப்படி இல்லையா?'' என்று நல்ல பிள்ளையாய் கேட்க, அஸ்வின் சிரித்து கொண்டே, ''ஹ்ம்ம் அப்படி தான் மாறி ஆகணும். அஸ்வின் இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லலை என்றால் கடைசி வரை பேச மாட்டேனு உறுதியாக தெரிந்திருக்கும்'' என்றான் அழுத்தமாய்.

''அஸ்வின் இன்னிக்கே அத்... ஆன்ட்டிகிட்ட ஒழுங்கா பேசுடா அத சொல்ல தான் உன்கூட சாப்பிட வந்ததே... கல்யாணம் நடப்பது அப்பறம்... நீ இப்படி இருக்காதே...'' என்று அறிவுறுத்தினான்.

''ஹ்ம்ம் முயற்சிபண்றேன்'' என்றான் அஸ்வின்.

அங்கு வீட்டிலோ தனுவிற்கு தவசுடர் மூலமாக தனக்கு சுவாதியின் சித்தப்பா பையன் விக்ரமிற்கு தன்னை மணம் முடிக்க கேட்கின்றார்கள். அதற்கு வீட்டில் பேச்சு வார்த்தை நடக்கின்றது என்று புரிய முதலில் பயந்து போனாள்.

ஸ்ரீராமிற்கு போன் செய்தாளோ அவனோ சைலண்ட் மோடில் போட்டு இருந்தான். அதனால் வாய்ஸ் ரெக்கார்டர் மூலமாக எல்லாம் சொல்லி அவனுக்கு வாட்ஸப் அனுப்பினாள்.

மூன்றாம் ஆண்டு முதல் செமஸ்டர் இப்பொழுது தான் முடிந்ததால் ஓரளவு படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க முடிந்தது. நொடிக்கு ஒரு முறை ராம் பார்த்துவிட்டானா? என ப்ளூ டிக் விழுந்து விட்டதா என்றும் பார்த்தாள்.

வீட்டிற்கு வந்த அஸ்வின் தனது அம்மாவிடம் பேசவில்லை என்றாலும் அவர்கள் கொடுத்த மாலை உணவினை தவிர்க்காமல் வாங்கி உண்டான். அதற்கே சந்தோசம் அடைந்தாள் ராதை.

ஆகாஷ் தயங்கி தயங்கிய மீண்டும் விஸ்வநாதனிடம் மீண்டும் கேட்க, அவரோ இம்முறை அஸ்வினை கண்டு ஆகாஷை பார்த்து, ''தன்யாவுக்கு ஏற்கனவே வரன் பார்த்தாச்சு அது முடியற மாதிரி தான் இருக்கு... நாளை மறுநாள் பொண்ணு பார்க்க வர சொல்லிட்டேன். நான் தவசுடருக்கு நேர்ல போய் சொல்லிக்கறேன் அவங்க சொன்ன சம்பந்தம் தவிர்க்கப்பட்டதுன்னு.''

''அப்பா தன்யா இன்னும் படிப்பு முடியலை... அப்பறம் பொண்ணு பார்க்க வர சொல்ல போறதா சொல்றிங்க?'' என்றான் ஆகாஷ் குழப்பமாக, ''ஆமா டா அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பையன் அவள் படிப்பு முடியும் வரை காத்திருக்க தயார் ஆனா நம்ம தவசுடர் வீட்ல இருந்து பெண் கேட்டு மறுக்கும் பொழுது நாமளும் சரியான காரணத்தில் வேண்டாம் என்று சொல்லணும் அதனால தான் ஏற்கனவே நினைச்சு இருந்த மாப்பிள்ளை வீட்ல இருந்து பேசி முடிவு செய்துவிட்டால் மற்ற வரன் வந்து பெண் கேட்க மாட்டாங்களே அதான்'' என்று பதிலுரைத்தார்.

''யாருப்பா மாப்பிள்ளை? தன்யாக்கு பிடிக்குமா?'' என்றான் ஆகாஷ். விஸ்வநாதனோ அஸ்வினை பார்த்தபடி ''எல்லாம் பிடிக்கும் அவளுக்கு பிடிக்காதது நானும் செய்ய மாட்டேன். நீயே மாப்பிள்ளை வரும் பொழுது பாரு?'' என்பதை எல்லோர் காதில் விழும்படி சொல்லிவிட்டு ''நாளை மறுநாள் பொண்ணு பார்க்க வர சொல்லணும் வருவங்காளா?'' என்று மெல்ல முனுமுனுத்து கொண்டு செல்ல அஸ்வின் தோட்டத்தில் சென்று போனை எடுத்து ராமிடம் விஷயம் சொல்லி நாளை மறுநாள் வர ஏற்பாடு செய்ய சொன்னான்.

ராமின் மூலமாக நிஷாவுக்கு விவரம் போனது. அது சித்திக்கை எட்டியது. ஏற்கனவே அஸ்வின்-ராம் நட்பில் புகைச்சல். இதில் அஸ்வின் வேறு தன்னை அடித்து விட்டு இருக்கின்றான். இந்த திருமணம் நடந்தால் அது இருவரின் நட்பில் மேலும் அதிகரிக்கும் என்று தோன்ற அவர்களை பிரிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க துவங்கினான்.

அங்கு தனுவோ சுவாதி அண்ணியின் சித்தப்பா பையன் விக்ரம் தான் தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்றும் அதை எப்படி புறக்கணிக்க என்றும் குழம்பினாள்.

சரி எப்படியும் கொஞ்ச நாள் இருக்கும் அதற்குள் இன்னும் சில நேரத்தில் ஸ்ரீராம் வாய்ஸ் மெசேஜ் பார்த்து போன் செய்வான் என்று நிம்மதி அடைந்தாள்.

அப்படியே உறங்க சென்றாள். அடுத்த நாள் காலையில் முதல் வேலையாக ராம் பார்த்துவிட்டானா? என்று போனை எடுத்து வாட்ஸப் பார்க்க அது பார்த்துவிட்டதாக காட்டியது.

அப்பறம் ஏன் தனக்கு போன் செய்யலை 'சே மிட் நைட் போன் செய்ய மாட்டார். ஆனா மெசேஜ் செய்து இருக்கலாமே' என்று யோசிக்க அன்றைய நாட்களில் மீண்டும் அவனுக்கு ''என்ன என் வாய்ஸ் மெசேஜ் கேட்டீங்களா? இப்போ என்ன செய்ய?'' என்று அனுப்பினாள். அது சென்ட் ஆகிவிட்டதா? என்று மீண்டும் நொடிக்கு ஒரு முறை போனை கவனித்தாள்.

ஸ்ரீ ராமோ மிகுந்த பிஸியாக காலையிலே நாளை பெண் பார்க்க என்ன என்ன தேவை என்று நிஷாவிடம் கேட்டு பார்த்து பார்த்து வாங்கி குவித்தான். அந்த பிஸியில் தன்யா மெசேஜ் பார்க்க முடிந்தாலும் பதில் அனுப்ப முடியாது இருந்தான்.

சித்திக் மட்டும் வேகமாக என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

அன்றைய இரவில் தூங்க செல்லும் பொழுது தான் ராம் போனை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தான். தன்யாவின் மெசேஜ் எல்லாம் பார்த்தான். 'சே இவளுக்கு மெசேஜ் செய்யாம போயிட்டேன். தன்யா மனசுல ரொம்ப பயந்திருப்பா' என்று அவளுக்கு போன் செய்யலாமென்று யோசித்தவன் விஸ்வநாதனிடம் நான் உங்க பொண்ணுக்கு போன் செய்ய மாட்டேன் என்ற பதில் நினைவு வர மெசேஜ் மட்டுமாவது செய்யலாமா என்று நினைத்து ஒரு மணி நேரம் சென்ற பின்னர் 'பயப்படாதே... நான் இருக்கேன் தன்யா' என்ற ஒன்றை அனுப்பிவிட்டு படுத்தான்.

அவன் போனில் பேட்டரி லோ காட்ட அப்படியே உறங்கினான். அடுத்த நாள் காலையில் வீடே பரபரப்பாக இருப்பதாக தோன்ற குழம்பினாள்.

ராமின் பதில் மெசேஜ் அவளுக்கு கலக்கத்தை நீக்கியது. ஆனால் கொஞ்ச நேரம் தான் அந்த நிம்மதி போல.... சுவாதி சாப்பிடும் பொழுது ''இன்னிக்கு உன்னை பொண்ணு பார்க்க வர போறாங்க தன்யா... முகத்துக்கு கடலை மாவு பேஸ்ட் போட்டுக்கறியா?'' என்றதும் நிம்மதி முற்றிலும் பறிப்போனது.

தனு கலங்கியபடி வீட்டில் இருப்போரை பார்க்க எல்லோரும் பரபரப்பாக மகிழ்ச்சியோடு இருப்பதாக தோன்றியது.

உடனே அறைக்கு வந்து ராமிற்கு போன் செய்ய அதுவோ எடுக்க மாட்டேன் என்று சிணுங்கியது. மாலையில் வர இருப்பதால் ராதை பார்த்து பார்த்து சேலையை எடுத்து வைக்க, விஸ்வநாதனோ பேங்க் லாக்கரில் நகை எடுத்துவர சென்று இருந்தார்.

பவித்ராவோ இந்த அஸ்வின் ஒரு ரியாக்ஷன் கூட கொடுக்காம இருக்கான் என்னனு தெரியலையே... என்று அவனையே ஊடுருவினாள்.

மனதில் 'சே ராமிற்கு கொடுத்து வைக்கலை யாரையோ விரும்பறான் இல்லை என்றால் அவனையே எப்படியாவது மாமாகிட்ட சொல்லி இந்த வீட்டில் ஒருவனா மாற்றி இருக்கலாம்' என்றெண்ணினாள்.

ஆகாஷ்-சுவாதிக்கு யார் மாப்பிள்ளை என்றாலும் தனுவிற்கு ஓகே என்றால் சரியென்றே எண்ணினார்கள்.

விகாஷ் நேத்ரா இருவரும் சேட்டைகள் செய்து நேரத்தை தள்ளினார்கள். தன்யாவிற்கு பொறுமை போனது கலக்கம் வந்தது. கூடவே பயமும்...

யாரிடமாவது தனது எண்ணத்தை கூறிடலாமா? என்று யோசிக்க சுவாதி அண்ணி வீட்டில் தானே பொண்ணு கேட்கின்றார்கள் அதனால் சுவாதி அண்ணியிடம் வேண்டாம் என்று கூற நினைத்து, சுவாதி தன்னிடம் பேச வந்த நேரத்தில் மெல்ல சொல்ல முயன்றாள்.

''அண்ணி நீங்க எல்லாம் படிச்சு முடிச்சு தானே அண்ணாவை கல்யாணம் செய்துக்கிட்டிங்க... எனக்கும் படிப்பு முடியட்டுமே... இப்போ எதுக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க?'' என்று வினா தொடுத்தாள்.‌

''சும்மா பார்த்துவிட்டு பூ தானே வைக்க போறாங்க தனு எனக்கு நீங்க வீட்ல வந்து பார்த்துவிட்டு பூ வச்சி ரிங் போட்டீங்களே அப்படி தான்... வேற ஒன்னுமில்லை...'' என்றதும் ''எனக்கு அதெல்லாம் வேண்டாம். என்னை யாரும் வந்து பார்க்க வேண்டாம்'' என்றே முகத்தில் கோவத்துடனும் கலகத்துடனும் சொல்ல இம்முறை சுவாதி அவளை நன்கு ஆராய்ந்து ஒரு பார்வை பார்த்து, பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல ''யாரையாவது லவ் பண்றியா தனு? என்றதும் தனு முகம் பேய் அறைந்த மாதிரி மாறினாள்.

''அண்ணி அது..... அது அண்ணி...'' ''தனு...?! நீயா? எனக்கு ஆச்சரியமா இருக்கு? வீட்ல யாருக்காவது தெரியுமா?'' என்றாள் சுவாதி.

இல்லை என்பதை போல தனு தலையை அசைத்தாள். ''இப்போ வந்து சொல்ற? ஏற்கனவே சொல்ல என்னவாம்? போச்சு இப்போ என்ன செய்ய? யாரை விரும்பற?'' என்று அதட்டினாள்.‌

''சொல்ல நேரம் பார்த்தேன் அண்ணி. இப்படி புசுக்குனு பொண்ணு பார்க்க வருவாங்க என்று நினைக்கலை... நீங்க தான் இதை தடுத்து நிறுத்தணும் ப்ளீஸ் அண்ணி.. வீட்ல யாருகிட்டயும் சொல்லாதீங்க...'' என்று கெஞ்சினாள்.

''சரி யாரு அந்த பையன்? பேர் என்ன?'' என்று ஆர்வம் பொங்க கேட்டாள்.

''இல்லை நீங்க இந்த வரனை தடுத்து நிறுத்துங்க சொல்றேன்'' என்றாள் தனு.

''என்ன விளையாடறியா? எல்லோருக்கும் தெரிஞ்சா என்னவாகும்''

''அண்ணி அண்ணி ப்ளீஸ் அண்ணி''

''ஐயோ தனு என்ன பேசற? பையன் யாரு என்ன என்று சொல்ல மாட்டேன் சொல்லற? யாருக்கும் தெரிய கூடாது என்றால் எப்படி?'' என்று எரிந்து விழுந்தாள்.‌

''இல்லை அண்ணி உங்க சித்தப்பா பையன் விக்ரம் தானே நீங்க தானே ஈஸியா பேசி நிறுத்தலாம்'' என்று கூறினாள் தன்யா.

''தனு சாரி உனக்கு விஷயமே தெரியாதுல வருவது விக்ரம் இல்லை... உங்க அப்பாவுக்கு தெரிந்தவங்க'' தனு அப்படியே தரையில் அமர்ந்தாள்.

''ஐயோ போச்சு... நான் இப்போ என்ன செய்ய...'' என்றவாறு அழுதவளை கண்டு சுவாதி நெஞ்சு உருகியது.

''இப்போ எதுக்கு அழுவுற? எல்லோரும் வந்து பார்த்தா என்ன சொல்லுவ. அழுகையை நிறுத்து. நீ முதலில் சொல்லி இருந்தா என்னவாம். சரி விடு... நான் ஆகாஷ்கிட்ட பேசி பார்க்கறேன். என்கூட வா'' என்று கையை பிடித்து அவர்கள் அறைக்கு அழைத்து சென்றாள்.

சுவாதி உள்ளே வந்ததும் அதனை கண்டவன். 'ஏய் சுவாதி இந்த டிரஸ் ஓகே வா? விகாஷுக்கு என்ன டிரஸ் போட போற?'' என்று கேட்டு நிற்க சுவாதி பதில் பேசாமல் தனுவை பார்க்க அப்பொழுது தான் அவள் கண்கள் சென்ற திசையில் தனு இருப்பதை கண்டு, ''ஏய் தனு எப்போ வந்த.... சாரிம்மா நான் கவனிக்கலை....'' என்றதும் இருவரும் அமைதியாக இருப்பதை உணர்ந்து ''என்ன விஷயம் இரண்டு பேரும் திருதிருவென முழிக்கிறிங்க?'' என்றதும் தயக்கத்துடன் தனு ஒருவனை விரும்புவதாகவும் அதனால் வரும் வரனை நிறுத்த சொல்லி சுவாதி ஆகாஷிடம் சொல்ல, ஆகாஷ் கோவமும் அதிர்ச்சியும் கலந்து தனுவை பார்த்தான்.

''என்ன தனு அண்ணி சொல்வதெல்லாம் உண்மையா?'' என்று அதட்டி கேட்டான்.

''அண்ணா...'' என்றவள் கேவலில் துவங்கி ஆம் என்பதாய் தலையை அசைக்க, கட்டிலில் அமர்ந்தவன் அப்படியே தனுவையும் சுவாதியும் மாறி மாறி பார்த்தான்.

கொஞ்ச நேரம் செல்ல, ''வீட்ல யாருக்கு தெரியும்? பையன் பேரு என்ன? என்ன செய்யறான்?'' என்றதும் தனு ''அண்ணா வீட்ல யாருக்கும் தெரியாது. இப்போ தான் சுவாதி அண்ணிக்கு சொன்னேன். இப்போ உனக்கு?'' என்றாள்.‌

''சரி பையன் பேரு என்ன? என்ன செய்யறான்?'' என்று கேட்டானா.

''அது இப்போ வேண்டாம் அண்ணா. முதலில் வருபவர்களை நிறுத்து அப்பறம் சொல்றேன் ப்ளீஸ்'' என்றாள்.

''என்ன தனு விளையாடறியா? யாரு என்ன என்று சொல்லாமல் நான் அப்பாகிட்ட பேசினா என்னை தான் திட்டுவார்'' என மறுத்தான்.

''அண்ணா அவங்க வருவதை நிறுத்திவிட்டு கேளு நான் சொல்றேன்... கண்டிப்பா சொல்றேன்'' என்று கூறினாள்.
எங்கே ராம் என்று கூறினால் ஏற்பாரா மாட்டாரா என்று பயம் தனுவிற்கு.

''என்ன தனு இப்படி சொல்ற? அப்பா வேற யார் வர போறாங்க என்று சொல்லவேயில்லை. இப்போ யாருனு தெரியாமலே வரப்போறவங்களை நிறுத்த முடியுமா? லாஜிக்கோட பேசு தனு'' திட்டினான்.

''அண்ணா என் காதலை சொல்லாமல் நிறுத்த முடியாதா?''
''தனு நீ ஒருத்தனை விரும்பற என்பதையே என்னால இன்னும் நம்ப முடியலை.. இதில் படிப்பு முடியாமல் உன்னை அப்பா எப்படி பொண்ணு பார்க்க யாரையோ வர சொல்றது அதை விட நம்ப முடியலை... இதுல நீ வேற யாரு பையன் என்றும் சொல்ல மாட்டேங்குற இப்படி சொல்லி அப்பாகிட்ட பேசினா என்னை தான் திட்டுவார்.
நிறுத்தறதுக்கு காரணம் சரியா இருக்கணும்.''

''நான் அப்போ என்ன செய்ய என் வாழ்கை நான் முடிவு செய்ய கூடாதா..'' என்று அழுகையில் வெடித்தவளை எப்படி சமாதானம் செய்ய என்றே முழிக்க, அப்பா தன் காதலுக்கு தேவை தைரியம் பொறுமை என்று சொன்னாரே அதே போல தனு தைரியமாக அப்பாவிடம் சொன்னனால் கேட்க மாட்டாரா? என்றே யோசித்தான்.

''தனு நீ அப்பாகிட்ட நேரிடைய சொல்லு அப்பா கண்டிப்பா திட்ட மாட்டார் உனக்கு உன் வாழ்கை முடிவு செய்ய அவர் அவகாசம் தருவார்'' என்றார்.
தனு சுவாதியை பார்க்க சுவாதியும் ''ஆமா தனு ஆகாஷ் சொல்வதும் சரியாய் தான் தோன்றுது. நீ அத்தை மாமாகிட்ட நேரிடைய சொல்லு.... அதான் பெஸ்ட்.. நமக்கு நேரமும் இல்லை... இப்பவே மணி இரண்டு ஆகுது மணி நான்குக்கு பொண்ணு பார்க்க வருபவர்கள் வந்துடுவாங்க. இப்பவே பேசினா.. அட்லீஸ்ட் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வர சொல்லி எப்படியாவது நிறுத்தலாம்''

''ஆனா எப்படி சொல்ல...''

''இங்க பாரு பையன் யாருனு சொல்லு நான் பேசறேன்''

''ஏன் அண்ணா தெரிஞ்சா தான் எனக்கு சப்போர்ட் செய்வியா?''

''அப்படி இல்லை தனு யாரு என்று தெரியாம உனக்கு சப்போர்ட் செய்தா... அது சின்ன பிள்ளை தனமா இருக்கும். நீ சொல்வதை வைத்து நான் முடிவு செய்து உனக்கு அந்த பையன் சரியான மேட்ச் என்று தோன்றினா... ''

''போங்க... அப்போ எனக்கு நீங்க சப்போர்ட் செய்ய மாட்டீங்க அப்படி தானே... அத தான் சுற்றி வலைக்கிறிங்க...'' என்றழுது களைத்து இருப்பவளை கண்டு மனம் கலங்க செய்தது.

இது வரை தன்யா எதற்கும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது இல்லையே... ஏன் அடம் பிடித்ததும் இல்லை... செல்ல தங்கை இப்படி அழுது பார்க்க முடியாமல் தவிக்க கீழே இருந்து ராதை தனு சுவாதியை கூப்பிடுவது கேட்க, வேறு வழியின்றி மூவரும் கீழே வந்தார்கள்.

தொடரும்.
 
Top