கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

1. (வி)சித்திரமாய்...

Annapurani Dhandapani

Active member
(வி)சித்திரமாய்…




1.


அந்தப் பெரிய அரங்கு மேல் தட்டு மக்களால் நிரம்பியிருந்தது.

நவீனமாக உடையுடுத்திய ஆண்களும் பெண்களும் கொத்து கொத்தாய் ஒவ்வொரு ஓவியத்தின் முன்பும் நின்று கொண்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில் அதன் நிறை குறைகளை விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அங்கே பலதரப்பட்ட ஓவியங்கள் பல வண்ணங்களில் பல அளவுகளில் வெவ்வேறு விலையை தாங்கிக் கொண்டு காண்பவரின் கண்களைக் கவர்ந்து கொண்டிருந்தாலும் அரங்கின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு அழகான பெண்ணின் ஓவியமே அனைவரையும் அதிகமாகக் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது.

அந்த ஓவியத்தில் இருந்த பெண் மிகச் சாதாரண உடையணிந்து அதிக அலங்காரம் இல்லாமல் எளிமையாக இருந்தாலும் அவளுடைய உடலழகில் இருந்த நளினமும் இதழ்களில் உறைந்திருந்த புன்னகையும் காண்பவர்களை சுண்டியிழுப்பது போலிருந்தது.

அதனை வரைந்த ஓவியரை புகழோ புகழ் என்று புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆரம்பத்தில் வெகு சாதாரணமாகத் தோன்றிய அவ்வோவியம் பார்க்கப் பார்க்க எல்லாவற்றையும் மறக்கச் செய்வது போன்ற அழகுடன் தோன்றுவது போல இருந்தது.

அங்கு வந்திருந்த பெரிய பெரிய வணிக முதலைகள் அதனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று போட்டியிடத் தொடங்க அந்த ஓவியத்தின் மதிப்பு கூடிக் கொண்டே போனது.

ஒவ்வொரு பெரிய நகரத்தின் மையத்தில் தன் செயின் ஆஃப் ரெஸ்டாரண்டின் கிளையை ஆழமாகப் பதிந்து வைத்திருக்கும் பெரிய புள்ளி நந்தகுமார் அதனை மிக அதிக விலைக்கு வாங்கினார்.

"எஸ்! ஃபைனல் ரேட், டூ குரோர்! இட்ஸ் ஓன்டு பை மிஸ்டர் நந்தகுமார்!" என்று அந்த கண்காட்சி ஏற்பாடு செய்தவன் அறிவித்தான்.

"கங்கிராட்ஸ் சார்!"

"வாழ்த்துகள் சார்!"

அவர் வாங்கியதை பொறாமையுடன் பார்த்து மனதுக்குள் புழுங்கியபடியே மற்ற பெரும்புள்ளிகள் நந்தகுமாருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு நகர்ந்தார்கள்.

அந்த ஓவியம் இப்போது நந்தகுமாரின் காருக்கு கொண்டு செல்லப்பட, அதைத் தூக்கிக் கொண்டு நடந்த நந்தகுமாரின் காரோட்டி காளி,

'இந்த படத்துக்கு இவ்ளோ ரூபாயா? பணம் வச்சிருந்தா என்ன வேணா வாங்கலாம் போல.. உண்மையில இந்தப் பொண்ணு உயிரோட இருந்து இவங்க முன்னாடி வந்து நின்னுருந்தா கூட இவ்ளோ ரூபாய அந்தப் பொண்ணுக்கு இவனுங்க குடுத்திருப்பாங்களோ என்னமோ?' என்று லேசாக முணுமுணுத்தபடியே நடந்தான்.

அந்த ஓவியம் நந்தகுமாரின் பெரிய அலுவல் அறையில் நடு நாயகமாக மாட்டப்பட்டது.

அது அந்த அறைக்கே ஒரு தனிப்பட்ட அழகைக் கொடுப்பது போல இருந்ததாக அவர் நினைத்துக் கொண்டார்.

"வாவ்! இந்தப் படம் ரொம்ப அழகா இருக்கு நந்தா சார்.." அவருடைய காரியதரிசி பாரி அவரிடம் கூற,

நந்தா பதிலெதுவும் கூறாமல் வெறுமே புன்னகைத்து தலையசைத்துவிட்டு தன் மடிக்கணிணியில் தலையைக் கவிழ்ந்து கொண்டார்.

'இந்தப் படத்த இவ்ளோ ரூபா குடுத்து வாங்கி அத கண் குளிர பாக்கற மாதிரி முன் பக்கம் மாட்டிக்காம தலைக்கு பின்னாடி மாட்டிருக்கான் பாரு.. ரசனை கெட்ட ஜென்மம்.. ஒரு பாராட்ட கூட ரசிச்சி ஏத்துக்க தெரியாத இந்தாள் கிட்டல்லாம்தான் இவ்ளோ பணம் சேருது.. ஹூம்..' என்று பெருமூச்சு விட்டபடியே நகர்ந்தான் பாரி.

பாரியும் காளியும் நினைத்துக் கொண்டது பற்றியெல்லாம் ஏதும் அறியாத நந்தா தன் கைப்பேசியில் யாரையோ அழைத்து பிசினெஸ் பேசிக் கொண்டிருந்தார்.

"அதெல்லாம் முடியாது.. அட் எனி காஸ்ட் இந்த டெண்டர் நமக்குதான் கிடைக்கணும்.." என்று கடிந்த குரலில் கூறினார்.

"சார்.. இது நமக்கு அவசியமே இல்லாத ஒண்ணு சார்.. நமக்கும் இதுக்கும் என்ன சார் சம்மந்தம்.." என்று அழாக் குறையாக கேட்டார் அந்த பக்கத்திலிருந்தவர்.

"நோ.. நோ.. அப்டிலாம் விட முடியாது.."

"சார்! இது நம்ம ரேஞ்சிலயே இல்ல சார்.. இதெல்லாம் எடுத்து செய்யணும்னு நமக்கென்ன தலையெழுத்தா?"

"நம்ம ரேஞ்சில இல்லன்னு எனக்கு மட்டும் தெரியாதா? இத நா எடுக்க நெனக்கிறதுக்கு காரணமே வேற.. சொன்னத செய்ங்க.." என்ற நந்தா பட்டென்று அழைப்பை துண்டித்தார்.

அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

'இந்த டெண்டர் எடுத்தா கவர்மென்ட் சப்போர்ட் உனக்கு கிடைக்கும்.. சொசைட்டிக்கு நீயும் நல்லது பண்றன்னு பேர் கிடைக்கும்.. அதனால ஸ்டாக் மார்கெட்ல உன் கம்பெனி ஷேர்ஸ் ரேட் எகிறும்.. இதானே உன் பிளான்.. இத நா அவ்ளோ சீக்கிரம் நடக்க விட்டுடுவேனா..' என்று கறுவிக் கொண்ட அந்த எதிர் தொலைபேசிக்காரர் நந்தா சொன்ன தொகையை விட கூடுதல் தொகையை டெண்டரில் கோட் செய்து அதை சீல் செய்து மூடி அனுப்பினார்.

"என் கம்பெனி ஷேர்ஸ் எகிறும்னு நா இத செய்யறேன்னு நீ நெனச்சா.. அது உன் முட்டாள்தனம்.. இத செய்யறதுக்கு காரணம் என்னன்னு என் ஒருத்தனுக்கு மட்டும்தான் தெரியும்.. ஹா.. ஹா.." என்று சொல்லி அந்த அறையே கிடுகிடுக்கும்படி சத்தமாகச் சிரித்தார் நந்தா.

அவருடைய சத்தத்தைக் கேட்டு அதிர்ந்து போய் எட்டிப் பார்த்தான் பாரி.

அவன் தன்னை பார்ப்பதைப் பார்த்த நந்தா இன்னும் அதிகமாகச் சிரித்தபடி அவனை கையசைத்து அழைத்தார்.

"என்ன சார் ஆச்சு?" என்று அதிர்ச்சியும் வியப்புமாக உள்ளே வந்தான் பாரி.

"இதப் பாரேன்.." என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய கைப்பேசியில் ஏதோ ஒரு ரீல்ஸ் விடியோவைக் காட்டினார் நந்தா.

அதைப் பார்த்த பாரிக்கு சப்பென்று இருந்தது.

'என்ன இந்தாளு.. போயும் போயும் இந்த வீடியோவ பார்த்தா இப்டி சிரிக்கறான்.. சரியான லூசா இருப்பான் போலயே..' என்று நினைத்தபடி நின்றிருந்தான்.

"என்ன பாரி.. பயங்கர சிரிப்பா இருக்குல்ல.." என்று நந்தா மேலும் கேட்டு சிரிக்க பாரிக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.

'இப்ப சிரிச்சாலும் தப்பு.. சிரிக்கலன்னாலும் தப்பு.. என்னடா இது எனக்கு வந்த சோதனை?' என்று நினைத்து சிரித்தும் சிரிக்காமலும் நின்றிருந்தான்.

சடன் பிரேக் போட்டது போல சட்டென்று தன் சிரிப்பை நிறுத்திய நந்தா,

"என் வைஃபோட இன்கம்டேக்ஸ் டீடெய்ல் கேட்டேனே? ரெடியா?" என்று கடிந்த குரலில் கேட்டு அவனை நடுங்க வைத்தார்.

"இதோ சார்.. இதோ.. டூ மினிட்ஸ்ல.." என்றபடி தப்பித்தோம் பிழைத்தோம் என் அங்கிருந்து ஓடினான்.

'ஹூம்.. மனுசனா இவன்.. மொதல்ல வேற வேலை தேடிட்டு ஓடணும்..' என்று நினைத்தபடி அவர் கேட்ட விவரங்களை சேகரிக்கத் தொடங்கினான் பாரி.

அவன் தலைதெறிக்க ஓடுவதைப் பார்த்த நந்தா,

'நா ஒரு மொக்கைன்னு நெனச்சிருப்பான்.. இடியட்..' என்று தனக்குள் நினைத்தபடி விழுந்து விழுந்து சிரித்தார்.

அவருடைய கைப்பேசி அழைத்தது.

எடுத்து காதில் வைத்தவரின் சிரிப்பு இன்னும் கூடியது.

"ஹா.. ஹா.. நாந்தான் சொன்னேனே.. அவன் அப்டிதான் பண்ணுவான்னு.. இப்பவாவது உனக்கு புரிஞ்சிதா?"

"ம்.."

"சரி.. அத ரிமூவ் பண்ணிட்டு நா குடுத்தத அனுப்பு.. அவன அப்றம் கவனிச்சிக்கலாம்.." என்று கட்டளையிட்டு அழைப்பைத் துண்டித்த நந்தா,

"டேய்! இருக்குடா உனக்கு.." என்று கெட்ட வார்த்தை சொல்லி யாரையோ பல்லைக் கடித்து திட்டினார். அவர் கண்களில் கொலை வெறி வந்து போனது.

அவருடைய கண்களில் கொலைவெறி வந்த அதே நேரத்தில் அவர் சற்று முன் வாங்கி மாட்டிய ஓவியத்தில் சிரித்துக் கொண்டிருந்த பெண்ணின் முகம் சில நிமிடங்கள் கோரமாய் மாறியது. அந்த ஓவியப் பெண்ணின் கைகள் சட்டத்திலிருந்து வெளியே நீண்டு நந்தாவின் கழுத்தை நெறிப்பது போல வந்துவிட்டுப் போனது. ஆனால் நந்தா அதைப் பார்க்கவேயில்லை.

*****

"காவேரி! காவேரி!" என்று குடிசை வாசலிலிருந்து யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடினாள் காவேரி.

பக்கத்து வீட்டு சரசுதான் காவேரியை கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தாள்.

"இன்னா சரசு? இன்னாத்துக்கு இப்டி கூவற?"

"தண்ணி லாரி வந்திருக்குடீ.. வெரசா வா.. அடியே ராசாத்தீ.. தண்ணி லாரி வந்திருக்கு.." என்று கத்திக் கொண்டே சரசு ஓடினாள்.

அவளுடைய பதற்றம் காவேரியைத் தொற்றிக் கொண்டது.

குடிசை வாசலில் வரிசையாய் அடுக்கி வைத்திருந்த என்ன வண்ணம் என்று தெரியாத அளவுக்கு சாயம் வெளுத்துப் போய் எல்லா பக்கங்களிலும் நசுங்கி தேய்ந்திருந்த பிளாஸ்டிக் குடங்களை கையிலும் இடுப்பிலுமாக இடுக்கிக் கொண்டு,

"ஏ! தண்ணி லாரி வந்திருக்கு.. ஓடியாங்க.. ஓடியாங்க.." என்று தன் பங்குக்கு கூவிக் கொண்டே ஓடினாள் காவேரி.

இவர்களின் கூவல் அந்தப் பகுதி மொத்தத்தையும் தட்டி எழுப்பிவிடும் குரலாய் அமைந்து அந்த இடமே சட்டென்று சுறுசுறுப்பனது.

சில நிமிடங்களில் பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் சகிதம் பெண்களும் ஆண்களுமாய் கும்பல் கும்பலாய் மக்கள் குவியத் தொடங்கி சளபுளவென்ற பேச்சுச் சத்தமும் எங்கும் நிறைந்து போக அந்த இடமே போர்க்களம் போல மாறிவிட்டது.

ஆனால் இது எதுவும் எந்த வகையிலும் காவேரி வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த அந்த நெடியவனை பாதிக்கவேயில்லை.

"ஏய்! பூச்சாண்டீ.. ப்ளூ கொட்த எட்த்துனு வாடா.." என்று காவேரி இவனைப் பார்த்து கத்தினாள்.

அவன் அசையாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு,

"ம்க்கும்.." என்று சத்தமாகவே சொல்லி கழுத்தை நொடித்துக் கொண்டாள் அவள்.

அவன் தன் கண்ணையும் கருத்தையும் தான் வரையும் ஓவியத்திலேயே பதித்திருந்தான்.

அவன், பரட்டைத் தலையோடும் அழுக்கான ஆடைகளோடும் தடிமனான ஃப்ரேமுடன் சோடா புட்டி கண்ணாடி அணிந்து பார்ப்பதற்கு 80களின் தமிழ் சினிமாவில் காட்டப்படும் வேலையில்லாத இளைஞன் போல அழுக்காக இருந்தான்.

ஒரு வயதான பிச்சைக்காரப் பெரியவர் அவன் பின்னே வந்து நின்று அவன் வரைந்து கொண்டிருக்கும் படத்தை கூர்ந்து கவனித்தார்.

பின்னர் அவனைப் பார்த்து,

"நைஸ்!" என்றார்.

அவன் அவரை திரும்பிப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்துவிட்டு மீண்டும் தன் படத்தில் கவனத்தை திருப்பினான்.

அந்த பிச்சைக்காரர் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

அவன் கவனம் முழுதும் ஓவியத்தில் இருக்க, அவன் தலையில் மொட்டென்று ஒரு அடி விழுந்தது.

"ஆ.. அம்மா.." என்று அலறினான்.

"அம்மாதாண்டா.. எத்தினி தபா ரோட்டாண்ட இப்டி குந்திகினு படம் வரையாத வரையாதன்னு சொல்லி கீரன்.." என்று அடித்தாள் காவேரி.

".." அவன் பதிலெதுவும் சொல்லவில்லை.

"அல்லாரும் உன்னிய பூச்சாண்டின்னு சொல்றானுங்க.. அப்ப கூட உனுக்கு ரோசம் வரலியா? ஏன்டா இப்டி பண்ற?" என்று கேட்டு கண்ணை கசக்கினாள்.

".." இப்போதும் அவன் பதிலெதுவும் சொல்லவில்லை.

"நீ சரிப்பட்டு வர மாட்ட.. இந்த பெயின்டை எடுத்து கடாசினாதான் எங்க வயிக்கு வருவ.." என்று சொல்லிக் கொண்டே அவனருகிலிருந்த குட்டி குட்டி வண்ணக் குப்பிகளை எடுத்து வீசப் போனாள்.

"ம்மா.." என்றபடி அவள் கையிலிருந்த குப்பிகளை பிடுங்கி பத்திரமாக மூடி வைத்தான்.

"இங்க இப்டி ப்ரஸ்ஸ வெச்சி தேச்சினு கெடந்ததுக்கு நாலு வூட்டு செவத்தில தேச்சிருந்தா துட்டாவது குட்த்திருப்பானுவ.." என்று கழுத்தை நொடித்தாள்.

"ம்மா.. இப்ப இன்னா.. உனுக்கு துட்டு வோணும்.. அவ்ளோதான.. இந்தா.." என்றபடி தன் பேன்ட் பேக்கெட்டிலிருந்து இரண்டாயிரம் நோட்டுகள் ஐந்தை எடுத்து காவேரியின் கையில் வைத்தான்.

"அடப்பாவி! ஏதுடா இம்மாந் துட்டு?" என்று வாயைப் பிளந்தாள் காவேரி.

"காலையில என் படத்த ஒருத்தன் வாங்கினான்.. அதான்." என்றான் அவன்.

"ஒம் படத்துக்கு அம்மாந் துட்டா.." நம்ப முடியாமல் பார்த்தாள் காவேரி.

"என்ன என்ன சப்பன்னு நெனச்சியா?" என்றபடியே தன் கைப்பேசியில் ஒரு காணொளியைக் காட்டினான்.

அதில் ஒரு பெரிய மனிதர் இவன் வரைந்த படத்துக்கு கத்தையாக பணம் கொடுத்தது படமாக்கப் பட்டிருக்க,

"அடப்பாவி! அந்தாளு எவ்ளோ பணம் குட்தாரு.. நீ இன்னா தம்மாத்தூண்டு தர?" என்று கோபமாகக் கேள்வி கேட்டாள்.

"அக்காங்.. இந்த கலரு.. பிரஸ்ஸு.. போர்டு.. ஸ்டேன்ட்டு.. இதெல்லாம் வாங்க நீ துட்டு கேட்டா தருவியா என்ன.." என்று கேட்டுக் கொண்டே தான் வரைந்த படத்தை கவனமாக எடுத்து சுருட்டினான்.

"ம்.. இம்மாந் துட்டு தருவாங்கன்னு எனுக்கு இன்னா கண்ணு தெரியும்.. சரி வா.. கோழி கறி ஆக்கி வச்சிருக்கன்.. துன்ன வா.." என்று செல்லமாக அழைத்தாள்.

"இப்ப மட்டும் கண்ணு மூக்குன்னு சொல்லு.. துட்டு கேட்டா பூச்சாண்டின்னு கூப்புட வேண்டியது.." என்று சொல்லிக் கொண்டே தன் ஓவியப் பொருட்களை எல்லாம் திரட்டி எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் சாப்பிடாமல் போகிறானே என்றெல்லாம் காவேரி கவலைப்படவில்லை.

'பத்தாயிரம் ரூபா குட்த்திர்க்கான்.. மொதல்ல இத்த பத்தரமா ஔிச்சி வெக்கணும்.. அந்தாள் கண்ணுல பட்டுச்சுன்னா ஆட்டையப் போட்டு ஃபுல்லா ஏத்திட்டு வந்திருவான்.. அப்றம் ராவுக்கு நிம்மதியா தூங்க முடியாது..' என்று மனதுக்குள் கடுத்தபடியே பணத்தை தன் ரவிக்கைக்குள் பத்திரப்படுத்துக் கொண்டே வீட்டுக்குள் போனாள்.

தன் ஓவியப் பொருட்களுடன் நகர்ந்த பூச்சாண்டி என்று அழைக்கப்பட்டவன் அருகிலிருந்த அரசுப் பூங்காவில் சென்று ஒரு ஓரமாய் தன் ஸ்டேன்டை நிமிர்த்தி வைத்து பாதியில் விட்ட ஓவியத்தைத் தொடர்ந்தான்.

காலையில் அவனுடைய ஓவியத்துக்கு கிடைத்த பாராட்டு வார்த்தைகளே அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

"மிஸ்டர் பிச்சாண்டி! யூ ஆர் ரியலி டேலன்டட்! ஆசம்!" என்று வாய் நிறைய புகழ்ந்தார் அந்த பெரிய மனிதர்.

"தேங்க்யூ சார்!" கரம் குவித்து அவருடைய பாராட்டை ஏற்றுக் கொண்டான்.

"இந்த படத்தை எப்டி இவ்ளோ தத்ரூபமா வரைஞ்சீங்க? இதுக்கு யாராவது மாடலா இருந்தாங்களா?" புன்னகையுடன் கேட்டார் அவர்.

"ம்.. அது வந்து சார்.." தயங்கினான்.

"சொல்லுங்க மிஸ்டர் பிச்சாண்டி!" அவர் அவனை ஊக்குவித்தார்.

"இதுல இருக்கறவங்க என் லவ்வர் சார்.." என்றான் அவன்.

"வாவ்! வெரி இன்ட்ரஸ்டிங்! அவங்க இங்க வந்திருக்காங்களா?" கண்களை விரித்துக் கேட்டுவிட்டு கூட்டத்தில் கண்களால் துழாவினார்.

"இல்ல சார்!" உணர்ச்சியின்று பதலளித்தான்.

"ஓ! நோ! நீங்க நெக்ஸ்ட் டைம் வரும் போது உங்க லவ்வரையும் கூட்டிட்டு வரணும்.. எனக்கு அவங்க பாக்கணும்.." என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடி கூறினார்.

பிச்சாண்டி அரைகுறையாய் தலையாட்டினான். அதையே ஒப்புதலாக ஏற்றுக் கொண்ட அந்தப் பெரிய மனிதர் அவனிடம் கைகுலுக்கிவிட்டு கிளம்பிவிட்டார்.

'அவள எப்டி கூட்டிட்டு வருவேன்.. அவதான் இந்த உலகத்திலயே இல்லையே! என்ன விட்டு ரொம்ப தூரம் போய்ட்டாளே! நா வேணாம்.. என் சகவாசம் வேணாம்னு வெஷம் குடிச்சிட்டு ரொம்ப தூரமா போய்ட்டாளே!' என்று நினைத்தபடியே அவன் வெகு நேரம் அங்கேயே நின்றிருந்தான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது.




- தொடரும்….

 

Latha S

Administrator
Staff member
நல்ல ஆரம்பம். அந்த ஓவியப்பென் அவரது மகளோ? பிச்சாண்டி யின் காதலியும் அவளோ?
 
Top