கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வெண்டைக்காயும் வெற்றிச்செல்வனும்

Puvana Chandrasekaran

Moderator
Staff member
வெண்டைக்காயும் வெற்றிச்செல்வனும்

இந்தக் கதையின் நாயகன் வெற்றிச் செல்வன்
இருபத்தாறு வயது இளைஞன். படித்து முடித்து வேதாளம் போல முதுகில் பல அரியர்ஸைச் சொத்து சேர்ப்பது போலச்
சுமந்து கொண்டு கல்லூரியை விட்டு வெளியேறியவன். ஒரு வழியாக கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் முடித்து ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்து விட்டான் சென்னையில்.

அம்மா அப்பாவிற்கு ஒரே பையன் அவன். செல்லப் பையன். வெற்றிச் செல்வனின் பெற்றோர் வெள்ளந்தியான கிராமத்து மக்கள். அப்பிராணிக்குச் சப்பிராணியானவர்கள்.

மகனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டு அவனுடைய சுதந்திரத்தைப் பறிக்கும் விபரீத ஆசை அவர்கள் மனதில் வந்து விட்டது.

பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். வெற்றி பார்க்க நன்றாக ஸ்மார்ட்டாக இருப்பான். கையில் நல்ல டிகிரி. நல்ல வேலை. பெற்றோர்க்கு மகனுக்குக் காலாகாலத்தில் கல்யாணம் செய்து வைக்கும் ஆசை வருவது இயல்பு தானே!

கையில் நாலு காசு சம்பாதிக்கும் இளைஞர் தனியே இருந்தால் கெட்டுப் போய் விடுவார்கள் என்ற எண்ணம் மனதில். கல்யாணம் ஆனால் தான் பொறுப்பு வரும் என்ற நம்பிக்கை வேறு பெற்றோர் மனதில் குடி கொண்டு விடுகிறது.

தூரத்து உறவில் அத்தை ஒருத்தி கிராமத்தில் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்தாள். அத்தைக்கு ஒரு பெண். படிப்பு ஏறவில்லை. கொஞ்சம் வெகுளி.‌இது நாகரீகமான சொல். உண்மையில் வயதுக்கேற்ற மூளை வளர்ச்சி இல்லாதவள். தலையில் கலர் ரிப்பன் வைத்துப் பின்னிக் கொண்டு, வாயில் விரலைச் சப்பிக் கொண்டு , தெருவில் சின்னப் பசங்களுடன் பாண்டியோ இல்லை கிட்டிப் புள்ளோ விளையாடிக் கொண்டு அடிக்கடி பஞ்சாயத்துக்கு அம்மாவைக் கூப்பிடும் ரகம். மூக்கை உறிஞ்சிக் கொண்டு கையில் ஒரு லாலிபாப்புடன் திரியும் அவளைத் தெருக் குழந்தைகள் எல்லாம் வம்புக்கு இழுப்பார்கள்.

அவளை எப்படியாவது வெற்றியின் தலையில் கட்டி விட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் வெறி கொண்டு அலைந்தாள் அந்த அத்தை.

"அடியே, உன் மாமன் ஊரிலிருந்து வந்திருக்காண்டி. அவன் கிட்டப் போயி ஆசையா நாலு வார்த்தை பேசிட்டு வாடி. நாளைக்கு உன்னைக் கட்டிக்கப் போற முறை மாமன்"

என்று சொல்லிச் சொல்லி அந்த அசட்டுப் பெண் மனதில் ஆசையை வளர்த்து விட்டிருந்தாள் அத்தை.

" டேய் புருஷா! ஒன்னை வெற்றி மாமான்னு கூப்பிடணுமா இல்லை புருஷான்னு கூப்பிடணுமா?"

என்று அவனைக் கண்டதுமே அனத்த ஆரம்பிப்பாள் கமலி என்ற அந்தப் பைத்தியக்காரப் பிச்சி. வெற்றியின் பின்னாலேயே சுற்றிக் கொண்டு இருப்பாள். வெற்றி நெளிந்து கொண்டே தப்பித்து ஓடி விடுவான்.

அவளுக்கு பயந்து லீவு கிடைத்தாலும் கிராமத்துக்கே வர‌மாட்டான்.

வெற்றியின் அம்மா அப்பா சாமர்த்தியமாக அத்தைக்குத் தெரியாமல் பக்கத்து ஊர் நண்பர் வீட்டில் ஒரு பெண்ணைப் பார்த்து முடிவும் செய்து விட்டார்கள்.

வெண்பா என்ற பெண். நண்பரின் மகள்.பி.ஏ.படித்திருந்தாள். அழகும் அறிவும் பணிவும் சேர்ந்த பெண். வெற்றியும் வெண்பாவின் ஃபோட்டோவைப் பார்த்து க்ளீன் போல்ட் ஆகி விட்டான்.

கல்யாணத்திற்கு உடனடியாக வெற்றி சம்மதிக்க, ஊரறிய நிச்சயமும் செய்து வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டார்கள் இரு வீட்டாரும். விஷயம் தெரிந்த அத்தை கோபத்துடன் கொந்தளித்தாள்.ஸஏதாவது செய்து கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்தும் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கல்யாணமும் நல்லபடியாக முடிந்தது. நல்ல ஜோடிப் பொருத்தம் இருவருக்கும். கல்யாணத்தன்று மணமகள் அறைக்குச் சென்று வெண்பாவைத் தனியாகச் சந்தித்து
ஏதோ இரகசியமாக அத்தை பேசி விட்டுப்
போக , வெண்பாவும் மகிழ்ச்சியுடன் தலையாட்டினாள்.

திருமணம், மறுவீடு, விருந்துச் சாப்பாடுகள் எல்லோமே முடிந்து புதுமணத் தம்பதிகள் சென்னைக்குத் தனிக்குடித்தனம் போனார்கள்.

வெற்றி லீவு முடிந்து வேலையில் சேரும் நாளும் வந்தது. வீட்டிற்குப் பக்கத்திலேயே காய்கறிக் கடை,மளிகைக் கடை எல்லோமே வெண்பாவிற்குக் காண்பித்து விட்டு வெற்றி ஆஃபிஸ் கிளம்பிப் போனான். வெண்பா தானே சமாளித்துக் கொள்வதாகச் சொல்லி விட்டாள். ஆஃபிஸ் முடிந்து மாலை வீடு திரும்பினான் வெற்றி. காலையில் பிரெட் தான் சாப்பிட்டிருந்தான். மாலையில் மனைவி கையால் நல்ல சாப்பாட்டுக்காக நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்த அவனை வரவேற்றது ஏதோ அவனுக்குப் பிடிக்காத ஸ்மெல்.

மோப்ப நாய் போல மூக்கை நீட்டி உறிஞ்சிக் கொண்டே வந்தவன் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாமல் தனது அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தான். பசியுடன் டைனிங் டேபிளுக்கு வந்தான். தட்டை வைத்துப் பரிமாறினாள் வெண்பா.

முதல் சமையல் தன்னுடைய ஆசைக் கணவனுக்காகத் தன் கையால் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தாள்.

தட்டில் வரிசையாக விழுந்தன ஒவ்வொன்றாக அத்தனை ஐட்டங்களும்.

வெண்டைக்காய்ப் புளிப் பச்சடி
வெண்டைக்காய்த் தயிர்ப் பச்சடி
வெண்டைக்காய் சாம்பார்
வெண்டைக்காய்க் குழம்பு
வெண்டைக்காய் மோர்க்குழம்பு
வெண்டைக்காய்ப் பொரியல்
வெண்டைக்காய் சிப்ஸ்

என்று விழுந்த அத்தனை வெண்டைக்காய் ஐட்டங்களைப் பார்த்துத் திகைத்துப் போய் விட்டான் வெற்றி. சதம் அடிக்க வந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன் உடனே அவுட்டாகிப் போவது போல விருட்டென்று எழுந்து சாப்பிடாமல் ரூமுக்குப் போய் விட்டான் வெற்றி. கவலையுடன் வெண்பா போய்க் கூப்பிட வயிறு சரியில்லை என்று சொல்லி விட்டு மோரைக் குடித்து விட்டுப் படுத்து விட்டான்.

அடுத்த நாள் காலையில் ஆஃபிஸ் கிளம்ப ரெடியாகிக் காலை உணவு சாப்பிட உட்கார்ந்தான். ஏதோ தோசை செய்து சாம்பாருடன் பரிமாறினாள் வெண்பா. வாயில் ஒரு விள்ளல் தோசையைப் போட்டுக் கொண்டவன்,

" இது என்ன தோசை?" என்று கேட்க அவளும்,

"இது ஸ்பெஷலாக வெண்டைக்காய் அரைத்து செய்வது. புது ரெசிபி. யூ ட்யூபில் பார்த்து செய்தேன். கூடவே தொட்டுக் கொள்ள வெண்டைக்காய் சாம்பார்" என்று சொல்ல விருட்டென்று எழுந்தவன் கிளம்பி ஆஃபிஸ் போய் விட்டான். மாலையில் வந்தும் அவளிடம் பேசவில்லை. வீட்டில் ஒன்றும் சாப்பிடவுமில்லை.

பயந்து போனாள் வெண்பா. இப்படியே இரண்டு நாட்கள் ஓடின. எந்த முன்னேற்றமும் இல்லை. வெற்றியின் அம்மா ஃபோன் செய்து மருமகளிடம் நலம் விசாரிக்க, ஓவென்று அவள் அழ ஆரம்பிக்க, மாமனார் மாமியார் இரண்டு பேரும் உடனே கிளம்பி அன்று சாயந்திரமே அங்கு ஆஜர்.

"என்ன நடந்தது? என்ன ஆயிற்று?"
என்று விசாரித்தாள் மாமியார். தான் செய்த சமையல் ஐட்டங்களை வெண்பா அடுக்கத் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள் மாமியார்க்காரி.

" ஆமாம். நீ எதுக்கு எல்லோமே இப்படி வெண்டையாச் செஞ்சு போட்டே! ஒனக்கு வேற ஒண்ணும் செய்யத் தெரியாதா?"

"அது கல்யாணத்தன்னிக்கு அத்தை வந்து சொன்னாங்க. இவருக்கு வெண்டைக்காய் ரொம்பப் பிடிக்கும். வாயைத் திறந்து தானாக் கேட்க மாட்டான். நாம்பளா பாத்துப் பாத்து செஞ்சு போடணும்னு சொன்னாங்க. அது தான் நான் அப்படிக் கஷ்டப்பட்டு எல்லோமே வெண்டைக்காய் ஐட்டமாச் செஞ்சேன்" என்று அவள் சொல்லத் தலையில் அடித்துக் கொண்டாள் வெற்றியின் அம்மா.

" அடப்பாவி மகளே! அந்த அத்தைக்காரி பொல்லாதவளாச்சே! அவளோட பைத்தியக்காரப் பொண்ணை நம்ப வெற்றிக்குக் கட்டிக் கொடுக்க முடியாத கோபத்தில ஒங்கிட்டே வேணும்னு இப்படிச் சொல்லிருக்கா. வெற்றிக்குக் குழந்தையில் இருந்து வெண்டைக்காயே பிடிக்காது. வீட்டில வாங்கக் கூட மாட்டோமே!" என்று சொல்ல வெண்பாவிற்குத் தன்னுடைய தவறு புரிந்தது.

வெற்றியும் அவளிடம் சொல்லத் தயங்கிச் சாப்பிடாமல் இருந்திருக்கிறான். மாலை வீட்டிற்குள் நுழைந்த வெற்றி தன் பெற்றோரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் ‌உள்ளே நுழைந்தவன் வெண்பாவைப் பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போக, அம்மா வெற்றியின் கையைப் பிடித்து வெண்பா அருகில் உட்கார வைத்தாள். அத்தை செய்த குளறுபடியை விளக்க அங்கே ஒரே சிரிப்பலை பரவியது.

"ஏண்டா, நீயும் வாயைத் திறந்து சொன்னாத் தானேடா அதுக்கும் தெரியும்? ஒனக்குப் பிடிக்கும் னு தானே ஆசை ஆசையாச் செஞ்சிருக்கு புள்ள. பாவமில்லயாடா வெற்றி?" என்று சொல்ல வெற்றியும் தலை குனிந்தான்.

அதற்குப் பிறகு என்ன! இல்லறம் இனிமையாகத் தொடர வெண்பா வெண்டைக்காய் இல்லாத சமையல் வகைவகையாகச் செய்து அசத்தி விட்டாள்.

இதோ வெண்பா இப்போது வயிற்றில் சிசுவைச் சுமந்து கொண்டு வலம் வருகிறாள். மசக்கை மிக அதிகமாகத் தொந்தரவு செய்ய வாடி வதங்கிப் போனாள் வெண்பா. சாப்பாடே இறங்கவில்லை‌ அவளுக்கு.

ஆசை மனைவியை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு வெற்றி சமைத்துப் போடுகிறான். வாய்க்கு ருசியாக அவளுக்குப் பிடித்ததாகச் செய்ய ஆசைப்பட்டு அவளிடம் ,"என்ன வேண்டும்?" என்று கேட்க அவளும்,

"கத்திரிக்காய் எண்ணெய்க் குழம்பும் வெண்டைக்காய் ரோஸ்ட்டும் வேண்டும்"
என்று ஆசைப்பட இதோ வெற்றி முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு மனைவிக்குப் பிடித்த வெண்டைக்காயைச் சமைத்தும் விட்டான். மனைவிக்குத் தன் கையால் ஊட்டியும் விட்டான்.

அடிக்கடி தானே சமைத்ததில் இப்போது வெண்டைக்காயின் ருசி பழகிப் போய் நன்றாகச் சாப்பிடவும் ஆரம்பித்து விட்டான். உடல்நலத்துக்கு நல்லது என்று புரிந்ததோடு எதையும் பிடிக்கவில்லை என்று ஒதுக்கக் கூடாது என்பதும் புரிந்து விட்டது அவனுக்கு.

நாளை ஒரு பொறுப்பான தந்தையாகப் பிறக்கப் போகும் குழந்தைக்கு எல்லாக் காய்கறிகளையும் கொடுத்துச் சாப்பிட வைக்க வேண்டுமே!

குழந்தையும் பிறந்தது. ஆரோக்கியமான ஆண் குழந்தை. குழந்தைக்கு எந்தக் காயில் என்ன சத்து என்று சொல்லிச் சொல்லி அம்மாவும் அப்பாவும் மாற்றி
மாற்றிக் கொடுத்து ஊட்டி வருவதால் குழந்தை எல்லாக் காயுமே சாப்பிடுகிறான்.

ஆனால் ஒரே ஒரு கஷ்டம். தயிரைக் கண்டாலே பிடிக்கவில்லை. தான் சாப்பிடாதது மட்டும் அல்லாமல் அம்மா அப்பாவையும் சாப்பிட விடுவதில்லை.
பார்த்தாலே காத தூரம் ஓடுகிறான்.

குழந்தையைத் தயிர் சாப்பிட வைக்க என்ன வழி என்று இரண்டு பேரும் இப்போது தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

விரைவில் கண்டு பிடித்து விடுவார்கள்.
இந்தக் கால இளைஞர்கள் நல்ல புத்திசாலிகள் தான். உண்மை தானே?


புவனா சந்திரசேகரன்,
12/07/2021
 
Last edited:

Kothaisuresh

Well-known member
நல்லா இருக்கு. வெண்டைக்காய் போய் தயிரில் முடிந்த கதை. இன்னிக்கு எங்காத்துல வெண்டைக்காய் கரமது தான்😃😃😃😃
 
Top