கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே...7

ksk2022-writer

Well-known member
ksk – 47

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே

அத்தியாயம் 7

உடுப்பிட்டிப் பிரதேசத்தில் இருந்து வல்வெட்டித்துறைப் பிரதேசத்துக்குச் செல்லும் சாலையின் ஓரத்திலே, மஞ்சள் நிறத்துப் பூக்களைக் கொத்துக் கொத்தாகத் தாங்கியபடி நின்றிருந்த பொன்னொச்சி மரங்கள் பூச்சொரிந்து கொண்டிருக்கப் பாதிப் பூக்கள் காற்றின் திசையில் பயணிக்க, பாதிப் பூக்கள் மரங்களின் கீழேயே கொட்டிக் கிடந்தன.

அந்த அழகிய பொன்னொச்சி மரங்களைச் சுற்று வேலி போலக் கொண்டு கோவில் கொண்டிருந்த வன்னிச்சியம்மன் கோவிலின்
முன் வளாகம் முழுவதும் மஞ்சள் பூக்கள் பரவிக் கிடந்தன.

கோவிலின் முன்பக்க மண்டபத்தில் ஈழக்குமரனைத் தவிர செந்தில்குமரனின் குடும்பம் முழுவதும் அமர்ந்திருக்க, அவர்களோடு மூர்த்தியும் அமர்ந்திருந்தார்.

“மூர்த்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்தத் திருமணத்தை ஒப்பேற்றி முடிக்க வேண்டும். அதிலும் இந்த வருடத்தின் முடிவுக்குள் என்றால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. நீ என்ன சொல்கிறாய்?”
என்று வந்த விடயத்தைப் பற்றிய பேச்சுக்குப் பிள்ளையார்சுழி போட்டு ஆரம்பித்து வைத்தார் செந்தில்குமரன்.

“அதே எண்ணம் தான் எனக்கும் செந்தில்… என் மகள் திருமணத்திற்குச் சம்மதம் சொன்ன அடுத்த நிமிடமே நானும் இப்படித் தான் நினைத்தேன்…”
என்று பதிலுக்குச் சொன்னார் மூர்த்தி.

அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்திருந்த அமுதவாணியும்
“இன்று கார்த்திகை முதலாம் திகதி அண்ணா… இந்த மாதமே திருமணத்திற்கு முன்பு நடக்க வேண்டிய சடங்குகளை முடித்து விடுவோம். அப்படியே மார்கழி மாதத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளெடுத்து அன்றே திருமணத்தை முடித்து விடுவோம் சரிதானா அண்ணா…”
என்று தான் யோசித்து வைத்திருந்ததைச் சொன்னார்.

“இது ரொம்ப நல்ல யோசனை மாமி… திருமணப்புடவை வேறு உடைகள் என்று எல்லாவற்றையும் கூட இப்பொழுதே எடுத்து விடலாம்… அப்போது தான் இந்தச் சந்தோஷமான நிகழ்வை எந்த வித வேலைகளும் தொல்லைகளும் இல்லாமல் சந்தோஷமாக அனுபவிக்கலாம்…”
என்று தன் பங்குக்குப் பேசினாள் இசையருவி.

அவள் சொன்னதையே பார்த்திருந்த அவளது கணவன் எழில்குமரன்
“என்னது வேலைகளும் தொல்லைகளுமா அப்படி எந்த வேலைகளைக் கொடுத்து உனக்கு நாங்கள் தொல்லை கொடுத்தோம் அப்படியே கொடுத்தாலும் செய்கிற ஆளா நீ அருவிம்மா…”
என்று மெல்லச் சிரித்தபடி கேட்டான்.

அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனை முறைத்தவளோ
“மாமி… உங்களுடைய இரண்டாவது புத்திரனுக்கு வர வர வாய்க் கொழுப்பு அதிகமாகி விட்டது… இரண்டு சாத்துச் சாத்தினால் தான் சரியாகும் என்று நினைக்கிறேன் பிறகு என்னைக் கொடுமைக்காரி என்று சொல்லக் கூடாது சொல்லி விட்டேன்.”
என்று அமுதவாணியைப் பார்த்துச் சொன்னாள்.

“இரண்டு சாத்து என்ன இரண்டாயிரம் சாத்துக் கூட நீ சாத்தலாம் அது உன் உரிமை அதை வாங்கிக் கட்டிக் கொள்வது அவனது கடமை. நடுவில் என் வீட்டுக்காரியை இழுக்காமல் இருந்தால் நல்லது. நாளைக்குப் பிறகு அவள் என்னைச் சாத்தத் தொடங்கி விட்டால் நான் என்ன செய்வது…”
என்று சிரித்தபடி சொன்னார் செந்தில்குமரன்.

நண்பனது பேச்சில் வாய் விட்டுச் சிரித்த மூர்த்தி
“உன்னிடம் இருந்து இன்னும் கூட அந்தக் குறும்புத்தனம் போகவில்லையாடா செந்தில்…”
என்று சொல்லி விட்டு
“இவனை எப்படியம்மா நீ சமாளிக்கிறாய்…”
என்று அமுதவாணியைப் பார்த்துக் கேட்டார்.

“அவள் எங்கேயடா என்னைச் சமாளிக்கிறாள் நான் தான் அவளைச் சமாளிக்கப் பாடுபடுகிறேன்…”
என்று அதற்குப் பதில் சொன்ன கணவனைப் பார்த்து முறைத்த அமுதவாணியோ
“அண்ணா… இவருக்கு வாய்க் கொழுப்புக் கூடி விட்டது. அது தான் இப்படி எல்லாம் பேச்சு வருகிறது. இவரது கதையை விட்டு விட்டு நாங்கள் நடக்க வேண்டிய கதையைப் பார்ப்போம்”
என்று மூர்த்தியைப் பார்த்துச் சொன்னார்.

கணவன் மனைவி இருவருக்கு இடையிலும் இடம்பெற்ற அந்தச் சம்பாஷணையை இரசித்தபடியே மற்றவர்கள் திருமணம் பற்றிய மற்ற விடயங்களைப் பற்றிக் கலந்துரையாடினார்கள்.

“எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது மாமா அதைச் சொல்லட்டுமா?”
என்று இடையிட்டுக் கேட்டான் சந்தனக் குமரன்.

“சொல்லுங்கள் தம்பி அதற்கு ஏன் தயங்குகிறீர்கள்…”
என்று அவனைப் பார்த்துச் சொன்னார் மூர்த்தி.

“அது வந்து மாமா… திருமணம் செய்து கொள்ளப் போகும் இருவருக்கும் தங்கள் திருமணம் தொடர்பாக ஏதாவது கனவுகள் இருக்கும் அல்லவா… அதனால் அவர்கள் இருவரையும் வைத்துக் கொண்டு இது இது தொடர்பாகப் பேசலாம். அல்லது அவர்கள் இருவரையுமே கூடப் பேசச் சொல்லலாம்…”
என்றவன் மூர்த்தி ஏதோ யோசிக்கவும்
“நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள் என்று புரிகிறது மாமா… ஆனால் உங்கள் காலம் வேறு இப்போது இருக்கும் காலம் வேறு… அப்போதெல்லாம் கழுத்தில் தாலி ஏறும் வரையில் கூடப் பெண்ணுக்குத் தன் கணவனாக வரப் போகிறவன் பற்றி ஒன்றும் தெரியாது பார்த்தும் இருக்க மாட்டார்கள் பேசியும் இருக்க மாட்டார்கள்… ஆனால் இப்போது அப்படியில்லை பெண்ணும் பையனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளலாம் பேசிக் கொள்ளலாம்… அதோடு இங்கே இருவருமே ஒருவருக்கு ஒருவர் தெரிந்த பிள்ளைகள் அதோடு நண்பர்கள் வேறு… அதனால் அவர்கள் இருவரிடமுமே திருமணம் பற்றிச் சொல்லிப் பேசிக் கொள்ளச் சொல்வதில் எந்தத் தவறுமே இல்லை மாமா…”
என்று சிறு விளக்கம் கொடுத்தான்.

அவன் அவ்விதம் சொன்னதும்
“சரி தம்பி… நீங்கள் சொல்வதும் சரி தான்… காலத்துக்கு ஏற்றது போல எங்களுக்கு விருப்பமான முறையில் நாங்களும் மாறுவதில் தவறில்லை தான்…”
என்று பதில் சொன்ன மூர்த்தி மீது தேன்மதிக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.

“ஒரு விடயத்தை நியாயமான முறையில் விளக்கமாகச் சொன்னதும் அதை எப்படிப் புரிந்து கொண்டு உடனே ஒத்துக் கொள்கிறார் இந்த மாமா… எங்கள் வீட்டிலும் அப்பா என்ற பெயரில் இருக்கிறாரே ஒருவர்… சாதாரணமாகச் செய்யும் விடயத்துக்கே சட்டம் எல்லாம் பேசி… ஐயோ அப்பா எனக்கு ஒன்றுமே வேண்டாம் என்ற அளவிற்குக் கொண்டு போய் விட்டு விடுவார்.”
எனத் தன் தந்தையைப் பற்றி யோசித்து லேசாகப் பெருமூச்சு விட்டாள்.

மனைவி பெருமூச்சு விடுவதை எதேச்சையாகப் பார்த்திருந்த சந்தனக்குமரன் மெல்ல அவள் பக்கமாகக் குனிந்து
“என்ன தேனும்மா… மூச்செல்லாம் பலமாக இருக்கிறதே என்ன விடயம்… ஒருவேளை நம் திருமணநாள் நினைவு வந்து விட்டதோ?”
என்று சிறு சிரிப்புடன் கேட்டான்.

உதட்டை மெல்லச் சுழித்தபடி
“நம் திருமணநாளை நினைத்து நான் ஏன் அத்தான் பெருமூச்சு விடப் போக்றேன்… சந்தோஷம் அல்லவா அடைவேன்…”
என்று பதில் சொன்ன மனைவியைக் கேள்வியாகப் பார்த்தபடி
“அப்படியா… அப்படியென்றால் எதற்கு இந்தப் பெருமூச்சுத் தேனு…”
என்று கேட்டான் சந்தனக்குமரன்.

“அது வந்து அத்தான்… இந்த மூர்த்திமாமா நீங்கள் சொன்ன திருமணம் தொடர்பான விடயத்தின் தார்ப்பரியத்தைப் புரிந்து கொண்டு அதை எவ்வளவு அழகாக உடனே ஒத்துக் கொண்டு சம்மதம் சொன்னார்… இதே என்னுடைய அப்பாவிடம் சொல்லியிருந்தால் ஒரு முடிவேயில்லாத பெரிய பட்டிமன்றமே நடந்து இருக்கும். அதைத் தான் இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பெருமூச்சு விட்டேன் அத்தான்.”
என்று பதில் சொன்னாள் தேனருவி.

மனைவி சொல்வதை நாடியில் கை வைத்தபடி கேட்டிருந்த சந்தனக்குமரன் ஒரு கணம் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு மனைவியிடம் திரும்பி
“இதோ பார் தேனும்மா நல்ல விடயமோ கெட்ட விடயமோ முதலில் ஒருவரோடு ஒருவரை ஒப்பிடக் கூடாது சரியா… அதை முதலில் நீ புரிந்து கொள்… அதோடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை… அப்பறம் இன்னொரு விடயம் சொல்ல வருவதை மற்றவர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும்… எனக்கென்னவோ உனக்கு அந்தத் திறமை இல்லையோ என்று தோன்றுகிறது… இப்படி உன் பக்கம் பிழையை வைத்துக் கொண்டு என்னுடைய மாமனாரைக் குறை சொல்லாதே சரியா…”
என்று விளக்கம் கொடுத்த கணவனைப் பாவமாகப் பார்த்தாள் தேனருவி.

மனைவியின் பார்வையின் அர்த்தம் புரியாத சந்தனக்குமரன்
“என்னடி… அப்படிப் பார்க்கிறாய் குடிப்பதற்கு ஏதேனும் வேண்டுமா?”
என்றபடி கையில் வைத்திருந்த பையில் இருந்த பழச்சாற்றுப் போத்தலை எடுத்து நீட்டினான்.
அதை மறுத்தவளோ
“அத்தான்… என் அப்பாவை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறீர்கள் என்று சந்தோஷப்படுவதா… இல்லை என்னைச் சந்தடி சாக்கில் கிண்டல் செய்கிறீர்கள் என்று ஒப்பாரி வைப்பதா என்று தெரியவில்லை எனக்கு…”
என்றபடி வராத கண்ணீரைச் சுண்டி விட்டாள்.

இவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்து விட்டு
“இருவரும் அப்படி என்ன இரகசியம் பேசிகிறீர்கள்… எங்களுக்கும் சொன்னால் நாங்களும் சந்தோஷமும் பட்டு ஒப்பாரியும் வைத்துக் கொள்வோம் அல்லவா…”
என்றபடி இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்து கொண்டு இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் இசையருவி.

“என்ன இசையம்மா… இருவரும் இரகசியம் பேசுகிறோம் என்று சொல்லி விட்டு முழுவதையும் நீயே கடை பரப்பி விட்டாயே பிறகு நாங்கள் எதைச் சொல்ல…”
என்று கேட்டான் சந்தனக்குமரன்.

“சரி சரி அதை விடுங்கள்… அதைப் பற்றிப் பிறகு பேசுவோம். இப்போது எனக்குப் பசிக்கிறது தேனுவத்தான் இவர்களைப் பார்த்தால் இப்போதைக்கு எதையாவது வாங்கித் தருவார்கள் என்று தோன்றவில்லை… நாங்கள் வெளியே போய் ஏதாவது வாங்கி உண்போமா…”
என்று பரபரத்த தன் மனைவின் தங்கையைப் பார்த்த சந்தனக்குமரனுக்குப் பாவமாக இருந்தது.

அவன் தன் மனைவியைப் பார்த்தான்.

கணவனின் பார்வையைப் புரிந்து கொண்ட தேனருவி தன் பக்கத்தில் இருந்த பையைத் தூக்கி அப்படியே தன் தங்கையிடம் கொடுத்தாள்.
என்னக்கா இது என்பது போல அதை வாங்கிய இசையருவியின் முகம் பிரகாசமானது.

தேனருவி கொடுத்தப் பை முழுவதும் பழங்களும், இனிப்புகளும் இருந்தன.

இசையருவி பசி தாங்க மாட்டாள் என்று தேனருவிக்கும் சந்தனக்குமரனுக்கும் நன்றாகத் தெரியும். அதனால் வரும் போதே பழங்களையும், இனிப்புகளையும் வாங்கி வந்து விட்டனர்.

பையும் கையுமாக இருந்த தன் மனைவியைப் பார்த்த எழிலரசன் எழுந்து வந்து
“அப்போதும் நினைத்தேன் எங்கே பக்கத்தில் இருந்தவளைக் காணவில்லை என்று… இது தானா அதற்குக் காரணம். இருந்தாலும் அண்ணாவும் அண்ணியும் இவளுக்கு ரொம்ப தான் செல்லம் கொடுக்கிறீர்கள்…”
என்று சொல்லியபடி அவளிடம் இருந்த பழப்பையைப் பறித்தான்.

பையை விடாமல் இழுத்தபடி
“இவருக்குச் சரியான பொறாமை தேனுவத்தான்… வேண்டுமானால் ஒரு பழத்தைக் கேட்க வேண்டியது தானே…”
என்று சிணுங்கிய சின்னவளைப் பார்த்துச் சிரித்த சந்தனக்குமரன் தன் தம்பியிடம் திரும்பி
“அவளோடு ஏன்டா வம்பிழுக்கிறாய்…”
என்று வராத கோபத்துடன் கேட்டான்.

அதைக் கேட்டதும் சந்தோஷமான இசையருவி
“அப்படிக் கேளுங்கள் தேனுவத்தான்… சும்மா சும்மா என்னோடு வந்து கொழுவுவது தான் இந்த அத்தானுக்கு வேலை…”
என்று விட்டுத் தன் கணவன் பக்கம் குனிந்து
“இனிமேல் ஏதாவது பேசிப் பாருங்கள் மாமியிடம் போட்டுக் கொடுத்து விடுகிறேன்…”
என்று சொல்லியபடியே பழங்களைக் கொறிக்க ஆரம்பித்தாள்.

அவளது பேச்சையும் செயலையும் பார்த்த மற்ற மூவரும் சிரித்து விட்டுப் பெரியவர்கள் பேசுவதைக் கவனிக்கத் தொடங்கினார்கள்.

சற்றுக் கூடுதலான நேரம் கலந்து பேசிக் கொண்டிருந்த பெரியவர்கள் மூவரும் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

“சரி அண்ணா… நாங்கள் பிள்ளைகள் இருவரிடமுமே திருமணத்தை எப்படி எங்கே நடத்துவது என்பது பற்றிய முடிவை எடுக்கச் சொல்வோம் சரி தானா…”
என்று சொன்ன அமுதவாணியிடம்
“சரி தங்கச்சி… அப்படியே செய்வோம். அவர்களை அலைபேசியிலோ அல்லது நேரிலே பேசச் சொல்லலாம்…”
என்று சொன்னார் மூர்த்தி.

அதையே ஏற்றுக் கொண்ட அனைவரும் சந்தோஷமாக விடைபெற்றுக் கொண்டு கோவிலில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

வீட்டின் பக்கமாக அமைக்கப் பட்டிருந்த சிறிய பூந்தோட்டத்தின் நடுவே போடப் பட்டிருந்த இருக்கையொன்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ஸ்ரீரங்கநாயகி
.

பச்சை இலைகளை மறைத்துத் தங்கள் ஏராளமான சிவப்பு வண்ணப் பூக்களால் காற்றுடன் கதை பேசிக் கொண்டிருந்தன செம்பருத்திச் செடிகள்.

செம்பருத்திப்பூச் செடிகளுக்குப் பக்கத்தில் நின்றிருந்த செவ்வந்திச் செடிகளோ எங்களுடைய பூக்களின் வண்ணம் மட்டும் குறைந்ததா அதுவும் கொள்ளையழகு தான் என்பது போலத் தங்களது செம்மஞ்சள் நிறத்து மலர்களை அசைத்துக் கொண்டிருந்தன.

அந்த மலர்களின் கொள்ளை அழகினையும் காற்றோடு கலந்து வந்த மலர்களின் சுகந்தத்தையும் அனுபவித்துக் கொண்டு இருந்தவளுக்கோ எண்ணங்கள் மட்டும் ஒருநிலையில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது.

“இந்த அப்பா வந்து நீயும் மாப்பிள்ளைத் தம்பியும் சேர்ந்து பேசி எப்போது எங்கே திருமணத்தை நடத்துவது என்பது பற்றிச் சொல்லுங்கள் அப்படியே உங்களுக்கு வேறு கனவுகள் இருந்தாலும் சொல்லுங்கள் செய்வோம் என்று விட்டுப் போய் விட்டார். இப்போது இதைப் பற்றி நான் என்ன முடிவு எடுப்பது. நானாகவே போய்த் திருமண விடயம் பற்றி எப்படிப் பேச முடியும். ஈழனிடம் என்னிடம் அப்பா சொன்னது போல மாமா சொல்லியிருப்பாரா இல்லையா? ஒரு வேளை சொல்லியிருந்தால் ஈழன் என்னிடம் இது பற்றி ஏதும் பேச்சுக் கொடுத்து இருக்கலாம் தானே அவரே அமைதியாக இருக்கும் போது நான் மட்டும் முந்திரிக் கொட்டை மாதிரிப் பேசுவதா வேண்டாம்…”
என்று யோசனை செய்தவள் உடனேயே
“அது எப்படி ஏன் அவர் தான் முதலில் பேச வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும். நானே பேசினால் என்ன ஆகி விடும். அவரும் இதைப் பற்றி எப்படிப் பேசுவது என்று தயங்கிக் கொண்டு இருக்கலாம் அல்லவா… அது போக இத்தனை நாட்களுக்குப் பிறகு அவர் தானே முதலில் பேசினார். அதனால் இதைப் பற்றி நானே தொடங்குவோம்…”
என்று உறுதியான முடிவை எடுத்தவள் அதன் பின்னரே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

எடுத்த முடிவை உடனே செயற்படுத்தி விட வேண்டும் என நினைத்தவள் தன் அலைபேசியை எடுத்தாள்.

அலைபேசியை எடுத்தவளோ குறுஞ்செய்தி எதையும் அனுப்பாமல் ஈழக்குமரனுக்கு அழைப்பையே விடுத்தாள்.

தனது அறையில் இருந்து தனது தாய் சொன்ன விடயத்தை அசை போட்டுக் கொண்டிருந்தான் ஈழக்குமரன்.

தன் கடைசி மகனிடம் வந்த அமுதவாணி
“ஈழா… நீயும் ஸ்ரீயும் சேர்ந்து பேசி விட்டு உங்கள் திருமணத்தை எங்கே வைப்பது எப்படி என்ன என்ன ஆசைகள் இருக்கிறது என்பது பற்றிச் சொல்லுங்கள்…”
என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

அவர் அவ்விதம் வந்து சொல்லி விட்டுப் போன நேரம் தொட்டு அவனுக்கு இருப்பே கொள்ளவில்லை.

“அவளிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது… இப்போது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்… அவளாக இது பற்றிப் பேச மாட்டாளாமா நானாகத் தான் பேச வேண்டுமா…”
என்று அதிலேயே மூழ்கியிருந்தவனின் அலைபேசி
“நீ என் தோழியா இல்லை காதலியா… நீ என் தோழியா இல்லை காதலியா… தோழி என்றால் என்னயிரைக் கொடுப்பேன்… காதலி என்றால் உன்னுயிரை எடுப்பேன்…”
என்ற பாடல் வரிகளை இசைத்துத் தன் இருப்பை உணர்த்தியது.

அந்த வரிகளைக் கேட்டவனோ பரபரப்புடன் அலைபேசியை எடுத்தான்.

அவன் அவளுக்காக மட்டுமே பிரத்யேகமாக வைத்த பாடல் வரிகள் அவை.

அவள் அழைத்தால் மட்டுமே இந்த வரிகளை அவனது அலைபேசி இசைக்கும்.

திரையில் மிளிர்ந்த ‘சண்டைக்கோழி' என்ற பெயரைக் கண்களால் வருடியபடி நிதானமாக அவளின் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.

அவளது குரலைக் கேட்டுப் பல யுகங்கள் ஆனது போன்ற ஒரு உணர்வு அவனுள் உருவாவதையோ, அவளது குரலின் ஒலி தன் காதோடு வந்து மோதப் போகும் அந்த நொடியை எதிர்பார்த்த பேராவல் உருவாவதையோ அவனால் தடுக்கவே முடியவில்லை.

தன் குரலைக் கேட்பதற்காக ஒரு ஜீவன் காத்து இருப்பதை உணராதவளாய் எடுத்த எடுப்பிலேயே தைரியத்தை வரவழைத்தபடி
“ஈழா…”
என்று அழைத்து விட்ட ஸ்ரீரங்கநாயகி. அவனது குரலைக் கேட்பதற்காகத் தன்னையே அறியாத ஒரு விதத் தவிப்போடு காத்திருந்தாள்.

“ஈழா…”
என்ற அவளது ஒற்றை அழைப்பில் ஈழமே அவன் வசப்பட்டால் கூட இப்படி ஒரு சந்தோஷ உணர்வு அவனுக்கு ஏற்பட்டு இருக்குமா என்றால் அவன் யோசனை செய்யாமல் இல்லை என்று தான் சொல்வான்.

ஸ்ரீயின் ‘ஈழா' என்ற அழைப்பும் சிலம்பரசியின் ‘அப்பா' என்ற அழைப்பும் தான் இப்போதெல்லாம் அவனுக்கு உற்சாகபானமாக இருக்கிறது என்பது அவனே அறியாத உண்மை.

அவள் ‘ஈழா…’ என்று அழைத்ததுமே ஒரு நிமிடத்துக்கு மேலாகவுமே அவனிடம் இருந்து எந்தப் பதிலும் வெளி வரவில்லை.
அதை உணர்ந்தவளோ மீண்டும் ‘ஈழா…’ என்று அழைத்தாள்.

உடனே தொண்டையைச் செருமிச் சரிப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான் ஈழக்குமரன்.

“ம்ம்ம்… சொல்லு ஸ்ரீ…”

“ஏதேனும் வேலையாக இருக்கிறீர்களா?”

“இல்லை ஸ்ரீ…”

“அப்படியானால் உங்களிடம் கொஞ்சம் பேசலாமா?”

“ம்ம்ம்…”

“எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று கேட்க மாட்டீர்களா?”

“நீயே சொல்வாய் தானே என்பதால் கேட்கவில்லை…”

“ம்ம்ம்…”

“சரி சொல்லு என்ன விஷயம்…”

“அது வந்து…”

“ஸ்ரீ… நான் உன்னை நேரில் சந்திக்க வேண்டும்… எங்கே வரட்டும்…”

“……………….”

“ஸ்ரீ… இருக்கிறாயா இல்லையா? நான் உன்னிடம் தான் கேட்கிறேன் பதில் சொல்…”

“அது வந்து… நேரில் எப்படி…”

“இரு இரு எதற்குப் பதறுகிறாய்… நேரில் பார்த்தால் உன்னை நான் கடித்துக் குதறி விடுவேனா என்ன?”

“ஐயோ! அப்படியெல்லாம்…”

“ஸ்ரீ…”

“ம்ம்ம்…”

“நமக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் ஆகப் போகிறது அது தெரியுமா உனக்கு…”

“ம்ம்ம்…”

“அதற்கு முன்னால் நான் உன்னிடம் நிறைய விடயங்கள் பேச வேண்டும். நீயும் என்னிடம் நிறைய விடயங்கள் பேச வேண்டும் என்று தானே இப்போது எடுத்தாய் பிறகு எதற்குப் பதறுகிறாய்…”

“நானொன்றும் பதறவில்லை…”

“ஓ அப்படியா நம்பி விட்டேன். வியர்த்துப் போய் இருக்கும் உன் உள்ளங்கைகளை ஒரு தடவை விரித்துப் பார் உனக்கே புரியும்.”

“இல்லை இப்போது ரொம்ப எல்லாம் வியர்க்கவில்லை…”

“சரி சரி நீ பதறவில்லை போதுமா… இப்போது சொல் எங்கே சந்திக்கலாம்”

“அது வந்து…”

“ம்ம்ம்… இன்னும் வந்து சேரவில்லையா நீ சீக்கிரம் சொல்…”

“நீங்களே சொல்லுங்கள்…”

“சரி தொண்டைமானாறு கடற்கரை.”

“இல்லை வேண்டாம்.”

“அது வேண்டாமா… சரி
பொலிகண்டிக் கடற்கரை…”

“ஐயோ அதுவும் வேண்டாம்.”

“அதுவும் வேண்டாமா… அப்படியென்றால் பண்ணைக் கடற்கரை”

“அது வேண்டவே வேண்டாம்…”

“கடுப்பேற்றாதே ஸ்ரீ… வந்தேன் என்றால் கன்னத்தில் வேண்டுவாய் நீ…”

“கோவில்… நல்லூர்க் கோவிலுக்குப் போகலாம்…”

“கொழுப்புத் தானே உனக்கு… இதை முதலிலேயே சொல்ல உனக்கு என்ன வந்தது ஸ்ரீ.”

“நான் யோசித்தேன்…”

“என்ன யோசித்தாயோ யாருக்குத் தெரியும்… நாளைக்குக் காலையில் பத்து மணியளவில் உன்னைக் கோவிலில் எதிர்பார்ப்பேன் சரி தானா…”

“சரி…”

“இப்போது வைக்கட்டுமா…”

“நீங்கள் எப்படி வைக்கலாம்… நான் தானே அழைத்தேன் நான் தான் வைப்பேன்…”

“என்னிடம் எதையாவது சொல்லிச் சண்டை போடுவது என்றால் மட்டும் உடனே துள்ளிக் குதித்துக் கொண்டு வந்து விடு… நீயே வை அல்லது இப்படியே வைத்திரு… நான் போகிறேன்…”
என்றவன் அலைபேசியை அப்படியே வைத்து விட்டு வெளியே போய் விட்டான்.

அவனது அறையில் எழுந்த சிறு ஓசைகள் அவன் அலைபேசியை அணைக்காமல் அப்படியே வைத்து விட்டுப் போய் விட்டான் என்பதை அவளுக்குப் பறை சாற்றியது.

எப்போதுமே சின்னச் சின்ன விஷயங்களைக் கூட விட்டுக் கொடுத்துப் போகும் முன்னால் தோழனும் பின்னாள் கணவனும் ஆனவனைப் பற்றிப் பெருமிதமாக நினைத்து விட்டு மெல்லிய புன்னகையோடு மெல்ல அலைபேசியை வைத்தாள் ஸ்ரீரங்கநாயகி.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“மாயங்கள் செய்தாயோ எந்தன் மாயவனே

காயங்கள் எல்லாம் உன்னால் விலகி ஓடிட

பயங்கள் கூட சிதறிட உன் துணையால்

சாயங்கள் பூசப் பட்டு மெருகானதோ என் வாழ்வு”

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Last edited:
Top