கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே...9

ksk2022-writer

Well-known member
ksk – 47

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே

அத்தியாயம் 9

உடுப்பிட்டிப் பிரதேசத்தை அடுத்துள்ள கொம்மந்தறை என்ற ஊரின் நடுவிலே காவல் தெய்வம் போலக் கோயில் கொண்டிருந்தாள் மாதா மனோன்மணி.

அம்மனின் கோவில் கோபுரத்திற்குக் குடை பிடிப்பதற்கென்றே இரண்டு பக்கத்திலும் அரச மரங்கள் உயர்ந்து வளர்ந்து கிளை பரப்பி நின்றன.

அரச மரத்து இலைகள் காற்றில் அசைந்து அசைந்து கோவிலுக்கு வருகின்ற பக்தர்களை வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்றுக் கொண்டிருந்தன.

கோவிலுக்கு முன்பாக இருந்த குளத்தில் சூரியனின் வருகையில் முகம் மலர்ந்து பூத்திருந்த வெண்ணிறத் தாமரைகளும் செந்நிறத் தாமரைகளும் பார்க்கின்ற விழிகளுக்குக் குளிர்மையை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன.

குளத்தின் ஓரத்தில் பூத்திருந்த தாமரைப் பூக்களை ஓரமாக நின்று எட்டிப் பறித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீரங்கநாயகி.

அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காகக் குளத்து நீரைக் குடத்தில் மொண்டு எடுத்துக் கொண்டிருந்த கோவில் அர்ச்சகரான சிதம்பரம்பிள்ளை அருகில் நின்று தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு நின்றவளிடம்
“அம்மா ஸ்ரீ… கரையோரம் லேசாக வழுக்குகிறது பார்த்து நிதானமாகக் கால்களை எடுத்து வையம்மா… இன்று வழுக்கி விழுந்து வைத்து விட்டாய் என்றால் போகிற நல்ல காரியத்தில் ஏதேனும் தடங்கல் வந்து விடக் கூடும்…”
என்று சொன்னபடி மேலே போய் விட்டார்.

அர்ச்சகர் செல்வதையே சில நொடிகள் பார்த்திருந்தவள் எதற்கு வம்பு என நினைத்தபடி அவர் சொன்னது போல நிதானமாகப் பார்த்து நடந்தவாறு தாமரைப் பூக்களைப் பறித்தாள்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் அவளுக்கும் அவளது அவனுக்கும் பதிவுத் திருமணம் நடந்து முடிந்தது.

அவர்கள் இருவரும் பேசி வைத்தது போல இன்று தான் அவர்களின் குழந்தைகளைச் சட்ட ரீதியாகத் தத்தெடுக்கப் போகிறார்கள்.

ஏற்கனவே ஏதேதோ விஷயங்களால் தள்ளிப் போன அந்த நாளை யார் யாருடனோ பேசி இன்றைய நாளாக்கி இருந்தான் ஈழக்குமரன்.

அதன்படி பருத்தித்துறையில் உள்ள சரஸ்வதி ஆசிரமத்திற்கு இன்றைய நாள் அவளும் அவனும் போக வேண்டும். தன்னுடனேயே வரும்படி அவளை அவன் கேட்டிருந்தான். ஆனால் அவளோ எதையெதையோ சொல்லிச் சேர்ந்து செல்வதை மறுத்து விட்டாள்.

அவனும் அவளது மனநிலையைப் புரிந்து கொண்டு அவளை அதற்கு மேலே வற்புறுத்தாமல் சென்று விட்டான்.

அதை நினைத்தபடியே தாமரைப் பூக்கள் அடங்கிய கூடையைத் தூக்கிச் சென்று அர்ச்சகரிடம் கொடுத்த ஸ்ரீரங்கநாயகி.

அதன் பின்னர் அம்மனைத் தரிசித்து விட்டு அர்ச்சகரிடம் அர்ச்சனை செய்வதற்கான காணிக்கையைத் தட்டில் வைத்தபடி முதலில் சிலம்பரசியின் பெயரைச் சொல்லி விட்டு அடுத்தே துளசிதேவி என்ற பெயரைச் சொன்னாள் அவள்.

உள்ளே பிள்ளைகள் இருவரின் பெயரிலும் அர்ச்சனை நடந்து கொண்டிருக்க, விழிகளை மூடிக் கொண்டவளோ
“அம்மா தாயே… என்னுடைய மூச்சு உள்ள வரையில் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு நல்ல தாயாக இருப்பேன்… என்னுடன் என் துளசி எப்படி பாசத்தோடு ஒட்டிக் கொள்கிறாளோ அவ்விதம் அரசியும் ஒட்டிக் கொள்ள வேண்டும் அம்மா…”
என மனமுருகி வேண்டிக் கொண்டாள்.

வேண்டுதல் முடிந்தது என்பது போல அர்ச்சகர் கொடுத்த விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டவளோ குங்குமத்தைப் பார்த்ததும் மீண்டும் கண்களை மூடி
“அவருக்கு நானொரு நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன் அம்மா… அதற்கான பக்குவத்தையும் திடத்தையும் நீ தான் எனக்குக் கொடுக்க வேண்டும்…”
என்று வேண்டிவிட்டுக் குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டவளுக்குக் கை விரல்கள் லேசாக நடுங்கியது.

தரிசனத்தை முடித்து விட்டு அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை வாங்கியபடி கோவிலை விட்டு வெளியே வந்தவள் நேராகப் பேருந்து நிற்கும் இடத்திற்குச் சென்றாள்.


அவளுக்காகக் காத்திருந்தது போல அவள் ஏறி அமர்ந்ததுமே பேருந்து பருத்தித்துறையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

ஜன்னலோரமாக சாய்ந்து அமர்ந்து கொண்டவளைப் பேருந்தில் ஒலித்த
“சிந்தாமணி என் கண்மணி சிற்றாடை நீ கட்டடி… என் மாளிகை முற்றத்திலே பொன்னூஞ்சல் நீயாடடி…”
என்ற பாடல் மெல்லத் தாலாட்டியது.

பாடலுடன் சேர்ந்து அவளது நினைவுகளும் பின்னோக்கிப் பயணித்தது.

அவள் துளசிதேவியை முதன் முதலில் பார்த்த தருணம் அவளுக்குப் பசுமரத்தாணி போலப் பதிந்து இருந்தது.

ஸ்ரீரங்கநாயகி அப்போது துன்னாலையில் ஈழக்குமரனது வீட்டுக்கு எதிர் வீட்டில் தான் இருந்தாள்.

மூர்த்தி தம்பதியினருக்கு அவள் ஒரே ஒரு மகள் தான்… அவள் எச் நேரமும் ஈழக்குமரனின் வீட்டில் தான் இருப்பாள்.

தூங்குவதற்கு மட்டும் தான் வீடு செல்வாள் இது சிறு வயது தொட்டே அவளுக்கு வாடிக்கையாயிற்று. சந்தனக்குமரனோடும் எழில்குமரனோடும் சகஜமாகப் பழகும் அவளால் ஏனோ ஈழக்குமரனோடு சகஜமாகப் பழக முடியவில்லை.

ஈழக்குமரனுக்கும் அவளுக்கும் அடிக்கடி சண்டை மூழும் அதனைச் சமாதானம் செய்து வைப்பதே அமுதவாணி தான்… வளர்ந்து பெரிய பெண் ஆனதும் கூட அவளுக்கும் அவனுக்கும் சண்டை மூழும் ஆனாலும் உடனே சமாதானமாகி விடுவார்கள்.

அப்போது தான் வளர்ந்த பெண்ணான ஸ்ரீக்குக் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை முளைத்தது.

அதைத் தன் நண்பனும் முறைப்பு மன்னனுமாகிய ஈழக்குமரனிடம் அவள் பகிர்ந்து கொண்டாள்.

அதனை அவனும் சந்தோஷமாக வரவேற்பது போலப் பேசவே ஆசையாகத் துளிர் விட்ட விஷயம் ஆல விருட்சமாக வளர்ந்து நின்றது.

அதன் விளைவாக சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பாக அவள் அடம்பிடித்துப் பருத்தித்துறையில் உள்ள சரஸ்வதி ஆசிரமத்திற்குப் பணி புரியச் சென்றாள். அது அவளது மனதிற்கு நிம்மதியைக் கொடுத்தது.

எல்லாக் குழந்தைகளுடனும் அன்பாகவும் அக்கறையுடனும் பழகிக் கொண்டிருந்தவளின் கவனிப்பைத் திருப்பும் முகமாக ஒரு நாள் நடுநிசியில் ஒன்று நடந்தது.

அடுத்த தினம் புது வருடம் பிறக்க இருந்ததால் ஆசிரமத்தின் நிர்வாகியின் வேண்டுகோளுக்கு இணங்கத் தந்தையின் சம்மதத்துடன் அன்றைய நாளிரவு ஆசிரமத்தில் தங்கியிருந்தாள் ஸ்ரீரங்கநாயகி.

நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் பிரார்த்தனையை முடித்து விட்டு, எல்லோரும் தூங்கச் சென்ற பின்னர் சரியாக நள்ளிரவு தாண்டி இரண்டு மணியளவில் ஆசிரமத்து வாசலில் நாய்கள் பெரிதாகக் குரைத்துக் கொண்டிருந்தன.

ஆசிரமத்து வாசலோடு ஸ்ரீ படுத்திருந்த அறை இருந்ததால் அவள் சட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டாள்.

மெல்ல மூடியிருந்த சாளரத்தைத் திறந்து பார்த்தவளுக்கு வாசற்கதவின் முன்பாக நடப்பது தெரு விளக்கின் வெளிச்சத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

யாரோ ஒரு வயதானவர் போல முகத்தை மறைத்துத் துணி கட்டியிருந்தார். அவரது கையில் ஒரு துணிப் பொட்டலம் இருந்தது. அதைச் சுற்று முற்றும் பார்த்து விட்டு ஆசிரமத்து வாசலில் வைத்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்.

அவர் துணிப் பொட்டலத்தை வைத்து விட்டுத் தெரு முனையில் திரும்பும் வரையில் அசையாமல் நின்றவளோ அதன் பிறகே உணர்ச்சி வந்தவளாக வாசலுக்கு விரைந்தாள்.

வாசலில் கிடந்த துணிப் பொட்டலத்தைத் தெருவில் நின்றிருந்த ஒன்றிரண்டு நாய்கள் முகர்ந்து பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தன.

ஸ்ரீக்கு ஒரே பதட்டமாக இருந்தது. ஆசிரமத்து வாசலில் நள்ளிரவு தாண்டி இரண்டு மணியளவில் யாரும் இல்லாத வேளை ஒரு துணிப் பொட்டலத்தைக் கொண்டு வந்து போட்டு விட்டுப் போகிறார்கள் என்றால் அதன் அர்த்தம் என்னவாக இருக்கும். என நினைத்தவளின் கைகள் எல்லாம் நடுங்கியது.

வேகமாக ஓடிச் சென்று காவல்கார ஐயா சண்முகம் இருக்கும் அறையை எட்டிப் பார்த்தாள் ஸ்ரீ… சண்முகம் ஐயா தூக்க கலக்கம் போவதற்காகக் குளித்துக் கொண்டிருந்தார் போலும் குளியலறையில் இருந்து நீர் விழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

அவரை அழைத்துப் போவதற்குள் தானே போவது மேல் என நினைத்தவள் அவரது அறையின் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த சாவியை எடுத்துக் கொண்டு வாசற்கதவை நோக்கி ஓடினாள்.

அவள் ஓடி வந்த சத்தத்தைக் கேட்டதும் துணிப் பொட்டலத்தின் அருகே நின்றிருந்த மூன்று தெருநாய்களில் இரண்டு பயத்தில் ஓடி விட்டது. ஒரு நாய் மட்டும் துணிப் பொட்டலத்தைப் பற்களால் கௌவிப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.

பொட்டலம் சற்றுப் பாரமாக இருந்திருக்கும் போல அந்த நாயால் வேகமாக ஓட முடியவில்லை.

ஆனாலும் அவள் பெரிய வாசலின் மாங்காய்ப்பூட்டைச் சாவி போட்டித் திறந்து, இரும்புச் சங்கிலியை விலக்கி விட்டு அந்தப் பெரிய கதவைத் திறந்து கொண்டு வெளியே போவதற்குள் அந்த நாய் பொட்டலத்தை இழுத்துக் கொண்டு ஓடி விட்டது.

கதவைத் திறந்து கொண்டு வேகமாக ஓடி வந்து நாய் ஓடிய திசையைப் பார்த்தவள் திகைத்துப் போய் நின்றாள்.

அந்த நீளமான சாலையின் முடிவு வரை சாலையின்
ஓரங்களில் இரு மருங்கிலும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு ஒளி வெள்ளத்தைச் சாலையெங்கும் பாய்ச்சிக் கொண்டிருந்தது.

அந்த முடிவு வரை நாயையும் காணவில்லை அது இழுத்துச் சென்ற பொட்டலத்தையும் காணவில்லை. பேசாமல் உள்ளே போய் வேறு யாரையாவது அழைத்து வரலாமா என்று யோசனை செய்தவள் அந்த யோசனையை உடனே கை விட்டாள்.

நாய் ஓடிய வேகத்திற்கு அது சாலையின் முடிவு வரை ஓடியிருக்க வாய்ப்பில்லை. இங்கே தான் எங்காவது புகுந்திருக்க வேண்டும் என நினைத்தவள் அந்தச் சாலையின் இரண்டு பக்கமும் பார்த்தபடி ஓடினாள்.

ஒன்றுமே அவளது கண்களுக்குத் தட்டுப் படவில்லை. அவளது மனது வேறு திரும்பிச் செல்வதற்குச் சம்மதிக்கவில்லை.

அவளது ஆழ் மனம்
“நன்றாகத் தேடு தேடு அந்தத் துணிப் பொட்டலம் சாதாரணமானது அல்ல”
என்று அவளை உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது.

அதனால் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடியவள் சாலையின் நடுவில் கிடந்த கல்லில் தடுக்கிக் கீழே விழுந்தாள்.

தடுக்கிய கல் சற்றுக் கூராக இருந்ததால் அது அவளது உள்ளங்காலை நன்றாகவே பதம் பார்த்தது.

அருகே கிடந்த இன்னொரு கல் அவளது நெற்றியைப் பதம் பார்த்தது.

உள்ளங்காலில் இருந்தும் நெற்றியில் இருந்தும் இரத்தம் வடிந்து கொண்டிருக்கவே சாலையின் நடுவில் அமர்ந்தபடி கால்களைப் பிடித்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தாள் ஸ்ரீ.

அடி பட்டாலும் பரவாயில்லை இப்போது அந்தத் துணிப் பொட்டலத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்பதே அவளது மனதினுள் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த எண்ணத்தோடு எழப் போனவளுக்குத் தலை சுற்றி மயக்கம் வருவது போல இருக்கவே அப்படியே அமர்ந்து விட்டாள்.

சாலையின் இரண்டு பக்கமும் புதரும் பற்றையும் தான் மண்டிக் கிடந்தது.

ஈச்சம் மரங்களும், இலந்தை மரங்களும், காரைக்காய் மரங்களும் முட்புதர்களும் என்று அடர்த்தியான பற்றைக் காடு போல இருந்த அந்தப் பகுதிக்குள் பகலில் நுழைவது என்பதே பகீரதப் பிரயத்தனம். அப்படி இருக்கும் போது இப்போது
எப்படி இந்தப் பற்றைக்குள் இந்த இராத்திரி நேரத்தில் நுழைந்து அந்தப் பொட்டலத்தைத் தேடுவது என யோசித்தவளுக்கு மலைப்பாக இருந்தது.

சாலையின் நடுவில் என்ன செய்வது எது செய்வது என்பது போலச் சுற்றும் முற்றும் பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் பார்வையில் அந்தப் பெரிய ஆலமரம் விழுந்தது.

அவள் இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு ஒற்றையடி மணற்பாதை ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் நிற்கிறது.

அந்த ஆலமரத்திலிருந்து தொடங்கும் அந்த மணற்பாதை இன்னொரு ஆலமரம் நிற்கும் இடத்தில் சென்று முடிவடைகிறது.


அந்த ஆலமரத்திற்கு அருகாக ஒரு சின்னஞ்சிறிய கண்ணகியம்மன் கோவில் இருக்கிறது.

கோவில் இருக்கும் இடத்தைத் தவிர மற்ற இடமெங்கும் பற்றைக்காடும் முட்புதரும் தான்.

ஆலமரத்தைப் பார்த்ததுமே காலில் ஏற்பட்ட மற்றும் நெற்றியில் ஏற்பட்ட காயத்தினால் சோர்வாக இருந்தவளுக்குப் புதுத் தென்பு வந்தது போல இருந்தது.

காலின் வலியைப் பொருட் படுத்தாமல் அந்த ஆலமரத்தை நோக்கி வேகமாக நடந்தவள் அதற்கு அருகாக ஆரம்பமான ஒற்றையடிப் பாதையில் விரைந்து நடந்தாள்.

ஒற்றையடிப் பாதையின் இரு மருங்கிலும் நாகலிங்க மரங்களும் அங்கும் இங்குமாக மல்லிகைக் கொடிகளும் நின்றிருந்தன.

அன்று பௌரணமி நாள் என்பதால் அவளால் இலகுவாக நடக்க முடிந்திருந்தது.

இந்த இடத்திற்கு அவள் ஒரு போதும் வந்ததே இல்லை. இங்கே பாம்புகள் அதிகம் வந்து போகும் என்றும் கேள்விப் பட்டு இருக்கிறாள்.

பகலிலேயே இந்த இடத்திற்கு யாரும் தைரியமாக வருவதில்லை என்றும் கேள்விப் பட்டு இருக்கிறாள்.

பகலிலேயே மற்றவர்கள் வருவதற்குத் தயங்கும் ஒரு ஒற்றையடிப் பாதையில் இராத்திரி நேரத்தில் அதுவும் நடுநிசி தாண்டிய நேரத்தில் ஒற்றையாளாகத் தான் போகிறேன் என்ற எண்ணமே இல்லாத அளவுக்கு அவளது எண்ணமெங்கும் அந்தத் துணிப் பொட்டலமே வியாபித்து இருந்தது.

வேகமாக வந்தவள் கண்ணகியம்மன் கோவில் இருந்த இடத்தைக் கூட அடைந்து விட்டாள். ஆனால் அவள் தேடி வந்ததைத் தான் இன்னமும் கூடக் காணவில்லை.

கோவிலினுள் வைக்கப் பட்டிருந்த கண்ணகியம்மன் சிலையைப் பார்த்தவளோ
“அம்மா… நான் தேடி வந்ததை என் கண்ணில் காட்டி விடு தாயே…”
என்று மனதார வேண்டிக் கொண்டாள்.

அந்த நேரம் பார்த்துக் கால்கள் விண் விண்ணென்று வலியெடுக்கவே அந்தச் சின்னஞ்சிறிய கோவிலின் முன் மண்டபத்தில் சாய்ந்து அமர்ந்தவளின் கண்கள் சோர்வில் மெல்ல மூடிக் கொண்டன.

மூடியவளின் இமைகளுக்குள் அந்தத் தெரு நாயும் அந்தத் துணிப் பொட்டலமுமே வந்து வந்து போனது.

திடுக்கிட்டுப் போய்க் கண்களைத் திறந்து கொண்டவளின் காதுகளில் அப்போது தான் அந்தச் சத்தம் தெளிவாக விழுந்தது.

அது என்ன சத்தமாக இருக்கும் என யோசனை செய்தவளுக்கு அப்போது தான் அது அலைகள் ஆர்ப்பரிக்கின்ற கடலின் சத்தம் என்பதைத் தெளிவாக உணர முடிந்தது.

இங்கே எங்கே கடல் வந்தது என்ற சந்தேகத்தில் சுற்று முற்றும் பார்த்தவளது பார்வையில் மரங்களும் புதர்களும் தான் தெரிந்தன.

சந்தேகத்தைத்
தெளிவு படுத்தும் எண்ணத்தில் எழுந்து கொண்டவள் சத்தம் வந்த திக்கு எதுவென்று பார்த்தாள்.

அலைகளின் இரைச்சல் சத்தம் கோவிலின் பின்னால் இருந்தே வருகிறது என்பதைப் புரிந்து கொண்டவள்.

கோவிலைச் சுற்றிக் கொண்டு கோவிலுக்குப் பின்னால் வந்தாள்.

கோவிலின் பின் மதிற்சுவருக்கு நேராக ஒரு பெரிய தேமா மரமொன்று நின்றது.

மரத்தின் மேலே ஏராளமான தேமாப் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்க அதைக் காற்று வந்து தாலாட்டிக் கொண்டிருந்தது.

போதாக் குறைக்குப் பௌர்ணமி நிலவு வேறு தன் வெளிச்சத்தை அந்த இடமெங்கும் பாய்ச்சிக் கொண்டிருந்ததால் அவளால் தெளிவாக அனைத்தையும் பார்க்க முடிந்தது.

தேமாப் பூக்களின் சுகந்தத்தை ஆழமாகச் சுவாசித்தவளுக்குப் புதுத் தென்பு பிறந்தது.

மெல்ல அந்த இடத்தைப் பார்வையால் சல்லடை போட்டவளின் கண்களுக்கு இன்னொரு ஒற்றையடிப் பாதை தட்டுப் பட்டது.

தேமா மரத்தின் பக்கவாட்டில் அந்த ஒற்றையடிப் பாதை ஆரம்பமானது. சற்றும் யோசிக்காமல் அந்தப் பாதையில் இறங்கி நடந்தவளைப் பாதையின் முடிவில் இன்னொரு தேமா மரம் வரவேற்றது.

அதற்குப் பிறகு ஒரு பெயர் தெரியாத முட்கள் அடங்கிய பூங்கொடி மட்டுமே அடர்த்தியாகப் பற்றிப் படர்ந்திருந்தது.

அதன் பின்னர் என்ன செய்வது என யோசித்தவள் திரும்பி விடலாமா என்று எண்ணும் போதே நாய்கள் குரைக்கும் சத்தம் ரொம்பப் பக்கத்தில் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டதுமே முட்களையும் பொருட்படுத்தாமல் அந்தப் பூங்கொடியைப் பிடித்து இழுத்தவளுக்குக் கீழ்ப் பக்கமாகக் குனிந்து செல்லக் கூடிய அளவுக்கு ஒரு பாதை இருப்பது தெரிந்தது.

இன்றைக்குப் பௌர்ணமி நாளாக மட்டும் இல்லாது இருந்திருந்தால் என்பாடு படு திண்டாட்டம் தான் என எண்ணியவள் நன்றாகக் குனிந்து அந்தப் பாதைக்குள் புகுந்தாள்.

புகுந்தவளோ ஸ்தம்பித்துப் போய் அப்படியே குனிந்து வாக்கில் நின்று விட்டாள்.

அவள் ஏதோ ஒரு மாய உலகத்திற்கு வந்து விட்டேனா நான் என்பது போலத் தன்னைத் தானே கிள்ளிப் பார்த்து, இல்லை இது இந்தப் பூலோகத்தில் உள்ள அதுவும் இலங்கையில் பருத்தித்துறையில் உள்ள இடம் தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள்.

பூரணை நிலவு வானில் பவனி வந்து கொண்டிருந்த அந்த நடுநிசிப் பொழுதில் நீல நிறக் கடல் விரிந்து கிடக்க, அதற்கு முன்பாக வெள்ளியை உருக்கி வார்த்தது போல வெண்ணிற மணல் பரந்து விரிந்து கிடக்க, கடலின் கரையோரமும் சற்றே உட்பக்கமாகவும் கிடந்த பாறைகளின் மேல் வேகமாக வந்த அலைகள் மோதி மோதி நீர்த்துளிகளைச் சிதற விட்டுக் கொண்டிருந்தன.

மணல் பரப்பில் வரிசையாக நின்றிருந்த தென்னை மரங்கள் கடற்காற்றின் வேகத்திற்கு நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்க, மரங்களில் இருந்த செவ்விளநீர் பௌர்ணமி வெளிச்சத்தில் பளிச்சென்று தெரிந்து கொண்டிருந்தது.

கடல் இப்படியிருக்க கரையோரமாக மண்டிக்கிடந்த புதர்களிலும் பற்றைக் காடுகளிலும் ஊசி மல்லி, காட்டு மல்லி, பவள மல்லி, அடுக்கு மல்லி என வகை வகையாக மல்லிக் கொடிகள் படர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

குனிந்த வாக்கில் நின்று அந்த இராத்திரி நேரத்து இயற்கையழகை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தவளை நாய்களின் குரைப்புச் சத்தம் நடப்புக்குக் கொண்டு வந்து, அவள் வந்த வேலையை நினைவு படுத்தியது.

வேகமாக வெளியே வந்ததும் கடற் காற்றின் குளிர் நடுங்கச் செய்யவே அதைப் பொருட்படுத்தாமல் குரைப்புச் சத்தம் வந்த திக்கை நோக்கி ஓடினாள் ஸ்ரீ.

அவள் ஓடி வருவதைப் பார்த்த நாய்கள் அந்த இடத்தை விட்டு ஓட, பொட்டலத்தைத் தூக்கி வந்த நாய் மீண்டும் அதை இழுத்துக் கொண்டு ஓட முற்படவும் கீழே கிடந்த கல்லொன்றை எடுத்து அந்த நாயின் மேல் படாதவாறு விட்டெறிந்தாள் அவள்.

அந்த நாயும் பொட்டலத்தைச் சிறிது தூரம் இழுத்தபடி ஓடி விட்டுப் பின்னர் அதை அப்படியே போட்டு விட்டு ஓடி மறைந்தது.

வேகமாக ஓடி வந்தவள் மூச்சு வாங்க அந்தப் பொட்டலத்தைப் பார்த்தாள். பௌர்ணமி வெளிச்சத்திலும் அருகில் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்த மல்லிகைப் பூக்களின் வாசத்திலும் லேசாகத் தலை கிறுகிறுத்த போதும் மண்டியிட்டு அமர்ந்து கொண்டவள் மெல்ல அந்தப் பொட்டலத்தின் முடிச்சை அவிழ்த்தாள்.

அதற்குள் இன்னுமொரு முடிச்சு இருந்தது. அந்த முடிச்சை அவிழ்ப்பதற்குள் துணி லேசாக அசைந்தது.

லேசாகப் பயந்தவள் துணிவை வர வைத்துக் கொண்டு அந்த முடிச்சையும் அவிழ்த்தாள்.

அவள் நினைத்தது போலவே குண்டு மணிக்கண்களால் கொட்டக் கொட்ட முழித்தபடி லேசாகச் சிணுங்கிக் கொண்டு ஒரு பெண்குழந்தை அந்தப் பொட்டலத்தினுள் கிடந்தாள்.

ஆசிரம வாசலில் நடு நிசி நேரத்தில் ஒருவர் ஒரு பொட்டலத்தைக் கொண்டு வந்து போடுகிறார் என்பதைப் பார்த்த போதே அது குழந்தையாகத் தான் இருக்கும் என்று அவளுக்குத் தோன்றினாலும் அது உறுதியானதும் அவளது உடம்பெல்லாம் நடுங்கியது.

அந்தப் பெண் குழந்தையைப் பார்த்தால் இன்று தான் இந்தப் பூமிக்கு வந்திருப்பாள் போலத் தெரிந்தது.

வந்த மறு நொடியே தான் தன் தந்தை தாயால் தூக்கியெறியப் படுவேன் என்பதை அந்தப் பிஞ்சு அறிந்திருக்கவில்லைப் போலும்…

இப்படித் தூக்கி எறிபவர்கள் எதற்காகப் பெற வேண்டும் என யோசித்தவள்… நல்ல வேளை குப்பைத் தொட்டிக்குள் போடாமல் ஆசிரம வாசலில் போட்டார்களே அதுவே பெரிய விஷயம் என நினைத்தவள்… அந்தப் பிஞ்சின் மேனியை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

அவளது மெல்லிய ஸ்பரிசத்தில் லேசாகச் சிணுங்கிய குழந்தை மெல்ல வீறிட்டு அழத் தொடங்கியது.

அதைப் பாரத்துப் பதறிப் போனவளோ இரு கரங்களாலும் குழந்தையைப் பக்குவமாகத் தூக்கி மெல்லத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

அவளது மார்புச் சூட்டின் கதகதப்பில் அழுகையை நிறுத்திக் கொண்ட குழந்தை மெல்லச் சிணுங்கியபடியே அவளோடு ஒட்டிக் கொண்டது.

வெளியே ஓடி வரும் போதே தன் தோள் மீது போட்டபடி வந்த சால்வையை எடுத்துக் குழந்தையைச் சுற்றிப் போர்த்திக் கொண்டவள் அதன் பின்னரே அந்தப் பொட்டலத்தில் இருந்த கடதாசியைப் பார்த்தாள்.

ஒரு கரத்தால் குழந்தையை இறுக அணைத்தபடி மறுகரத்தால் அந்தக் கடதாசியை எடுத்து மெல்ல விரித்துப் படித்தாள்.

அதிலே
‘நான் செய்த இந்தச் செயலுக்காக அந்த இறைவன் ஒரு போதும் என்னை மன்னிக்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். ஆனால் எனக்கும் வேறு வழி தெரியவில்லை. என் மூத்த மகளை ஒருவன் வஞ்சித்து விட்டான். அதன் விளைவு தான் இந்தக் குழந்தை. யாருக்கும் தெரியாமல் தான் அவளுக்குப் பிரசவம் பார்த்தோம். அப்பாவுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்றோ என்னவோ குழந்தை பிறந்ததுமே என் மகளும் போய்ச் சேர்ந்து விட்டாள். என்னுடைய மற்ற இரண்டு பெண்களுக்கும் திருமண வயது நெருங்கி விட்டது. இந்த நேரத்தில் இந்தக் குழந்தையை என்னால் வளர்க்க முடியாது. அதனால் தான் கடவுள் மேலே பாரத்தைப் போட்டு விட்டு இந்தக் குழந்தையை இந்த ஆசிரமத்து வாசலில் விட்டுப் போகிறேன். இப்படிக்குப் பெண் குழந்தைகளைப் பெற்ற துரதிஷ்டசாலித் தந்தை.”
என்று முடிக்கப் பட்டிருந்தது.

அவளுக்கு அந்தப் பெரியவர் மீது இருந்த வெறுப்பு சற்றே வடிந்தது.

இப்போது அந்த வெறுப்பு அந்தக் குழந்தை பிறப்பதற்குக் காரணமாக இருந்தவன் மீது திரும்பியதோடு அந்தக் குழந்தையைப் பெற்றவள் மீது கோபமாகவும் மாறியது.

“கழுத்தில் தாலி என்ற ஒன்று ஏறும் வரையில் அவன் உயிர்க் காதலனாக இருந்தாலுமே கூட ஒரு பெண்ணானவள் தன் உடலை அவனிடம் அர்ப்பணிக்கக் கூடாது. அதே போன்று தாலி கட்டி ஒருத்தியை மனைவியாக்கும் வரையில் அவள் அவனது உயிர்க் காதலியாக இருந்தாலுமே கூட அவன் அவளை உடல் ரீதியாக ஆட்சி செய்யக் கூடாது. இது அந்த இருவருமே தாங்கள் பெற்றவர்களுக்குச் செய்யும் துரோகம் என்பதை உணரவில்லையா?”
எனஞ் சினங் கொண்டவள் அந்த ஆணின் மோகப் பசிக்கும் அந்தப் பெண்ணின் ஏமாற்றத்திற்கும் கூலியாகக் கிடைத்த இந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது என நினைத்தபடி தன் மார்போடு முகம் புதைத்திருந்த அந்தக் குழந்தையை இரண்டு கைகளாலும் இறுக அணைத்தபடி எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

“காதல் என்கிற பெயரில் ஒரு சில கேவலமானவர்கள் செய்கிற கீழ்த்தரமான செயல்களால் எத்தனை உண்மையான காதல்கள் கேவலமாகச் சித்தரிக்கப் படப் போகின்றனவோ… எத்தனை குழந்தைகள் இப்படித் தெருவிலும் குப்பைத் தொட்டிகளிலும் விழப் போகிறார்களோ இறைவா…”
எனத் தனக்குத் தானே முனகியபடி வந்த பாதையில் திரும்பியவளுக்கு அழகாகத் தோன்றிய இடங்கள் அத்தனையும் இப்போது ஷோபை இழந்து போனதாய்க் காட்சி கொடுத்தன.

குழந்தையின் மேலே முட்கள் எதுவும் பட்டு விடாமல் நிதானமாக நடந்து வந்தவள் கண்ணகியம்மனின் முன் மண்டபம் வந்ததுமே அதில் மெல்ல அமர்ந்து கொண்டு உள்ளே சிலையாக நின்ற கண்ணகியை வெறித்துப் பார்த்தாள்.

“நீங்கள் எல்லோரும் உண்மையில் இருக்கிறீர்களா? அல்லது இருந்தும் கண்களை மூடிக் கொண்டு விட்டீர்களா?”
என வாய் விட்டுக் கேட்டவளோ பின்னர் தன்னைச் சுதாரித்துக் கொண்டு
“யாரோ செய்யும் கேவலமான செயல்களுக்குக் கடவுளை நொந்து என்ன பயன்…”
என நினைத்து விட்டுக் குழந்தையை அணைத்தபடி அந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.

ஒற்றையடிப் பாதையில் ஒற்றையாய் வந்தவள் இப்போது இரட்டையாய்ச் செல்வதைக் கோவிலின் முன் மாடத்தில் மாட்டப் பட்டிருந்த தூண்டாமணி விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சத்திலும் பௌர்ணமி வெளிச்சத்திலும் அங்கிருந்த மரஞ் செடி கொடிகள் பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது.

ஒற்றையடிப் பாதை முடிந்து சாலையில் ஏறி நடந்தவளுக்கு அப்போது தான் கல் குத்திய வலியின் வேதனை புரிந்தது.

அவளது நடையும் லேசாகத் தளர்ந்தது.
அந்த நேரம் பார்த்து அவளை நோக்கிக் காவல்கார ஐயா சண்முகமும் ஆசிரமத்தின் நிர்வாகி வெண்பாம்மாவும் ஓடி வந்தனர்.

அவர்களைப் பார்த்ததுமே வாசலில் கிடந்த பெரிய கல்லில் அப்படியே தொப்பென்று அமர்ந்து விட்டாள் ஸ்ரீ.

அவளது தோற்றத்தையும் அவள் கையில் எதையோ அணைத்து வைத்திருந்த விதத்தையும் பார்த்த இருவரும் திகைத்துப் போய் அவளருகில் வந்தனர்.

“என்னம்மா… கதவை இப்படித் திறந்து போட்டு விட்டு எங்கே போனாய்? என்னை அழைத்து இருக்கலாம் தானே… கையில் என்ன இது? காலிலும் நெற்றியிலும் என்ன காயம் இது?”
என்று கேட்டபடி அவளது நெற்றியைத் தொட்டுப் பார்த்தார் வெண்பாம்மா…

மெல்லத் தான் அணைத்திருந்த குழந்தையை அவருக்குக் காட்டியவளின் கண்கள் கலங்கியிருந்தன.

நடந்திருப்பதை அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்ட வெண்பாம்மா அவளை அப்படியே அணைத்தவாறு அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.

அவர்களின் பின்னோடே வந்த சண்முகம் ஐயா கதவை இழுத்துப் பூட்டி விட்டுத் தன்னறையில் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு நிர்வாகியின் அறையை நோக்கிச் சென்றார்.

அங்கே ஸ்ரீயின் காயத்திற்கு இருவரும் சேர்ந்து மருந்து போட்டுக் கட்டி விடும் வரையில் கூட அவள் குழந்தையைக் கீழே படுக்க வைக்கவில்லை.

அவளைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த வெண்பாம்மாவிற்கு அவளது தற்போதைய மனநிலையும் புரிந்தது.

குறிப்புப் புத்தகத்தை எடுத்து எதையோ குறித்து வைத்தவர் அவளை ஓரக் கண்ணால் பார்த்தபடி
“ஸ்ரீம்மா… இந்தக் குழந்தை இன்றில் இருந்து உன்னுடைய பொறுப்பு. குழந்தையை நீ உன் அறையிலேயே தூங்க வைத்துக் கொள். விடிந்ததும் குழந்தையை முறைப்படி நம் ஆசிரமத்தில் வளர்ப்பதற்கான விதிமுறைகளை முடிப்போம்
.”
என்று சொன்னார்.

அவர் அவ்விதம் சொன்னதும் வாடியிருந்த அவளின் முகம் சட்டென்று மலர்ந்ததைப் பார்த்ததும் அவருக்குப் பூரண திருப்தியாக இருந்தது.

தனது அறையில் இருந்த ஒரு புதிய பாற்புட்டியை எடுத்து அவளிடம் கொடுத்து அவளை அனுப்பி வைத்தவர் அந்தக் குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டார்.

குழந்தையோடு தன்னறைக்கு வந்தவள் ஒற்றைக் கையால் குழந்தையை இறுக அணைத்தபடி மறு கையால் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கென்றே பிரத்யேகமாக இருந்த பால்மாவைக் கரைத்துப் பாற்புட்டிக்குள் ஊற்றி விட்டு, அதை எடுத்துக் கொண்டு சாளரத்தருகே சென்று கதிரையில் சாய்ந்து அமர்ந்து கொண்டபடி குழந்தையின் முகத்தைப் பார்த்தாள்.

அறையின் மின்குமிழ் வெளிச்சத்தில் கண்கள் கூசவே கொட்டக் கொட்ட முழித்து அவளைப் பார்த்தது அந்தப் பிஞ்சு. பிறந்த உடன் குழந்தைக்குத் தாய்ப்பால் தானே கொடுக்க வேண்டும். ஆனால் இங்கே அதற்கு வழியில்லையே… நாளையில் இருந்து சண்முகம் ஐயாவிடம் சொல்லிப் பசுப்பாலில் இவளுக்கும் கொஞ்சம் வாங்க வேண்டும். என நினைத்தவள் பாற்புட்டியை எடுத்து அதில் இருந்த பாலின் சிறு துளிகளைத் தன் புறங்கையில் விட்டுப் பார்த்து அது மென் சூட்டில் தான் இருக்கிறது என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு குழந்தைக்குப் பாலைப் பருக்கினாள்.

காலையில் இருந்து அந்தப் பிஞ்சின் வயிற்றுக்குள் ஒன்றும் போய் இருக்காது போல… வாயில் பாற்புட்டியை வைத்ததுமே தன் செப்பு வாயால் சப்பிச் சப்பிப் பாலை மிச்சம் வைக்காமல் உறுஞ்சிக் குடித்தது குழந்தை.

அந்த நொடியில் உறுதி எடுத்துக் கொண்டவள் தான் இவளைத் தான் தத்தெடுப்பதென்று…


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“கடல் குளித்து முத்து எடுப்பார் சிலர்
கடலோரமாய் முத்தெடுத்தேன் நான்
நிலவொளியில் கிடைத்த மாணிக்கம்

என்மடியில் தவழ்கையில் ஓர் சுகம்”
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top