கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

🤴சிம்டாங்காரன்🤴

meerajo

Moderator
Staff member
" என் வாழ்வின்
ஆரம்பமும், முடிவும் நீ!"
🌹🌹🌹🌹

அழகான இளம் மாலைப் பொழுது! கண்களுக்கும் மனதிற்கும் இனிமையான நேரம்! ஆனால் அவள் மட்டும் கடலையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

கண்களில் கண்ணீர் பெருகியது துடைக்கக்கூட தோன்றாமல் கடலையே வெறித்துப் பார்த்தாள்.

இலேசாக இருட்டு பரவியது. அதை உணர்ந்தவள் எழுந்து நின்றாள். பின் உறுதியுடன் கடலை நோக்கி விரைந்தாள்!!

அதுவரை, அவள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தவர்கள், அவள் என்ன செய்யப் போகிறாள் என அறிந்து வேகமாக அவளைப் பின் தொடர்ந்தனர்.

அவள் கடல்நீரில் கால் வைத்ததும், அள் கையைப் பிடித்து இழுத்து கரைக்கு கொண்டு வந்து, "ஏம்மா இப்படி பண்ற? படிச்ச பொண்ணு மாதிரி இருக்க…" என்று அறிவுறை கூற ஆரம்பித்ததும்.

"நீங்கள் எல்லாம் யாரு? ஏன் இப்படி பண்றீங்க? விடுங்க என்னை." என்று அவர்களை உதறினாள்.

"நீ அழுதுக்கிட்டிருந்ததைப் பார்த்துக்கிட்டு தான் இருந்தோம்… என்னவா இருந்தாலும் தைரியமா எதிர்கொள்ளனும்… இப்படி யா பண்ணுவாங்க?" என்று கேட்டார் அருகில் இருந்த பெரியவர்.

அருகில் இருந்தவர்கள் தன்னைக் கவனித்து இருக்கிறார்கள் என்று தெரிந்ததும், "எங்க வீட்டுக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுடுவாங்க." என்றாள்.

" அதுக்காக செத்துப்போயிடுறதுன்னு முடிவுக்கு வர்றதா?"

" என்ன சொல்றீங்க? எனக்குப் புரியலை."
என்று சொல்லிக் கொண்டிருந்த போதே அவர்கள் ஏன் தன்னை கடலிலிருந்து இழுத்து வந்து பிடித்திருக்கிறார்கள்? என்பது புரிந்ததும் சிரிக்க ஆரம்பித்தாள்.

"என்னம்மா பண்றதையும் பண்ணிட்டு, சிரிச்சுக்கிட்டிருக்க?"

"அச்சோ தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க சார்… நான் தற்கொலை பண்ணிக்கல. சும்மா தண்ணீல கால் நனைச்சேன்."

"சும்மா சொல்லாதம்மா!. நீ அழுதத பாத்துக்கிட்டே தான் இருந்தேன்."

" சார்! என்னோட புது கைப்பையை திருடீட்டாங்க… நேத்துதான் எங்க அப்பா வாங்கிக் கொடுத்தாங்க. . அதுக்குள்ள தொலைச்சுட்டேனே னு வீட்ல திட்டுவாங்க. அதான் கொஞ்சம் அழுதுக்கிட்டிருந்தேன்… நேரமானதும், கடல் தண்ணீல கொஞ்சம் விளையாடிட்டு, வீட்டுக்கு போகலாம் னு தான் நினைச்சேன். என்று சொல்லி அவள் சிரிக்கவும், கூட்டம் கலைந்தது.

ஆரம்பத்தில் இருந்தே நடந்தது அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீமேகன் சிரிப்பை அடக்கமுடியாமல் "ஹாஹ்ஹஹ்ஹாஆஆஆ" என்று சிரித்துக் கொண்டிருந்தான்.

அவள் அழுது கொண்டிருந்ததை யும், வேகமாக கடலை நோக்கி விரைந்ததையும் பார்த்து மேகன் னும், அவளைத் தடுக்க ஓடி வந்தவன்தான்… அவளைக் காப்பாற்றி விட்டனர் எனத் தெரிந்ததும், அவள் அருகில் சென்று நல்ல்லா திட்டலாம் என்று நினைத்து வந்தவன் நடந்ததை பார்த்தும், அவளின் அசடு வழிந்த முகத்தைப் பார்த்தும் தான் தலைவருக்கு அப்படி ஒரு சிரிப்பு.

'இவ யாரு? எவ்வளவு மனக் குழப்பத்தோடு வந்த என்னையே சிரிக்க வச்சுட்டாளே!? 'என்று நினைத்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் வேகமாக பேருந்து நிறுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள். ஏனோ அவளை பின் தொடர்ந்து சென்றான். அப்பொழுது வந்து நின்ற பேருந்தில் ஏறி சென்று விட்டாள்.

வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் அவளையே நினைத்து சிரித்துக் கொண்டிருந்தவனிடம் வந்த மேகனுடைய தாத்தா, " என்னப்பா தனியா உக்காந்து சிரிச்சுக்கிட்டிருக்க? என்று ஆர்வமாக பேரனை ரசித்தபடி கேட்டார்.

ஆஹா! ஒரே நாளில் பைத்தியக்காரன் ஆக்கிட்டாளே! என்று நினைத்தபடி, "ஒன்னுமில்லை தாத்தா!" என்று கூறி விட்டு மாடியில் உள்ள அவன் அறைக்குச் சென்றான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த தாத்தா, ' சந்தோஷமோ, கஷ்டமோ தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் சுபாவம் கொண்டவன்.' என்று நினைத்துக் கொண்டு வீட்டு முற்றத்தில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து வானத்தில் தெரிந்த நிலவைப் பார்த்தார்.

கடவுளே! என் பேரனின் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் குழப்பத்திலிருந்து நல்ல தெளிவைக் கொடுங்கள். அவன் என்ன முடிவெடுத்தாலும் அது அவனுக்கு நன்மையாகவே இருக்கட்டும்" என்று வேண்டிக் கொண்டார்.

அவர் அருகில் முற்றத்தில் சுற்றி உள்ள திண்டில் அமர்ந்த மரகதம், " என்ன பேரனிடம் பேசிட்டீங்களா?" என்று கேட்டார்.

"இல்லை! விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து அவன் முகத்தில் சிரிப்பே இல்லை. ஒரு வாரமாச்சு அவன் சிரிச்சு… இன்னைக்கு என்னவோ தனியா உக்காந்து சிரிச்சுக்கிட்டிருந்தான்… அதைக் கெடுக்க எனக்கு மனசு வரல…"

" அவன் சிரிச்சுட்டான் னா நல்ல மனநிலையில் இருக்கான்னு தானே அர்த்தம்? நீங்கள் அவனிடம் பேசியிருக்கலாம். அவனா பேசட்டும் னு காத்திருந்தா வேலைக்கு ஆகாது. எப்படியா இருந்தாலும் ஒரு முடிவுக்கு வந்து தானே ஆகனும்? சும்மா நாளைக் கடத்திக்கிட்டு இருந்தா மாப்பிள்ளை (இருவருடைய மகளின் கணவர்) என்ன நினைப்பார்? நாம தான் காரணம் னு நினைக்கப் போறார்." என்று மரகதம் கூறியதிலும் அர்த்தம் இருப்பதை உணர்ந்து,

" நாளை கட்டாயம் பேசிவிடுகிறேன்." என்று மனைவியிடம் கூறினார்.

'மாப்பிள்ளை நல்லவர்தான் இருந்தாலும், மேகன் ஒரு முடிவு சொல்ற வரை அவருக்கும் கஷ்டம் தானே? ஒருவேளை நாம்தான் காரணமோ என்று நினைத்து விடக்கூடாது. மேகனும் M.B.A முடித்து ஆறு மாதமாக ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறான். ' என்று நினைத்தவர் உறங்குவதற்காக அவர் அறையை நோக்கி நடந்தார்.

அப்படி என்ன குழப்பம் ஸ்ரீமேகனுக்கு?

அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம்…

---------********* ---------
 
Top