கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே...3

ksk2022-writer

Well-known member
KSK-47

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே…

அத்தியாயம் 3

யாழ் நகரிலே வடமராட்சி மேற்குத் திசை முனையிலே தொண்டைமானாறு ஆற்றங்கரையின் அருகில் அன்னதானக் கந்தன் என்ற புகழாரத்துடன் கோவில் கொண்டிருக்கும் செல்வச் சந்நிதி முருகன் கோவிலின் முன்பாகச் சிதறு தேங்காய் உடைக்கப் பட்டு இருக்கச் சிதறிய தேங்காய்ச் சில்லுகளைக் கோவிலுக்கு வந்திருந்த வாண்டுகள் எடுத்துக் கொறித்துக் கொண்டிருந்தார்மட்டும்

அன்று வெள்ளிக் கிழமை என்பதால் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் விஷேசமாகப் பூஜைகள் இடம் பெறுவது வழமை.

வெள்ளிக் கிழமை நாட்களில் பக்தர் கூட்டம் அலைமோதும் அளவுக்கு இல்லை என்றாலும் சற்று அதிகமாகத் தான் நிறைந்திருப்பார்கள்.

ஆலயத்திற்குச் செல்லும் முன் வீதியில் இரு மருங்கிலும் மடங்கள் அமைந்திருந்தாலும் அவற்றில் அன்னதானம் வழங்குவதற்கு என்றே மோகன் மடம், ஓம் சரவணபவ மடம் போன்ற மடங்கள் இயங்கிக் கொண்டிருப்பது வழமை.
அதிலும் வெள்ளிக்கிழமை நாட்களில் ஆலயத்தினுள் நிறைந்து இருக்கும் மக்களை விடவும் அன்னதான மடங்களில் நிறைந்து இருக்கும் மக்களின் தொகை தான் அதிகமாக இருக்கும்.

அன்றைய வெள்ளியும் அன்னதான மடத்திற்குச் சென்ற தந்தை வரும் வரையிலும் சந்நிதி கோவிலின் முன்பாகக் கிளை பரப்பி நின்றிருந்த ஆலமரத்தின் நிழலில் அமர்ந்திருந்து சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீரங்கநாயகி.

அவளது விழிகள் தான் சுற்றியிருந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனவே தவிர அவளது சிந்தையெல்லாம் வேறெங்கோ சுழன்று கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு முன்பாக நயினாதீவு ஆலயத்தில் வைத்து அவளது தேனுவக்காவிடம் தனது மனதில் உள்ள ஆசையை அவள் பேசிக் கொண்டதை அடுத்து, ஓரளவுக்குத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் தந்தை மூர்த்தியிடமும் தன்னுடைய ஆசையைப் பற்றி ஸ்ரீரங்கநாயகி ஒப்புவித்து விட்டாள்.

அவளது தந்தை மூர்த்தியோ உடனடியாக ஒன்றையும் சொல்லி விடாமல் சில தினங்களாகவே அமைதியைக் கடைப் பிடித்தார்.

எதுவாக இருந்தாலும் அதை அப்படியே முகத்துக்கு முன்னால் சொல்லி விடுகின்ற தந்தையின் அந்த அமைதி
ஸ்ரீரங்கநாயகிக்கு வயிற்றில் லேசாகப் புளியைக் கரைத்தது.

அதனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெள்ளிக்கு முதல் நாள் அதிகாலை தந்தையின் முன்னால் போய் நின்று
"என்னப்பா எதையும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறீர்கள்? ஒருவேளை உங்களுக்கு..."
என்று தைரியமாகக் கேட்க வந்த விஷயத்தைக் கேட்க முடியாமல் திணறியபடியே தந்தையை இயலாத பார்வை ஒன்று பார்த்து வைத்தாள் மகள்.

அந்தப் பார்வையை
ஒரு கணம் உள்வாங்கிய மூர்த்தியோ அப்போதும் பெரிதாக ஒன்றையும் பேசி விடவில்லை என்றாலும்
"நாளைக்குச் சந்நிதி கோவிலுக்குப் போவோமா ரங்கா..."
என்று மட்டுமே கேட்டார்.

எப்போதுமே 'ரங்கம்மா...' என்றே அழைக்கும் தந்தை ரங்கா என்று மட்டுமே அழைத்தது மனதில் லேசாகப் பதிந்து கண்டிப்பாக நடந்தி கொள்ளும் போது மட்டுமே தந்தை தன்னை அவ்விதம் அழைப்பார் இப்போதும் அவ்விதம் தான் நடந்து கொள்ளப் போகிறார் போல என்ற எண்ணமும் அங்கே வைத்து எதைச் சொல்லப் போகிறாரோ என்னத்தைச் சொல்லப் போகிறாரோ என்ற எண்ணமும் என எங்கெங்கோ அலைந்த மனதைக் கட்டுக்குள் நிறுத்தப் பெரும்பாடு பட்டவளோ சரி வெள்ளி விடிந்தால் தெரிந்து விடப் போகிறது அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அப்போதைக்குத் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

நாளைக்குக் கோவிலுக்குப் போவோமா என்று கேட்ட மூர்த்தி அப்போதே வெளியே போனவர் தான் விளக்கு வைக்கும் நேரத்தில் தான் வீட்டுக்குத் திரும்பி வந்தார். உள்ளே வரும் போதே தந்தையின் முகத்தில் இருந்த ஒரு வித தீவிரத்தைப் பார்த்தவளோ அதன் பிறகு இரவுச் சாப்பாட்டைப் பரிமாறும் போது தந்தையின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

இன்று காலை பத்து மணியளவில் சந்நிதி முருகன் கோவிலுக்கு வந்த தந்தையும் மகளும் ஒன்றாகக் கோவிலினுள் நுழைந்தாலும் கூடத் தந்தை ஒவ்வொரு இடமாக நின்று நிதானமாகப் பிரார்த்தனை செய்வதைப் பார்த்தவளோ தானும் நிதானித்து அவரைத் தொடர்ந்தாள்.

சுவாமி தரிசனம் முடித்து விட்டு இருவரும் வெளியே வரும் போது நேரம் பதினொன்றைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.

வெளியே வந்த தந்தை அன்னதான மடத்தை நோக்கிச் செல்வதைப் பார்த்தவளோ அவரைப் பின் தொடர்ந்து செல்லாமல் கோவிலுக்கு முன்பாக நின்ற மரத்தின் கீழே அமர்ந்து கொண்டாள்.

ஆலயத்தில் அன்னதானம் கொடுக்கும் போது தந்தையின் கையை இறுகப் பற்றிக் கொண்டு அங்கே முதல் ஆளாகத் தன்னோடு வருகின்ற தன் மகள் தன்னைத் தொடராமல் அங்கே அமர்ந்து கொள்வதைப் பார்த்த மூர்த்திக்குக் கொஞ்சம் மனதுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.

இருந்தாலும் இன்று தான் கொஞ்சம் இளக்கமாகப் பேசினாலும் கூடத் தன் மகள் தன்னைப் பேச்சாலேயே மாற்றி விடுவாள் அப்போது தன் எண்ணத்தை நிறைவேற்ற முடியாமல் போய் விடும் என நினைத்த மூர்த்தி அவளைக் கண்டு கொள்ளாதது போலப் போய் விட்டார்.

சரியாகப் பன்னிரண்டு மணியளவில் தன்னருகே வந்தமர்ந்த தந்தையைச் சில நொடிகளின் பின்னரே நிமிர்ந்து பார்த்தாள் ஸ்ரீரங்கநாயகி.

கோவிலை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து வணங்கிக் கொண்டவர் அதன் பின்னரே தன் மகளைத் திரும்பிப் பார்த்தார்.

அவளைப் பார்த்ததுமே அது வரை கடுமையைத் தன்னோடு வைத்திருந்த அவரின் உள்ளம் கனிவைத் தத்தெடுத்துக் கொண்டது.

தன்னையே பார்த்திருந்த தந்தையின் முகத்தை முழுவதுமாகப் பார்க்கத் தயங்கியபடி அவரது நாடியைப் பார்த்தபடி
"அப்பா... அது வந்து..."
என்று எதையோ கேட்பதற்காக முனைந்தவளுக்கு அதன் பிறகு வார்த்தைகள் வராமல் தொண்டைக்குள்ளேயே பதுங்கிக் கொண்டது.

மகளின் நிலையை நன்கு புரிந்து கொண்ட மூர்த்தியும் தன் மௌனத்திற்கு விடுதலை கொடுத்து விட்டு மகளின் பக்கமாகத் திரும்பி அமர்ந்து கொண்டு தன் மனதில் இருக்கும் விஷயத்தைப் போட்டு உடைத்தார்.

"இதோ பார் ரங்கம்மா... உன்னுடைய ஆசைக்கு நான் சம்மதம் சொல்ல வேண்டும் என்று தானே நீ எதிர்பார்க்கிறாய்? அதற்கு முன்பாக நான் சொல்லும் விஷயத்திற்கு நீயும் சம்மதம் சொல்ல வேண்டும் என்று நானும் எதிர்பார்க்கிறேன்..."
என்றவரை என்னப்பா சொல்ல வருகிறீர்கள் என்பது போலப் பார்த்து வைத்தாள் அவரின் மகள்.

சில நொடிகள் தன் உள்ளங்கை ரேகைகளைப் பார்த்த மூர்த்தி அதற்கு மேலும் சுற்றி வளைக்காது
"நீ அந்தப் பிள்ளையைத் தத்து எடுப்பதற்கு நான் சம்மதிக்கிறேன்... அதற்கு முதல் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்."
என்று பட்டென்று சொல்லி விட்டு அவளையே பார்த்திருந்தார்.

தந்தை சொன்னதைக் கேட்டவளுக்கு கோபம் வந்ததா எரிச்சல் வந்ததா இல்லை அழுகை வந்ததா என்று அவளாலேயே சரியாகக் கணிக்க முடியவில்லை.
ஆனாலும் மனதினுள்
"ஐயோ கடவுளே இதென்ன புதுப் பிரச்சினை... நான் இதை மறுத்தால் அப்பா நிச்சயம் கோபித்துக் கொள்வாரே இப்போது என்ன சொல்வது என்ன செய்வது ஒன்றும் புரியவில்லையே..."
என்று கிட்டத்தட்ட புலம்பியவளோ வெளியே முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளவில்லை.

மீண்டும் தனக்குள்
"இப்போது உடனடியாக இதைப் பற்றிச் சொல்லாமல் யோசித்துச் சொல்கிறேன் என்று எதையாவது சொல்லி மெல்ல நழுவும் வழியைப் பார்ப்போம்... பிறகு இதற்கு ஏதாவது தீர்வு காணலாம்..."
என எண்ணிக் கொண்டவள். தந்தையைப் பார்த்து
"அப்பா இது பற்றி நானும் சில தினங்கள் யோசித்து விட்டுச் சொல்லட்டுமா?"
என்று கேள்வியாகக் கேட்டாள்.

தன் மகள் சில தினங்கள் யோசித்து விட்டுச் சொல்லட்டுமா என்று ஏன் கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட மூர்த்திக்கு லேசாகச் சிரிப்பாக இருந்தது.

அவள் கேட்டதற்கு இத்தனை நாட்கள் தான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்ததை அவள் சொல்லாமலேயே சுட்டிக் காட்டுகிறாளாம்.
நான் தத்து எடுப்பதற்குச் சம்மதம் சொல்லச் சில தினங்கள் எடுத்துக் கொண்டது போலத் தானும் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லச் சில தினங்கள் எடுத்துக் கொள்கிறேன் என்பதைப் பூடகமாகச் சொன்ன பெண்ணைச் சிரிப்போடு பார்த்தவர் வீடு செல்வதற்காக எழுந்து கொண்டார்.

தந்தையைப் பின் தொடர்ந்த ஸ்ரீரங்கநாயகி எப்படி இந்தத் திருமண விஷயத்தைக் கையாள்வது என்பதைப் பற்றியே யோசித்துக் கொண்டு சென்றாள். வீட்டுக்குச் செல்லும் வழி நெடுகிலும் இதே யோசனை தான்
வளுக்கு.

ஸ்ரீரங்கநாயகியின் வீடு செல்வச் சந்நிதி முருகன் கோவிலின் முன் வீதியை அடுத்துள்ள பிரதான வீதியின் முடிவில் உள்ள திருப்பத்தில் இருந்த தெருவில் அமைந்திருந்தது. அந்தத் தெருவில் மூன்றே மூன்று வீடுகள் தான் அமைந்திருந்தன.

மூர்த்தியின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் கரவெட்டிப் பிரதேசத்தில் இருக்கும் துன்னாலை என்ற ஊரில் தான் இருந்தார்கள்.

அவருக்குத் திருமணம் ஆகி ஸ்ரீரங்கநாயகி பிறந்து அவள் வளர்ந்து பெரியவளாகிச் சில வருடங்களிலேயே அவர் மனைவி மணிமேகலை இறந்த பின்னர் தான் மூர்த்தி அந்த வீட்டை விட்டு இங்கே உடுப்பிட்டிப் பிரதேசத்தில் பொக்கணைச் சந்தியில் உள்ள வீட்டிற்குத் தன் ஒரே மகளோடு வந்து விட்டார்.

ஸ்ரீரங்கநாயகியும் அவளது தந்தை மூர்த்தியும் இங்கே குடி பெயர்ந்து வந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன.

ஆனால் அவளுக்கு எப்போதும் தனது பழைய ஊரின் நினைவும் பழைய வீட்டின் நினைவுமே இருந்து கொண்டிருக்கும்.

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததுமே மூர்த்தி ஏதோ யோசனையுடன் அமர்ந்து கொண்டு விட்டார்.

ஸ்ரீரங்கநாயகியோ தன் அறையில் இருந்த நாற்காலியைச் சாளரத்தருகே இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு தோட்டத்தில் அன்று காலையில் மலர்ந்திருந்த மஞ்சள் நிறத்து ரோஜாப் பூக்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உச்சி நேரம் என்பதால் வெயிலின் உக்கிரத்தால் பூக்கள் வாடி இருந்தன. சாளரத்தின் வழியே கைகளை நீட்டி வாடியிருந்த ரோஜாப் பூக்களை மெல்ல வருடிக் கொடுத்தவளின் எண்ணங்கள் எங்கெங்கோ சுழன்றடித்துக் கொண்டிருந்தன.

அதே நேரத்தில் வரவேற்பறையில் இருந்த அலைபேசி மெல்லச் சிணுங்கித் தன் இருப்பை உணர்த்தியது. திடுக்கிட்டு எழுந்து ஓடிச் சென்று அலைபேசியை எடுத்துப் பேசியவளுக்கு மறுமுனையில் கிடைத்த செய்தி அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை.

அலைபேசியை வைத்து விட்டு மீண்டும் சென்று சாளரத்தினருகே அமர்ந்து கொண்டு வெளியே தெரிந்த வானத்தை வெறித்துப் பார்த்தாள்.

எப்படியும் இன்னும் இரண்டு தினங்களில் அவளது துளசியை அவளுடைய மகளாகச் சட்டரீதியாகத் தத்து எடுத்து விடலாம் என்ற நினைப்பில் தான் தந்தை திருமணத்தைப் பற்றிய பேச்சை எடுத்ததும் அவள் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் இப்போது பார்த்தால் ஆசிரமத்து நிர்வாகிக்கு உடல் நிலை சரியில்லையாம் அதனால் இரண்டு தினங்களில் முடிய வேண்டிய விடயம் இன்னும் இரண்டு மாதங்களின் பின்னர் தான் நடக்குமாம்.

அந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து அவளுக்கு மனது ஒரு நிலையிலேயே இல்லை.
"நிர்வாகிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கும்
நான் துளசியைத் தத்து எடுப்பதற்கும் என்ன சம்மந்தம்? அப்படியே அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் எதற்காக இரண்டு மாதங்கள் காத்திருக்கச் சொல்கிறார்கள்?
இரண்டு கிழமைகள் என்றாலும் பரவாயில்லை பல்லைக் கடித்துக் கொண்டு காத்து இருந்திருக்கலாம்... இப்போது இரண்டு மாதங்களை எப்படித் தான் நகர்த்தப் போகிறேனோ..."
என வாய் விட்டே புலம்பிக் கொண்டிருந்தவள் திருமணம் பற்றித் தந்தை பேசியதையே சுத்தமாக மறந்து போனாள்.

அவளுடைய திருமணம் பற்றி அவள் மறந்து போனது மட்டுமல்லாமல் அவளது தந்தை அதை மறக்கவில்லை என்ற விடயத்தையும் கூட அவள் மறந்ததன் பலன் ஒரு கிழமை முடிந்ததுமே அவளுக்கு முன்னால் திருமணத்திற்குச் சம்மதந் தானா என்பது போல வந்து நின்றார் மூர்த்தி.

தந்தையையே என்னப்பா கேட்கிறீர்கள் என்பது போலப் பார்த்தவாறு நின்ற மகள் மீது கோபம் வருவதற்குப் பதிலாக இரக்கம் தான் வந்தது. "ஒருவேளை மகளுக்குப் பிடிக்காத ஒரு விடயத்தைக் கடமை என்ற பெயரில் அவளுக்குத் திணிக்கிறேனா?"
என்ற கேள்வி அவரை மரங்கொத்தி போலக் குடையத் தான் செய்தது.

ஆனால் உடனேயே
"இல்லை அப்படியில்லை என் மகளுக்கும் ஒரு துணை வேண்டும் தானே இன்று அவளுக்குப் பிடிக்காத விஷயம் காலப் போக்கில் அவளுக்குப் பிடித்துப் போகும் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் இல்லாத காலத்தில் கையில் ஒரு பெண் குழந்தையுடன் அவள் தனி மரமாக நின்று விடக் கூடாது அதற்காகத் தான் இவ்வளவு தூரம் திருமணத்துக்காக அவளைக் கட்டாயப் படுத்துகிறேன்.
இதற்காக என் மகளுக்கு என் மீது கோபம் வந்தாலும் அதை நான் சகித்துக் கொள்ளத்தான்
வேண்டும் "
என்றும் உறுதி எடுத்துக் கொண்டவர் ஒரு முடிவான முடிவுடன் மகளை நிமிர்ந்து பார்த்தார்.

தந்தையின் பார்வையில் தெரிந்த உறுதியைப் பார்த்த ஸ்ரீரங்கநாயகிக்கு லேசாக உள்ளூரக் குளிர் பரவுவது போல இருந்தது. இருந்தாலும் அந்தப் பதற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் அப்படியே நின்றாள்.

"என்னம்மா... என்ன முடிவு எடுத்து இருக்கிறாய்? நீ கேட்டுக் கொண்ட கால அவகாசம் முடிந்து விட்டது என்று நினைக்கிறேன்"
என்று கேட்ட மூர்த்தி அவளது பதிலுக்குக் காத்திருக்காமல்
"ரங்கம்மா... அடுத்த மாதமே உன் திருமணத்தை முடித்து விடலாம் என்று பார்க்கிறேன்."
என்றும் சொன்னவர் தொடர்ந்து
"என் கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்று தான் நீ யாரையேனும் நேசிக்கிறாயா? ஏன் கேட்கிறேன் என்றால் வேறு யாரோ மாப்பிள்ளையாக வருவதற்குப் பதில் உன் மனங்கவர்ந்தவனை உனக்கு மணமுடித்தால் உன் திருமண வாழ்வும் சந்தோஷமாக அமையும் அல்லவா?"
என்று சொல்லி விட்டு மகளது முகத்தைப் பார்த்தார்.

அவர் எதிர்பார்த்தது போலவே மகளின் முகத்தில் ஒரு வித மாறுதல் ஒன்று தோன்றி, தோன்றிய வேகத்தில் மறைந்தது.

பட்டென்று தலையைக் குனிந்து தரையைப் பார்ப்பது போலத் தன்
உணர்ச்சிகளை உள்ளுக்குள் அடக்கிய மகளின் குனிந்த தலை மீது மூர்த்தியின் பார்வை கனிவுடன் விழுந்தது.

சிறிது நேரத்திலேயே தன் பதிலுக்காகத் தந்தை காத்திருப்பதை உணர்ந்தவள் மெல்ல நிமிர்ந்து
"இல்லையப்பா"
என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி விட்டு மீண்டும் மௌனத்தைத் தத்தெடுத்துக் கொண்டாள்.

அவளிடம் இருந்து இந்தப் பதில் தான் வரும் என்று ஏற்கனவே தெரிந்திருந்தது மூர்த்திக்கு... ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவர்
"அப்படியானால் அப்பா பார்த்த பையனையே கட்டிக் கொள்வாயா?"
என்று மென்மையாகக் கேட்டார்.

அதற்குப் பதில் சொல்ல வாயைத் திநந்தவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. மாறாக வார்த்தைகள் எல்லாம் தொண்டைக்குள் மீன் முள்ளாய்ச் சிக்கி விட்டதை உணர்ந்தாள். இருப்பினும் தந்தை தன்னையே பார்த்திருக்கிறாரே என்ற உந்துதலில் சரி என்பது போலத் தலையை ஆட்டி வைத்தாள்.

தான் இருந்த இடத்தில் இருந்து எழுந்து கொண்டவர் தான் தன் மகளுக்காகப் பார்த்த மாப்பிள்ளையின் பெயரை நிதானமாக உச்சரித்தார்.

அந்தப் பெயரைக் கேட்டதுமே அவளுள் வார்த்தைகளில் விபரிக்க முடியாத உணர்வு ஒன்று உள்ளூர உருவாகித் தேகம் எங்கும் பரவி வியாபிக்கத் தொடங்கியது.

தன் மகளை அதற்கு மேலும் சோதிக்க விரும்பாத மூர்த்தி மகளுக்குத் தனிமையை வழங்கி விட்டுத் தன்னறைக்குள் புகுந்து கொண்டார்.

தந்தை அங்கிருந்து சென்றதைக் கூட அறியாமல் சிலை போல நெடு நேரம் அப்படியே நின்றிருந்தாள் ஸ்ரீரங்கநாயகி. ஆனால் உள்ளத்து உணர்வுகள் மட்டும் கட்டுக்குள் நிற்காமல் சிதறி ஓடிக் கொண்டிருந்தது.

"மகளென நீ வந்த நொடி தொட்டு
உன் பற்றிய எண்ணங்கள் மட்டுமே
என் நெஞ்சில்...

தாயில்லாத குறையை உன் மனம் உணராதிருக்க மட்டும் நான் இன்று தாய் போல் உனைப் பார்த்திடவில்லை...

நீ என் கையில் வந்த நொடியே நான் உனக்கு மீசை வைத்த தாய் தான் என் உயிரே..."
 

Aathisakthi

Well-known member
அச்சோ அழகு வார்த்தை கோர்வை😘😘😘

மகளின் மனமறிந்த தந்தை...எனினும் கடமை என்று ஒன்று உள்ளதல்லவா❣️❣️❣️❣️
 
Top