கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே...5

ksk2022-writer

Well-known member
Ksk – 47

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே…

அத்தியாயம் 5

துன்னாலைப் பிரதேசத்தில் வெல்லிக்கந் தோட்டம் என அழைக்கப் பட்ட அந்த ஊரின் மேற்கு மூலையில், வெள்ளை நிறத்து அரளிப் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த அரளி மரங்கள் ஒரு பக்கமும், சிவப்பு நிறத்து அரளிப் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த அரளி மரங்கள் ஒரு பக்கமும் சடைத்து வளர்ந்து நிற்க, நடுவில் அமைந்திருந்தது அந்தப் பிள்ளையார் கோவில்.

கோவிலின் முகப்பில் வெல்லிக்கந் தோட்டப் பிள்ளையார் என்று அழகாக எழுதப் பட்டிருந்த பலகை தொங்க விடப் பட்டிருந்தது.

கோவிலிற்குப் பக்கமாக இருந்த தண்ணீர்க் குழாயை ஒட்டி அறுகம்புல் ஏராளமாக வேரோடி வியாபித்து வளர்ந்து இருக்க, அந்த இடத்தில் மரத்தில் செய்து போடப் பட்ட இருக்கைகள் கிடந்தன. அந்த இருக்கைகளுக்கு நிழல் போல இரண்டு அரளி மரங்கள் குடை பிடித்து நின்றிருந்தன.

அமைதியான இடம் வேண்டும் தனிமையாக இருக்க வேண்டும் மனம் விட்டுப் பேச வேண்டும் என நினைக்கும் அந்த ஊர் மக்கள் கோவிலின் முன் மண்டபத்திலோ அல்லது இந்த மர இருக்கைகளிலோ வந்து அமர்ந்து கொள்வார்கள்.

அதனால் அமுதவாணியும் செந்தில்குமரனும் தமது இளைய மகன் ஈழக்குமரனை வெல்லிக்கந் தோட்டப் பிள்ளையார் கோவிலுக்கே அழைத்து வந்திருந்தார்கள்.

கோவிலுக்கு முன்பாகப் பச்சைப் பசுமையான நெற்பயிர் விரிந்து கிடந்தது. சற்றே வேகமாக வயல்வெளியைக் கடந்து வந்த காற்று மெல்லக் கோவிலில் நின்றிருந்த பூ மரங்களை அசைத்துப் பார்த்துப் பூக்களை உதிர்க்க முயன்று தோற்றுப் போனதால் அப்பால் நின்ற மரங்களை நோக்கி நகர்ந்தது.

அந்த இதமான வயற்காற்றை அனுபவித்தபடி மர இருக்கையில் தாயும் தந்தையும் அமர்ந்திருக்க, அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு வசதியாக அவர்களுக்குக் கீழே புற்தரையில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தான் ஈழக்குமரன்.

ரொம்ப முக்கியமான விடயம் பேச வேண்டும் என்று தன்னைக் கோவிலுக்கு அழைத்து வந்த தாயும் சரி அவரோடு வந்த தந்தையும் சரி எதையும் பேசாமல் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என யோசித்த ஈழக்குமரன். அதை அவர்களிடம் வாய் விட்டே கேட்டு விட்டான்.

“அம்மா… ஏதோ ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம் பேச வேண்டும் என்று சொன்னீர்களே… பிறகு இருவரும் இப்படி பேசாமலேயே இருக்கிறீர்களே ஏன்? உங்கள் மௌனத்தைப் பார்த்தால் என்னிடம் எதையோ சொல்வதற்குத் தயங்குவது போலத் தெரிகிறதே…”
என்று இருவரையும் பார்த்தவாறே கேட்டான்.

மகன் அவ்விதம் கேட்டதும் ஒரு முறை தன் கணவனைத் திரும்பிப் பார்த்த அமுதவாணி பேசுங்கள் என்பது போல ஜாடை காட்டி விட்டு மகனைப் பார்த்து
“ஈழா… அப்பா தான் உன்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னார். எனக்கு அவர் என்ன பேசப் போகிறார் என்று சுத்தமாகத் தெரியாது.”
என்றார்.

அது வரை கீழே பார்த்துக் கொண்டிருந்த செந்தில்குமரன் வேகமாக நிமிர்ந்து மனைவியை ஒரு பார்வை பார்த்தார்.

‘ஏன்டியம்மா நிஜமாகவே நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று உனக்குத் தெரியாதா? இருந்தாலும் இவ்வளவு தூரம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையடியம்மா”
என்பது போல இருந்தது அவரின் பார்வை.

கணவனின் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அமுதவாணி லேசாக அசடு வழிந்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டார்.

சில நொடிகள் மட்டுமே யோசனையில் இருந்த செந்தில்குமரன் தானும் தன் மனைவியும் விருப்பப் பட்ட தங்களது கடைசி மகனின் திருமணம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

“ஈழா… அப்பா உன்னிடம் நிறையப் பேச வேண்டும் அதனால் தான் உன்னை அழைத்து வரச் சொல்லி அம்மாவிடம் சொன்னேன்.”

“அது தெரிகிறது ஆனால் ஏன் இப்படியே அமைதியாக இருக்கிறீர்கள் அப்பா. என்ன விடயம் பற்றிப் பேச வேண்டும்.”

“எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று சொல்கிறேன். ஆனால் அதற்கு முன்னால் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்.”

“சரி கேளுங்கள் அப்பா.”

“நீ பிள்ளையெல்லாம் தத்தெடுப்பது சரி தான். நம் நாட்டுச் சட்டம் முழுவதும் உனக்குத் தெரியுமா?”

“நம் நாட்டுச் சட்டமும் தெரியும் அப்பா. ஒரு தனித்த ஆண் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாதென்றும் தெரியும் அப்பா.”

“இதைப் பற்றித் தான் பேச
வேண்டும் என்று இருந்தேன். இதைப் பார் ஈழா… இதே நீ திருமணமானவனாக இருந்திருந்தால் இப்போது எந்தத் தடங்கலும் இல்லாமல் நீ எடுத்து வளர்க்க நினைக்கும் பிள்ளையைத் தாராளமாகத் தத்தெடுத்திருக்கலாம் அல்லவா… அதனால் நீ ஒரு திருமணத்தைச் செய்து கொள்ளேன்.”
என்று தான் சொல்ல நினைத்த விடயத்தைச் சொல்லி விட்டு மகனின் முகத்தை ஊன்றிக் கவனித்தார் செந்தில்குமரன்.

தந்தை எதைப் பற்றிப் பேச வருகிறார் என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த ஈழக்குமரனுக்கு அவர் கடைசியாகச் சொன்ன ‘நீ ஒரு திருமணத்தைச் செய்து கொள்' என்ற வார்த்தையே காதில் திரும்பத் திரும்ப ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

தன் கைவிரல்களை அழுத்தமாக மூடிக் கொண்டு ஒரு கணம் கீழே பார்த்தவன் உடனே நிமிர்ந்து
“என்னப்பா புரியாமல் பேசுகிறீர்கள். யாராவது குழந்தையோடு என்னை ஏற்றுக் கொள்வார்களா?”
என்று கேட்டான்.

“அப்படி ஏற்றுக் கொள்ளும் பெண் கிடைத்தால் நீ திருமணம் செய்து கொள்வாயா ஈழா…”
என்று சட்டென்று கேட்டு விட்டார் அமுதவாணி.

தாய் அவ்விதம் சொன்னதும் தாயை ஒரு யோசனைப் பார்வை பார்த்த மகனைத் திசை திருப்பும் முகமாக
“ஒரு விடயத்தை நீ சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் ஈழா… உன்னுடைய விருப்பம் ஈடேற வேண்டும் என்றால் நீ ஒரு திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும். அது உனக்கே புரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.”
என்று சொல்லியபடி பின்னால் நின்றிருந்த அரளி மரத்தின் மீது லேசாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டார் செந்தில்குமரன்.

அப்போதும் அமைதியாகவே இருந்த மகனிடம்
“நான் பேச வந்த விடயம் உன் திருமணம் தான் ஈழா… உனக்குப் பிடிக்குதோ இல்லையோ நீ திருமணம் செய்து கொள்ளத் தான் வேண்டும் ஈழா…”
என்று சற்றே குரலில் அழுத்தம் ஏற்றிச் சொன்னார் செந்தில்குமரன்.

“எப்படியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க இருக்கும் என்னை விரும்பி எவளும் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ள மாட்டாள். அப்படி ஒரு வேளை எவளையாவது இவர்கள் அதை இதைச் சொல்லிச் சம்மதிக்க வைத்தாலும் அவளின் தாய்க்கோ தந்தைக்கோ இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லாமல் தானே இருக்கும். அதனால் நான் இதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இப்போது இவர்களின் வாயை அடைப்பதற்காகச் சும்மா சம்மதம் என்று சொல்லி வைப்போம். பெண் பார்க்கும் படலம் தோல்வியில் தான் முடியும் என்று எனக்குத் தெரியாதா என்ன?”
எனத் தனது மனதினுள் மனக் கணக்கு போட்டவன் தான் நினைப்பதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல்
“உங்கள் இஷ்டம் போலச் செய்து கொள்ளுங்கள் அப்பா…”
என்று பதில் சொல்லி வைத்தான்.
அவனையே பார்த்திருந்த செந்தில்குமரன்
“உங்கள் இஷ்டம் என்றால் என்ன அர்த்தம். எங்கள் விருப்பம் போலத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று அர்த்தமா? ஈழா…”
என்று கேட்டார்.

ஒரு கணம் கண்களை இறுக மூடித் திறந்து கொண்டவன்
“ஆமாம் அப்பா…”
என்று சும்மா சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லி வைத்தான்.

மகனது முகத்தில் செக்கனுக்குச் செக்கன் தோன்றி மறைந்த உணர்வுகளையே பார்த்திருந்த செந்தில்குமரன்
“ரொம்ப சந்தோஷம் ஈழா… எங்கே நீ திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பாயோ என்று நான் கவலைப் பட்டேன். ஆனால் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லி அப்பாவின் நெஞ்சில் பாலை வார்த்து விட்டாய். நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா…”
என்று சொல்லியபடி மீண்டும் மகனது முக மாற்றத்தையே பார்த்தார்.

தந்தையின் சந்தோஷத்தைப் பார்த்து லேசாக மனம் சுணங்கியவனோ பேசாமலேயே இருந்து கொண்டான்.

அப்போது மகன் அறியாமல் அமுதவாணி தன் கணவனது தோளில் லேசாக இடித்து விட்டு மீண்டும் ஏதோ ஜாடை காட்டினார்.

மனைவியின் ஜாடையைப் புரிந்து கொண்ட செந்தில்குமரன் மகனிடம் தாங்கள் கேட்க வந்த விடயத்தைக் கேட்டார்.

“ஈழா… அப்பா உன்னிடம் இன்னொரு முக்கியமான விடயம் கேட்க வேண்டும். அதற்கு நீ உண்மையான பதில் சொல்ல வேண்டும் சரியா?”

“கேளுங்கள் அப்பா… ஆனால் நான் ஏன் உங்களிடம் பொய் சொல்லப் போகிறேன் அப்பா… நீங்கள் கேட்க நினைத்ததைத் தாராளமாகக் கேளுங்கள்…”

“ஈழா… இதை நான் கேட்டே ஆக வேண்டும். நீ யாரையாவது விரும்புகிறாயா? அப்படி ஏதேனும் இருந்தால் அப்பாவிடம் மறைக்காமல் சொல்லி விடு. நானும் அம்மாவும் பேசிப் பார்க்கிறோம்.”
என்று சொன்னவரோ அவன் பதிலுக்காகக் காத்திருந்தார்.

அவர் அவ்விதம் கேட்டதும் தலையைக் குனிந்து கொண்டவன் கால் நகங்களைத் தீவிரமாக ஆராய்ந்தான்.

சில நொடிகள் அவ்விதம் இருந்தவன் தன் பதிலுக்காகத் தாயும் தந்தையும் காத்திருப்பதை உணர்ந்தவன் மெல்ல நிமிர்ந்து
“இல்லையப்பா…”
என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி விட்டு மீண்டும் மௌனத்தைத் தத்தெடுத்துக் கொண்டான்.

அவனிடம் இருந்து இந்தப் பதில் தான் வரும் என்பதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த செந்தில்குமரன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு
“அப்படியானால் அப்பா பார்த்த பொண்ணையே கட்டிக் கொள்வாயா?”
என்று மென்மையாகக் கேட்டார்.

அதற்குப் பதில் சொல்வதற்கு வாயைத் திறந்தவனுக்கு ஏனோ வார்த்தைகள் வரவில்லை.

ஆனாலும் தந்தை தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதால் ஆம் என்பது போலத் தலையை ஆட்டி வைத்தான்.

அவனது தலையாட்டலைப் பார்த்தபடி இருந்த அவனது தந்தை அவனுக்காகத் தான் பார்த்து முடிவு செய்திருந்த ஸ்ரீரங்கநாயகியின் பெயரை நிதானமாக உச்சரித்தார்.

அந்தப் பெயரைக் கேட்டதுமே அவனுள் வார்த்தைகளில் விபரிக்க முடியாத உணர்வு ஒன்று உள்ளூர உருவாகித் தேகம் எங்கும் பரவி வியாபிக்கத் தொடங்கியது. தன் உணர்வுகளைக் கட்டுக்குள் வைப்பதற்காகத் தன் தலைமுடியை அழுந்தக் கோதிக் கொண்டான் அவன்.

சில கணங்களாகப் பேசாமல் இருந்த மகனைப் பார்த்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட கணவனும் மனைவியும் மகனுக்குத் தனிமையை வழங்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.

தந்தையும் தாயும் அங்கிருந்து சென்றதைக் கூட அறியாமல் சிலை போல நெடு நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் ஈழக்குமரன்.

ஆனால் உள்ளத்து உணர்வுகள் மட்டும் கட்டுக்குள் நிற்காமல் சிதறி ஓடிக் கொண்டிருந்தது.

மெல்லத் தானிருந்த புற்தரையில் இருந்து எழுந்து கொண்டவன் மர இருக்கையொன்றில் அமர்ந்தபடி அரளி மரத்தின் தண்டில் சாய்ந்து கொண்டு மேலே நீல வானத்தில் ஓடிக் கொண்டிருந்த வெண் மேகங்களை வெறித்துப் பார்க்கத் தொடங்கினான்.

பார்வை நீல வானில் நிலைத்து நிற்க, அவன் எண்ணங்களோ ஸ்ரீரங்கநாயகியைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது.

“அவளுடன் பேசிக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இருக்குமா? இப்போது எப்படி இருப்பாள் அவள். அவளைத் தான் அப்பா எனக்காகப் பார்த்திருக்கிறேன் என்று சொல்லி விட்டுப் போகிறார். இந்தத் திருமண விடயம் பற்றி அவளிடமும் ஏதேனும் பேசி இருப்பார்களா இல்லையா? அது ஒரு பக்கம் இருக்க அரசியை நான் தத்தெடுக்கப் போகும் விடயம் அவளுக்குத் தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லையே… அவள் சின்ன வயதில் இருந்தே அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பாளே தான் திருமணம் செய்து கொள்வேனோ இல்லையோ ஆனால் குழந்தை ஒன்றையாவது தத்தெடுப்பேன் அது தான் என்னுடைய இலட்சியம் என்று… இப்போது பார்த்தால் அவளை என் மனைவியாக்க இந்த அப்பாவும் அம்மாவும் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்… ஆசைப்பட்ட விடயத்திற்காக இவள் கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை போல இருக்கிறதே… மூர்த்தி மாமாவிடம் போய் நானும் குழந்தையொன்றைத் தத்தெடுக்கப் போகிறேன் அப்பா என்று சொல்லியிருப்பாள். அவர் பதிலுக்கு முறைத்துப் பார்த்திருப்பார் உடனே தன் விருப்பத்தைத் தூக்கிப் போட்டு விட்டு மாமாவின் விருப்பப்படி திருமணத்திற்குத் தயாராகி இருப்பாள் போல… எனக்குள் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டதற்குக் காரணமே அவள் தான்… ஆனால் இப்போது பார்த்தால் அவள் தத்தெடுப்பதை விட்டுத் திருமணத்திற்குத் தயாராகி விட்டாளே…”
என எதையெதையோ எண்ணிக் கொண்டவன்
“அவளுடன் இதைப் பற்றிப் பேசலாமா வேண்டாமா”
என்ற யோசனையில் வந்து நின்றான்.

அந்த நேரம் பார்த்து அவனது அலைபேசி
“பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக் கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடி தான் பூப்பூப்பதில்லை…”

என்ற அழகிய பாடல் வரிகளை ஒலித்து அவனைத் திடுக்கிட்டு நிமிர வைத்தது.

லேசான புன்னகையோடு அந்த வரிகளை இரசித்தபடி
அலைபேசியை எடுத்தவனுக்கு வழமை போல அந்த வரிகளைக் கேட்கும் போது ஞாபகம் வருகின்ற அவளின் முகம் வந்து போனது.

அவளுக்கும் என் நினைவு இப்படி வருமா? என நினைத்து விட்டு அலைபேசியின் திரையில் மிளிர்ந்த பெயரைப் பார்த்தவன் பெரியண்ணி என்ற பெயரைப் பார்த்ததும் உற்சாகமாக அதை எடுத்துக் காதில் வைத்துப் பேசத் தொடங்கினான்.

“பெரியண்ணி… அம்மா வீட்டுக்குப் போனால் பசை ஒட்டிக் கொண்டு விடும் என்று தெரியும் தான்… எப்போது வீட்டுப் பக்கம் வருகிறீர்கள்? நீங்கள் சென்று இரண்டு நாட்களிலேயே சின்னண்ணி சின்னண்ணாவை அழைத்துக் கொண்டு அவர்களின் அம்மா வீட்டுக்குப் போய் விட்டார்கள்… எல்லோரும் எப்போது இந்தப் பக்கம் வருகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?”

“ஏய் ஏய் கொஞ்சமாவது இடைவெளி விட்டால் தானேடா நான் ஏதாவது பதில் சொல்ல முடியும்…”

“எதற்கு நான் இடைவெளி விட வேண்டும் நீங்கள் இடைவெளி விடாமல் பேசுவதற்காகவா?”

“சரி சரி அதை விடு ஈழா… இப்படியே நீ என் காலை வாருவது போலப் பேசிக் கொண்டிருந்தால் எனக்குப் பேச வந்த விடயமே மறந்து போய் விடும்…”

“சரி பெரியண்ணி… நான் ஒன்றும் பேசவில்லை. நீங்கள் என்ன பேச வந்தீர்கள் என்று சொல்லுங்கள்.”

“அது வந்து ஈழா…”

“அட என்ன பெரியண்ணி எதற்குத் தயங்குகிறீர்கள்? பேச வேண்டும் என்று தானே அழைத்தீர்கள் தைரியமாகக் கேட்க வந்த விடயத்தைக் கேளுங்கள்”

“அது ஒன்றுமில்லை ஈழா… மாமாவும் மாமியும் உன்னிடம் வந்து ஏதாவது பேசினார்களா?”

“எது அம்மாவும் அப்பாவுமா பெரியண்ணி… அவர்கள் என்னிடம் வந்து எந்த நேரமும் தான் எதையாவது பேசிக் கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் எதைப் பற்றிக் கேட்கிறீர்கள் பெரியண்ணி.”

“நான் கேட்பது உன் திருமணம் பற்றி மாமாவும் மாமியும் ஏதாவது பேசினார்களா என்று.”

“ஏன் பெரியண்ணி. அதை நேராகவே கேட்டு இருக்கலாமே அதற்குப் போய்த் தயங்கித் தயங்கிக் கேட்கிறீர்களே…”

“அதில்லை ஈழா… உன் திருமண விடயம் பற்றி இன்னும் வெளிப்படையாகப் பேச்சொன்றும் எழவில்லை அதனால் தான் ஒரு தயக்கம்.”

“ஆமாம் அண்ணி இப்போது தான் அப்பாவும் அம்மாவும் என்னிடம் என் திருமண விடயம் பற்றிப் பேசினார்கள். இன்று மதியம் அப்படியே உங்களை அழைத்துப் பேச வேண்டும் என்று தான் இருந்தேன். அதற்குள் நீங்களே அழைத்து விட்டீர்கள்.”

“சரி ஈழா… அப்படியானால் நீ மதியமே எனக்கொரு அழைப்பு எடு நாங்கள் பிறகு பேசலாம் சரி தானா... இப்போது நான் அலைபேசியை வைக்கிறேன் சரியா?”

“சரி அண்ணி நான் பிறகு அழைக்கிறேன்.”
என்றபடி அழைப்பைத் துண்டித்தவன் மீண்டும் நீல வானத்தைப் பார்த்தான்.

அவனது மனமெங்கும் அவள் மட்டுமே இப்போது வியாபித்திருந்தாள்.

கண்களை இறுக மூடி அவளை மனதினுள் இருந்து விரட்ட முயன்றவன் தோற்றுத்தான் போனான்.

அவனையும் அறியாமல் அவன் உதடுகள் அவள் பெயரை மெல்ல உச்சரித்தது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“நீ என்னருகில் இருக்கையில்
நான் உன்னிடம் போட்ட சண்டைகளை
நீ எங்கோ இருக்கையில்
நான் இரசித்து மீட்டிப் பார்க்கிறேன்
நீ எனக்கு யாரென்ற கேள்விக்கான பதிலை
நான் இன்றும் கூடத் தேடிக் கொண்டு தானிருக்கிறேன்
நீ தோழியாய் உணர வைத்தாய் அதை நான் காதலியாக உணர முயன்ற வேளை
இதோ நீ நாளை என் மனைவியும் ஆகி விடுவாய்…
ஏதோ ஒரு சங்கடமான சந்தோஷத்தை உணர்கிறேன் உன்னால் இன்று…”

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

Aathisakthi

Well-known member
அடடா...ஏன் ரெண்டு பேரும் இப்படி யோசிக்கறாங்க...அவரவர் கோட்பாடு ஒருவருக்கு ஒருவர்.சரிவராது என்றா🙄🙄🙄🙄
 
Top