ksk2022-writer
Well-known member
ksk – 47
வெள்ளிக் கொலுசின் ஓசையிலே
அத்தியாயம் 10
பருத்தித்துறைக்குச் செல்லும் பாதையில் ஊரணி வைத்தியசாலைக்கு அண்மையில் அந்தக் குட்டி மாயவர் கோயில் அமையப் பெற்றிருந்தது.
துளசிச் செடிகள் அணிவகுத்து நிற்க நட்ட நடுவில் அந்தச் சின்னஞ் சிறிய மாயவர் கோவில் இருந்தது.
கோவிலினுள் நுழைந்து மாயவரைத் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் நன்கு குனிந்து நுழையும்படி அந்தக் கோவிலின் நுழைவாயில் அமையப் பெற்றிருந்தது.
கோவிலின் முன் முகப்பில் ஐந்து தலை கொண்ட நாக சர்ப்பத்தில் துயிலும் மாயவனின் ஓவியம் அழகாகத் தீட்டப் பட்டிருந்தது.
கோவிலின் முன் பக்கத்துச் சிறிய மடத்தினுள் ஒரு குட்டி அணில் பொங்கல் திரணையை வைத்துக் கொறித்துக் கொறித்துச் சுவைத்துக் கொண்டிருந்தது.
பேருந்தில் அமர்ந்திருந்த ஸ்ரீ மாயவனைத் தரிசனம் செய்வதற்காக வெளியே பார்த்த போது அவளது கண்களில் அந்தக் குட்டி அணில் பட்டது.
பேருந்து அந்தக் கோவிலடியில் சில நிமிடங்கள் நின்று விட்டே போவதால் அணில் கொறித்து உண்ணும் அழகு அவளது நினைவுச் சங்கிலியை அறுத்து நடப்புக்குக் கொண்டு வந்து அதை இரசிக்கத் தூண்டியது.
அவளது மனம் முழுவதும் துளசி இன்றில் இருந்து என்னோடு தான் இருக்கப் போகிறாள் என்ற எண்ணமும் கூடவே இன்னொரு குட்டிப் பெண்ணையும் இன்று தான் முதன் முதலில் பார்க்கப் போகிறேன் என்ற எண்ணமுமே வியாபித்திருக்க கண்களில் பட்ட அனைத்தையும் சந்தோஷத்துடனும் இரசனையுடனும் இரசித்துப் பார்த்தாள்.
பேருந்து மெல்ல மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கவும் நடுவில் அறுந்த அவளது நினைவுகளும் மீண்டும் பயணிக்கத் தொடங்கின.
அவளது பொறுப்பில் இருந்த புதுக் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்ற பேச்சு அடி பட்ட போது, நீயே பெயரையும் வையம்மா என்று பொறுப்பை அவளிடம் விட்டார் வெண்பாம்மா.
அதன்படி ஈழக்குமரனும் அவளும் ஒரு முறை பேசிக் கொண்ட போது அவன் சொன்ன துளசிதேவி என்ற பெயரையே குழந்தைக்கு வைத்தாள்.
பெயர் வைத்த நாள் தொட்டே அவளைத் தன் மகள் போலவே பாவித்தாள் ஸ்ரீ.
அதன் பிறகு குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆகும் வரையில் ஆசிரமத்திலேயே பிடிவாதமாகத் தங்கிக் கொண்டவள் அதன் பின்னரே தன் வீட்டுக்கு அவ்வப்போது போகத் தொடங்கினாள்.
துளசிதேவிக்கு ஒரு வயது ஆவதற்கு ஒரு மாதம் இருக்கும் போது ஒரு நாள் ஸ்ரீயைப் பார்த்து ‘அம்மா' என்று மழலைத் தமிழில் அழைத்தாள் குழந்தை.
அந்தச் சந்தோஷத்தை தன் தாய் தந்தையிடம் பகிர்ந்து கொள்ளுவதற்கு வீடு வந்தவளுக்கு ஒரு அதிர்ச்சிச் செய்தி காத்திருந்தது.
தன்னை அம்மாவென்று தன் மகள் அழைத்த சந்தோஷத்தைப் பகிர வந்தவள் தன் அம்மா தன்னை விட்டுப் பிரிந்த செய்தியைக் கேட்டதும் அம்மாவென்று வீறிட்டுக் கத்தினாள்.
ஆம் ஸ்ரீயின் அம்மா மணிமேகலை ஒரு புற்றுநோயாளி… இத்தனை வருடங்கள் அவர் வாழ்ந்ததே பெரிய விடயம் என்று வைத்தியர்கள் சொன்னார்களாம் என்று இழவு வீட்டிற்கு வந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.
அப்போது தான் தன் தாய் ஒரு புற்றுநோயாளி என்பதே அவளுக்குத் தெரிய வந்தது.
ஸ்ரீக்கும் மணிமேகலைக்கும் எப்போதுமே ஒரு ஒட்டாத தன்மை இருந்து கொண்டே தான் இருக்கும்.
மூர்த்தி காட்டும் பாசத்தில் காற்பகுதியளவு கூட மணிமேகலை ஸ்ரீயின் மீது காட்டவில்லை.
அம்மாவுக்கு என்னை ஏன் பிடிக்கவில்லை என்கிற கேள்வி சின்ன வயதில் இருந்து ஸ்ரீயைக் குடைந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அதை அவள் யாரிடமும் வாய் விட்டுக் கேட்கவில்லை.
பாசமே காட்டாத தாய் தன்னைப் பாதியில் விட்டுப் போய் விட்டாள் என்கிற கோபம் மணிமேகலை மீது ஸ்ரீக்கு இருந்தது.
தன் தாயிடம் தனக்குக் கிடைக்காத பாசத்தை தன் மகளுக்கு முழுவதுமாக அள்ளிக் கொடுப்பது என்கிற உறுதியான முடிவுக்கு வந்தாள் அந்தக் கன்னித்தாய்.
ஆனாலும் தாயின் இழப்பு அவளைப் பெரிதும் வாட்டியது.
அந்த நேரத்தில் அமுதவாணி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஸ்ரீ தேறியிருப்பது என்பது கஷ்டம் தான்.
அந்த நேரத்தில் தான் ஈழக்குமரனின் பாசமும் அவளுக்கு முழுதாகக் கிடைத்தது. ஆனாலும் அவ்வப்போது இருவரும் சண்டை போட்டுக் கொள்ளவும் மறக்கவில்லை.
துன்னாலையில் இருந்த அந்த வீட்டில் இருக்கும் போது மணிமேகலை இல்லாத தனிமை பெரிதும் வாட்டுவதை உணர்ந்த மூர்த்தி உடுப்பிட்டியில் இருக்கும் தன் இன்னொரு வீட்டிற்குச் செல்லலாமா என்று மகளிடம் கேட்டார்.
முதலில் அதை மறுத்த ஸ்ரீயோ
தாயில்லாத பெண் என்பதால் தான் ஈழக்குமரன் தன்னிடம் பரிவு காட்டுகிறான் போல யாருக்கு வேண்டும் இவனது அனுதாபம் என நினைத்து விட்டுத் தந்தையிடம் சென்று வீடு மாறிச் செல்வதற்குச் சம்மதம் சொன்னாள்.
வீடு மாறி வந்தாலும் கூடத் தினமும் துளசிதேவியைச் சென்று பார்த்து விட்டே வருவாள்.
அவள் நன்கு பேசத் தொடங்கியதுமே
“என்னை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்?”
என்று ஒரு தடவை துளசி ஸ்ரீயிடம் கேட்டு இருக்கிறாள்.
அதற்கு
“அம்மா தாத்தாவைப் பார்க்கப் போகிறேன். அவர் பாவம் தனியாக இருக்கப் பயப்படுகிறார். அதனால் அம்மா இரவில் அங்கே இருப்பேன் பகலில் இங்கே இருப்பேன்…”
என்று அவள் சொன்னதும் சமத்தாகக் கேட்டுக் கொண்டவள் அதன் பிறகு அந்தக் கேள்வியைக் கேட்டுத் தாயைத் தொந்திரவு செய்யவில்லை.
இடை நடுவே அவளது படிப்பாலும் தனக்கென ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் அமைதியாக இருந்த ஸ்ரீ… அவளுக்கென ஆசிரியர் பணி கிடைத்த மறு மாதமே நான் துளசியைத் தத்தெடுக்கப் போகிறேன் நீங்கள் அதற்கு வேண்டிய விதிமுறைகளை நிறைவேற்றிக் கொடுங்கள் என்ற கோரிக்கையோடு வெண்பாம்மாவின் முன்னால் போய் நின்றாள்.
இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த வெண்பாம்மாவிற்கும் அவளது கோரிக்கை புதிதாகத் தெரியவில்லை.
ஆனாலும் அவளிடம்
“இதற்கு உன்னைப் பெற்றவர்கள் சம்மதிப்பார்களா? உனக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லையே?”
என்கிற ஐயக்கேள்வியை எழுப்பினாள்.
அவரைச் சற்று நேரம் அமைதியாகப் பார்த்திருந்தவளோ
“திருமணம் ஆனால் தான் நான் குழந்தையைத் தத்தெடுக்க முடியுமா?”
என்கிற கேள்வியை எழுப்பினாள்.
அதற்கு அவர் இல்லை என்ற பதிலைச் சொன்னதும்
“என்னுடைய அப்பாவைச் சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு நீங்கள் ஆக வேண்டிய காரியங்களைப் பாருங்கள் அம்மா…”
என்று சொன்னவள் சொன்னபடியே தன் தந்தையிடம் சம்மதத்தையும் வாங்கி விட்டாள்.
பேருந்து சரஸ்வதி ஆசிரமத்துக்கு முன்பாக நின்றதும் வெளியே எட்டிப் பார்த்து விட்டு மெல்ல இறங்கி ஆசிரமத்தை நோக்கி நடந்தாள் ஸ்ரீ.
துளசியைத் தன்னுடனேயே அழைத்து வருகையில் அவள் எப்படி நடந்து கொள்வாள் என்பதைப் பார்ப்பதற்கு ஆசையாக இருந்தது அவளுக்கு…
அவளுக்கு இப்போது தான் மூன்று வயது பூர்த்தி அடைந்து இருக்கிறது. நன்றாகப் பேசுவாள் உடனுக்குடன் உணர்ச்சிகளை வெளிப் படுத்துவாள். நாள் முழுவதும் அவளுடனேயே இருந்து விட வேண்டும் போல ஸ்ரீக்குத் தோன்றும்.
ஆசிரமத்து வாசலுக்கு முன்பாக இருந்த இனிப்புக்கடையைப் பார்த்ததுமே அவளது கால்கள் அந்தத் திசையை நோக்கித் திரும்பியது.
அவளுக்கு இருந்த சந்தோஷத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வாங்க வேண்டும் என்பதையே மறந்து போய் விட்டாள்.
ஸ்ரீ இனிப்புக் கடைக்குள் நுழைந்த வேளையில் ஈழக்குமரன் தன் வீட்டில் இருந்து ஆசிரமத்துக்குப் புறப்பட்டான்.
அவனுள்ளும் சிலம்பரசியை அவன் முதன் முதலில் பார்த்த நிகழ்வு படமாக ஓடிக் கொண்டிருந்தது.
அவன் சாதாரணமாகத் தொண்டுகள் செய்யும் எண்ணத்துடனேயே சரஸ்வதி ஆசிரமத்துக்கு வந்து போவான்.
ஸ்ரீயுடன் பேசிப் பேசியே அவனுக்கும் தத்தெடுக்க வேண்டும் என்ற ஆசை லேசாகத் துளிர் விட ஆரம்பித்தது.
அதனால் சாதாரணமாக வந்து போய்க் கொண்டிருந்தவன் நிஜமான விருப்பத்துடன் வந்து போகத் தொடங்கினான்.
சில சமயங்களில் ஸ்ரீயைப் பார்ப்பதற்காகவும் வந்திருக்கிறான். ஓரிரு நாட்கள் தவிர அவளை அவனால் பார்க்க முடியவில்லை.
அவனது வேலையும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது.
அவனுக்கு ஏனோ அரச உத்தியோகத்தில் அவ்வளவாக நாட்டம் இருக்கவில்லை.
சுய தொழில் செய்வதில் பெரும் விருப்பம் இருந்தது. அதனால் கரவெட்டிப் பிரதேசத்தில் உள்ள குடத்தனை என்ற இடத்தில் பெரிய பழத் தோட்டத்தை தனியாளாகவே உருவாக்கினான்.
அது அவனுக்கு நல்ல விதத்தில் பயனளித்தது. தரமான இயற்கை முறையிலான பழங்கள் என்பதால் அவனது தோட்டம் என்றுமே வியாபாரிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும்.
இப்படி இருக்கும் போது அவனது தோட்டத்தில் வேலை பார்க்கும் அவன் ஒரு ஞாயிற்றுக்கிழமை பழத் தோட்டம் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டான்.
அவனது வீட்டில் இருந்து பாதி தோட்டம் செல்வதற்குக் குறைந்தது இருபது நிமிடங்களாவது பிடிக்கும்.
பழத் தோட்டத்திற்கு செல்லும் பாதையில் ஒரு குறிப்பிட்ட பகுதி வெட்டவெளியாக இருக்கும் இடமாகக் காணப்படும். அங்கே குட்டை குட்டையாகத் தேங்கி நிற்கும் நீர்ப் பரப்பில் பெயர் தெரியாத வண்ண வண்ண மலர்கள் பூத்துக் கிடக்கும்.
ஓரிரு குட்டைகளில் தாமரைப் பூக்கள் கூடப் பூத்துக் கிடக்கும்.
நடுநடுவே பூவரசமரங்கள், விளாத்திமரங்கள், நாவல்மரங்கள் என மரங்களும் நிற்கும் அந்தப் பகுதியைக் கடக்கும் போது மட்டும் ஈழக்குமரனின் இருசக்கர வண்டி நிதானத்தைத் தத்தெடுத்துக் கொள்ளும்.
இருபக்கமும் இரசித்தபடியே வருவான்.
அன்றும் அப்படியே இரசனையோடு வந்தவன் இப்போது மட்டும் ஸ்ரீ இங்கே இருந்தால் இந்த இடமெங்கும் அலைந்து திரிந்து குறைந்தது பத்துப் பூக்களாவது பறித்து விட்டு, இதற்கு என்ன பெயர் இந்தப் பூவுக்கு என்ன பெயர் என்று துளைத்தெடுத்திருப்பாள் என நினைத்துப் புன்னகைத்துக் கொண்டு வந்தான்.
அவளது நினைவிலேயே வந்தவனைக் காகங்கள் பயங்கரமாகக் கரைகின்ற சத்தம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைத்தது.
அவன் வந்து கொண்டிருந்த பாதையில் இருந்து சற்றுத் தூரமாககக் காகங்களும் பருந்திகளும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
காகம் ஏதும் இறந்திருக்குமோ என நினைத்துத் திரும்பியவனது வண்டியின் முன்னால் உடும்புக் கூட்டம் ஒன்று பாதையைக் கடந்து அந்தப் பக்கம் போய் கொண்டிருந்தன.
அவை போகும் வரை கைகளைக் கட்டியபடி வண்டியிலேயே இருந்தவனது காதுகளில் காகங்கள் கரையும் சத்தத்தைத் தவிர வேறு ஏதோ சத்தமும் கேட்டது.
என்ன சத்தம் அதுவெனக் கூர்மையாக உற்றுக் கேட்டவனின் காதுகளில் குழந்தையொன்று வீறிட்டுக் கத்தும் சத்தம் தான் கேட்டது.
இது என்ன இந்த வெட்டவெளியில் குழந்தையின் அழுகுரல் எங்கிருந்து வந்தது. என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தவனின் பார்வை வட்டத்துள் காகங்களும் பருந்துகளும் வட்டமிடும் இடம் விழுந்தது.
அந்தத் திக்கில் இருந்து தான் குழந்தையின் தீனமான அழுகுரல் வருகிறது என்பதை கணத்தில் உணர்ந்து கொண்டவனின் கால்கள் எப்படித் தான் வேகமான ஓட்டத்தைத் தத்தெடுத்துக் கொண்டனவோ தெரியவில்லை.
சப்பாத்துக் கால்கள் சேற்றில் புதைவதைக் கூடப் பொருட்படுத்தாமல் அசுர வேகத்தில் ஓடி வந்தவனது சத்தம் கேட்டுப் பாதிப் பறவைகள் பயந்து விலகியோடி விட்டன.
மூச்சிரைக்க ஓடி வந்தவனை ஒரு துணிச் சுருளில் சேறும் சகதியும் அப்பப்பட்ட நிலையில் அழுதவாறு கிடந்த குழந்தையொன்று வரவேற்றது.
குழந்தை கிடந்த கோலத்தைப் பார்த்தவனுக்கு ஒரு கணம் இருதயம் வேலை நிறுத்தம் செய்தது போல இருந்தது.
கணமும் யோசியாமல் குழந்தையை வாரி எடுத்தவன் அதன் பிஞ்சு உடம்பில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என வேகமாக ஆராய்ந்து விட்டு ஒரு காயமும் இல்லையென்றதும் தான் அது வரை பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியே விட்டான்.
குழந்தை அப்போதும் வீறிட்டு அழுது கொண்டிருக்கவே குழந்தையைத் தனக்குத் தெரிந்த பாணியில் சமாதானப் படுத்தியவாறு தன் மார்போடு அணைத்துக் கொண்டு அதன் உச்சியில் தன் உதடுகளைப் பதித்து மென்மையான முத்தமொன்றைக் கொடுத்தான்.
அவனது மார்புச் சூட்டின் கதகதப்போ அல்லது அவனது முத்தத்தில் வெளிப்பட்ட கனிவோ எதுவோ ஒன்றில் குழந்தையின் அழுகை மெல்ல நின்று அது சிணுங்கலாக மாறியது.
முதன் முதலாக அவனுக்குக் கண்மண் தெரியாத கோபமும் வெறுப்பும் வந்தது.
“இப்படிக் காகங்களுக்கும் பருந்துகளுக்கும் இரையாகவா இந்தக் குழந்தை பிறந்தது.
என்ன மனிதர்கள் இப்படி யாரும் இல்லாத புதருக்குள் போட்டுப் போவதை விடக் குழந்தையை ஏதாவது ஆசிரமத்தின் முன்பாகவாவது விட்டுப் போய் இருக்கலாமே…”
எனக் கோபத்தோடும் வெறுப்போடும் நினைத்தவன்
தான் அணிந்திருந்த மேல் சட்டையைக் கழற்றிக் குழந்தையை நன்கு போர்த்தி அணைத்துக் கொண்டபடி சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினான் அவன்.
பழத் தோட்டத்தில் இருந்து இரண்டு ஆட்களையும் ஒரு முச்சக்கர வண்டியையும் வரவழைத்தவன் ஒருவனிடம் தன் வண்டியை ஒப்படைத்து விட்டுக் குழந்தையோடு முச்சக்கர வண்டியில் சரஸ்வதி ஆசிரமத்தை நோக்கிப் புறப்பட்டான்.
ஆசிரமத்தில் அவனை எதிர் கொண்ட வெண்பாம்மாவிடம் குழந்தையை அவன் கொடுத்த போது குழந்தையின் பிஞ்சு விரல்கள் மெல்ல அவனது கட்டை விரலைப் பற்றிக் கொண்டது. அந்த விரல்களை விலக்க மனமில்லாமல் குழந்தையின் முகத்தைப் பார்த்தவனோ சொக்கித் தான் போனான்.
தன்னுடைய குண்டுமணிக் கண்களால் கொட்டக் கொட்ட முழித்தபடி குழந்தை அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது.
அந்தப் பார்வை என்னை விட்டு எங்கும் செல்லாதே என்பது போல இருந்தது அவனுக்கு…
குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம்
“பெண்குழந்தை ஈழக்குமரன்”
என்று சொன்னார் வெண்பாம்மா...
அவரை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தவனோ
“குழந்தையை நான் சிறிது நேரம் வைத்திருக்கட்டுமா அம்மா…”
என்று கேட்டான்.
அவரும் புன்னகைத்து விட்டு அவனருகில் பால்மாப்பையையும் பாற்புட்டி ஒன்றையும் வைத்து விட்டு
“வெளியே சிரமதானம் நடக்கிறது. நான் ஒரு தடவை போய்ப் பார்த்து விட்டு வந்து குழந்தைக்குப் பால் கரைத்துக் கொடுக்கிறேன்”
என்று சொல்லி விட்டு அவர் போய் விட்டார்.
அவர் போனதுமே குழந்தையை ஒற்றைக் கையால் இறுக அணைத்தபடி அங்கே போத்தலில் இருந்த சுடுநீரை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றி அதற்கு அளவாகப் பச்சைத் தண்ணீரரக் கலந்து சூடு அளவா என்பது போலக் கை வைத்துப் பார்த்து விட்டு, அங்கே மடித்து வைக்கப் பட்டிருந்த துணியொன்றை எடுத்து நனைத்துக் குழந்தைளின் உடம்பை மெல்லத் துடைத்து விட்டவன். பதமாகப் பால்மாவைக் கரைத்துப் புகட்டத் தொடங்கினான்.
தன்னுடைய மடியில் இவன் புதியவன் என்ற பேதமே இல்லாமல் ஒய்யாரமாகப் படுத்தபடி அதன் செப்பு வாயால் பாலைச் சப்பிச் சப்பி உறுஞ்சிக் குடித்த குழந்தையின் முடியைக் கோதியவன் நொடியில் முடிவெடுத்தான் இந்தக் குழந்தையைத் தான் தத்தெடுப்பதென்று…
அன்றைய நாளில் இருந்து குழந்தை அதிக நேரம் அவனிடமே இருந்தது.
குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்ற விஷயம் அடிபடத் தொடங்கவுமே வெண்பாம்மா அந்தப் பொறுப்பை ஈழக்குமரனுடன் ஒப்படைத்து விட்டார்.
அவனுக்குத் தானும் ஸ்ரீயும் பேசிக் கொள்ளும் போது அவள் சொன்ன சிலம்பரசி என்ற பெயரைக் குழந்தைக்கு வைத்தவனுக்குக் குழந்தை மீது வார்த்தைக்குள் அடங்காத பாசம் முளைத்தது.
இடை நடுவே ஸ்ரீயைக் காண வேண்டி வந்தாலும் நின்று பேச நேரமில்லாமல் அவன் தன் அரசிக்குட்டியுடன் நேரத்தைச் செலவிட்டான்.
அதே போலத் தான் ஸ்ரீயும் தன் துளசிக்குட்டியுடன் நேரத்தைச் செலவிட்டாள்.
சிலம்பரசி ஒரு வயது பூர்த்தியானதும் அவனைப் பார்த்து அப்பா என்று தான் அழைத்தாள்.
அந்த நொடி ஈழக்குமரனுக்கு இந்த உலகையே வென்ற புளகாங்கிதம் வந்து போனது.
அவளைத் தன் மகளாவே பாவிக்கத் தொடங்கி விட்டிருந்தவனுக்குக் குழந்தையின் அப்பா என்ற அழைப்பு அவனுக்குள் அவள் தான் தன் மகள் என்ற உணர்வை ஆழமாக விதைத்தது.
தன் தந்தை தாயால் தூக்கி வீசப்பட்ட குழந்தைக்கு இனிமேல் நான் தான் எல்லாமே என நினைத்தவன்… தன் அத்தனை பாசத்தையும் குழந்தை மேல் காட்டியதோடு, தன் மகளின் ஒவ்வொரு அசைவையும் ஒரு தந்தையாக விரும்பி இரசிக்கத் தொடங்கினான்.
தாய் தந்தையின் பாசம் கிடைக்கப் பெறாத தான் பெறாத மகளுக்குத் தன் அன்பையும் அக்கறையையும் அள்ளிக் கொடுத்து அவளை நன்கு வளர்க்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான் அந்தத் தகப்பன்.
சிலம்பரசிக்கு இரண்டு வயது பூர்த்தி ஆகி அவள் மூன்றாவது வயதில் காலடி எடுத்து வைத்த அந்த வருடத்தின் முதல் மாதத்திலேயே அரசியை நான் தத்தெடுக்கப் போகிறேன் என்றபடி வெண்பாம்மாவின் முன்னால் வந்து நின்றான் ஈழக்குமரன்.
மற்றவர்களின் மனவோட்டத்தை நொடியில் கணித்து விடும் வெண்பாம்மாவிற்கு ஈழக்குமரனின் மனவோட்டத்தை மட்டும் சரியாகக் கணிக்க முடியவில்லை.
அவன் அவ்விதம் சொன்னது அவருக்கு வியப்பாகத் தான் இருந்தது.
இருந்த போதும் நாட்டின் சட்டம் பற்றி அவனுக்கு எடுத்துச் சொன்னார் வெண்பாம்மா… அவர் சொல்வதைக் கேட்டிருந்தவனோ
“எனக்கு எல்லாமே தெரியும் அம்மா”
என்று பதில் சொன்னவன் அதன் பின்னரே தன் தாயிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்துத் தன் குடும்பத்தினரிடம் சம்மதம் வாங்கினான்.
ஒருவேளை என்னைத் திருமணம் செய்து கொள்ளும் பெண் என் குழந்தையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எனக்குத் திருமணமே வேண்டாம் என உறுதியாக இருந்தான்.
அப்படியே என்னால் அவளைத் தத்தெடுக்க முடியாது என்ற நிலை வந்தால் அம்மாவை வைத்து அரசியைத் தத்தெடுக்க வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்திருந்தான் ஈழக்குமரன்.
அந்த நேரத்தில் தான் ஸ்ரீக்கும் அவனுக்குமான திருமணப் பேச்சு அடிபடத் தொடங்கியிருந்தது.
அதைக் கேட்டதுமே அவனுக்கு ஏனோ கோபம் ஒன்றுமே வரவில்லை. மாறாக எப்போது அவளை நேரில் பார்ப்பது அவளிடம் அரசியைப் பற்றிச் சொல்வது என்ற எண்ணம் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது தான் தான் அவளை நேசிக்கிறேனோ என்ற வினா அவனுள் எழ அதற்கு ஆம் என்ற விடையும் கிடைத்தது.
அதிலும் அவளும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முன் வந்து குழந்தைக்குத் தான் விரும்பிய பெயரான துளசிதேவி என்ற பெயரை வைத்திருக்கிறாள் என்ற விடயம் தெரிந்ததுமே அவள் மீது இருந்த நேசம் இரட்டிப்பானது.
அதே எண்ணத்தோடு ஆசிரமத்திற்கு வந்தவன் தான் எடுத்து வந்திருந்த பெரிய வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே செல்லத் தொடங்கினான்.
தன் மகள் இனிமேல் தன்னுடன் தான் இருக்கப் போகிறாள் என்ற எண்ணமும் இன்னொரு குட்டிப் பெண்ணையும் முதன் முதலாகச் சந்திக்கப் போகிறேன் என்ற எண்ணமும் அவனுள் புது உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்தது.
அதே நேரத்தில் இனிப்புக் கடையில் இருந்து கை நிறைய இனிப்புப் பைகளோடு ஸ்ரீயும் ஆசிரம வாசலினுள் நுழைந்தாள்.
எதேச்சையாக அவளைத் திரும்பிப் பார்த்தவனோ தன் நடையை நிறுத்தி விட்டு அவள் தன்னருகில் வரும் வரை அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.
அவள் உடுத்தியிருந்த மெல்லிய சிவப்பு வண்ணப் புடவை அவளது மாநிறத்திற்கு எடுப்பாக இருந்தது. அவனையறியாமல் அவனது பார்வை அவளது பாதங்களை மெல்லத் தழுவி நின்றது.
அவன் விழிகள் தேடிய விஷயத்தை அவனால் பார்க்க முடியவில்லை.
அவனைப் பார்த்து விட்டு அவளும் சற்றே நடையை எட்டிப் போட்டதால் அவளது வேக நடையில் அது வரை அவளது புடைவைக்குள் ஒளித்திருந்த அவளது பாதக் கொலுசு மெல்ல எட்டிப் பார்த்து அவனை நோக்கிக் கண்சிமிட்டியது.
சட்டென்று பார்வையை விலக்கி விட்டு அருகில் வந்தவளின் கைகளில் கனமாக இருந்த இனிப்புப் பைகளில் பாதியை வாங்கிக் கொண்டவனோ அவளோடு இணைந்து நடந்தான்.
“ஈழா… இன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு முதலில் ஏதாவது கோவிலுக்குப் போய் விட்டே வீட்டுக்குப் போக வேண்டும்…”
என்று சொன்னவளுக்குத் தலையை ஆட்டிச் சம்மதம் சொன்னவன் நேராக வெண்பாம்மாவின் அறையை நோக்கி நடந்தான்.
சில கோப்புகளைக் கையில் வைத்திருந்தபடி அவர்களின் வருகைக்காகத் தான் அவரும் காத்துருந்தவர் போல இருவரையும் அமரும்படி பணித்தவர், பதிவுத் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
உண்மையிலும் வெண்பாம்மாவிற்கு ஸ்ரீரங்கநாயகியை நினைக்கும் போதெல்லாம் பெருமையாக இருந்தது.
அவளை நினைத்து மட்டுமல்ல ஈழக்குமரனை நினைத்தும் அவருக்குப் பெருமையாக இருந்தது.
எத்தனை பேருக்கு இப்படிப் பட்ட மனது வரும். இப்படியே எல்லோரும் இருந்தால் நாட்டில் ஆதரவு அற்றவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் என நினைத்துக் கொள்வார்
அனைத்து விதிமுறைகளையும் பதிவு செய்து குழந்தைகளின் பெயரில் குறித்த தொகைப் பணத்தைப் போட்டு அவர்கள் இருவரதும் பாதுகாவலர்கள் என்ற இடத்தில் இவர்களின் கையெழுத்தைப் போடச் செய்து குழந்தைகள் இருவரையும் அவர்களிடம் ஒப்படைத்தார் வெண்பாம்மா.
தான் கொண்டு வந்திருந்த இனிப்புக்களை ஆசிரமத்தில் இருந்த நூறு குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தவள் அதன் பின்னரே துளசியைப் பார்ப்பதற்குச் சென்றாள்.
அதே போல அவனும் அரசியைப் பார்ப்பதற்குச் சென்றான்.
ஆசிரமத்தின் முன்பாக இருந்த மண்டபத்தின் தூணில் சாய்ந்தபடி இருந்து தாளொன்றில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த மகளின் பின் பக்கமாகச் சென்று அவளது கண்களைப் பொத்தினாள் ஸ்ரீ.
சிறு நொடி கூடத் தாமதிக்காமல்
“அம்மா”
என்று கத்தியபடி தன் கைகளைத் தட்டிச் சந்தோஷத்தை வெளிப் படுத்தினாள் குழந்தை.
லேசாக வியந்தபடி
“எப்படியடி அம்மா தான் என்று கண்டு பிடித்தாய்?”
என்று கேட்ட தாயைத் தலை சாய்த்துப் பார்த்தபடி
“நீங்கள் மட்டும் தானேம்மா என்னைத் தேடி வருவீர்கள்…”
என்று மழலை மொழியில் சொன்ன சின்னவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டு அவளது உச்சியில் முத்தமிட்டாள் ஸ்ரீ.
தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவளது நெற்றியைப் பார்த்தபடி
“அம்மா… கோவிலுக்குப் போனீர்களா?”
என்று கேட்டு விட்டு அவளது நெற்றியோடு தன் நெற்றியை முட்டி விட்டுக் கண்ணடித்தாள் துளசி.
மகளின் முடியை மெல்ல ஒதுக்கி விட்டு
“துளசிக்குட்டி… இனிமேல் நீ அம்மாவோடு தான் இருக்கப் போகிறாய் தெரியுமா… உன்னை அழைத்துச் செல்லத் தான் நான் கோவிலுக்கு எல்லாம் போய் விட்டு வந்தேன் தெரியுமா…”
என்றபடி கோவில் விபூதியை மகளுக்குப் பூசி விட்டாள் ஸ்ரீ.
ஸ்ரீ அவ்விதம் சொன்னதும் துள்ளிக் குதித்துத் தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தியபடி அவளை இறுக அணைத்துக் கொண்டாள் துளசி.
அப்படியே மகளைத் தூக்கியபடி
“உனக்கு அம்மா… இருவரை அறிமுகப் படுத்தி வைக்கப் போகிறேன்”
என்றபடி ஈழக்குமரனைத் தேடிப் போனாள் ஸ்ரீ.
தன்னுடைய அரசியைத் தேடிப் போன ஈழக்குமரன் அவள் தன்னைக் கண்டதும் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதைப் பார்த்ததும் லேசாகச் சிரித்தபடி அறையினுள் நுழைந்து அவளைத் தேடுவது போலப் பாசாங்கு செய்தான்.
முட்டுக்காலில் இருந்தபடி சுற்று முற்றும் தேடுவது போல இருந்தவனின் பின்னால் பதுங்கிப் பதுங்கி வந்த அரசி தன் பிஞ்சு விரல்களால் அவனது கண்களைப் பொத்தினாள்.
“அரசிக்குட்டி தானே இது…”
என்றபடி மெல்ல அவளது குட்டிக் கரத்தைப் பற்றி முன்னால் இழுத்தவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் அரசி.
அவளது முடியை மெல்ல ஒதுக்கியபடி
“அரசிக்குட்டி இனிமேல் அப்பாவோடு தான் இருக்கப் போகிறீர்கள்… உங்களை அழைத்துப் போகத் தான் அப்பா வந்தேன்…”
என்று சொன்னவனைப் பார்த்து தன்னுடைய குட்டிப் பற்கள் தெரியச் சிரித்தாள் சின்னவள்.
அவளைத் தூக்கியபடி
“குட்டிக்கு அப்பா இன்னும் இருவரைக் காட்டப் போகிறேன்…”
என்றபடி ஸ்ரீயைத் தேடியவாறு வெளியே வந்தான் ஈழக்குமரன்.
ஒருவரை ஒருவர் தேடி வந்தவர்கள் ஆசிரமத்துக்கு முன்பாக இருந்த வேப்பமரத்துக்குக் கீழே சந்தித்துக் கொண்டார்கள்.
சிலம்பரசியைக் கீழே இறக்கி விட்டவன் துளசியின் அருகில் வந்து
“துளசிக்குட்டி என்னிடம் வருகிறீர்களா?”
என்று கனிவாகக் கேட்டான்.
புதியவனை மேலும் கீழும் பார்த்த துளசி தாயைத் திரும்பிப் பார்த்தாள். அவளது பார்வை யாரம்மா இது என்று கேட்பது போல இருந்தது.
குழந்தையின் காதுக்குள்
“துளசிக்குட்டி இது தான் அப்பா… அது தான் குட்டியின் தங்கச்சிப்பாப்பா”
என்று மெல்லக் கிசுகிசுத்தாள்.
அவள் அவ்விதம் சொன்னதும் ஈழக்குமரனின் பின்னால் நின்ற சின்னவளை எட்டிப் பார்த்து விட்டு
“நீங்கள் தான் அப்பாவா…”
என்றபடி அவனது கையை மெல்லத் தொட்டுப் பார்த்தாள்.
அவளது ஸ்பரிசத்தில் மெய் சிலிர்த்தவன் ஸ்ரீயை ஒரு தடவை பார்த்து விட்டு
“ஆமாம்டா செல்லம்”
என்றபடி துளசி அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டான்.
அவனோடு வாகாகப் பொருந்திய மகளைப் பார்த்தபடி அவனின் பின்னால் மறைந்தார்ப் போல நின்ற அரசியிடம் சென்று அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள் ஸ்ரீ.
தன் முன்னால் இருந்தபடி தன்னையே பார்த்திருந்த புதியவளை மெல்லத் தொட்டுப் பார்த்த சின்னவளின் கரத்தைப் பற்றித் தன்னருகே இழுத்து
“அரசிக்குட்டி என்னிடம் வருவீர்களா…”
என்று கனிவாகக் கேட்டாள்.
தன் தந்தை அழைப்பது போலவே தன்னை அவள் அழைத்ததும் சந்தோஷமான அரசி அவள் மேல் மெல்லச் சாய்ந்து கொண்டு அவளைப் பார்த்தாள்.
தன் மீது சாய்ந்தவளின் கன்னத்தை மெல்லத் தட்டியபடி
“நான் தான் குட்டியின் அம்மா… இனிமேல் என்னை அம்மா என்று அழைக்கிறீர்களா?”
என்று ஆசையுடன் கேட்டாள் ஸ்ரீ.
தன் குட்டித் தலையை நன்றாக ஆட்டியபடி
“சரிம்மா…”
என்று சொன்ன சின்னவளை கட்டியணைத்து முத்தங் கொடுத்தவள் அவளைத் தூக்கித் தன் இடுப்பில் வைத்துக் கொண்டபடி அவளுக்கு விபூதி பூசி விட்டாள் ஸ்ரீ.
“என்னை அப்பா என்று அழையுங்கள் குட்டி”
என்று துளசியிடம் சொன்னபடி சிலம்பரசியிடம் ஸ்ரீயை அறிமுகப் படுத்தவென்று திரும்பிய ஈழக்குமரன் இடுப்பில் அரசியை வைத்தபடி விபூதி பூசி விட்டபடி நின்றவளைப் பார்த்ததும் வாயடைத்துப் போனான்.
அரசியோடு அவர்கள் அருகில் வந்தவள் துளசியைக் காட்டி
“குட்டி… இது உங்களின் அக்கா துளசி”
என்று சொல்லி விட்டு அவளைக் கீழே இறக்கி விட்டாள்.
ஈழக்குமரனிடம் இருந்த துளசி அவனை ஒரு தடவை திரும்பிப் பார்த்து விட்டு மெல்ல நழுவிக் கீழே இறங்கி வந்து அரசியையே வைத்த கண் வாங்காமல் பார்த்து வைத்தாள்.
இருவருக்கு முன்பாக மீண்டும் மண்டியிட்டு அமர்ந்த ஸ்ரீ… இருவரையும் மிக அருகில் இழுத்து விட்டாள்.
தாயை ஒரு தடவை பார்த்த துளசி தன் முன்னால் நின்ற குட்டித் தங்கையின் கன்னத்தை மெல்லத் தொட்டுப் பார்த்தாள்.
அவளது தொடுகையில் கிளுக்கிச் சிரித்த அரசியைத் துளசிக்கு மிகவும் பிடித்துப் போகவே அவளது கையைத் தன் இரு கைகளாலும் பிடித்தபடி
“அம்மா… தங்கச்சிப்பாப்பாவை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்திருக்கிறது…”
என்று ஸ்ரீயிடம் சொன்னாள்.
“அப்படியா தங்கம்… எனக்கும் தான்”
என்றவள் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
மூவரதும் பாசப் பிணைப்பைப் பார்த்தபடி அடிப்பாவிகளா என்னை மறந்து விட்டீர்களே என்பது போலப் பாவமாக நின்றிருந்த ஈழக்குமரனை எதேச்சையாகப் பார்த்த ஸ்ரீ வந்த சிரிப்பை அடக்கியபடி இருவரின் காதுகளிலும் ஏதோ சொன்னாள்.
தாய் சொன்னதைக் கேட்ட குழந்தைகள் தந்தையின் பக்கம் ஓடிச் சென்று அவனது இரு கரங்களையும் பற்றியிழுத்து அவனைக் கீழே முழந்தாளில் அமர வைத்து விட்டு அவனை இறுகக் கட்டிக் கொண்டார்கள்.
எதிர்பாராத விதமாக நடந்த மழலைகளின் அணைப்பில் மீண்டும் வாயடைத்துப் போனவனோ ஸ்ரீயை நிமிர்ந்து பார்த்தான்.
அவளோ அவனைப் பாரத்துப் புருவங்களை உயர்த்தி என்னவென்பது போலப் பார்த்து வைக்க ஒன்றுமில்லை என்பது போலத் தலையை அசைத்தவன் குழந்தைகளை இறுக அணைத்துக் கொண்டான்.
அவனை நோக்கி மெல்ல நடந்து வந்தவள் அவனது நெற்றியில் கோவில் விபூதியைப் பூசி விட்டு மெல்ல ஊதி விட்டாள்.
அதையும் எதிர்பாராதவன் மீண்டும் வாயடைத்துப் போனான்.

“பாசம் வைக்க இரத்த சம்பந்தம் தேவையில்லையடி
இதயம் இருந்தாலே போதுமென உணர வைத்தவள் நீ
இன்று நானும் உன்னையே தொடர்கிறேன்
என் கைப் பிடித்து வாழ்க்கை முழுவதும் வருவாயா என்னுடனே…”