கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வேர்கள் - சிறுகதை

Rajasree Murali

Moderator
Staff member
வேர்கள்

அர்ஜுன் காரை சீரான வேகத்தில் ஓட்டிக்கொண்டிருக்க பக்கத்தில் அவனுடைய சகோதரி அவந்திகா, இருவரும் இரட்டையர்கள். பின் சீட்டில் அவர்களின் பாட்டி மைதிலியும் தாத்தா பார்த்தசாரதியும். டேய் அர்ஜுன், இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்டா, எங்கே போறோம், ஒண்ணுமே சொல்லாம வண்டியை ஒட்டிக்கிட்டிருக்கே. கேட்ட மைதிலியை பார்த்து, ஏன் பாட்டி பசிக்குதா? எங்கேயாவது ஹோட்டலில் நிறுத்தவா என்ற அர்ஜுனிடம் வேணாம் வேணாம், வழியில் எங்காவது இளநீர் கிடைத்தால் மட்டும் நிறுத்து என்றாள்.

கார் சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 70 கிலோ மீட்டர் தொலைவில் போய்க்கொண்டிருக்க, அவந்திகா நான் காரை ஓரமா நிறுத்தறேன் என்றவன் அவளை பார்த்து சைகையால் ஏதோ சொல்ல, ஓகேடா என்றாள். பாட்டி தாத்தா ரெண்டு நிமிஷம் கீழே இறங்குங்க என்றவள், ஹாண்ட் பேகிலிருந்து இரண்டு கைகுட்டைகளை எடுத்து அவர்களின் கண்களை கட்டினாள். என்னடா நடக்குது எங்க இரண்டு பேருக்கும். ஒன்னும் புரியலை என்றவர்களை அவர்களின் கைகளை பிடித்து மெல்ல மெல்ல என்று சொல்லியபடி இரண்டு நிமிட நடைக்கு பிறகு அர்ஜுன் அவந்திகா இருவரும் கோரஸாக "ஹாப்பி வெட்டிங் டே" தாத்தா பாட்டி என்று கூறியபடியே கண் கட்டை அவிழ்க்கவும், சற்று மங்கலான பார்வையில் எதிரே தெரிந்த காட்சி இருவரையும் சந்தோஷத்தில் வாயடைக்க செய்தது. ஹே செல்லங்களா, என்ன இது, என்ன இடம் இது? அவளால் எதுவும் பேச முடியாமல் மலைத்து நின்றாள்.

ஆமாம், அங்கு மரத்திலானான பெரிய பறவை கூண்டு, 6 அடி உயரமும் 4 அடி அகலமும் தோராயமாக இருக்கும். அதன் உள்ளே வித விதமான பறவைகள். லவ்பேர்ட்ஸ், கிளி, மைனா, ஹம்மிங் பேர்ட், கரிச்சான் குருவி, தவிட்டு குருவி, சிட்டு குருவி இவைகள் கீச் மூச்சென்று ஒவ்வொன்றும் அங்குள்ள சின்ன சட்டியின் உள்ளே போவதும் வருவதுமாக, பெரிய மண் பேசினில் உள்ள தண்ணீரில் தலையை நனைத்து சிலுப்பியபடியே ஒன்றோடு ஒன்று கொஞ்சிக்கொண்டும், அங்கங்கே தொங்கி கொண்டிருந்த சின்ன ஊஞ்சல் போன்ற கட்டைகளில் ஆடியபடியும் தானியங்களை கொத்தி தின்றபடியும் ஆட்டம் போட்டுக்கொண்டிருப்பதை பார்த்து மைதிலிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

அர்ஜுன் அவந்தி என்னடா இது கண்ணுங்களா என்றவளை, பாட்டி உங்க ரெண்டு பேருக்கும் இது தான் உங்க வெட்டிங் டே கிப்ட். உனக்கு பறவைங்க, அதுங்க போடும் சத்தம் ரொம்ப பிடிக்கும்னு அடிக்கடி சொல்லுவே. சின்ன வயசுலேர்ந்து அதை கேட்டு கேட்டு எங்களுக்கு மனசுல பதிந்திருச்சு. நீ தான் அடிக்கடி சொல்லுவியே பாட்டி, நமக்கு எவ்வளவு டென்ஷன், ஸ்ட்ரெஸ், கோபம் இருந்தாலும், பறவைகளை பார்த்தாலோ அதுங்க போடும் சத்தத்தை கேட்டாலோ உடனே நாம ரிலாக்ஸாயிடுவோம்னு. அதே போல சிட்டி லைப் சத்தத்திலே பறவைகளின் வகைகளும் எண்ணிக்கையும் குறைஞ்சுகிட்டே வருதுன்னு வருத்தப்படுவே. இதையெல்லாம் மனசுல வைச்சுத்தான் நாங்க ரெண்டு பேரும் நம்ம பூர்வீக கிராமமான கொத்திமங்கலத்தை செலக்ட் செய்தோம்.

பார்த்தசாரதி பார்வையை சுழல விட்டார். சூப்பர்டா அர்ஜுன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை பசுமை. நடுவில் சின்னதாக ஒரு வீடு. உங்க பாட்டியின் ஆசைப்படி பறவைகள், வீட்டை சுத்தி மரங்கள். அதோ தள்ளி ஒரு குளமும் இருக்கு. கரையில் ஆலமரம் விழுதுகளுடன், ஆடு மாடுகளின் சத்தம், வயல்களின் ஈரமான வாசனை, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா. வீட்டை சுற்றி உள்ள இடத்தில் வீட்டிற்கு தேவையான காய், கீரை, பூ செடிகளை போடலாம். பேசிக்கொண்டே போனவரை, என்ன பேசறீங்க நம்ப பிள்ளை, மாட்டு பெண், பேரன் பேத்தியை விட்டுட்டு இங்கே எப்படி இருக்கிறது என்றால் மைதிலி. பாட்டி என்ன பேசறே. அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போகும் போது எங்களை நீங்க ரெண்டு பேரும் பார்த்துக்கிட்டீங்க. இப்ப நாங்களே வேலைக்கு போங்க ஆரம்பிச்சாச்சு. இனிமேலாவது உங்க வாழ்க்கையை உங்களுக்கு புடிச்ச மாதிரி என்ஜாய் பண்ணுங்க. கூண்டிலிருக்கும் பறவைகள் அதிகமாக அதிகமாக அதுங்களை திறந்து விடவிட, குறைஞ்சிக்கிட்டு வர்ற பறவைகளின் எண்ணிக்கை அதிகமாகும். தாத்தாவுக்கு புடிச்ச தோட்ட வேலை, தாத்தாவோட நேனோ காரை இங்கே கொண்டுவந்துடறோம். பக்கத்தில் திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம், மதுராந்தகம், திருமலைவையாவூர், மேல்மருவத்தூர், இப்படி எங்காவது கோயிலுக்கு போயிட்டு வாங்க. நாங்களும், அம்மா, அப்பாவும் அடிக்கடி இங்கே வந்திடுவோம். இந்த சர்ப்ரைஸ் ப்ளானை அவங்க கிட்டே சொல்லிவிட்டு தான் வந்தோம், என்ஜாய் பாட்டி தாத்தா என்றவர்களை மிதிலையும்

பார்த்தசாரதியும் சந்தோஷத்தில் அணைத்துக்கொண்டு தேங்க்யூ கண்ணுங்களா, எங்களை பத்தி இவ்வளவு யோசிச்சு இத்தனை ஏற்பாட்டையும் சத்தமில்லாம செய்த நீங்க ரெண்டு பேரும் தீர்காயுசா நல்ல இருக்கணும் என்று மனசார ஆசீர்வாதம் செய்தனர்.

சரி சரி நீங்க கொடுத்த இந்த சர்ப்ரைஸ் கிப்ட்டை பத்தி என்னோட பிரண்ட்ஸ்களுக்கு பேஸ் புக்ல ஷேர் பண்ணனும் என்றபடி மொபைலில் வித விதமாக போட்டோ எடுக்க ஆரம்பித்தார் பார்த்தசாரதி.
 
Last edited:
உண்மை தான்.... நவநாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நாம் அற்புதப் பழமைகளையும் பறவைகளையும் தொலைத்து நிற்கிறோம்.... அருமையான கதை....
வாழ்த்துகள்💐💐💐
 
Top