கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே...8

ksk2022-writer

Well-known member
ksk – 47

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே

அத்தியாயம் 8

யாழ் நகருக்கே அழகு சேர்ப்பது போல வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் அழகான பெரிய கோபுரங்களோடு எழுந்து நின்றிருந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின், தெற்குப் பக்கத்துக் கோபுரத்தில் கிளிகளும் புறாக்களும் காகங்களும் கோவிலுக்குப் பக்கத்துச் சாலையில் போவோரையும் வருவோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

ஆலயத்தின் முன் வாசல் முகப்பில் வெண்மணல் பரப்பப் பட்டுக் கிடக்க, சற்றே தள்ளிக் கொன்றல் மரமொன்று காற்றில் மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்தது.

அந் நேரத்தில் கோவிலின் முன் வீதியில் பேருந்தில் வந்து இறங்கிய ஸ்ரீரங்கநாயகி தன் கையில் கட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். கடிகார முட்கள் இரண்டும் மணி இப்போது ஒன்பதரை என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.

“அவர் எப்போது வருவார். இரவில் இருந்து தொடங்கி, பேருந்தில் ஏறி இறங்கும் வரையிலும் வருவாயா?, இப்போது என்ன செய்கிறாய் ?, பேருந்து எங்கே நிற்கிறது? என்று எத்தனை குறுஞ் செய்திகளை அனுப்பித் தள்ளி விட்டார் அவர்… ஆனால் தான் எங்கே நிற்கிறேன் என்றோ எப்போது வருவேன் என்றோ ஒன்றும் சொல்லவில்லை. ஒருவேளை நானாகவே அதைக் கேட்டிருக்க வேண்டுமோ…”
என நினைத்தவள் ஆலய வளாகத்தினுள் நுழைந்தாள்.

நல்லூர்க் கந்தனின் ஆலத்திற்குச் சிறு வயதில் சுற்றுலா வந்தது அவளது மனத்திரையில் படமாக ஓடியது.

“இந்தத் தெருவால் எத்தனை தடவை எத்தனையோ தேவைகளுக்காகப் போய் வந்திருக்கிறேன். ஒரு தடவை கூட இங்கே வந்தது இல்லையே… ஆனாலும் பல முறை நல்லூருக்குப் போக வேண்டும் போக வேண்டும் என்று ஆசைப் பட்டு இருக்கிறேன் இன்று ஈழனால் இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது எனக்கு.”
என எண்ணியபடி கால்களை அலம்பும் இடம் சென்றாள் ஸ்ரீரங்கநாயகி.

கால்கள் அலம்பும் இடத்திற்குப் பக்கமாகக் கிடந்த கல்லில் அமர்ந்திருந்த ஈழக்குமரனை அவள் கவனிக்கவில்லை.

அன்று காலையில் எழுந்ததில் இருந்தே ஈழக்குமரன் பரபரப்புடன் தான் ஓடிக் கொண்டிருந்தான்.

அவன் ஸ்ரீயை நேரில் பார்த்தே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரையில் கூட அலைபேசியில் மட்டுமே பேசிக் கொள்வார்கள்.
அவனுக்கும் அவளுக்குமான திருமணப் பேச்சு எழுந்த பிற்பாடு தான் அதுவும் இன்று தான் அவளை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பை அவனாக ஏற்படுத்திக் கொண்டான்.

அவள் கோவிலுக்கு வருவதற்கு முன்பாகத் தான் வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் வருவதற்குப் பத்து நிமிடங்கள் முன்பாகவே நல்லூருக்கு வந்து விட்டான் ஈழக்குமரன்.

வந்தவன் கோவிலுனுள் செல்லாமல் அவள் வரவை எதிர்நோக்கி ஆலயத்துக்கு முன்பாகச் சற்றே ஒதுக்குப் புறமாகக் கிடந்த கல்லில் அமர்ந்து வாசலையே பார்த்திருந்தான்.

தொலைவில் சற்றே வேகமாக வந்த பேருந்தைப் பார்த்ததுமே அவனது இதயமும் சற்றே வேகமாகத் துடிப்பது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.

பேருந்தில் இருந்து இறங்கி வந்த ஸ்ரீரங்கநாயகி கோவில் வளாகத்துள் வந்து கால்கள் அலம்பும் இடத்திற்குச் செல்லும் வரை அவளையே கன்னத்தில் கை வைத்தபடி பார்த்திருந்தான் ஈழக்குமரன்.

பச்சை வண்ணச் சுடிதார் அணிந்திருந்தவளோ சுடிதாரின் கால்களை உயர்த்திவிட்டு நீரில் நன்றாகக் கால்களை நனைத்து அலம்பத் தொடங்கினாள்.

அது வரை அவளது முகத்தில் நின்றிருந்த அவனது பார்வை மெல்லக் கீழே இறங்கி அவளது வெள்ளிக் கொலுசுகள் அணிந்த பாதங்களில் வந்து நிலைத்து நின்றது.

சூரியனின் ஒளிக்கற்றைகள் நீரிலும் நீர் பட்ட அவளது வெள்ளிக் கொலுசுகளிலும் பட்டு ஜொலித்து வர்ணஜாலத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.

கொலுசுகளை அணிந்து இருப்பதால் அவளது பாதங்கள் அழகாக இருக்கிறதா? அல்லது அவளது பாதங்களைத் தழுவியிருப்பதால் கொலுசுகள் அழகாக இருக்கிறதா? என அவனுள் ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருப்பதை அறியாதவளாய்ச் சுற்று முற்றும் பார்வையால் அவனைத் தேடினாள் ஸ்ரீரங்கநாயகி.

ஒரு சில நொடிகளில் தனக்குச் சற்றுப் பக்கமாகத் தள்ளியிருந்தவனைப் பார்த்ததும் கண்கள் மின்ன முகம் பிரகாசிக்க அவனை நோக்கி வேகமாக வந்தவளின் பாதங்களையே அவன் அப்போதும் பார்த்திருந்தான்.

அருகில் வந்து நின்றவளோ அவன் தன்னைப் பார்க்காமல் கீழே மணலில் எதையோ பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்
“ஈழா…”
என்று அழைத்தாள். அப்போதும் அவனிடம் அசைவு இல்லாமல் போகவே
“ஈழா…”
என்று சற்றுச் சத்தமாக அழத்தபடி அவனது தோளைத் தொட்டு உலுக்கினாள்.

அவள் அவ்விதம் உலுக்கியதும் திடுக்கிட்டு நிமிர்ந்தவனோ அப்போது தான் அவளது முகத்தை முழுமையாகப் பார்த்தான்.

எப்போதும் போல அவளது நாடியில் இருந்த மச்சம் அவனைச் சுண்டி இழுத்தது.

அவனது வாழ்க்கையில் எத்தனையோ அழகே உருவான பெண்களை அவன் பார்த்து இருக்கிறான் பழகியிருக்கிறான் கடந்து வந்தும் இருக்கிறான்.

ஆனால் அவனது மனது என்னவோ இவளின் காலடியில் தான் அவனையே அறியாமல் தஞ்சம் அடைந்திருக்கிறது. இத்தனைக்கும் ஸ்ரீரங்கநாயகி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அழகி இல்லை. பார்ப்பதற்குச் சுமாராகத் தான் இருப்பாள். ஆனால் பழகுவதற்கு அவளைப் போல அழகிய உள்ளம் படைத்தவள் யாருமே இல்லை என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

அவள் மீது எப்போதுமே அவனுக்கு ஒரு தனிப் பிரியமே உண்டு. இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாகத் தான் வளர்ந்தார்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள் உடனே சமாதானமும் ஆகி விடுவார்கள். இதுவே காலப் போக்கில் இருவருள்ளும் காதலாக மலர்ந்தது. ஆனால் தங்களின் நேசத்தை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டதேயில்லை.

இன்னும் சொல்லப் போனால் தாங்கள் காதல் வயப்பட்டதைக் கூட அவர்கள் புரிந்தும் கொள்ளவில்லை. ஆனால் பெரியவர்கள் திருமணம் என்ற பேச்சை எடுத்ததும் அவர்களுக்காகத் தான் இந்தத் திருமணம் என்ற போர்வையினுள் இருவருமே புகுந்து கொண்டு விட்டனர்.

இன்று ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமே இனம் புரியாத ஒரு சந்தோஷம் தங்களினுள் பாய்ந்து பரவுவதை இருவருமே உணர்ந்தார்கள்.

தன் முகத்தையே பார்த்திருந்தவனின் முன்பாகக் கையினால் சொடக்குப் போட்டு
“என்ன ஏதோ புதிதாக இன்று தான் என்னைப் பார்ப்பது போலப் பார்க்கிறீர்கள்…”
என்று கேட்டவளுக்கு உடனே பதில் சொல்லாமல்
“என்னவோ தெரியவில்லை உன்னைப் பார்க்கப் புதிதாகத் தான் இருக்கிறது…”
என்று மனதினுள் நினைத்தபடி
“உன்னைப் பார்த்த நிறைய மாதங்கள் ஆகி விட்டது அது தான் பார்க்கிறேன்…”
எனப் பதில் சொன்னான்.

“ம்ம்ம்… ஆமாம் சரியாக ஒரு வருடம் ஆகி விட்டது நாங்கள் இருவரும் நேரில் சந்தித்து…”
என அவன் சொன்னதை ஆமோதித்தாள் ஸ்ரீரங்கநாயகி.
“ம்ம்ம்… இப்போதும் கூட நானாக அழைக்கப் போய்த் தான் நீ வந்தாய்…”
என்று ஒரு குற்றச்சாட்டை அவள் மீது வைத்தான் ஈழக்குமரன்.

அவனைப் பார்த்து மெல்லச் சிரித்தவளோ
“வரவே முடியாது என்று சொல்லி விட்டு வீட்டிலேயே இருப்பதற்கு எனக்கு முடியாதா என்ன?”
எனச் சொல்லி நானும் ஒன்றும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்தாள்.

“ம்ம்ம்… புரிகிறது புரிகிறது நானும் ஒத்துக் கொள்கிறேன். இருவரும் மனம் வைத்ததால் தான் இன்று சந்திக்க முடிந்தது போதுமா…”
என்று சரணாகதி அடைவது போலச் சொன்னவனிடம்
“அப்படி வாருங்கள் வழிக்கு…”
என்று சொன்னவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

இவளோடு இன்றாவது சண்டைக்குப் போகாமல் முக்கியமான விஷயங்களைப் பேசி விட வேண்டும் என நினைத்தவனோ ஒன்றும் சொல்லாமல் பதிலுக்குப் புன்னகைத்து விட்டு கோவிலின் முன் வாசலின் மண்டபத்தில் வைக்கப் பட்டிருந்த விபூதி சந்தனத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு விட்டு வெளியே நிற்கிறேன் வா என்று விட்டு வெளியே வந்து விட்டான்.

அதன் பிறகு சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு வந்தவளோடு சற்றே தள்ளி நின்றிருந்த மரத்தின் அடியில் சென்று அமர்ந்து கொண்டிருந்தவன் நெடு நேரமாக ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்கக் கூடத் தோன்றாமல் அவளும் மௌனத்தைத் தான் தத்தெடுத்திருந்தாள்.

சில நிமிடங்கள் அது பாட்டிற்கு ஓடி மறைந்த பின்னரே இருவரும் மனம் விட்டுப் பேசத் தொடங்கினர்.

“ஸ்ரீ…”

“ம்ம்ம்…”

“உனக்கு இந்தத் திருமணத்தில் பரிபூரண சம்மதமா?”

“எனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.”

“சரி அதை விடு… உனக்கு என்னைப் பிடிக்குமா? என் அளவிற்கு வேறு யாரையாவது பிடிக்குமா? உன் அப்பாவைத் தவிர… இதற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை என்று சொல்லி நழுவி விடாதே எனக்கு உன்னைப் பற்றி நன்றாகத் தெரியும்.”

“ம்ம்ம்…”

“எதற்கு ம்ம்ம்… வாயைத் திறந்து சொல்… என்னைத் திட்டுவது என்றால் மட்டும் சத்தம் எட்டூருக்குக் கேட்கும் இப்போது மட்டும் என்ன வந்தது?”

“உங்களைப் பிடிக்கும்… உங்களைப் பிடித்த அளவிற்கு வேறு யாரையும் பிடிக்காது… அப்பாவைத் தவிர… போதுமா…”

“போதாது தான்… ஆனால் இப்போதைக்கு இது போதும். முதலாவது கேள்விக்குப் பாதிப் பதில் கிடைத்து விட்டது.”

“என்ன முதலாவது கேள்வி?”

“அது ஒன்றுமில்லை அதைவிடு…”

“ம்ம்ம்…”

“ஸ்ரீ…”

“ம்ம்ம்…”

“நீ ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டுமா?”

“ம்ம்ம்…”

“என்ன?”

“அது வந்து… அதைப் பிறகு சொல்லட்டுமா?”

“எப்போது…”

“அது தெரியவில்லை… ஆனால் நேரம் வரும் போது சொல்கிறேன்…”

“என்னவோ செய்… உன்னிடம் இருந்து ஏதாவது பதில் பெற வேண்டும் என்றால் நான் தலை கீழாக நின்றாலும் அது நடக்காது என்று தெரியாமல் கேட்டு விட்டேன்…”

“அப்படியில்லை ஈழா…”

“சரி அதை விடு… இப்போது நானாவது ஒன்று சொல்லட்டுமா அதையாவது கேட்கிறாயா?”

“ம்ம்ம்… சொல்லுங்கள் கேட்கிறேன்.”

“அம்மா சொன்னார்கள் எங்கள் இருவரையும் நம் திருமண விடயம் பற்றிக் கலந்து பேசுமாறு… அதனால் தான் நான் உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று சொன்னேன்…”

“அப்பாவும் இதையே தான் என்னிடம் சொன்னார்கள்…”

“மாமாவுக்கு நீ ஒரே ஒரு பிள்ளை என்பதாலும் என் வீட்டில் நான் கடைசிப் பிள்ளை என்பதாலும் இந்தத் திருமணத்தை பெரிதாக ஆடம்பரமாகத் தான் கொண்டாடப் பார்ப்பார்கள்…”

“அப்படி ஆடம்பரம் எல்லாம் வேண்டாம் ஈழா… கோவிலில் வைக்கலாம் அது தான் எனக்கும் ஆசை… ஆனால் உங்களுக்கு எது பிடிக்கும்?”

“நீ சொல்வது எது என்றாலும் எனக்குச் சரி தான்… ஒரு தடவை நீ என்னிடம் சொல்லி இருக்கிறாய் திருமணம் நடப்பதென்றால் ஆடம்பரம் இல்லாமல் கோவிலில் நடப்பது தான் உனக்கு ஆசை என்று… அதனால் தான் கேட்டேன்…”

“உங்களுக்கு அப்போது நான் பேசியது எல்லாம் நினைவில் இருக்கிறதா ஈழா…”

“திவ்வியமாக நினைவில் இருக்கிறது…”

“ஈழா…”

“ம்ம்ம்… என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் தயங்காமல் சொல்லி விடு…”

“நம் திருமணம் சம்பிரதாயப்படி தாலி கட்டிப் பூர்த்தியாவதற்கு முதலே சட்டப்படி எழுத்து மூலம் பூர்த்தியாக வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை…”

“சரி அப்படியே வீட்டில் சொல்லி விடுவோம்…”

“ஏன் அப்படி ஒரு ஆசை என்று கேட்க மாட்டீர்களா?”

“நீ அதைச் சொல்லும் போதே தொண்டை வரை அந்தக் கேள்வி வந்தது. நீ தான் நானாகக் கேட்டால் பதிலே சொல்ல மாட்டாயே அதனால் தான் ஒன்றும் கேட்கவில்லை…”

“நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்குத் தானே பதில் சொல்லவில்லை நான்… அதற்காக இப்படி அடிக்கடி ஒரு கேள்விக்கும் பதில் சொல்லவில்லை என்பது போலச் சொல்லாதீர்கள்…”

“சரி சரி இனிமேல் சொல்லவில்லை… உனக்கு ஏன் அப்படி ஆசை என்று சொல்…”

“சட்ட ரீதியாக நாங்கள் இருவரும் கணவன் மனைவி ஆனதுமே இரண்டு குழந்தைகளையுமே எந்தத் தடையும் இல்லாமல் தத்தெடுத்து விட முடியும் அல்லவா… அப்போது தானே நம் சம்பிரதாயமான திருமணத்தில் நம் இரண்டு குழந்தைகளும் நம்மோடு இருப்பார்கள்… சிலம்பரசிக்கும், துளசிதேவிக்கும் முன்னிலையில் தான் நீங்கள் என் கழுத்தில் தாலி கட்ட வேண்டும். இந்தத் திருமணத்தையே நம் இரண்டு குழந்தைகளுக்காகத் தானே நாம் செய்து கொள்கிறோம். அவர்கள் இல்லாமல் எப்படி ஈழா… அதனால் தான் சட்டரீதியான எழுத்துப் பதிவை இந்த மாதத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
என்று இயல்பு போலக் கேட்டவளையே தன்னை மறந்து பார்த்திருந்தான் ஈழக்குமரன்.

“பெண்களைப் படைக்கும் போதே அவர்களுள் தாய்மை என்ற உயரிய அழகிய பொக்கிஷத்தை இறைவன் புதைத்து விடுகிறான் போல… அதனால் தான் கருவில் குழந்தையைச் சுமக்காத போதும் கூட ஒரு பெண்ணால் தாய்மை உணர்வை வெளிப் படுத்த முடிகிறதோ… இதோ அதற்கு உதாரணமாக என் முன்னால் இவள் நிற்கிறாளே… எத்தனை இயல்பாக நம் இரண்டு குழந்தைகள் என்று சொல்கிறாள்… அப்படிச் சொல்லும் போதே அவளின் முகம் எப்படிப் பூரித்துப் போகிறது… தாய்மையின் பூரிப்பு இது தானோ… தாய்மை என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல அது ஒரு மனம் சார்ந்த அழகிய விஷயம் என்று இன்று தெளிவாக இவள் மூலம் கண்டு கொண்டேன்…”
என நினைத்துக் கொண்டேயிருந்தவனின் முகத்தின் முன்னால் கைகளை அசைத்தாள் ஸ்ரீரங்கநாயகி.

திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்தவனை விசித்திரமாகப் பார்த்தவளோ
“என்ன ஈழா… கண்களை விழித்துக் கொண்டே தூக்கமா?”
என்று கேட்டு விட்டுச் சிரித்தாள்.

அவள் அவ்விதம் கேட்டதும் தன் தலையில் மெல்லத் தட்டிக் கொண்டவனோ அவளைப் பார்த்துச் சிரித்தபடி
“அது ஒரு விஷயம் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தேன் அதை விடு… உன் ஆசைப்படியே எல்லாம் நடக்கும். இந்த மாதம் பத்தாம் திகதிக்குள் எழுத்துப் பதிவை முடித்துக் கொண்டு, பதினைந்தாம் திகதிக்குள் குழந்தைகளை நம்மோடு அழைத்து வந்து விடுவோம் சரி தானா…”
என்று உறுதியாகச் சொன்னான்.

அதன் பின்னர் இன்னும் சில நிமிடங்கள் இருந்து பேசிய இருவரும் மனதினுள் மனமே இல்லாமலும் வெளியே சாதாரணமாகவும் விடை பெற்றனர்.

உன்னை உன் வீட்டில் விட்டுச் செல்கிறேன் என்று சொன்னவனை விடாப்பிடியாக மறுத்து அவனை அனுப்பி வைத்து விட்டுப் பேருந்தில் ஏறி ஜன்னலோரமாக அமர்ந்து மெல்லத் தலை சாய்த்தவளை
“நல்ல மனம் உன் போல் கிடையாது நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்குப் பிரிவேது…”

என்ற பாடல் வரிகள் மெல்லத் தாலாட்டியது.

அவளை அறியாமல் அவளது உதடுகள் மெல்லப் புன்னகைத்தன. அவளது உதடுகள் அழகிய புன்னகையைத் தத்தெடுத்தது போல அங்கே சாலையில் தன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தவனின் உதடுகளும் அழகிய புன்னகையொன்றைத் தத்தெடுத்துக் கொண்டன.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“மெய்யெழுத்துக்களாய் மட்டும் சிதறியிருந்த நம்மை
இரு உயிரெழுத்துக்கள் இணைந்து வந்து கோர்வைளாக்கி
உயிர்மெய்யெழுத்துக்களாய் கோர்த்ததால்
அழகிய தமிழ்ச் சொற்களாய் நாம் நால்வரும் என்றும் உலா வருவோம்…”

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

Aathisakthi

Well-known member
உங்கள் கவிதை வரிகள் அழகு...இவர்கள் இருவரும் தங்களின் எதிர்காலம் இதுவென முடிவெடுத்துவிட்டார்கள்...பார்ப்போம்.என்ன நடக்கிறதென🌹🌹🌹
 
Top